நினைத்தாலே இனிக்கும்! - 3 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நினைத்தாலே இனிக்கும்! - 3 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நம் உடம்பு கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால், ஆத்மாவை நம்மால் பார்க்க முடிகிறதா! எக்ஸ்ரே இயந்திரத்தால் கூட ஆத்மாவைப் படம் பிடிக்க முடியாது. ஏனெனில், அது கண்ணுக்குத் தெரியாதது. மிகவும் சூட்சுமமானது. அப்படியே தெரிந்தாலும் அதனால் நன்மை ஏதும் உண்டா? பணம் குறைந்த அளவு இருந்தால் ஐஸ்வர்யம் இல்லை என்று குறைப்பட்டுக் கொள்ளலாம். 

பருமனாக இருப்பவன், ஒல்லியானவனைப் பார்த்து பொறாமைப் பட்டுக் கொள்ளலாம். ஆனால், ஆத்மா என்ற சூட்சுமம் மறைவாக இருப்பதால், யாருக்குஎன்ன நஷ்டம்? ஆனால், அளவில் சிறிய ஆத்மாவுக்கு சக்தி அதிகம் ஒரு குழந்தை கீழே விழுந்து விட்டது. அதற்கு ஒன்றுமே ஆவதில்லை. அது உருவில் சிறியது. பந்து போல் எழுந்து உட்கார்ந்து விடும். அதேநேரம் பெரியவர்கள் விழுந்தால், "ஐயோ..அப்பா..'' என எழுவதற்குள் உயிரே போய் விடும். அளவில் பெரிதாக இருந்தாலும் சக்தி குறைந்து விடுகிறது. பெரிய சரீரத்திற்கு சக்தி குறைவு. 

சூட்சுமமான ஆத்மாவுக்கு பலம் மிக அதிகம். அது மிகச்சிறிய ஒன்று தான். ஆனால், எல்லாம் செய்யும். இதை "அணுமாத்ர ரூபம்' என்பார்கள். அதாவது மிகவும் சிறியது என்று பொருள். அணுவை விட சிறியதாக ஆத்மா இருந்தாலும், சக்தி மட்டும் மிக அதிகம். சிறிய ஆத்மா பிரிந்து விட்டால், இந்த பெரிய உடலே சாய்ந்து விடுகிறது.

இதன் பெருமையை இன்னும் அளவிடலாம். உடலுக்கு தான் உயரம், எடை எல்லாம் இருக்க வேண்டும்.

ஒருவர் 72 கிலோ எடை இருந்தார். அதை 62 ஆக குறைக்க யோசனை சொன்னார் வைத்தியர். தினமும் 10 பழம் சாப்பிடணும் என்றார். வந்தவர், ""சாப்பாட்டுக்கு முந்தியா பிந்தியா'' என்றார். இப்படி கேட்டால் என்னாகும். 72 கிலோ 82 ஆகி விடும். இதுதான் பெரிய உடலின் நிலை.
ஆனால், நம் உடல் எடை எவ்வளவு கூடினாலும், குறைந்தாலும் நமக்குள் இளைப்பான ஒரு நல்லவர் இருக்கிறார். அவரது பெயரே ஆத்மா. இவர் எடை கூடுவதுமில்லை. குறைவதுமில்லை.
உருவத்தை தான் மனிதர்களால் கேலி செய்ய முடியும். ஒரு வீட்டின் உள்ளே இருப்பவர் ஏதோ இன்னொருவரைப் பற்றி குறை கூறி பேசிக்கொண்டிருக்கிறார். நாம் கதவைத் தட்டுகிறோம். உடனே, பேச்சை மாற்றி விட்டு "ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே' என்று மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போல நடித்து கதவைத் திறக்கிறார். ஒருவரது குணநலன்களையோ, உடலமைப்பையோ, கொண்டு இவ்வாறு பரிகசிப்பது நல்லதல்ல என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

அப்பா, அம்மாவுக்கு வீட்டில் சிராத்தம் வரும். அந்தக் காலத்தில் திதி கொடுத்து முடிய மாலை நான்கு மணி ஆகி விடும். அதன் பிறகு தான் சாப்பாடு. திதி பண்ணுகிறவருக்கே திதி கொடுக்க வேண்டி வந்து விடுமோ என்னும் அளவுக்கு நேரம் இழுக்கும். அதுவரை நாம் பட்டினியாக இருப்போம். உடலை அந்தளவு படுத்திய காலங்கள் உண்டு.

ஆத்மாவுக்கு இப்படிப்பட்ட சிக்கலே கிடையாது. ஏனெனில் அது அப்படியே இருப்பது. யார் கண்ணுக்கும் தெரியாது. எனவே அதை யாராலும் குறை சொல்லவும் முடியாது. அதற்கு பசிக்கவும் செய்யாது. சாப்பாடே தேவையில்லை.

உடலில் அழுக்கு இருந்தால் குளித்து கழுவுகிறோம். 


மனதிலுள்ள அழுக்கை என்ன செய்வது? ஒருவர் சொன்னார்.. ""ராமா..ராமா..என்று அவன் நாமத்தை தினமும் 1008 தடவை சொல்லு,'' என்று.

அதைக் கேட்டவர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

அரை மணி நேரம் இப்படி மந்திரம் சொல்லி என்னாகப் போகுது? அப்படி சொன்னால் கைமேல் என்ன கிடைக்கும்?'' என்று.

இப்படியெல்லாம், கேட்குமளவுக்கு மனதில் அழுக்கு இருக்கிறது. வண்டியிலுள்ள அழுக்கை உப்புத்தாள் வைத்து எடுப்பது போல, மனதிலுள்ள இந்த அழுக்கையும் உப்புத்தாள் வைத்து எடுக்க வேண்டும். அந்த உப்புத்தாள் தான் தர்ம காரியம்.

அமிர்த சுதா என்ற நூலில், அனிமா, மஹிமா, லஹிமா, கரிமா, ப்ராப்தி, ப்ரகாம்யா,வாக்ஷித்வம், இஷாத்வம் ஆகிய எட்டு வகை சித்திகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சித்திகளை அடைந்த சித்தர்கள் இப்போதும் நம்மிடையே இருக்கிறார்கள். கலியுகம் மொத்தம் 4லட்சத்து 32 ஆயிரம் வருஷங்கள். இப்போது தான் 5116ம் ஆண்டை எட்டியிருக்கிறோம். அஷ்டமாசித்திகளை அடைந்த வசிஷ்டர் 71 சதுர்யுகம் வாழ்வார். ஒருசதுர்யுகம் என்றால் 43 லட்சத்து 21 ஆயிரம் ஆண்டுகள். இதை 71ஆல் பெருக்கினால்....! 

அவ்வளவு வருஷம் வாழ்பவர் வசிஷ்டர். 

இன்றைய சூழ்நிலையில் நம்மால் அஷ்டமாசித்திகளை அடைய முடியுமா என்றால் முடியவே முடியாது. நிலைமை அப்படி இருக்கிறது. 

திருமலைக்கும், சோளிங்கருக்கும் போய் மலை ஏற ஆசை இருக்கிறது. ஆனால் கால் ஆபத்து தடுக்கிறது. மலை ஸ்தலங்களில் நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஏதோ கயிறு கட்டி (ரோப்கார்) தூக்கி விடுகிறார்கள். அந்தளவுக்கு தான் உடலின் நிலை இருக்கிறது. இப்படியிருக்க, இந்த உடலைக் கொண்டு அஷ்டமாசித்திகளை அடைவது என்றால் எப்படி?

அப்படி கஷ்டம் என்று சொல்லும் அளவுக்கு இந்த அஷ்டமா சித்திகளில் தான் என்ன இருக்கிறது?

அனிமா என்றால் அணுத்தன்மையை அடைதல். அதாவது, நம் உருவத்தை ஒரு அணுவின் அளவுக்கு சுருக்கிக் கொள்ளுதல். ஆறு அடி உள்ளவன் இந்த சித்தியைப் பெற்றால், புள்ளியளவு கூட தன்னைச் சுருக்கும் ஆற்றல் பெறுவான்.

லகிமா என்றால் லேசாக மாறுதல். 

"இலகுவான' (லேசான) என்று சொல்கிறோமே! அந்தச் சொல் கூட இந்த சித்தியில் இருந்து வந்தது தான். அதாவது, கனமான இந்த உடலை லேசாக்கி இறகு போல பறத்தல்.
நம் உடலை ஓரளவுக்கேனும் நாம் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிடக்கூடாது. 

சாப்பிட்ட பின்னும் கூட வேகமாக நடக்குமளவு நம் சாப்பாட்டின் அளவைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். சாதாரணமாக மூச்சு விட வேண்டும்.

ராமனும் லட்சுமணனும் ராவணனுடன் சண்டை போட்டனர். லட்சுமணன் மயங்கி விட்டான். அவனை மிக எளிதாக தூக்கி விடலாம் எனக்கருதி முயற்சித்தான் ராவணன். முடியவில்லை. 20கைககளையும் சேர்த்து தூக்கமுயன்றான். அப்போதும் முடியவில்லை. ஆனால், ஆஞ்சநேயர் வந்தார். ஒரே கையால் எளிதாக அவனைத் தூக்கி விட்டார். காரணம் என்ன! ராவணனுக்குள் நல்ல எண்ணம் இல்லை. 

தீய எண்ணம் கொண்டவர்களுக்கு இதுபோன்ற சித்திகள் எல்லாம் வராது. 
ஆஞ்சநேயர் நல்ல எண்ணத்தின் வடிவம். அவரால் எளிதாக லட்சுமணனைத் தூக்க முடிந்தது. 
நல்ல எண்ணங்கள் இருந்தால் தான் இத்தகைய சித்திகள் கைகூடும். 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை