“யாராலும் செய்ய முடியாத ஒரு காரியத்தை, ஏன், யாராலும் நினைக்கக்கூட முடியாத ஒரு காரியத்தை ஹனுமான் செய்து முடித்தான். இவனுக்கு நான் என்ன பிரதியுபகாரம் செய்து திருப்தியடைய முடியும்?” என்று ராமசந்திரன் ஹனுமானைக் கட்டியணைத்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டான். பிறகு மேல் நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றி யோசித்தான்.
“சுக்ரீவ! ஹனுமான் அற்புதமான காரியம் செய்தான். ராக்ஷசர்களால் காக்கப்பட்ட லங்கா நகரத்தில் புகுந்து சீதையைக் கண்டு அவளுக்குத் தைரியம் சொல்லி அவளுடைய உயிரைக் காப்பாற்றினான். அவளைப் பற்றி க்ஷேம சமாசாரம் கொண்டு வந்து என்னையும் காப்பாற்றினான். ஆனால் இப்போது சமுத்திரத்தை எப்படித் தாண்டப் போகிறோம்? உன்னுடைய சேனை எவ்வாறு அக்கரை போய்ச் சேருவது? ராவணனுடைய நகரத்தையும் ராக்ஷச சேனையையும் தாக்க வேண்டுமானால் முதலில் நாம் இந்தக் கடலைத் தாண்ட வேண்டுமல்லவா? இதற்கு வழி தோன்றவில்லை. ஹனுமான் செய்த பெருங்காரியமும் அதனால் உண்டான மகிழ்ச்சியும் இந்தக் கவலையில் கரைந்து போவதாக இருக்கிறது” என்று சொல்லி தியானத்தில் மூழ்கினான்.
ராமனுடைய கவலையைக் கண்டு வானர ராஜன், “இதுவென்ன, ராமனே! நீரும் இப்படி மனத்தாழ்ச்சியடையலாமா? உமக்கு என்ன பயம்? இதோ என் வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் உமக்காக உயிரைக் கொடுக்கக் காத்திருக்கிறார்கள். சந்தோஷமாகவே உயிரைக் கொடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். கவலைப்படலாகாது. கவலை அதைரியத்தை உண்டாக்கும். மனத்தைக் கவலையில் செலுத்தாதீர். உம்மையும் தம்பியையும் லங்கைக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பது எங்கள் காரியம். அதைப் பற்றிச் சந்தேகப்பட வேண்டாம். நீர் பகைவனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வராமற் போவதில்லை. இதை உறுதியாக நம்புவீர். லங்கையை எப்போது ஹனுமான் கண்டானோ அப்போது அந்தக் கோட்டை அழிந்தது என்று வைத்துக் கொள்வீர். சோகத்தில் பயனில்லை. சோகம் சூரனுக்குப் பெரும்பகை. அது தைரியத்தை அழிக்கும். அதை உடனே விலக்குவீர். எல்லாம் தெரிந்த உமக்கு நான் ஏன் சொல்ல வேண்டும்? உமக்குத் துணை நாம் இருக்க நீர் ஏன் கவலைப்பட வேண்டும்? நானும் என்னுடைய வானரர்களும் உமக்குத் துணையாக இருக்க, வில் பிடித்து நீர் நின்றால் உம்மைத் தடுப்பவர் யார்? இனி சோகத்தை நீக்கி க்ஷத்திரியனுக்குரிய ரோஷத்தை மேற்கொள்வீர். கடலை எவ்வாறு தாண்டுவது என்பதை உம்முடைய நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆராய்வீர். என்னுடைய வானர வீரர்களுடைய சக்தியை அறிந்து கொண்டு அவர்களைப் பயன்படுத்திக் கொள்வீர்! நமக்கு வெற்றி நிச்சயம். என் உள்ளத்தில் எழும் உணர்ச்சியே அதற்குச் சாக்ஷியாகும் ஒரு நிமித்தம்” என்றான்.
இவ்வாறு தேற்றி வானர ராஜன் ராமனை உற்சாகப்படுத்தினான். ராமனும் ஹனுமானும் பிறகு லங்கையைப் பற்றிப் பேசி நகரம், கோட்டை, அரண் முதலியவைகளின் பலத்தைச் சக்கரவர்த்தித் திருமகன் கேட்டு அறிந்து கொண்டான்.
லங்கையின் ஐசுவரியம், சுபிட்சம், ராக்ஷசர்களின் சந்தோஷம், ராவணனிடம் அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, அன்பு இவற்றையெல்லாம் ஹனுமான் ஒன்றும் மறைக்காமல் சொன்னான். ராவணனுடைய சேனா பலம், கோட்டையின் பலம், அதன் அரண்களின் அமைப்பு, மிகக் கவனமாகக் காவல் காக்கும் சேனா பலம், கல்லெறி யந்திரங்கள், மதில் சுவர்கள். வாயில்கள், அகழிகள், அகழிகளின் மேல் வேண்டிய போது இறக்குவதும் மேலே தூக்கி விடுவதுமான மரப் பாலங்கள், இவையெல்லாம் எவ்வளவு ஜாக்கிரதையாகவும் பலமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஹனுமான் ராமனுக்கு எடுத்துச் சொன்னான். கடற்கரையைப் பற்றியும் சொன்னான். கப்பல்கள் அங்கே அண்ட முடியாது. “திரிகூட மலையும் லங்கா நகரமும் கோட்டையும் எந்தச் சத்துருவும் பக்கத்தில் நெருங்க முடியாத முறையில் ராவணனால் காக்கப்பட்டு வருகின்றன. ராவணனுடைய பலமும், செல்வமும், சேனாபலமும் சொல்லுக்கு அடங்காதவை. ஆயினும் நம்முடைய வானர சேனைக்கு இவையெல்லாம் அழிக்கும் சக்தி உண்டு என்று உறுதியாக இருப்பீராக. அங்கதன், த்விவிதன், மைந்தன், ஜாம்புவான், பனஸன், நளன், நீலன், இந்த நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். பெரும் படையும் இருக்கிறது. தரையைத் தீண்டாமல் மேலே கிளம்பிச் சென்று லங்கையை அழிப்போம். அதன் மலையரணையும் காட்டரணையும் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. உடைத்து நாசம் செய்வோம். நல்ல முகூர்த்தம் பார்த்துப் புறப்பட உத்தரவு கொடுங்கள்” என்று ஹனுமான் சொன்னான்.
*
உத்தரப் பங்குனி நட்சத்திரத்தன்று வெற்றி தரும் முகூர்த்தமான மத்தியான காலத்தில் வானரப் படை தெற்குக் கடலை நோக்கிப் புறப்பட்டது. புறப்படும் போது நல்ல சகுனங்கள் கண்டார்கள். ராமனும் சுக்ரீவனும் லக்ஷ்மணனும் பேசிக்கொண்டு சென்றார்கள்.
“நாம் புறப்பட்டோம் என்பதைச் சீதை அறிந்தால் தைரியமடைந்து உயிரை வைத்துக் கொண்டிருப்பாள்” என்றான் ராமன்.
மார்க்கமறிந்த படை வீரர்கள் சிலர் முன்னால் சென்று போகும் வழியில் பகைவர்கள் மறைந்திருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டு சென்றார்கள். பெருஞ் சேனைக்கு உணவும் தாகத்துக்குத் தண்ணீரும் கிடைக்கும் பிரதேசமாகப் பார்த்துக் கொண்டு சென்றார்கள். வானரப்படை வெகு வேகமாக மலைகளையும் காடுகளையும் தாண்டிச் சென்றது. ராமனையும் லக்ஷ்மணனையும் வானரர்கள் தூக்கிச் சென்றார்கள்.
சேனையில் உற்சாகம் பெருகி வளர்ந்தது. குதித்துக் கொண்டும், கர்ஜித்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் வானரர்கள் சென்றார்கள். ராவணனை 'நான் கொல்வேன்' 'நான் கொல்வேன்' என்று போட்டி போட்டுப் பேசிக்கொண்டு சென்றதை ராமன் கேட்டு உற்சாகம் அடைந்தான். நீலனும் குமுதனும் சேனைக்கு முன்புறமாக மார்க்கத்தைச் சோதித்துக் கொண்டு சென்றார்கள். பின்னாலும் சிறந்த வீரர்கள் சேனையைக் காத்து வந்தார்கள். ராஜா சுக்ரீவனும் ராம லக்ஷ்மணர்களும் சேனை மத்திய பாகத்தில் சென்றார்கள்.
வழியில் வந்த நகரங்களுக்காவது கிராமங்களுக்காவது எவ்வித சேதமும் செய்யாமல் செல்ல வேண்டுமென்று ராமனுடைய கண்டிப்பான உத்தரவு.
படையின் கோஷம் சமுத்திரத்தின் சப்தம்போல் எட்டுத் திசைகளிலும் நிறைந்தது. தூசி ஆகாயம் அளாவிக் கிளம்பிற்று.
மகேந்திர மலையண்டை வந்ததும் ராமன் மலை மேல் ஏறிக் கடலைப் பார்த்தான்.
“இனி இந்த சமுத்திரத்தை எப்படி நம்முடைய சேனை கடப்பது என்பதைப் பற்றித் தீர்மானிக்க வேண்டும். அதுவரையில் இவ்விடம் வனத்தில் சேனை தங்கலாம்” என்றான் ராமன். அவ்வாறே சுக்ரீவன் படைவீரர்களுக்கு ஆணையிட்டான்.
சமுத்திரக்கரை வனத்தில் வானர சேனை தங்கிற்று. பகைவர்களுடைய சூழ்ச்சியால் யாதொரு தீங்கும் ஏற்படாமல் வீரர்கள் நான்கு பக்கமும் ஜாக்கிரதையாகப் பார்த்து வந்தார்கள். எல்லாருக்கும் சௌகரியமாகத் தங்குமிடம் அமைந்ததா என்று சுக்ரீவனும் ராம லக்ஷ்மணர்களும் பார்த்துத் திருப்தியடைந்த பின் லக்ஷ்மணனுடன் தனியாக உட்கார்ந்து ராமன் பேசினான்.
“பிரியமான ஒரு பொருளை இழந்துவிட்டால் நாளடைவில் அதன் நினைவும் அதை விட்டுப் பிரிந்த துயரமும் குறைந்து போகும் என்று சொல்லுகிறார்களே? ஆனால் லக்ஷ்மணா! சீதையின் பிரிவைப் பற்றி நான் இதைக் காணவில்லை” என்றான்.
“ராவணன் சீதையைப் பிடித்துத் தூக்கிப்போகும் போது, 'ஹா நாதா! ஹா ராமா! ஹா லக்ஷ்மணா!' என்று சீதை கத்தினாளே! நாம் உதவாமல் போனோமே. அப்போது அவள் பட்ட துயரத்தை எண்ண எண்ண என் துக்கம் கடல்போல் பெருகுகிறதே. நான் என்ன செய்வேன்? விஷத்தைக் குடித்துவிட்டு ஒவ்வொரு அவயவமும் எரிகிறதுபோல் என் அவயவங்கள் எரிகின்றன. தேகம் முழுதும் தீக்கொளுத்தினாற்போல் எரிகிறதே! கொடிய ராக்ஷசிகளிடையில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கிறாளே! ஜனகன் மகள், தசரத சக்கரவர்த்தி வீட்டில் புகுந்த மருமகள், தரையில் அரக்கிகளால் சூழப்பட்டுச் சிறையில் கிடக்கிறாளே!” என்று ராமன் துக்கப்பட்டுப் பிரலாபித்தான்.
“ராம! துக்கப்படாதே! ராவணனை வதம் செய்து சீதையை வெற்றியுடன் அயோத்திக்கு அழைத்துச் செல்லும் நாள் கிட்டி வந்தது! தேவகன்னியைப் போல் அயோத்தியில் பிரவேசிப்பாள்! துக்கத்தை ஒழித்துத் தைரியத்தை மேற்கொள்வீர்!” என்றான் தம்பி.
கருத்துரையிடுக