திங்கள், 4 அக்டோபர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 344

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்

(அதர்வ வேதத்தின் விபாகத்தைக் கூறுதல்)

ஸுதர் சொல்லுகிறார்:- அதர்வ வேதத்தை அறிந்த ஸமந்தர் என்பவர் தன் சிஷ்யரான கபந்தரென்பவருக்குத் தான் அத்யயனம் செய்த அதர்வ வேத ஸம்ஹிதையை உபதேசித்தார். அக்கபந்தர் அந்த அதர்வ ஸம்ஹிதையை இரண்டு சாகைகளாகப் (கிளைகளாகப்) பிரித்துப் பத்யரென்னும் சிஷ்யர்க்கு ஒரு சாகையையும், வேததர்சர் என்னும் சிஷ்யர்க்கு ஒரு சாகையையும் உபதேசித்தார்.

ப்ரஹ்மரிஷியே! சௌல்காயனி, ப்ரஹ்மபிலி, மௌத்கலர், பிப்பலாயனர் என்னும் இந்நால்வரும் ப்ரஸித்தர்கள் அல்லவா? அவர்கள் வேததர்சருடைய சிஷ்யர்கள். பத்யருடைய சிஷ்யர்களையும் சொல்லுகிறேன்; கேட்பீராக. 

குமுதர், சுனகர், ஜாஜலி என்னும் இம்மூவரும் பத்யருடைய சிஷ்யர்கள். (வேததர்சர் தன்னுடைய ஸம்ஹிதையை நான்கு பாகங்களாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் நால்வர்க்கும் உபதேசித்தார். பத்யர், தன் ஸம்ஹிதையை மூன்று பாகங்களாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் மூவர்க்கும் உபதேசித்தார்). அவர்களில் ஜாஜலி அதர்வ வேதத்தை நன்றாக உணர்ந்தவர். பப்ருவும், ஆங்கிரஸ கோத்ரத்தில் பிறந்த ஸைந்தவாயனரும் சௌனகருடைய சிஷ்யர்கள்.(அந்த சௌனகர், தன் ஸம்ஹிதையை இரண்டு சாகைகளாகப் பிரித்துத் தன் சிஷ்யர்களுக்கு உபதேசிக்க) அவ்விருவரும் அவ்விரண்டு சாகைகளை அவரிடத்தினின்று பெற்றார்கள். பப்ரு, ஸைந்தவாயனர் ஆகிய அவ்விருவருடைய சிஷ்யர்களான ஸாவர்ணி, நக்ஷத்ரகல்பர், சாந்திகல்பர் ஆகிய இவர்களும் காச்யபர்களும் ஆங்கிரஸர்களும் அதர்வ வேதத்தின் சாகைகளைப் பிரித்து ப்ரவர்த்திப்பித்தார்கள் (கற்பித்தார்கள்). முனிவரே! இவ்வாறு வேத ஸம்ஹிதா விபாகத்தைச் (பிரிவைச்) சொன்னேன். இனிமேல் பௌராணிகர்களைச் சொல்லுகிறேன், கேட்பீராக. 

த்ரய்யாருணி, கச்யபர், ஸாவர்ணி, அக்ருதவ்ரணர், வைசம்பாயனர், ஹாரீதர் ஆகிய இவ்வறுவரும் பௌராணிகர்கள். இவர்கள் வ்யாஸருடைய சிஷ்யரான என் தகப்பனாரிடத்தினின்று (ரோமஹர்ஷணரிடமிருந்து) ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஸம்ஹிதையை அத்யயனம் செய்தார்கள். நான் இவ்வறுவர்க்கும் சிஷ்யனாகி, எல்லா ஸம்ஹிதைகளையும் அத்யயனம் செய்தேன். காச்யபர், நான், ஸாவர்ணி, ராமசிஷ்யரான அக்ருதவரணர் ஆகிய நாங்கள் நால்வரும் வ்யாஸ புத்ரரான ஸ்ரீசுகரிடத்தினின்று மூல ஸம்ஹிதைகள் நான்கையும் அத்யயனம் செய்தோம். ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! ப்ரஹ்ம ரிஷிகள் வேத சாஸ்த்ரங்களை அனுஸரித்துப் புராண லக்ஷணத்தை நிரூபித்திருக்கிறார்கள். அதைச் சொல்லுகிறேன். மனவூக்கத்துடன் கேட்பீராக. 

ஸர்க்கம், விஸர்க்கம், வ்ருத்தி, ரக்ஷை, மன்வந்தரங்கள், வம்சம், வம்சானுசரிதம், ஸம்ஸ்தை, ஹேது, அபாச்ரயம் ஆகிய இப்பத்து விஷயங்களை நிரூபிக்கையாகிற பத்து  லக்ஷணங்களையுடையது புராணமென்று அப்புராண லக்ஷணம் அறிந்தவர்கள் நிர்ணயித்திருக்கிறார்கள். 

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! சில இடங்களில் ஐந்து லக்ஷணங்களுடையது புராணமென்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், பத்து லக்ஷணங்களையுடையது. அல்ப புராணம் என்னும் பிரிவினையை உட்கொண்டு சிலர் அவ்வாறு சொன்னார்கள் என்றுணர்க. (அந்த அல்ப புராணமாவது - ஸர்க்கம், ப்ரதிஸர்க்கம், வம்சம், மன்வந்த்ரங்கள், வம்சானு சரிதம் ஆகிய இவ்வைந்து விஷயங்களை நிரூபிக்கையாகிற ஐந்து லக்ஷணங்களை உடையதாம்). அவ்யாக்ருதம் என்று கூறப்படுகிற மூலப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் ஸாம்ய அவஸ்தையை (சம நிலையைத்) துறந்து, வைஷம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அடைகையில், அதினின்று ஸத்வாதி குண மயமான மஹத் தத்வம் உண்டாகின்றது. அதினின்று ஸத்வாதி குணமயமான அஹங்கார தத்வம் உண்டாகின்றது. அதினின்று அத்தகைய ஆகாசாதி பஞ்ச பூதங்களும், அவற்றின் ஸூக்ஷ்மங்களான (நுட்பங்களான) சப்தாதி விஷயங்களும், இந்திரியங்களும் ஆகிய இவை உண்டாகின்றன. இந்த உத்பத்தியே ஸர்க்கம் என்று கூறப்படுகின்றது. 

பரமபுருஷனால் ஸ்ருஷ்டிக்கும் திறமை உண்டாகும்படி அனுக்ரஹம் செய்யப் பெற்ற இந்த மஹத்து முதலிய தத்வங்கள் ஒன்றோடொன்று கலந்து, சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தாகப் பரிணமிக்கின்றன. 

ஒரு விதையினின்று செடி உண்டாகி, அது விதையை விளைப்பது போல், அவ்யாக்ருதமான (பெயர், உருவம் அற்று, பிரித்து அறிய முடியாதபடி நுட்பமான) மூலப்ரக்ருதி மஹத்து முதலிய தத்வங்களைப் படைத்து, சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட)  ஜகத்தை விளைக்கின்றது. இதையே விஸர்க்கம் என்று சொல்லுகிறார்கள். 

இந்த விஸர்க்கம், ஜீவனுடைய கர்ம வாஸனையால் உண்டானது பற்றி வாஸணாமயம் என்று கூறப்படும். அசையும் பொருள்கட்கு அசையாப் பொருள்கள் ஜீவன உபாயமாக (வாழ்வதற்கு வழியாக) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த ஜீவனம், ப்ராணிகளுக்கு ராக ப்ராப்தமாய் (விருப்பத்தை உடையதாய்) இருக்கும்; அன்றியே, சாஸ்த்ரத்தினால் அனுமதிக்கப்பட்டதும் ஆக இருக்கும். இந்த ஜீவனத்தையே வ்ருத்தி என்று கூறுகிறார்கள்.

பரமபுருஷன், யுகங்கள் தோறும் திர்யக்கு, மனுஷ்யர், ரிஷிகள், தேவர் இந்த ஜாதிகளில் வந்து அவதரித்து, வைதிக தர்ம விரோதிகளை வதித்து, ஜகத்தைப் பாதுகாக்கின்றான். இத்தகைய அவனுடைய அவதாரங்களும், சேஷ்டிதங்களும், ரக்ஷை என்று கூறப்படும். 

மனு, தேவதைகள், மனுபுத்ரர்கள், இந்த்ரர்கள், ரிஷிகள், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சாவதாரங்கள் ஆகிய இவ்வாறும் உள்ளது மன்வந்த்ரம் என்று கூறப்படும். மனுவிடத்தினின்று உண்டான ராஜர்களுடைய மூன்று காலங்களிலும் உள்ள ஸந்ததியே வம்சம் என்று கூறப்படும். அந்த ராஜர்களின் சரித்ரமும், வம்ச நிர்வாஹகர்களான மற்றவர்களின் சரித்ரமும், வம்சானுசரிதம் என்று கூறப்படும்.

கால, கர்ம ஸ்வபாவத்தினால் நைமித்திகமென்றும், ப்ராக்ருதமென்றும், நித்யமென்றும், ஆத்யந்திகமென்றும் நான்கு விதமான இந்த ப்ரபஞ்சத்தின் ப்ரளயத்தையே ஸம்ஸ்தை என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். அஜ்ஞானத்தினால் புண்ய, பாப கர்மங்களைச் செய்கின்ற ஜீவாத்மாக்களே இந்த ப்ரபஞ்சத்தினுடைய ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு (படைப்புக்கு) ஹேது (காரணம்) ஆகையால், அவர்களையே ஹேது என்று சொல்லுகிறார்கள். 

ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு ஜீவன் கர்ம சேஷத்தோடு (முன் செய்த வினையின் பாக்கியுடன்) இருக்கிறானென்றும், அவன் அந்தக் கர்ம பலனை அனுபவிக்கும் பொருட்டு ஈச்வரன் ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்ட்யாதிகளை (படைப்பு முதலியவற்றை) நடத்துகிறானாகையால், கர்மசேஷத்தோடு கூடின ஜீவன் ஹேது என்று சிலர் சொல்லுகிறார்கள். வேறு சிலர், ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு ஜீவன், நாம (பெயர்), ரூபங்கள் (உருவம்) அற்றிருக்கிறான் என்றும், அவனுக்கு நாம, ரூபங்களை அளிப்பதற்காக ஈச்வரன் ஸ்ருஷ்ட்யாதிகளை நடத்துகிறானாகையால், அத்தகைய ஜீவன் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு ஹேது என்றும் சொல்லுகிறார்கள்.

ப்ரக்ருதியின் பரிணாமமான சரீரங்களிலிருக்கின்ற ஜீவனுக்குண்டாகிற ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்ன (கனவு), ஸுஷுப்திகள் (ஆழ்ந்த உறக்கம்) என்னும் அவஸ்தைகளை (நிலைகளை) நிர்வஹித்துக் கொண்டு, அந்த அவஸ்தைகள் தீண்டப் பெறாதிருக்கின்ற பரப்ரஹ்மமே, அபாச்ரயம் என்று கூறப்படும். (ஸர்வத்திற்கும் ஆதாரமாயிருக்கையால், பரப்ரஹ்மத்தை அபாச்ரயம் என்கிறார்கள்). 

அந்தந்த நாம, ரூபங்களையுடைய கட, படாதி (குடம், துணி) பதார்த்தங்களுக்கு உத்பத்தி முதல் நாசம் வரையிலுள்ள அந்தந்த அவஸ்தைகள் உண்டாகின்றனவல்லவா? ஆயினும் அந்தக் கட படாதி பதார்த்தங்களில் மண், நூல் முதலிய த்ரவ்யம், மாத்ரம் அந்தந்த விசிஷ்ட (அவற்றுடன் சேர்ந்த) ரூபங்களால் உத்பத்தி முதலிய விகாரங்களுக்கு (மாறுதல்களுக்கு) இடமாகி, விசேஷ்ய மாத்ர ஸ்வரூபத்தினால் அவ்விகாரங்கள் அற்றவைகளுமாயிருப்பது போல, ப்ரஹ்மமும் விசிஷ்ட ரூபத்தில் (ஜீவன் மற்றும் ஜடப்பொருட்களை சரீரமாய்க் கொண்டு சேர்ந்து இருக்கும் நிலையில்) ஜீவனுடைய அவஸ்தைகளின் ஸம்பந்தமும், கேவல ஸ்வரூபத்தில் அவற்றின் வ்யதிரேகமும் (ஸம்பந்தமில்லாமையும்) உடையது.

மனம், ஜாக்ரத் (விழிப்பு), ஸ்வப்னம் (கனவு), ஸுஷுப்திகள் (ஆழ்ந்த உறக்கம்) என்கிற மூன்று அவஸ்தைகளுக்கு இடமாயிருக்கையைத் துறந்து, ஒரு ப்ரயத்னமும் இன்றித் தானாகவாவது, யோகாப்யாஸ  ரூப (யோகப் பயிற்சி என்கிற) யத்தனத்தினாலாவது (முயற்சியினாலாவது), சப்தாதி விஷயங்களினின்று எப்பொழுது நீங்குமோ, அப்பொழுது அபாச்ரயமான பரமாத்மாவை அறிய வல்லதாம்; அவ்வறிவினால், ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடும். 

இவ்வாறு பத்து லக்ஷணங்களுடையது மஹா புராணமென்றும், ஐந்து லக்ஷணங்களுடையது உபபுராணமென்றும், புராண லக்ஷணங்களை அறிந்த முனிவர்கள் புராணங்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பதினெட்டு புராணங்கள் உள்ளவை என்று சொல்லுகிறார்கள். (அவையாவை என்றால் சொல்லுகிறேன்).

ப்ராஹ்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், லைங்கம், காருடம், நாரதீயம், பாகவதம், ஆக்நேயம், ஸ்காந்தம், பவிஷ்யம், ப்ரஹ்மவைவர்த்தம், மார்க்கண்டேயம், வாமனம், வாராஹம், மாத்ஸ்யம், கௌர்மம், ப்ரஹ்மாண்டம் என்று பதினெட்டுப் புராணங்கள்.

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! பாதராயண முனிவரும், அவருடைய சிஷ்யர்களும், ப்ரசிஷ்யர்களும் (சிஷ்யரின் சிஷ்யர்களும்), வேதங்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து, தத்தம் சிஷ்யர்களுக்கு உபதேசித்ததையும், அவ்வாறே புராண ஸம்ஹிதைகளை வெளியிட்ட விதத்தையும் இவ்வாறு மொழிந்தேன். இது கேட்கிறவர்களுக்கும் கூட ப்ரஹ்ம தேஜஸ்ஸை வளர்க்கும். (இனி இதை நடத்துகிறவர்களுக்கு ப்ரஹ்ம தேஜஸ்ஸு வளர்ந்து வருமென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ).

ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக