மால்யவான் என்ற விருத்தனான ராக்ஷசன் ராவணனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.
“உன்னுடைய நல்ல காலம் முடிந்தது. நீ செய்து வந்த பாப காரியங்களால் உன் தேஜஸ் குறைந்து போயிற்று. நீ பெற்றிருக்கும் வரங்களை இனி நம்பாதே! சமாதானம் செய்துகொள். இப்போது வந்திருக்கும் சேனையைப் பார். மானுடர்களும் வானரர்களும் கரடிகளுமான சேனை பயங்கரமாக வந்து நிற்கிறது. சேதுபந்தன அற்புதத்தைப் பார். மகா விஷ்ணுவே மனித சரீரத்தில் வந்துவிட்டான் என்று எண்ணுகிறேன்.” இவ்வாறு கிழவன் சொன்னான்.
இதையெல்லாம் கேட்க ராவணன் விரும்பவில்லை. “நீர் சொல்லும் சொற்கள் எனக்குக் கர்ண கடோரமாக இருக்கின்றன. நீர் சத்துருவோடு சேர்ந்து விட்டீர் போலிருக்கிறது. மனித ஜாதிக்கு பலம் ஏது? தகப்பனால் காட்டுக்குத் துரத்தப்பட்ட ஒரு அற்ப மனிதனைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறீர்கள். குரங்குகளையும் கரடிகளையும் நம்பி ஒரு மனிதன் வந்திருக்கிறான். இவன் உங்களுக்குப் பெரும் பயத்தைத் தருகிறான். உங்களைப் பார்த்து எனக்கு வெட்கமாக இருக்கிறது.
என் மேல் உங்களுக்குப் பொறாமையா? ஏன் இப்படி என்னிடம் பேசுகிறீர்கள்? நான் ராமனுக்கு வணங்க முடியாது. நீதி சாஸ்திரத்தில் இது குற்றமாயிருந்தால் அது என் சுபாவத்தில் ஏற்பட்ட குற்றம். அதை என்னால் மாற்ற முடியாது என்று வைத்துக் கொள்ளுங்கள். யுத்தம் செய்து மடிந்தாலும் மடிவேன். ராமனிடம் சமாதானம் கேட்கமாட்டேன்” என்றான்.
“யோசித்துச் செய்ய வேண்டியதைச் செய். லங்கேசன் வெல்க! ராவணன் வெல்க!!” என்று சொல்லிவிட்டு மால்யவான் வருத்தத்தோடு தன் வீடு திரும்பினான். இவன் ராவணனுக்குத் தாய் வழியில் பாட்டன்.
*
ராவணன் தன்னுடைய வீரர்களை அந்த அந்த இடத்துக்கு இவர் இவர் பொறுப்பு என்று அமைத்துவிட்டான். பிரஹஸ்தனைக் கிழக்கு வாயிலுக்கும், மகா பாரிசுவனையும் மகோதரனையும் தெற்கு வாயிலுக்கும், தன் மகனும் மாயங்கள் கற்ற மகாவீரனுமான இந்திரஜித்தை மேற்கு வாயிலுக்கும் காப்புப் பொறுப்பாக அமைத்துவிட்டு, வடக்கு வாயிலைத் தானே காப்பது என்று முடிவு செய்தான். மகா வீர பராக்கிரமனான விரூபாக்ஷனை நகரத்துக்குள்ளிருக்கும் சேனைக்குத் தலைவனாக நியமித்தான்.
இவ்வாறு தன் சேனையையும் வீரர்களையும் விதானப்படுத்திவிட்டுக் காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று திருப்தியடைந்தான். வினாச காலம் நெருங்கியபடியால் யார் சொல்லியும் கேட்காமல் இவ்வாறு ஏமாந்தான். மந்திரிகள் ஸ்துதியும் ஜெயகோஷமும் செய்து அரசனைச் சந்தோஷப்படுத்தி விட்டுக் கலைந்தார்கள்.
ராமனும் சுக்ரீவனும் விபீஷணனும் மற்றவர்களும் யுத்தக் கிரமத்தைப் பற்றி யோசிக்கக் கூடினார்கள். விபீஷணன் ராவணனுடைய ஏற்பாடுகளைப் பற்றிச் சாரர்கள் போய்ப் பார்த்து விட்டு வந்ததையெல்லாம் எடுத்துச் சொன்னான்.
“இப்போது ராவணன் திரட்டியிருக்கும் சேனையானது கணக்கிலும் பலத்திலும் வீரத்திலும் குபேரனை எதிர்த்த சேனையைவிடப் பெரிது என்பதை அறிவீர்களாக. ஆயினும், எனக்குச் சந்தேகமில்லை, ராமசந திரனுடைய வெற்றி நிச்சயம்” என்றான் விபீஷணன்.
ராமனும் வீரர்களை ராக்ஷசச் சேனையை எதிர்ப்பதற்குப் பிரித்து விட்டான். “நீலன் கிழக்குக்கோட்டை வாயிலில் பிரஹஸ்தனை எதிர்க்க வேண்டியது. தெற்கே மகோதரனையும் மகா பாரிசுவனையும் அங்கதன் எதிர்க்க வேண்டியது. மேற்கு வாயிலைக் காத்து வரும் மாயாவியான இந்திரஜித்தை ஹனுமானே எதிர்க்க வேண்டியது. உலகத்தை உபத்திரவம் செய்யும் ராவணனை நானும் லக்ஷ்மணனும் எதிர்த்து லங்கையில் பிரவேசிப்போம். சுக்ரீவனும் ஜாம்புவானும் விபீஷணனும் நம்முடைய சேனையுடன் இருக்கலாம்” என்று அணிவகுத்தான்.
ராமன் அன்று ராத்திரி சுவேலை மலைமேல் சேனையுடன் தங்கினான். மறுநாள் காலை எழுந்து அங்கிருந்து பார்த்தார்கள். திரிகூடமலைமேல் மனத்தைக் கவரும் அழகுடன் ஜொலிக்கும் லங்கா நகரம் ஆகாயத்திலிருந்து தொங்குவது போல் காட்சி தந்தது. கோட்டை மதிலைக் காத்து நின்ற ராக்ஷசச் சேனையின் வரிசை மற்றொரு மதிலைப் போல் காணப்பட்டது.
லங்கா நகரத்தின் மாட மாளிகைகளின் அழகையும் ஐசுவரியத்தையும் ராமன் பார்த்து, “ஐயோ, கால பாசத்தால் தூண்டப்பட்ட ஒருவனுடைய மகா பாப காரியத்தின் பயனாக இவ்வளவு ஐசுவரியமும் இந்த ராக்ஷச குலமும் அழிய வேண்டியதாயிற்று. நற் குலத்தில் பிறந்த இவன் தன் ஜன்மத்தின் பெருமையை அறிந்தும் இப்படி மூர்க்கனாகப் போய்த் தன் மரணத்தைக் கூப்பிட்டழைத்துத் தன்னைச் சேர்ந்தவர்களையும் அழிக்கிறானே!” என்று இரங்கினான்.
“நடத்த வேண்டிய யுத்தத்தைச் சரியாக நடத்தி இந்தத் துஷ்டனை அழிப்பதில் மனத்தைச் செலுத்துவோம். போரில் பெரும் குழப்பமுண்டாகும். ராக்ஷசர்கள் பல மாய வேஷம் போடுவார்கள். நம்முடைய சேனையிலுள்ள வானரர்களும் கரடிகளும் தம் சொந்த வடிவத்திலேயே நின்று யுத்தம் செய்யட்டும். ராக்ஷச ராஜன் தம்பியும் அவன் நண்பர்களும் மட்டும் என்னோடும் லக்ஷ்மணனோடும் மானிட உருவத்தில் இருக்கலாம். அரக்கர்கள் எந்த வேஷம் போட்டாலும் மனித உருவத்தையாவது வானர உருவத்தையாவது எடுக்க மாட்டார்கள். அவர்களுடைய கர்வம் அதற்கு இடந்தராது. ஒழுங்காக எதிர்த்து நின்றோமானால் வதம் செய்ய வேண்டியவர்களை வதம் செய்யலாம். துணை செய்ய வேண்டியவர்களுக்குத் துணை செய்யலாம்” என்று ராமன் சொல்லி முடித்தான்.
*
சேனையுடன் சுவேலை மலையிலிருந்து இறங்கி லங்கா நகரத்தை அடுத்த வனத்தில் பிரவேசித்தார்கள். கடலைப் போன்ற வானர சேனை வனத்தில் இறங்கியதும் அவ்விடம் வசித்து வந்த நானாவித மிருகங்களும், பட்சிகளும் பயந்து இங்கு மங்குமாய்ச் சென்றன. வனத்தின் அழகை முனிவர் தம் தனிப் பாணியில் வர்ணிக்கிறார். மேலே மலைச் சிகரத்தில் மிக பத்திரமாகக் காக்கப்பட்டு வந்த லங்கா நகரத்தையும் வர்ணிக்கிறார். மலைக் கோட்டையையும் விசுவர்கர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட திவ்விய சௌந்தர்யமான நகரத்தையும் கீழிருந்து பார்த்து ராமன் 'என்ன அழகு! என்ன செல்வம்!' என்று வியப்பில் மூழ்கினான். ராக்ஷச வீரர்களின் பலத்தையும் யுத்தப் பசியையும் கோட்டை வாயிலையும் மதிலையும் யந்திரங்களையும் பார்க்கப் பார்க்க வானரங்களின் உற்சாக வேகம் மேலும் மேலும் பொங்கிற்று.
யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சுக்ரீவன் திடீர் என்று ஒரு பாய்ச்சல் பாய்ந்து லங்கா நகரத்தின் ஒரு கோபுர மேடையில் இறங்கினான். அங்கே ராவணன் தன் பரிவாரத்துடன் திவ்விய ஆசனத்தில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு இவ்வாறு குதித்துப் பாய்ந்தான். கருத்த மேகக் கூட்டத்தைப் போலவும் சந்தியா காலச் செவ்வானம் போலவும் ராவணன் சிவந்த வஸ்திரம் போர்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஐராவதத்தின் தந்தங்களால் குத்திக் காயப் படுத்தப்பட்ட வடு அவனுடைய அகன்ற மார்பில் சந்திர பிம்பத்தைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
“ராவணா! சிக்கினாய்! ராமனுடைய தோழனும் அடிமையுமான சுக்ரீவன் நான். இன்று நீ முடிந்தாய்!” என்று அவன் மேல் பாய்ந்து அவன் கிரீடத்தைக் கீழே தள்ளி ஒரு அறை அறைந்தான். பிறகு இருவருக்கும் பெரு மல்யுத்தம் நடந்தது.
*
இருவரும் மல் யுத்தத்தில் நிபுணர்கள். அந்த சாஸ்திரத்தில் கண்ட எல்லா வித்தைகளையும் ஒருவர் மேல் ஒருவர் காட்டினார்கள். ராவணன் வெகு கஷ்டப்பட்டுப் போனான். அதனால் அவன் மாய வித்தைகளில் இறங்கினான். அப்போது சுக்ரீவன் அவனை விட்டு விட்டு ஒரே பாய்ச்சலாக ராமன் இருந்த இடம் மறுபடி வந்து குதித்தான்.
இவ்வாறு சூரிய புத்திரன் அற்புத காரியம் செய்துவிட்டு வந்ததைக் கண்ட வானரத் தலைவர்கள் தங்கள் அரசனைப் புகழ்ந்து பெரும் ஆரவாரம் செய்தார்கள்.
சுக்ரீவன் க்ஷேமமாகத் திரும்பி வந்ததைப் பார்த்த ராமன் சந்தோஷ மடைந்தான். வானர ராஜாவின் உடம்பின் பேரில் காயங்களையும் ரத்தத்தையும் பார்த்து ராமன் சொன்னான்:
“சுக்ரீவனே! உன் வீரத்தைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தோம் என்பது உண்மை. ஆயினும் இது சரியான காரியமல்ல. அரசனானவன் இப்படிச் சாகசம் செய்யக் கூடாது. யாருடனும் யோசிக்காமல் இப்படிப்பட்ட அபாய காரியத்தில் திடீர் என்று புகுந்து விட்டது சரியல்ல.”
இவ்வாறு கண்டித்ததை சுக்ரீவன் கேட்டு, “உண்மை, உங்களைக் கேட்காமல் நான் பாய்ந்து யுத்தம் செய்த முறை தவறே. சீதைக்கும் தங்களுக்கும் அபராதம் செய்த அந்தப் பாவியைப் பார்த்ததும் எனக்குப் பொங்கிய கோபத்தால் மெய்ம்மறந்து போனேன். அதனால் இப்படிச் செய்தேன்!” என்றான்.
பிறகு வானர சேனை ராமன் கட்டளையிட்ட முறையில் லங்கையை நான்கு பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டது.
அங்கதனை அழைத்து ராமன், “ராவணனிடம் தூது போய் அவனுக்குச் சொல்லுவாய்: 'மகா பாபியே! உன் காலம் நெருங்கி விட்டது. கோட்டை வாயிலில் ராமன் யுத்தத்துக்குக் காத்திருக்கிறான். தேவர்களிடம் பெற்ற வரத்தைக் கொண்டு கர்வங் கொண்டு துஷ்டனாகிப் போனாய், உலகத்தை ஹிம்சை செய்து வந்தாய். பெரும் பாப காரியங்களைச் செய்து வந்தாய். உலகம் க்ஷேமமடையும் காலம் இப்போது வந்தது. வெளியில் வந்து யுத்தம் செய்து கொல்லப் பட்டாயானால் பாபங்களினின்று பிராயச் சித்தம் அடைந்து வீரர்களுக்குரிய சுவர்க்கம் அடைவாய். உயிரின் மேல் ஆசையிருந்தால் அக்கிரமமாகத் தூக்கிப் போன சீதையைத் திரும்பி ராமனிடம் சமர்ப்பித்துவிட்டுச் சரணம் அடைவாய். உயிருடன் பிழைத்துப் போகலாம். எவ்வாறாயினும் பாபியான நீ இனி அரசனாக இருக்கத் தகுந்தவனல்ல. லங்கா ராஜ்யம் இனி விபீஷணனுடையதாகும். அரசனாக இருப்பதற்கும் ஜனங்களை ரக்ஷிப்பதற்கும் அவன் தகுதி பெற்றவன். சரணமடைந்து உயிர் தப்பும் எண்ணமில்லாவிட்டால், உடனே உத்தர கிரியைகளை முன்னதாகச் செய்வித்துக் கொண்டு உன் அருமைச்சொத்தாயிருந்தலங்கையைக் கடைசித் தடவையாக நன்றாகப் பார்த்து விட்டு விடைபெற்றுக் கொண்டு மரணத்துக்குத் தயாராக வெளியே வந்து ராமனோடு யுத்தம் செய்வாயாக!’ இவ்வாறு அரக்கனுக்குச் சொல்வாய் அங்கதனே!” என்றான்.
உடனே அங்கதன், “அப்படியே!” என்று குதித்துக் கிளம்பி மந்திரிகளால் சூழப்பட்டு உட்கார்ந்திருந்த ராவணன் முன்னிலையில் இறங்கினான்.
*
ராமன் சொன்னவண்ணம் கம்பீரமாக, “வாலி யார் என்பது உமக்குத் தெரிந்திருக்கலாம். நான் வாலியின் புத்திரன், ராமனுடைய தூதனாக வந்திருக்கிறேன். உம்முடைய பாபங்களுக்கு விமோசன காலம் நெருங்கி விட்டது. யுத்தம் செய்து வீர சுவர்க்கம் அடைவீர். ராமனும் வானர சேனையும் கோட்டை வாயிலில் காத்திருக்கிறார்கள். செய்த பாபங்களையெல்லாம் தீர்த்துக் கழுவிக் கொள்ளலாம். அப்படியில்லை, உயிரின்மேல் ஆசையிருந்தால் ராமனிடம் சரணாகதியடைவீர். இல்லையேல் யுத்தத்துக்கு எழுந்து செல்வீர். யமனிடம் போய்ச் சேரத் தயாராகப் புறப்படுவீர். பந்துக்களிடம் விடைபெற்று உத்தர கிரியைகளையும் முடித்துக் கொள்வீராக. குலத்தோடு அழிந்து போகும் காலம் நெருங்கி விட்டது. லங்கையைக் கண்ணால் பார்த்து அனுபவித்துத் திருப்தியடைவீர்!” என்றான்.
ராவணனுக்கு நெருப்பைப்போல் பொங்கியது கோபம். “பிடி! கொல், துஷ்டனை!” என்றான்.
உடனே இரண்டு ராக்ஷசர்கள் அங்கதனை இரு பக்கத்திலும் பிடித்துக் கொண்டார்கள். அவன் அந்த இரண்டு பெரும் பூதாகாரமான அரக்கர்களுடன் உயரக் கிளம்பி இருவரையும் உதறித் தள்ளி, அதற்கும் மேலே கிளம்பி மாளிகையின் விமானத்தை ஒரு உதை உதைத்து உடைத்துவிட்டு ராமன் இருந்த இடத்தை ஒரே தாவாகத் தாவி வந்தடைந்தான்.
அங்கதனுடைய காரியத்தைக் கண்டு ராக்ஷசக் கூட்டத்துக்குப் பெருந் திகில் உண்டாயிற்று. ஆனால் தங்களுடைய பயத்தை மறைத்துக் கொண்டார்கள். விமானம் உடைந்ததைக் கண்டு ராவணன் பெருமூச்சு விட்டான். அதை ஒரு துர்நிமித்தமாகக் கண்டான். அங்கதன் திரும்பி வந்ததும் ராமசந்திரன் சேனைக்கு உத்தரவு கொடுத்து விட்டான். யுத்தம் ஆரம்பித்தது.
கருத்துரையிடுக