சபையில் ராவணனுடைய தம்பி கும்பகர்ணன் எழுந்து பேசினான் :
“மகாராஜனே! நீதி சாஸ்திரம் அறியாதவனைப் போல் நடந்து கொண்டபடியால் பெரும் அபாயத்தைத் தருவித்துக் கொண்டிருக்கிறீர். ராம லக்ஷ்மணர்கள் பேரில் உமக்கு விரோதம் இருந்தால் முந்தி அவர்களை எதிர்த்து அவர்களைத் தோற்கடித்து வதம் செய்துவிட்டு, பிறகு அல்லவோ சீதையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தீர்களானால் சீதையும் உம்மை விரும்பியே ஒப்புக் கொண்டிருப்பாள். மலையைத் தொடர்ந்து தழுவி நதி ஓடுவது போல் வெற்றி பெற்ற வீரனை அவள் தொடர்ந்திருப்பாள். அப்படி நீர் செய்யவில்லை. யாரையும் யோசனை கேட்காமல் பாப காரியம் செய்து விட்டு விரோதம் சம்பாதித்துக் கொண்டு இப்போது காலம் தாண்டிய பின் ஆலோசனை சொல்லும்படி கேட்கிறீர். இது அரசனுக்குரிய உத்தம வழியல்ல. ஏன், மத்திம வழியுமல்ல.”
இவ்வளவும் தைரியமாகச் சொல்லி விட்டு கும்பகர்ணன் அண்ணன் முகத்தைப் பார்த்தான். தான் சொன்ன கடினமான மொழிகளைக் கேட்ட ராவணன் முகம் வாடியதைப் பார்த்து அவனால் பொறுக்க முடியவில்லை, சூரன் கும்பகர்ணனுக்கும் ராவணனுக்கும் அளவு கடந்த அன்பு. நடந்தது நடந்து போயிற்று. இனி அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. அண்ணனை விட்டு விடுவதற்கில்லை என்று தீர்மானித்துக் கொண்டான்.
ராமன் நிகரற்ற வில்லாளி என்பது கும்பகர்ணனுக்குத் தெரியும். ராவணன் பெற்றிருக்கும் வரங்களின் வரம்பும் குறையும் கும்பகர்ணன் அறிவான். ஆயினும் இப்போது ராவணனைக் கைவிடுவதற்கு இல்லை. அதைரியப் படுத்துவதில் பயனில்லை என்று எண்ணிக் கும்பகர்ணனும் மந்திராலோசனை சபையில் மற்றவர்கள் பேசியது போலவே தைரியம் பேச ஆரம்பித்தான்:
“நீர் செய்வது தவறு. கையாள்கிற முறையும் தவறு. முன்னால் செய்ய வேண்டியதைப் பின்னால் செய்கிறீர். பின்னால் செய்ய வேண்டியதை முன்னால் செய்து விட்டீர். ஆயினும் இந்த ராமனை நான் வதம் செய்வேன். பயப்பட வேண்டாம். அவன் பாணங்கள் ஒன்றிரண்டு என் மேல் படும். ஆயினும் அவனைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடித்துவிட்டு உமக்கு நான் வெற்றி சம்பாதித்துத் தருவேன். அண்ணா! கவலையற்றுச் செய்ய வேண்டியதைச் செய்வீர்” என்றான்.
*
கும்பகர்ணன் ஏதோ முன்னுக்கும் பின்னுக்கும் முரணாகப் பேசினான் என்றும், அதற்குக் காரணம் அவனுடைய மந்த புத்தி என்றும் சிலர் வியாக்கியானம் செய்வது உண்டு. சாபத்தால் ஆறு மாதம் தூங்கினாலும் விழித்தபோது அவன் அறிவுக்குக் குறைவில்லை. முதலில் உண்மையைப் பயப்படாமல் பேசினான். பிறகு ராவணனுடைய நிலையைப் பார்த்து அன்பு மேலிட்டுப் பேசினான். குடும்பக் காப்புக்கு வேண்டிய நற்குணங்களை நன்றாகப் பெற்ற வீரன்.
ராவணனுடைய பிரதான ஆலோசனைக்காரன் பிரஹஸ்தன். இவன் ராவணனுடைய பலத்தை
எடுத்துக் காட்டி அவனை யாராலும் வெல்ல முடியாது என்றும் கவலைப்பட வேண்டியதில்லையென்றும் சொல்லி ராவணனைச் சந்தோஷப் படுத்தினான்.
ராவணனும் உற்சாகமடைந்து பேசினான். “குபேரனை ஜெயித்தவன் அல்லவா நான்? அவனை விரட்டியடித்து இந்த லங்கையைப் பற்றிக் கொண்ட என்னை யார் இங்கே வந்து எதிர்ப்பார்கள், பார்க்கலாம்!” என்றான். சபை ஆரவாரித்தது.
*
அந்த ஆரவாரத்தில் சபையிலிருந்த விபீஷணன் சேரவில்லை. அரசனும் தமையனுமான ராவணன் எவ்வளவு கோபமாக இருந்தாலும் அபாயத்தை எடுத்துக் காட்டி அவன் போகும் தவறான வழியிலிருந்து அவனை மீட்டி ராஜ்யத்தையும் ராக்ஷச குலத்தையும் காப்பாற்ற வேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்ந்து மற்றவர்கள் பேசியதை ஒப்புக் கொள்ளாமல் எழுந்து நின்று பேசினான்.
“சீதை ஒரு கொல்லும் விஷப் பாம்பு. அவளை ஏன் எடுத்து வந்தீர்? இப்போது உம்முடைய முதல் கடமை அவளைத் திருப்பி ராமனிடம் சமர்ப்பித்து விடுவது தான். இதைச் செய்யாவிட்டால் எல்லாரும் அழிந்து நாசமாகப் போவோம். இது நிச்சயம்” என்றான்.
ராமனுடைய சாமர்த்தியம், பலம், ஆயுதப் பயிற்சி எல்லாவற்றையும் எடுத்து மறைக்காமல் தைரியமாகச் சொன்னான்.
“ராமனை எதிர்த்தால் தோல்வி நிச்சயம். நம்முடைய அதிர்ஷ்டம் க்ஷுணித்து வருகிறது. சீதையைத் திருப்பிக் கொடுத்து, ராமனிடம் சரணம் புகுந்து, சுகமாக ராஜ்யம், சம்பத்து, மானம் எல்லாம் காப்பாற்றிக் கொள்வோம்” என்றான்.
இப்படி விபீஷணன் விடாமல் மன்றாடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திரஜித்து பொறுமையிழந்தான்.
“சிற்றப்பா பேசும் பேச்சுக்கள் கேட்க எனக்கு வெட்கமாக இருக்கிறது. நம்முடைய குலம் என்ன? நம்முடைய சக்தி என்ன? பௌலஸ்திய குலத்தில் பிறந்த ஒருவர் இப்படிப் பேசுவதும், சபையோர் அதைச் சாவதானமாகக் கேட்டுக் கொண்டிருப்பதும் எனக்கு வியப்பாக இருக்கிறது. சிறுமைக் குணத்தைக் காட்டி விட்டார் சிற்றப்பனார். அவருடைய பேச்சை ஒரு நாளும் நாம் அங்கீகரிக்க முடியாது. இரண்டு மானிடர்களைக் கண்டு யாராவது இப்படிப் பயப்படுவார்களா? இந்திரனையும் அவன் தேவகணங்களையும் அடித்துத் தள்ளி நான் வெற்றி பெறவில்லையா? நம்மைக் கண்டு உலகம் இப்போதும் நடுங்கிக் கொண்டிருக்கவில்லையா? விபீஷணர் இந்த யோசனை சொல்லுகிறார். இது நமக்கு அவமானமாக அவமானமாக இருக்கிறது” என்றான்.
இதைக் கேட்டு விபீஷணன், “பாலனே! உனக்கு அனுபவம் போதாது. இப்படித்தான் பேசுவாய். நீ அரசனுக்கு மகனாகவிருந்தாலும் அவனைக் கெடுக்க வந்த சத்துரு என்றே நான் நினைக்கிறேன். அரசனுக்கு ஹிதம் சொல்லுவதற்கென்று இருக்கும் மந்திரிகளே! அரசனுக்கு அழிவைத் தரும் யோசனை சொல்லுகிறீர்கள். லங்கேசனே! நான் சொல்லுவதைப் புறக்கணிக்க வேண்டாம். ஜானகியைக் கவுரவமாகத் திருப்பி ராமனிடம் கொண்டு சேர்த்து விட்டு, நடந்துபோன குற்றத்தைப் பொறுத்துக்கொள்ளும்படி பிரார்த்தித்துக் கொள்வீர். இதுவே வழி வேறில்லை. இல்லாவிடில் அனைவரும் அழிந்து போவோம்” என்றான்.
*
ராவணனுடைய கோபம் கரை புரண்டு போயிற்று.
“தம்பியாயிற்றே என்று நீ சொன்னதையெல்லாம் இதுவரையில் பொறுத்து வந்தேன். இல்லாவிடில் இங்கேயே உன் உயிர் மாய்ந்திருக்கும். ஒருவனைக் கெடுப்பதற்கு உடன்பிறந்த சத்துருவைப்போல் வேறொருவருமில்லை. பொறாமைப்பட்ட தம்பிகளும் தாயாதிகளுமே சூரர்களுக்கு அவமானமும் தோல்வியும் தருபவர்கள் என்பது உலகமறிந்த உண்மை. அவர்கள் தங்களுடைய எண்ணத்தை மறைத்து வைத்துக்கொண்டு சமயத்தில் துரோகம் செய்வார்கள். கதையில் காட்டு யானைகள் சொல்லவில்லையா? நெருப்பையும் நாம் கண்டு பயப்படவில்லை. வேடர்களுடைய ஈட்டியையும் நாம் பொருட்படுத்தவில்லை. சுருக்குப் போட்டு இழுக்கும் கயிறும் சங்கிலியும் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. இந்தப் பாவி தாயாதி யானைகள் வேடர்களோடு சேர்ந்து கொண்டு நம்மைத் துன்புறுத்துகின்றனவே, அவை தாம் நம்முடைய பெரும் பயம்!' யானைகள் கதையில் சொன்னது எவ்வளவு உண்மை! சுகமாக இருக்கும் வரையில் தம்பி சிரித்துச் சந்தோஷமாக இருப்பான். அபாயம் வந்தபோது கைவிடுவான். பூவிலிருக்கும் தேனைக் குடித்துவிட்ட பிறகு தேனீ அந்தப் பூவில் தங்காது. வேறு பூவைத் தேடிப் போய்விடும். அவ்வளவு தான் தாயாதிகள் சங்கதியும். எனக்குக் கஷ்டம் வந்த காலத்தில் நீ உதவவில்லை. வேறு யாராவது உன்னைப்போல் பேசியிருந்தால் இங்கேயே அவனை வதம் செய்து விட்டிருப்பேன். நீசனே! குலத்தை அவமானப்படுத்தப் பிறந்தவனே!” என்று ராவணன் சீறி அதட்டித் திட்டினான்.
*
இப்படி அவமானப்படுத்தியதைப் பொறுக்க முடியாமல் விபீஷணன் எழுந்து, “அண்ணா! நீர் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்! தருமத்தினின்று தவறிய நீர் எனக்கு அண்ணன் ஆவீர். சபையில் எனக்கு நீர் செய்த அவமானத்தை என்னால் பொறுக்க முடியவில்லை. கால பாசத்தால் தூண்டப்பட்டு விநாசம் தரும் வழியில் போகிறீர். நான் சொன்ன ஹிதம் உமக்குப் பிடிக்கவில்லை. காதுக்கு இனிமையாகப் பேசுவது சுலபம். உம்முடைய மந்திரிகள் அதைச் செய்து வருகிறார்கள். உம்முடைய க்ஷேமத்தைக் கோரியே நான் சொன்னேன். அது உமக்குப் பிடிக்கவில்லை. உமக்குக் கோபத்தை உண்டாக்கிற்று. ராமனுடைய பாணங்கள் உம்மை எரிப்பதை நான் விரும்பவில்லை; அதனால் அல்லவோ நான் சொன்னது.
என்னை நீர் பகைவன் என்கிறீர். நீர் க்ஷேமமாக இருப்பீராக! நகரத்தையும் உம் உயிரையும் காப்பாற்றிக் கொள்வீராக, மங்களம்! நான் போகிறேன். சுகமாக இருப்பீராக! ஆபத்துக்கு உதவலாம் என்று பார்த்தேன், முடியவில்லை. உம்முடைய பெருமையைக் கண்டு பொறாமைப் படுகிறேன் என்று எண்ணுகிறீர். அழிந்து போக வேண்டிய காலத்தில் நல்ல யோசனை விஷமாகத் தோன்றும்.”
இவ்வாறு சொல்லிவிட்டு ராவணனுடைய தம்பி விபீஷணன் இனி லங்கையில் தனக்கு இடமில்லை என்று தீர்மானித்து எல்லாவற்றையும் துறந்து அங்கிருந்தே அப்போதே ஆகாயத்தில் கிளம்பி ராம லக்ஷ்மணர்கள் இருந்த இடம் நோக்கிச் சென்றான். “இராவணனோடு பொருந்தாமை பிறந்த பின்பு நெருப்புப் பட்ட தரையில் கால் பாவாதாப்போலே அவ்விடம் அடி கொதித்துப் போந்தானாயிற்று” என்கிறார் வடக்கு வீதியார் தம் ஈடு வியாக்கியானத்தில். விபீஷணனுடன் நான்கு ராக்ஷச நண்பர்களும் சென்றார்கள்.
கருத்துரையிடுக