பயங்கர வானர சேனை லங்கைக்கடியில் பூமி அதிர இறங்கி விட்டது. ஒரு பெரிய வனத்தில் சுகமாகத் தங்கிற்று. யுத்த ஆயத்தமான லங்கா நகரத்திலிருந்தும் ராக்ஷசர்களுடைய கோஷம் கிளம்பிற்று. சங்கம் பேரிகை துந்துபி முதலிய யுத்த வாத்தியங்களின் நாதம் கேட்டதும் வானரர்களுடைய உற்சாகம் இன்னும் அதிகமாயிற்று. ராமசந்திரன் சேனையை அணிவகுத்து யார் யார் எந்த எந்த ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துச் சொன்னபடி சேனை அணிவகுக்கப்பட்டு நின்றது.
லங்கையைப் பார்த்து, “ஆஹா! லக்ஷ்மணா! இந்த நகரத்தின் அழகைப் பார்த்தாயா?” என்றான் ராமன்.
லங்கையைக் கண்டதும் ராமனுடைய உள்ளம் சீதையிருந்த இடம் சென்றது. தானும் படையும் வந்தது இப்போது அவளுக்குத் தெரிந்திருக்குமல்லவா, தைரியம் அடைந்திருப்பாளல்லவா, என்றெல்லாம் எண்ணினான். ஆயினும் அதைப்பற்றி ஒன்றும் பேசாமல் சேனையை அணிவகுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான்.
*
சுகன் என்ற ஒரு ராக்ஷஸ சாரன் ராவணனிடம் சென்று, “தாங்கள் சொல்லியனுப்பியபடி என் காரியத்தைச் செய்தேன். ஆனால் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. என்னைத் துன்பப்படுத்தித் திருப்பியனுப்பி விட்டார்கள். விராதன், கபந்தன், கரன் முதலியவர்களை விளையாட்டாகக் கொன்ற ராமன், சுக்ரீவனுடைய சேனையுடன் சீதையைச் சிறை வைத்திருக்கும் இடத்தை அறிந்துகொண்டு லங்கையை அடைந்து விட்டான். கரடிகளும் வானரங்களும் கடலைத் தாண்டிவந்து யுத்தத்துக்குத் தயாராய் லங்கைக்கு முன் நிற்கிறார்கள். தரை காணாமல் சேனை நின்றுவிட்டது. இனிப் பேச்சில் ஒன்றும் பிரயோசனமில்லை. அவர்களுக்கு நம் பேரில் உண்டாயிருக்கும் துவேஷம் யுத்தத்தினால்தான் தீர வேண்டும். வேறு வழியில்லை. மன்னனே! யோசனை செய்து என்ன செய்ய வேண்டியதோ அதைச் செய்வீராக.”
இவ்வாறு சொல்லிவிட்டு முடிவில் மெதுவாக, “சீதையைத் திருப்பித் தந்துவிட்டால் பிழைக்கலாம்” என்று சொன்னான்!
ராவணனுக்குக் கோபம் பொங்கிற்று. “என்ன சொன்னாய்? சீதையைத் திருப்பித் தருவது என்கிற பேச்சு யாரும் என்னிடம் பேச வேண்டாம். என்னுடைய சக்தியை அறியாமல் இந்தப் பேச்சுப் பேசுகிறீர்கள். தேவ தானவ கந்தர்வ யக்ஷர்கள் யார் வந்தாலும் என்னால் வதம் செய்யப்படுவார்கள். இந்திரனே வந்தாலும் சரி, யமனே வந்தாலும் சரி, என் பாணங்களால் எரிக்கப் படுவார்கள். பார், இந்த அற்ப ராமனும் அவனுடைய சேனையும் எப்படி துவம்சம் ஆகப் போகிறது!” என்றான்.
ராவணன் உண்மையில் அவ்வாறே நம்பினான். தன்னுடைய பூர்வ சரித்திரத்தை எண்ணி எண்ணி அடைந்திருந்த கர்வத்தினால் புத்தியிழந்து மூர்க்கனாகிப் போய்விட்டான்.
பிறகு இரண்டு அமைச்சர்களை அழைத்துவரச் சொல்லி அவர்களுக்கு உத்தரவிட்டான். “லங்கைக்குச் சேது கட்டிவிட்டு, பெருஞ்சேனை வந்து இறங்கியதாகச் சாரர்கள் சொல்லுகிறார்கள். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆயினும் காரியம் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நீங்கள் சென்று சத்துரு சைன்யத்தை நன்றாகப் பார்த்து எனக்கு அவர்கள் பலத்தின் விவரத்தைச் சொல்ல வேண்டும்!” என்று சொல்லி அனுப்பினான்.
அப்படியே அவர்களும் வானர வடிவம் தரித்து வானர சைன்யத்திற்குள் பிரவேசித்து, சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். விபீஷணன் இவர்களுடைய மாறு வேஷத்தைக் கண்டுகொண்டு அவர்களைப் பிடித்து ராமன் முன் கொண்டு போய் நிறுத்தினான்.
“சுவாமி! நாங்கள் தூதர்கள். எங்களுடைய அரசனால் அனுப்பப்பட்டோம். எங்களை விட்டுவிடுங்கள்” என்றார்கள்.
ராமன் சொன்னான்: “இவர்களுக்கு நம்முடைய சேனையைக் காட்டி, எல்லாம் பார்த்துப் போகச் சொல்லுங்கள். இவர்களை விட்டு விடுங்கள்! ஏ, ராக்ஷச தூதர்களே! நீங்கள் திரும்பிச் சென்று ராவணனுக்குச் சொல்லுங்கள். 'எந்தப் பலத்தை நம்பி நீ சீதையைத் தூக்கி வந்தாயோ அந்தப் பலம் இன்று சோதனைக்கு உள்ளாகும். உன்னுடைய கோட்டையும் நகரமும் சேனையும் நாளையே அழிவதைப் பார்ப்பாய்! நாளைக் காலையில் ராமனுடைய பாணங்கள் உன்மேல் பாயும்.' இப்படி உங்கள் அரசனுக்குச் சொல்வீர்களாக!”
ராமன் சொன்னதைக் கேட்ட ராக்ஷச தூதர்களும் “அப்படியே!” என்றார்கள். “உமக்கு ஜெயமாகுக” என்று தங்களையும் அறியாமல் அவர்களின் வாயினின்று எப்படியோ வழக்கத்தின் வசமாக வெளிவந்தது. இது ஒரு நல்ல நிமித்தமாக எல்லாரும் கருதினார்கள்.
ராவணனிடம் அவர்கள் சென்று, “சுவாமி! விபீஷணனால் நாங்கள் கண்டு பிடிக்கப்பட்டோம். ஆனால் ராமன் எங்களைக் கொல்லாமல் விட்டு விட்டான். அரசனே! நம்முடைய பகைவர்கள் ஒரே உறுதியாக இருக்கிறார்கள். ராமனும் லக்ஷ்மணனும் வாலி தம்பியாகிய வானர ராஜனும் விபீஷணனும் ஒரே மனமாக இருக்கிறார்கள். இவர்களால் நடத்தப்பட்ட இந்த சேனையை நாம் ஜெயிப்பது கஷ்டம். தசரதன் மகன் ராமனைப் பார்த்தோம். அவன் ஒருவனே போதும், நம்முடைய நகரத்தையும் சேனையையும் அழிக்க. இவ்வாறு எங்களுக்குத் தோன்றுகிறது. வானர சேனையின் வீரத்தையும் யுத்தத்துக்கு அவர்கள் ஆத்திரம் கொண்டிருப்பதையும் கண்டோம். இவர்களை விரோதிப்பது நல்லதல்ல. உடனே சீதையை ராமனிடம் ஒப்புவித்து விடுவது நல்லதாகும். யோசியுங்கள்!” என்றார்கள்.
தங்களுடைய அரசனின் க்ஷேம நலத்தை உத்தேசித்துத் தூது சென்ற மந்திரிகள் இப்படிச் சொன்னார்கள். ராவணனுக்கோ இப்போது கோபம் தாங்க முடியாமற் போயிற்று.
“உலகமெல்லாம் எனக்கு விரோதமாக நின்றாலும் அதற்காக நான் பயப்பட மாட்டேன். தேவ கந்தர்வ தானவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து என்னை எதிர்த்தாலும் நான் சீதையைத் திருப்பித் தரமாட்டேன். தூது சென்ற நீங்கள் பகைவர்களால் அடிபட்டுப் பயந்து போய் இப்படிச் சொல்லுகிறீர்கள். கோழைகாள், யார் வந்து என்னை எதிர்த்து நிற்க முடியும்? எந்தப் பகைவன் என்னை ஜெயிக்க முடியும்?”
இப்படிச் சொல்லி விட்டுத் தானே அரமனை மாளிகையின் மேல் ஏறிச் சென்று சத்துரு பலத்தை நேரில் பார்த்தான். பிறகு மந்திரிகளோடு நீண்ட நேரம் பேசினான். சத்துரு சைன்யத்திலுள்ள வீரர்கள் யார், யார் என்பதையெல்லாம் தூது சென்று திரும்பியவர்களை விசாரித்தான்.
அவர்களும் ஒவ்வொரு வானர வீரனைப் பற்றியும் அவன் கொண்டு வந்திருக்கும் படையைப் பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். பூ மண்டலத்தில் பலவேறு வனங்கள், மலைகள், நதிப் பிரதேசங்களிலிருந்து வந்து கூடியிருக்கும் அந்தப் பெரிய வானர, கரடிச் சேனையின் பலத்தை எடுத்துச் சொன்னார்கள். அவர்களுக்குள்ள தேக பலமும் வீரியமும், அவர்கள் ராமனிடத்தில் வைத்திருக்கும் அசையாத பக்தியும், அவர்கள் அனைவருக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையும், ராக்ஷசர்களை வதம் செய்யவேண்டும் என்கிற ஆத்திரமும் எல்லாம் மந்திரி ஸாரணனால் சொல்லப்பட்டது. வானர சேனைக்குள் புகுந்தபோது ஸாரணன் கூடச் சென்ற மற்றொரு மந்திரியும் ராவணனுக்கு வானர வீரர்களைப் பற்றி விசேஷமாகச் சொன்னான்.
'”அதோ பார்! அவன்தான் ராமசந்திரன்! அதோ பார்! அவன் பக்கத்தில் லக்ஷ்மணன். நீதி சாஸ்திரம், யுத்த சாஸ்திரம் அனைத்தும் அறிந்தவன். இவன் ராமனுக்கு நடமாடும் இரண்டாவது உயிரும் வலது கையுமாவான். அதோ பார்! அவன் பக்கத்தில் வாலியினுடைய மாலையை அணிந்து கொண்டிருக்கிற சுக்ரீவனை. வாலிக்குச் சம வீரன். அதோ பார்! அவன் பக்கத்தில் உன் தம்பி விபீஷணன். இவர்களை வெல்வது சுலபமல்ல. வெற்றிக்கு வேண்டிய முயற்சிகளையெல்லாம் யோசித்துச் சரியாகச் செய்வீராக!” என்றான்.
பகைவனுடைய பலத்தைப் புகழ்ந்து பேசிய மந்திரிகளின் பேரில் ராவணனுக்குக் கோபம் மேலும் மேலும் பொங்கிற்று. மூர்க்கனுடைய குணம் இது. உண்மையைச் சொல்லும் தூதர்கள் பேரிலும் க்ஷேமத்தைக் கோரிப் பேசும் மந்திரிகளின் பேரிலும் புத்திசாலியான அரசன் கோபிக்க மாட்டான். ஆனால் ராவணனுடைய மதி இப்போது கலங்கிப் போயிருந்தது! அவனுக்கு இப்போது உண்மையும் பிடிக்கவில்லை, ஹிதமான உபதேசமும் பிடிக்கவில்லை.
ஏதோ யோசனை செய்தான். தன்னுடைய மனப் போக்கை வைத்து ராமனுடைய குணத்தை அளந்தான். இது தானே உலக இயற்கை? சீதை தனக்கு எப்படியாவது உடன்பட்டு விட்டால் ராமன் அவமானமடைந்து மனமுடைந்து திரும்பி விடுவான் என்பது அவன் எண்ணம். ஆனபடியால் இப்போது இன்னொரு முயற்சி செய்து அவளை எப்படியாவது உடன் படச் செய்யவேண்டும் என்று தான் அறிந்த யுக்தி முறையில் தீர்மானித்தான். இதற்காக ஒரு மாயக்கார அரக்கனுடைய உதவியை நாடினான்.
“மின்னல் நாக்கனே! உனக்கு எல்லா மாய வித்தையும் தெரியுமல்லவா? நான் உனக்குச் சொல்லியனுப்புவேன், அப்போது நீ வந்து சீதையின் முன் அவளுடைய புருஷன் ராமனுடைய தலையைப் போல் ஒன்று செய்து அதைக் கொண்டு வந்து வைக்க வேண்டும்” என்று சொன்னான். அந்த மாய வித்தைக்காரனும் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு தயாரானான்.
அதன்மேல் ராவணன் அசோகவனம் சென்று மறுபடியும் ஜானகியைக் கண்டு பலவாறு சொல்லி ஏமாற்றி, “உன் புருஷனும் அவன் சேனையும் ஹதம் செய்யப் பட்டார்கள். என் வீரர்கள் கடல் தாண்டிச் சென்று, ராமனும் அவன் வானர சேனையும் களைப்படைந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் திடீர் என்று தாக்கி ராமன் உள்பட எல்லோரையும் கொன்று விட்டார்கள். சேனை சிதறி ஓடிப்போயிற்று.
உன் புருஷன் ராமனுடைய தலையை என்னுடைய வீரன் எனக்குக் காண்பிக்கக் கொண்டு வந்திருக்கிறான். இன்னும் ஏன் பிடிவாதம் செய்கிறாய்? என் அந்தப்புரத்துக்குத் தலைவியாகிச் சுகமாக இருப்பாயாக. மூர்க்கம் செய்யாதே! லங்கைக்கு அரசி ஆவாய். நான் சொல்வதைக் கேள்!” என்று சொல்லி, ஒரு அரக்கியை அழைத்து, “போய் வித்யுஜ்ஜிஹ்வனை வரச் சொல்!” என்றான்.
அந்த மந்திரவாதி அரக்கனும் ராமனுடைய தலையைப் போலவே இருந்த ஒரு மாய சிருஷ்டியைச் சீதையின் முன்னிலையில் வைத்தான்.
*
சீதை பார்த்துத் திடுக்கிட்டாள். தன் கதி இப்படியாயிற்றே என்று பிரலாபிக்கலானாள்.
இதற்கிடையில் ராமனுடைய சேனை லங்கையை நெருங்கி விட்டபடியால் மந்திரிகளும் சேனாதிபதிகளும் அவசரமாக வந்து ராவணனைப் பார்க்க அனுமதி கேட்டுச் சொல்லியனுப்பினார்கள். ராவணன் உடனே சீதையை விட்டு விட்டுச் சபைக்குப் போக வேண்டியதாயிற்று.
ராவணனுடைய இருப்பு அந்த மாயத்தில் இன்றியமையாத ஒரு அம்சம். அவன் அந்த இடம் விட்டுப் போனதும் மாயா உருவம் தானாகவே கரைந்து போயிற்று. ராமனுடைய தலை என்று காட்டப்பட்ட பொய்த் தலை புகை போல் மறைந்து போய் விட்டது!
விபீஷணனுடைய மனைவியான ஸரமை என்பவள் சீதைக்குத் தோழியாக இருந்து வந்தவள், ராவணன் செய்த மாய வித்தையைச் சீதைக்கு விளக்கி ஆறுதல் தந்தாள்.
“ராமனை யாரும் கொல்லவில்லை. அவனும் அவனுடைய பெரும்படையினரும் லங்கை வந்து சேர்ந்து விட்டனர். கடலைத் தாண்ட அற்புதமாக ஒரு சேது கட்டிவிட்டு அதன் மேல் மற்றொரு கடலைப் போன்ற பெரும் வானர சேனை வந்து இறங்கி விட்டது. ராக்ஷசர்கள் எல்லோரும் திகிலடைந்திருக்கிறார்கள். ராவணன் உன்னை மாய வித்தையால் ஏமாற்றப் பார்க்கிறான்” என்று சீதைக்கு உண்மையைச் சொன்னாள்.
ஸரமை சீதைக்கு இன்னும் சில விஷயங்களைச் சொன்னாள்.
“ராவணனுடைய மந்திரிகள் பலர் அவனுடைய க்ஷேமத்தை விரும்பி ‘சீதையை ராமனிடம் ஒப்புவித்து விடு, அழியாமல் தப்பலாம்’ என்று சொன்னார்கள். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. ‘யுத்தத்திலாவது உயிரை விடுவேன், ராமனிடம் நான் வணங்கி நிற்க மாட்டேன். சீதையைத் திருப்பித் தந்து சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று ராவணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான். அம்மையே! உனக்கு ஒரு அபாயமுமில்லை. ராமன் வெல்வான். இந்தக் கொடியவன் மாள்வான்” என்றாள்.
இப்படி ஸரமை சொன்ன சமயத்தில் திடீர் என்று வானர சேனையில் பேரிகைகளும் சங்கங்களும் ஒலிக்கும் சத்தம் கிளம்பிற்று.
ராவணன் அழிந்தான் என்று சீதை நிச்சயம் செய்து கொண்டு மகிழ்ந்தாள். லங்கையில் அதே சமயம் அந்தப் பெருஞ் சத்தத்தைக் கேட்ட அரக்கர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
கருத்துரையிடுக