வியாழன், 4 ஜூலை, 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 3


யோகா வகுப்புகளில் இனி "அகிம்சாவாதியாக இருந்தால் தான் கற்றுத்தரப்படும்' என போர்டு வையுங்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

யோகா செய்ய வேண்டுமானால், தேவையற்றதை விட வேண்டும் என்பது இன்னொரு முக்கிய தகுதி. ஆனால், எல்லாமே நமக்கு வேண்டும், பரணிலுள்ள பழைய காகிதம் கூட வேண்டும் என்ற மனநிலை தானே இருக்கிறது!

அடுத்து ஆசனம்...அதாவது அமர்கிற கோலம். படுத்தால் யோகம் வருமா! தீர்க்க யோகம் (தூக்கம்) தான் வரும்.

பிரணாயாமம் என்றால் மூச்சுப்பயிற்சி. பிரத்யாகாரம் என்றால் மனதை பிரம்மத்தை நோக்கி இழுத்துக்கொண்டு வருதல். மனசு என்பது கையில் கிடைத்தால் தேவலை! அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதை இழுத்தாகணும்! ஆன்மிகச் சொற்பொழிவுக்கு செல்லும் நீங்கள், மணி எட்டரையாச்சே!
சமையலாச்சோ இல்லையோ! வாசலில் செருப்பை விட்டு விட்டு வந்தோமே! இருக்குதோ இல்லையோ! இப்படி அலை பாயும். இப்படி ஓடுகிற மனசை இழுப்பது தான் பிரத்யாகாரம். ஒரு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கே இப்படி மனம் அலைபாய்கிறதென்றால், யோகாவில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம்!

அடுத்து தாரணா. தாரணா என்றால் கலசுகிற எண்ணங்களை விடுத்து புலனடக்கத்துடன் இருத்தல். (அலை பாய்கிற மனதை அடக்குதல்). யோகா செய்யும் போது தான், இரண்டு வருடங்களுக்கு நமக்கு வேண்டாதவர் ஒருவர் திட்டியது நினைவுக்கு வருகிறது.

துரியோதனன் கண்ணனைத் திட்டினான் இல்லையா! அது போல மனம் குழப்பத்துடன் தியானம் செய்கிறது. எனவே, இந்த வகை சிரமங்களின்றி உருவத்தோடு உள்ள பகவானையே தியானியுங்கள். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனாக அவனை நினையுங்கள். மனம் ஒரு கலங்கிய கிணறு. கலங்கிய கிணற்று நீரை தெளிவாக்க தேத்தாங்கொட்டை, நெல்லிமுள்ளி கொட்டையை கிணற்றுக்குள் போடுவார்கள். நமக்கு பெருமாள் தான் தேத்தாங்கொட்டை. கலங்கிய மனதை அவர் தெளிவாக்கி விடுவார்.

அடுத்து தியானம். "தியானம்' என்றால் "கலசாத (அலைபாயாத) எண்ணத்துடன் தியானம் செய்வது. இதன் பிறகு கடைசியாகத் தான் சமாதி நிலை. அதாவது, உருவமே இல்லாத பிரம்மத்தை அனுபவித்தல். இதுதான் எட்டாம் நிலை. எவ்வளவு நிலைகளைக் கடந்து உருவமற்றதை சிந்திக்க வேண்டியிருக்கிறது! பள்ளி, பட்டப்படிப்பு முடித்த பின் முனைவராக வேண்டும். யோகா செய்பவர்கள், ஆரம்பத்திலேயே உருவமற்றதை மனதில் நிறுத்துகிறேன் என்ற பெயரில் அஷ்டாங்க யோகத்தில் எட்டவதான சமாதியில் எப்படி ஆழ முடியும்? முனைவர் பட்டத்திலிருந்து தலை கீழாக முதல்நிலைக்கு போவது போலல்லவா இது!

விஷ்ணு புராணத்தை பராசர மகரிஷி எழுதினார். அதில்,பகவானின் திவ்ய உருவம் பற்றி வர்ணிக்கிறார். ஒரு யோகி, பகவானின் உருவத்தை சிந்திக்க சிந்திக்க உன் அழுக்கெல்லாம் போய் விடும் என்கிறார். இதை விட்டு விட்டு, யோகாவின் போது உருவமற்றதை சிந்தித்தால் மனஓட்டத்தை தடுத்து நிறுத்துவது எப்படி சாத்தியம்? யோகம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? "எண்ண ஓட்டத்தை தடுத்தல்'. எண்ணங்களை தடுத்தல் என்றால் எல்லாவற்றையும் தடுத்தல் என்று அர்த்தமாகாது. எண்ணத்திலுள்ள கெட்டதைத் தடுத்தல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறது வாய். அதற்காக வாயையே துண்டி என சொல்ல முடியுமா? நல்லதைப் பேசு, கண்ணால் நல்லதைப் பார். மனதால்
தப்பை விலக்கு, எண்ணத்தில் கோபம், பொறாமையை வளர்க்காதே என்று அர்த்தம் எடுக்க வேண்டும்.

யோகத்தின் கடைசி நிலையான சமாதி என்றால், ஏதோ கண்ணை மூடி தன்னையே மறந்து விடுவது என்பதல்ல. நமது கற்பனைகளை எல்லாம் வெட்டி விட்டு, அந்த சொரூபத்தை நினை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். மனம் நிர்மலமாக இருக்க பகவானை நினைக்க வேண்டும். ஆனால், தறி கெட்டு ஓடுகிற மனதை சமாதி நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா?

சிறிய வைரம் சிலரிடம் இருக்கும். அதை மெழுகு அல்லது வெல்வெட் துணியில் வைப்பர். அதில் வைரத்தை வைக்க ஒரு ஆதாரம் வேண்டும். அதாவது சாமணம் வேண்டும். அது போல, மிக நுண்ணியது மனது. அது கையில் அகப்படாததால், அதை பகவானிடம் லயிக்கச் செய்ய வேண்டுமே தவிர, மூக்கணாங்கயிறு போட்டு இழுத்தால் முடியாது.

நம் வீட்டு பெருமாளை, குலதெய்வத்தை பார்த்துக்கொண்டே இருங்கள். பிறகு மனதை அதில் லயிக்க விடுங்கள். அதன் அபரிமித அழகை நினைக்க நினைக்க மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

""சரி... கடவுளுக்கு உருவமிருப்பதால் என்ன பயன்? இல்லாவிட்டால் என்ன பயன்?''. பகவானுக்கு சுண்டல், சர்க்கரைப் பொங்கல், நைவேத்யம் செய்து சாப்பிட்டால் நம் புறஉருவம் தான் நன்றாக இருக்கும். ஆனால், முக்கியமாக நம் ஆத்மா நன்றாக இருக்க அவன் திருவுருவத்தை பார்க்க வேண்டும். எனக்கு தெரியாத இடத்தில் செல்லும் போது, யாரோ ஒரு மனிதன் வழிகாட்டுகிறான். எனக்கு பாதை பற்றிய கவலையில்லை அதுபோல், பகவானின் திருமேனியே சம்சாரக்கடலைக் கடக்க வழிகாட்டியாக உள்ளது. மனம் பகவானை நினைத்தால் கண் தப்பாய் பார்க்காது. திருநெல்வேலிக்கு நான் வந்தால், இங்கே வழிகாட்ட ஆள் கிடைக்கலாம். ஆனால், வடதுருவத்துக்குப் போனால் கை காட்டி கூட கிடையாது. பனிக்கட்டியில் நின்றால் காலே இருக்காது.

அதுபோல, உருவம் என்ற ஒன்று இருந்தால் தான் பகவானை மனதில் வைக்கலாம். ஆக, யோகா என்றதும் உருவமற்றதை தியானிக்கிறேன் என அமரக்கூடாது. மீண்டும் ஒன்றை நினைவூட்ட வேண்டியுள்ளது.

அகிம்சாவாதி தான் யோகாவுக்கு தகுதியுடையவன். எல்லா பிராணிகளும் வாய்க்குள் போக வேண்டுமென்றால் யோகாவுக்கு தகுதி கிடையாது. பிராமணர் மட்டும் என்றில்லை. எல்லாருமே சைவ உணவு தான் சாப்பிட வேண்டும். சாத்வீகமான உயர்ந்த உணவை நாமும் சாப்பிட்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திரும்பத் திரும்ப சம்சாரத்தில் உழன்றாக வேண்டியது தான். சரி...இனி அடுத்த விஷயத்துக்குள் போவோம். நம் உருவத்துக்கும், பகவான் உருவத்துக்கும் என்ன வித்தியாசம்? நமக்கு பல், மூக்கு, காது, நாக்கு எல்லாம் உள்ளது. இவை அவனுக்கு இருக்கிறதா? ஐம்பெரும் பூதத்தால் ஆனது மனித உடம்பு. ஆனால், அவனது உடம்பு எப்படி இருக்கும்?

- இன்னும் ஆனந்திப்போம்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக