ஶ்ரீமத் பாகவதம் - 345

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(மார்க்கண்டேயர் தவம் செய்தலும், அவர் காமாதிகளால் (காதல் ஆசை) மயங்காதிருத்தலும், நர-நாராயணர்களை ஸ்தோத்ரம் செய்தலும்)

சௌனகர் சொல்லுகிறார்:- ஸூதரே! நீர் நெடுநாள் ஜீவித்திருப்பீராக. நல்லியற்கை உடையவரே! பிறருடைய கார்யங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் தன்மையரே! பேச வல்லவர்களில் சிறந்தவரே! நாங்கள் இன்னம் என்ன கேட்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதையும் எங்களுக்குச் சொல்வீராக. அபாரமான அஜ்ஞான அந்தகாரத்தில் (அறியாமையாகிற இருட்டில்) அழுந்தி உழல்கின்ற ஜந்துக்களை நீர் அதினின்று கரையேற்றுவிக்கின்றீர். (ஆகையால், நீர் நெடுநாள் வளர்ந்த வாழ்நாளுடையவராகி எங்களைப் போன்றவர்களின் அஜ்ஞானத்தை (அறியாமையைப்) போக்கிக் கொண்டிருப்பீராக). 

ஜனங்கள் மார்க்கண்டேய மஹர்ஷியைச் சிரஞ்சீவியென்று சொல்லுகிறார்கள். இவர் கல்பாந்தத்திலும் (கல்ப முடிவிலும்) கூட மரணம் அடையாமல், மிகுந்திருந்தாரல்லவா. மற்றும், இவர், “எவன் இந்த ஜகத்தையெல்லாம் கல்பாந்தத்தில் விழுங்கினானோ அத்தகைய பகவானையும் கண்டாரல்லவா? பார்க்க வம்ச ச்ரேஷ்டரான அந்த மார்க்கண்டேயர், இதே கல்பத்தில் எங்கள் வம்சத்தில் பிறந்தவர். இந்தக் கல்பத்தில், நைமித்திகம், ப்ராக்ருதம் முதலிய ப்ரளயங்களில் எவ்விதமான ப்ரளயமும் இதுவரையில் ப்ராணிகளுக்கு நேரிடவில்லை. இப்படியிருக்க, அவர் ப்ரளயத்தில் மிகுந்திருந்தாரென்பது எவ்வாறு பொருந்தும், மற்றும், அவர் ஒருவரே ப்ரளய ஆர்ணவத்தில் (ஊழி வெள்ளத்தில்) திரிந்து கொண்டிருந்து, ஓர் ஆலிலையின் மேல் சயனித்துக்கொண்டிருக்கிற சிறிய சிசு ரூபியான (குழந்தை வடிவான) பரமபுருஷனைக் கண்டாரென்றும் சொல்லுகிறார்கள். 

ஸூதரே! இவ்விஷயத்தில் எங்களுக்குப் பெரிய ஸம்சயமாய் (ஸந்தேஹமாய்) இருக்கின்றது. ஆகையால், அந்த வ்ருத்தாந்தத்தை (சரித்ரத்தைக்) கேட்க வேண்டும் என்று எங்களுக்கு மிகவும் குதூஹலம் (உத்ஸாஹம்) உண்டாயிருக்கின்றது. அதைச் சொல்லி, எங்கள் ஸம்சயத்தை (ஸந்தேஹத்தைப்) போக்குவீராக. நீர் யோகிகளில் சிறந்தவர். ஆகையால், எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் (நேராகப் பார்க்கும்) திறமையுடையவர்; அன்றியும், புராணங்களிலும் நல்ல அறிஞரென்று நன்கு புகழப்பட்டவர்.

ஸுதர் சொல்லுகிறார்:- மஹர்ஷீ! நீர் கேட்ட இவ்விஷயம் உலகங்களின் பாபங்களை எல்லாம் போக்கவல்லது. ஏனென்றால், இந்த வ்ருத்தாந்தத்தில் கலி மலங்களை (கலி யுகத்தின் அழுக்கை) எல்லாம் போக்க வல்லதாகிய ஸ்ரீமந்நாராயணனுடைய கதை, பெரும்பாலும் அமைந்திருக்கின்றது. (இதைச் சொல்லத் தொடங்கினோமானால், ஸ்ரீமந்நாராயணனுடைய கதைகளையே பெரும்பாலும் சொல்ல வேண்டியதாய் வரும். ஆகையால், இந்த வ்ருத்தாந்தம் மிகவும் பாவனமாய் (தூய்மைப்படுத்த வல்லதாய்) இருக்கும்). 

மார்க்கண்டேயர், தகப்பனாரிடத்தினின்று கர்ப்பாதானம் (கர்ப்பம் தரிப்பதற்காகச் செய்யப்படும் சடங்கு) முதலிய ஸம்ஸ்காரங்களெல்லாம் க்ரமமாக நடக்கப் பெற்று,  கடைசியில் உபநயன ஸம்ஸ்காரத்தையும் பெற்று, சாஸ்த்ரங்களில் சொல்லிய விதியின்படி வேதங்களை அத்யயனம் செய்து (கற்று), தன்னுடைய வர்ணாச்ரமங்களுக்குரிய தவமும், வேதமும் அமையப் பெற்று, நைஷ்டிக ப்ரஹ்மசர்ய (ப்ரஹ்மசர்யத்திலிருந்து வழுவாமல் நிலை நிற்கும்) வ்ரதத்தை ஏற்றுக் கொண்டு, தன்னுடைய தர்மத்தின் அபிவிருத்திக்காக (வளர்ச்சிக்காக) ஜடை தரித்து, மரவுரி உடுத்தி, கமண்டலு, தண்டம், உபவீதம், மேகலை, க்ருஷ்ணாஜினம் (மான் தோல்), அக்ஷமாலை, தர்ப்பங்கள் இவைகளைத் தரித்து, இந்த்ரியங்களை அடக்கி, காலை, மாலை ஆகிய இரண்டு ஸந்த்யைகளிலும் (பகலும் இரவும் சந்திக்கும் நேரம்) அக்னி, ஸூர்யன், ஆசார்யன், ப்ராஹ்மணன், ஹ்ருதயம் இவ்விடங்களில் பகவானை ஆதரித்துக் கொண்டு, குருவுக்காகப் பிக்ஷையெடுத்துக் கொண்டு வந்த அன்னத்தை அவர் முன்னே வைத்து, அவர் அனுமதி கொடுப்பராயின் அதைப் புசிப்பதும், ஒருகால் அனுமதி கொடாராயின், உபவாஸம் (உண்ணா நோன்பு) இருப்பதுமாயிருந்தார். 

இவ்வாறு தவத்திலும், வேதத்திலும் ஊக்கமுற்று, பத்து கோடி வர்ஷங்கள் (ஆண்டுகள்) இருடீகேசனை (இந்த்ரியங்களை நியமிப்பவரான பகவானை) ஆதரித்து, மிகவும் வருந்தியும் வெல்லமுடியாத ம்ருத்யுவை (மரணத்தை) வென்று விட்டார். இவ்வாறு நைஷ்டிக ப்ரஹ்மசர்ய வ்ரதத்தை (ப்ரஹ்மசர்யத்திலிருந்து வழுவாமல் நிலை நிற்கும் வ்ரதத்தை) சிறிதும் தவறாமல் அனுஷ்டித்துக் கொண்டு வந்த அந்த மார்க்கண்டேயர், தவம், வேதமோதுதல், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவைகளால் ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்கள் (குறைகள்) எல்லாம் தொலையப் பெற்ற மனத்தினால் த்யானித்தார். யோகியாகிய அந்த மார்க்கண்டேயர், இவ்வாறு மிகுந்த ஊக்கத்துடன் மனத்தை அடக்கி, பரமபுருஷனை த்யானம் செய்து கொண்டிருக்கையில், ஆறு மன்வந்தரங்கள் அடங்கிய நெடுங்காலம் கடந்தது. 

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! இந்த்ரன் இம்மார்க்கண்டேய மஹர்ஷி இவ்வாறு கடுமையாகத் தவம் செய்வதை அறிந்து, ஏழாவது மன்வந்தரமான இந்த வைவஸ்வத மன்வந்தரத்தில் இவர் நம் பதவியை விரும்புகிறாரோ, என்னவோ? என்று அவருடைய தவத்திற்குப் பயந்து, அதற்கு விக்னம் செய்யத் தொடங்கினான். அவ்விந்தரன், அம்மஹர்ஷியின் தவத்தைக் கெடுப்பதற்குக் கந்தர்வர்களையும், அப்ஸர ஸ்த்ரீகளையும் (தேவ மடந்தையர்), வஸந்த ருதுவையும் (காலத்தையும்), மலய மாருதத்தையும் (தென்றலையும்), லோபத்தையும் (பேராசையையும்), மதத்தையும் (கர்வத்தையும்) அனுப்பினான். 

திறமையுடையவரே! அவர்கள் ஹிமவத் (இமாலய) பர்வதத்தின் (மலையின்) வடபாகத்தில் புஷ்ப பத்ரா நதிக்கரையில் விசித்ரம் என்னும் பெயருடைய ஓர் சிலையின் அருகாமையிலுள்ள அம்மஹர்ஷியின் ஆச்ரமத்திற்குச் சென்றார்கள். அவ்வாச்ரமம் அழகிய மரங்களும், செடிகளும், கொடிகளும் அமைந்து, அழகிய பறவைக் கணங்களும் நிறைந்து, அழகிய புண்ய தீர்த்தங்களுமுடையதாய் இருந்தது. அங்கு வண்டுகள் மதுவைப் பருகி மதித்து (மயங்கி), பாடிக் கொண்டிருந்தன. மதித்த கோகிலங்களும் (குயில்களும்) கூவிக் கொண்டிருந்தன. மயில்களும் மதித்துப் பேராரவாரத்துடன் ஆலித்து (ஆடிக்) கொண்டிருந்தன. பறவைகளும் மதித்து (மயங்கி) இனமினமாய்க் குலாவிக் கொண்டிருந்தன. 

மலயமாருதம் (தென்றல்) இத்தகையதான அவ்வாச்ரமத்திற்குள் நுழைந்து, குளிர்ந்த அருவிகளின் துளிகளைச் சொரிந்து கொண்டு, புஷ்பங்களால் அணைக்கப் பெற்று, மன்மதனை மென்மேலென விளங்கச் செய்வதாகி வீசிற்று. வஸந்த ருது (காலம்) சந்த்ரோதயத்தினால் திகழ்கின்ற ப்ரதோஷ காலங்களை உடையதும், தளிர்கள், பூங்கொத்துகள் இவை அளவற்றிருப்பதும், ஒன்றோடொன்று இணைந்திருக்கின்ற மரங்கள், செடிகள், கொடிகள் இவற்றின் நிறைகள் (மிகுதி) உடையதுமாகிய அவ்வாச்ரமத்தில் விளக்கமுற்றிருந்தது. அப்ஸரஸ்த்ரீகளின் கூட்டங்களுக்குத் தலைவனான மன்மதனும், ஸங்கீதக்காரர்களும், பற்பல வாத்யக்காரர்களும், கூட்டங் கூட்டமாய்த் தொடரப் பெற்ற கந்தர்வர்களோடு கூடி, வில்லும், கணையும் கொண்டு அவ்விடம் புறப்பட்டான். 

அக்னியில் ஹோமம் செய்து முடித்து பரமபுருஷனைத் தியானித்துக் கொண்டு மூர்த்தீகரித்த (வடிவம் உடைய) அக்னி போன்றிருக்கிற அம்மார்க்கண்டேய மஹர்ஷியை, இந்திரனுடைய வேலைக்காரர்களான அம்மன்மதன் முதலியவர்கள் கண்டார்கள். அப்பால், அப்ஸர மடந்தையர்கள் அந்த மார்க்கண்டேய மஹர்ஷியின் எதிரில் நர்த்தனம் செய்தார்கள். பாட்டுக்காரர்கள், பாட்டுப் பாடினார்கள். மற்றும், பலர் ம்ருதங்கம், வீணை, பணவம் முதலிய வாத்யங்களை இனிதாக வாசித்தார்கள். மன்மதனும், அரவிந்தம் முதலிய ஐந்து முகங்களை உடைய அஸ்த்ரத்தைத் தன் தனுஸில் தொடுத்தான். வஸந்த ருது, மதம், லோபம் ஆகிய இந்த்ரனுடைய வேலைக்காரர்கள், அம்மஹர்ஷியின் மனத்தைக் கலக்கினார்கள். 

புஞ்சிகஸ்தலி என்னும் அப்ஸர மடந்தை ஸ்தன பாரத்தினால் மிகவும் வளைந்த இடையுடையவளாகி, பந்தை அடித்து விளையாடினாள். அப்பொழுது, அவளுடைய தலைச்சொருக்கு அவிழ்ந்து, அதினின்று பூமாலை நழுவிற்று. பந்தைத் தொடர்ந்து திரிகின்ற அம்மடந்தையர்மணி இங்குமங்கும் அலைகின்ற கண்களுடையவளாகி விளையாடிக் கொண்டிருக்கையில், அவளுடைய அரை நாண்மாலை அறுந்து விழுந்தது. அப்பொழுது அவளுடைய நுண்ணியதான அரையாடையைக் காற்று பறித்து விட்டது. அப்பொழுது, மன்மதன் அம்முனிவரைத் தான் ஜயித்து விட்டதாக நினைத்துக் கொண்டு, அவர் மேல் பாணத்தைத் தொடுத்துவிட்டான். பணமில்லாதவனுடைய முயற்சி போல், அவர்கள் செய்த முயற்சி எல்லாம் அம்முனிவர் விஷயத்தில் வீணாய் விட்டது. 

முனிவரே! இவ்வாறு அந்த மார்க்கண்டேய முனிவர்க்கு அபகாரம் (தீங்கு) செய்ய முயன்ற அம்மன்மதாதிகள், அறியாத சிறுவர்கள் உறங்குகின்ற ஸர்ப்பத்தை எழுப்பி அது விழித்துக்கொண்டு சீறுவதைக் கண்டு பயந்தோடுவது போல, அம்முனிவருடைய தேஜஸ்ஸினால் தஹிக்கப்பட்டு, திரும்பிப் போனார்கள். 

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! இந்த்ரனுடைய வேலைக்காரர்களான மன்மதாதிகள் தங்கள் திறமைகளையெல்லாம் காட்டி அவரை மதிமயக்கி அவமதிக்கப் பார்க்கினும், பகவானுடைய குணங்களை மனனம் செய்பவர்களில் சிறந்த மஹானுபாவராகிய அம்முனிவர், அஹங்காரத்தின் (நான்) பரிணாமமான மோஹத்திற்கு (மயக்கத்திற்கு) சிறிதும் இடம் கொடுக்கவில்லை. மஹானுபாவராகிய தேவேந்திரன் முகம் வாடி வந்திருக்கின்ற மன்மதனைக் கண்டு, ப்ரஹ்மர்ஷியான மார்க்கண்டேயருடைய ப்ரபாவத்தையும் கேட்டு, மிகவும் வியப்புற்றான். 

இவ்வாறு தவம், வேதமோதுதல், இந்த்ரிய நிக்ரஹம் (புலனடக்கம்) இவைகளால் மனத்தை அடக்கி, அதைப் பரமபுருஷனிடத்தில் ஊக்கமுறச் செய்து, அவனையே த்யானித்துக் கொண்டிருக்கின்ற அம்முனிவரை, அனுக்ரஹிக்கும் பொருட்டுத் தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனான பகவான், நர-நாராயண ரூபியாய் அவரெதிரே வந்து, தோன்றினான். 

அந்த நர-நாராயணர்களில் நரன், வெண்மை நிறமுடையவனும், நாராயணன் கருமை நிறமுடையவனுமாய் இருந்தார்கள். இருவரும், அப்போதலர்ந்த செந்தாமரை மலர் போன்ற கண்களும், நான்கு புஜங்களும் அமைந்து, க்ருஷ்ணாஜினம் (மான் தோல்) மரவுரி இவைகளை உடுத்து, கையில் பவித்ரமும், மார்பில் முப்புரி நூலுடன் திகழ்கின்ற யஜ்ஞோபவீதமும், கமண்டலுவும், கோணலின்றி நேராயிருக்கின்ற வேணு (புல்லாங்குழல்) தண்டமும், பத்மாக்ஷமாலையும் கொசு முதலிய ஜந்துக்களை ஓட்டுவதற்கான ஓர் வஸ்த்ரமும், தர்ப்பமுஷ்டியும் தரித்து, தவமே இரண்டு வடிவங்கள் கொண்டு வந்தாற் போல் திகழ்பவர்களும், நிலை நின்று விளங்குகின்ற மின்னல் போன்ற பொன்னிறமுடைய தேஹ காந்தியால் (உடலின் ஒளியால்) முழுவதும் கிரணங்களைச் சொறிபவர்களும், தேவச்ரேஷ்டர்களால் பூஜிக்கப்பட்டவர்களுமாக இருந்தார்கள். 

ரிஷி வேஷம் பூண்ட பகவானுடைய உருவங்களான அந்த நர-நாராயணர்களை அம்மார்க்கண்டேய முனிவர் கண்டு, ஆவலுடன் எழுந்து, நீண்ட தனது அங்கத்தை (உடலைத்) தடி போல் சாய்த்து, நமஸ்காரம் செய்தார். அம்முனிவர், அந்த நர-நாராயணர்களைக் கண்ட ஆநந்தத்தினால் தேஹம், இந்திரியம், மனம் இவையெல்லாம் அமைதி அடையவும், உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகவும், கண்களில் நீர் நிரம்பவும் பெற்று, அவர்களைப் பார்க்கவும் கூட முடியாதிருந்தார். 

அம்முனிவர் எழுந்து கைகளைக் குவித்து வணங்கி, ஆவலின் மிகுதியால், ஆலிங்கனம் செய்பவர் போன்று ஸர்வேச்வரர்களான அவர்களைக் குறித்து, எழுத்துக்கள் தழதழத்திருக்குமாறு வெறுமனே நமோ நமவென்று மொழிந்தார். பிறகு அந்த நர-நாராயணர்களுக்கு ஆஸனமிட்டு, பாதங்களை அலம்பி, சிறந்த சந்தனம், குங்குமம் முதலிய அங்கராகத்தினாலும் (உடல் பூச்சுக்கள்), தூபங்களாலும், பூமாலைகளாலும் அவர்களைப் பூஜித்தார். அம்முனிவர், தம்மை அனுக்ரஹிப்பதற்காக (அருள் புரிய) வந்திருக்கின்ற அம்மஹானுபாவர்கள் ஸுகமாக ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கையில், மீளவும் அவர்களுடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, மிகவும் பூஜிக்கத் தகுந்தவர்களான அன்னவர்களைக் குறித்து இவ்வாறு மொழிந்தார்.

மார்க்கண்டேயர் சொல்லுகிறார்:- ப்ரபூ! உன்னுடைய வைபவத்தை நான் என்னவென்று சொல்லுவேன்? நானும் மற்ற ப்ராணிகளும், ஆயிரம் சொல்லி என்? ப்ரஹ்ம, ருத்ரர்களும் ஆகிய எல்லாருடைய ப்ராணனும் (உயிரும்) உன்னுடைய தூண்டுதலால்தான் நடையாடிக் கொண்டிருக்கின்றது. வாக்கும், மனமும், மற்ற இந்த்ரியங்களும் அந்த ப்ராணனை (உயிரை) அனுஸரித்து (பின்பற்றித்), தத்தம் வியாபாரங்களில் திறமை உண்டாகப் பெறுகின்றன. நீ இப்படி எல்லோர்க்கும் ப்ராணாதிகளை (உயிர்களைத்) தூண்டி, தேஹ ஸ்திதியை (உடல் நடப்பை) நடத்திக் கொண்டிருப்பினும், ப்ராணிகள் அவ்வாறு நீ செய்கிற உபகாரத்தை அறியாமையால், உன்னைப் பணிகிறதில்லை. இவ்வுபகாரத்தை அறிந்த எவர்கள் உன்னைப் பணிகின்றார்களோ, அவர்கட்கே நீ உன்னிடத்தில் மேன்மேலும் பாவ பந்தத்தை (அன்புக் கட்டை) விளைக்கின்றாய். (உன்னை உபாஸித்துக் கடைத்தேறும்படி அவர்களை அனுக்ரஹிக்கின்றாய்). 

பகவானே! இம்முர்த்திகளிரண்டும் ஷாட்குண்யபூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனான) ஸர்வேச்வரனுடைய அவதாரங்களே. மூன்று லோகங்களுக்கும் ஸுகத்தை விளைப்பதற்காகவும், ஜ்ஞானோபதேசத்தினால் ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களை

ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  

ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), 

ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) 

என்ற மூன்று வகையான துன்பங்களைப் போக்குவதுக்காகவும், தன் பக்தர்கள், ம்ருத்யு (மரணம்) என்று கூறப்படுகின்ற ஸம்ஸாரத்தை வென்று மோக்ஷத்தை அடையும் பொருட்டும், நீ இந்த உருவங்களை ஏற்றுக் கொண்டிருக்கின்றாய். ஜகத் ரக்ஷணத்திற்காக (உலகைக் காப்பதற்காக) நீ ராம, க்ருஷ்ணாதி உருவங்களை அங்கீகரிப்பது போலவே, இவ்வுருவங்களையும் அங்கீகரித்திருக்கின்றாய். (ஆகையால், நீ சொல்லுவதெல்லாம் ஸர்வேச்வரனுடைய செயல். “நாங்கள் அந்த ஸர்வேச்வரனல்லோம்” என்று சொல்லி என்னை ஏமாற்ற வேண்டாம்). 

நூல் பூச்சி நூலைக் கக்கி மீளவும் இழுத்துக் கொள்வது போல், நீயே இவ்வுலகங்களையெல்லாம் படைத்து, கடைசியில் அழிக்கின்றாய். (நீ ஜகத்ரக்ஷணத்தை மாத்ரமே செய்கிறாயென்பதில்லை. ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களையும் (அழித்தல்) நீயே நடத்துகின்றாய்.) ஸ்ருஷ்டி, ஸம்ஹார கர்த்தாவும், தன்னுடைய அவதாரங்களால் ஜகத்தைப் பாதுகாப்பவனும், ஜங்கம (அசைபவை),  ஸ்தாவரங்களுக்குள் (அசையாதவை) புகுந்து அவற்றைத் தரித்து நியமித்துக் கொண்டிருப்பவனுமாகிய, உன்னுடைய பாத மூலத்தைப் பணிகிறவர்களுக்குப் புண்ய, பாப கர்மங்களில் மனம் செல்லுகிறதில்லை; கேவலம் உன்னுடைய முக மலர்த்திக்கு இடமான கர்மங்களையே விரும்பிச் செய்யும். பாபத்தைப் போல் புண்யமும் பந்தஹேது (உலகியல் கட்டிற்குக் காரணம்) ஆகையாலே இவ்விரண்டையும் நினைக்காது. ஆகையால், புண்ய, பாப கர்மங்களின் பலனான ஸுக, துக்கங்கள் அவர்களுக்குக் கிடையாது. மற்றும், ரஜஸ், தமோகுணங்களும் அவர்களைத் தீண்டுகிறதில்லையாகையால், அவற்றின் கார்யமான காம (ஆசை), க்ரோதாதிகளும் (சினம்) அவர்களுக்குக் கிடையாது. காலத்தினால் விளைகிற குளிர், வெயில், மழை முதலியவைகளும் அவர்களை வருத்தமாட்டாது. (ரோகங்களும் (வியாதிகளும்) அவர்களுக்கு உண்டாக மாட்டாது.) வேதங்களை மனத்தில் தேக்கிக்கொண்டு அவற்றின் உட்கருத்தை அறிந்த முனிவர்களும், உன் பாதமூலத்தை அடைவதற்காக அதையே இடைவீடின்றித் துதிப்பதும், வணங்குவதும், ஆராதிப்பதும், த்யானிப்பதும் செய்கின்றார்கள். 

நிரதிசய புருஷார்த்தஸ்வரூபனே! (அடையப்பட வேண்டியவற்றுள் சிறந்தவனே!) ஜகதீச! உன்னுடைய பாதங்களைப் பணிகிறவர்களுக்கு எவ்விதத்திலும் பயம் உண்டாகிறதில்லை. ஆகையால், ப்ராணிகளுக்கு அத்தகைய உன் பாதங்களைப் பெறுவதைக் காட்டிலும் வேறொரு நன்மை இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. (சதுர்முக லோக ப்ராப்தி (ப்ரஹ்மாவின் உலகத்தை அடைதல்) நன்மையன்றோ என்றால், அதெல்லாம் நன்மையாக மாட்டாது. ஏனென்றால்) அந்த ப்ரஹ்மாவின் வாஸஸ்தானமாகிய (இருப்பிடமாகிய) ஸத்யலோகம் த்விபரார்த்தம் (ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரார்த்தம் எனப்படும். க்ருத யுகம் 1728000 மனித வருடங்கள்; த்ரேதா யுகம் 1296000 மனித வருடங்கள்; த்வாபர யுகம் 864000 மனித வருடங்கள்; கலி யுகம் 432000 மனித வருடங்கள். ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர் யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரார்த்தம் எனப்படும்.) வரையிலுமே நிலை நின்றிருக்கும்; அதற்கு மேல் அழிந்து விடும். அத்தகைய நான்முகன், கால ஸ்வரூபனான உன்னிடத்தினின்று மிகவும் பயப்படுகிறான். (காலம் போகின்றதே. நமக்கு முடிவு ஸமீபித்து விடுகின்றதே (அருகில் வந்து விடுகின்றதே) என்று க்ஷணந்தோறும் (ஒவ்வொரு நொடியும்) பயப்படுகின்றான்). 

ப்ரஹ்மதேவனுக்கே இவ்வாறு பயம் விளையுமாயின், அவனால் ஸ்ருஷ்டிக்க (படைக்கப்) பட்டவர்களுக்கும், பஞ்சபூதங்களின் பரிணாமமான (மாறுபாடான) தேஹங்களையுடையவர்களுமான மற்றவர் விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? ஆகையால், ஸத்யலோகாதிகளைப் பெறுவது நன்மையென்று நினைப்பது அறிவின்மையேயாம். ஆகையால், மிகவும் தோஷங்களுக்கிடமாயிருப்பதும், நிஷ்ப்பலமும் (பயனற்றதும்), ஞானத்தை மறைப்பதும், ஜடமுமாகிய தேஹாதிகளை எல்லாம் துறந்து, ஸத்ய ஸங்கல்பனும் (நினைத்தை முடிப்பவனும்), பரமாத்மனும், குருவும், (அஜ்ஞானாந்தகாரத்தைப் போக்கும் தன்மையனும்) ஸர்வஸ்மாத் பரனுமாகிய (எல்லோரையும் விட மேலானவனுமான) உன்னுடைய ஆத்ம ஹிதமான (ஸர்வாத்மாக்களுக்கும் நன்மையான) பாதமூலத்தையே பணிகின்றேன். இவ்வாறு  உன்னை எவன் பணிகிறானோ, அவன் தான் விரும்புகிற புருஷார்த்தங்களை எல்லாம் பெறுவான். (“ப்ரஹ்ம, ருத்ரர்களும் கூட என்னுடைய மூர்த்திகளே. அப்படியிருக்க, அவர்களை விட்டு என்னையே பணிகிறது என்ன காரணத்தினால்?” என்றால் சொல்லுகிறேன்). 

ஜகதீசனே! ஆத்மபந்துவே! (ஜீவாத்மாவுக்கு உற்றாராய் இருப்பவனே!) நீ ரஜோகுணம் தலையெடுத்த ப்ரஹ்ம தேவனுக்கு அந்தராத்மாவாயிருந்து, இந்த ஜகத்தின் (உலகின்) ஸ்ருஷ்டியையும் (படைப்பையும்), தமோகுணம் தலையெடுத்த ருத்ரனுக்கு அந்தராத்மாவாயிருந்து ஸம்ஹாரத்தையும் (அழிவையும்), சுத்த ஸத்வ மயமான ராம, க்ருஷ்ணாதி அவதாரங்களால் ஸ்திதியையும் (காத்தலையும்) நடத்துகின்றாய். ஆகையால், ப்ரஹ்ம, ருத்ரர்கள், உன்னுடைய மூர்த்திகளே. ஸ்திதி (காத்தல்), ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துகிற அவ்வுருவங்கள், ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸு என்கிற உன்னுடைய மாயையினால் செய்யப்பட்டவைகளே. நீ லீலைக்காகவே அவ்வுருவங்களை ஏற்றுக் கொள்கின்றனையன்றி, ஜீவாத்மாக்களைப் போல் காமத்தினாலன்று. இவ்வாறு ஸ்ருஷ்டி- ஸம்ஹாரங்களுக்கு ஹேதுவான (காரணமான) ப்ரஹ்ம, ருத்ரர்கள், உன்னுடைய உருவங்களே என்பது எங்களுக்குத் தெரியும். 

ஆயினும், ஸத்வமயமான உன்னுடைய மூர்த்தி யாதுண்டு, அதுவே மனுஷ்யர்களால் உபாஸிக்கப்பட்டு, மோக்ஷத்திற்கு ஹேதுவான சாந்தியை விளைப்பதாம். ப்ரஹ்ம, ருத்ரர்களாகிற மற்ற மூர்த்திகள், அத்தகைய சாந்தியை விளைக்க வல்லவையாக மட்டாது? பின்னையோவென்றால், அம்மூர்த்திகளை உபாஸிக்கிறவர்களுக்கு வ்யஸனம் (வருத்தம்), மோஹம் (மயக்கம்), பயம் இவைகளே உண்டாகும். ஆகையால், நிபுண புத்திகள் (நன்கு அறிந்தவர்) உனக்கும், உன் பக்தர்களுக்கும் ப்ரியமாயிருப்பதும், சுத்த ஸத்வ மயமுமான உன்னுடைய மூர்த்தியையே பணிகின்றார்கள். 

பஞ்சராத்ர ஸித்தாந்தத்தின் உட்கருத்தை அறிந்த பெரியோர்களும், புருஷ ஆக்ருதியாய் (மனித வடிவாய்) இருக்கின்ற சுத்த ஸத்வயமான உன்னுடைய உருவத்தையே உபாஸிக்கத் தகுந்ததென்று விரும்புகிறார்கள். இந்த மூர்த்தியை உபாஸிக்கிறவர்களுக்கு, ஸம்ஸாரபயம் நீங்கி விடுகின்றது. மற்றும், இந்த மூர்த்தியின் உபாஸனத்தினால் (த்யானத்தினால்)  ஆத்ம ஸுகம் உண்டாகின்றது. இம்மூர்த்தி தன்னை உபாஸிக்கிறவர்களுக்கு ஸம்ஸார பயத்தோடு கூடின ப்ராக்ருத (உலகியல்) ஸுகங்களைக் காட்டி மயக்குவதில்லை. நீ ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்). நீ, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்கிற நான்கு புருஷார்த்தங்களையும் (மனிதன் விரும்பி அடைபவை) கொடுப்பவனாகையால், அபாரமாகக் கொடுப்பவன். உனக்கு மேற்பட்ட தான சீலன் (வள்ளல்) மற்றொருவனுமில்லை. ஆனது பற்றியே உன்னைப் புருஷனென்று கூறுகிறார்கள். நீ ஸர்வாந்தராத்மாவாகையால், பூமா என்று கூறப்படுகின்றாய். ஆகையால், இந்த ஜகத்தெல்லாம் நீயே. இந்த ஜகத்துக்கெல்லாம் ஹிதம் (நன்மை) செய்கின்றனையாகையால், விச்வ குரு (உலகின் ஆசான்) என்று கூறப்படுகின்றாய். (ஆத்மா, சரீரத்தின் ஹிதத்தை (நன்மையைத்) தேடுபவனாகையால், உன் சரீரமான இந்த ஜகத்திற்கெல்லாம் நீ ஹிதத்தை நடத்துகின்றாய்). நீயே பரதேவதை. உனக்கு மேற்பட்ட தேவதை மற்றொன்றும் இல்லை. 

நித்ய வஸ்துக்களின் திரளுக்கு ஆதாரமாயிருக்கின்றாயாகையாலும், அவற்றை ஆதாரமாக உடையவனாகையாலும், நாராயணனென்று கூறப்படுகின்றாய். ப்ராப்யனும் (அடையப்பட வேண்டியவனும்), ப்ராபகமும் (அடைவிப்பவனும்) இரண்டும் நீயே. நீ ஸர்வஜ்ஞனாகையால் (எல்லாம் அறிந்தவனாகையால்), ரிஷியென்று கூறப்படுகின்றாய். நீ நரோத்தமன் (மனிதர்களில் சிறந்தவன்). நீ நரனென்றும் பெயருடைய சிஷ்யனும், நாராயணனென்னும் பெயருடைய ஆசார்யனுமாகி, ஆத்ம வித்யையை (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவை) வெளியிட்டு, ஜகத்தை உஜ்ஜீவிப்பித்தாய் (உயிர்ப்பித்தாய்). நீ பரிசுத்தனும், ஆச்ரிதர்களுடைய (அடியார்களுடைய) தோஷங்களைப் போக்குகின்றவனுமாகையால், ஹம்ஸனென்று கூறப்படுகின்றாய். உனக்கு ஈடெதிரில்லாமையாலும், ஒருவனை எதிர்பார்த்து ஆகவேண்டிய ப்ரயோஜனமில்லாமையாலும் பேசாதிருக்கின்றாய். நீ ப்ரஹ்ம தேவனுக்கு வேதங்களை உபதேசித்தும் அவன் மூலமாய் அவற்றைப் பரவச் செய்தாயாகையால், வேதாசார்யனென்று கூறப்படுகின்றாய். (“உன்னைப்போல எல்லாரும் என்னை இத்தகையனாக ஏன் அறிகிறதில்லை” என்றால், சொல்லுகிறேன்). 

ஜனங்கள் உன் மாயையினால் மறைக்கப்பட்ட மதியுடையவர்களும், நிஷ்ப்பலமான (பயனற்ற) இந்த்ரிய மார்க்கங்களைத் தொடர்ந்து திரிகின்ற அறிவுடையவர்களுமாகி,  தன்னுடைய ப்ராணன்களிலும், ஹ்ருதயத்திலும், விஷயங்களிலும் அமைந்திருக்கின்ற உன்னை அறிகிறதில்லை. (ஆனால், “ஒருவனும் அறிகிறதில்லையா?” என்றால், சொல்லுகிறேன்.)

எவன் ஸர்வ குருவாகிய (எல்லோருக்கும் ஆசானாகிய) நீ முதலில் வெளியிட்ட வேதங்களை ஓதியுணர்ந்து, அவ்வழியில் உன்னை உபாஸிக்கிறானோ, அவன் தான் உன்னை உள்ளபடி அறிகின்றான். உன்னை அறிவதற்கு உபாயம் வேதமே. அதுவே பரமாத்மாவான உன்னுடைய ரஹஸ்யத்தை நன்றாக அறிவிக்கின்றது. ப்ரஹ்மதேவன் முதலிய பண்டிதர்கள், ஸாங்கிய யோகாதிகளால் உன் ஸ்வரூபத்தை அறிய முயன்றும், அதை உள்ளபடி அறியமுடியாமல், மயங்குகிறார்கள். உன் ஸ்வரூபத்தைக் குறித்துப் பல பலவாறு விவாதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உன்னுடைய ஸர்வஜ்ஞத்வ (எல்லாம் அறிதல்), ஸர்வசக்தித்வாதி (எல்லா வல்லமை), ஸ்வபாவங்கள் அவர்கள் சொல்லும் சமயங்களையெல்லாம் எடுத்தெறிகின்றன. உன்னுடைய ஜ்ஞானாதி குண வைபவத்தை ஒருவராலும் அளவிடமுடியாது. நீ அவற்றையெல்லாம் அவர்களுக்குத் தெரியாதபடி உன்னிடத்திலேயே மறைத்துக் கொண்டிருக்கின்றாய். நீ மஹாபுருஷன். இத்தகையனான உன்னை வணங்குகிறேன். 

எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

5 கருத்துகள்

  1. தங்களுக்கு எனது அநேக வந்தனங்கள். இதில். என்பதிலிருந்து (9) பதிமூன்று வரையிலான ஸ்கந்தங்கள் வெளியிடு உள்ளீர்களா. தங்களது இந்த சேவைக்கு மீண்டும் நமஸ்காரம். ராம் ராம் ராதே கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு
கருத்துரையிடுக
புதியது பழையவை