சுக்ரீவன் ஊகித்துப் பேசிய பேச்சு ராமனுடைய காதில் அமிருதம் போல் சுவைத்தது. வானரர்கள் வருவதை அவர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது மேலே ஆகாயத்தில் பெரும் கலகலப்பு கேட்டது. வானரக் கூட்டம் கோஷம் செய்துகொண்டு வந்து இறங்கினார்கள்.
*
ஹனுமானை முன்னிட்டுக்கொண்டு அங்கதனும் வானரர்களும் வேகமாகக் கிளம்பி ராம லக்ஷ்மணர்களுடன் அரசன் சுக்ரீவன் இருந்த இடம் சென்றார்கள். ஹனுமான் ராமசந்திரனை வணங்கி, “கண்டேன் புனித தேவியை! க்ஷேமமாக இருக்கிறாள்! அவளைத் திக்கு நோக்கி வணங்குகிறேன்” என்று தெற்கே திரும்பி வணங்கினான்.
இப்படி சீதையின் உயிருக்கும் சீலத்துக்கும் ஏதொரு தீங்குமின்றி அவள் க்ஷேமமாக இருப்பதை ஹனுமான் சக்கரவர்த்தித் திருமகனுக்கு முதலில் உணர்த்தினான்.
சுக்ரீவனும் லக்ஷ்மணனும் ராமனைக் கட்டியணைத்து ஆனந்த பரவசமானார்கள்.
“வானரங்காள்! சீதை எங்கே இருக்கிறாள், எப்படி இருக்கிறாள், எப்படிக் கண்டீர்கள்? எல்லாம் விவரமாகச் சொல்லுங்கள். எனக்குப் பொறுக்க முடியவில்லை” என்றான் ராமன்.
“கண்டதையும் நடந்ததையும் எல்லாம் ராமசந்திரனுக்கு நீரே சொல்ல வேண்டும்” என்று வானரங்கள் கேட்டுக்கொள்ள, ஹனுமான் சீதையை தியானித்து, திசை நோக்கித் தலை வணங்கி நமஸ்கரித்து விட்டு நடந்த விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.
*
செய்ய வேண்டியதையெல்லாம் தைரியமாகவும் உற்சாகமாகவும் ஒருவனாகவே செய்து முடித்துவிட்டு ராமசந்திரன் முன்னிலையிலும் தன்னுடைய அரசன் முன்னிலையிலும் நிற்கும்போது ஹனுமான் மேற் கொண்ட அடக்கத்தைக் கவனிக்க வேண்டும். தான் செய்து விட்ட பெரும் காரியத்தைப்பற்றிக் கர்வப்படாமல், யுவராஜனான அங்கதன். அறிவிலும் வயதிலும் பெரியோனாகிய ஜாம்புவான், இன்னும் மற்ற வீரர்களுக்கும் மரியாதை காட்டி அவர்கள் ஏவலிடுவதற்கு முன் தான் பேசாமலிருந்தது வாயுபுத்திரனுடைய பண்பாட்டின் மகிமை.
தவிர, இயற்கையிலேயே எவனாயினும் அத்தனை கஷ்டமான காரியங்களை நிறைவேற்றிய ஒரு மகான் அதைப்பற்றித் தானே அவசரப்பட்டுப் பேச மாட்டான். இதை முனிவர் நினைவில் வைத்து இந்தப்படி சித்திரித்திருக்கிறார்.
இன்னொரு விஷயமும் இவ்விடத்தில் கவனித்தல் தகும். ஜானகியை லங்கையில் நேரில் கண்டு பணிந்தது முதற்கொண்டு பிராட்டியைத் தியானிப்பதிலும் பக்தி செலுத்துவதிலும் ஹனுமான் மிகவும் ஈடுபட்டு விட்டான். ராமபக்தியைக் காட்டிலுங்கூட பிராட்டியினிடம் அவனுக்கு உண்டாகிய பக்தி அதிகமாகி விட்டது. பரம்பொருளைத் தாயாகப் பாவித்து மகிழ்ந்த எல்லாப் பெரிய பக்தர்களுடைய அனுபவமும் இதுவே.
*
“நூறு யோஜனை அகலமுள்ள கடலைத் தாண்டித் தென் கரையிலுள்ள துஷ்டன் ராவணனுடைய லங்கா நகரத்தையடைந்தேன். அங்கே அந்தப்புரவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைக் கண்டேன். 'ராம ராம' என்று ஒரே சிந்தையாக உயிரை வைத்துக் கொண்டிருந்த அந்த ஜானகியைக் கண்டேன். அவலக்ஷண வடிவங்களைக் கொண்ட கொடிய ராக்ஷசப் பெண்களின் காவலில் மிகவும் துயரப்பட்டுக் கொண்டிருந்தாள். தலை மயிர் பின்னப் படாமலும் தரையில் படுத்தும் துக்கமும் கவலையும் நிறைந்த முகத்தினளாக உடம்பெல்லாம் நிறம் மாறிப் பனிக் காலத்துத் தாமரைக் குளம்போல் ஒளி இழந்திருந்தவளைக் கண்டேன். அரக்கனிடமிருந்து தப்புவதற்காக உயிர் நீக்க எண்ணினாள். தங்களுடைய கீர்த்தியை மெதுவாக எடுத்துச் சொல்லி அதற்கு முன் என்னை அறியாத அவளுக்குக் குரங்கான என்னிடம் நம்பிக்கை உண்டாகச் செய்தேன். பிறகு பேசினேன். உமக்கும் அரசன் சுக்ரீவனுக்கும் ஏற்பட்ட நட்பைப் பற்றி அறிவித்தேன். நீர் துயரப்பட்டுக் கொண்டிருப்பதையும் சொன்னேன். உம்முடைய குறையாத அன்பைப் பற்றிச் சொல்லி அவளை மகிழ்வித்தேன். புனித தேவி உமக்குக் கொடுக்கும்படியாக இந்த ஆபரணத்தைத் தந்தாள். ஒரு காக்கை தாங்கள் தூங்கும் போது தன்னைத் தொந்தரவு செய்ததைப் பற்றித் தாங்கள் வருத்தமுற்றதை எனக்குச் சொல்லி, தங்களுக்கு அதை நினைவூட்டச் சொன்னாள். அவளுடைய திலகம் அழிந்த ஒருசமயம் தாங்கள் மலைக் கல்லை அரைத்துத் திலகமிட்டதை நினைவூட்டச் சொன்னாள். 'ஒரு மாதம் உயிர் வைத்துக்கொண்டிருப்பேன். அதற்கு மேல் முடியாது' என்று தங்களிடம் என்னைச் சொல்லச் சொன்னாள். வானரர்களுடைய அரசனுக்கும் இது தெரியும்படியாகச் சொல்வாய் என்று எனக்கு ஆணையிட்டாள். இனி உடனே நாம் லங்கா நகரம் படையெடுத்துச் சென்று தேவியை மீட்டுக்கொண்டு வருவதைப் பற்றிச் சிந்திப்போமாக” என்று சொல்லி, சீதை கொடுத்த சிகாமணியைச் சக்கரவர்த்தித் திருமகனிடம் கொடுத்தான்.
*
அதை வாங்கி உற்று நோக்கி ராமசந்திரன் விஸ்மயமாகிப் போனான். பிறகு ஆனந்தமோ துயரமோ உணராத நிலை அடைந்தான்.
சிகாமணியை மார்பில் வைத்து ஒத்திக்கொண்டு “லக்ஷ்மணா” என்று அழுதான். “வீர வாயுவின் புத்திரனே! சீதையைக் கண்ட வீரனே! உன்னைப் போல் நானும் இப்போது அவளைக் கண்டேன்” என்று ஹனுமானைக் கட்டி அணைத்துக் கொண்டு “எல்லா நிகழ்ச்சிகளையும் விஸ்தாரமாக மறுபடியும் சொல், என் அன்புக்குரிய வீரனே! சீதை என்ன சொன்னாள், அதைத் திரும்பத் திரும்பச் சொல், ஹனுமானே! அந்த மொழிகள் தாகத்தைத் தணிக்கும் தண்ணீர் போல் சுவைக்கின்றன” என்றான்.
*
அப்படியே மாருதி எல்லா நிகழ்ச்சிகளையும் அனைவரும் கேட்க விஸ்தாரமாகச் சொல்லி, சீதை ராமனிடம் சொல்லச் சொன்ன வார்த்தைகளை அப்படியே அவளுடைய இனிய மொழிகளாகவே சொல்லி ராமன் உள்ளத்தை நீராகப் பெருகச் செய்தான்.
'”எத்தனையோ ராக்ஷசர்களைக் கொன்ற என் ராமன் ஏன் இப்படி நான் இங்கே தவித்துக் கொண்டிருக்க இன்னும் வரவில்லை? அரக்கனை சம்ஹாரம் செய்ய இன்னும் ஏன் வராமலிருக்கிறார்? ஏன் ராவணணை வதம் செய்ய லக்ஷ்மணனை அனுப்பாமலிருக்கிறார்? ஏன் வீரனானவர் என்னை உபேக்ஷித்து வருகிறார்? நான் என்ன பிழை செய்தேன்? ஒன்றும் இல்லையே!” இப்படிச் சீதை சொன்னாள். நான் அவளுக்குச் சமாதான வார்த்தைகள் சொன்னேன். 'உம்மை நினைந்து நினைந்து ராமசந்திரன் துக்கக் கடலில் மூழ்கி நிற்கிறான். கணமும் அவனுக்கு நிம்மதியில்லை. ராமனும் லக்ஷ்மணனும் உம்மை மறந்து விட்டதாக எண்ண வேண்டாம். அவர்கள் படும் துக்கத்தை விளக்கக் கூடிய மொழிகள் எனக்கில்லை. நான் போய் நீர் இவ்விடம் இருப்பதைச் சொல்ல வேண்டியது தான் தாமதம், உடனே அவர்கள் வருவார்கள். அதிக காலம் காத்திருக்க வேண்டியதில்லை. வந்து விடுவார்கள். லங்கையைச் சாம்பலாக எரிக்கப் போகிறார்கள். ராவணனை அவன் கூட்டத்தோடு வதம் செய்து அயோத்தியா நகரத்துக்கு உம்முடன் திரும்பிப் போவார்கள். எனக்கு அடையாளம் ஒன்றைத் தருவீராக. நான் உடனே போகிறேன்' என்று நான் சொன்னேன். அப்படிச் சொன்ன போது இந்தத் தலைமயிர் ஆபரணம் துணியில் முடிந்திருந்ததை அவிழ்த்து என்னிடம் தேவி தந்தாள். தந்ததும் நான் அதை என் தலையில் வைத்துப் பூஜித்து பத்திரம் செய்து கொண்டு திரும்பிச் செல்லப் புறப்பட்டேன். அப்போது அவள் 'ஹனுமானே! ராமலக்ஷ்மண சிம்மங்களுக்கும் அரசன் சுக்ரீவனுக்கும் அவர் மந்திரிகளுக்கும் என் க்ஷேம சமாசாரத்தைச் சொல்லுவாய். என்னை ராமன் அடைவதற்குத் தகுந்த வழியை அவருக்குச் சொல்லுவாய். உன்னை நம்பினேன்! நீ க்ஷேமமாய்ப் போய்ச் சேருவாயாக. மங்களம்' என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினாள். பிரபுவே! துக்கப்பட வேண்டாம். காரியத்தில் மனம் செலுத்துவீராக. பிறகு, 'எப்படி இந்தக் கடலை ராம லக்ஷ்மணர்கள் தாண்டி வருவார்கள்? வானர சேனை எப்படி லங்கை வந்து சேரும்?' என்று சீதை சந்தேகப்பட்டுத் துயரப்பட்டாள். 'சந்தேகப் படவேண்டாம். தூதனாக வந்த நான் சுக்ரீவனுடைய வானரர்களில் ஒரு சிறியவன். சிறந்த வீரனையா அரசர்கள் தூதனாக அனுப்புவார்கள்? அங்கிருக்கும் வீரர்களில் பலர் என்னைவிடப் பலசாலிகள். வானரர்களுக்குள் பூமண்டலம் முழுதும் தரையில் கால் வைக்காமல் தாவிச் சுற்றும் சக்தி கொண்டவர்கள் இருக்கிறார்கள். ராம லக்ஷ்மணர்களை நானே தூக்கிக் கடலைத் தாண்டி வர முடியும்; இவ்விடம் வில்லும் கையுமாக அவர்கள் இறங்குவார்கள். நீர் நிச்சயமாக இருக்கலாம்' என்று நான் தேவியைத் தேற்றினேன். அவளும் மனச் சாந்தியடைந்தாள்” என்றான்.
கருத்துரையிடுக