அதிகப் பார்வை

82. சரணாகதி (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

தன்னுடைய அபிப்பிராயத்தை அறிய ராமன் விரும்புவதைக் கண்டு பொருள் செறிந்த இன்சொற்களைப் பேசும் வாயு புத்திரன் சொன்னான்.


“நீர் நம்மைக் கேட்பது என்னத்திற்கு? பிரஹஸ்பதியே வந்தாலும் உமக்கு மேல் என்ன யோசனை சொல்வான்? எனக்கு முன் பேசியவர்கள் சொன்ன யுக்திகளில் நான் நன்மை காணவில்லை. சேர்த்துக் கொள்ளுவதில் அபாயமிருந்தால் அந்த அபாயம் உடனே நேரிடும். பரீக்ஷை செய்வதற்கு இடம் ஏது? தவிர, இந்த விபீஷணன் மறைந்து கொண்டு வரவில்லை. நம்முன் நேராகத்தானே வந்து பகிரங்கமாக அனைவருக்கும் எதிரில் நிற்கிறான். சாரர்கள் இவனிடம் போய் ரகசியம் தேட என்ன இருக்கிறது?


திடீர் என்று அகாரணமாகவும் அவசரமாகவும் சத்துருக் கூட்டத்திலிருந்து ஒருவன் வந்து நின்றால் அவனை எப்படி நம்பலாம் என்று சிலர் சந்தேகம் சொன்னார்கள். தன் தமையன் ராவணனுடைய துர்க்குணங்களை விபீஷணன் கண்டு அவனை வெறுத்தான் என்பதில் என்ன வியப்பு? உம்மிடம் வீரத்தையும் தருமத்தையும் பெருந்தன்மையையும் இவன் கண்டான் என்பதில் என்ன வியப்பு? ஆனபடியால் இவன் வந்த சமயமும் சந்தர்ப்பமும் என் அபிப்பிராயப்படி சந்தேகத்துக்கு இடம் கொடுக்கவில்லை.


இவனைச் சேர்த்துக் கொள்வதற்கு முன், தூதர்கள் இவனிடம் கலந்து கேள்வி மறுமொழிகளின் மூலம் இவன் குணத்தை அறிந்து கொள்ளலாம் என்று சிலர் சொன்னார்கள். ஒருவனைப் பற்றி நாம் சந்தேகிக்கிறோம் என்பது அவனுக்குத் தெரிந்து விட்டால் அவன் இயற்கைக்கு மாறாகத்தான் நடந்து கொள்வான். சுபாவப்படி பேசவோ நடந்து கொள்ளவோ அவனால் முடியாது. நாம் அவனிடம் குற்றத்தைத் தேடுகிறோம் என்கிற பயம் இருந்து கொண்டேயிருக்கும். அதுவே இயற்கைப் போக்கைத் தடுத்து விடும். வந்திருக்கும் ராக்ஷசனுடைய முகம் பேச்சு இவற்றில் எனக்கு ஒரு சந்தேகமும் தோன்றவில்லை. கவலையற்ற இவன் முகமே இவன் உள்ளத்தில் வஞ்சனை இல்லையென்பதற்கு அத்தாட்சி. நெஞ்சத்துள் இருப்பதை ஒருவன் எவ்வளவு மறைத்தாலும் அதை அவன் முகம் காட்டிவிடும். இது நீதி சாஸ்திரத்தில் கண்ட உண்மை. (அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.- குறள் 706) விபீஷணன் தங்களிடம் உண்மையாகவே சரண் புக வந்திருக்கிறான் என்பது என் அபிப்பிராயம். இப்படி அவன் வருவதில் வியப்பு ஒன்றுமில்லை. ராவணனுடைய தோஷங்களை உணர்ந்தவன். லங்கேசன் தோல்வியடைவான் என்பதைக் கண்டு கொண்டவன். தாங்கள் வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு வானர ராஜ்யம் தந்திருக்கிறீர் என்பதும் அவனுக்குத் தெரியும். அப்படியே இவனும் லங்காதிபத்தியத்தை அடையலாம் என்று வந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில் குற்றம் ஒன்றுமில்லை. சந்தேகப்படுவதற்கு இடமுமில்லை. ஆனபடியால் இவனை நாம் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் அபிப்பிராயம்.


என் புத்திக்கு எட்டிய வரையில் நான் சொன்னேன். முடிவில் தாங்கள் எப்படி நிச்சயிக்கிறீர்களோ அப்படிச் செய்வீர்களாக. தங்களுடைய யோசனைக்கு மேல் எங்கள் யோசனை என்ன இருக்கிறது?” இவ்வாறு ஹனுமான் சொல்லி முடித்தான்.


இப்படி வானரத் தலைவர்கள் விபீஷணனைப் பற்றிப் பலவிதமான யோசனைகள் சொன்னார்கள்.


சாமான்ய தருமத்தின்படி கும்பகர்ணன் நடந்து கொண்டான். அது எல்லாருக்கும் விளங்கும் விஷயம். அதில் சிக்கல் ஒன்றுமில்லை.


சாமான்ய தருமத்திற்கும் மேம்பட்டதான விசேஷ தருமத்தைத் தழுவி நடந்து கொண்டதே விபீஷணனுடைய ‘குற்றம்'. தருமத்திற்கு விருத்தமான அண்ணனுடைய காரியங்கள் விபீஷணனுடைய அந்தராத்மாவுக்குத் தந்த வேதனையை அவன் தான் உணர்வான். மற்றச் சாமான்யர்களுக்கு அது விளங்காது. அதனால் அவனுடைய நடத்தையை ராமனுடனிருந்த வானரர்களும் சரியாக உணரவில்லை. தற்காலத்திலும் விபீஷணனுடைய காரியத்தில் குற்றமில்லையென்பதை மக்கள் உணர்வது கஷ்டம். காரணங்களை எடுத்துச் சொல்ல வேண்டியதாகிறது.


வானரத் தலைவர்கள் சொன்னதையெல்லாம் ராமன் சாவதானமாகக் கேட்டான். கடைசியில் வாயு புத்திரன் சொன்னதைக் கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தான். தன் தருமத்தைத் தான் காப்பாற்றுவதில் எப்போதும் உறுதியுள்ள ராமனுக்கு ஹனுமானுடைய பேச்சு மிக்க சாந்தி தந்தது. நல்லவன் ஒருவன் தான் நடத்த வேண்டிய தருமத்துக்குப் பிறர் யோசனையும் பக்கபலமாக வந்து சேர்வதைக் கண்டால் அவன் மனத்துக்கு ஆறுதல் ஏற்படுகிறது.


“சிநேகிதன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் என்னிடம் வந்தால் அவனை நான் எப்படித் தள்ள முடியும்? இது என்னுடைய தருமம். எனக்கு நண்பர்களாக அமைந்து எனக்காகப் பாடுபடும் நீங்கள் அனைவரும் இதை அறிய வேண்டும். 'சரணம்' என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்தால் அவனிடத்தில் காணப்படும் குற்றங்களைப் பொருட்படுத்தக்கூடாது.”


இப்படி ராமன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவன் சமாதானப்படவில்லை.


“இந்த ராக்ஷசன் நல்லவனாகவே இருக்கலாம். ஆனால் தன் சொந்த அண்ணன் ஒரு பெரிய ஆபத்தில் சிக்கிய சமயத்தில் அவனைக் கைவிட்டு இங்கே வந்திருக்கிறான். இத்தகைய ஒருவனுக்குச் சமயத்தில் நம்மையும் கைவிடுவதில் ஒரு கஷ்டமுமிராது. தன் தமையனுக்குச் செய்ததை நமக்கும் ஏன் செய்ய மாட்டான்?” என்று கேட்டான்.


சுக்ரீவன் இதைச் சொன்னபோது ராமன் லக்ஷ்மணனைப் பார்த்து, தெரிந்தும் தெரியாததுமான ஒரு சிறிய புன்சிரிப்புச் செய்தான் என்கிறார் முனிவர் வால்மீகி. தன்னுடைய கதையையே மறந்துவிட்டு சுக்ரீவன் பேசியதை முனிவர் இப்படி ரஸோக்தியாகக் காட்டுகிறார்.


சக்கரவர்த்தித் திருமகன், “நீர் சொல்வதை நான் உணர்வேன். ஆயினும் நான் சொல்வதைக் கேட்பீர். அரச பதவியிலிருப்பவர்கள், அண்ணன் தம்பி தாயாதிகள் அடுத்த தேசத்து ராஜாக்கள் இவர்களை எப்போதுமே சந்தேகப்படுவது சகஜம். சந்தேகப்படாத நல்லவர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலோர் தங்களைக் கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என்றே எண்ணுவார்கள். ராவணன் விபீஷணனை இப்படிச் சந்தேகித்து நிந்தித்ததில் என்ன ஆச்சரியம்?


இனி லங்கையிலிருந்தால் தனக்கு அபாயம் என்று விபீஷணன் பயப்படுவதும் சகஜமே. ஆனபடியால் அவன் நம்மிடம் சரண் புக வந்ததில் வஞ்சனை ஒன்றுமில்லை என்பது என் அபிப்பிராயம். தவிர ராஜ்யத்தில் ஆசை வைத்தே வந்ததாகவும் இருக்கலாம். ராவணன் அழிவான். நாம் வெற்றி பெறுவோம். அதனால் அண்ணனுடைய ராஜ்யத்தைத் தான் அடையலாம் என்றே நம்மிடம் வந்திருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இதிலும் என்ன பெரிய குற்றம்? லக்ஷ்மணா! எல்லாரும் நம்முடைய பரதனைப் போல் இருப்பார்களா?” என்றான்.


இப்படிச் சொல்லி விட்டு ஒரு கணம் ராமன் பரதனை நினைத்துத் தியானத்தில் மூழ்கினான். “என்னைப் போன்ற பாக்கியவான் யார் உண்டு உலகத்தில்? பரதனைப் போன்ற ஒரு சகோதரனைப் பெற்றேன். நான் காடு சென்ற துக்கத்தினால் தகப்பனார் உயிரையே துறந்து விட்டார். அத்தகைய பிரியமான தகப்பனை நானும் லக்ஷ்மணனும் பெற்றோம். உங்களைப் போன்ற நண்பர்களையும் என்னைத் தவிர வேறு யார் பெறுவார்?”


கண்களில் நீர் கலங்க இவ்வாறு சொல்லி விட்டு மறுபடியும் விஷயத்தைப் பற்றிப் பேசினான். “ராவணனைக் கைவிட்டது போலவே விபீஷணன் நம்மையும் கைவிடுவான் என்கிற வாதத்தில் நான் நியாயம் காணவில்லை. நம்மைக் கைவிடுவதற்கு என்ன காரணம் விபீஷணனுக்கு உண்டாகும்? அந்த ராஜ்யத்தில் நாம் ஆசை வைத்திருக்கிறோமா? இல்லை. நாம் வெற்றி அடைந்தால் தானே இவனுடைய ஆசை நிறைவேறும்? இந்தக் காரணங்களால் நாம் இந்த விபீஷணனைச் சேர்த்துக் கொள்ள மறுத்து விடுவது தவறாகும். நான் சொன்ன இவையெல்லாம் நீதி சாஸ்திர விஷயம்.


உண்மையில் நல்லவனோ கெட்டவனோ ஒருவன் 'சரணம்' என்று என்னிடம் வந்தால் அவனை நான் தள்ளிவிட முடியாது. இது என் பிறவித் தருமம், அதனால் நான் நஷ்டமடைந்தாலும் அதை நான் பொருட் படுத்தமாட்டேன். என் உயிருக்கு அதனால் அபாயமாயினும் இந்த தருமத்தை நான் காப்பாற்றித்தான் ஆக வேண்டும். விட்டுவிட மாட்டேன். இவனால் என்ன அபாயம் எனக்கு உண்டாக முடியும்? இதற்கு நான் பயப்படவில்லை. ராவணனே வந்து சரணம் என்றாலும் பரீட்சை செய்யாமல் ஒப்புக் கொள்வேன். அப்படியிருக்க அவன் தம்பியை நான் எப்படித் தள்ளுவேன்? போய் விபீஷணனை அழைத்து வாருங்கள்” என்றான் ராமன்.


“ராமசந்திரனே! நான் தெளிந்தேன்! அழைத்து வருகிறேன். விபீஷணனும் எங்களைப்போல் உமக்குப் பிரிய நட்பு கொண்டவன் ஆகுக!” என்று சொல்லி சுக்ரீவன் விபீஷணனிடம் சென்றான்.

*

ராவணனைத் துறந்து வந்த விபீஷணனைச் சக்கரவர்த்தித் திருமகன் தன் படைக்குள் சேர்த்துக் கொண்ட கட்டமானது வைஷ்ணவ சம்பிரதாயத் தலைவர்களுக்குப் பாரதத்தில் கீதையைப் போலவே ஒரு தனி சாஸ்திரமாய் வழங்கி வருகிறது. 'எம்பெருமானை யார் சரண் புகுந்தாலும் தோஷங்களைப் பாராமல், சந்தேகம் கிளப்பாமல் ஒப்புக்கொள்வான். சகல தோஷங்களும் அந்தச் சரணாகத முயற்சியிலேயே வெந்து சாம்பலாகிப் போம்' என்கிற தத்துவத்துக்கு இந்த விபீஷண கட்டம் சாஸ்திரமாக அமைந்துவிட்டது. பெரும் பாவமோ வேறு குற்றமோ செய்தவர்கள், அபவாதத்துக்கு ஆளாகித் தவிக்கிறவர்கள், எல்லாரும் இந்த சரணாகதக் கொள்கையை அமிருதமாகக் காண்பார்கள். சரணாகதி செய்தவனுக்கு உய்வு உண்டு, எத்தகையவனுக்கும் உய்வு உண்டு என்பது வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு உயிர்நாடி.


'வைஷ்ணவ சம்பிரதாயத்'துக்கு என்று சொன்னேன். தவறு. நம்முடைய நாட்டில் மக்கள் அனுசரித்து வரும் எல்லாச் சம்பிரதாயத்துக்குமே இது உயிர்நாடி. ஏன்? உலகத்தில் மக்கள் அனுசரித்து வரும் சகல மத சம்பிரதாயங்களுக்குமே இது உயிர் நாடி என்றும் சொல்லலாம். ஒவ்வொரு மார்க்கத்திலும் போதகர்கள் இதையே அதிகமாக வற்புறுத்திச் சொல்வார்கள். 'பயப்படாதே, கவலைப்படாதே, எல்லா பாபங்களையும் நான் தீர்ப்பேன்' என்று அருச்சுனனுக்கு மட்டும் அல்ல கண்ணன் சொன்னது. உலகத்தில் எந்தப் பிரதேசத்தில் அந்தக் கண்ணன் அவதரித்து இறங்கி நின்ற போதும், இதையே சொல்லி வந்திருக்கிறான்.


ராமாயணத்தில் ராவணன் தம்பியைச் சக்கரவர்த்தித் திருமகன் சேர்த்துக் கொண்ட வால்மீகி சித்திரத்தை இரண்டு கூறாகப் பிரித்துக் கொள்ளலாம். நீதி சாஸ்திரப்படி பகைவருடைய கூட்டத்திலிருந்து வந்த ஒருவனைச் சேர்த்துக் கொள்வதற்கு முன் என்ன ஆராய வேண்டுமோ, எப்படி ஆராய வேண்டுமோ அதை எடுத்து முனிவர் பல வழியில் காட்டியிருக்கிறார். வானர ராஜன் வாய் வழியும், சம்ஸ்கார ஸம்பன்னனான, நல்ல பண்பாட்டுக்குச் சிகரமான ஹனுமான் வாய் மொழியாகவும், தருமத்தில் ஸ்திரமாக நிற்கும் ஸ்ரீராமன் வார்த்தையாகவும், சுருக்கமாகவும் தெளிவாகவும் காட்டியிருக்கிறார்.


நீதி சாஸ்திர விளக்கத்துடன் ராமனுடைய சம்ஸ்காரம், அதாவது பயிற்சியாலும், சகஜமாகவும் ஒருவன் பெற்ற நற்குணத்தையும் காண்கிறோம். “என்னுடைய தருமம் யார் சரண் புகுந்தாலும் 'இல்லை போ' என்று என்னால் சொல்ல முடியாது!” என்று ராமன் சொன்னான். இதுவே ராமசந்திரனுடைய தருமம். 'ராவணனே வந்து சரணம் என்றால் தள்ளுவேனா?' என்று கேட்கிறான் சுக்ரீவனை.


ராமசந்திரனை ஈசுவர அவதாரமாக வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வாக்கியம் ஒரு தனி சாஸ்திரமாகிவிட்டது. பின்னால் கீதையில் 'கவலைப் படாதே, மா சுச:' என்று கண்ணன் சொல்லி முடித்த. சாஸ்திரத்தையே சக்கரவர்த்தித் திருமகனும் விபீஷண கட்டத்தில் சுக்ரீவனுக்குச் சொன்னான். பாவங்கள் மலிந்த உலகத்துக்கு உயிரும் ஒளியும் தரும் மருந்து.



Post a Comment

புதியது பழையவை