மறுநாட் காலை எழுந்ததும் விபீஷணன் அரசனிடம் போனான். தனக்குள் விஷயத்தை மறுபடியும் நன்றாக யோசித்து முடிவு செய்து கொண்டு சென்றான். அண்ணனுடைய நன்மையைக் கருதி அவனை எப்படியாவது திருத்திக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிச் சென்றான்.
எப்போதும் போல் ராஜமாளிகை எல்லாவித செல்வமும் லக்ஷணமும் பூஜைகளும் நிறைந்து விளங்கிற்று. ஆயுதங்களும் கவசங்களும் பூண்ட பணிவிடை ஸ்திரீகள் எங்கே பார்த்தாலும் நின்றார்கள். பிராமணர்கள் வேதகோஷம் செய்து கொண்டிருந்தார்கள். வாத்தியக்காரர்கள் சுப்ரபாதம் வாசித்துக்கொண்டிருந்தார்கள். இப்படி மங்கள நாதம் நிறைந்த ராக்ஷச வேந்தனுடைய அரண்மனைக்குள் விபீஷணன் மிக்க கவலையுடன் பிரவேசித்தான்.
அரசன் முன் கை கூப்பிய வண்ணம் நின்றான், முக்கிய மந்திரிகளைத் தவிர மற்றவர்களை வெளியே போகச் சொல்லி ராவணன் தன் தம்பியைப் பேசச் சொன்னான்.
“அண்ணனே! நான் சொல்லுவதில் பிசகு இருந்தால் மன்னிக்க வேண்டும். என்னுடைய லாபத்துக்காக நான் ஏதும் பேசவில்லை. உம்முடைய நன்மை ஒன்றையே கருதிப் பேசுகிறேன். நான் சொல்லுவதைக் கேட்டு ஆலோசித்துக் காரியங்களைச் செய்யக் கோருகிறேன்” என்று ஆரம்பித்தான்.
“சீதையை நீர் கொண்டு வந்தது முதற்கொண்டு லங்கா நகரத்தில் நானும் மற்றவர்களும் அபசகுனங்களையே காண்கிறோம். ஹோமாக்கினி வளர்க்கும் போது எரிய வேண்டிய முறையில் எரியவில்லை. சரியான மந்திரங்களுடன் அவி சொரிந்தாலும் அக்கினி மூள்வதில்லை. பூஜை ஸ்தலங்களில் பாம்புகள் காணப்படுகின்றன. நைவேத்தியச் சாமான்களில் எறும்பு மொய்க்கிறது. பசுக்கள் பால் சரியாகச் சுரப்பதில்லை. யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள் இவை ஆரோக்கியமிழந்து சரியாக உண்ணாமலும் விபரீதமாகவும் நடந்து கொள்கின்றன. வைத்தியம் பலிக்கவில்லை. காக்கைகள் நகரத்து விமானங்கள் மேல் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து அவலக்ஷணமாகக் கத்துகின்றன. கழுகுகளும் வட்டமிட்டுக் கொண்டு சகுனக் குறிகள் அறிந்தவர்களுக்குக் கவலை உண்டாக்கி வருகின்றன. நரிகள் ஊருக்குள் பிரவேசித்து அகாலங்களில் ஊளையிடுகின்றன. காட்டு மிருகங்கள் நகரத்துக்குள் நடமாடுகின்றன. இவையெல்லாம் நமக்கு மிகப் பெரும் அபாயமும் நஷ்டமும் குறிக்கின்றன. இதை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. சீதையைத் திருப்பி அனுப்பி விடுவீர். அவளைக் கொண்டு வந்தது முதல் இந்தக் கெட்ட குறிகள் காணப்படுகின்றன. மற்றவர்களையும் விசாரித்துப் பார்ப்பீர், நான் சொல்லும் அவலக்ஷணக் குறிகள் நிகழ்ந்தது உண்மையா இல்லையா என்று நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்மானித்தாலும் என் பேரில் கோபித்துக் கொள்ள வேண்டாம்.
வீணாக விரோதத்தைச் சம்பாதிப்பதில் பயனில்லை. சீதையைத் திருப்பித் தந்துவிட்டுச் சுகமாக இருப்போம்” என்று மிகப் பணிவுடன் சொன்னான்.
“ஒரு நாளும் முடியாது! சீதையைத் திருப்பித் தரும் பேச்சுப் பேச வேண்டாம். இந்த எதிரியை நான் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. நமக்கு ஒரு பயத்தையும் நான் காணவில்லை. நீ போகலாம்!” என்றான் ராவணன்.
இவ்வாறு பிடிவாதமாக இருந்த போதிலும் சீதையைப் பற்றித் தன்னுடைய ஆசை நிறைவேறவில்லையே என்றும், நெருங்கிய உறவினர்களும் தன் காரியங்களைக் குற்றமாகக் கருதுகிறார்களேயென்றும் கண்ட ராவணன் சாந்தியை இழந்தான். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் மறுபடியும் சபை கூட்டினான். காமமும் கோபமும் புத்தியை நேர் வழியில் செலுத்தாமற் போனாலும் தான் செய்ததில் தவறு இருப்பதை உணர்ந்து மற்றவர்களோடு ஆலோசனை செய்வதில் ஒரு ஆறுதல் கண்டான்.
தங்க மயமான தேரில் ஏறித் தெருவில் சென்றான். மிக உயர்ந்த ஜாதிக் குதிரைகள் பூட்டிய தேர் கத்தியும் கேடயமும் தரித்த வீரர்கள், கண்ணைக் கவரும் உடுப்புகள் அணிந்து முன்னும் பின்னும் இரு பக்கங்களிலும் சென்றார்கள். சிலர் தேர், யானை, குதிரை முதலிய வாகனங்களில் ஏறிப் பயங்கரமான தோமரம், கோடரி, சூலம் முதலிய ஆயுதங்களைத் தரித்து ராவணனுடைய தேருக்குப் பின்னால் சென்றார்கள். சங்கம், பேரி முதலிய போர் வாத்தியங்கள் முழங்கின. ராஜவீதியில் லங்கேசன் பரிவாரத்துடன் இப்படி வெகு கம்பீரமாகச் சென்ற போது வழியில் நின்றவர்கள் எல்லாரும் கைகூப்பித் தலைவணங்கி நமஸ்கரித்து வெற்றி கோஷங்கள் செய்தார்கள். திக்குகள் நடுங்கும்படி சங்கங்களும் பேரிகைகளும் கோஷிக்க ராக்ஷசேந்திரன் சபைக்குள் பிரவேசித்தான்.
தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட தூண்களும் சிறந்த விரிப்புகளும் மயனுடைய சிற்பமும் சாமர்த்தியமும் விளங்கிய அந்த மண்டபத்தில் வைடூர்ய சிம்மாசனத்தின் மேல் ராவணன் அமர்ந்தான். நூற்றுக்கணக்கான பிசாசங்கள் சபைக்குக் காவலாட்களாக நின்றன. ராக்ஷசேந்திரன் உத்தரவின்படி ராக்ஷச வீரர்கள் ஆயிரக்கணக்காக வந்து குழுமியிருந்தார்கள். அவர்கள் வந்த வாகனங்கள் வெளியில் பெருங்கணக்காக நின்றன. அவரவர்கள் பதவிக்குத் தக்கவாறு ஆசனங்களில் உட்கார்ந்தார்கள். புரோகிதர்கள். வேதம் ஓதுபவர்கள் நூற்றுக்கணக்காக வந்து வெகுமானிக்கப்பட்டு அமர்ந்தார்கள்.
விபீஷணன், சுகன், பிரஹஸ்தன் முதலியவர்கள் ராவணேசுவரனை வணங்கிவிட்டுத் தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்தார்கள். ஆலோசனை சபையில் நிர்வாகிகள், உத்தியோகஸ்தர்கள் எல்லாரும் வந்து கூடியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் மகா நிபுணர்கள், சூரர்கள், ராவண பக்தர்கள்.
பரிமளப் பொருள்களின் வாசனை மண்டபத்தில் வீசிற்று. ஒருவருடன் ஒருவர் பேசாமல் சப்தம் அடங்கி சபை மிகக் கம்பீரமாக அறிவாளிகளும் மகாபலசாலிகளும், உக்ர வீரர்களும் நிறைந்து தேவேந்திரனுடைய சபைக்கு நிகராக விளங்கிற்று.
*
தன் ராஜ்யத்தின் க்ஷேமத்தைக் கோரினவனும் இயற்கையாகச் சிறந்த அறிவாளியுமான ராவணன் காமத்தின் வேகத்தால் மதியை இழந்தான். பெருங் கவலையிலிருந்தானாகிலும் காமத்தாலும் அகங்காரத்தாலும் சரியான யோசனை செய்ய முடியாத நிலையிலிருந்தான். சபையில் கூடிய தன் பந்துக்களும் தன் நன்மையை விரும்புகிறவர்களுமான ராக்ஷஸ கூட்டத்தைப் பார்த்துச் சொன்னான்:
“எல்லாவிதத்திலும் நீங்கள் திறமைசாலிகள். எந்தச் சிக்கலான விஷயத்திலும் சரியான யோசனை சொல்லும் சக்தி வாய்ந்தவர்கள். இதுவரை நீங்கள் ஆலோசித்துச் சொன்ன எந்த விஷயமும் பயன்பெறாமல் போனதேயில்லை. ஆனபடியால் உங்களை இப்போது கேட்கிறேன். நான் செய்த காரியம் உங்களுக்குத் தெரிந்ததே. தண்டகாரண்யத்தில் வசித்துக் கொண்டிருந்த ஜானகியைக் கொண்டு வந்துவிட்டேன். அவள் பேரில் எனக்கு உண்டாயிருக்கும் ஆசையை நான் அடக்க முடியவில்லை. அவளை நான் திருப்பியனுப்ப முடியவே முடியாது. இப்போதும் அவள் பேரில் எனக்குள்ள விருப்பத்தை நீக்கிக் கொள்ள என்னால் முடியவில்லை. இதை நான் உங்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்கிறேன்.
என் விருப்பத்துக்கு அவள் சம்மதிக்கவில்லை. ராமன் வருவான், தன்னை மீட்பான் என்று நம்பி வருகிறாள். அவன் வரமுடியாது, உன்னை அவன் அடைய முடியாது, என்னை ஒப்புக்கொண்டு சுகமாக இரு என்று எவ்வளவோ நான் சொன்னேன். ஒரு வருஷ காலம் கெடு கேட்டாள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். இப்போது உங்கள் யோசனையைக் கேட்கிறேன். என் இஷ்டம் பூர்த்தியாகவில்லை. சீதையைத் திருப்பி அனுப்பி விட்டு ராமனிடம் மன்னிப்புக் கேட்க என் மனம் ஒரு நாளும் இசையாது. இதுவரையில் நானும் வீரர்களாகிய நீங்களும் எந்த யுத்தத்திலும் தோல்வியைக் கண்டதில்லை. இந்தச் சமுத்திரத்தைத் தாண்டி ஒரு வானரன் எப்படியோ வந்து இந்த நகரத்தைச் சேதம் செய்துவிட்டுத் திரும்பினான். ராமனும் வானர சேனையும் கடலைத் தாண்டி வருவது கஷ்டம். வந்தாலும் எனக்குப் பயமில்லை. நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். கடல் எதிர்க்கரையில் ராமலக்ஷ்மணர்களும் சுக்ரீவனும் அவனுடைய வானரர்களும் வந்திருக்கிறார்கள். ராமலக்ஷ்மணர்களைக் கொல்லும் உபாயம் சொல்லுங்கள்.
நான் முந்தியே சபை கூட்டியிருப்பேன். கும்பகர்ணன் விழித்துக் கொள்ளவில்லை. அதற்காகக் காத்திருந்தேன்” என்றான்.
இவ்வாறு காமத்தால் புத்தியிழந்து, தன் கவலையை மறைத்துக் கொஞ்சம் பொய்யும் கலந்து பேசினான். சீதை ஒரு வருஷ காலம் கெடு கேட்கவில்லை. தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள இவ்வாறு மாற்றிச் சொன்னான்.
கருத்துரையிடுக