ஹனுமானைப் பார்த்து மகிழ்ச்சி மேலிட்ட வானரர்கள் மகேந்திரமலை மேல் கூடினார்கள். விருத்தனான ஜாம்புவான் வாயுபுத்திரனை அன்புடன் வரவேற்று, “நடந்ததையெல்லாம் நமக்குச் சொல். எல்லாரும் அனுபவிக்கலாம். எப்படி தேவியைக் கண்டாய், அப்போது என்னவெல்லாம் நடந்தது, அவள் எப்படியிருக்கிறாள், உடல் நிலை மன நிலை எல்லாவற்றையும் பற்றிச் சொல். ராவணன் எப்படி நடந்து கொள்ளுகிறான், அருமை ஆஞ்சனேயனே, எல்லாம் உள்ளபடி நமக்குச் சொல்லுவாய். அதன் மேல் நாம் இனி என்ன செய்ய வேண்டியது என்பதை யோசித்துத் தீர்ப்பதற்கு அனுகூலமாக இருக்கும்” என்றான்.
ஹனுமான் மனத்தால் சீதையைத் தியானித்து நமஸ்கரித்துவிட்டு அவர்களுக்கு விஷயம் சொல்ல ஆரம்பித்தான்.
“மகேந்திரமலை மேலிருந்து நான் ஆகாயத்தில் கிளம்பியது உங்களுக்குத் தெரியுமே. கிளம்பி சமுத்திரத்தைத் தாண்டி ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீர் என்று கடலிலிருந்து முன் அங்கே இல்லாத ஒரு மலை கிளம்பிற்று. ‘ஓகோ! என்னைத் தடுப்பதற்கு இது ஒன்று ஏதோ நிமிர்ந்து என் வழியை அடைக்கிறது. இதை உடைத்து எறிய வேண்டும்’ என்று நிச்சயித்தேன். நிச்சயித்துப் பொன் மயமான அந்த மலையை என் வாலால் அடித்தேன். மலை அந்த அடியை வினயமாக வாங்கிக் கொண்டு மிக இனிய குரலில் “மகனே! நான் பகைவனல்ல. உன் தந்தையால் காப்பாற்றப்பட்டு நன்றி மறவாதவன் நான். என்னைக் கொல்ல வந்த இந்திரனுடைய வஜ்ராயுதத்தினின்று தப்பி உன் தகப்பனார் வாயுவினுடைய உதவியால் பறந்து கடலில் மூழ்கி மறைந்து பிழைத்திருக்கிறேன். முன் நாட்களில் மலைகளெல்லாம் சிறகு பெற்று உலகம் பயந்து நடுங்கும்படி இங்குமங்கும் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தன. அந்தக் காலத்தில் இந்திரன் உலகத்தின் பெரும் பயத்தைத் தீர்க்க மலைகளைத் துரத்தித் துரத்தி அவற்றின் சிறகுகளை வெட்டித் தள்ளினான். அப்போது வாயு பகவான் எனக்குச் செய்த உதவியால் அல்லவா நான் சிறகுடன் பறந்து கடலில் மூழ்கித் தப்பினேன்? அந்த உதவியை நான் மறக்கவில்லை. நீ ஆகாயத்தில் தாவி யாரும் செய்யாத கஷ்டமான காரியத்தைச் செய்கிறாய். உனக்குச் சிரமம் தீர வந்து நிற்கிறேன். என் மேல் கொஞ்ச நேரம் தங்கி, இளைப்பாறிப் பிறகு ராம காரியத்தைப் பூர்த்தி செய்யச் செல்வாய்” என்றான். நான் அந்த உபசாரத்தைப் பெற அவகாசமில்லை என்று சமாதானம் சொல்லி, மலையிடம் விடைபெற்றுக் கொண்டு தங்காமல் சென்றேன்.”
இவ்வாறே பிறகு ஒன்றன்பின் ஒன்றாக சமுத்திரம் தாண்டும்போது நடந்த நிகழ்ச்சிகள், லங்கா நகரம் பிரவேசித்தபோது நடந்த நிகழ்ச்சிகள், நகரத்திலும் ராவணனுடைய அரண்மனையிலும் தேடிச் சீதையைக் காணாமல் போனது, பிறகு அசோகவனத்தில் போய்ச் சீதையைக் கண்டது, ராவணன் வந்து சீதையை வருந்திக் கேட்டுக் கொண்டது, சீதை அவனைத் துச்சமாக எண்ணிப் பேசியது, ராக்ஷசன் சீதையைப் பயமுறுத்தியது, ராக்ஷசிகள் சீதையைப் பலவாறு தொந்தரவு செய்து பயமுறுத்தியது, சீதை உயிர் நீக்க நிச்சயித்தது, பிறகு சீதையுடன் தான் பேசி ராமனைப் பற்றிச் செய்தி சொன்னது, எல்லாம் ஒன்றும் விடாமல் ஹனுமான் வானர வீரர்களுக்குச் சொன்னான்.
சீதை தனக்குச் சொன்னதையெல்லாம் கண்களில் நீர் ததும்பச் சொன்னான். பிறகு வனத்தை அழித்ததையும், ராக்ஷச வீரர்களைக் கொன்றதையும், இந்திரஜித்தால் கட்டப்பட்டு ராவணன் முன் கொண்டு போகப்பட்டதையும், வாலுக்குத் தீ வைக்கப் பட்டதையும், நகரத்தைத் தான் கொளுத்தியதையும் எல்லாம் நடந்தவாறு முழுக்கதையும் வானரர்களுக்கு. ஹனுமான் சொன்னான்.
இம்மாதிரிக் கட்டங்கள் வரும்போது வால்மீகி ராமாயணத்தில் ஒன்று நாம் காண்கிறோம். முன் நடந்த நிகழ்ச்சிகளை ஏதேனும் ஒரு பாத்திரம் வழியாகத் திரும்பச் சொல்ல நேரும் இடங்களில் தயங்காமலும் ஏதும் விடாமலும் எல்லா நிகழ்ச்சிகளையும் மிக அழகாக மறுபடியும் கவி பாடுகிறார். பாராயணமாகப் படிப்போருக்கு இது மிக ஆனந்தம் தருகிறது. விஸ்தார காவியங்களில் இது ஒரு தனி அழகு. இங்கே நான் அந்த மாதிரி நடந்ததையெல்லாம் மறுபடியும் ஹனுமான் வழியில் வைத்துத் தமிழில் சொல்லுவது சரியாக இராது. அதிகம் நீண்டுபோகும். படித்ததையே படிக்க வேண்டியதாகும். அது இந்தக் காலத்தோருக்கும் பிடிக்காது!
ஏதேனும் அபாயம் தீரவேண்டும், அல்லது எடுத்த காரியம் ஏதேனும் வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறவர்கள் சுந்தர காண்டத்தைப் பாராயணம் பண்ணுவது நம்முடைய வழக்கம். கடலைத் தாண்டும் போதும் பிறகும் நடந்த வரலாற்றை ஹனுமான் எடுத்துச் சொல்லும் இந்த அத்தியாயத்தைப் பாராயணம் செய்தால் சுந்தர காண்டம் முழுதும் பாராயணம் செய்த பலனை அடையலாம்.
நடந்த நிகழ்ச்சிகளை ஒன்றும் விடாமல் விஸ்தாரமாகச் சொல்லி முடித்து ஹனுமான் சொன்னான் :
“நம்முடைய முயற்சி இவ்வாறு சுபமாக முடிந்தது. ஆனால் இதற்கெல்லாம் மூல பலம் சீதையின் சீலமே, அவள் சக்தியே என்பதை நாம் உணரவேண்டும். என் மனத்தில் அந்தப் புனித தேவியின் காலடியில் இன்னும் நான் பணிந்தே நிற்கிறேன். சீதையை நினைக்கும்போது அவளை இந்த ராக்ஷசன் எவ்வாறு பிடித்துத் தூக்கிச் செல்ல முடிந்தது, அந்தக் கணமே எரிந்து சாம்பலாகப் போயிருக்கவேண்டுமல்லவா என்று வியக்கவேண்டி இருக்கிறது. ஆனால் ராவணனுடைய தபோபலமும் பெரிது. அது அவனை ஓரளவு இன்னும் காத்து வருகிறது. ஆயினும் இஷ்டப்பட்டால் சீதை அவனை எரித்தேயிருப்பாள். தன் கணவன் ராமசந்திரனால் இவன் தண்டனை அடைய வேண்டும் என்று சகித்துக் கொண்டிருக்கிறாள். இப்போது உங்கள் யோசனை என்ன? இப்போதே லங்கை சென்று ராவணனை வதம் செய்து லங்கையையும் அரக்கர் கூட்டத்தையும் நாமே அழித்துவிட்டுச் சீதையையும் அழைத்துக் கொண்டு ராமனிடம் தேவியைச் சமர்ப்பித்துச் சந்தோஷிக்கச் செய்யலாமா? இதைப் பற்றி நீங்கள் யோசிக்க வேண்டும்.
நமக்கு இதைச் செய்யும் சக்தி இல்லாமல் இல்லை. நான் ஒருவனாகவே அந்தக் கூட்டத்தை அடையாளமின்றி அழித்து விடுவேன். ஜாம்புவான் ஒருவரே போதும், அந்த அரக்கர் சேனை முழுவதையும் அழிக்க. வாலி புத்திரன் யுவராஜா ஒருவன் போதாதா அவர்களை சம்பூரணமாக வதம் செய்வதற்கு? பனஸன், நீலன் இவர்களுடைய பராக்கிரமம் போதும், லங்கையை ராவணனையும் சேர்த்து அழித்து வெற்றியுடன் திரும்பி வர. மைந்தன், த்விவிதன் இந்த அசுவினீ புத்திரர்கள் இருவருமே சென்று இந்தக் காரியத்தை எளிதில் முடித்துவிட்டுத் திரும்புவார்கள். பிதாமகருடைய வரங்களைப் பெற்றிருக்கிற இவர்கள் வெகு எளிதில் ராவணனைக் கொன்று வெற்றி முழக்கத்துடன் திரும்புவார்கள்.
இப்படி நமக்குள் பலர் இருக்கிறார்கள், ராவணனையும் அவன் அரக்கர் கூட்டத்தையும் அழிக்க வல்லவர்கள். லங்கையில் நான் முழக்கம் செய்துமிருக்கிறேன். ‘ராமதூதன் நான். சுக்ரீவனுடைய மந்திரி உங்களை வதம் செய்ய வந்திருக்கிறேன்’ என்று கர்ஜித்திருக்கிறேன். துஷ்டன் ராவணனுடைய நந்தவனத்தில் சிம்சுபா மரத்தடியில் ராக்ஷஸிகளால் சூழப்பட்டுச் சிறைப்பட்டுக் கிடக்கிறாள் வைதேஹீ என்கிற அந்தப் பதிவிருதா தேவி. மேகங்களால் மூடப்பட்டுத் தெரிந்தும் தெரியாமலும் இருக்கிற சந்திரனைப் போல் அசோகவனத்தில் சிறைப் பட்டுக் கிடக்கிறாள். எப்போது ராமன் வருவான் வருவான் என்று அவன் தியானமாகவே வேறு எதையும் சிந்திக்காமல் வாடி வதங்கித் தவமிருந்து வருகிறாள். கொடிய ராக்ஷஸிகள் அவளைத் துன்புறுத்திக் கொண்டிருப்பதை இந்தக் கண்களால் பார்த்தேன். காட்டில் துன்புறுத்தப்பட்ட மானைப் போல் அந்த வனத்தில் அவலக்ஷண சொரூபங்களான அரக்கிகளின் மத்தியில் அகப்பட்டுக் கொண்டு வருந்தி வருகிறாள். அவளுடன் நேரில் நின்று பேசிச் சமாதானப் படுத்தினேன். ‘ராம லக்ஷ்மணர்கள் வருவார்கள். ராமனால் ராவணன்
சீக்கிரமாகவே வதம் செய்யப்படுவான்’ என்று சொல்லியிருக்கிறேன். இனிச் செய்யவேண்டியது என்ன வென்று தீர்மானியுங்கள்” என்றான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அங்கதன் கோபக் கொதிப்புடன் குதித்தெழுந்து “நான் ஒருவனே போதும். அப்படியிருக்க நாம் இத்தனை வீரர்களும் இருக்கிறோம். இவ்வளவு நாட்களான பின் நாம் சீதையை அழைத்துப் போகாமல் ராமனிடம் வெறுங்கையாகத் திரும்பிச் செல்வது சரியல்ல. லங்கை சென்று அரக்கர் சேனையையும் ராவணனையும் வதம் செய்து சீதையுடன் கிஷ்கிந்தை திரும்புவோம்” என்றான். யுவராஜன் சொன்னதைக் கேட்ட ஜாம்புவான் மெதுவாகப் பேசினான்.
“அப்படியல்ல, என் அன்புக்குரிய ராஜகுமாரனே! நாம் ராம லக்ஷ்மணர்களிடம் விஷயத்தையெல்லாம் சொல்லி அதன்மேல் அவர்கள் சொல்வது போல் செய்யவேண்டும். ராகவனுடைய காரியத்தை அவர் எண்ணத்தின்படி முடிவு செய்ய வேண்டும். அதுவே. முறை” என்று மிக முதிர்ந்த அறிவுள்ள ஜாம்புவான் சொன்னான்.
இதுவே சரியென்று வானரக் கூட்டம் ஹனுமான் அங்கதன் எல்லாரும் உள்பட ஒப்புக் கொண்டார்கள். அங்கிருந்து ஆகாயத்தில் கிளம்பி கிஷ்கிந்தை நோக்கி மிக வேகமாகச் சென்றார்கள்.
*
வானர ராஜனுடைய நந்தவனத்துக்கு அருகில் இறங்கினார்கள். அந்த வனத்தில் புகுந்து தேன் குடித்து, பழங்கள் உண்டு, காவற்காரர்கள் என்ன சொன்னாலும் கேட்காமல் அவர்களையும் அடித்து விரட்டி எதேச்சையாக நடந்து கொண்டு தோட்டத்தையும் நாசம் செய்தார்கள். அவர்கள் செய்த களியாட்ட அட்டகாசத்தைப் பொறுக்காத ததிமுகன்,- அவன் நந்தவனத்துக்குக் காவலதிகாரியும், சுக்ரீவனுடைய மாமனும், வேகமாகச் சென்று அரசனிடம் போய் “நந்தவனம் பாழாய்ப் போயிற்று. தெற்கே சென்ற வானரர்கள் திரும்பி வந்தவர்கள் அங்கே இறங்கி வெகு மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை. என்னையே அடித்தும் குத்தியும் புறக்கணித்து அவமானப்படுத்தி இஷ்டப்படி தேன் குடித்து, பழங்கள் பறித்துத் தின்று விட்டுப் போதையாகக் கிடக்கிறார்கள். செடிகளையும் கொடிகளையும் நாசமாக்கி விட்டார்கள். இவர்களை உடனே அரசன் தண்டிக்க வேண்டும்” என்றான்.
சுக்ரீவன் விஷயத்தைக் கண்டு கொண்டான். ‘ஹனுமானும் ஜாம்புவானும் அங்கதனும் காரியசித்தியடைந்து வந்துவிட்டார்கள். வெற்றி வெறியில் இவ்வாறு செய்திருக்கிறார்கள்’ என்று உணர்ந்து கொண்டு லக்ஷ்மணனுக்கு விஷயத்தைச் சொன்னான்.
“ததிமுகனே! உடனே அவர்கள் அனைவரையும் இவ்விடம் வரச்சொல்” என்று சுக்ரீவன் உத்தரவிட்டதும் ததிமுகனும் நிலைமையை உணர்ந்து மிக வேகமாகவே சென்று அவர்களுக்கு அரசன் உத்தரவைத் தெரியப்படுத்தினான்.
கருத்துரையிடுக