இனி ராவணனிடம் போவோம். மகா கவிகளின் போக்கில் ஒரு தனிச் சிறப்பு உண்டு. தங்களுடைய கற்பனா சக்தியைச் செலுத்தி வெறுக்க வேண்டிய பாத்திரங்களையும் இயற்கை நியதிகளைப் புறக்கணிக்காமல் உணர்ச்சியுடன் சித்திரிப்பார்கள். குணங்களையும் சாமர்த்தியத்தையும் தாழ்த்திவிட்டுச் சித்திரிக்க மாட்டார்கள்.
மக்களின் மனப்பான்மையைச் சாத்துவீக மார்க்கத்தில் செலுத்துவதே கவிகளின் கருத்து. இதற்காகவே தான் ராஜஸ தாமஸ பாத்திரங்களையும் மிகத் திறமையாகக் கையாள்வார்கள். ராஜஸ தாமஸ குணங்கள் பொதிந்து கிடக்கும் சாதாரண மக்களுக்குக் காவியம் படிக்கும்போது ராஜஸ தாமஸ பாத்திரங்களிடம் அனுதாபமே ஏற்படும். கீழ்த்தர மக்களைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சாத்துவீக பாத்திரங்களின் செயல்களை வெறும் கதையாகவும் பூஜை விஷயமாகவும் வைத்து விட்டு, ராஜஸ தாமஸ பாத்திரங்களைத் தங்கள் உறவினர்களாகவே பாவித்து அனுதாபத்தோடும் அக்கறையோடும் படித்து அநுபவிப்பார்கள்.
மில்டன் என்னும் ஆங்கில மகாகவி "சுவர்க்கம் இழந்த" கிறிஸ்துவப் புராணத்தை ஒரு பெருங் காவியமாகப் பாடியிருக்கிறார். அந்தக் காவியத்தின் புகழ் உலகம் அளாவிப் பரந்தது. அதில் ஆண்டவன், ஆண்டவனுடைய மானஸ புத்திரனும் மக்களுக்குப் புருஷகாரனுமான கடவுள் திருமகன் (நம்முடைய சமயங்களில் எப்படி தேவி புருஷகாரமோ அதாவது, கருணைக்கென்று மூர்த்தியோ, அப்படியே கிறிஸ்து மதத்தில் புருஷகாரம் கடவுள் திருமகனான ஏசுநாதன்.), நித்தியசூரிகள் எல்லாரும் பாத்திரங்களாக வருகிறார்கள். கடவுளை முதல் முதலில் எதிர்த்துப் பாபத்தையும் மரணத்தையும் பிரபஞ்சத்தில் உற்பவம் செய்த சைத்தான் அந்தப் பெருங் காவியத்தில் முக்கியமான பாத்திரம். இந்த சைத்தானை மில்டன் அற்புத அழகுடன் சித்திரித்திருப்பதாக ஆங்கில காவிய ரசிகர்கள் புகழ்வார்கள். அப்படியே உலகப் பிரசித்தரான நாடகக் கவிஞன் ஷேக்ஸ்பியரும் ஷைலாக் என்கிற லோபி, அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து மக்கள் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு பாத்திரம், அவனை ஷேக்ஸ்பியர் மிக அழகாகச் சித்திரித்திருக்கிறார். பெரும் துர்க்குணங்களை வைத்துக் கற்பித்த பாத்திரங்களானாலும் கெட்ட குணங்களுடன் தைரியம், உறுதி, சாமர்த்தியம் இத்தகைய உயர்ந்த குணங்களையும் அழுக்குக்குப் பின்னிருந்து மிளிரும்படி மனத்தைக் கவரும் வகையில் சேர்த்தே கவிகள் நமக்குச் சித்திரித்துக் காட்டுவார்கள். பாமர மக்களாகிய நமக்கு அந்தப் பாத்திரங்களினின்று அடைய வேண்டிய அறிவு ரொம்பவும் இருக்கிறபடியால் நம்முடைய கவனத்தை இழுக்கும்படி அந்தப் பாத்திரங்களின் சித்திரத்தில் மிகுந்த ஒளி புகுத்தியே அமைப்பார்கள். வால்மீகி மகா காவியத்திலும் ராவண கும்பகர்ண சித்திரங்களில் இதைப் பார்க்கலாம். உணவு பதார்த்தங்களில் கசப்பிலும் மிக ருசி உண்டு அல்லவா? அத்தகைய பண்டங்களை நன்றாகச் சமைப்பதே சாமர்த்தியம். அதைப் போலவே காவியத்திலும்.
ஹனுமான் லங்கையில் செய்த வீரச் செயல்களும் நாச காரியங்களும் ராக்ஷச ராஜனுக்கு ஓரளவு வெட்கம் உண்டாக்கின. பயமும் ஏற்பட்டது. ஆன படியால் சபை கூட்டி மந்திராலோசனை செய்தான்.
ஹனுமான் செய்த காரியங்களைப் பற்றிக் கொஞ்சம் அவமானப்பட்டுத் தலை குனிந்தே பேசினான்.
“இதுவரையில் பகைவர் யாரும் நம்முடைய நகரத்துக்குள்ளே புகுந்து பார்த்ததில்லை. ராமனிடமிருந்து வந்த இந்த வானரன் லங்கைக்குள் பிரவேசித்து, சிறையிலிருக்கும் ஜானகியையும் பார்த்து விட்டுப் போய்விட்டான். மாட மாளிகைகளை அழித்தான். சிறந்த வீரர்களைக் கொன்றான். நம்முடைய பிரஜைகளைப் பயத்தால் நடுங்கவும் செய்துவிட்டான். இந்த விஷயம் இத்துடன் நிற்காது. ஆகையால் மேல் நடத்த வேண்டிய காரியங்களைப் பற்றி நாம் ஆலோசிக்க வேண்டும்.
மங்களம்! அரசனுடைய நன்மையைக் கோரும் மந்திரிகளுடன் ஆலோசித்தே எல்லாக் காரியங்களையும் அரசன் செய்யவேண்டுமல்லவா? ஆதலால் இந்த சபை கூட்டினேன். நமக்கு ராமன் பகைவனாகிவிட்டான். அவனைப் பற்றி என்ன செய்யலாம் என்பதை நன்றாய் யோசிக்க வேண்டும். அரசன் தன் சாமர்த்தியம் தன் புத்தி இவற்றையே நம்பிக் காரியங்களைச் செய்து கொண்டு போவதைக் காட்டிலும் காட்டிலும் தன்னுடைய நன்மையில் பங்கும் பற்றும் கொண்ட புத்திமான்களுடன் யோசித்துக் காரியங்களைச் செய்வதே நன்மை தரும். மந்திரிகளுடைய யோசனையையும் இயற்கை விதிகளையும் புறக்கணித்து விட்டுக் காரியங்களைச் செய்து கொண்டு போகும் அரசன் கெட்டுப் போவான். மந்திரிகளிலும் நீதி சாஸ்திரத்தைக் கவனித்து உறுதியான கொள்கைகளை அனுசரித்துத் தைரியமாக யோசனை சொல்கிறவர்கள் உத்தமமான மந்திரிகள் ஆவார்கள். தங்கள் புத்தியை நேர் வழியில் செலுத்தாமலும் உறுதியான முடிவுகளுக்கு வராமலும் இப்படியும் அப்படியும் பேசுபவர்கள் உதவாத மந்திரிகளாவார்கள்.
இப்போது நம்முன் நிற்கும் விஷயம் மிகவும் முக்கியமானது. ராமனும் பலவான். அவன் படையும் பலங்கொண்டது. இவர்கள் லங்கையைத் தாக்குவது நிச்சயம். சமுத்திரத்தை ஏதோ யுக்தி செய்து கடந்து வருவார்கள் என்பது நிச்சயம். அந்த அரண் ஒன்றையே நாம் நம்பிச் சும்மா இருத்தல் சரியாகாது. நம்முடைய நகரத்தையும் சேனையையும் எப்படி பலப்படுத்திக் காப்பது என்பதையும் நம்முடைய க்ஷேமத்துக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதையும் நன்றாக யோசனை செய்து சொல்லுவீர்களாக” என்றான் ராக்ஷச மன்னன்.
*
அரசன் சொன்னதைக் கேட்ட சபையோர் அனைவரும் ஒரே அபிப்பிராயமாகப் பேச ஆரம்பித்தார்கள்.
“மகாராஜா! நம்முடைய சேனாபலமும் ஆயுத பலமும் பிரபஞ்சத்தில் நிகரற்றதாக இருக்கத் தாங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? எந்தப் பகைவன் இந்தக் கோட்டையையாவது தங்களுடைய சேனையையாவது எதிர்த்து வெற்றி பெற முடியும்? தங்களுடைய பலம் பகைவர்களுக்குத் தெரியாதா?
போகவதீ நகரம் சென்று நாகராஜனை எதிர்த்துத் தாங்கள் வெற்றி பெறவில்லையா? மகா பலவானான குபேரனையும் அவனுடைய யக்ஷர்களையும் தாக்கித் தோற்கடித்துப் புஷ்பக விமானத்தையும் லங்கையையும் தாங்கள் வெற்றியுடன் அடையவில்லையா?
மயன் தங்களுக்குப் பயந்து நட்பு செய்து கொண்டு தன் மகளையே தங்களுக்குத் தந்து விவாகம் செய்து கொடுத்தான் அல்லவா? பாதாளத்தில் எத்தனையோ நகரங்களைத் தாங்கள் தாக்கி வெற்றி பெற்றிருக்கிறீர்கள். காலகேயர்களோடு யுத்தம் செய்து வெற்றி பெற்றீர்கள். தங்களுடைய பல பராக்கிரமத்திற்கு எல்லையேயில்லை. வருணனுடைய புத்திரர்களையும் யமனையும் கூட அபயம் கேட்கச் செய்தீர்கள். இந்த ராமன் எம்மாத்திரம்? வீரன் இந்திரஜித்து ஒருவன் போதாதா இந்த ராமனையும் அவன் வானர சேனையையும் அழிக்க? இந்திரனையே பிடித்து வந்து சிறையில் வைத்து அடக்கி, 'ஓடிப்போ' என்று சொல்லித் திருப்பி அனுப்பவில்லையா? இந்த ராமனும் அவனுடைய வானரர்களும் எம்மாத்திரம்? இந்திரஜித்தை அனுப்பி இந்த வானர சேனையை அழித்து விட்டு வர உத்தரவு கொடுத்தீர்களானால் காரியம் முடிந்தது. ஏன் கவலைப் படுகிறீர்கள்?”
இவ்வாறு சொல்லித் தங்கள் அரசனைப் புகழ்ந்தார்கள்.
மகாசூரன், பெரிய கருத்த மேகம் போன்ற சேனாபதி பிரஹஸ்தன் எழுந்தான்.
“தேவ தானவ கந்தர்வர்களையெல்லாம் யுத்தம் செய்து அடக்கின மன்னனாகிய தாங்கள் இந்த அற்ப மனிதனைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்?
வானரம் ஒன்று வந்தபோது நாம் அஜாக்கிரதையாக இருந்து ஏமாந்தோம். நம்முடைய அஜாக்கிரதையை உபயோகித்துக் கொண்டு ஹனுமான் துஷ்டத்தனம் செய்தான். அது மறுபடியும் நடக்க விடுவோமா? இங்கே அவன் மறுபடி வந்தால் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த வானர ஜாதியையே நிர்மூலம் செய்து விடுவேன். உத்தரவு கொடுங்கள். தாங்கள் செய்து விட்ட ஒரு தவற்றின் பயனாக அபாயம் வந்து விட்டது என்று கவலைப் பட வேண்டியதில்லை” என்றான்.
அடுத்தாற் போல் துர்முகன் மிகக் கோபத்தோடு எழுந்தான். “நம்மையெல்லாம் அவமதித்த அந்த வானரனை நாம் இனி விட முடியாது. நான் இந்தக் கணமே சென்று அந்த வானர சேனையை அடியோடு அழித்து விட்டுத் திரும்பி வருகிறேன்” என்று கர்ஜித்தான்.
வஜ்ரதம்ஷ்டிரன் என்கிற சூரன் பயங்கரமான உலக்கையை எடுத்துக் கொண்டு நின்றான். “இதோ இந்த உலக்கை, பகைவர்களுடைய ரத்தமும் மாமிசமும் கழுவாமல் பூசிக்கிடக்கிறது. குரங்கைப் பற்றி ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? ராமனும் லக்ஷ்மணனும் அல்லவா நம்முடைய பகைவர்கள்? அவர்களை நான் வதம் செய்து அந்த வானர சேனையையும் அழித்து விட்டுத் திரும்புகிறேன். என்னை அனுப்புவீர்களாக!
நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். கேட்பீர்களாக. சில ராக்ஷச சூரர்களை மானுட வேஷம் தரித்து, ராமனிடம் போகச் சொல்வோம். போய், ‘பரதன் நம்மை உம்மிடம் அனுப்பினான். பெருஞ்சேனை பின்னால் வருகிறது’ என்று சொல்லி ஏமாற்றி அவனையும் அவனுடைய சேனையையும் அஜாக்கிரதையாக இருக்கச் செய்து ராக்ஷஸ சேனை ஆகாய மார்க்கமாகச் சென்று அவர்கள் அனைவரையும் அக்கரையிலேயே வதம் செய்து விடலாம். இது என்னுடைய யோசனை” என்றான்.
கும்பகர்ணனுடைய குமாரன் நிகும்பன் எழுந்து, “நீங்கள் அனைவரும் இவ்விடமே அரசனுடன் இருங்கள். நான் போய் இந்தச் சத்துருக் கூட்டத்தைக் கொன்று விட்டுத் திரும்பி வந்து உங்களுக்குச் சமாசாரம் சொல்லுகிறேன்” என்றான்.
*
இப்படி ஒருவர் பின் ஒருவராக எழுந்து ராவணனைத் திருப்தி செய்ய வீரம் பேசினார்கள். எல்லாரும் கூட்டமாக எழுந்து ஆயுதங்களைத் தூக்கிக் கர்ஜித்தார்கள்.
எல்லாரையும் உட்காரச் சொல்லி ராவணனுடைய தம்பி விபீஷணன் எழுந்து கைகூப்பிப் பேசலானான்:
“அண்ணா! இவர்கள் சொல்லும் யோசனைகள் காதுக்கு இனிமையாக இருந்தாலும், சரியானதல்ல. உமக்கு நன்மை தராது. நீதி சாஸ்திரத்துக்கு விரோதமாக ஒரு காரியம் செய்தால் அதனால் நஷ்டம் நேரிடும். சாம தான பேத உபாயங்களைப் பிரயோகிக்க முடியுமா என்று முதலில் பார்த்து அவை முடியாவிட்டாலே தான் தண்டோபாயத்தைப் பகைவன் பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் சொல்லுவது போல் உடனே யுத்தம் ஆரம்பித்து விட்டால் லங்கை நாசமாகும். நாமும் அழிந்து போவோம். தருமத்தையும் யோசிக்க வேண்டும். ராமனுடைய மனைவியைத் தாங்கள் எடுத்து வந்தது கொஞ்சமும் நியாயமாகாது. மகா பாபமான காரியம். அந்தப் பாபத்தை முதலில் துடைத்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும். ராமன் நமக்கு என்ன தீங்கு செய்தான்? தண்டகாரண்யத்தில் ராமனால் செய்யப்பட்ட காரியங்களெல்லாம் தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களையும் ரக்ஷித்துக் கொள்ளத் தானே நடந்தன? அவனைக் கொல்ல வந்தவர்கள் பேரில்தான் அவன் யுத்தம் செய்து அவர்களைக் கொன்றான். அவன் மனைவியை அபகரித்துவர இவை எப்படிக் காரணமாகும். அவன் மேல் நமக்குக் கோபமிருந்தால் அவனை நாம் எதிர்த்து யுத்தம் செய்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர்கள் இல்லாத சமயம் பார்த்து சீதையைத் தூக்கி வந்தது பாபமாகும்.
நம் பேரில் குற்றமிருக்க நாம் முதலில் தண்டோபாயம் கையாளுவது சரியல்ல. ராமனுடைய பலத்தை நாம் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் சேனா பலத்தையும் சரியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஹனுமானுடைய பலத்தையும், சாமர்த்தியத்தையும் கண்டோம். அவனைப் பற்றி அலட்சியமாகப் பேசுவதில் பயனில்லை. அவன் செயல்களைக் கண்டு யாரே அதிசயப்படாதிருப்பார்? நம்முடைய பலம் பெரிதாயினும் எதிரியின் பலத்தோடு ஒத்துப் பார்த்தே யுத்தம் செய்யலாமா அல்லது யுத்தமில்லாமல் தீர்த்துக் கொள்ளுவது நலமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். சீதையை முதலில் திருப்பித் தந்துவிட வேண்டியது அவசியம். இதுவே என்னுடைய யோசனை. லங்கையை ராமனும் வானரர்களும் தாக்குவதற்கு முன் சீதையைத் திருப்பித் தந்து விடுவீர். அண்ணா! உமக்கு நான் ஹிதத்தைச் சொல்லுகிறேன். கோபித்துக் கொள்ள வேண்டாம். செய்த தவற்றை முதலில் திருத்திக் கொண்டு பிறகு மற்ற யோசனை செய்யலாம்” என்று கைகூப்பி வணங்கி விபீஷணன் தன் தமையனான அரசனைப் பணிவுடன் வேண்டிக் கொண்டான்.
முதலில் தன்னுடைய மந்திரிகளும் சேனாபதிகளும் பேசிய வீரப் பேச்சுகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த போதிலும் ராவணனுடைய மனத்தில் சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. எனவே, விபீஷணன் பேசியதைக் கேட்ட பிறகு “மறு நாள் திரும்பக் கூடி யோசிக்கலாம்” என்று சபையை ஒத்திப் போட்டு அந்தப்புரம் சென்றான்.
கருத்துரையிடுக