அதிகப் பார்வை

83. சேது பந்தனம் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

இதன் மத்தியில் ராவணன் ஒரு பைத்தியக்காரப் பிரயத்தனம் செய்தான். ஒரு சாரனை அனுப்பி சுக்ரீவனைக் கலைக்கப் பார்த்தான். சுகன் என்ற அந்த அரக்கன் ஆகாய மார்க்கமாக வந்து சுக்ரீவனைத் தனியாகக் கண்டு அவனுக்குச் சொன்னான்:


“லங்கேசனான ராவணன் உம்மிடம் அன்பு கூர்ந்து என்னை அனுப்பியிருக்கிறான். நீரும் அரசன் ராவணனும் அரசன். ஊரிலிருந்து துரத்தப்பட்ட இந்த ராமனும் அரசன். ஊரிலிருந்து துரத்தப்பட்ட இந்த ராமனுடன் நீர் சேர வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை. ராமனுடன் சேர்ந்து ராவணனுடைய தீராப் பகையை ஒரு அரசனாகிய நீர் ஏன் சம்பாதித்துக் கொள்ள வேண்டும்? நீர் ராவணனுக்குத் தம்பியைப் போன்றவர். ராமனுடைய மனைவியை ராவணன் விரும்பி அவன் ஏதேனும் செய்தால் அது உமக்கு என்ன சம்பந்தம்? உமக்கு அதனால் என்ன நஷ்டம்? நீர் சரியாக யோசித்து விவேகமாக நடந்து கொள்வீராக. நீரும் உம்முடைய படையும் கிஷ்கிந்தைக்கு உடனே திரும்பிப் போவதே விவேகம்.”


இவ்வாறு சுக்ரீவனைக் கலைக்கப் பார்த்தான் ராவணன்!


சுக்ரீவன் சாரனுக்குச் சொன்னான்: “ஹே நீசனே! போய் உன் அரசனுக்குச் சொல்லு. 'நீ எனக்கு அண்ணனுமல்ல, தம்பியுமல்ல. நீ துஷ்டன். ராமன் என் நண்பன். அவனுக்கு நீ சத்துருவானாய்: ஆனபடியால் எனக்கும் நீ சத்துருவானாய். நீயும் உன் கூட்டமும் சீக்கிரத்தில் அழியப்போகிறீர்கள். மூடனே! ராமனை விரோதம் செய்து கொண்டு எதிர்த்து நீ பிழைக்கப் போவதில்லை. இதைத் தெரிந்து கொள். நீ எங்கே ஓடி மறைந்தாலும் பிழைக்கமாட்டாய்!' இவ்வாறு நான் சொன்னேன் என்று உன் அரசனுக்குச் சொல்.”


இவ்வாறு சுக்ரீவன் அந்தச் சாரனுக்குச் சொல்லியதும் வானரர்கள் அவனைப் பிடித்து இம்சை செய்தார்கள். ராமன் உத்தரவால் அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டார்கள். அவனும் லங்கைக்கு வேகமாய்த் திரும்பிப் போய்விட்டான்.


விபீஷணன் சரண் புகுந்தவுடன் ராமனுடைய உத்தரவின் பேரில் லக்ஷ்மணனும் சுக்ரீவனும் அங்கேயே விபீஷணனுக்கு லங்கா ராஜ்யப் பட்டம் தந்து சமுத்திர ஜலத்தைக் கொண்டு பட்டாபிஷேகமும் செய்து விட்டார்கள். விபீஷணன் ராமனுடன் நட்புப் பிரதிக்ஞை செய்து விட்டான். ராவணனைக் கொல்லாமல் நான் அயோத்திக்குத் திரும்புவதில்லை என்று ராமனும் சபதம் செய்தான்.


பிறகு விபீஷணனும் வானர ராஜனும் லக்ஷ்மணனும் சமுத்திரத்தைத் தாண்டுவதைப்பற்றி யோசித்தார்கள். முதலில் சமுத்திர ராஜனை வேண்டிக்கொள்வதே மேல் என்று எல்லாரும் தீர்மானித்து ராமனிடம் சொன்னார்கள். ‘அதுதான் என் எண்ணமும்’ என்று ராமன் சொன்னான். கடற்கரையில் தர்ப்பைப் புல் பரப்பி சாஸ்திர முறைப்படி ராமசந்திரன் சமுத்திர ராஜனை உத்தேசித்து உபவாசம் துவக்கினான்.


மூன்று நாட்கள் அன்ன ஆகாரமின்றி மௌனமாக விரதமிருந்து ராமன் சமுத்திர ராஜனைப் பூஜித்தான். சமுத்திரம் கேட்கவில்லை. பிறகு ராமன் எழுந்து இனித் தன்னுடைய சக்தியைப் பிரயோகித்தே இந்தக் காரியத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து வில்லும் மந்திரபூர்வமாக எறிய வேண்டிய பாணங்களும் கொண்டு வரும்படியாக லக்ஷ்மணனுக்குச் சொன்னான்.


சமுத்திரத்தின் மேல் பாணப் பிரயோகம் செய்ய ஆரம்பித்தான். பூமி அதிர்ந்தது. கடலில் கலக்கம் ஏற்பட்டது. சமுத்திர ராஜனால் அதைத் தாங்க முடியவில்லை. மேரு மலைமேல் உதய சூரியன் ஜொலிப்பது போல் சமுத்திர ராஜன் பிரசன்னமாகி நின்றான்.


ராமனுக்குக் கைகூப்பி, “ராமசந்திரனே! இயற்கை விதிப்படி நான் நடந்துகொள்ள வேண்டுமல்லவா? தாண்ட முடியாத ஆழமும் நீர் வடிவமும் கொண்டு ஜலத்தில் வசிக்கும் பெரும் பிராணிகளுக்கும் சிறு பிராணிகளுக்கும் வாழுமிடமாக நான் இருக்க வேண்டிய நியமத்தை நான் எவ்வாறு புறக்கணிக்க முடியும்? கடந்து செல்ல முடியாதபடி அலைகளுடன் வழியடைத்து நிற்பது என் தருமம். அதை நான் விட்டு விட இயலாது. வானரர்களைக் கொண்டு கற்பாறைகளும் காட்டு மரங்களும் போட்டு அணை கட்டச் சொல்வீர். அதற்கு இடம் தருவேன். வேலைக்குக் குந்தகமின்றியும் போட்ட கல்லும் மரமும் நீரில் தங்கும்படியும் நான் உதவுவேன். இவ்வளவே நான் செய்யமுடியும். வானரர்களில் நளன் இருக்கிறான். விசுவகர்மாவின் புத்திரனான அவன் இந்த அணையைத் திறமையாக நிர்மாணிப்பான். உமக்கு வெற்றி ஆகுக!” என்றான்.


ராமசந்திரன் உத்தரவின் பேரில் சேதுபந்தன காரியம் துவக்கினார்கள். லக்ஷக்கணக்கான வானரர்கள் பெரிய ஆரவாரத்துடன் வேலை செய்து ஐந்து நாட்களில் அணை கட்டி முடிந்தது. இந்த இடத்தில் வால்மீகி முனிவர் அணைக்கட்டு வேலையை விஸ்தாரமாகச் சித்திரித்து விளக்குகிறார். தற்காலத்தில் பெரும் அணைகள் கட்டும் அமர்க்களமாகவே முனிவரும் சேதுபந்தனத்தைப் பாடியிருக்கிறார். வானரர்கள் காடுகளிலும் மலைகளிலும் சென்று ஆயிரக்கணக்கான மரங்களைப் பிடுங்கிப் பெயர்த்துச் சமுத்திரக் கரைக்கு இழுத்து வந்து போட்டார்கள். வேறு பெரிய வானரங்கள் மலைகளையும் பாறைகளையும் பெயர்த்துத் தூக்கி வந்து போட்டார்கள். மரங்களும் மலைகளும் கடலில் விழும்போது அலைகள் மேலே கிளம்பி ஆகாயத்தை எட்டிக் குதித்தன. நளன் நின்று எல்லா வேலைகளையும் பார்த்து வந்தான். கூட்டம் கூட்டமாக வந்து நின்ற வானரர்களிடமிருந்து வானரத் தலைவர்கள் வேலை வாங்கினார்கள். மலைபோன்ற கற்களையும் மகா விருக்ஷங்களையும் போட்டு மேலே கட்டைகளும் புல்லும் பரப்பிச் சமன் படுத்தினார்கள். அணை வேலையின் சப்தம் சமுத்திர ஓசையைச் சிறிதாக்கி விட்டது.


அணை கட்டி முடிந்தது. ஆகாயத்தில் ஸ்வாதி நட்சத்திர வீதியைப்போல் கடலின் மத்தியில் இந்தப் புதுச் சேதுவானது, பிரகாசித்தது. மேலே தேவ கணங்களும் பூமியில் வானரர்களும் வெற்றி கோஷம் செய்தார்கள். “சத்துருவை ஜெயித்துப் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாயாக!” என்று ராமனை தேவர்களும் ரிஷிகளும் ஆசீர்வாதம் செய்தார்கள்.


ஆஞ்சநேயன் ராமனைத் தன் தோள் மேல் தூக்கிச் சென்றான். அப்படியே அங்கதன் லக்ஷ்மணனை எடுத்துச் சென்றான். வானரப் படை கடலைக் கடந்துவிட்டது.


இவ்விடத்தில் எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு வேதாந்த விஷயம் உண்டு. வில் பிடித்து நின்ற ராகவனைக் கை குவித்து வணங்கிச் சமுத்திர ராஜன் சொன்னான் :


“அன்புக்குரிய ராமசந்திரனே! பூமியும் வாயுவும் ஆகாசமும் நீரும் நெருப்புமாகிய ஐம்பூதங்களும் தத்தம் சுபாவ நியதியில் நிற்கின்றன. அவைகளுக்கு இடப்பட்ட மாறாத அநாதி நெறியில் அவை செல்கின்றன. காமலோப மயக்கங்களால் அல்லது தண்டனைக்குப் பயந்து நான் என் சுபாவத்தை மாற்றிக்கொள்ள முடியுமா? ஜலமானது திணிந்து கல்லாக முடியுமா? அல்லது என் ஆழத்தை நான் மாற்றிவிட்டு நடந்து தாண்டும் ஒரு நீர் நிலையமாக நிற்க முடியுமா?”


இவ்வாறு சமுத்திர ராஜன் ராமசந்திரனிடம் மிக வினயமாகச் சொல்லிக் கொண்டான்.


முனிவர் சமுத்திர ராஜன் வாய் வழி நம்முடைய சாஸ்திரங்களின் அடிப்படையான தத்துவத்தை விளக்குகிறார். பிரகிருதிக்கும் ஈஸ்வரனுக்குமுள்ள அநாதி சம்பந்தத்தை விளக்குகிறார். ஆண்டவனுடைய நியதியே பிரகிருதி. பிரபஞ்சம் தானாக நடப்பதற்காக இயற்கை நியதிகளை ஆண்டவன் உண்டாக்கி அமைத்து விட்டான். அப்படியே கர்ம விதியும். பஞ்ச பூதங்களும் உயிரற்ற பொருள்களும் ஜீவன்களும் இந்த சாசுவத நியதியின் படியே நடந்து கொள்ளும்.


மற்றச் சமயங்களில் ஆண்டவனுடைய உண்மையையும் பிரபாவத்தையும் நிரூபிப்பதற்காக பிரகிருதி விதிகளை மக்கள் காணும்படி திடீர் என்று எதிர்பாராத படி மாற்றி வியக்கச் செய்ததாகச் சொல்லுவார்கள். சுபாவத்துக்கு வியதிரேகமான நிகழ்ச்சிகளை வைத்து ஈசுவர நிரூபணம் செய்வார்கள். நம்முடைய சாஸ்திரம் அப்படிச் செய்வதில்லை.


ஒரு மலையைக் கண்ணன் தூக்கினான் என்றால் அது வேறு விஷயம். அதனால் அவன் ஆண்டவன் ஆகிவிட்டான் என்று சொல்லவில்லை. ராவணனும் கைலாசத்தைத் தூக்கினான். ராவணன் ஆண்டவன் ஆகிவிடவில்லை.


ஹிந்து சாஸ்திரத்தின்படி ஈசுவரனுடைய சங்கற்பமே இயற்கையும், காரண காரிய விதியும், பஞ்ச பூதங்களின் மாறாத நியதிகளும், கர்ம விதியும். இது பகவத் கீதை 9-வது அத்தியாயத்தில் விளக்கப்பட்டு உபதேசிக்கப்படுகிறது. வால்மீகி முனிவர் இதைச் சமுத்திர ராஜன் பேச்சில் சுருக்கமாக வைத்து முடித்தார்.



Post a Comment

புதியது பழையவை