வியாழன், 10 அக்டோபர், 2024

11. சகரன் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

 விசுவாமித்திரர் தலைமையில் புறப்பட்ட ரிஷிகள் மாட்டு வண்டிகளில் மிதிலை நோக்கி வடக்கே சென்றார்கள். ஆசிரம வனத்திலிருந்த பட்சிகள், மான்கள் எல்லாம் கூடவே சென்றதைப் பார்த்து விசுவாமித்திரர் அவற்றை அன்புடன் அங்கேயே நிறுத்தினார்.சோணா நதிக்கரை சேர்ந்ததும் மாலையாயிற்று. அங்கே அந்த இரவு தங்கினார்கள். அந்த இடத்தின் பூர்வ கதைகளை ராஜகுமாரர்களுக்கு முனிவர் சொல்ல இரவு சந்தோஷமாகக் கழிந்தது. அடுத்த நாள் காலை எழுந்து ஒரு நதியைத் தாண்டினார்கள். ஜலம் ஆழமில்லாமலிருந்தபடியால் நடந்தே தாண்டினார்கள். பிறகு நடுப்பகலில் கங்கைக் கரையை அடைந்தார்கள். எல்லோரும் கங்கையில் ஸ்நானம் செய்து தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் முன்னோர்களுக்கும் தர்ப்பணம் செய்தார்கள். அங்கேயே ஆகாரம் சமைத்து, பூஜை செய்து, போஜனம் செய்தார்கள். எல்லாரும் விசுவாமித்திரரைச் சுற்றி உட்கார்ந்தார்கள்.

“முனிவரே! கங்கையின் வரலாற்றைச் சொல்ல வேண்டும்” என்று ராஜகுமாரர்கள் ஆவலுடன் கேட்க, முனிவரும் சொல்லப் புகுந்தார்.


பர்வத ராஜனான ஹிமவானுக்கும் மனைவி மனோரமைக்கும் அபூர்வ லட்சணம் பொருந்திய இரண்டு புதல்விகள் இருந்தார்கள். மூத்தவளாகிய கங்கா தேவியை தேவர்களின் பிரார்த்தனையின் பேரில் ஹிமவான் தேவலோகத்துக்கு அனுப்பிக் கொடுத்தான். இளையகுமாரி உமை, சங்கரனை விரும்பி, பெரும் தவம் புரிந்தாள். பரமசிவனும் திருப்தியடைந்து உமாதேவியைத் தன் பத்தினியாகப் பெற்றான். ஹிமவானுடைய இரு பெண்களும் இவ்வாறு மிகப் புண்ணிய நிலையை அடைந்தார்கள். எல்லாப் பாவங்களையும் போக்கும் கங்காதேவி தேவலோகத்திலேயே இருந்து வந்தாள்.


அயோத்தியாதிபதி சகரன் என்ற மகாராஜன் வெகுநாள் சந்தானமில்லாமல் வருந்தினான். கேசினி, சுமதி என்ற தன் இரு பத்தினிகளையும் அழைத்துக் கொண்டு இமயமலையில் தவம் செய்தான்.


பிருகு முனிவர் அவன் தவத்தைக்கண்டு மகிழ்ந்து சந்தானம் பெறுவாய் என்று வரம் தந்தார்.

“வீரனே! நீ மகத்தான சந்தானம் பெறுவாய். அபார கீர்த்தியும் பெறுவாய். உன் பத்தினிகளில் ஒருத்தி ஒரு புத்திரனைப் பெறுவாள். உன்னுடைய வம்சம் அவன் வழியாகப் பெருகும். இன்னொரு பத்தினி பலவான்களான அறுபதினாயிரம் புத்திரர்களைப் பெறுவாள்” என்று ஆசீர்வதித்தார்.


ராஜ பத்தினிகள் முனிவரைப் பணிந்து “சுவாமி, யாருக்கு ஒரே மகனும் யாருக்குப் பல குமாரர்களும் தந்தீர்?” என்று கேட்டார்கள்.


“ஒருத்தி பெறும் ஒரே மகன் வழியாகத்தான் வம்சம் பெருகும். மற்றவள் பெறும் அநேக புத்திரர்கள் பலவான்களாக வளர்ந்து பெரும் புகழ் பெறுவார்கள். உங்களில் யாருக்கு எது இஷ்டம்?” என்று முனிவர் கேட்டார்.


மக்களின் ஆசை பலவிதம். கேசினியானவள் வம்சம் வளர்க்கும் ஒரு மகன் தனக்குப் போதும் என்றாள். சுமதியோ பலமும் கீர்த்தியும் அடையப்போகும் அநேக மக்களைப் பெற விரும்பினாள். “அப்படியேயாகட்டும்” என்று முனிவர் சொன்னார். வரம் தந்த முனிவரை வலம் செய்து வணங்கி இரு மனைவிமாருடன் அரசன் மிக்க திருப்தியோடு நகரத்துக்குத் திரும்பிப் போனான்.


கொஞ்ச காலங் கழிந்த பின் கேசினியானவள் அசமஞ்சன் என்ற மகனைப் பெற்றாள். சுமதி வடிவமற்ற ஒரு பிண்டத்தைப் பிரசவித்தாள். அந்தப் பிண்டம் பொரிந்து அதனின்று முனிவர் சொன்னபடி அறுபதினாயிரம் குழந்தைகள் உண்டானார்கள். குழந்தைக் கூட்டத்தைத் தாத்திரிமார்கள் நன்றாகப் பாதுகாத்து வளர்த்தார்கள்.


காலக் கிரமத்தில் குழந்தைகள் யௌவன நிலையடைந்து மிக்க அழகும் வீரமும் கொண்ட ராஜகுமாரர்களாக வளர்ந்தார்கள். மூத்த மனைவியின் குமாரன் அசமஞ்சன் வளரவளரக் குரூர குணத்தையடைந்தான். ஊரிலுள்ள குழந்தைகளைப் பிடித்து ஆற்றில் மடுவில் போட்டு, அவை தத்தளித்துச் சாவதைக் கண்டு சிரித்துச் சந்தோஷப் படுவான்.


இவ்வாறு பைத்தியம் பிடித்துப் போன அசமஞ்சனை ஜனங்கள் மிகவும் வெறுத்தார்கள்.

அரசனுடைய அனுமதியுடன் அவனை ராஜ்யத்தை விட்டே துரத்தி விட்டார்கள். ஆனால் அவனுக்குப் பிறந்த மகன் அம்சுமான் என்ற ராஜகுமாரன் மிகவும் குணசாலி. எல்லாருடைய அன்பையும் நன்மதிப்பையும் சம்பாதித்தான். சீலமும் அறிவும் பொருந்தியவனாக வளர்ந்தான்.


சகரன் ஒரு பெரும் அசுவமேத யாகம் செய்ய நிச்சயித்ததின் பேரில் அதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அசுவமேத யாகத்துக்குரிய குதிரையை ராஜகுமாரன் அம்சுமான் காத்து வந்தான். ஆனால் இந்திரன் ராக்ஷச வேஷம் பூண்டு குதிரையைக் கொண்டு போய் விட்டான்.


அசுவமேத யாகங்களைத் தடை செய்வது தேவர்களுடைய வழக்கம். இந்திரனுடைய பதவிக்குப் போட்டி ஏற்படும் என்கிற பயம். ஆயினும் தடைகளைத் தாண்டி யாகம் நடைபெற்று விட்டால் யாகத்தில் தரப்படும் அவிசுகளைத் தேவர்கள் பெற்றுத்தான் போகவேண்டும். அதன் மேல் யாகத்தைச் செய்தவன் யாகத்தின் பலனை அடைவான்.


குதிரை காணாமல் போயிற்று என்று அரசனுக்குத் தெரிந்ததும் மிக வருத்தப்பட்டு எப்படியாவது கண்டுபிடித்துக் குதிரையைக் கொண்டு வரவேண்டுமென்று சுமதி புத்திரர்களான அறுபதினாயிரம் ராஜ குமாரர்களையும் பூமண்டலம் முழுவதும் தேடி வரும் படி அரசன் அனுப்பினான். “யாகக் குதிரையை இழந்ததால் யாகம் கெடுவதுமல்லாமல் சம்பந்தப்பட்ட எல்லாரையும் பாவம் சுற்றிக் கொள்ளும். ஆகையால் திருடிப்போனவன் எங்கே மறைத்து வைத்திருந்தாலும் போய்க் கண்டு பிடித்துக் குதிரையைக் கொண்டு வர வேண்டும்” என்று சகரன் வீரமும் சௌரியமும் கொண்ட தன் புத்திரப் பெருங் கூட்டத்துக்கு உத்தரவிட்டான்.


சகர புத்திரர்களும் மிக உற்சாகமாக உலகமெல்லாம் சுற்றி அட்டகாசம் செய்தார்கள். எங்கும் கிடைக்கவில்லை.


பூமியை வெட்டித் தோண்டினார்கள். எங்கும் வெட்டித் தள்ளி வெட்டித் தள்ளிப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கினார்கள். “நீதான் திருடினாய்! நீ தான் திருடினாய்!” என்று எங்கேயும் எல்லோரையும் குற்றம் சாட்டி, அதட்டி, இம்சை செய்து வந்தார்கள். எங்கு தேடியும் அகப்படவில்லை. இதை அரசனிடம் சொன்னார்கள். துயரப்பட்ட அரசன், “நீங்கள் பூமியைப் பிளந்து, பாதாளம் புகுந்து பாருங்கள்” என்று உத்தரவிட்டான்.


தந்தை சொற்படி சகர குமாரர்கள் பூமியைத் தோண்டி, பாதாளம் புகுந்து, பூமியைத் தாங்கி நின்ற யானைகளை நமஸ்கரித்துவிட்டு, யாகக் குதிரையைத் தேடிச் சென்றார்கள். அங்கே வடகிழக்கு மூலையில் ஓரிடத்தில் தங்கள் குதிரையைக் கண்டார்கள்.


மகாவிஷ்ணுவாகிய கபிலர் அங்கே யோகத்திலிருந்தார். பக்கத்தில் யாகக் குதிரை தன் பாட்டுக்குப் புல் மேய்ந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதும், சகர புத்திரர்கள் “இதோ திருடன், குதிரையைத் திருடிவிட்டுத் தவ வேஷம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான்” என்று கோபாவேசமாய்க் கபிலர் மேல் பாய்ந்தார்கள்.


யோகத்திலிருந்த கபில முனிவர் கண்களைத் திறந்து “ஹூம்” என்று மூச்செறிந்தார். ராஜ புத்திரர்கள் அறுபதினாயிரம் பேரும் அங்கேயே சாம்பற் குவியலாய்ப் போனார்கள். இந்திரன் குதிரையைக் கொண்டு போய்ப் பாதாளத்தில் ஒளித்து வைத்திருந்தான். அதனால் இவ்விதம் சகர புத்திரர்கள் சாபமடைந்து மாண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக