பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட ஹனுமான் தான் பெற்ற வரத்தால் அந்த அஸ்திரத்தினின்று விடுதலையடையும் வரையில் ஒன்றும் செய்யாமலிருக்க வேண்டும் என்று தீர்மானித்து அரக்கப் பாமரர்கள் திட்டுவதையும் அவமானப் படுத்துவதையும் இம்சிப்பதையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டே சென்றான்.
ராவணனுடைய சபையில் அரசன் முன் அவனைக் கொண்டு போய் நிறுத்தினார்கள். தான் பட்ட துன்பமும் அவமானமும் போக ராவணனைக் கண்டதும் சீதைக்கு ராவணன் செய்த தீமையை நினைத்துப் பெருங்கோபம் மேலிட்டது. திவ்விய ஆபரணங்களும் பட்டுப் பீதாம்பரமும் கிரீடமும் பூண்டு கண் கூசும் எழிலுடன் ராவணன் அமர்ந்திருந்தான். தங்கம், ரத்தினம், வைடூரியம், முத்து, பட்டு இவற்றின் பிரகாசம் சபை முழுதும் நிறைந்தது. ராஜ லக்ஷணங்களுடன் விளங்கிய அவன் கறுத்த மேனி தேஜஸ் கொண்ட ஒரு மலைபோல் காணப்பட்டது.
“ஆஹா! இந்த மகான் தருமத்திலிருந்து பிறழாமல் சன்மார்க்கத்தில் நின்றிருந்தானாகில் இவன் ஐசுவரியம் எவ்வாறு இருந்திருக்கும்! இந்திரன் முதலியவர்கள் அனைவரும் இவனுக்கு ஈடாக மாட்டார்கள். என்ன வடிவம்! என்ன எழில்! என்ன பலம்! தான் பெற்ற வரங்களை நம்பித் துஷ்ட காரியங்களில் இறங்கிவிட்டு அல்லவோ இவன் தன் பாக்கியத்தையும் மேன்மையையும் இழந்தான்!” இவ்வாறு கோபமும் வியப்பும் இரக்கமும் கொண்டு ஹனுமான் யோசித்துக் கொண்டிருக்கையில் ராவணன் மந்திரிகளைப் பார்த்து உத்தரவிட்டான்.
“இந்தத் துஷ்டன் யார்? எங்கிருந்து வந்தான்? யார் இவனை அனுப்பியது? இந்த லங்கைக்குள் ஏன் பிரவேசித்தான்? உண்மையைச் சொல்லும்படி கேளுங்கள்!” என்றான்.
மன்னன் உத்தரவிட்டபடி மந்திரி பிரஹஸ்தன் ஹனுமானைப் பார்த்து, “குரங்கே! பயப்பட வேண்டாம்! உண்மையைச் சொன்னால் தப்பிப் போவாய். இந்திரன் உன்னை அனுப்பினானா? அல்லது நீ குபேரனுடைய ஆளா? அல்லது வேறு யார் உன்னை ஏவியது? உண்மையைச் சொல்லிவிட்டுத் தப்பித்துக் கொள். நீ ஏன் இந்த வேஷம் போட்டுக் கொண்டு இங்கு வந்திருக்கிறாய்? மறைக்காமல் சொல்!” என்றான்.
இவ்வாறு பிரஹஸ்தன் நல்ல வார்த்தைகளாகச் சொல்லிக் கேட்டான். ஹனுமான் மறுமொழியாக ராவணனைப் பார்த்துச் சொன்னான்:
“இந்திரனாவது குபேரனாவது என்னை அனுப்பவில்லை. நான் வானரன். ராக்ஷச ராஜனைப் பார்க்க விரும்பி வந்தேன். அதற்காகவே வனத்தை அழித்தேன். என்னைக் கொல்லப் பிறர் தாக்கினபடியால் அவர்களை நான் வதம் செய்தேன். வானர ராஜன் சுக்ரீவனுடைய தூதனாக நான் இங்கே வந்திருக்கிறேன். அரக்கர் மன்னனே! என் அரசன் தங்களைச் சகோதரனாகப் பாவித்து க்ஷேமம் விசாரிக்கிறார். அயோத்தி மன்னன் தசரதனுடைய புகழ் பெற்ற குமாரன் ராமசந்திரனும் வானர ராஜனும் நட்பு செய்து கொண்டிருக்கிறார்கள். சுக்ரீவனுடைய பகைவனான வாலி ராமசந்திரனால் வதம் செய்யப்பட்டான். வானர ராஜ்யப் பதவியை சுக்ரீவன் அடைந்திருக்கிறான். அயோத்தியாதிபதியாக வேண்டிய ராமசந்திரன் தந்தை வாக்கை மேற்கொண்டு தண்டகாரண்யத்தில் வனவாசம் செய்து கொண்டிருந்த காலத்தில் அங்கே தனியாக இருந்த அவருடைய தேவியைக் காணாமல் ராம லக்ஷ்மணர்கள் அவளைத் தேடி வந்தார்கள். சுக்ரீவ ராஜாவின் நட்பை அடைந்து அவன் சகாயத்தைக் கோரினார்கள். வானர ராஜன் தன் ஆட்களைப் பூவுலகம் முழுதும் தேடிப் பார்க்க அனுப்பினான். லங்கையில் தேட நான் வந்தேன். புண்ணியவதி ஜானகியை இவ்விடம் நான் கண்டேன். ராக்ஷசேசுவரனாகிய தங்களுக்குச் சகோதர அரசனுடைய தூதனாகிய நான் வணக்கமாகச் சொல்லுகிறேன். சக்கரவர்த்தித் திருமகனுக்காகவும் சொல்லுகிறேன்.
சீதாதேவியை அபகரித்துத் தூக்கி வந்தது தருமத்துக்கு விரோதம் என்பது தங்களுக்குத் தெரியும். உம்முடைய குல நாசத்துக்கு இது காரணமாகும். ரகுவீரனையும் வானரர்களையும் பகை செய்து கொண்டு அழிந்து போக வேண்டாம். சீதையை மரியாதையாக ரகுவீரனிடம் ஒப்புவித்துச் சரணமடைவீராக. சீதையை உம்முடைய அழிவுக்காக வந்த காலனாக அறிவீராக. விஷத்தை உணவாக எண்ண வேண்டாம். புத்திமான்கள் தருமத்துக்கு விரோதமான காரியங்களில் அகப்பட்டுக் கொண்டு பெரிய அபாயத்துக்கு ஆளாக மாட்டார்கள். பிறர் மனைவியை விரும்பும் பாபம் ஒருவனை வேரோடு அழித்து விடும் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். பாப காரியத்தால் தாங்கள் முன் செய்த தவமெல்லாம் அழிந்து பயனற்றுப் போகும். பிழை செய்து பெரும் பாக்கியத்தைக் கெடுத்துக் கொண்டீர். இப்போது உமக்குள்ள வழி ராமனிடம் சரண் புகுவது ஒன்றே. ராமனைப் பகைத்துக் கொண்டு உம்முடைய நாசத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம். நீர் பெற்ற வரங்கள் ரகுவீரனுக்கு எதிரில் ஒன்றும் பயன்படாது. யோசித்துப் பார்த்து உண்மை ஆபத்தை அறிந்து கொள்வீராக. வானர ராஜனுடைய தூதனாகிய நான் சொன்னதை மதித்து நல்வழியில் சென்று பிழைப்பீராக. நான் சொன்ன வார்த்தைகள் உம்முடைய சகோதரன் சுக்ரீவனுடைய தூதனாக, உம்முடைய நன்மைக்காகச் சொன்ன உண்மை வார்த்தைகள்.”
தைரியமே உருவெடுத்தவனான ஹனுமான், அரக்கனுக்கு விஷம்போல் தோன்றும் இந்த உபதேசத்தை மிகத் தெளிவான மொழிகளில் செய்தான். அதைக் கேட்ட அரக்கனுக்குக் கோபம் பொங்கிக் கண்கள் சிவந்தன.
ரோஷாவேசத்தில் “இவனைக் கொன்று விட்டு மறு வேலை பார்ப்பீர்களாக” என்றான்.
தூதனைக் கொல்வது தவறாகும் என்று சபையிலிருந்த விபீஷணன் சொன்னான். “தூதர்களைக் கொல்லுவது கூடாது என்று ராஜ நீதி அறிந்தவர்கள் அனைவரும் சொல்லி வருவதால் இதைச் செய்ய வேண்டாம். அங்கஹீனம் செய்யலாம், கசையடி கொடுக்கலாம், சூடு போட்டு விடலாம், மரண தண்டனை மட்டும் வேண்டாம்” என்று விபீஷணன் யோசனை சொன்னான்.
“பாபகாரியம் செய்தவனைக் கொல்வதில் என்ன தவறு?” என்று கேட்டான் ராவணன்.
“அப்படியல்ல, இவன் என்ன குற்றம் செய்தவனாக இருந்தாலும், அது பிறருடைய ஏவலினால் செய்யப்பட்டது. அவர்களை விட்டு விட்டு வெறும் கருவியாக வந்த ஒரு சாரனையோ தூதனையோ பிடித்துக் கொல்வதில் ஒரு பயனுமில்லை. இவனை யார் அனுப்பினார்களோ அவர்களைத் தண்டிப்பதற்கு வழி தேடுவீராக. அவர்களைத் தண்டிக்க வேண்டுமானால் அவர்கள் இவ்விடம் வருவார்கள். அப்போது அவர்களைச் சரியான முறையில் தண்டிக்கலாம். இவனைக் கொன்று விட்டால் நம் எதிரிகள் இங்கே வருவதற்கு இடமே இராது. இவன் உயிருடன் திரும்பிப் போய்ச் சொன்னால் அவர்கள் வந்து நம்மைத் தாக்குவார்கள். அப்போது அவர்கள் சரியான தண்டனையை நம்முடைய பலத்தால் அடைவார்கள். அற்பமான ஒரு சாரனைக் கொல்வதில் என்ன புகழ்? என்ன பிரயோசனம்? ராஜ தருமத்திலிருந்து தவறினது ஒன்றே நிற்கும்” என்றான் விபீஷணன் வினயமாக.
இந்த யோசனையை ராவணன் ஒப்புக் கொண்டான். “சரி, வானரத்துக்கு முக்கியமான லட்சணம் அதன் வால். இவன் வாலைக் கொளுத்தி அடித்துத் துரத்தி விடுங்கள்” என்றான் ராவணேசுவரன்.
இப்படி அரக்கர் மன்னன் சொன்னதும் வேலைக்காரர்கள் ஹனுமானை வெளியே கொண்டு போனார்கள். வாலுக்குப் பழந்துணிகளைக் கொண்டு நன்றாகச் சுற்றினார்கள். வால் வளர்ந்தது. வளர வளர, கிடைத்த பழந்துணிகளைக் கொண்டு சுற்றி எண்ணெய் விட்டு நெருப்பு வைத்து விட்டார்கள். தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. கயிற்றால் கட்டப்பட்ட ஹனுமானை லங்கா நகரத்துத் தெருக்கள் தோறும் இழுத்துச் சென்றார்கள்.
“இதோ நம் நகரத்துக்கு வந்த திருடன்!” என்று பெண்கள் குழந்தைகள் எல்லாரும் பார்த்துப் பரிகசித்துச் சந்தோஷப் படும்படியாக ராக்ஷசர்கள் ஹனுமானை ஊரில் எல்லாத் தெருக்கள் வழியாகவும் பெரும் வாத்திய கோஷங்களுடன் கொண்டு போய்ப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அசோகவனத்தில் சீதைக்கு ராக்ஷசிகள் சொன்னார்கள். “உன்னோடு பேசிற்றே அந்தத் திருட்டுக் குரங்கு, அதற்கு என்னவாயிற்று தெரியுமா? வாலுக்கு எண்ணெய்த் துணி சுற்றி நெருப்பு வைத்துவிட்டார்கள். வால் எரிந்து கொண்டிருக்கிறது. அவனை இழுத்துக் கொண்டு ஊர்வலம் செய்கிறார்கள்” என்று சொல்லி சீதையைப் பரிகசித்தார்கள்.
சீதை அக்கினி மூட்டி, “ஹே! அக்கினியே, நான் செய்த புண்ணியம் ஏதேனும் இருந்தால், நான் உண்மைப் பதிவிரதையானால் நீ ஹனுமானுக்குக் குளிர்ந்து போவாயாக” என்று பிரார்த்தித்தாள்.
ஹனுமானும் எல்லர் அவமானத்தையும் அடிகளையும் அக்கிரமங்களையும் பொறுத்துக் கொண்டு தெருத் தெருவாக எல்லா இடங்களிலும் பார்த்துக் கொண்டு சென்றான். நகரத்தில் எல்லாத் தெருக்கள் சந்துகளிலிருக்கும் பெண்களும் குழந்தைகளும் வேடிக்கை பார்க்கட்டும் என்று மாருதியை எல்லா இடங்களுக்கும் கொண்டு போனார்கள். அவனும் பேசாமல் நகரத்தின் கோட்டை முதலிய ரகசியங்கள் முற்றிலும் நன்றாகப் பார்த்துக் கொண்டே போனான். என் எஜமானனுக்கு இது உதவும்” என்று பொறுமையாகப் பார்த்துக் கொண்டே சென்றான்.
“இதுவென்ன ஆச்சரியம்! நெருப்பு வைத்திருக்கும் எண்ணெய்த் துணி மட்டும் பற்றி எரிகிறது. என் வாலுக்கோ அந்தத் தீ குளிர்ந்தே இருக்கிறது! ராம காரியத்தில் பஞ்ச பூதங்கள் உதவுகின்றன என்பதற்கு இது அடையாளம். கடலில் மலை கிளம்பி எனக்கு உபசாரம் செய்யவில்லையா? அப்படியே அக்கினி தேவனும் இப்போது என்னை வருத்தாமல் குளிர்ந்திருக்கிறான் போலிருக்கிறது. அல்லது என் தந்தை வாயுதேவனுடைய நட்பை மதித்து அக்கினி என்னை எரிக்காமல் தணிந்திருக்கிறான் போலிருக்கிறது. ஆயினும் இந்தச் சமயத்தை விட்டு விடலாகாது. இந்தத் துஷ்டர்களுக்குச் சரியான பயம் உண்டாக்கிப் போவதற்குத் தகுந்த சந்தர்ப்பம் தானாக வந்திருக்கிறது” என்று யோசிக்கலானான்.
திடீர் என்று தன் உருவத்தைச் சுருக்கிக் கொண்டு கட்டியிருந்த கட்டுகளையெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, மறுபடியும் பெரும் வடிவத்துடன், எரியும் வாலுடன் கிளம்பிப் பெரியதொரு மாளிகை மேல் குதித்து ஏறி நின்றான். கையில் ஒரு கம்பத்தைப் பிடுங்கிக் கொண்டு அதை அனைவர்களும் நடுங்கச் சுழற்றினான்.
பிறகு அங்கிருந்து மாளிகை மாளிகையாகத் தாவிக் குதித்து ஒவ்வொரு வீடும் பற்றியெரிய நெருப்பு வைத்துச் சென்றான். சிறிது நேரத்திற்குள் காற்றும் வீசிற்று. நகரமெல்லாம் தீப்பற்றி ஆகாயமளாவ எரிந்தது. அரக்கர்களும் பெண்களும் குழந்தைகளும் ‘குய்யோ முறையோ’ என்று கதறிக் கொண்டு இங்குமங்கும் அலைந்தார்கள்.
‘இந்தக் குரங்கு யமனே!’ என்று சிலர், ‘இவன் அக்கினி தேவனே!’ என்று சிலர், இன்னும் இப்படிப் பலவிதமாக ராக்ஷசர்கள் கத்திக் கொண்டு பயந்து எரியும் வீடுகளிலிருந்து தப்பியோடினார்கள்.
தான்பட்ட இம்சையை நினைத்து எரியும் லங்கையைப் பார்த்து ஹனுமான் மிக மகிழ்ச்சியடைந்தான். திரிகூட மலையில் ஒரு உயர்ந்த இடத்திலிருந்து இதைப் பார்த்துத் திருப்தியடைந்து பிறகு கடலில் போய் மூழ்கி வாலில் இருந்த நெருப்பை அணைத்து விட்டு நின்றான்.
*
‘ஐயோ, என்ன செய்தேன்! கோபத்தினால் மதியிழந்தேன். எவ்வளவு பலம் இருந்து என்ன பயன்? எவ்வளவு சாமர்த்தியம், ஐசுவரியம் இருந்தாலும் கோபத்தை அடக்கத் தெரிந்தாலல்லவோ எல்லாம் பயன்படும். சீதையும் இந்தப் பெருந் தீயில் மாண்டல்லவா போயிருக்க வேண்டும்! சர்வநாசமாக அல்லவா முடிந்தது, நான் கோபத்தில் செய்த காரியம்! ஐயோ! என்னைப் போன்ற மூடன் இல்லை, பாவி இல்லை! அரக்கர்கள் பேரில் கொண்ட கோபம் சீதையைக் கொன்றது. இனி நான் இங்கேயே உயிர் நீத்து என் வாழ்க்கையையும் வெட்கத்தையும் தீர்த்துக் கொள்ளவேண்டும்!” என்று தாங்க முடியாத துக்கத்தில் மூழ்கினான்.
அப்போது ஆகாயத்தில் யாரோ பேசுவது கேட்டது. லங்கா நகரம் தீப்பற்றியெரிவதைக் கண்ட சாரண யக்ஷர்கள் ஆகாயத்தில், “ஆஹா! என்ன அற்புதச் செயல்! ஹனுமானுடைய பராக்கிரமம் வாழ்க! சீதை இருக்கும் இடம் தவிர மிகுதி லங்கை முழுவதும் தீப்பற்றியெரிகிறது” என்று பேசி மகிழ்ந்தார்கள்.
இது ஹனுமான் காதில் பட்டது. “ஓ! பிழைத்தேன்! சீதையல்லவோ என் உயிரைக் காப்பாற்றினாள்.அவள் புண்ணியமல்லவோ நெருப்பு என்னைத் தீண்டாமல் வாலில் குளிர்ந்து நின்றது. நெருப்பு அந்தக் கற்புத்தேவியை எப்படித் தீண்டும்? அக்கினியை அக்கினி என்ன செய்யும்? நான் வைத்த நெருப்பு சீதையிடம் செல்லவில்லை. அக்கினி தேவனே உதவியிருக்கிறான். ராம காரியமல்லவா? சமுத்திர ராஜனும் மைனாகமும் உதவவில்லையா?” என்று இவ்வாறு எண்ணி உடனே அசோகவனம் சென்றான்.
சிம்சுபா மரத்தடியில் உயிருடன் உட்கார்ந்திருந்த சீதையைக் கண்ணால் கண்டு மிக மகிழ்ந்து, நமஸ்கரித்து, “தாயே! தாங்கள் க்ஷேமமாய் இருப்பதைக் கண்டேன். இது தங்கள் சக்தி. என் பாக்கியம். நான் போய் வருகிறேன்” என்றான் ஹனுமான்.
ஜானகியும் “நீயல்லவோ வீரன்! உன்னால் ஆகாத காரியமில்லை. சீக்கிரம் என் நாதன் வந்து அரக்கர்களை வீழ்த்தி, என்னை அடையச் செய்வாய். இது நீ ஒருவனே செய்ய முடியும்” என்றாள்.
“கோடிக்கணக்கான வானர சைன்யத்துடன் சுக்ரீவன் ராம லக்ஷ்மண வீரர்களுடன் இங்கு வந்து சேருவான். ராவணனும் அவன் துஷ்டக் கூட்டமும் மடிவார்கள். ரகுநந்தனன் உம்முடன் அயோத்திக்குத் திரும்பிப் போவான். துக்கப்படாதீர். மங்களம். சீக்கிரம் அவர்கள் வருவார்கள் என்று நிச்சயமாக இருப்பீராக.”
இவ்வாறு சமாதானப்படுத்தி விடைபெற்றுக் கொண்டு சென்றான். கடற்கரையில் அரிஷ்ட மலையென்ற அழகிய மலையின் பேரில் ஏறி ஆகாயத்தில் கிளம்பினான்.
வழியில் மைனாக மலை தன்னை எதிர்பார்த்து நின்றதைக் கண்டு அதைக் கையால் அன்போடு தடவிக் கொடுத்துவிட்டு, நிற்காமல் வில்லினின்று செல்லும் அம்பின் வேகத்தோடு நேராகச் சென்றான். மகேந்திர மலையின் சிகரம் தெரிந்ததும் அக்கரை வந்தது என்று அறிந்து ஒரு பெரும் கர்ஜனை செய்தான். ஆகாயத்தில் கருடனைப் போல் வரும் ஹனுமானைப் பார்த்துக் கொண்டிருந்த வானரங்கள் “வந்துவிட்டான்! வந்து விட்டான்!” என்று ஆரவாரம் செய்தார்கள். அதுவரையில் கவலையும் கண்ணீருமாக இருந்த வானரங்கள் அடங்கா மகிழ்ச்சியடைந்து குதித்தார்கள்.
ஜாம்புவான் “நிச்சயம் வெற்றியுடன் திரும்பி வருகிறான். இல்லாவிடில் இப்படிக் கர்ஜிக்கமாட்டான்” என்றான். எல்லாரும் மரங்களும் குன்றுகளும் ஏறி ஹனுமான் ஆகாயத்தில் பறந்து வருவதைப் பார்த்துக் கொண்டே மகிழ்ச்சியோடு நின்றார்கள்.
மலைகளும் மரங்களும் எல்லாம் வானரங்களால் நிறைந்து விளங்கும் காட்சியை ஆகாயத்திலிருந்து பார்த்து ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். ஆரவாரத்துக் கிடையில் மகேந்திர மலைமேல் இறங்கினான்.
கருத்துரையிடுக