ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 2


அத்தியாயம் - (2) - பெரியோர்களின் எதிர்பார்ப்பு

ஒரு ருசிகரமான தகவல். இதிஹாஸங்களுக்கும் புராணங்களுக்கும் வேறுபாடு உண்டு. இதிஹாஸம் என்றால், அந்தக் கதை எப்போது நடந்ததோ, அப்போதே, அது நடக்கும்போதே எழுதப்பட்டது. உதாரணத்திற்கு, ராமன் உயிரோடு இருக்கும்போதே வால்மீகி இதிஹாஸமாகிய ராமாயணத்தை எழுதினார். ஆனால், புராணங்கள் அப்படி அல்ல. சம்பந்தப்பட்ட கதை, முழுவதும் முடிந்த பிறகுதான் அது சம்பந்தமான புராணம் எழுதப்படும். இவ்வாறு எழுதப்பட்ட இதிஹாஸங்களும், புராணங்களும் உண்மையான அறிவைத் தரும் திறன் படைத்தவை.

புராணங்கள் பதினெட்டு என்று கூறினேன் அல்லவா? அவற்றை ஆறு, ஆறாகப் பிரிப்பார்கள். ஸாத்விக புராணங்கள் ஆறு; ராஜஸ புராணங்கள் ஆறு; தாமஸ புராணங்கள் ஆறு. இதில், ஸாத்விக புராணங்களில் சிறப்பு வாய்ந்தது பாகவத புராணம். இதை ‘ஸ்ரீமத் பாகவதம் என்றும், பாகவத புராணம் என்றும், பெரியோர்கள் அனைவரும் கொண்டாடியிருக்கிறார்கள். பாகவத புராணத்தின் ஆழ்ந்த கருத்துக்களை, அரிய பொருள்களை, நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத வழிகாட்டும் கருத்துக்களை, இனி பல வாரங்களில் நாம் பார்க்க இருக்கிறோம்.


பாகவதம் அறிந்தவன், பகவானையே அறிந்தவன் ஆகின்றான்; பகவானை அறிந்தால், ஆனந்தத்தை உணர்கிறோம்; ஆனந்தத்தை உணர்ந்தால், ஆனந்தத்தை அனுபவிக்கப் போகிறோம். இந்த உலகில் எதற்குப் பிறவி எடுத்தோம்? ஆனந்தமாக இருப்பதற்குத்தானே! அதற்கு ஒரே வழி, பாகவத புராணத்தைப் படிப்பது என்பது, அதன் மூலம் பகவானைத் தெரிந்து கொள்வது ஆகும். சிலர் மனதில் ஒரு கேள்வி எழலாம். புராணங்கள் என்றோ, பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டவை. அவற்றால் இன்றைய தேதிக்கு ஏதாவது உபயோகம் உண்டா? அவையெல்லாம் இப்போதைய காலத்திற்குப் பொருத்தமானவைதானா? (relevant) என்ற கேள்வி வரலாம். கண்டிப்பாக இவற்றால் இன்றைக்கும் உபயோகம் உண்டு. புராணம் என்ற சொல்லுக்குப் பொருள் – புரா அபி நவம் – புராணம். மிகப் பழையதான வரலாற்றைக் கூறுவதானாலும், எந்தக் காலத்தில், எந்தத் தேதியில், பிரித்துப் படித்தாலும், அந்தக் காலத்துக்குத் தகுந்த, உயர்ந்த கருத்துக்களைக் கொடுக்கும். அன்றன்று புதிது, புதிதாக அனுபவிக்கும் பேரின்பத்தைக் கொடுக்கும்.

பழையதாக இருந்தும், அன்றன்று புதுப்புதுச் செய்திகளைக் கொடுக்கிறதே! இது எப்படி சாத்தியப்படுகிறது? காரணம், இந்தப் புராணங்களின் அடிப்படை ஒன்றே. உலகம் எத்தனைதான் அறிவியல் முன்னேற்றத்தைக் கண்டாலும், அவற்றை கண்ணால் பார்க்கத்தானே இயலும்? காதால் கேட்கத்தானே முடியும்? வாயால் பேசுவதற்குத்தானே திறமை உண்டு? மாற்றிச் செயல்படுத்த முடியாது அல்லவா? அடிப்படை உண்மைகள் மாறாதவை. நெருப்புக்கு எப்போதும் எரிக்கிற சக்திதான் உண்டு. தண்ணீருக்கு எப்போதும் எல்லாப் பொருட்களையும் தூய்மையாக்கி, அது குளிர்ந்திருக்குமாறு செய்யக் கூடிய சக்திதான் உண்டு. காற்றுக்கு மென்மைதான் தன்மை. இப்படி ஒவ்வொன்றுக்கும் அவ்வவற்றிற்கு இருக்கும் இயற்கைத் தன்மை மாறப் போவது இல்லை. எந்த அறிவியலும் இந்த அடிப்படையில்தான் வளருகிறது. அதே போல ஆன்மீகத்திலும் அடிப்படை கருத்துகள் மாறாது.

நாம் அனைவரும் ஜீவர்கள், அதாவது ஜீவாத்மாக்கள். பகவானோ, பரமாத்மா. அவன்தான் உலகத்தைப் படைக்கிறான். அனைத்தையும் காக்கிறான். எங்கும் நீக்கமறறைந்திருக்கிறான். அந்த இறைவனுக்கு அடியவனாகத்தான் ஜீவன் உள்ளான். இந்த அடிப்படைக் கருத்துக்கள் மாறாது. இந்தக் கருத்துக்களின் மேலே கட்டப்பட்டவைதான் புராணங்கள். ஆகையால் கண்டிப்பாக எந்த ஒரு காலத்திலும் அவற்றால் பயன் இருக்கும். மற்றொரு கோணத்தில் பார்ப்போம்: இந்தப் புராணங்களை இயற்றியவர்கள் ரிஷிகள், முனிவர்கள், கவிகள். ரிஷி என்று சொன்னால் - ‘மந்த்ர த்ரஷ்டா ரிஷி: – மந்திரங்களை உணர்ந்தவர்கள் என்பது பொருள். வேத மந்திரங்கள் என்பவை, பகவானைக் குறித்த மந்திரங்கள். அவை ரிஷிகள் மூலம் வெளியிடப்பட்டிருக்கையில், எக்காலத்துக்கும் அவை பொருந்தும்.

முனிவர்கள் என்றால் - ‘மனன சீல: முனி: – நன்கு மனனம் செய்கிறவர்கள் என்று பொருள். உலகத்தை எப்படி வாழ்விக்கலாம்? எது கொண்டு மக்களைத் திருத்தலாம்? என்ற நல்லெண்ணத்தை நினைவில் கொண்டே செயல்படுபவர்கள்தான் முனிவர்கள். நம்முடைய நலனில் அவர்களுக்குத்தான் எத்தனை அக்கறை!

அடுத்து, கவிகள் பாடியிருக்கிறார்கள். ‘கவி: கிராந்தி தர்சீ – யார் ஒருவன் நிகழ்காலத்தைத் தாண்டி வெகு தூரத்துக்குப் பார்க்கிறானோ, தொலைநோக்குடன் பார்க்கிறானோ, அவன்தான் கவி!

ஆக, ரிஷிகள், மந்திரத்தின் சக்தியை உணர்ந்தவர்கள். முனிவர்கள், மனிதர்களுடைய நன்மையை நினைத்து அதற்கேற்ப செயல்படுபவர்கள். கவிகள், புரட்சிகரமாக நிகழ்காலத்தைத் தாண்டி, வருங்காலத்தைத் தொலைநோக்குப் பார்வையோடு பார்க்க முடிந்தவர்கள்.

இப்படி முக்காலமும் உணர்ந்திருப்பவர்கள் எழுதியவைதான் புராணங்கள். எப்போது முக்காலமும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அப்போது, ஆயிரம் ஆண்டுகள் என்ன...? லட்சம் ஆண்டுகள் என்ன...? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தப் புராணங்கள் எல்லாம் மனிதர்களுக்குப் பயன்படும்.

மற்றொன்று பார்ப்போம். ரிஷிகள் எல்லாம் அறிவீனர்கள் அல்லர். அறிவுக்கூர்மைமிக்கவர்கள். அவர்கள் அனைவரும் கூடி ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்றால், அதுவும் மெத்தப் படித்தவர்கள், ஆசார அனுஷ்டானத்தில் குறைவு இல்லாதவர்கள் – அப்படிப்பட்ட சான்றோர்கள் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்றால், அது நம் நன்மைக்காகத்தானே இருக்கும்! கண்டிப்பாக நாம் நம்பலாம்.

வேறொரு கோணத்தில் பாருங்கள். நமக்கு ஏதோ ஒரு தேவை ஏற்பட்டு விட்டது. அல்லது ஏதோ ஒரு ஆபத்து. அதற்காக ஒருவரிடத்தில் உதவி கேட்கிறோம். அல்லது, அவருடைய அபிப்பிராயத்தைக் கேட்கிறோம். யாரிடத்தில் கேட்போம்? அவர் மெத்தப் படித்தவராகவோ, அனுபவம் மிக்கவராகவோ இருந்தால்தானே நாம் அவரை அதற்காக அணுகுவோம்.

அடுத்தது, நம்முடைய நலனில் அவர் அக்கறைக் கொண்டவராக இருக்க வேண்டும். மூன்றாவது, அவர் தனக்கென்று தனிப்பட்ட ஒரு பயனைக் கருதாதவராக இருக்க வேண்டும். தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, அதற்காக நம்மை சுயநல நோக்கில் உபயோகப்படுத்திக் கொள்ளாதவராக இருக்க வேண்டும்.

அவர் நம்மிடத்தில் வேறொரு பயனை, அல்லது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் உள்நோக்கம் இல்லாதவராக இருக்க வேண்டும். அவர் சான்றோராகவும் இருக்க வேண்டும். அப்போதுதானே அவரிடத்தில் போய் அபிப்பிராயம் கேட்போம்?

அதேபோல், இங்கேயும் வால்மீகிக்கோ, வேத வியாஸருக்கோ, சுகாச்சாரியாருக்கோ நம் நலனில் அக்கறை உண்டு. சந்தேகம் இல்லை. அவர்களுக்கு ஏதாவது பண வரத்துப் பற்றி ஆசையா? அவர்களுக்குக் கூலி கிடைக்கப் போகிறதா? ஒன்றும் இல்லை. அவர்களுக்கு என்று ஒரு சுயநல நோக்கு (private agenda) கிடையாது.

நம் நலன் மட்டும்தான் அவர்களுக்கு இலக்கு. அவர்களோ சான்றோர்கள். அவர்களது அறிவோ, பக்தியோ குறைவே இல்லாதவை. ஆக, இத்தனை நலன்களும் இருக்கிறபடியால், ரிஷிகள் கூறியதை அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். அதை ஏற்றுக் கொண்டால், நம் வாழ்க்கைக்கு நன்மைதான் ஏற்படும். ஒரு சிந்தனை. Royalty கொடுக்க வேண்டாமா? ஒருவர் ஏதோ எழுத்து எழுதுகிறார். அல்லது பேச்சு பேசுகிறார் என்றால், அது என்ன விற்பனை ஆனாலும், அதற்கென்று ஒரு தொகை கொடுப்பது வழக்கம் அல்லவா? புத்தகம் வெளியிட்டால் கூட அப்படி கொடுப்பார்கள்.

வால்மீகி, ராமாயணம் எழுதினார். வேத வியாஸர், பாகவத புராணம் எழுதினார். அவர்கள் யாரும், நாம் எத்தனை முறை அதை பிரவசனம் செய்கிறோமோ, எத்தனை முறை படிக்கிறோமோ – அத்தனை முறைகளுக்கும், ஒவ்வொரு முறை படிக்கும்போதும், தங்களுக்கு ஒரு தொகை, ராயல்டியாக அனுப்ப வேண்டும் என்றா கேட்கிறார்கள்.

ஆனால் வேறொன்று கேட்கிறார்கள். என்ன கேட்பார்கள்? ‘ஒரு தரம் பாகவதம் படித்தாய். எனக்கு ஒரு ‘ராயல்டி வேண்டும். அது எது தெரியுமா? மற்றொரு முறை நன்றாக அதே பாகவதத்தைப் படி. மறுபடியும் ஒருமுறை ஆழ்ந்து படி. படித்தபடி நடப்பதற்குப் பழகிக் கொள் – இதுதான் அவர்கள் எதிர்பார்க்கிற ‘ராயல்டி. இது ஒன்றைத்தானே பெரியோர்கள் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். அதைக் கொடுப்பதற்கு என்ன குறை?

நல்ல உணவு படைக்கப்படுகிறது. நமக்கும் பசி இருக்கிறது. காசு கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை. அப்போது உணவை அனுபவிப்பதும், உண்டு களிப்பதும் மட்டும்தானே நாம் செய்ய வேண்டியவை! அப்படி களிப்பதற்குத்தான் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

புராணங்களிலே சிறந்ததான, பாகவத புராணம் எத்தகையது? அது என்ன செய்தி சொல்லிற்று? அதனால் நமக்கு என்ன பயன்? அதன் சிறப்பு என்ன? ஏன் ஏழு நாட்களில் அதை நாம் கேட்க வேண்டும் என்று வழி வகுத்தார்கள்? இவை அனைத்தையும் பார்ப்போம்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

1 கருத்துகள்

கருத்துரையிடுக
புதியது பழையவை