வியாழன், 4 ஜூலை, 2013

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 2


பகவானுக்கு உருவம் இருக்கிறது என்றும், இல்லை என்றும் வேதம் சொன்னாலும், "இருக்கு' என்று ஒத்துக்கொண்டால் ஸனாதன தர்மம் (இந்துமதம்) பிழைத்தது. ஏனெனில், நான் 200 நாள் உங்களிடம் தொடர்ந்து பேசி, பகவானுக்கு உருவமில்லை என்றாலும், நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஏன்...வேதமே சொன்னாலும் கூட நம்பமாட்டீர்கள். ஏனெனில், உருவம் என்ற ஒன்று நம் மனதில் பதிந்து போன ஒன்று.
அதனால் தான் அவனை ஆறடி, நாலடி, ஒன்றரை அடி என்றெல்லாம் சுருக்கி வைத்திருக்கிறோம். புளியோதரை, உப்பில்லாதது, கனிஞ்ச பழம், காய்ந்த பூ இதையெல்லாம் கொடுக்கிறாய். ஆனால், இதெல்லாம் அந்த பகவானுக்கு தேவையா என்றால்.. இல்லை! இவை இல்லாமலே அவன் ஆனந்தமாக இருப்பான். ஆனால், நாம் அப்படியில்லையே!

இதையெல்லாம் அவனுக்கு நைவேத்யம் செய்து சாப்பிட்டால் தான் நமக்கு ஆனந்தம். வெள்ளையடிக்க ஏணி வேண்டும். வெள்ளையடிப்பவர் வீட்டுக்கு வந்து விட்டார். பக்கத்து வீட்டுக்காரருடன் நமக்கு ஆகாது. எனவே, வெள்ளையடிப்பவரிடம், ""எனக்கென்று சொல்லாமல், உன் தேவைக்காக வாங்குவது போல் கேள், அவர் தருவார். எனக்கென்று கேட்டால் தரமாட்டார்,'' என்று எச்சரித்து அனுப்புகிறார். வெள்ளையடிக்க வந்தவரும் போய் கேட்கிறார். ""அவர் யார் வீட்டுக்காக கேட்கிறாய்?'' என்கிறார். அவரோ, இவர் வீட்டைக் கை காட்ட "இல்லை' என்று சொல்லி விடுகிறார். அப்படியானால், ஏணி இருக்கிறது. அது உனக்கு இல்லை என்று தான் அவர் சொல்கிறார். அதற்காக, உலகத்திலேயே ஏணி இல்லை என்று சொல்லி விட முடியுமா?

அதுபோல் தான், பகவானுக்கு உருவம் இருக்கிறது. அது உன்னைப் போல் இல்லை என்று வேதம் சொல்கிறது.

""மனிதனாகிய உன்னைப் போல் என்னை நினைக்காதே. உன் உருவம் போல் என்னைக் கற்பனை செய்யாதே. உன் மூக்கு, காது போல் என் மூக்கும், காதும் இல்லை. உன் கண் போல என் கண் இல்லை,'' என்ற கருத்தில் தான் பிரம்மத்து உருவமில்லை என்று வேதம் சொல்கிறது.

அதனால் தான் "பிரம்ம சொரூபம்' (பிரம்மத்து உருவம் உண்டு) என்று சொல்கிறோம். அதாவது, உருவத்தை தாங்கி கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது என்று அர்த்தம். இன்னொரு வகையிலும் இதைப் பார்ப்போம்.

அடியேனின் ஆத்மாவை தாங்கி நிற்பது உடல். ஆக, உடம்பு பொய்யா? ஆத்மா பொய்யா? கண்ணுக்கு தெரிந்த உடம்பும் இருக்கிறது. தெரியாத ஆத்மாவும் இருக்கிறது. ஆக, இரண்டும் உண்மையே.

இப்படித்தான் பிரம்மத்துக்கு (பகவானுக்கு) உருவம் உண்டு என்றும் ஆகிறது, இல்லை என்றும் ஆகிறது. "நான்' என்ற ஆத்மாவுக்கு ஆறடி இல்லை. அதற்கு குலகோத்ரம் இல்லை. உடம்புக்கு தான் கோத்திரம் உள்ளது. ஒருவன் நம் மீது மோதி விட்டான். உடனே நாம் அவனை "கண்ணில்லையா?' என்று கேட்கிறோம். அதற்காக, அவனுக்கு கண்ணில்லை என்று ஆகி விடுமா! இருக்கிற ஒன்றை இல்லாததாக நாம் உருவகப்படுத்தி பேசுகிறோம் இல்லையா! கண் இருக்கிறது, ஆனால், அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை என்பதே நிஜம்.

நாக்கு, மூக்கு, காது, இவை சுவைக்கிறது, முகர்கிறது, கேட்கிறது. இவையெல்லாம் நமக்கு இருக்கிறது. பகவானுக்கு இவையெல்லாம் இல்லை என்றாலும், அவர் சுவைப்பார், முகர்வார், கேட்பார், ஓடுவார்...எல்லாம் செய்வார்.

நமக்கு தான் உறுப்புகள் அவசியம் வேண்டும். அவை இல்லாமலே அவர் செயல்படுவார். 
கண்ணன் ஆவணி அஷ்டமியன்று பிறந்தார். வசுதேவர் கண்ணனைக் கண்டார். 32 பல், சந்திரனை ஒத்த புன்சிரிப்பு, சங்கு, சக்கரம், கதை, வில், கேடயம், வைஜயந்திமாலையெல்லாம் அவனிடம் இருந்தன. வெறும் கண்ணனைக் கண்டதாக சாத்திரம் சொல்கிறது. ஆனால், இதிகாசம்,
புராணங்களோ உருவமிருப்பதை ஒத்துக் கொள்கிறது.

இப்போது நிறைய இடங்களில் "யோகா கற்றுத்தரப்படும்' என போர்டு மாட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கென்று பதஞ்சலி யோக சூத்ரம் என்ற நூலே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் நம் யோகா பற்றி அறிந்து கொள்ள வருகிறார்கள். அதன்பிறகு தான், நாம் யோகா பற்றி சுதாரித்துக் கொண்டிருக்கிறோம். எதற்குமே வெளிநாட்டுக்காரன் முக்கியத்துவம் கொடுத்தால், நாமும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். உள்ளூர் நாயனத்தின் பெருமை உள்ளூர்க்காரனுக்கு தெரிவதில்லை. அவன் எப்போதும் வாசிப்பவவன் தானே என்று விட்டு விடுகிறோம். அவனே, வெளியூர் போய் புகழடைந்த பிறகு தான், நம் ஊர்க்காரனிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா என்ற விஷயம் நமக்கே புரிகிறது.

யோகா வகுப்பிற்கு நீங்கள் சென்றதும் உங்களுக்கு முதலில் என்ன கற்றுத்தரப்படுகிறது என்றால், "சூன்யத்தில் மனது நிலைக்க வேண்டும்,வெற்றிடம் பற்றி நினையுங்கள், தியானம் செய்யுங்கள்,'' என்கிறார்கள்.

நீங்கள் எதுவுமே இல்லாத சூன்யத்தில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என 400 ஆண்டுகள் முயற்சித்தால் கூட அது முடியாது. ஏன்... ஒரு யோகியால் கூட அது முடியாது. அவராலேயே முடியாது என்கிற போது, சாதாரணமானவர்களான நம்மால் அது முடியுமா! எனவே, தியானத்தின் போது கூட ஒரு உருவத்தையே தியானிக்க வேண்டும். உருவத்தை நினைத்தால் தான் அதில் மனது லயிக்கும்.

பதஞ்சலி யோக சூத்ரத்தில் அஷ்டாங்க யோகம் பற்றி சொல்லப்படுகிறது. முதலில் யோகா வகுப்புக்குச் சென்றதும், "நிமிர்ந்து உட்காருங்கள்' என்பார்கள். நான் ஓரிடத்தில் பேசுகிறேன். நீங்களெல்லாம் இரண்டு மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்கிறீர்கள். பேச்சு என்னவோ பகவானைப் பற்றி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! அதற்காக, எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருக்க முடியும்! முட்டி வலிக்க ஆரம்பிக்கும், கால் மேல் காலை தூக்கிப் போடுவீர்கள்.

அங்குமிங்கும் அசைவீர்கள். பேச்சைக் கேட்பதை விட்டு மனம் விலகும். இதற்கே இப்படி என்றால், கண்ணைப் பொத்திக்கொண்டு, உருவமே இல்லாத ஒன்றில் மனதை லயிக்க விடுவது என்றால் சாமான்யமா?

அஷ்டாங்க யோகம் என்பது பற்றி உங்களுக்கு ஒருவேளை கற்றுத் தரப்பட்டிருக்கக் கூடும். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், காரண, தியானம், சமாதி என்பவையே அந்த எட்டு நிலைகள். இவற்றை ஏதோ வார்த்தையளவில் உங்களுக்கு கற்றுத் தந்திருந்தாலும் கூட, இதற்குரிய விளக்கத்தை யோக ஆசிரியர்கள் உங்களுக்கு கற்றுத் தந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. யோகம் செய்ய என்ன தகுதி வேண்டும் என்பதை முதல் வார்த்தையாகிய "யமம்' என்பது தெரிவிக்கிறது. "யமம்' என்றால் "உண்மை பேச வேண்டும், அகிம்சை, பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும், தேவையற்றதை விட வேண்டும், திருட்டு போன்ற தீய ஒழுக்கங்களை விட வேண்டும் என்பதெல்லாம் இதில் அடக்கம். இதில் ஒன்றாவது நம்மிடம் இருக்கிறதா! இது இருந்தால் தான் யோகம் செய்யவே நாம் தகுதியானவர்கள் ஆவோம். ஆக, முதல் படியிலேயே நாம் யோகம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவோம் என்பது உண்மை. நான் சொல்வது நிஜம் தானா என்று யோகா ஆசிரியர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

இதன்படி பார்த்தால், ஒரு பிராணியைத் தொடவே கூடாது, வெட்டுவது என்பது அப்புறம்...

- இன்னும் ஆனந்திக்கலாம்...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக