சனி, 6 ஜூலை, 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 58

மூன்றாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்

ஸ்ரீ வராஹ அவதாரம் (தொடர்ச்சி) 

மைத்ரேயர், விதுரருக்கு ஸ்ரீ வராஹ அவதாரத்தின் பெருமைகளையும், அதன் பயன்களையும் சொல்லி வருகிறார். பகவான் கண்ணன் கீதையில் கூறியது போல், ஸாதுக்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை ஸ்தாபிக்கவும் பகவான் அவதரிக்கிறார். வராஹ அவதாரத்தின்போது துஷ்டர்களான ஹிரண்யாக்ஷன் முதலானோரை முடிக்கவும், ஸாதுக்களான ரிஷிகளையும், பூமாதேவியையும் காக்கவும், யக்ஞம், யாகம், ஹோமம் செய்தல் போன்ற தர்மங்களை ஸ்தாபிக்கவும் பகவான் அவதரிக்கிறார். 

பூமிதேவியின் அவலநிலை குறித்துக் கவலை கொண்டிருந்த நான்முகனின் மூக்கிலிருந்து சிறு பன்றியாகத் தோன்றினார் பகவான். பன்றி கிடுகிடுவென வளர்ந்தது. இறைவன் ஸர்வேச்வரன். அவன் பன்றியாக அவதரித்தாலும், அனைவரைக் காட்டிலும் தன்னுடைய மேம்பட்ட தன்மையை – ஈச்வரனான தன்மையை – மறைத்துக் கொள்ளவும் முடியுமோ? ஆனால் அதையும் மறைத்துக் கொண்டே பன்றியாகத் தோன்றினானாம்! 

இது நம் ஜாதியைச் சேர்ந்த பன்றிதான் என்று எண்ணி, மற்ற அனைத்துப் பன்றிகளும் பெருமாளின் மீது விழுந்து புரளும்படியாக இருந்ததாம் அவனது குணம். இங்கே ஓர் உதாரணம் கூறுகிறேன். ராவணனால் ஏவப்பட்ட மாரீசன், தன் மாயத்தால் பொன்மானாக வடிவெடுத்து ஸீதையின் முன்னே நடமாடினான். அப்போது மற்ற மான்கள் எல்லாம் அவனை வந்து மோப்பம் பிடித்தன. ‘இது நம் ஜாதி இல்லை. ராக்ஷஸ ஜாதி’ என்று புரிந்து கொண்டு, பயந்து ஒதுங்கி விட்டன. ஆக, ஒரு அரக்கனால் தன்னுடைய இயல்பு வாசனையை மறைத்துக் கொண்டு பொதுவான மானாக முடியவில்லை. ஆனால், ஸர்வேச்வரன் தன்னையே மறைத்துக் கொண்டு, நிஜமான பன்றியோடு பிரித்தறிய முடியாதபடி பிறக்கிறான். இது எப்படி சாத்தியம்? அனைத்து அசேதனங்களுக்கும், ஜீவர்களுக்கும் அவனே அந்தராத்மாவாக, உயிராக இருக்கிறபடியால், எல்லாமே அவன்தானே! 

ஆழ்வார் ஒரு பாடலில், ‘ஒத்தார் மிக்காரை இலையாய மாமாயா! ஒத்தாய் எப்பொருட்கும்’ – என்கிறார். தனக்குச் சமமானவனோ, மேம்பட்டவனோ இல்லாதவன் இறைவன். அவன் அனைத்துப் பொருள்களுக்கும், அனைத்து ஜீவர்களுக்கும் ஒத்தாற்போல் பல பிறவிகளை எடுக்கிறான். தேவ ஜாதியில் இந்திரன் தம்பி வாமனனாகவும், மனிதப் பிறவியில் ராமன், கிருஷ்ணன் ஆகியோராகவும், ஏன் தேவையெனின் ஒரு குள்ளமான மாமரமாகவும் கூட பெருமான் பிறக்கிறான்! எப்போதும் அவரது பெருமைகளில் ஒன்று கூடக் குறைவது கிடையாது. ஆனால், தான் பிறவி எடுத்த அனைத்து ஜாதியரோடும் ஒன்றாகக் கலந்து, அவர்களுடன் சமமாகப் பழகுகிறான். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால், நம் அனைவருக்குள்ளும் இறைவன், நம்மைப் பெறுவதற்காகவே ஏங்கிக் கொண்டு, இவன் திருந்துவானா என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறான் என்பது புரியும். அப்போது அந்த இறைவனை அடைய வேண்டும், அவனையே சரணம் புக வேண்டும் என்கிற துடிப்பு மிகும். 

சிறு பன்றியாகத் தோன்றிய எம்பெருமான் கிடுகிடுவென வளர்ந்தான். இவனைப்பற்றி ஸ்ரீ விஷ்ணு புராணத்தில், பராசர மகரிஷி கூறுகிறார். ‘எவருடைய குளம்புக்குள்ளே மேரு மலையும், ஹிமாச்சலமும் சிறு பரல் கற்களைப் போல கனகனவென்று ஒலிக்குமோ, அந்தப் பெரிய குளம்பும், திருமேனியும் உடைய மஹாவராஹப் பெருமானை வணங்குகிறோம் - என்று ரிஷிகள் துதித்தார்களாம். 

ஆழ்வார் இதை ஒரு பாடலில்,
சிலம்பினிடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்பத் திருவாகாரம்
குலுங்க, நிலமடந்தைதனை இடந்து புல்கிக்
கோட்டிடை வைத்தருளிய என்கோமான்
கண்டீர்.....
(பெரியதிருமொழி 4-4-8) 

- என்று புகழ்கிறார். பகவான் தன்னுடைய திண்ணிய திருவடிக் கணுக்காலில், வீரச்சிலம்பு அணிந்து கொண்டிருக்கிறான். அந்தச் சிலம்புக்குள் சிறு கற்கள் ஒலிக்கின்றன. அதில் ஒரு கல் மேருவாம், மற்றொரு கல் ஹிமாலயமாம். அப்படி என்றால், அந்தச் சலங்கையோ, கணுக்காலோ, பெருமானின் திருமேனியோ, எவ்வளவு பெரியதாக இருந்திருக்கும் என்று கற்பனை கூடச் செய்து பார்க்க இயலவில்லை. இப்படி பகவான் தோன்றியவுடன், அவன் பேரழகையும், தேஜஸையும் தரிசித்த ரிஷிகள் எல்லாம், பல ச்லோகங்களில் கொண்டாடினார்கள். எம்பெருமானுக்கு யக்ஞ வராஹன் என்னும் திருநாமம் உண்டு. அதாவது அனைத்து யக்ஞம், யாகம் ஆகியவற்றின் உருவாகவே வராஹப் பெருமான் எழுந்தருளியுள்ளார். அவர் அவதரித்தபோது, ஆகாயத்தில் வாலை உயரத் தூக்கிக் கொண்டு, கடினமான தன்னுடைய கேசமாகிய திருக்குழற்கற்றையாலும் குளம்புகளாலும் மேகங்களை அடித்துக் கொண்டு, தம்முடைய கோரைப் பற்களுடைய ஒளியால், சூரிய – சந்திரர்களை இருளாக்கிக் கொண்டும், பிடரி மயிரை உதறிக் கொண்டும், யக்ஞ சொரூபியாக எழுந்தருளினார். அந்த எம்பெருமானுடைய தோள்களில் காயத்ரி முதலான சந்தஸ்களும், அவருடைய ரோமங்களில் தர்ப்பங்களும், திருக்கண்களில், ஹோமத்துக்குப் பயன்படும் நெய்யும், திருவடிகளில் யாகத்திற்கான நான்கு கர்மங்களும், மூச்சுக் காற்றில் ஸ்வரத்துடன் கூடிய வேதங்களும் காட்சி அளித்தன. 

பெருங்கேழலார் தம் பெருங்கண் மலர் புண்டரீகம், நம்மேல் ஒருங்கே பிறழ வைத்தார் - என்பது ஆழ்வாரின் பாடல். அவன் பன்றியாகவே அவதரித்தபோதும், அவனது திருக் கண்கள் மலர்ந்த இரண்டு தாமரைகளை ஒத்திருந்தன. அவற்றைச் சுழற்றிக் கொண்டு ஒரு புறத்தில் அடியார்கள் எங்கிருக்கிறார்கள் என்ற அருளைச் சுரந்து கொண்டும், மற்றொரு புறத்தில் ஹிரண்யாக்ஷன் எங்கு ஒளிந்திருக்கிறான் என்று கோபத்தைக் கக்கிக் கொண்டும் பெருமான் புறப்பட்டான். அவனைத் தோத்திரம் செய்யும்போது, ரிஷிகள் கூறுகிறார்கள்: 

நமோ நமஸ்தே அகில மந்த்ர தேவதா த்ரவ்யாய ஸர்வ க்ரதவே க்ரியாத்மனே| வைராக்ய பக்த்யாத்ம ஜயாநுபாவித ஞாநாய வித்யா குரவே நமோ நம:|| (ஸ்ரீமத் பாகவதம் 3-13-39) 

– அதாவது உலகில் உள்ள மந்திரங்கள் அனைத்தாகவும், தேவதைகள் அனைவருக்கும் அந்தராத்மாவாகவும், யாகங்களில் இடப்படும் பொருள்கள் அனைத்தாகவும், அனைத்து யக்ஞங்களாகவும், அனைத்து ஹோமச் செயல்களாகவும் பகவானே, நீரே விளங்குகிறீர்! உலகப் பற்றில்லாமல் உம்மிடத்தே அன்போடு பக்தி செய்து, புலன்களை எவன் அடக்கி உம் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றுகிறானோ, அவனுக்கு முக்தி அடைவதற்குத் தேவையான அறிவைப் புகட்டுகின்ற குருவே! உமக்கு வணக்கம் – என்று ரிஷிகள் துதித்தனர். வராஹப் பெருமான் ஞானபிரான் என்றும் அழைக்கப்படுகிறார். ஞானத்துக்கெல்லாம் இருப்பிடம் அவனே! இவ்வுலக ஞானமாகட்டும், அல்லது முக்தி கொடுக்கும் ஆத்மஞானமாகட்டும், அனைத்தையும் வராஹப் பெருமானே ஞானபிரானாக இருந்து போதிக்கிறார். அவர் தன்னுடைய நீண்ட திருமேனியோடே, ‘எங்கே அரக்கன்?’ - என்று தேடிக் கொண்டு, பாதாள உலகத்துக்குள் புகுந்தார். ஹிராண்யக்ஷனும், பெருமானை எதிர்ப்பதற்காக, அவன் எங்கு இருக்கிறான் என்று விசாரித்துக் கொண்டு, பாதாளத்தை அடைந்தான். இருவருக்கும் போர் மூண்டது. 

பகவான் அவலீலையாக, கருடன் எப்படி பாம்பைப் பிடித்துத் துவைக்குமோ, அதே போல ஹிரண்யாக்ஷனோடே மோதினார். அவன் தன் கதாயுதத்தை எடுத்துக் கொண்டு சண்டை செய்ய, விளையாட்டுப்போல் தன் கைகளாலும், தான் நினைத்த இடத்தில் பாய்ந்து சென்றழிக்கும் சக்ராயுதத்தாலும், ஹிரண்யாக்ஷனை முடித்தார். 

இது ஒரு புறம் இருக்க, பகவான் பூமாதேவியை தன்னுடைய நீண்ட இரு கோரைப்பற்களில் தூக்கிப் பிடித்து நின்றது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதைப்பற்றி பாகவத புராணத்தில் சுகாசாரியார் கூறுகிறார்: “ஒரு பெரும் யானை தன்னுடைய நீண்ட தந்தங்களில் காட்டுக் கொடிகளைச் சுற்றிக் கொண்டு, பெருமிதத்தோடே நடை போடுவது போல், வராஹப் பெருமான் தோற்றமளித்தார்” என்கிறார். 

நம்மாழ்வார் ஒரு பாடலில், “நீலவரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப, கோல வராகம் ஒன்றாய்; நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்!” என்று பாடுகிறார். நீல மலை ஒன்று இரண்டு பிறைச் சந்திரர்களை தன்னிடத்தே சொருகிக் கொண்டு நின்றால், எவ்வளவு கம்பீரமாக இருக்குமோ, அதைப்போல வராஹப் பெருமான் நின்றான். அவனே நீலமலை. அவனுடைய இரண்டு கோரைப் பற்களே இரண்டு பிறைச் சந்திரர்கள். சந்திரனில் ஒரு கருப்புத் திட்டு எப்போதும் தெரியும் அல்லவா? அதைப் போலத்தான் பூமாதேவி, பெருமானின் கோரைப் பற்களில் ஒட்டிக் கொண்டிருந்தாள். பூமியின் இடர் தீர்த்த பெருமானாக அவளை எடுத்து தன் இடது திருமடியில் அமர்த்திக் கொண்டு, அணைத்துக் கொண்டான். 

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கூறுகிறார்:
பத்யுர் தக்ஷிண பாணி பங்கஜ புடே
விந்யஸ்த பதாம் புஜா
வாமம் பந்நக ஸார்வபௌம ஸத்ருசம்
பர்யங்கயந்தீ புஜம்
(பூஸ்துதி -3) 

- அதாவது பெருமான் தன் இடது கையை விரிக்க, அதையே அணையாகப் பயன்படுத்தி பூமாதேவி, தன் அயர்ச்சியெல்லாம் தீரச் சாய்ந்து கொண்டாள். வராஹப் பெருமான், தனது வலது கையையே ஒரு திண்டு போல் பயன்படுத்தி, அவளுடைய இரண்டு திருவடிகளைத் தூக்கிப் பிடித்தார். இன்றும், லட்சுமி வராஹனைப் பல கோவில்களில் இந்தத் திருக்கோலத்தில் சேவிக்கலாம். பிராட்டியின் திருவடிகளைத் தன் கைகளால் ஏந்தி, பெருமான் காட்டுகிறாரே, என்ன செய்தி கூற? ‘என்னைப் பற்றுவதற்கு முன், இதோ நானே உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் பூமிப் பிராட்டியின் திருவடிகளைப் பற்றுங்கள்‘ என்று சொல்கிறார் போலும்! 

பூமிக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியவுடன், அவள் மேனி நடுக்கமும் தீர்ந்தது. ஆனாலும் இன்னும் சற்றே அவள் வருந்தினாள். வராஹன் கேட்டார். “தேவி, உம்மை ரக்ஷித்தோம். இனி ஏன் வருந்துகிறீர்?” 

அப்போது பூமாதேவி பிரார்த்தித்தாள் - “நம் முடைய ஆபத்தைப் போக்கினீர். ஆனால், நம்மிடத்தில் வாழும் கோடானு கோடி குழந்தைகளான மக்கள், உன்னை அடைவதற்கு வழி தெரியாமல் திகைக்கிறார்கள். உன்னை அடைய எளிதான உபாயத்தைக் கூறும்” என்று வேண்டினார். 

பகவான் பதில் கூறினார்: “வாயார என் திருநாமங்களைச் சொல்லச் சொல். மனதால் என் திருவுருவத்தை தியானிக்கச் சொல். கைகளால் மலர்களைக் கொண்டு என்னையே அர்ச்சிக்கச் சொல். இதுதான் என்னை அடைய எளிதான உபாயம்” என்றார். என்றோ க்ருத யுகத்தில் வடமொழியில் வராஹப் பெருமான் பூமாதேவிக்கு உபதேசித்ததை, நம் போன்ற எளியவர்கள் அனைவருக்கும், இந்தக் கலியுகத்தில் இனிய தமிழில் உபதேசிப்பதற்காக, பூமாதேவி ஆண்டாளாக அவதரித்தாள். இந்த உபதேசத்தையே திருப்பாவையின் ஐந்தாவது பாடலில், ‘வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க.... தூமலர் தூவித் தொழுது’ என்று ‘மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களினாலும் பெருமானைத் துதித்தால் எளிதில் அவனை அடையலாம்’ என்று கூறினாள். அப்போதே எம்பெருமான் பூமாதேவிக்கு கைசிக புராணத்தை, கைசிக மகாத்மியத்தை உபதேசித்தார். இன்றும் பல வைணவக் கோவில்களில் கைசிக புராணம், கைசிக ஏகாதசியன்று (கார்த்திகை சுக்லபக்ஷ ஏகாதசி) படிக்கப்படுகிறது. 

இக்கதையை மட்டும் சுருக்கமாகக் கூறுகிறேன். பூர்வ கல்பத்தில் நம்பாடுவான் என்ற பாணர் குலத்திலே தோன்றிய ஒருவர், திருக்குறுங்குடி - மகேந்திர கிரி மலையின் அடிவாரத்தில் இருந்தார். அவர் ஏகாதசி தோறும் திருக்குறுங்குடி மலையேறி, வீணைமீட்டி, பாட்டுப்பாடி, நம்பியை மகிழ்விப்பார். கார்த்திகை மாதத்து ஏகாதசியின்போது உபவாஸ விரதம் இருந்து அவர் மலையேறினார். அப்போது அங்கிருந்த ப்ரம்ம ராக்ஷஸன் ஒருவன் அவரைப் பிடித்துக் கொண்டு, சாப்பிட முயன்றான். நம்பாடுவான் வேண்டினார்: “உனக்கு உணவாவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த உடல் எனக்குப் புல்லுக்குச் சமம். ஆனால், நான் நம்பியைத் துதித்துப் பாடப் போகிறேன். பாடி முடித்து விட்டு, திரும்பி வரும் வழியில் உனக்கு உணவாவேன். இது உறுதி” என்றார். 

ப்ரம்ம ராக்ஷஸன் முதலில் நம்ப மறுத்தாலும், பின் ஏற்றுக் கொண்டான். நம்பாடுவான் சென்றார். நம்பியைப் பாடினார். ஆனந்தமாக விடை பெற்றார். நேரே, சொன்ன சொல் தவறாமல், ப்ரம்ம ராக்ஷஸனிடம் வந்தார். இதைப் பார்த்தவுடன், ப்ரம்ம ராக்ஷஸனுக்கு வியப்பு. உயிர் துறக்க யாரேனும் விருப்பப்படுவாரா? சட்டென்று பணிந்து போன ப்ரம்ம ராக்ஷஸன், “பிராமணனாகப் பிறந்த நான் ஒரு பாபத்தால், இப்படி அலைகிறேன். நீ நம்பியைக் குறித்துப் பாடினாயே, அந்தப் பாட்டுக்களின் பயனை எனக்குக் கொடுத்து, சாப விமோசனத்தை ஏற்படுத்து” என்றான். ஆனால், தூய பக்தரான நம்பாடுவானோ, “நான் ஒரு பலனைக் கருதிப் பாடினால் அன்றோ உனக்குப் பலனைக் கொடுக்க. நான் இறைவனின் ஆனந்தத்தைக் கருதிப் பாடினேனே தவிர, எனக்கு ஒரு துச்சமான பயன் கேட்டு அல்ல” என்றார். 

ஆனாலும், ப்ரம்ம ராக்ஷஸன் விடாமல், “கடைசியாகக் கைசிகப் பண் ராகத்தில் ஒரு பாடல் பாடியிருப்பாயே, அப்பாடலின் ராகத்தின் பலனையாவது கொடுத்து என்னை மீட்பாய்” என்று கெஞ்சினான். இரக்கமுற்ற நம்பாடுவான், பெருமானை வேண்டி அப்பயனைக் கொடுத்து, ப்ரம்ம ராக்ஷஸனை சாபத்திலிருந்து விடுவித்தார். யாரும் பக்தனாகலாம். எச்சாதி, எக்குலம், எம்மொழி, என்கிற வேறு பாடு பக்தர்களுக்குள் இல்லை. 

இந்த உயர்ந்த கதையை வராஹப் பெருமான், பூமாதேவிக்கு உபதேசித்தார். அப்போது கூறுகிறார். “என்னிடத்தில் அபசாரப்பட்டாலும் பொறுத்துக் கொள்வேன், தேவி! என் பக்தனிடத்தில் எவன் அபசாரப்பட்டாலும், எத்தனை கோடி ஆண்டுகளானாலும் நான் மன்னிப்பதில்லை. பாகவதர்களிடத்தில், பக்தர்களிடத்தில் நாம் அபசாரப்படவே கூடாது. இதுவே வராஹ புராணத்தின் செய்தி. பூமாதேவியை கிளர்ந்தெடுத்த பெருமான் அவளுக்குச் சிறந்த உபதேசங்களைச் செய்தான். ஹிரண்யாக்ஷனை அழித்தான். யக்ஞ சொரூபியாக நின்றான். 

இந்தக் கதையை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்கள் உள்ளத்தில் பெருமான் எப்போதும் திகழ்கிறான். அவர்கள் இந்த உடலின் இறுதியில் பிறவாமை என்னும் பேற்றினை அடைந்து முக்தி பெறுகிறார்கள். இத்தோடே மைத்ரேயர், வராஹ புராண சரித்திரத்தைக் கூறி முடித்தார். இனி ப்ரஹ்மாவினுடைய சிருஷ்டி தொடர்கிறது. வராஹப் பெருமான் திருவடிகளே சரணம்! 

இத்துடன் மூன்றாவது ஸ்கந்தம் முற்றுப் பெறுகிறது. 

ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ப்ரவசனப் பயணங்கள் மற்றும் வேதபாடசாலை பணிகள் ஆகிய பணிச் சுமைகள் காரணமாக, ‘துக்ளக்’கில் அவர் எழுதி வரும் ஸ்ரீமத் பாகவதம் தொடர், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 
- ஆர்

-------------

நன்றி - துக்ளக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக