ஶ்ரீமத் பாகவதம் - 342

த்வாதச (பன்னிரண்டாவது) ஸ்கந்தம் - ஐந்தாவது அத்தியாயம்

(ஸ்ரீசுகர் பரீக்ஷித்துக்கு மீளவும் சுருக்கமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தை உபதேசித்து,  தக்ஷக ஸர்ப்பம் கடிப்பதனால் நேரும் மரண பயத்தைப் போக்குதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இந்தப் புராண ஸம்ஹிதையில் தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் தன்மையனும், ஸர்வாந்த்ராத்மாவும் (எல்லோரையும் உள் இருந்து நியமிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரமபுருஷன், அடிக்கடி நிரூபிக்கப்படுகிறான். (இதில் பரமபுருஷனுடைய குணங்களைச் சொல்லாமல், அன்யபரமான (மற்றவற்றைச் சொல்லும்) பாகம் சிறிதும் கிடையாது). 

எவனுடைய அனுக்ரஹத்தினின்று ப்ரஹ்மதேவனும், கோபத்தினின்று ருத்ரனும் உண்டானார்களோ, அத்தகைய ஸர்வகாரணனான பரமபுருஷனை, இந்த ப்ரபந்தம் ஆதியோடந்தமாக (முதலிருந்து முடிவு வரை) நிரூபித்துச் சொல்லுகின்றது. (காரண வஸ்துவே (எது எல்லாவற்றிற்கும் காரணமோ) த்யேயம் (அதுவே த்யானிக்கத் தக்கது) என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றன. ஆகையால், காரண வஸ்துவை அடி தோறும் நிரூபித்துச் சொல்லுகிற இந்த ப்ரபந்தத்தைக் கேட்பவர்களுக்குக்  காரண வஸ்து த்யானம் அனாயாஸமாக (எளிதாக) நேரிடுமாகையால், அவர்களுக்கு மோக்ஷம் என்னும் பரம புருஷார்த்தம் கையிலங்கு நெல்லிக் கனியாகும் (உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனி போல் தெளிவாக எளிதில் தெரியும்) என்பதில் ஸந்தேஹமில்லை) (“மரணம் ஸமீபிக்கப் பெறாமல் ஜீவித்திருக்கிறவர்களுக்கு அன்றோ இவை எல்லாம் உபாயங்களாம் (வழிகள்). மரணம் ஸமீபித்திருக்கிற நான் என்ன செய்வேனென்று நீ சிந்திக்க வேண்டாம்.”) 

ராஜனே! மரணம் அடையப்போகிறேனே என்னும் “இப்பசு புத்தியை (பசுபுத்தி - அவிவேகம்) துறப்பாயாக. (ஏனென்றால், நானென்று தோற்றுகிற ஆத்ம வஸ்து நித்யம் (அழிவற்றது); ஆகையால், அதற்கு மரணம் கிடையாது). நீ தேஹம் போல் முன்பில்லாமல் இப்பொழுது உண்டாகவில்லை; தேஹத்தைப்போல் மரணம் அடையப்போகிறதும் இல்லை. நீ உண்டாகி மீளவும் பீஜாங்குரம் (விதையிலிருந்து முளை; முளையிலிருந்து விதை) போல் புத்ர, பௌத்ராதிகளுடன் உண்டாகப் போகிறதுமில்லை. இந்த அவஸ்தைகளெல்லாம் தேஹத்திற்கே உள்ளவையன்றி, தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) உனக்கு அவை கிடையாது. 

காஷ்டங்களில் (கட்டைகளில்) பற்றி எரிகிற அக்னி, அவற்றைக் காட்டிலும் வேறுபட்டதே அல்லவா? அவ்வாறே தேஹங்களில் அமைந்திருக்கிற ஆத்ம வஸ்துவும் அவற்றைக் காட்டிலும் வேறுபட்டதே. ஜீவன் ஸ்வப்ன (கனவு) தசையில் தன்னுடைய தேஹத்திற்கு நேரும் சிரச்சேதத்தையும் (தலை அறுப்பு), மரணம் முதலியவற்றையும் காண்கிறான். அவ்வாறு காண்கிற ஜீவன், மரணம் முதலியவற்றிற்கு இடமான தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்டவன் அல்லவா? அவ்வாறே ஜாக்ர (விழிப்பு) தசையிலும் (நிலையிலும்) ஆத்மா தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனே (வேறானவனே). ஆகையால், ஆத்மா தேஹத்தைப்போல் பிறப்பவனுமல்லன்; மரணம் அடைபவனும் அல்லன். 

கடம் முதலியவற்றிலுள்ள ஆகாசம், அவை உடைந்த பின்பு பரமாகாசத்தோடு (பெரிய வானோடு) சேர்ந்து விடுகிறது. கட ஆகாசமென்னும் இவை முதலிய சொற்களுக்கிடமாகிறது இல்லை. இவ்வாறே ஜீவன் பரமாத்ம உபாஸனத்தினால் (த்யானத்தினால்) சரீர ஸம்பந்தம் (உடல் தொடர்பு) அடியோடு கழியப் பெறுகையில், மீளவும் பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபம் தோன்றப் பெறுவான். மனம் ஜீவனுக்குப் புண்ய பாபகர்மங்களை விளைத்து, அவற்றின் மூலமாய் ஸத்வாதி குண மயமான தேஹங்களை விளைக்கின்றது. ஜீவனுக்கு அந்த மனத்தை மாயை உண்டாக்குகின்றது. ஆக, மாயை, மனம், தேஹம், கர்மம் இவைகளால் ஜீவனுக்கு ஸம்ஸாரம் உண்டாகின்றது. எண்ணெய், அதற்கு ஆதாரமான பாத்ரம், திரி, அக்னி ஸம்யோகம் (நெருப்பின் தொடர்பு) இவை எதுவரையில் உளவோ, அதுவரையிலுமே தீபத்திற்கு தீபத்வம் உண்டாகின்றது. (விளக்கொளி ஜ்வாலா ரூபமாய் எரிகின்றது.) தேஹாதிகளால் உண்டாகும் ஸம்ஸாரமும் இவ்வாறே என்றுணர்க. 

(புண்ய, பாப கர்மங்கள், தைலம் போன்றவை. மனம், தைலத்திற்கு ஆதாரமான பாத்ரம் போன்றது. தேஹம், திரி போன்றது. தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற எண்ணம்)  அக்னி ஸம்யோகம் (நெருப்பின் தொடர்பு) போன்றது. ஸம்ஸாரம் தீபம் போன்றது). ஆகையால், ரஜஸ்ஸு, ஸத்வம், தமஸ்ஸு - என்னும் இம்மூன்று குணங்களின் ஸம்பந்தமாகிற உபாதியினால் (காரணத்தினால்) ஆத்மாவுக்கு ஜன்ம, மரணாதிகள் உண்டாகின்றன. அவ்வுபாதி நீங்கினால், அவையும் மாறுகின்றன. இயற்கையில் ஆத்மாவுக்கு அவை கிடையாது. 

தேஹம் பிறக்கும் பொழுது, ஆத்மா பிறக்கிறதும் இல்லை. அது மரணம் அடையும் போது, அவன் மரணம் அடைகிறதும் இல்லை. அவன், வ்யக்தமான (கண்ணுக்குப் புலப்படும்) தேஹத்தைக் காட்டிலும், அவ்யக்தமான (கண்ணுக்குப் புலப்படாத) மூலப்ரக்ருதியைக்  காட்டிலும் வேறுபட்டவன். அவன் ஸ்வயம்ப்ரகாசன் (தானே தோன்றும் தன்மையன்). தேஹாதிகள் (உடல்) ஜடங்கள் (பிறர்க்கே தோன்றும் தன்மையுள்ளவை). இவ்வாறு விஜாதீயனாகையால் (வேறுபட்டவனாகையால்), ஆத்மா அவற்றைக் காட்டிலும் வேறுபட்டவன் என்பதற்கு ஸந்தேஹம் உண்டோ? 

ஆகாசம், கடம் முதலியவற்றில் வியாபித்திருப்பினும், அந்தக் கடாதிகளைக் காட்டிலும் வேறுபட்டிருப்பது போல், ஆத்மா தேஹங்களில் அமைந்திருப்பினும், அவற்றைக் காட்டிலும் வேறுபட்டவனே. ஆத்மாவே தேஹத்தைத் தரித்துக் கொண்டிருக்கிறான். அவன் ஸ்வபாவத்தில் (குணத்தில்) அளவிட முடியாதவன். ஸ்வரூபத்தில் (இயற்கைத் தன்மையில்) விகாரம் (மாறுபாடு) அற்றவன். இத்தகையனான ஆத்மா, பரமாத்மனால் தரிக்கப்பட்டு, அவனிடத்தில் நிலை கொண்டிருக்கின்றான். 

ப்ரபூ! தேஹத்தில் அமைந்திருக்கின்ற இத்தகையனான ஆத்மாவை, அவ்வாத்மாவினாலேயே ஆராய்ந்து உணர்வாயாக. அவன் தனக்குத் தானே தோற்றும் தன்மையனாகையால், அவனைக் கொண்டே அவனை அறிய வேண்டும். சாஸ்த்ரங்களைக் கற்று, ஆத்ம, பரமாத்ம ஸ்வரூபங்களை உள்ளபடி ஆராய்ந்தறிந்த புத்தியுடன், ஸ்ரீவாஸுதேவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பானாயின், ப்ராஹ்மண வாக்யத்தினால் தூண்டப்பட்ட தக்ஷகன் உன்னைக் கடித்து விஷ அக்னியினால் தஹிக்கினும் (விஷமாகிய நெருப்பினால் எரிக்கப்பட்டாலும்), உனக்கு வருத்தத்தை விளைக்கவல்லன் ஆக மாட்டான். 

ஈச்வரன், ம்ருத்யுக்களுக்கு (மரணத்திற்கு) எல்லாம் ம்ருத்யுவாயிருப்பவன். ஆகையால், அவனை ம்ருத்யுக்கள் எவையும் தஹிக்க (எரிக்க) வல்லவை ஆக மாட்டாது. அவனை த்யானித்துக் கொண்டிருக்கிற உனக்கும், அத்தன்மையே உண்டாமாகையால், தக்ஷக விஷாக்னி உன்னை வருந்தச் செய்ய வல்லதாகாது. “நான் பரந்தாமமான பரப்ரஹ்மமே. பரமபதமான பரப்ரஹ்மம் நானே. நான் பரப்ரஹ்மத்தின் சரீரமாகையால், பரப்ரஹ்மமென்றே சொல்லத் தகுந்தவன். பரப்ரஹ்மம் என்னைச் சரீரமாக உடையதாகையால், நானென்று சொல்லத் தகுந்ததே” என்று இவ்வாறு அனுஸந்தித்து (நினைத்து), ப்ராக்ருத சரீரம் (முக்குணங்களால் ஆன உடல்) அற்ற பரமாத்மனிடத்தில் ஆத்மாவை நிலை நிறுத்தி, (ஆத்மா, பரமாத்மாவுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடையவனென்று த்யானித்து) நிற்பாயாயின், விஷங்களோடு கூடிய முகங்களால் பாதத்தில் நக்கிக் கடிக்கின்ற தக்ஷகனையாவது, பரமாத்மனைக் காட்டிலும் வேறான சரீரத்தையாவது, ஜகத்தையாவது நீ காணமாட்டாய். (வாஸுதேவ ஸ்மரண (நினைவாகிற) மஹாநந்தத்தில் (பேரின்பத்தில்) மூழ்கிக் கிடக்கையால் துக்க ஹேதுவான (காரணமான) மற்றொன்றையும் நீ நினைக்கமாட்டாய்). 

அப்பனே! பகவானுடைய சேஷ்டிதங்களை (செயல்களைப்) பற்றி நீ ஏதேது வினவினையோ, அவையெல்லாவற்றையும் உனக்கு மொழிந்தேன். மேலும் என்ன கேட்க வேண்டுமென்று விரும்புகின்றாய்? (மேலும் ஏதேனும் கேட்க வேண்டியிருந்து கேட்டால், சொல்லுகிறேன். கேட்பாயாக). 

ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை