செவ்வாய், 29 ஜூலை, 2014

நினைத்தாலே இனிக்கும்! - 1 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

பக்தி செலுத்துபவர்களுக்கு கீதையின் 15ம் அத்தியாயம் நன்றாகத் தெரிந்திருந்தால் போதும். இதில், கண்ணன் தன்னை புருஷோத்தமன் என சொல்கிறான். "புருஷோத்தமன்' என்றால் "அனைவரையும் காட்டிலும் உயர்ந்தவன்' என பொருள். தான் மிகவும் உயர்ந்தவன் என கண்ணன் பிரகடனம் செய்கிறான்.

எல்லாரிடமும் பகவான் ஒன்றை எதிர்பார்க்கிறான். 

""என்னை யாரொருவன் புருஷோத்தமன் என சந்தேகத்திற்கு இடமின்றி தெரிந்து கொள்கிறானோ, அவன் என்னிடம் பக்தி செய்தவன் ஆவான்,'' என்கிறார். அப்படியானால் கோயிலுக்குப் போவது, பகவானின் பெருமைகளைக் கேட்பது என்பதெல்லாம் பக்தி செலுத்துவதாக கொள்ளப்படாதா என்ற கேள்வி எழலாம். 

பக்தியில் பலவகை உண்டு. 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பக்தி செலுத்துகிறார்கள். சிலர் பிரதட்சணம்(கோயிலை வலம் வருதல்), சிலர் நமஸ்காரம் மட்டும் செய்வது என்று வழிபாட்டு முறை மாறுபடுகிறது. ஆழ்வார்கள் ஆடுவது, பாடுவது, பூத்தொடுப்பது என்று பலவிதமாக பக்தி செலுத்தியுள்ளனர். ஆக, எந்த விதத்திலும் பக்திசெலுத்தலாம்.

குழம்பு சாதம் மோர் சாதகமாகாது. மோர்சாதம் கேசரி ஆகாது. அதனதன் சுவையில் அது அது இருக்கும். அதுபோல, ஒவ்வொருவர் செலுத்தும் பக்தியும் தனித்துவம் வாய்ந்ததாக அமையும். 
எள் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார அடிசில், சர்க்கரைப் பொங்கல் என எல்லாவற்றுக்கும் தனித்தனி ருசி. அதுபோல, நீங்கள் எந்த வகையில் பக்தி செய்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறான் கண்ணன்.

இப்படி சம்பிரதாயங்கள் இல்லாத பக்தியையும் கூட கண்ணன் ஏற்றுக்கொள்கிறான். ஏன்...என்னை நினைத்தாலே போதும் என்கிறான். ஒருவர் 1008 பசுக்களை ரத்னகம்பளம் வைத்து தானம் செய்கிறார். இதுமாதிரி எல்லாராலும் செய்ய முடியுமா? அவரவர் சக்திக்கு தகுந்த பக்தி செலுத்தினால் போதும்.

அதனால் தான் கண்ணன் எளிமையான வழியைச் சொன்னான்.

""என்னை புருஷோத்தமன் என யார் ஒருவன் நினைக்கிறானோ, அந்த மகானுபாவன் என்னிடம் எல்லா வழிகளிலும் பக்தி செலுத்தியவன் ஆகிறான்,'' என்கிறான். ஆம்.. பகவானிடம் பக்தி செலுத்துபவன், மகாபாரதம், ராமாயணம், பாகவதம் என எல்லாப்புராணங்களையும் அறிந்தவன் போல் ஆகிறான். பகவானை புருஷோத்தமன் என நினைத்தாலே, தெரியாத எல்லாவற்றையும் தெரிந்தவர்கள் ஆகிறோம். ஆக, இப்படி நினைப்பது கஷ்டமான விஷயமா! இந்த நினைவிருந்தாலே நமக்கு முக்தி கிடைத்து விடும். இந்த எளிமையான பக்தி, கரும்பு தின்னகூலி கொடுத்தது போல் இருக்கிறது.

தியானம், பூஜை, நைவேத்யம் செய்வது தான் பக்தி என்றில்லை. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். ஒரு பயில்வானும், சில குத்துச்சண்டை வீரர்களுடன் பத்துநாள் போட்டி போட வேண்டும். ஜெயித்தால் கோப்பை என்று அறிவிக்கப்படுகிறது. இதையே, ஒரே நாள் அந்த பத்து வீரர்களின் தலைவருடன் மோதினால் போதும். அவரை ஜெயித்து விட்டால் கோப்பை என்றால், அந்த பயில்வான் எதைத் தேர்ந்தெடுப்பார்? வலிமை குறைந்த பத்து பேர், ஆனால் பத்துநாள். வலிமையான ஒரு நபர்..ஆனால் ஒரே நாள் தான்! 

இதுபோல் தினமும் விளக்கேற்றி, நாமசங்கீர்த்தனம் செய்து, உபன்யாசம் கேட்டு என்று பல வழிகளில் பக்தி செலுத்துவதை விட, பகவானை நினைத்துக் கொண்டிரு என்ற ஒரே வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது தானே! 

ஒருவருக்கு வியாதி வந்து விட்டது. 

இனிப்பான மருந்தைக் கொடுத்து குடி என்கிறார்கள். அந்த இனிப்புக்கு ஆசைப்பட்டே, அந்த மனிதர், இந்த நோய் இன்னும் பத்துநாள் இருக்கக்கூடாதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவார். அதே நேரம் கசப்பு மருந்து கொடுத்தால், ஒரே நாளில் இந்த வியாதி ஓடிவிடாதா என கதறுவார். வியாதி என்பது நமது பாவங்கள். அவற்றை விரட்ட, இனிப்பு மருந்தாக பல வித பக்திமுறைகள் உள்ளன. அதைக்கொண்டு பகவானை அடைய பல பிறவிகளைக் கடக்க வேண்டிஇருக்கும். அதேநேரம் கசப்பு மருந்து என்றால் பிறவி வியாதி சீக்கிரம் பறந்து விடும். அந்த கசப்பு மருந்து தான் பகவானை நினைப்பது.

அதேநேரம், பகவானை நினைப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? அவனை எப்படி நினைப்பது. அவனுக்கு பல வடிவங்கள் இருக்கின்றதே! எந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து வணங்குவது!

பகவான் சூஷ்மரூபமாக இருக்கிறான் என்கிறார்கள். அதே நேரம் தன்னை புருஷோத்தமன்.. அதாவது எல்லாரையும் விட மிகவும் உயர்ந்தவன் என நினைக்க வேண்டும் என்கிறான். ஒருவனைப் பற்றி விசாரிக்கும் போது, இவன் பாட்டு, படிப்பு எதில் உயர்ந்தவன் என்று கேட்கிறோம் இல்லையா! அதுபோல், பகவான் எந்த வகையில் உயர்ந்தவன் என்று தெரிந்து கொண்டாக வேண்டும்.

இங்கு தான் கீதையின் 15வது அத்தியாயம் முக்கிய இடம் பெறுகிறது. கீதையைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. பெரிய பெரிய மேதைகள் கூட, இன்று வரை கீதையை ஓரளவு தான் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதில் 15வது அத்தியாயத்தைப் படித்தாலே போதும். அவனுக்கு பிறவியில்லை என்றாகி விடும்.

சரி...பகவானை மற்றவர்களை விட உயர்ந்தவர் என்கிறார்களே! அவனுக்கு என்னைப்போல இரண்டு கண், ஒரு மூக்கு தானே இருக்கிறது. நான் ஒரு மனைவியுடன் இருக்கிறேன். அவன் 16,108 மனைவியருடன் இருக்கிறானாமே! அப்படியிருக்க, என்னை விட அவன் எப்படி உயர்ந்தவன் ஆவான்...என்று பல கேள்விகள் எழுகின்றன. இதற்கு விடை தெரிந்தால் போதும்.

கலியுகத்தில் பகவானை நினைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். 

ஒன்றாம் தேதி வந்தாச்சு! 

சம்பளம் வாங்கியாச்சு! ஓட்டலில் போய் 500ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரை சாப்பிட்டா அந்த 
கண்ணனையே நேரில் சேவித்த மாதிரி ஒரு உணர்வு! ஒருவேளை சாப்பிட அழைத்துப் போகாவிட்டால், வீட்டில் ஒரே சண்டை! இதற்குத்தான் நேரமிருக்கிறதே தவிர, பகவானை நினைக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருக்கிறது? ஏனெனில், கலியுகத்தில் சுகபோகத்தில்தான் புத்தி போகும். யோகத்தின் பக்கம் போகாது. இந்தக் காலத்தில் ஜெபம், தவம் பண்ண முடியுமா! 15 நிமிடம் ஓய்வு கிடைத்தால் தூங்க எண்ணம் வரும், கதை படிக்க ஆசை வரும், இந்த காலத்தில் ஒரு அனர்த்தம் இருக்கிறது. அதுதான் தொலைபேசி. அதை காதில் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேச முடியும்! பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் வேண்டாத கதைகளைப் பேசத்தோன்றும். பகவானை நினைப்பதாவது! அது எப்படி முடியும்?

- இன்னும் இனிக்கும்

(வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி திருநெல்வேலியில் பேசியதன் தொகுப்பு)

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக