செவ்வாய், 29 ஜூலை, 2014

நினைத்தாலே இனிக்கும்! - 2 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

சரி...

அப்படியானால், பகவானை எப்படி தான் நம் மனதில் நிலை நிறுத்துவது?

பகவானின் நினைவு, நம் மனதுக்குள் வர வேண்டுமானால், முதலில் தர்மகாரியம் செய்தாக வேண்டும். தர்மம் செய்தால் புண்ணியம் கிடைக்கும். புண்ணியம் சேரச்சேர பகவானின் நினைவு தானாகவே வர ஆரம்பிக்கும். 

தர்மகாரியங்கள் நம் மனதில் சம்ஸ்காரத்தை (தீயதைப் போக்கி நல்லதைக் கொண்டு வருதல்) ஏற்படுத்தும். இயற்கை வைத்தியம் செய்யும்போது, கெட்ட உணவை மாற்றி நல்ல உணவு தருவது போல நம் மனதிலுள்ள அழுக்கையும் போக்க தர்மச் செயல்கள் துணை நிற்கும்.

மனிதஉடலில் மூத்திரம், மலம் வியர்வை ஆகிய அழுக்குகள் உள்ளன. இவற்றை வெளியேற்ற வழிகள் உள்ளன. ஆனால், மனதிலுள்ள அழுக்கைப் போக்குவதற்கென உறுப்புகள் ஏதுமில்லை. ஏனெனில், மனது துப்புவதில்லை. தர்மம் செய்யச்செய்ய புண்ணியம் சேரும். அது மனதிலுள்ள மாசைப் போக்கும். நல்ல விஷயங்களை நோக்கி முன்னேறினாலே போதும். மனம் சீராக ஆரம்பிக்கும்.

கலியுகத்தில் தர்மத்திற்கு விரோதமான செயல்களே அதிகமாக நடக்கின்றன. துவாதசியன்று பசுவுக்கு அகத்திக்கீரை கொடுப்பது மிகச்சிறந்த தர்மம். இப்போது பசுவையே காணவில்லையே! பிராணிகளை இம்சை செய்யாமல் இருப்பது தர்மம். ஆனால், அது மீறப்படுகிறது. குளம் வெட்டுவது மிகமிக பெரிய தர்மம். ஆனால், தண்ணீர் வேண்டும். இப்போது, விஞ்ஞானிகள் ஆகாயத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று எச்சரிக்கிறார்கள். பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து விட்டன. இயற்கை பாழ்படுத்தப்பட்டிக்கிறது. இன்று விஞ்ஞானிகள் சொல்லும் இந்தக் கருத்தை, வேதங்கள் எப்போதோ சொல்லிவிட்டன. அதை நாம் கடைபிடிக்கவில்லை.

குளுகுளு(ஏசி) வசதி கூடாது. சுற்றுச்சூழல் கெட்டு விடும் என்றார்கள். ஆனால், அதைத் தாராளமாகச் செய்தாயிற்று. எல்லா வசதியையும் மனிதன் தனக்கு செய்து கொண்டு விட்டான். முதலில் ஆறுகளில் தண்ணீர் காணாமல் போனது, பிறகு மணல் காணாமல் போனது, இப்போது பல இடங்களில் ஆறுகளையே காணவில்லை. 

கலியுகத்தில், தாவரங்களுக்கும், பிராணிகளுக்கும் இம்சை செய்யப்படுகிறது. இதோடு விட்டதா! மனிதர்களை வாயாலேயே கொல்கிறார்கள். சரி...இப்படியெல்லாம் கலியுகத்தில் உலகம் கெட்டு விட்டதே! இனிமேல் தர்மம் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். தர்மத்தைக் கடைபிடிக்கும் போதும் கஷ்டங்கள் வரத்தான் செய்யும். கஷ்டப்படாமல் ஒன்று கிடைக்குமா என்றால் நிச்சயம் கிடைக்காது. அது மட்டுமல்ல! கஷ்டப்பட்டால் தான் தர்மம் நிலைக்கும். ஆக, மிகுந்த கஷ்டப்பட்டே மனஅழுக்கைப் போக்க பாடுபட்டாக வேண்டும்.

தர்மத்தைக் கடைபிடிப்பது என்பது ஒரே நாளில் வந்து விடாது. அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும். பொது உபயோகத்திற்காக ஒரு குளம், கிணறு வெட்டப் போகிறீர்கள். அதற்கே ஆயிரம் எதிர்ப்பு வரும். காரணம், இதற்கு முன் நாம் தர்மம் செய்யாததால் தான் இதுபோன்ற எதிர்ப்பே வருகிறது. அதற்காக அந்தச் செயலை விட்டு விடக்கூடாது. எதிர்ப்பை ஊக்கத்துடன் வென்று தர்மத்தைச் செய்தாக வேண்டும்.

தர்மம் என்றால் ஏதோ பெரிய அளவில் செய்தாக வேண்டுமென்பதில்லை. ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்த வியாபாரம் லட்சரூபாய் முதலீடு உரியதாக மாறுவது போல், கொஞ்சம் கொஞ்சமாக புண்ணியம் செய்தாலே போதும். ஒன்றுமே இல்லையா! கஷ்டப்படும் 2 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தாலே (இலவச டியூஷன்) போதும். பத்து கோடி ரூபாயில் பள்ளிக்கூடம் கட்டி தான், பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதில்லை.

தர்மத்தை வெறுப்பவர்கள் இப்போது அதிகம். இயற்கை தர்மத்தைக் கடைபிடிக்காததால் தான் கிருஷ்ண ஜெயந்திக்கு கிரப்பம் பழம், நாகப்பழம், விளாம்பழம் ஆகியவை எல்லாம் கிடைப்பதே இல்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் வாழைப்பழம், மாம்பழம், இலை கூட கிடைக்காமல் போய்விடும் போல் இருக்கிறது. இனிமேல் இலை என்றால் பச்சைக்கலரில் ஒரு மாத்திரை, மிளகாய் என்றால் சிவப்புக்கலர் மாத்திரை என்று மாத்திரை மயமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு உலகம் கலியில் சிக்கிக் கிடக்கிறது.

இந்த சிக்கலில் இருந்து மீள வழியுண்டா?

உண்டு... பகவானைப் பிரார்த்தித்தால் மீண்டு விடலாம். அவனை வணங்க வேண்டுமானால் பல ரூபங்களில் உள்ளான் என்கிறார்களே! நான் எந்த ரூபத்தில் வணங்குவது என்ற கேள்வி எழும்.
அவன் சூஷ்ம ரூபமாக இருக்கிறான். "சூஷ்மம்' என்றால் "சிறிய' "அல்பம்' என்று பொருள் கொள்ளலாம். "ரூபம்' என்றால் "வடிவம்'. அதாவது, அவன் சிறிய வடிவமாக உள்ளான். அச்சுதன் என்று அவனைச் சொல்கிறார்களே! அவனுக்கு சின்ன அச்சுதன், பெரிய அச்சுதன் என்றெல்லாம் பாகுபாடுஉண்டா? சிறிய வடிவாக உள்ள அவன், நம் மனதிற்குள் நிற்பானா? 

கலியுகத்தில் பகவானை மனதில் இருத்தி தியானம் செய்வது என்பது லேசில் வராது. இதில் அவன் மிகச்சிறிதாக இருந்தால், அவனை எப்படி மனதில் இருத்தி தியானிப்பது?

ஒரு வேலைக்கு போக வேண்டுமானால், பயிற்சி வகுப்பு, நுழைவுத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்று பலபடிகளைத் தாண்டிப் போக வேண்டியுள்ளது. அதுபோல், தியானம் செய்யவும் பல படிகளைத் தாண்டியாக வேண்டும். 

எந்தப் படிக்கட்டில் தவறு செய்தாலும் தியானம் சித்திக்காது. அப்படியானால் ஒருமனதாக தியானம் செய்வது எப்படி? முதலில், பகவானை புருஷோத்தமன் என நம்ப வேண்டும். அதாவது<, எல்லாரையும் விட உயர்ந்தவன் என நினைக்க வேண்டும். 

ஏகாதசியன்று பட்டினி கிடத்தல், அன்னதானம், குடிநீர் தானம் செய்தல், கோயில் கட்டுதல், கல்வி சொல்லிக் கொடுத்தல் ஆகிய தர்மகாரியங்களைச் செய்ய வேண்டும். அப்படி செய்யும்போது, புண்ணியம் சேரும். புண்ணியம் சேரச்சேர பகவானை தியானிக்கும் மனப்பக்குவம் வரும். அந்தப் பக்குவத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். 

தர்மம் செய்யச் செய்ய மனத்தெளிவு வரும். அதன்பின், பகவானைத் தியானிப்பதில் சிரமம் இருக்காது.

பகவானை எந்த உருவில் தியானிப்பது என்பதில் முதலில் சூஷ்மரூபத்தை எடுத்துக் கொள்ளலாம். அது கண்ணுக்கு தெரியாது. புலன்களுக்கு எட்டாதது. இந்திரியங்களால் அறிய முடியாதது. அதாவது, நமக்கு கட்டுப்படாதது. இதை எப்படி நாம் நினைப்பது!

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக