72. ராம தூதன் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

நந்தவனத்துத் தோரண வாயில் மேல் உட்கார்ந்திருந்த ஹனுமானைப் பார்த்தார்கள். இவர்களைக் கண்டதும் ஹனுமானுடைய காந்தியும் வடிவமும் பலமும் இன்னும் அதிகரித்தன. “வந்தார்களா?” என்று கீழே குதித்து வாலைத் தூக்கிப் பூமியில் ஒரு அடி அடித்துத் திக்குகள் நடுங்கும்படி கர்ஜித்தான். வாயிற் கதவில் வைத்திருந்த பெரிய இரும்புத் தாழ்ப்பாள் கட்டையைப் பிடுங்கி, அதைக் கொண்டு அவர்களைத் தாக்கி அவ்வளவு பேர்களையும் எதிர்த்தான்.


குதித்துக் கிளம்பி இரும்புக் கட்டையைச் சுழற்றிச் சுழற்றி அத்தனை பேர்களையும் ஒருவர் பின் ஒருவராக வதம் செய்து விட்டு மறுபடியும் அசோகவனத்துக் கற்கம்ப வாயில்மேல் உட்கார்ந்து கர்ஜித்தான்.


“வாழ்க ராமன்! வாழ்க லக்ஷ்மணன்! வாழ்க ராஜா சுக்ரீவன்! அரக்கர்களே! உங்களுக்கு அழிவு வந்துவிட்டது. வீரன் ராமனும் வீரன் லக்ஷ்மணனும் ராஜா சுக்ரீவனும் என்னை அனுப்பியிருக்கிறார்கள். பகைவர்களை நாசம் செய்ய. நான் வந்திருக்கிறேன். ராக்ஷசர்களே! வாருங்கள்! ஆயிரம் ராவணர்களும் வரலாம். வதம் செய்ய நிற்கிறேன். சீதையைத் தலை வணங்கிப் பணிந்து ஆசி பெற்றேன். உங்கள் நகரத்தை இப்போது அழிக்கப் போகிறேன்!” என்று லங்கை நடுங்கும்படி கர்ஜித்தான்.


வந்து தாக்கின அத்தனை கிங்கரர்களும் மாண்டார்கள். ராவணனுக்குச் செய்தி எட்டியதும் அவனுடைய கண்கள் பயங்கரமாக விரிந்தன.


“என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கூறி விட்டு, உடனே நிகரற்ற வீரனான பிரஹஸ்தனுடைய மகனைக் கூப்பிட்டு, “போய் இந்த வானரத்தின் கொட்டத்தை அடக்கி விட்டு வா!” என்று உத்தரவிட்டான்.


பிரஹஸ்தனுடைய குமாரன் ஜம்புமாலி என்னும் வீர ராக்ஷசன் கவசம் பூண்டு ஆயுதங்கள் எடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து சேருவதற்குக் கொஞ்சம் தாமதமாயிற்று. அது வரையில் ஹனுமான் சும்மா இருக்கவில்லை. பக்கத்தில் ஒரு பெரிய மண்டபத்தைக் கண்டு அதன் மேல் ஏறி நின்றான். மேலே வானத்தில் இரண்டாவது சூரியன் உதித்தாற் போல் பிரகாசித்தான். தன் உடலை இன்னும் பெருக்கிக் கொண்டு ஆகாயத்தில் ஒரு பொன் மயமான மலைத் தொடரைப் போல் விளங்கினான் அவன் போட்ட கர்ஜனை லங்கா நகரத்தில் எட்டுத் திசைகளிலும் எதிரொலி செய்து எங்கும் நிரம்பிற்று. அரக்கர்களின் உள்ளம் நடுங்கிற்று.


அவன் ஏறிய அந்த மண்டபத்துக் காவலாளிகள் “இது வென்ன! பெருங்குரங்கு ஒன்று வந்து நம் தோட்டத்தை நாசமாக்குகிறதே!” என்று வெளியேறி ஹனுமானை எதிர்க்கப் பார்த்தார்கள்.

“ராமன் வாழ்க! வாழ்க லக்ஷ்மணன்! ராஜா சுக்ரீவன் வாழ்க! கோசலேந்திரனுடைய தூதன் நான். லங்கையை அழிக்க வந்திருக்கிறேன். ஹனுமான் என்கிற வாயு புத்திரன். பகைவர்கள் கூட்டத்தை நிர்மூலம் செய்ய வந்திருக்கிறேன். ஜானகியை வணங்கி ஆசிபெற்று நான் லங்கையை அழச் செய்ய வந்திருக்கிறேன். ஆயிரம் ராவணர்களை வெல்லும் பலம் பெற்றவன். மலைப் பாறைகளும் மரங்களும் பற்றி எறிந்து அரக்கர் கூட்டத்தை அழிப்பவன், வந்திருக்கிறேன்.”


இவ்வாறு இலங்கையிலுள்ள அரக்கிகளின் ஈரல்கள் துடிக்கும்படி கர்ஜித்தான்.


உடனே அந்தக் கோயில் காவலாளிகள் பற்பல ஆயுதங்களைக் கொண்டு அவனைப் பலமாகத் தாக்கினார்கள். ஹனுமான் குதித்து அந்தக் கோயிலின் பெருங்கம்பம் ஒன்றைப் பிடுங்கி எடுத்து எமனைப் போல் நின்றான். தங்கப் பூண்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பெருந்தூணைச் சுழற்றிச் சுழற்றி ஹனுமான் அவர்களுடைய பாய்ச்சலைத் தடுத்து அவர்களையும் வதம் செய்தான். அந்தக் கல்தூணை எடுத்ததும் மண்டபம் கீழே விழுந்தது. ஹனுமான் தூணைச் சுழற்றிச் சுழற்றி அடித்த வேகத்தினால் அது இங்கும் அங்கும் தாக்கி நெருப்பு கிளம்பிற்று.


“என்னைக் காட்டிலும் பலமுள்ள வானரர்கள் சுக்ரீவன் தலைமையில் வரப் போகிறார்கள். உங்களையும் உங்கள் மன்னனையும் உங்கள் நகரத்தையும் அழித்து நிர்மூலமாக்குவதற்கு வரப் போகிறார்கள். இக்ஷ்வாகு நாதனுடைய பகைமையை உங்கள் அரசன் சம்பாதித்துக் கொண்டான் அல்லவா? ஒழிந்தது லங்கை, ஒழிந்தீர்கள் அரக்கர்காள்! ஒழிந்தான் ராவணன்!” என்று கர்ஜித்தான்.


பிரஹஸ்தன் மகன் ஜம்புமாலியும் வந்து சேர்ந்தான். விரிந்த பெருங் கண்களும், பயங்கரமான பற்களும், ரத்தம் போல் சிவந்த ஆடையும், காதில் குண்டலங்களும், கையில் வில்லும், கழுத்தில் மாலையும், இடுப்பில் கத்தியுமாக, இடியோசை செய்யும் தேரில் ஏறி வந்தான்.


பெருங் கோவேறு கழுதைகள் பூட்டிய தேரைக் கண்டான் ஹனுமான். அவனும் ஆயத்தமானான்.


தேரினின்று ஜம்புமாலி வில்லை வளைத்து மாருதி பேரில் அம்புகள் எய்தான். அம்பு மாருதியின் முகத்தில் தைத்து ரத்தம் வழிந்தது. அது ஹனுமானுடைய முகத்தை இருமடங்கு அழகுறச் செய்தது. ஒரு செந்தாமரைப்பூ திடீர் என்று ஆகாயத்தில் மலர்ந்து விரிந்தது போல் காணப்பட்டது. அடிபட்ட மாருதிக்குக் கோபம் வளர்ந்து பெருகிற்று. அருகில் இருந்த ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துத் தேரின் மேல் வீசினான். பிறகு ஒரு ஆச்சா மரத்தைப் பிடுங்கி எடுத்து அதைச் சுழற்றி ஜம்புமாலியின் மேல் எறிந்தான். பிறகு மண்டபத்திலிருந்து பிடுங்கி எடுத்த ஒரு இரும்புத் தடியை வேகமாகச் சுழற்றித் தேரின் மேல் எறிந்தான். தேர் இருந்த இடம் தெரியாமல் பொடியாய்ப் போயிற்று. ஜம்புமாலியின் பெருந் தேகம் நசுக்கப்பட்டுக்கை, கால், தலை ஏதும் உருப்படி தெரியாமல் எல்லாம் பிண்டமாய்ப் போயிற்று.

*

யுத்தத்தின் முடிவை ராவணனுக்குத் தெரியப் படுத்தினார்கள். அவன் வியப்படைந்து, “இது என்ன புதிதாக இருக்கிறது? இது மிருகமல்ல, வானரமுமல்ல. இது என் பழைய பகைவர்களாகிய தேவர்களின் வேலை. ஒரு புதுப் பிராணியை உண்டாக்கி அனுப்பியிருக்கிறார்கள். இதைக் கட்டாயம் பிடித்து என் முன் கொண்டு வர வேண்டும்” என்று பெரும் வீரர்களையும் அவர்களுக்குத் துணையாகப் பெரும் சேனையுடன் அனுப்பினான்.


ராக்ஷச வீரர்கள் தேரும் படைகளுமாகச் சென்றார்கள். மதில் வாயில் மேல் நின்று அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்த ஹனுமானைப் பலமாகத் தாக்கினார்கள். அவனே வஜ்ர தேகம் பெற்ற வாயு புத்திரன். எதையும் பொருட்படுத்தவில்லை. உடம்பில் காயம்பட்டு ரத்தம் பெருகப் பெருக, அவன் கோபமும் அதனுடன் அவன் உடலும் வளர்ந்து வளர்ந்து, அனைவரும் நடுங்கும்படியாக ஆகாயத்தில் கிளம்பிக் கிளம்பி, வந்த வீரர்களையெல்லாம் முழுக் குன்றுகளும் முழு மரங்களும் எடுத்து வீசிக் கொலை செய்தான்.


திடீர் என்று தேர்களின் மேல் குதித்து அவற்றைப் பொடியாக்கினான். வந்த பெரும் வீரர்களையெல்லாம் வதம் செய்தான். படையாட்கள் பயந்து ஓடினார்கள். வந்தவர்கள் அனைவரையும் கொன்றும் துரத்தியடித்தும், லங்கா நகரத்து அரக்கர்கள் நடுங்கக் கர்ஜித்து விட்டு மறுபடியும் மதில் வாயிலின் கற்கூண்டின் மேல் உட்கார்ந்தான்.

*

தன் பெரும் படைகளின் தோல்வியையும் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஐந்து சேனாதிபதிகளின் வதத்தையும் அறிந்து ராவணன் இப்போது உண்மையில் பயந்தான்.


‘இந்தத் தனி வானரம் இவ்வளவு பலமும் பராக்கிரமமும் கொண்டு என் வீரர்களை அழித்தது சாதாரண நிகழ்ச்சியல்ல. ஏதோ தேவர்களின் சூழ்ச்சியாகக் காணப்படுகிறது’ என்று கவலைப் பட்டான். ஆயினும் தன் கவலையை வெளிக்குக் காட்டாமல் சிரித்தும் பரிகசித்துமே வந்தான்.


தன் சபையிலிருந்தவர்களைச் சுற்றிப் பார்த்தான். தன் மகன் அக்ஷன் மிக உற்சாகமாக முன் நின்றான். யுத்தத்தில் மனம் கொண்டு நின்ற தன் வீர மகனைப் பார்த்து அவனை உடனே ஹனுமானிடம் போகச் சொன்னான்.


இளஞ்சூரிய பிம்பத்தைப் போல் ஜொலித்த தங்க மயத்தேரின் மேல் எல்லா ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு அக்ஷன் சென்றான்.



Post a Comment

புதியது பழையவை