73. கட்டுண்டான் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

தேவர்களுக்குச் சமான வாலிப வீரனான அக்ஷன் எட்டுக் குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறிப் போவதை வால்மீகி முனிவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறார். ராமாயணத்தில் காடுகளின் அழகையும், வீரர்கள் யுத்தம் செய்யும் அற்புதச் செயல்களையும், போரின் வேகத்தையும் முனிவர் சித்திரித்திருப்பதை நான் மொழி பெயர்த்துக் காட்ட இயலாது. காடு மிக அழகாக இருந்தது, அல்லது யுத்தம் மிகக் கோரமாக நடந்தது என்று இவ்வளவுதான் சொல்ல முடியும். முனிவருடைய சித்திரமோ, பொருள்களின் அழகுக்குத் தகுந்த சுந்தரமான தொனிகொண்ட மொழிகளும், யுத்தத்தைத் தொனித்துக் காட்டும் கம்பீர ஒலி நிறைந்த மொழித் தொடர்களும், காட்டைப் போலவே யுத்தத்தைப் போலவே ஒன்றின் மேல் ஒன்றாகக் குவிந்து விழுந்து, மனத்தைக் கொள்ளை கொண்டு போகும் நடை. யுத்தங்களில் இரு தரத்தாருடைய செயல்களையும் அற்புத கம்பீரத்துடன் வர்ணிப்பது வால்மீகி முனிவருடைய தனிச் சக்தி. ராவணனுடைய அருமைக் குமாரன் அக்ஷனுக்கும் ஹனுமானுக்கும் நடந்த யுத்தத்தைச் சொல்லும் விஸ்தார வர்ணனையை நான் தமிழ்ப் படுத்திச் சொல்லப் போவது முடியாத காரியம்.


தவத்தால் பெற்ற தங்கமய ரதத்தில் ராவண குமாரன் ஏறிச் சென்றான். கல் தோரணத்தின் மேல் பயமின்றிக் கம்பீரமாக உட்கார்ந்திருந்த ஹனுமானைக் கண்டான். காலாக்கினி போல் சுடர் விட்டு எரிந்து நின்ற அந்த உருவத்தைக் கண்ட அக்ஷனுடைய உள்ளத்தில் ‘இவன் எனக்குத் தகுந்த பகைவன்’ என்ற எண்ணம் உண்டாகி, அவன் தன் வீரத்தைப் பெருக்கிக் கொண்டான்.


இளம் வீரன் மூன்று கூரிய பாணங்களை எய்தான். அவை ஹனுமானுடைய உடலில் பட்டு ரத்தம் பெருகிற்று. ரத்தம் பெருகப் பெருக மாருதியின் வீரம் வளர்ந்தது. முகத்தின் பொலிவு கொழுந்து விட்டு எரிந்தது. வாலிப அரக்கனுடைய வீரத்தைக் கண்டு ஹனுமானும் மிக மகிழ்ச்சியடைந்தான்.


போர் முற்றி இருவருக்குமிடையில் கடும் யுத்தம் நடந்தது. அம்புக் கூட்டம் மேகங்கள்போல ஆகாயத்தில் கிளம்பி மாருதியை மூடின. மலைமேல் மாரி பெய்வது போல் அம்பு மழை ஹனுமானுடைய கல் போன்ற தேகத்தின் பேரில் பொழிந்தது. ஆகாயத்தில் கிளம்பி ஹனுமான் அற்புதமுறையில் பாணங்களுக்கிடையில் சஞ்சரித்து அக்ஷனைத் தாக்கினான். வானத்தில் மேகங்களைக் காற்றானது சிதறியடிப்பது போல் அம்புக் கூட்டங்களை மாருதி லட்சியம் செய்யாமல் தன் அற்புத சஞ்சாரங்களால் சிதறியடித்தான். ராக்ஷச குமாரனுடைய சாமர்த்தியம், வீரம், பொறுமை சாவதானம் இவற்றைப் பார்த்து “ஐயோ, இவனைக் கொல்ல வேண்டுமே!” என்று துயரப்பட்டு ஹனுமான் வெகு நேரம் யுத்தத்தை நீடித்து நடத்தினான்.


அரக்கனுடைய பலம் பெருகிக் கொண்டே போயிற்று. முடிவில் ஹனுமான் மனத்தை உறுதி செய்து கொண்டு அரக்கனை வதம் செய்யத் தீர்மானித்தான்.


முதலில் அக்ஷனுடைய தேரை ஒடித்துத் தீர்க்க வேண்டும் என்று ஹனுமான் நிச்சயித்து, அதன்மேல் திடீர் என்று முழு வேகத்துடன் பாய்ந்தான். தேர் பொடியாகி விழுந்தது. ஏர்க்கால் முறிந்து, கூடு கவிழ்ந்து, நாசமாகிக் குதிரைகள் மாண்டு தேரின்றித் தரையில் நின்றான் அரக்க ராஜகுமாரன்.


இதன் பின்னும் அவன் தயங்காமல் வில்லும் கத்தியுமாக ஆகாயத்தில் ஆகாயத்தில் கிளம்பினான். கிளம்பி மாருதியைத் தாக்கினான். இருவருக்கும் பெரும் போர் ஆகாயத்தில் நடந்தது. முடிவில் அக்ஷன் எலும்பெல்லாம் ஒடிந்து, நசுக்கப்பட்டுக் கீழே விழுந்து மாண்டான்.

*

ராக்ஷச குமாரன் வானரத்தால் கொல்லப்பட்டான் என்று ராவணன் அறிந்து, அவன் இதயம் துடித்தது. கிளம்பிய ரோஷத்தை அடக்கித் தன் உள்ளத்தை ஒரு நிலையில் வைத்துக் கொண்டு இந்திரனுக்குச் சமான வீரனான இந்திரஜித்தை அழைத்தான்.


“எல்லா அஸ்திரங்களையும் நன்றாகப் பயின்று அடைந்திருக்கிறாய். தேவாசுரர்களை யுத்தத்தில் வென்றிருக்கிறாய். பிதாமகனைப் பூஜித்து அவரிடமிருந்து பிரம்மாஸ்திரம் பெற்றிருக்கிறாய். உன்னை எதிர்த்து நிற்கக் கூடியவர்கள் உலகத்தில் யாருமில்லை. சோர்வு என்பதை அறியாதவன் நீ. அறிவில் சிறந்தவன் நீ. தவத்தால் சக்தியடைந்திருக்கிறாய். நீ செய்ய முடியாதது ஒன்றில்லை. காரியங்களைச் சரியாக யோசித்துச் செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. நான் அனுப்பிய கின்னரர்கள் ஜம்புமாலி, நம்முடைய மந்திரிகளின் வீர புத்திரர்கள், சேனாதிபதிகள் ஐவர், உன் தம்பி அருமை அக்ஷன்-இவ்வளவு பேர்களும் மாண்டார்கள். நீ தான் இந்தச் சத்துருவை வென்று சிறைப்படுத்தும் வல்லமை கொண்டவன். சேனா பலத்தால் இவனை வெல்ல முடியாது. கிட்ட நெருங்கிக் கை கலந்து யுத்தம் செய்வதும் இவனிடம் செல்லாது. நன்றாய் யோசித்துச் செய்ய வேண்டியதைச் செய்து, நீ இவனை எதிர்த்து வெற்றியுடன் திரும்பி வா. தவத்தால் நீ பெற்றிருக்கும் அஸ்திரமே இந்தச் சமயத்தில் பயன்படும். உன் புத்தியைச் சிதற விடாமல் யுத்தம் செய். வெற்றியுடன் திரும்பி வருவாய்” என்றான்.

*

தந்தையின் சொல்லை ஏற்றுக் கொண்டு தேவப் பிரபாவம் பெற்ற இந்திரஜித்து தந்தையை வலம் செய்து வணங்கி ஆசி பெற்றுக் கொண்டு தைரியமாகவும். உற்சாகமாகவும் அசோகவனத்தை நோக்கிச் சென்றான்.


கோரப் பற்கள் விளங்கும் நான்கு சிம்மங்கள் பூட்டிய தேரில் ஏறி நின்று வில்லின் நாணை இழுத்து சப்தம் செய்து கொண்டு ஹனுமான் இருந்த இடம் சென்றான். பருவகால ஓசை செய்தது அவன் தேர். தாமரை இலையைப் போன்ற அவனுடைய அகன்ற கண்களில் வெற்றி எழில் திகழ்ந்தது.


ராக்ஷசேந்திர குமாரனுடைய தேர் தான் இருக்குமிடத்தை நோக்கி வேகமாக வருவதைப் பார்த்த ஹனுமான் பெரு மகிழ்ச்சியடைந்தான். யுத்தத்தில் நிபுணனான இந்திரஜித்தும் ஹனுமானை உத்தேசித்து வில்லை வளைத்துக் கூர்மையான பாணங்களையும் ஆயத்தமாக வைத்துக் கொண்டான்.


பெரும் யுத்தம் நடக்குமென்று அறிந்த நாக யக்ஷ சித்தர்கள் ஆகாயத்தில் வந்து சேர்ந்தார்கள்.

இந்திரஜித்தைக் கண்டதும் ஹனுமான் கர்ஜனை செய்து தன் பெரும் சரீரத்தை இன்னும் பெருக்கிக் கொண்டான். ராக்ஷச வீரன் பேசாமல் அம்புகளைத் தொடுத்து எய்தான். தேவாசுர யுத்தத்தைப் போல் அம்புமாரி பொழிய ஆரம்பித்தது.


ஹனுமான் ஆகாயத்தில் கிளம்பி அற்புத வேகத்துடன் சஞ்சரித்து மின்னலைப் போல் வந்த கூரிய அம்புகளை வீணாக்கினான். அரக்கனுடைய பட்சத்திலிருந்து கிளம்பிய பேரிகை நாணோசை முதலிய கோஷங்களுக்குச் சமமாக வானர வீரன் தன் கர்ஜனைகளால் திக்குகள் எதிரொலிக்கச் செய்தான். இப்படி இரு வீரர்களிடையே நடந்த யுத்தம் பார்த்தவர்கள் பிரமிக்கும் வகையில் வளர்ந்து கொண்டே போயிற்று. இருவருடைய சாமர்த்தியமும் சமமாகவே இருந்தது.


எத்தனை பாணங்கள் பட்டும் ஹனுமானுடைய சக்தி குறையவில்லை. அதைப் பார்த்து, ‘இந்த வானரம் என் அம்புகளால் தோல்வியடையப் போவதில்லை. என் பாணங்கள் இவனைக் காயப் படுத்துவதாகக் காணவில்லை. தந்தை சொன்னது உண்மை. பிரம்மாஸ்திரம் பிரயோகித்தே இவனைக் கட்டிவிட வேண்டியது’ என்று ராக்ஷசன் தீர்மானித்தான்.


ராக்ஷச குமாரன் பிரம்மாஸ்திரத்தை எய்தான். அது வானர வீரனைத் தாக்கியதும் அவன் கட்டுண்டு செயலற்றுப் போனான்.


‘ஓகோ! பிதாமகருடைய அஸ்திரத்தால் கட்டுண்டேன்’ என்று மாருதி உடனே தெரிந்து கொண்டான்.


பிரம்மாவிடம் மாருதியும் வரம் பெற்றிருந்தான். அப்போது அதை நினைவுக்குத் தந்து கொண்டான். ‘ஒரு முகூர்த்த நேரமே இது என்னைக் கட்டி நிற்கும். இதனால் எனக்கு யாதொரு ஆபத்துமில்லை. கட்டுப்பட்டு நிற்கும் காலத்தில் அரக்கர்கள் என்ன செய்வார்கள் பார்க்கலாம். தூதனாக வந்த என் வேலை ஒரு வேளை இதனாலேயே பூர்த்தியாகும்’ என்று யோசித்து, பிதாமகன் தனக்குச் சிரஞ்சீவி வரம் தந்த போது அவன் இட்ட ஆக்ஞையின்படி பிரம்மாஸ்திரத்துக்கு அடங்கித் தைரியமாகவும் செயலற்றும் தரையில் விழுந்தபடி கிடந்தான்.


ஹனுமான் விழுந்து கீழே செயலற்றுக் கிடக்கிறான் என்பதைக் கண்டதும் அதுவரையில் பயந்து தூர நின்ற அரக்கர்கள் எல்லாரும் அவனைச் சுற்றிக் கொண்டார்கள். மாருதியைத் தாறுமாறாகத் திட்டிப் பேரிரைச்சலிட்டுக் கொண்டும், தங்களுடைய ராஜ குமாரனைப் புகழ்ந்தும் கூத்தாடினார்கள்.


“துண்டு துண்டாக வெட்டுவோம்! தின்று விடுவோம்! ராவணனிடம் இழுத்துப் போவோம்!” என்று பலவாறாகக் கூச்சலிட்டார்கள்.


பிறகு சிலர் “இவன் பாசாங்கு செய்வான். திடீர் என்று கிளம்பி நம்மைத் தாக்குவான்” என்று பயந்து சணல் கயிறும் தென்னங்கயிறும் கொண்டு வந்து ஹனுமானை நன்றாகக் கட்டிவிட்டு, “கட்டிவிட்டோம். இழுத்துப் போகலாம் ராவணேசுவரனண்டை”- என்று அவர்கள் மிக மகிழ்ந்து கூச்சலிட்டார்கள்.


ராக்ஷசக் கூட்டம் இப்படிச் செய்வதைத் தடுக்க. அவகாசம் பெறாத இந்திரஜித்து மிக வருத்தப்

பட்டான்.


‘ஐயோ நான் செய்தது வீணாகப் போயிற்றே!: இந்த மூடர்களுக்கு மந்திர ரகசியங்கள் தெரியவில்லை. இப்படி இவர்கள் கயிறும் சாக்குப் பைகளும் போட்டுக் கட்டிய பின் பிரம்மாஸ்திரத்தின் சக்தி ஒழிந்து போயிற்று. ஸ்தூலப் பொருள்களால் கட்டிய பின் மந்திரக் கட்டு தானாக அவிழ்ந்து போயிற்று. ஹனுமான் நாரும் கயிறும் போட்டுக் கட்டிய கட்டுகளை ஒரு கணத்தில் அறுத்து எறிந்து எழுந்து விடுவான். மறுபடி பிரம்மாஸ்திரம் பிரயோகிக்க முடியாது’ என்று எண்ணி வருத்தப்பட்டான்.


மாருதியும் நிலைமையை அறிந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்தின் கட்டு நீங்கிப் போயிற்று என்றும் கயிறுகளால் கட்டப்பட்டதுதான் மிச்சம் என்றும் அதைத் தன் தேக பலத்தால் ஒரு கணத்தில் விலக்கிக் கொள்ளலாம் என்பதையும் உணர்ந்தான். ஆன போதிலும் தன்னைக் கட்டியிழுத்துச் செல்லட்டும், ராவணனைக் கண்டு பேச அவகாசம் ஏற்பட்டது என்று நிச்சயித்து, வேண்டுமென்று பேசாமல் அவர்கள் செய்த கொடுமைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு செயலற்றே இருந்தான். அடித்தார்கள், திட்டினார்கள், ராக்ஷச ஸ்திரீகளும் பாமரர்களும் பரிகாசம் செய்யத் தெரு வழியாக இழுத்துச் சென்றார்கள்.



Post a Comment

புதியது பழையவை