ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 343

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(பரீக்ஷித்து மோக்ஷம் அடைதலும், ஜனமேஜயன் ஸர்ப்பயாகம் செய்தலும், வேதங்களின் சாகைகளை நிரூபித்துக் கூறுதலும்)

ஸூதர் சொல்லுகிறார்:- ஸமஸ்த ஆத்மாக்களையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையரும், வ்யாஸ மஹர்ஷியின் குமாரரும், பரப்ரஹ்மத்தையே மனனம் செய்பவருமாகிய ஸ்ரீசுகமுனிவரால் இவ்வாறு மொழியப் பெற்ற பரீக்ஷித்து மன்னவன், வணங்கின தலையினால் அவருடைய பாத கமலத்தை ஸ்பர்சித்து (தொட்டு), கைகளைக் குவித்துக் கொண்டு, அம்முனிவரைக் குறித்து மேல்வாறு கூறினான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- தேவரீர் என்னிடத்தில் கருணை கூர்ந்து, ஆதி அந்தங்கள் (முதல், முடிவு) அற்றவனும், தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தை (உலகியல் கட்டைப்) போக்கும் தன்மையனுமான பரமபுருஷனுடைய ஸ்வரூபத்தையும், உபாஸனத்தையும் (த்யானத்தையும்), நான் ஸாக்ஷாத்கரித்தாற் போல் (நேரில் பார்த்து அறிந்தது) அறியும்படி எனக்கு உபதேசித்தீராகையால், நான் ஸித்தார்த்தனானேன். (விரும்பின பொருள் கிடைக்கப்பெற்றேன்); அனுக்ரஹிக்கப்பட்டேன் (அன்புடன் அனைத்து ஆதரவு செய்யப்பட்டவன், ஆசீர்வதிக்கப் பட்டவன் ஆனேன்). இவ்வளவு அனுக்ரஹம் செய்யப் பெற்றேனாகையால், எனக்கு இனி கேட்க வேண்டியது என்ன இருக்கின்றது? பற்றினவரைக் கைவிடாமல் காக்கும் தன்மையனான பரமபுருஷனிடத்தில் நிலை நின்ற மனமுடையவர்களும், வாத்ஸல்ய (அப்பொழுது ஈன்ற கன்றிடம் பசு காட்டும் பரிவு), ஸௌசீல்யாதி (உயர்ந்தவராய் இருந்தும், தாழ்ந்தோருடன் இரண்டறக் கலந்து பரிமாறும் பண்பு) குணங்களால் மேன்மையுற்றவர்களுமாகிய உம்மைப் போன்ற பெரியோர்கள், ஆத்ம ஸ்வரூபாதிகளை (ஜீவாத்மா, பரமாத்மாவின் இயற்கைத் தன்மைகளை) அறியாதவர்களும், ஆத்யாத்மிகம் முதலிய தாபங்களால் 

  1. ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன

  2. ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), 

  3. ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) 

என்ற மூன்று வகையான துன்பங்களால் வருந்துகிறவர்களுமாகிய ப்ராணிகளிடத்தில் அனுக்ரஹம் செய்வது பெரிய ஆச்சர்யமாக எனக்குத் தோற்றவில்லை. (அவர்களுக்கு அதுவே தன்மையல்லவா?) உத்தம ச்லோகனான பகவானுடைய குணாதிகளையே முக்யமாக நிரூபிக்கிற இப்புராண ஸம்ஹிதையை உம்மிடத்தினின்று நான் கேட்டேன். உம்மால் நிரூபிக்கப்பட்டதும், பயங்களுக்கிடமாகாததும், மஹாநந்த ஸ்வரூபமுமாகிய பரப்ரஹ்மத்தின் அனுபவத்தில் அழுந்தினேன். ஆகையால், தக்ஷகன் முதலிய ம்ருத்யுக்களிடத்தினின்று நான் சிறிதும் பயப்படவில்லை. 

ப்ரஹ்ம ரிஷி! நான் மௌன வ்ரதத்தை ஏற்றுக் கொண்டு, விஷய அபிலாஷங்களும் (உலக விஷயங்களில் ஆசையும்), அவற்றின் வாஸனைகளும் (ஆழ்ந்த மனப்பதிவுகளும்) தீரப் பெற்ற மனத்தை அதோக்ஷஜனிடத்தில் (இந்திரியங்களால் விளையும் அறிவுகளுக்கெட்டாத பரமபுருஷனிடத்தில்) நிலைநிறுத்தி, ப்ராணன்களை (உயிரை) விட விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுப்பீராக. நீர் கேவல ஆநந்த ரூபமான (இன்பமே வடிவான) பகவத் ஸ்வரூபத்தை (பகவானின் இயற்கைத் தன்மையை) எனக்குத் தெரிவித்து, ஜ்ஞான, விஜ்ஞான நிஷ்டையை உண்டாக்கி (சிறந்த அறிவில் நிலைபெறச் செய்து), தேஹாத்மப்ரமம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) இவற்றிற்கிடமான அஜ்ஞானத்தைப் போக்கினீர். ஆகையால் நான் க்ருதார்த்தன் (வேண்டியதைப் பெற்றவன்) ஆனேன்.

ஸுதர் சொல்லுகிறார்:- இவ்வாறு அம்மன்னவனால் சொல்லப்பட்ட மஹானுபாவரான சுகமுனிவர், அவனிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, அவனால் பூஜிக்கப்பட்டு, முனிவர்களுடன் புறப்பட்டுப் போனார். ஜ்ஞானியாகிய பரீக்ஷித்து மன்னவனும், கங்கையின் கரையில் கிழக்கு நுனியாக தர்ப்பங்களைப் பரப்பி, அதன்மேல் வடக்கு முகமாக உட்கார்ந்து, மூச்சை அடக்கி, வ்ருக்ஷம் (மரம்) போல் அசையாதிருந்து, தேஹத்திலும் (உடலிலும்), தேஹானுபந்திகளிடத்திலும் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்திலும்) அபிமானமற்று (பற்றற்று), “தேஹமே ஆத்மாவா? அல்லது இரண்டும் வேறா? ஜீவ, பரமாத்மாக்கள் இரண்டும் ஒன்றா? வேறா?” இவை முதலிய ஸம்சயங்கள் (ஸந்தேஹங்கள்) எல்லாம் அறப்பெற்று (தீரப்பெற்று), ஆத்மஸ்வரூபம் பரமாத்மனுக்கே சேஷப்பட்டது (அடிமைப் பட்டது) என்று தனக்குள் நன்றாக அனுஸந்தித்து, பெரிய மனவூக்கத்துடன் பரமாத்மனை த்யானித்து, பரிசுத்தமான ஆத்மஸ்வரூபம் தோன்றப்பெற்று, முக்தியை அடைந்தான்.

அந்தணர்களே! கோபமுற்ற ப்ராஹ்மண குமாரனால் தூண்டப்பட்ட தக்ஷகன், அம்மன்னவனைக் கொல்ல விரும்பி, அவனிடம் போகும் பொழுது, வழியில் கச்யபர் என்ற அந்தணனைக் கண்டான். தக்ஷகன் பரீக்ஷித்தைக் கடிக்கப் போகிறானென்று கேள்விப்பட்டு, விஷ சிகித்ஸை செய்து (விஷத்தைப் போக்கும் மருத்துவம் செய்து), பரீக்ஷித்தை ரக்ஷித்து, அவனிடத்தினின்று பணம் வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று போகின்ற விஷஹாரியான (விஷத்தைப் போக்குபவரான) அந்தக் கச்யபருக்கு பணங்களைக் கொடுத்து திருப்தி செய்வித்து, அவரைத் திருப்பியனுப்பி, காமரூபனாகிய (விரும்பிய வடிவத்தை எடுக்கும்) தக்ஷகன், ப்ராஹ்மண வேஷத்தினால் மறைந்து சென்று, பரீக்ஷித்து மன்னவனைக் கடித்தான். முக்த (மோட்ச) அவஸ்தையை (நிலையை) அடைந்த ராஜர்ஷியாகிய பரீக்ஷித்தினுடைய தேஹம் (உடல்), ஸமஸ்த ப்ராணிகளும் பார்த்துக் கொண்டிருக்கையில், தக்ஷக ஸர்ப்பத்தினுடைய விஷாக்னியினால் அந்த க்ஷணமே பஸ்மமாய் (சாம்பலாய்) விட்டது. 

பூமியிலும், ஆகாயத்திலும், திசைகளிலும், எல்லா விடங்களிலும், பெரிய ஹாஹாகாரம் (ஹா, ஹா என்ற ஒலி) உண்டாயிற்று. ஏனென்றால், தேவர்கள், அஸுரர்கள், மனுஷ்யர்கள் முதலிய அனைவரும் வியப்புற்றார்கள். அப்பொழுது, தேவ துந்துபி வாத்யங்கள் முழங்கின. கந்தர்வர்களும், அப்ஸர மடந்தையர்களும் பாடினார்கள். தேவதைகள், நல்லது நல்லதென்று மொழிந்து கொண்டு பூமழை பொழிந்தார்கள். 

ஜனமேஜயன் தன் தந்தையைத் தக்ஷகன் கடித்தானென்று கேள்விப்பட்டு, மிகவும் கோபமுற்று, ஸர்ப்பங்களை (பாம்புகளை) எல்லாம் அழிக்க விரும்பி, பெரிய அந்தணர்களைக் கொண்டு ஸர்ப்பயாகம் என்று ஒரு யாகம் செய்து (மந்தர பலத்தினால் ஸர்ப்பங்களை எல்லாம் வரவழைத்து), அக்னியில் ஹோமம் செய்தான். 

தக்ஷகன் ஸர்ப்ப யாகத்தில் பெருப்பெரிய ஸர்ப்பங்களெல்லாம் எரிகிற அக்னியில் தஹிக்கப்படுவது கண்டு பயத்தினால் மனம் கலங்கி, இந்த்ரனைச் சரணம் அடைந்தான். பரீக்ஷித்தின் புதல்வனாகிய ஜனமேஜய மன்னவன் தன் தகப்பனைக் கடித்த தக்ஷகன் யாக அக்னியில் வந்து விழுந்து சாகாமையைக் கண்டு, அந்தணர்களைக் குறித்து, “ஸர்ப்பங்களில் அதமனாகிய (தாழ்ந்தவனாகிய) தக்ஷகன் அக்னியில் வந்து விழுந்து பஸ்மமாகக் காணேனே. அது ஏன்?” என்று வினவினான். 

அந்தணர்கள், “அவன் இந்திரனைச் சரணம் அடைய, அவனை அவ்விந்தரன் காத்துக் கொண்டிருக்கிறான். அதனால் அந்தத் தக்ஷக ஸர்ப்பன் தடுக்கப்பட்டிருக்கிறான். ஆகையால், அவன் மந்திரங்களைச் சொல்லி அழைத்தும், அக்னியில் வந்து விழாதிருக்கிறான்” என்றார்கள். விசால புத்தியனான (சிறந்த புத்தி உடைய) ஜனமேஜயன் அதைக் கேட்டு, யாகம் செய்விக்கிற அவ்வந்தணர்களை நோக்கி, “அந்தணர்களே! தக்ஷகனை இந்திரனுடன் அக்னியில் ஏன் விழத் தள்ளலாகாது” என்று மொழிந்தான். அந்தணர்களும் அதைக் கேட்டு, “தக்ஷகனே! தேவகணங்களோடு கூடிய இந்திரனுடன் இந்த யாக அக்னியில் வந்து விழுவாயாக” என்னும் பொருளடங்கிய மந்திரத்தைச் சொல்லி, இந்த்ரனோடு கூடிய தக்ஷகன் வந்து விழும்படி யாக அக்னியில் ஹோமம் செய்தார்கள். 

அந்தணர்கள் இவ்வாறு மொழிந்த கொடிய வசனங்களால் தேவேந்திரன் விமானத்தோடும், தக்ஷகனோடும், தன்னுடைய ஸ்தானத்தினின்று (இடத்திலிருந்து) நழுவி, “இனி நாம் என்ன செய்வோம்” என்று பயந்து, மனக்கலக்கமுற்றான். தக்ஷகனோடு கூடிய தேவேந்திரன் விமானத்துடன் அவ்வாறு ஆகாயத்தினின்று விழுவதைக் கண்டு, ப்ருஹஸ்பதி (தேவர்களின் குரு) ஜனமேஜய மன்னவனிடம் வந்து மொழிந்தார்.

ப்ருஹஸ்பதி சொல்லுகிறார்:- இந்திரன் தேவர்களுக்கு ப்ரபுவாயிருப்பது போல், மனுஷ்யர்களுக்கு ப்ரபுவாய் இருப்பவனே! இந்தத் தக்ஷக ஸர்ப்பம் உன்னால் வதம் அடைவதற்கு உரியவனல்லன். இவன் அம்ருத பானம் செய்தவன். ஆகையால், இவன் ஜரா (கிழத்தனம்), மரணங்களுக்கு இடமாகக் தகுந்தவனல்லன். (ஆனால், உனக்கு “இவன் நம் தந்தையைக் கொன்றானே” என்று இவன் மேல் கோபம் இருக்கும். ஆயினும், அது உண்மையை ஆராய்ந்து பார்க்கையில் துறக்கத்தக்கதே அன்றி, அனுஸரிக்கத் தக்கதன்று.) ப்ராணிகள் பிழைத்திருப்பதற்கும், மரணம் அடைவதற்கும், ஸ்வர்க்க, நரகாதி கதிகளைப் பெறுதற்கும் காரணம் அவ்வவற்றின் கர்மமே. ராஜனே! இந்த ப்ராணிகளுக்கு ஸுக, துக்கங்களைக் கொடுப்பது, அந்தக் கர்மம் தவிர மற்றொன்றும் அன்று. (எங்கள் தகப்பனைத் தக்ஷகன் கடித்துக் கொல்ல ப்ரத்யக்ஷமாகக் கண்டதுண்டே அன்றிக் கர்மம் கொன்றதாகத் தெரியவில்லையே என்றால், சொல்லுகிறேன். கேள்).

மன்னவனே! ஸர்ப்பம், திருடன், சத்ரு, அக்னி, ஜலம், பசி தாஹம், வியாதி இவைகளால் ஜந்துக்கள் மரணம் அடைகின்றனவே. அவை தாம் செய்த ப்ராரப்த கர்மத்தின் (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினையின்) பலனை அனுபவிக்கின்றன. (ஸர்ப்பம் முதலியவை அவ்வவற்றின் கர்மத்தினால் தூண்டப்பட்டு, மரணாதிகளை விளைவிக்கின்றனவே அன்றி, அவை ஸ்வதந்தரித்து (தன்னிச்சையாக) செய்பவை அல்ல). 

ராஜனே! ஆகையால், சத்ரு (எதிரியைக்) வதத்திற்காக (கொல்வதற்காகச்) செய்கிற இந்த யாகத்தை நிறுத்துவாயாக. நிரபராதிகளான ஸர்ப்பங்களை வீணாகத் தஹித்து விட்டாய். ஜனங்கள், தம்முடைய ப்ராரப்த கர்மத்தின் (பலன் கொடுக்க ஆரம்பித்த முன் வினையின்) பலனை அனுபவிக்கும் தன்மையர்களே அன்றி, அதற்குப் பிறர் காரணமன்று. (ஆகையால், உங்கள் தந்தை தன் கர்மத்தினால் மரணம் அடைந்தானன்றி, தக்ஷகனாலன்று. நீ அவ்வாறு நினைப்பது உண்மையன்று).

ஸூத புராணிகர் சொல்லுகிறார்:– ஜனமேஜய மன்னவன் இவ்வாறு ப்ருஹஸ்பதியால் மொழியப்பெற்று, மஹர்ஷியாகிய அவருடைய வசனத்தை வெகுமதித்து, ஸர்ப்ப யாகத்தினின்று மீண்டு, அந்த ப்ருஹஸ்பதியைப் பூஜித்தான். (தெரிந்தவர்களுக்கும் கூட ஏன் இப்படி மதி மயக்கம் உண்டாகின்றது. ப்ராஹ்மண கோபத்தினால் பரீக்ஷித்து மரணம் அடைந்தான். ஜனமேஜயனுடைய கோபத்தினால் ஸர்ப்பங்கள் மரணம் அடைந்தன. ப்ராஹ்மணர் அறிந்தவர். ஜனமேஜயனும் தெரிந்தவன். ஏன் இவர்களுக்கும் கூட இப்படி மதி மயக்கம் (புத்தி கலக்கம்) உண்டாயிற்று என்றால் சொல்லுகிறேன்; கேளுங்கள்.) 

ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயை, மிகுந்த மஹிமையுடையது என்பது எல்லோர்க்கும் தெரிந்த விஷயமே. இந்த மாயையே ஒன்றுக்கு பாதித்தல், மற்றொன்றுக்கு பாதிக்கப்படுதல் இவ்விரண்டையும் விளைக்கின்றது. (ஒன்று பாதிப்பதற்கும், மற்றொன்று பாதிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மாயையே). இவ்வாத்மா அந்த மாயையினால் ஸத்வாதி குண வ்ருத்திகளுக்கு (முக்குணங்களின் செயல்களுக்கு) உட்பட்டு, ப்ராணிகள் விஷயத்தில் மதிமயங்குகிறான். (ப்ராணிகள், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மாயையினால் மதிமயங்கித் தன்னுடைய ஸுக, துக்கங்களுக்குத் தன்னுடைய புண்ய-பாப கர்மங்களைக் காரணமாக நினையாமல், பிறரைக் காரணமாக நினைக்கின்றன.) இந்த மாயை, ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடையது ஆகையால், இதனுடைய ஸம்பந்தம் அவனுக்கும் உண்டல்லவா? ஆகையால், இது அவனுக்கும் மோஹாதிகளை (மனக்கலக்கத்தை) விளைக்குமோ என்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்.

பரமாத்ம ஸ்வரூப நிரூபணம் செய்யும் (பகவானின் இயற்கைத் தன்மையை நிரூபிக்கும்) அறிஞர்கள், பல தடவைகளில் பரமாத்ம ஸ்வரூபத்தை ஆராயும் பொழுது, இம்மாயை அவர்களுக்குத் தன் கார்யமான விகாரங்களை (மாறுபாடுகளை) விளைக்க வல்லதாகிறதில்லை. இப்படியாயின், நேரே அப்பரமாத்ம ஸ்வரூபத்தில் இம்மாயை தன் கார்யத்தை விளைக்க மாட்டாது என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? மற்றும், இம்மாயையின் கார்யமான மோஹத்தினால் (மயக்கத்தினால்) விளைகிற பற்பல விகாரங்களுக்கும் (மாறுபாடுகளுக்கும்) அந்தப் பரமாத்ம ஸ்வரூபம், இடமாகிறது இல்லை. ஸங்கல்ப, விகல்பங்களுக்கிடமான (இதுவா, அதுவா என்கிற எண்ண அலைகளைக் கொண்ட) மனத்திற்கும் அது விஷயமாகிறதில்லை. (பரிசுத்தமான யோகிகளுடைய மனத்திற்கே அது விஷயமாம்). கர்மத்தினால் (முன் வினையினால்) விளைகிற சரீரமும் (உடலும்), காமமும் (ஆசையும்) அதில் கிடையாது. மற்றும், அக்கர்மத்தினாலும், கர்மமூலமான (முன் வினையால் ஏற்பட்ட) சரீரத்தினாலும் (உடலினாலும்), விளைகிற ஸுக, துக்காதிகளும், அதில் கிடையாது. 

தேவன், மனுஷ்யன் முதலிய சப்தங்களுக்கும் அது விஷயமாகிறதில்லை. பரமாத்ம ஸ்வரூபத்தை, தேவனென்றாவது, மனுஷ்யனென்றாவது சொல்ல முடியாது. பரமாத்ம ஸ்வரூபம் இத்தகையது. ஜீவன் ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு உட்பட்டவனாயினும், இத்தகைய பரமாத்ம ஸ்வரூபத்தை மனனம் செய்து கொண்டு, ப்ருதிவி முதலிய அசேதன (அறிவற்ற) தத்வங்களையும், பசி, தாஹம், சோகம், மோஹம், ஜரை (கிழத்தனம்), ம்ருத்யு (மரணம்) என்னும் ஊர்மிகளையும் (துன்ப அலைகளையும்) பரிஹரித்து (விலக்கி), ஒன்று தலையெடுத்து, மற்றொன்றை அடக்கும் தன்மையுடைய ஸத்வம் முதலிய குணங்களையும் அடக்கி, மனவூக்கமுற்று, எல்லாச் செயல்களினின்றும் மீள வேண்டும். 

எங்கும் நிறைந்திருக்கின்றமையால் ஸ்ரீமஹாவிஷ்ணுவென்று கூறப்படுகிற பரமபுருஷனுடைய ஸ்வரூபம், ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணம் (வேறானது) என்று கூறுகிறார்கள். அது சேதனாசேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணம் (வேறானது) என்று தெரிவிக்கும் பொருட்டு, ப்ரக்ருதி, (மூலப்ரக்ருதி), ப்ராக்ருதங்கள் (ப்ரக்ருதியின் மாறுபாடுகள்) என்கிற ஜட (அறிவற்ற) வஸ்துக்களும், அஜடமான (அறிவுள்ள) ஆத்ம வஸ்துக்களும் எத்தகையனவோ அத்தகையது அன்றென்று நிரூபிக்கிறார்கள். யோகிகள், ராக-த்வேஷாதிகளையும் (விருப்பு, வெறுப்பு), அஹங்கார (நான்), மமகாரங்களையும் (எனது) துறந்து, பகவானைத் தவிர மற்ற எதிலும் ஸ்னேஹமின்றி (பற்றின்றி), இத்தகைய பரமபுருஷ ஸ்வரூபத்தை ஹ்ருதயத்தினால் த்யானித்து நிலை நிறுத்தி, மனவூக்கத்துடன் நிச்சயிக்கிறார்கள். எவர்களுக்கு தேஹத்தில் அஹங்காரமும் (ஆத்மாபிமானமும்) க்ருஹம் முதலியவற்றில் மமகாரமும் (என்னுடையது என்னும் அபிமானமும்) ஆகிற தெளர்ஜன்யம் (மனிதத்தன்மைக்கேடு) இல்லையோ, அவர்கள் ஸர்வத்திலும் விலக்ஷணமான ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸ்வரூபத்தை அறிகிறார்கள். (இந்த அஹங்கார- மமகாரங்களுக்கும், பாத்ய (பாதிக்கப்படுதல்), பாதக (பாதித்தல்) பாவனைக்கும் காரணம் பகவானுடைய மாயை; ஆகையால், அதைக் கடக்க விரும்புகிறவர்கள், இருக்க வேண்டிய நிலைமையைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக) 

பிறர் தன்னைப்பற்றி எவ்வளவு பருஷமாக (கொடுமையாகப்) பேசினும் அவற்றைப் பொறுக்க வேண்டும். ஒருவனையும் அவமதிக்கலாகாது. மரணம் அடையும் தன்மையதான இத்தேஹத்தில் (உடலில்) அபிமானம் (ஆசை) கொண்டு, அதற்கு விரோதி என்று ஒருவனோடும் வைரத்தை (பகைமையை) ஏற்றுக் கொள்ளலாகாது. எல்லாமறிந்த மஹானுபாவரும், எங்கும் தடைபடாத மதியுடையவரும், க்ருஷ்ண த்வைபாயனரென்று ப்ரஸித்தி பெற்றவருமான அந்த வேத வ்யாஸருக்கு நமஸ்காரம். இவருடைய பாதாரவிந்தங்களின் த்யானத்தினால் அல்லவோ நான் ஸ்ரீபாகவதமென்னும் இப்புராண ஸம்ஹிதையைக் கற்றேன்.

ஸெளனகர் சொல்லுகிறார்:- வேதங்களில் விதிக்கப்பட்ட ஆசாரங்களைத் தாம் அனுஷ்டித்து, பிறரும் அனுஷ்டிக்கும்படி வெளியிடுகிறவர்களும், மஹானுபாவர்களுமான பைலர் முதலிய வ்யாஸ மஹர்ஷியின் சிஷ்யர்கள், வேதங்களை எத்தனை வகையாகப் பிரித்தார்கள்? நல்லியற்கையுடையவரே! இதை எங்களுக்குச் சொல்வீராக. 

ஸூத புராணிகர் சொல்லுகிறார்:– ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! உலகங்களுக்கெல்லாம் மேலான ஸத்யலோகத்தில் வாஸம் செய்கிறவனும், பகவானிடத்தில் நிலைநின்ற மனமுடையவனுமாகிய ப்ரஹ்மதேவனுடைய ஹ்ருதய ஆகாசத்தினின்று ஒரு நாதம் (ஒலி) உண்டாயிற்று. (ஹ்ருதய ஆகாசத்திலுள்ள வாயுவின் பரிணாமமான ப்ராணகோஷம் உண்டாயிற்று.) இந்த நாதம், காதை மூடுகையில் செவிப்படும். 

அந்தணரே! யோகிகள் இந்த நாதத்தை உபாஸித்து, அதனால் ஜ்ஞானம் உண்டாகப் பெற்று, த்ரவ்யம் க்ரியை, காரகம் என்னும் ஆத்ம மலத்தைப் போக்கி, மோக்ஷத்தை அடைகின்றார்கள். (இங்கு த்ரவ்யமாவது சரீரம். க்ரியையாவது, புண்ய, பாபகர்மம். காரகமாவது இந்தரியம்.) அந்த நாதத்தினின்று அகர, உகர, மகரங்கள் என்னும் மூன்று அக்ஷரங்கள் அடங்கியதும், மூன்று மாத்ரைகளை (உச்சரிக்கும் கால அளவு) உடையதுமாகிய ஓங்காரம் உண்டாயிற்று. யோகாப்யாஸம் (யோகப்பயிற்சி) இல்லாதவர்களுக்கு, அதன் உத்பத்தியை அறிய முடியாது. அந்த ஓங்காரம் தானே ப்ரகாசிக்கும் தன்மையது. பரமாத்மாவான பரப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை இந்த ஓங்காரம் விடுத்துக் கூறுகின்றது. இந்த ஓங்காரம் ப்ரணவமென்று கூறப்படும். காதை மூடிக்கொண்டிருப்பினும், இந்த ப்ரணவ சப்தத்தை எவன் கேட்கிறானோ, அவன் பரமாத்மனே; ஜீவனல்லன். 

ஜீவன், இந்திரியங்களால் அறிவானேயன்றி, இந்திரியங்களின் உதவியின்றி எதையும் அறியவல்லன் அல்லன். பரமாத்மனோவென்றால், இந்த்ரியங்கள் இல்லாதிருப்பினும், அறியுந்திறமுடையவன். (அவன் அறிவில் இந்திரியங்களை எதிர் பார்ப்பவனல்லன்).  (ஜீவனுக்கு, நாதம் செவிப்படுவது பரமாத்மாவின் மூலமாகவேயன்றி, நேராகவன்று).  லௌகிக, வைதிக சப்தங்களெல்லாம், இந்த ப்ரணவத்தினின்று வெளியாகின்றன. இந்த ப்ரணவ ஸ்வரூபம் வெளியாகுமிடம் ஹ்ருதய ஆகாசம். இந்த ப்ரணவம், தன்னுடைய மஹிமையில் நிலைநின்றிருக்கிற பரமாத்மாவான பரப்ரஹ்மத்தை நேராக உள்ளபடி உரைக்கின்றது. இத்தகையதான அந்த ப்ரணவம், ஸமஸ்த மந்திரங்களுக்கும், உபநிஷத்துக்களுக்கும், வேதங்களுக்கும் காரணம். மற்றும், இது அனாதி (ஆரம்பம் அற்றது). 

ப்ருகுகுலத்தை வளர்ப்பவரே! அந்த ப்ரணவத்தில் அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்று எழுத்துக்கள் அடங்கியிருக்கின்றன. இம்மூன்று எழுத்துக்களும் அன்னயார்ஹ சேஷத்வம் (பிறர்க்குரியனாகாமல் பரமபுருஷனுக்கே அடிமையாய் இருக்கை), அனன்ய சரணத்வம் (பகவானைத் தவிர, வேறொரு புகலிடம் அற்றிருக்கை), அனன்ய போக்யத்வம் (பகவானைத் தவிர, வேறொரு அனுபவம், அனுபவிப்பப்படும் பொருள் அற்றிருக்கை) ஆகிய மூன்று அர்த்தங்களைக் கூறுகின்றன. மற்றும், ப்ராப்யத்வம் (அடையப்படும் பொருள்), ப்ராபகத்வம் (அடைவதற்கு வழி) முதலிய குணங்களை வெளியிடுகிற நாராயணாதி நாமங்களுடைய தத்தம் பொருள்களை அறிவிக்கையாகிற வ்ருத்திகளுக்கும் காரணமாயிருக்கும். நான்முகனைச் சரீரமாகவுடைய பரமபுருஷன், இத்தகையதான அந்த ப்ரணவத்தினின்று அந்தஸ்தங்களென்று ப்ரஸித்தங்களான ய,ர,ல,வ என்னும் அக்ஷரங்களும், ஊஷ்மங்களென்று ப்ரஸித்தங்களான ஷ,ஸ,ஹ என்னும் அக்ஷரங்களும், ஸ்வரங்களென்று ப்ரஸித்தங்களான அ, இ, உ முதலிய அச்சுக்களும், ஸ்பர்சங்களென்று ப்ரஸித்தங்களான க-வர்க்கம், ச-வர்க்கம், ட-வர்க்கம், த-வர்க்கம், ப-வர்க்கம் என்று ஐந்து வகையாகப் பிரிந்த இருபத்தைந்து அக்ஷரங்களும் அடங்கி, ஹரஸ்வம் (குறில்), தீர்க்கம் (நெடில்), ப்லுதம் (நீட்சி) முதலிய அச்சுக்களின் தர்மங்களும் அடங்கிய அக்ஷர ஸமாம்னாயத்தைப் (அக்ஷர ஸமூஹத்தை ) படைத்தான். 

ப்ரஹ்மதேவனை சரீரமாகவுடைய இப்பரமபுருஷன், அந்த அக்ஷர ஸமாம்னாயத்தினால் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் வெளியிட்டான்; பிறகு ப்ரணவத்தோடும் வ்யாஹ்ருதிகளோடும் (பூ:, புவ:, ஸ்வ:)  கூடிய அந்நான்கு வேதங்களையும் மரீசி முதலிய தன் புதல்வர்களுக்கு ஓதுவித்தான். அவர்கள் வேதமோதுவதில் திறமையுள்ளவர்களாய் இருந்தார்கள்; மற்றும், ப்ரஹ்மரிஷிகள், வேதங்களில் கூறப்படுகிற தர்மங்களை அறிந்து அனுஷ்டித்து, பிறர்க்கு உபதேசிக்கும் தன்மையர்களான அந்த மரீசி முதலியவர்கள் கச்யபர் முதலிய தம் புதல்வர்களுக்கு அவ்வேதங்களை உபதேசித்தார்கள். வ்ரதங்களைத் தவறாமல் அனுஷ்டிக்கும் தன்மையர்களான அவரவர் சிஷ்யர்களால் பரம்பரையாக இதுவரையிலும் அவ்வேதங்கள் ஒவ்வொரு சதுர் யுகத்திலும் ஓதப்பட்டு வருகின்றன.

அவை த்வாபரம் வரையில் பிரிவினையில்லாமல் இருந்தன. பிறகு, த்வாபரத்தின் கடைசியில் மஹர்ஷிகளால் பிரிக்கப்படுகின்றன. மஹர்ஷிகள், ஹ்ருதயத்தில் வஸித்துக் கொண்டிருக்கிற அச்சுதனால் தூண்டப்பட்டு, ஜனங்கள் கால தர்மத்தினால் ஆயுள், தேஹபலம், புத்திபலம் இவை குறையப் பெற்றிருப்பதைக் கண்டு, வேதங்களைப் பிரித்தார்கள். 

ப்ராஹ்மண ச்ரேஷ்டரே! மிகுந்த பாக்யமுடையவரே! இந்த வைவஸ்வத மன்வந்தரத்திலும் (இருபத்தெட்டாவது சதுர்யுகத்தின் த்வாபர யுகாதியில்) உலகங்களின் க்ஷேமங்களை நடத்தும் தன்மையனாகிய பகவான், ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலாக லோக பாலர்களால் தர்ம ரக்ஷணத்தின் பொருட்டு வேண்டப் பெற்று, ப்ரபுவாகிய அப்பரமபுருஷன், பராசர மஹர்ஷியிடத்தினின்று ஸத்யவதியிடத்தில் தன்னுடைய அம்சாம்ச கலையினால் (அதிஸூக்ஷ்ம (மிக நுட்பமான) அம்சத்தினால்) அவதரித்து, வேதங்களை நான்கு பாகங்களாகப் பிரித்தான். 

அப்பரமன், ருக்கென்றும், அதர்வமென்றும், யஜுஸ்ஸென்றும், ஸாமமென்றும் நான்கு வகையான வேத ராசிகளைத் தான் ஸாக்ஷாத்கரித்து (நேராகப் பார்த்து அறிந்து), நானாவிதமான ரத்னக் குவியல்களினின்று ரத்னங்களைப் பொறுக்கி மாலைகள் கோப்பதுபோல், அந்த வேத ராசிகளினின்று ஸாராம்சங்களை (ஸாரமானவற்றை) எடுத்து, நான்கு ஸம்ஹிதைகளாகச் செய்தான். மிகுந்த மதியுடைய அப்பராசரகுமாரர், நான்கு சிஷ்யர்களை அழைத்து, அந்த நான்கு ஸம்ஹிதைகளில் ஒவ்வொரு ஸம்ஹிதையை, ஒவ்வொரு சிஷ்யனுக்கு உபதேசித்தார். 

அவற்றில் முதல் ஸம்ஹிதையான பஹ்வ்ருசமென்னும் பெயருடைய ருக்வேதத்தைப் பைலரென்னும் சிஷ்யருக்கு உபதேசித்தார். நிகதமென்னும் பெயருடைய யஜுர் வேதத்தை வைசம்பாயனரென்னும் சிஷ்யருக்கு உபதேசித்தார். சந்தோக ஸம்ஹிதையான ஸாமவேதத்தை ஜைமினியென்னும் சிஷ்யருக்கு உபதேசித்தார். ஆங்கிரஸம் என்னும் பெயருடைய அதர்வவேதத்தை ஸுமந்து என்னும் தன் சிஷ்யருக்கு உபதேசித்தார். 

பைல மாமுனிவர் தாம் பாராசர்யரிடத்தினின்று அத்யயனம் செய்த பஹ்வ்ருசமென்னும் ருக் வேத சாகையை (கிளையை) இரு வகையாகப் பிரித்து, தன் புதல்வரான இந்த்ரப்ரமிதிக்கு ஒரு பாகத்தையும், சிஷ்யரான பாஷ்கலருக்கு மற்றொரு பாகத்தையும் உபதேசித்தார். 

ப்ருகு குலத்தில் பிறந்த மஹானுபாவரே! அவர்களில் பாஷ்கலர், தன் ஸம்ஹிதையை நான்கு வகையாகப் பிரித்து, தன் சிஷ்யர்களான போத்யர், யாஜ்ஞவல்க்யர், பராசார், அக்னிமித்ரர் இவர்களுக்கு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாகமாக உபதேசித்தார். சிறந்த மதியுடைய இந்த்ரப்ரமிதியும் தன் சாகையைத் தன் புதல்வரும் அறிஞருமாகிய மாண்டூகேயர் என்னும் ரிஷிக்கு உபதேசித்தார். அம்மாண்டூகேயர், அந்த ஸம்ஹிதையை வேதமித்ரரென்னும் தன் சிஷ்யருக்கு உபதேசித்தார். 

அம்மாண்டூகேய சிஷ்யரான வேதமித்ரர், ஸௌபரி முதலியவர்களுக்கு உபதேசித்தார். மாண்டூகேயரின் புதல்வரான சாகல்யரென்பவர் தன் ஸம்ஹிதையை ஐந்து பாகங்களாகப் பிரித்து, வாத்ஸ்யர், முத்கலர், சாலீயர், கௌகல்யர், சிசிரர் என்னும் இவர்களுக்கு உபதேசித்தார். 

அந்த சாகல்யருடைய சிஷ்யரான ஜாதுகர்ண முனிவர் நிருக்தத்தோடு (வேத பதங்களுக்கு விளக்கத்துடன்) கூடிய தன் ஸம்ஹிதையை நான்கு பாகங்களாகப் பிரித்து, பாலாகர், பைஞ்சர், வைதாலர், விரஜர் என்னும் இவர்களுக்கு உபதேசித்தார். 

முன்சொன்ன பாஷ்கலருடைய புதல்வர், கீழ்ச்சொன்ன எல்லா ஸம்ஹிதைகளினின்றும் தேர்ந்தெடுத்து வாலகில்யமென்னும் சாகையை (கிளையை) ஏற்படுத்தினார். அதைப் பைலாயனி, கார்க்கி, காஸாரர் இவர்கள் அவரிடத்தினின்றும் அத்யயனம் செய்தார்கள் (கற்றார்கள்). 

இவ்வாறு பஹ்வ்ருசமென்று ப்ரஸித்தமான ருக்வேத ஸம்ஹிதைகள், இத்தனை சாகைகளாகப் பிரிந்தன. இவற்றை இந்த ப்ரஹ்ம ரிஷிகள் அத்யயனம் செய்து ஹ்ருதயத்தில் தரித்துக் கொண்டார்கள். இந்த வேதங்களின் பிரிவினையைக் கேட்பானாயின், ஸமஸ்த பாபங்களாலும் விடுபடுவான்.

வைசம்பாயன சிஷ்யர்கள், சரகர்களென்றும், அத்வர்யுக்கள் என்றும் பெயர் பெற்றார்கள். ஏனென்றால், அத்வர்யு சாகையை (கிளையை) அத்யயனம் செய்தார்கள் (கற்றார்கள்) ஆகையால் அத்வர்யுக்களென்றும், ப்ரஹ்ம ஹத்யையாகிற (ப்ராஹ்மணனைக் கொன்ற) மஹாபாபத்தைப் போக்கும் வ்ரதத்தைத் தங்கள் குருவுக்காகத் தாங்கள் அனுஷ்டித்தார்களாகையால் சரகர்களென்றும் அவர்களுக்கு ப்ரஸித்தி (ப்ரபலம்) உண்டாயிற்று. 

வைசம்பாயனருடைய சிஷ்யரான யாஜ்ஞவல்க்யர் என்பவர் தன் குருவைப் பார்த்து, “மஹானுபாவரே! அல்பமான தபோ பலமுடைய இவர்களுடைய வ்ரத அனுஷ்டானத்தினால் (தவத்தால்) என்ன பலன்? நானோவென்றால், ஒருவராலும் அனுஷ்டிக்க முடியாத வ்ரதத்தை அனுஷ்டிக்கிறேன்” என்று மொழிந்தார். அவ்வாறு மொழியப்பெற்ற குருவான வைசம்பாயனரும் கோபமுற்று, “ப்ராஹ்மணர்களை அவமதிக்கின்ற நீ, எனக்குச் சிஷ்யனாயிருந்தது போதும். நீ புறப்பட்டுப் போவாயாக. ஆனால், என்னிடத்தில் அத்யயனம் செய்த (கற்ற) வேத சாகையைக் கக்கிவிட்டுச் சீக்ரம் போக வேண்டும்” என்றார். 

தேவராதருடைய பிள்ளையான யாஜ்ஞவல்க்யரும், யஜுர் வேதங்களின் ஸமூஹத்தைக் கக்கி விட்டுப் போனார். பிறகு, முனிவர்கள் அந்த யஜுர்வேத ஸமூஹங்களைக் கண்டார்கள். அவர்கள் வேதங்களில் விருப்பமுடையவர்களாகையால், தித்திரிப் பறவைகளின் உருவம் கொண்டு, அந்த யஜுர் வேதங்களை எடுத்துக்கொண்டார்கள். ஆகையால், யஜுர்வேத சாகை தைத்திரீய சாகையென்று ப்ரஸித்தி பெற்றது. அது மிகவும் அழகாயிருக்கும். 

ப்ரஹ்ம ரிஷியே! பிறகு யாஜ்ஞவல்க்யர் குருவிடத்தினின்று அத்யயனம் செய்த வேதங்களை ஆராய்ந்து பார்க்கையில், கக்கி விட்டாராகையால் அவை அவர்க்குத் தோற்றவே இல்லை. அவர் வேதங்களைப் பெற விரும்பி ஸூர்ய மண்டலத்தினிடையில் இருக்கின்ற பரமபுருஷனை நன்கு துதி செய்தார்.

யாஜ்ஞவல்க்யர் சொல்லுகிறார்:- ஸூர்ய மண்டலத்தினிடையில் இருக்கின்றவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷனுக்கு நமஸ்காரம். இப்பரமன், நான்கு வகையான தேஹங்களையுடைய ப்ரஹ்மதேவன் முதல் பூச்சி, புழுவரையிலுள்ள பற்பல ப்ராணிகள் அடங்கின ஸமஸ்த லோகங்களுடைய ஹ்ருதயங்களிலும் ஆத்ம ஸ்வரூபத்தினாலும், வெளியில் கால ஸ்வரூபத்தினாலும் ஆகாயம் போல வியாபித்திருப்பினும், அவற்றின் தோஷங்கள் தன் மேல் தீண்டப் பெறாதவனாகி, தானொருவனே க்ஷணம், லவம், நிமிஷம் முதலிய அவயவங்களால் (பகுதிகளால்) வளர்ந்திருக்கின்ற பற்பல ஸம்வத்ஸரங்களாக (வருடங்களாக) ஜலத்தை இழுப்பதும் விடுவதும் செய்து, லோக யாத்ரையை நடத்திக் கொண்டு வருகிறான். 

தேவதைகளில் சிறந்தவனே! ஸவிதாவே! (ப்ராணிகளின் புத்தியைத் தூண்டும் தன்மையனே!) உலகங்களுக்கு வெயில் காய்ந்து உபகாரம் செய்வதனால் தபனன் என்று பெயர் பெற்றவனே! தினந்தோறும் வேத மார்க்கத்தின்படி உபாஸனம் செய்கிற ஜனங்களின் பாபங்களும், அவற்றின் காரணமான அஜ்ஞானமும், அவற்றின் பலனான துக்கங்களுமாகிற விதைகளை வறுக்கும் தன்மையதான (அவை பலிக்காதபடி அவற்றை அழிக்கும் தன்மையதான) உன் மண்டலம் இதோ கீழே காய்கின்றதே; இதை நன்கு த்யானம் செய்வோமாக. நீயே உன்னுடைய சரீரங்களான ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ஸமூஹங்களின் இந்த்ரிய (புலன்), ப்ராண (மூச்சு) கணங்களையும், ஜீவாத்மாக்களையும் அந்தராத்மாவாயிருந்து நியமித்துக் கொண்டிருக்கின்றாய். 

பரம காருணிகனான நீ, இவ்வுலகமெல்லாம் மிகவும் பயங்கரமான முகமுடைய அந்தகாரமாகிற மலைப்பாம்பினால் பிடியுண்டு, மரணம் அடைந்தாற் போல் ப்ரஜ்ஞை (உணர்வு, நினைவு) அற்றிருப்பதைக் கண்டு, மிகுந்த கருணை அமைந்த கண்ணோக்கத்தினால் எழுப்பி, தினந்தோறும் மூன்று ஸந்திகளிலும் (வேளையிலும்) உன்னுடைய ஆராதன ரூபமான தர்மமாகிற நன்மையில் மூட்டுகின்றாய். அதுவே அன்றோ இவ்வுலகத்திற்கு எல்லாம் ஸ்வபாவ ஸித்தமான (இயற்கையான) நன்மையாம். மற்றும், அதுவே மனவூக்கத்திற்கு ஹேதுவாய் (காரணமாய்) இருக்கும். மற்றும், தேவதைகளுக்கு ப்ரபுவான நீ அரசன் போல் துஷ்ட ஜந்துக்களுக்கு (கொடிய பிராணிகளுக்கு) பயத்தை விளைத்துக் கொண்டு திரிகின்றனை. அன்றியும், திக்பாலகர்கள் (திசைகளைக் காப்பவர்கள்) ஆங்காங்கு நாற்புறத்திலும் தாமரை மொட்டு போன்ற அஞ்சலிகளால் (கைகூப்புதலால்) உன்னை ஆராதிக்கின்றார்கள். ஷாட்குண்யபூர்ணனே (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனே)! மூன்று லோகங்களுக்கும் குருக்களான ப்ரஹ்மாதிகளாலும் வணங்கப்பட்ட உன் பாதாரவிந்த யுகலத்தை நான் பிறரால் உள்ளபடி அறியப்படாதவைகளும், அழியாத ஸாரமுடையவைகளுமான யஜுர் வேதங்களைப் பெற விரும்பி வணங்குகின்றேன்.

ஸுதர் சொல்லுகிறார்:- என்று யாஜ்ஞவல்க்யர் ஸூர்ய மண்டல அந்தர்வர்த்தியான (ஆதித்ய மண்டலத்தின்   நடுவில் உள்ள) பகவானைத் துதித்தார். இவ்வாறு துதித்து, அருள் புரிவிக்கப்பெற்ற ஸூர்ய மண்டல மத்யவர்த்தியான அந்தப் பகவான், தன்னைப் பற்றினாருடைய பாபங்களைப் போக்கி விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பவனாகையால், குதிரையின் உருவம் தரித்துக் கொண்டு வந்து, யாஜ்ஞவல்க்ய முனிவர்க்கு இதுவரை எவராலும் பெறப்படாத யஜுர்வேத மந்த்ரங்களை உபதேசித்தான். ஸமர்த்தரான அம்முனிவரும், அளவற்றவைகளான அந்த யஜுர் வேதங்களைப் பதினைந்து சாகைகளாகப் பிரித்தார். குதிரையின் உருவம் கொண்ட பகவானால் யாஜ்ஞவல்க்யருக்கு உபதேசிக்கப்பட்ட அந்த யஜுர்வேத சாகைகளை, காண்வர்களும், மாத்யந்தினர்களும் முதலியவர்கள் அவரிடத்தினின்று அத்யயனம் செய்தார்கள். 

ஸாம வேதங்களை ஓதின ஜைமினிக்கு, ஸுமந்து என்னும் பிள்ளை பிறந்தார். அவர் மிகுந்த அறிவுடையவர். அவர்க்கு ஸுதன்வானென்னும் பிள்ளை பிறந்தார். ஜைமினி முனிவர், தான் ஓதின ஸாம வேதத்தை, இரண்டு சாகைகளாகப் பிரித்து, பிள்ளையும், பேரனுமாகிய அவ்விருவர்க்கும் ஒவ்வொரு சாகையாக உபதேசித்தார். 

அந்தணரே! அந்த ஜைமினியின் சிஷ்யரும், மஹானுபாவருமான ஸுகர்மாவென்பவர், ஸாம வேதமாகிற வ்ருக்ஷத்திற்கு ஆயிரம் சாகைகளை ஏற்படுத்தினார். கௌஸல்யரான ஹிரண்யநாபர், பௌஷ்பிஞ்சர் என்னும் இருவரும் ஸுகர்மாவின் சிஷ்யர்கள். அவர்கள் அவரிடத்தினின்று ஸாம வேதங்களை அத்யயனம் செய்தார்கள். அவ்வாறே ஆவந்தயரென்பவரும் அந்த ஸுகர்மாவின் சிஷ்யரே. அவர் ப்ரஹ்ம ஞானிகளில் சிறந்தவர்.  அவரும் அவரிடத்தினின்று ஸாம வேதங்களை அத்யயனம் செய்தார்.

ஹிராண்ய நாபர், பௌஷ்பிஞ்சர், ஆவந்தயர் இம்மூவர்க்கும் ஐந்நூறு சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் ஸாம வேதங்களை அவர்களிடத்தினின்று அத்யயனம் செய்தார்கள். அவர்கள், உதீச்யர்களென்று ப்ரஸித்தி பெற்றவர்கள். அவர்களில் சிலரை ப்ராச்யர்களென்றும் சொல்லுவார்கள். லோகாக்ஷி, லாங்கலி, குஸீதர், கல்யர், குக்ஷி என்னும் இவ்வைவரும் பௌஷ்பிஞ்சருடைய சிஷ்யர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஸாம சாகைகளில் (கிளைகளில்) இருநூறு இருநூறு சாகைகளை (கிளைகளை) அத்யயனம் செய்தார்கள். ஹிரண்யநாபருடைய சிஷ்யர் க்ருதரென்பவர் தன்னுடைய சிஷ்யர்களுக்கு இருபத்து நான்கு சாகைகளை (கிளைகளை) உபதேசித்தார். மிகுந்தமதியுடைய ஆவந்த்யர், தன் சிஷ்யர்களுக்கு மற்ற சாகைகளை (கிளைகளை) உபதேசித்தார்.

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக