நினைத்தாலே இனிக்கும்! - 4 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

நினைத்தாலே இனிக்கும்! - 4 - வேளுக்குடி ஶ்ரீ கிருஷ்ணன்

அஷ்டமா சித்திகளில் மூன்றாவது "பிராப்தி'. "தூரத்தில் இருப்பதைத் தொடுவது' என்பதே இந்த சித்தி. அதாவது, விரல் நுனியால் சந்திரனைக் கூடத் தொடலாம். இது ஏதோ சித்து வேலை அல்ல. ஞானத்தை வளர்த்துக் கொண்டால், இதெல்லாம் சாத்தியமே. கொஞ்சமாவது தியானம் செய்தால் தான், சித்திகளை அடைவதற்குரிய ஆரம்பக்கட்டத்திலாவது நுழைய முடியும். 
சித்திகளில் நான்காவது, "பிராகாம்யம்'. அதாவது தடையின்றி விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல். அது எந்த விருப்பமாக இருந்தாலும், அது நிறைவேறி விடும். பரத்வாஜர் ஆஸ்ரமத்துக்கு ராமபிரான் போனார். பரதன் அங்கே சதுரங்க சேனையைத் திரட்டிக் கொண்டு வந்தான். பரத்வாஜர் நான்கு சிஷ்யர்களுடன் ஆஸ்ரமத்தில் இருக்கிறார். 

வந்தவர்களை எப்படி பசியோடு அனுப்புவது? மொத்த சேனைக்கும் விருந்து போட வேண்டும். 
இத்தனை பேருக்கு சாப்பாடு போட வேண்டுமானால் செலவு என்னாகும்? செலவழித்தாலும், சாப்பாடு தயாரிக்க ஆள் வேண்டும். அவ்வளவு பொருட்களை ஒரே சமயத்தில் திரட்ட வேண்டும். 
ஆனால், பரத்வாஜர் அதுபற்றி கவலைப்படவே இல்லை. 

""கை கால் அலம்பு, இலையைப் போடப் போறேன்,'' என்று சாதாரணமாக பரதனிடம் சொல்கிறார். 
""சுவாமி! என் படைக்கே சாப்பாடு போடுவதென்பது எப்படி சாத்தியம்?'' 

""அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்! எல்லாரையும் உட்காரச் சொல்,'' . 

தசரதர் வைத்த விருந்தை விட பெரிய விருந்து இங்கே பரிமாறப்பட்டது. மாம்பழமே 12 வகை, ஆரஞ்சு 22 வகை, 50 வகை காய்கறி, 20 வகை கூட்டு...எப்படி இவ்வளவும் தயாரானது? 
"பிராகாம்யம்' என்ற சித்தியை பரத்வாஜர் அறிவார். இந்த சித்தியை அடைந்தவர்கள் நினைத்தஉடன் எதுவும் நடந்து விடும். இத்தனை பேருக்கு விருந்து தயாராக வேண்டும் என அவர் நினைத்தார்! 

அது நடந்து விட்டது. நம்மால் அது முடியுமா? 

சில பேர் சமைத்தால் பாத்திரத்தை விட்டே வெளியே வராது. ஏனென்றால், அதற்கு அதை விட்டு வர பிடிக்கவில்லை. ஆனால், அடுப்பு மூட்டாமலே சோறு போட்டார் பரத்வாஜர். 

ஐந்தாவது சித்தியாக உள்ளது "மகிமா'. இதற்கு "பிரம்மாண்டத்தை விட பெரிய உடல் எடுப்பது' என பொருள். பிரம்மாண்டம் என்றால் இந்த பிரபஞ்சம். எத்தனை உலகங்கள் இருக்கிறதோ, அதை விட பெரிதாக வடிவெடுப்பதே இந்த சித்தி கை கூட வேண்டுவதின் நோக்கம். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், "எது பெரிதோ அதைவிட பெரிதாகுதல்' எனலாம். 
ஆஞ்சநேயர் சீதையைத் தேடி லங்கைக்கு போனார். கடலைத் தாண்டிப் பறக்கும் போது, சுரஷா என்ற நாகமாதா அவரைத் தடுத்தாள். 

""ஆஞ்சநேயா! நீ எனக்கு உணவாக வேண்டும் என பிரம்மா என்னிடம் சொன்னார். ஆனால், நீ என்னைத் தாண்டி செல்கிறாயே!'' என்றாள். 

""நாகமாதா! நான் இப்போது ராமகாரியம் தொடர்பாகச் சென்று கொண்டிருக்கிறேன். அதை முடித்து விட்டு வந்து, தங்களுக்கு உணவாகி விடுகிறேன்,'' என்றார் ஆஞ்சநேயர். 

இதை யார் நம்புவார்கள்? ஆவென வாயைத் திறந்தாள் சுரஷா. ஆஞ்சநேயர் உள்ளே போய் விட்டார். ஆனால், தன் உடலை பத்து யோஜனை தூரத்திற்கு பெரிதாக்க, சுரஷாவும் வாய் அளவை உயர்த்திக் கொண்டே போனாள். சட்டென உருவத்தை அணுவளவு சிறிதாக சுருக்கிய (அனிமா சித்தியைப் பயன்படுத்தி) ஆஞ்சநேயர், அவளது காது வழியாக வெளியேறி விட்டார். ஆக, சித்திகளை அடைந்தவர் என்பதால், அவருக்கு அது சாத்தியமாயிற்று. 

அது மட்டுமல்ல! ""அம்மா! உன் வாய்க்குள் புகுந்து வெளியேறி விட்டேன். இதனால், நான் உனக்கு உணவாகி விட்டதாகவே அர்த்தம்,'' என்றார். 

சாமர்த்தியமான பிள்ளை அவர். ஆகாயத்தில் சூரியனைப் பழமாகப் பார்த்து பறந்து பிடித்த சாமர்த்தியக்காரர். நமக்கெல்லாம், ஏதோ ஒரு சிறுதிறமை இருந்தாலே, பெருமை பேச ஆரம்பித்து விடுவோம். தம்பட்டம் அடிப்போம். அனுமான், சிறுவயதில் சூரியனைப் பழமாய் நினைத்து பறிக்கப் போன சம்பவத்தை மறந்தே போனார். ஜாம்பவான் ஞாபகப்படுத்த போய்தான், அவரது திறமையே அவருக்கு தெரிய வந்தது. 

சித்திகளில் ஆறாவது "ஈசிதா'. அதாவது, மரம், மட்டை, மண், செடி, கொடியைக் கூட நம் சொல்லுக்கு கட்டுப்படச் செய்தல். ராம ராவண யுத்தம் முடிந்து, அயோத்தி செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் பூத்து குலுங்க வேண்டும் என்றும், பழங்கள் பழுக்க வேண்டும் என்றும் விரும்பினார் பரத்வாஜர். அவர் சொல்லுக்கு தாவரங்களெல்லாம் கட்டுப்பட்டன. கார்த்திகை மாதம் மாம்பழம் கிடைக்குமா என்றால் சீசன் கிடையாது. ஆனால், இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். 

சித்திகளில் ஏழாவதான "வசிதா' என்னும் "தன்வசப்படுத்துதல்' மூலம் பரத்வாஜருக்கு இதெல்லாம் சாத்தியமானது. 

காமவாசியாயுதா என்னும் எட்டாவது சித்தி பற்றியும் தெரிந்து கொள்வோம். இதுவும் "நினைத்தது நடத்தல்' என்ற வகையில் அடங்கும். சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் நேரமாகும். வேலை இருக்கும். ஆனால், இருந்த இடத்திலேயே சாப்பிட நினைத்தால் அது சாத்தியமாகி விடும். 
இப்படி சித்திகளை நமக்கெல்லாம் சாத்தியமா என்றால் சாத்தியமே. ஆனால், அதற்கு பல தர்மகாரியங்கள் செய்ய வேண்டும். 

தர்மகாரியம் என்றவுடன், ஆரம்பத்திலேயே பெரிதாக ஏதும் செய்ய வேண்டுமோ என நினைக்க வேண்டாம். சிறியதில் ஆரம்பித்தால் போதும். அது போகப்போக பெரிதாக மாறி விடும். ஆறுமாதம் பொறுமையாக தர்மத்தைச் செய்து பாருங்களேன். கொஞ்சம் கொஞ்சமாக தர்மசிந்தனை மனதில் ஊறிவிடும். தெளிவு, புத்திக்கூர்மை, சாந்தி, ஆனந்தம் ஆகியவையும் எட்டு சித்திகளையும் அடையத் தேவை. ஆனால், இவற்றை அடையவிடாமல் பாவங்கள் நம்மை மூடிக்கொண்டுள்ளன. 
ஆத்மா இருக்கிறாரே! அவர் தான் நாம்! உடலுக்கு சூஷ்ம ரூபம் இல்லை. அது ஸ்தூல (கண்ணுக்குத் தெரியும்) ரூபம். 

கொசு, எறும்பு போன்றவை கூட கண்ணுக்குத் தெரியும். ஆனால், ஆத்மாவை யாரும் பார்க்க முடியாது. அது மிகவும் நுண்ணியது. அது தங்குவதற்கு கட்டடமே வேண்டாம். குளிக்க வேண்டாம். அதற்கு உடம்பே இல்லை. சமைத்தாலும் சாப்பிட வாயில்லை.

அதற்கு வியாதியே வராது. சம்பந்தி சண்டை எல்லாம் அதற்கு கிடையாது. 

அப்படியானால், ஆத்மாவுக்கும், உடலுக்கும் என்ன சம்பந்தம்? அது ஏன் உடலுக்குள் இருக்க வேண்டும்? ஆராய்வோம். 

- இன்னும் இனிக்கும்

திருநெல்வேலியில் வேளுக்குடி சுவாமி நிகழ்த்திய சொற்பொழிவு தொகுப்பிலிருந்து...

நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை