81. வானரர்களின் சந்தேகம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

பாபம் செய்துவிட்டு அதன் பயனாக வந்த அபாயத்தினின்று எப்படித் தப்புவது என்று ராவணன் கஷ்டப்பட்டான். அரசர்களின் வழக்கம் போல் மந்திராலோசனை சபை கூட்டினான். சபையில் சர்க்கரைப் பேச்சு பேசுபவர்கள் பலர் பேசினார்கள். ஆனால் இருவர் ராவணனுக்குக் கோபம் வரும்படி கடினமாகப் பேசினார்கள்.


‘தவறு செய்தாய். ஆயினும் நான் உனக்காக உயிரைக் கொடுப்பேன்!' என்றான் ஒருவன்.


'பாபத்தைச் செய்தாய். ஆயினும் இப்போதும் தப்புவதற்கு வழியுண்டு. அந்த வழியைப் பிடித்துச் செல்வாயானால் நாம் எல்லாரும் அழியாமல் சுகமாக இருக்கலாம். சீதையைத் திருப்பித் தந்துவிட்டு ராமனிடம் சரணமடைவாய்' என்றான் விபீஷணன்.


'மாட்டேன்' என்றான் ராவணன். 'அப்படியானால் உன்னை விட்டேன்' என்றான் விபீஷணன்.


தருமசங்கடம் ஒன்று வந்து எதிரில் நிற்கும் போது தத்தம் சுபாவத்தை அனுசரித்து அவரவர்கள் நடந்து கொள்வார்கள். எல்லாரும் ஒன்றுபோல் நடந்துகொள்ள மாட்டார்கள்.


கர்வபங்கத்துக்கு ராவணன் மனம் ஒப்பவில்லை. பாப காரியம் செய்வது கஷ்டமானால், பிழையை ஒப்புக் கொண்டு 'நான் தோற்றேன்' என்று ஒப்புக்கொள்ளுவது அதைவிடக் கஷ்டமான காரியம். பாபம் செய்வதற்குத் தைரியம் வேண்டும்; பாபம் செய்தேன் என்று ஒப்புக்கொள்ளுவதற்கு இரு மடங்கு தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் ராவணனுக்கு இருக்கவில்லை. அவனுடைய சுபாவத்தில் அதற்கு இடமே இல்லை.


அதருமம் ஒன்று நடக்கும்போது பாபம் செய்தவனைச் சேர்ந்து நிற்பவர்களுக்கு ஒரு பெரிய பிரச்னை ஏற்படுகிறது. 'இந்த வீட்டில் நான் சோறு உண்டவன். இவனை நான் எப்படிக் கைவிடலாம்?' 'கூடப் பிறந்தவன் அறியாமையால் பிழை செய்தான். அவனை நான் விட்டு விடுவது பயங்காளித்தனமாகும்.' இவ்வாறான சிக்கல்கள் கிளம்பும். செய்யப்பட்ட அதருமத்தில் தாமும் பங்கு எடுத்துக்கொண்டு விடுவதே வீரர்களுடைய கடமை என்று முடிப்பார்கள் சிலர். ஆனால் வேறு விதமாக நினைப்பவர்களும் உண்டு. பிழை செய்தவர்களைத் திருத்துவதற்கு வேண்டியதெல்லாம் செய்து பார்ப்பார்கள். அதனால் உண்டாகும் கோபம், வெறுப்பு, நஷ்டம் இவற்றைப் பொருட்படுத்தாமல் செய்யக் கூடியதையெல்லாம் செய்து பார்ப்பார்கள். அந்த முயற்சியெல்லாம் வீணான பின், பாபம் செய்பவனைத் துறப்பார்கள். தருமத்தைத் துறக்க மாட்டார்கள். அதருமத்தில் சேருவது ஒருநாளும் கடமையாகாது என்பது அவர்களுடைய கருத்து. செய்ய வேண்டிய முயற்சியைச் செய்யாமலிருப்பது அதருமமாகும். அதையெல்லாம் செய்து விட்ட பின், தம்கடமை முன் போலவே நிற்கும். தருமத்தைப் புறக்கணித்து விட்டு அண்ணனுக்காகத் தம்பியோ தம்பிக்காக அண்ணனோ அதருமத்தில் பங்கு எடுப்பது சரியாகாது என்பது அவர்களுடைய முடிவாகும்.


ராமாயணத்தில் கும்பகர்ணனும் விபீஷணனும் இந்த இரண்டு பட்சத்திற்கும் சிறந்த விளக்கங்களாக அமைந்து நிற்கிறார்கள்.


“சீதையை அபகரிக்கலாம், வா. தண்டகாரண்யம் போவோம்” என்று ராவணன் எவ்வளவு வேண்டிக் கொண்டிருந்தாலும் விபீஷணன் போயிருப்பானா? போயிருக்க முடியுமா? போயிருந்தால் யாராவது விபீஷணனைப் புகழ்ந்திருப்பார்களா?


“இப்போதாவது சீதையைத் திருப்பிக் கொடு. க்ஷேமமாக இருப்பாய். ராமன் மன்னிப்பான். அதுவே தருமம்” என்று சொல்லிப் பார்த்தான். கேட்கவில்லை. உண்மையில் பாபத்தை வெறுக்கும் ஒரு ஆத்மாவுக்குப் பிடிவாத மூர்க்கத்தில் நின்ற ராவணனை விட்டு விலகுவதை விட வேறு வழியிருக்கவில்லை.


ஆகையால் விபீஷணனைக் குற்றம் சொல்லுவது தவறு. நமக்குள் தரும உணர்ச்சி ஓரளவு குறைவாக இருப்பதாலேதான் குற்றம் சொல்லுவோம்.


ஆயினும் கும்ப கர்ணனைக் குற்றம் சொல்லலாமா? அதுவும் முடியாது. ரத்த பாசத்தால் இழுக்கப்பட்டுத் தன் உயிரைத் தியாகம் செய்தான். அவ்வாறே மாரீசனும் செய்தான். கும்பகர்ணனைப் பழிக்க முடியாது என்பதால் விபீஷணன் செய்தது குற்றமாகாது. தருமத்துக்கு விரோதமாகவே பேசுவதில் சிலருக்கு இந்தக் காலத்தில் அதிக ருசியானபடியால் இந்த விஷயத்தை இங்கே இவ்வளவு நீட்டி எழுத வேண்டியதாயிற்று.


பாபம் செய்தால் நண்பர்களுடைய நட்பையும் சுற்றத்தாருடைய துணையையும் கட்டாயமாக இழப்போம் என்கிற பயம் மக்களுக்கு இருக்க வேண்டும். எப்படியாயினும் இவர்கள் நமக்குத் துணையாகவே இருப்பார்கள். கைவிட மாட்டார்கள் என்கிற தைரியத்தைக் கொடுத்து விட்டோமானால் உலகத்தில் பாபத்தைத் தடுப்பது மிகக் கஷ்டமாகும். சாதாரணமாகவே மக்களைப் பாபத்தில் இழுக்கும் வேகங்களுக்கு பலம் அதிகம். அதற்கு இந்தத் துணையும் சேர்ந்து விட்டால் வெகு மோசமாகும். இதை நினைவில் வைத்துக் கொள்ளாமல் சிலர் வாதாடுகிறார்கள். “குலத் துரோகி” என்று ராவணன் மட்டும் சொல்லவில்லை. ராவணனுக்குப் பின் நம்மில் பலரும் விபீஷணனைக் குறித்து அவ்வாறே குறை சொல்லுகிறார்கள். முக்கியமாகத் தங்களுடைய தவறான முயற்சிகளுக்கு, தங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களுடைய துணையை எப்படியாவது அடையவேண்டும், அதற்கு இடைஞ்சல் ஏற்படக் கூடாது என்று விரும்புகிறவர்கள் எல்லாரும் விபீஷணனைப் பாவி என்றும் துரோகி என்றும் சொல்லுவது வழக்கம். 'குலத் துரோகி' என்கிற பழிச் சொல்லுக்குப் பயப்படாமல் விபீஷணன் அதருமத்தினின்று விலகினான். விலகிய பிறகும் விபீஷணன் பாடு கஷ்டமாகத் தான் இருந்தது. நடந்ததைக் கேளுங்கள்.

*

கடலின் வடக்குக் கரையில் நின்ற வானரத் தலைவர்கள் திடீர் என்று ஆகாயத்தில் ஒரு பிரகாசத்தைக் கண்டார்கள். பொன் முடி கொண்ட மேருமலை போல் மேலே ஆகாய வீதியில் ஒரு ஜோதி ஜொலிப்பதைக் கண்டார்கள். மேகங்களினிடையில் மின்னும் மின்னல் மின்னின பிறகு மறைந்து போகாமல் அப்படியே ஆகாயத்தில் நின்ற மாதிரி ஜொலித்தது. பார்த்ததில் பெரு வடிவங்கள் கொண்ட ஐந்து ராக்ஷசர்கள் நிற்பதைக் கண்டார்கள். வானரப் படைத் தலைவனும் அரசனுமான சுக்ரீவன் இதைப் பார்த்துவிட்டு, “சந்தேகமேயில்லை. இந்த ராக்ஷசர்கள் எங்களைக்கொல்ல லங்கையிலிருந்து வந்திருக்கிறார்கள்” என்றான்.


அரசன் இவ்வாறு சொன்னதுமே வானர வீரர்கள் மரங்களும் பாறைகளும் எடுத்துக் கொண்டு யுத்தத்துக்கு ஆயத்தமாகி, “உத்தரவு கொடுங்கள். இவர்களை இப்போதே மடக்கி வதம் செய்து பூமியில் தள்ளுவோம்” என்று கர்ஜித்தார்கள்.


இப்படி வானரர்கள் தங்களுக்குள் பேசியும் கர்ஜித்துக் கொண்டும் வந்ததைக் கேட்ட விபீஷணன், பயக்குறி ஒன்றும் காட்டாமல் வஞ்சனையற்ற உள்ளத்தோடு மேலே அனைவருக்கும் தெரியும்படியாக நிலை குலையாமல் நின்று கம்பீரக் குரலில் பேசலானான்:


“ராக்ஷச ராஜன் ராவணன் என்கிற துஷ்டனுடைய தம்பியாகிய விபீஷணன் நான் நிற்கிறேன். தடுக்க வந்த ஜடாயுவையும் கொன்று சீதையைப் பலாத்காரமாகக் கொண்டு வந்து ராக்ஷசிகளின் காவலில் வைத்திருக்கும் ராவணனுடைய தம்பி நான். ‘இந்தக் காரியம் தகாது, இவளை ராமனிடம் மறுபடியும் மரியாதையாக ஒப்புவித்துவிட்டு மன்னிப்புக் கேட்பாயாக’ என்று நான் பலவாறு வற்புறுத்தியும் அவனுடைய அழியும் காலம் நெருங்கி விட்டபடியால் நான் சொன்னதை அவன் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, சபை நடுவில் என்னை ஒரு வேலைக்கார அடிமையைக் காட்டிலும் மட்டமாகக் கருதித் திட்டி அவமானப் படுத்தினான். ஆனபடியால் இதோ வந்து நிற்கிறேன். நாடு, நகரம், மனைவி, மக்கள் அனைத்தையும் துறந்துவிட்டு ராகவனைச் சரண் அடைய வந்து நிற்கிறேன். இதைச் சீக்கிரம் திருமகள் கேள்வனுக்குத் தெரியப்படுத்தி என்னை அனுக்கிரகிப்பீர்களாக என்றான்.


உடனே சுக்ரீவன் ராமனிடம் சென்று சொன்னான் :


“ராவணனுடைய தம்பி விபீஷணன் மற்றும் நான்கு ராக்ஷசர்களுடன் வந்து தங்களைச் சரணமடைய விரும்புகிறான். ஆகாயத்தில் நிற்கிறார்கள். இதைப் பற்றி நீதி சாஸ்திரமறிந்த தாங்கள் நன்றாக ஆராயவேண்டும். இந்த அரக்கர்கள் பல வேஷங்கள் போடுவார்கள். கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தும் வேலை செய்வார்கள். துஷ்டர்களுக்குரிய எல்லா சாமர்த்தியமும் தைரியமும் பெற்றவர்கள். இவர்களை நம்பவே கூடாது. இவர்களை ராக்ஷச ராஜனான ராவணன் அனுப்பியிருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். நமக்குள் புகுந்து நம் ஒற்றுமையைக் கலைத்து விடுவதற்காக வந்திருக்கிறார்கள். அல்லது சமயம் பார்த்து நமக்குள் முக்கியஸ்தர்களைக் கொன்று விட்டுத் திரும்புவார்கள். இந்த விபீஷணன் என்ன பேசினாலும் இவன் நம்முடைய பரம சத்துருவின் சொந்தத் தம்பி என்பதை நாம் மறக்கக் கூடாது. பிறப்பில் துஷ்டப் பிறப்பான ராக்ஷச ஜன்மம். இவனை நாம் எப்படி நம்பலாம்? இது ராவணனுடைய சூழ்ச்சியே. சந்தேகமில்லை. இவனையும் இவன் துணைவர்களையும் வதம் செய்வதே நலம். இவனை நமக்குள் சேர்த்துக் கொண்டோமானால் சமயம் பார்த்து நம்மை வஞ்சிப்பான். நம்மை அழித்து விட்டுத் திரும்புவான். துஷ்டனும் தயையில்லாதவனுமான ராவணனுடைய தம்பியாகிய இந்த அரக்கனையும் இவன் கூட வந்திருக்கும் துணையாட்களையும் உடனே வதம் செய்ய உத்தரவு தாருங்கள்.”


அரக்கனைக் கண்டு ரோஷம் மேலிட்டு சுக்ரீவன் இப்படித் தன் அபிப்பிராயத்தை மறைக்காமல் தெரியப் படுத்திவிட்டு ராமனுடைய உத்தரவை எதிர்பார்த்து நின்றான்.


வானர ராஜன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ராமசந்திரன், பக்கத்தில் நின்ற ஹனுமான் முதலிய வானர சிரேஷ்டர்களைப் பார்த்து, “நீதி சாஸ்திரம் அறிந்த அரசன் சொன்னதையெல்லாம் கேட்டீர்கள். ராவணனுடைய தம்பி வந்து நிற்கிறான். அவனைப் பற்றி உங்கள் அபிப்பிராயத்தையும் கேட்க விரும்புகிறேன். நெருக்கடியான சமயங்களில் நண்பர்கள் சுற்றத்தார் இவர்களுடைய யோசனை மிகவும் முக்கியம். உள்ளத்தில் தோன்றுவது போல் கூச்சமின்றிச் சொல்லுங்கள்” என்றான்.


அவ்வாறே ஒவ்வொருவரும் தத்தம் அபிப்பிராயத்தைச் சொல்லத் தொடங்கினார்கள்.


வானர யுவராஜனான அங்கதன் சொன்னான்: “இவன் நம்முடைய பகைவர் கூட்டத்திலிருந்து வந்திருக்கிறான். தானாக வந்தானோ பகைவனால் அனுப்பப்பட்டு வந்தானோ நமக்குத் தெரியாது. இவனைத் தள்ளி விடுவதும் நியாயமாகாது. பரீட்சை செய்யாமல் சேர்த்துக் கொள்வதும் நம்முடைய க்ஷேமத்துக்கு அபாயம் உண்டாக்கலாம். ஆனபடியால் இவனைப் பற்றித் தீர்மானமான முடிவுக்கு உடனே வர முடியாது. வர வேண்டியதுமில்லை. எப்படி நடந்து கொள்ளுகிறானோ பார்க்கலாம். இவன் காரியங்கள் நமக்குச் சந்தேகம் உண்டாக்கினால் பிறகு தள்ளி விடலாம். நல்ல எண்ணமே அதிகமாகக் காணப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.”


இவ்வாறு வாலி புத்திரன் அங்கதன் சொன்னான்.


சரபன் சொன்னான்: “இவனை நமக்குள் உடனே சேர்த்துக்கொண்டு விட்டுப் பிறகு தீர்மானிப்பது அவ்வளவு க்ஷேமம் என்று நான் அபிப்பிராயப் படவில்லை. முதலிலேயே நமக்குள் சாமர்த்தியசாலிகளான சாரர்களை விட்டு இவனைப் பரீக்ஷை செய்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்து விடுவது நலம்” என்றான்.


ஜாம்புவான் சொன்னான்: “இத்தகையவர்களைப் பரீட்சை செய்வதால் ஒன்றும் வெளிப்படாது. மனத்தில் உள்ள கருத்தை மறைத்துக் கொண்டு வஞ்சக எண்ணத்தோடு இவன் வந்திருந்தால் பரீக்ஷை செய்து அதைக் கண்டு பிடிப்பது முடியாத காரியம். ராவணன் நமக்குத் தீராத பகைவன். அவனை விட்டு விட்டுத் திடீர் என்று வந்து விட்டதாக இவன் சொல்லுகிறான். இதை நாம் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? நாம் இன்னும் சமுத்திரம் தாண்டவில்லை. இக்கரையிலிருக்கும்போதே இவன் நம்மிடம் வந்து சரண் புகுவதற்கு என்ன காரணம்? இது ரொம்பவும் சந்தேகத்துக்கு இடம் தருகிறது. இவனுடைய கூட்டம் வஞ்சகக் கூட்டம். இவனைச் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது என் அபிப்பிராயம்” என்றான்.


மைந்தன் சொன்னான்: “சந்தேகத்தின் பேரிலேயே ஒருவனைத் தள்ளிவிடலாமா? இவனை யுக்தியாகப் பரீக்ஷை செய்தே இவனைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும். ராவணனைத் துறந்துவிட்டு வந்திருப்பதாகச் சொல்லுகிறான். இதன் உண்மையை நாம் காண முடியும். இவனுடன் சிலர் பேசிப் பார்த்து முடிவு செய்யலாம். இதற்கு வேண்டிய சாமர்த்தியம் நம்முள் சிலருக்கு இல்லாமற் போகவில்லை.”


பிறகு ராமன் அறிவுச் செல்வமாகிய ஹனுமானைப் பார்த்தான்.



Post a Comment

புதியது பழையவை