திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 3


அறிமுகம் – (3) – பாகவத புராணம் பிறந்தது

வேதத்திற்கு வலிமை சேர்ப்பதற்காகவும், வேதத்தில் கூறப்பட்ட கருத்துகளை மேலும் விரித்து உரைத்து, விவரித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசவும்தான் இதிஹாஸங்களும், புராணங்களும் வந்தன. புராணங்கள் பதினெட்டு என்று பார்த்தோம். ஒரு புராணம் என்றால், அது சில அடையாளங்களுடன் இருக்க வேண்டும். முக்கியமாக ஐந்து அடையாளங்கள் இருக்கும்.

ஸர்கஸ்ச, ப்ரதி ஸர்கஸ்ச, வம்சோ, மந்வந்தராணிச, வம்சானுசரிதஞ்சேதி – புராணம் பஞ்ச லக்ஷணம்.

– இது அதற்குரிய ச்லோகம். ஐந்து அடையாளங்கள் புராணத்தில் இருக்கும்.

ஸர்க:ச – இவ்வுலகம் எப்படிப் படைக்கப்படுகின்றது – என்ற படைப்பு கூறப்படும்.

ப்ரதி ஸர்க:ச – எப்படி இவை அனைத்தும் பகவானிடத்தில் லயிக்கிறது என்பது கூறப்படும்.

வம்ச: – சூர்ய வம்சத்தில் யார் யார் பிறந்தார்கள்? என்ன செய்தார்கள்? சந்திர வம்சத்தில் யார் யார் பிறந்தார்கள்? யாது செய்தார்கள்? என்ற கதையெல்லாம் கூறப்படும்.

மந்வந்தராணி ச – ஒவ்வொரு மனுவும் எப்படி இந்த பூலோகத்தை ஆட்சி செய்தார்? ஸ்வாயம்புவ மனு என்ன செய்தார்? ரைவத மனு என்ன செய்தார்? சாக்ருத மனு என்ன செய்தார்? – என்று ஒவ்வொரு மனுவின் காலத்தில் நடந்த வரலாறுகள் இருக்கின்றனவே – அவற்றைச் சொல்வதுதான் ‘மந்வந்தரங்கள்.

வம்சானுசரிதம் ச இதி – அந்தந்த வம்சம், அவற்றில் பிறந்த அரசர்களைப் பற்றிய கிளைக் கதைகள், பகவானைப் பற்றிய கிளைக் கதைகள். – ஆக, இவை ஐந்தும் சேர்ந்து இருப்பதுதான் ஒரு புராணத்தின் அமைப்பு இலக்கணம்.

எல்லாப் புராணங்களிலும் இந்த ஐந்து அடையாளங்களும் நிறைவாக இருக்கும் என்று கூற இயலாது. ஒவ்வொன்று குறைந்து இருக்கலாம். ஆனால், பாகவத புராணத்திலும், ஸ்ரீவிஷ்ணு புராணத்திலும் இந்த ஐந்து அடையாளங்களும் நிறைந்திருக்கும். ஆகையால், இவற்றைப் பரிபூரணமான புராணங்கள் என்று சொல்கிறோம்.

பாகவதம் என்ற சொல்லுக்குப் பொருள் யாது? பகவத இதம் – பாகவதம். பகவானைப் பற்றியது இது – அதனால் பாகவதம். பகவானைப் பற்றி உள்ள உயர்ந்த செய்திகள், ஆழ்ந்த கருத்துகள் – ஆகியவற்றைக் கொண்டதுதான் பாகவதம். இந்தப் புராணம் எவ்வளவு பெரியது? அனைத்துப் புராணங்களும் சேர்ந்து மொத்தம் நான்கு லட்சம் ச்லோகங்கள். கேட்டால் வியப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இதிஹாஸத்தில் ஒன்றான பாரதம் மட்டுமே ஒண்ணேகால் லட்சம் ச்லோகங்கள்! அதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பதினெட்டு புராணங்களும் சேர்ந்துதானே நாலு லட்சம் ச்லோகங்கள்!


அதில் பாகவத புராணத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் ச்லோகங்கள். பன்னிரண்டு ஸ்கந்தங்கள். சுமார் 335 அத்தியாயங்கள். இது புராணத்தின் சிறப்பு. பகவானுடைய அவதாரங்கள்; நாம் வாழ்க்கை வாழ வேண்டிய முறை; நாம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்; வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்ந்த குணங்கள் – இவற்றை எல்லாம் பாகவதம் கூறும். பாகவதத்தை எழுதியவர் யார்? இந்த ச்லோகம் அனைவரும் அறிந்ததே.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம்
சக்தே: பௌத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே
சுகதாதம் தபோநிதிம்

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஓதும்போது, ஒவ்வொரு நாளும் இதை முதலில் சொல்கிறோம். ப்ரம்மா பல ரிஷிகளைப் படைத்தார். அவர்களில் ப்ரம்மாவுக்குப் புதல்வனாகவே கொண்டாடப்படுபவர் வஸிஷ்டர். வஸிஷ்ட ரிஷி ப்ரம்ம ரிஷி. அவருடைய புதல்வர் சக்தி. சக்தியுடைய புதல்வர் பராசர மஹரிஷி. அவரே விஷ்ணு புராணம் இயற்றியவர். பராசரருடைய திருக்குமாரர் வேத வியாஸர்.

வேத வியாஸர்தான் மஹாபாரதத்தையும் எழுதினார். வேத வியாஸர்தான் பாகவத புராணத்தையும் எழுதினார். அதாவது ஒரு இதிஹாஸத்தையும் எழுதியுள்ளார்; புராணங்களில் பாகவத புராணத்தையும் எழுதியுள்ளார். அந்த வியாஸருடைய திருக்குமாரர்தான் சுகாச்சாரியார்.

சுகாச்சாரியார்தான் பாகவத புராணத்தைப் பிரசாரம் செய்தார். பரீக்ஷித் என்னும் அரசனுக்கு உபதேசித்தார். எப்பேர்ப்பட்ட குரு பரம்பரை! வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர், சுகர்! ஒருவரிடமாவது ஏதேனும் குறை உண்டா? தன்னலத்துக்காக எதையாவது செய்திருப்பார்களா? மக்களுடைய முன்னேற்றத்துக்காகவே வாழ்ந்தவர்கள். அதற்கென்றே பெரிய பெரிய காவியங்களை நமக்குக் கொடுத்தவர்கள். அதனால் கண்டிப்பாக அவர்களுடைய வார்த்தைகளை நம்பலாம் அல்லவா? சிலருக்குத் தந்தையால் ஏற்றம் இருக்கும், வேறு சிலருக்கு மகனால் ஏற்றம் இருக்கும்.

ஆனால் வியாஸருக்கோ, தன் தந்தையான பராசர ரிஷியாலும் ஏற்றம், தன் மகனான சுகாச்சாரியாராலும் ஏற்றம். இருவராலும் ஏற்றம் வியாஸருக்கு. வியாஸர்தான் பாகவத புராணத்தை இயற்றியவர். அவரை கிருஷ்ண த்வைபாயனர் என்று கொண்டாடுவார்கள். கண்ணனே வியாஸராகப் பிறந்தாராம். அதாவது நாராயணனே வியாஸராக இவ்வுலகில் தோன்றினார்.

வியாஸாய விஷ்ணு ரூபாய
வியாஸ ரூபாய விஷ்ணவே
நமோவை ப்ரஹ்மநிதயே
வாஸிஷ்டாய நமோ நம:

வஸிஷ்ட குலத்தில் தோன்றிய வியாஸருக்கு வணக்கம். விஷ்ணு வடிவாயுள்ள வியாஸராகவும், வியாஸர் வடிவம் கொண்ட விஷ்ணுவாகவும், வேதத்தின் பொக்கிஷமாகவுமுள்ள அவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

அவரை வணங்கிக் கொண்டுதான் பாகவத புராணத்தை நாம் கேட்கத் தொடங்க வேண்டும். நம்மை வழி நடத்தும் ஆசிரியராகிய அவரை வணங்கி, நன்றி செலுத்தினாலே ஒழிய, அவர் எழுதிய நூல் நமக்குப் புரியாது. இது ஏதோ கறுப்பு வெள்ளையில் அச்சுப் போடப்பட்டது மட்டும் அல்ல.

இது, அந்த ஆசார்யனின் திருவுள்ளம். அவருடைய உபதேசம். அவர், நமக்கென்று விட்டுச் சென்றிருக்கும் சொத்து. அப்படிப்பட்ட வேத வியாஸர், ‘கிருஷ்ண த்வைபாயனர், ‘பகவத் பாதராயணர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவர் பாகவதம் எழுதியதே ஒரு சுவையான செய்தி.

மஹாபாரதத்தை ஒண்ணேகால் லட்சம் ச்லோகங்களோடு எழுதினார். படித்துப் பார்த்தால், மிக உயர்ந்த நூல். ஆனால், இந்த விரிவான நூலை அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன் கொள்வார்களா - என்பதே ஐயத்திற்கிடமாயிருக்கிறது. இதே வியாஸர் ‘ப்ரஹ்ம் ஸூத்ரம் என்ற உயர்ந்த நூலை எழுதினார். உபநிஷத்தின் கருத்துகள் அத்தனையும் இருக்கக் கூடிய நூல். ஆனால், படித்துப் புரிந்து கொள்வது என்பது சுலபமான செயல் அல்ல.

வியாஸர் யோசித்தார். நாம் இத்தனை கடினமான நூல்களாகவே எழுதி விட்டோமே; எதை எதையோ பற்றிப் பேசி விட்டோமே; அனைவரும் புரிந்து கொள்ளும்படி, படித்து ஆனந்தப்படும்படி, எளிமையான நூல் ஒன்று எழுத வேண்டும்; அதனால் நம் மனக்குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து – பாரதத்தையும், ப்ரஹ்ம ஸூத்ரத்தையும் எழுதின வியாஸர், அதனால் இன்பப்படாமல், மேற்கொண்டு பாகவத புராணத்தை இயற்றினார்; அதனால் மாந்தர் உயர்வடைவதைக் கண்டு இன்பம் எய்தினார்.

ஏன்? இந்தப் புராணம் முழுவதும் பகவானுடைய கதை. அனைத்தும் அவனுடைய செய்தி. அவனைப் பற்றி எதைப் பேசினாலும் ஆனந்தம் வரும் - என்று முன்பே கூறினேன் அல்லவா? அதனால்தான் வேத வியாஸருக்கு இன்பம் ஏற்பட்டது. ஆக, பாகவத புராணம் பிறந்தது எப்படி என்று பார்த்தோம். வியாஸர்தான் எழுதினார். அவருக்கே இவ்வளவு பெருமை என்றால், அவருடைய திருக்குமாரரான சுகாச்சாரியாரைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்போதும் இளமையுடன் கூடியவர், பற்றற்றவர், வைராக்கிய நிதி.

அவரைப் பற்றி ஒரு கதை உண்டு.

(தொடரும்)

நன்றி - துக்ளக் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக