சீதையிடம் விடைபெற்றுக் கொண்டு போன ஹனுமான் வடக்கே சென்று மதில் மேல் உட்கார்ந்து யோசித்தான்.
‘சீதைக்குத் தைரியம் ஊட்டவும், ராவணனுக்கும் அவன் அரக்கர் கூட்டத்துக்கும் சரியான பயம் உண்டாக்கி, அவளை எந்த விதத்திலும் துன்பப் படுத்தாமலிருக்க என்ன செய்யலாம்? சும்மா நான் திரும்பி விட்டால் ராவணனுக்கு நான் வந்தது கூடத் தெரியாது. அவன்பாட்டுக்கு முன்போல் கர்வம் கொண்டவனாகவே இருப்பான். நான் ராமனுக்குச் செய்தியைச் சொல்லிச் சேனையுடன் லங்கைக்குத் திரும்பி வரும் வரையில் சீதை க்ஷேமமாக இருக்கவேண்டுமல்லவா? சீதையை ராவணன் துன்புறுத்தாமலிருப்பதற்காக அவன் உள்ளத்தில் போதிய பயத்தை உண்டாக்க வேண்டும். அதைச் செய்துவிட்டுத்தான் நான் திரும்ப வேண்டும். அரக்கர்களைச் சமாதான முறையில் நல்வழியில் நிற்கச் செய்ய முடியாது. இந்த மூர்க்கனிடம் அளவற்ற செல்வம் இருக்கிறது. இவர்களுக்குள் பேதம் உண்டாக்குவதும் ஆகாத காரியம். சாம தான பேதம் இவை பயனில்லை. மேல் நடக்கவேண்டிய காரியம் கெட்டுப் போகாத அளவில் இவர்கள் உள்ளத்தில் போதிய பயத்தை உண்டாக்கிவிட்டு நான் போகவேண்டும். அப்படிச் செய்தால் சீதையின் க்ஷேமம் காக்கப்படும். இந்தக் காரியத்தையும் முடித்து விட்டு, வேகமாகத் திரும்புவேன்’ என்று நிச்சயித்தான்.
உடனே பெரிய வடிவம் கொண்டு அந்த அழகிய அந்தப்புரப் பூந்தோட்டத்தை நாசம் செய்ய ஆரம்பித்தான். மரங்களைப் படபடவென்று வீழ்த்தித் தள்ளி, கொடிப் பந்தல்களை நாசம் செய்து, வாவிகளையும் செய்குன்றுகளையும் அலங்காரங்களையும் எல்லாவற்றையும் கெடுத்துப் பாழாக்கினான். மிக அழகுடன் விளங்கிய அசோகவனம் தன் அழகை முற்றிலும் இழந்தது. அங்கிருந்த மான்களும் பறவைகளும் பயந்து கூவிக்கொண்டு வெளியேறி விட்டன. ராக்ஷசிகள். தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து இதென்னவென்று காரணம் தெரியாமல் திகைத்தார்கள்.
ஹனுமான் நந்தவனத்தை அழித்து விட்டு மதில்சுவரின்மேல் ஏறி உட்கார்ந்தான். ராக்ஷசிகள் வானரத்தைப் பார்த்தார்கள். ஹனுமான் வர வரத் தன் உடலைப் பெருக்கிக் கொண்டு பயங்கரமாக வளர்ந்து அவர்கள் இதயம் நடுங்கச் செய்தான். ராவணனிடம் சொல்லச் சிலர் ஓடினார்கள். சிலர் சீதையிடம் போய், “இந்தப் பெருங்குரங்கு எப்படி வந்தது? இது உனக்குத் தெரிந்தே இருக்கவேண்டும். உன்னிடம் இது ஏதாவது பேசிற்றா? உள்ளபடி சொல், பயப்படாதே!” என்றார்கள்.
சீதை “இந்த அரக்கர் உலகத்தில் எதுவெல்லாம் நடக்குமோ எனக்கு என்ன தெரியும்? மாயம் கற்ற ராக்ஷசர்களைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். இந்த வானரம் உங்களில் ஒருவனாகத்தான் இருக்க வேண்டும். அவனைப்பற்றி உங்களுக்குத்தான் தெரியலாம்” என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள்.
‘ஐயோ, சீதை பொய் சொல்லிவிட்டாளே! இதற்கு என்ன சமாதானம்?’ என்று சில பண்டிதர்கள் சமீபத்தில் தர்க்கம் செய்து கொண்டிருந்தது வாசகர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் ஞாபகம் வரலாம்.
இந்த விவாதத்தைப் போன்ற ஒரு பயனற்ற விவாதத்தை நான் கண்டதில்லை. “ராம காரியம் உடனே அழிந்து போகவேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களா? ராமாயணத்தையெல்லாம் வேறுவிதமாக நீங்கள் நடத்தப் போகிறீர்களா? இந்தக் கேள்விகளையெல்லாம் நிறுத்துங்கள்” என்று இந்தப் பண்டித சிகாமணிகளுக்குச் சொல்லுவேன்.
“சீதை செய்த மற்றக் காரியங்களைச் செய்யத் துணிந்து செய்தீர்களானால், சிறைப்பட்டுக் கிடந்து, துக்கத்தில் கரைகாணாமல் ஏங்கி நின்றீர்களானால் இத்தகைய ‘பொய்’யை உங்களைக் கேட்கும் அரக்கர்களிடம் நீங்களும் சொல்லலாம். அதனால் உங்கள் வாய்மை பங்கம் அடையாது” என்று சொல்லுவேன்.
“யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
வாய்மை எனப்படுவது யாதுஎனின், யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
பொய்ம்மையும் வாய்மை யிடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”
என்றார் பொய்யாமொழிப் புலவர்.
அசோக வனத்திலிருந்து பயந்து ஓடிய ராக்ஷசிகள் ராவணனிடம் நடந்ததைத் தெரிவித்தார்கள்.
“மன்னனே! ஒரு பயங்கர வடிவங் கொண்ட குரங்கு அசோக வனத்தில் வந்து உங்கள் அரண்மனைப் பெண்களுடைய நந்தவனத்தையெல்லாம் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. அந்தக் குரங்கைப் பார்த்தால் எங்களுக்குப் பயமாக இருக்கிறது. சீதையிடம் அது ஏதோ ரகசியமாகப் பேசிற்று.”
இவ்வாறு ராக்ஷசிகள் சொன்னார்கள். ஆனால் தாங்கள் தூங்கிப் போனதை ராக்ஷசேசுவரனிடம் சொல்லவில்லை.
“நாங்கள் சீதையை எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம். 'இது யார்? இந்த வானரன் ஏன் இங்கே வந்தான்? உன்னிடம் என்ன பேசினான்?' என்று பலவாறாகக் கேட்டோம். அவள் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறாள். நீங்கள் இந்தக் குரங்கைப் பிடித்து ஒழித்து விடவேண்டும். தகுந்த ஆட்களை அனுப்புவீர்களாக. மகா பயங்கரமான குரங்கு. வல்லமை கொண்ட அதைப் பிடிக்கும் வல்லமை கொண்ட வீரர்களை உடனே அனுப்புவீர்களாக. இந்தக் குரங்கு அழகிய வனம் முழுவதையும் ஒரே பாழாகச் செய்துவிட்டது. ஆனால் இந்த சீதையிருக்கும் சிம்சுபா விருட்சத்தை மட்டிலும் தொடவில்லை. வளர்ந்து படர்ந்திருக்கும் அந்த மரம் கொஞ்சமும் சேதப்படவில்லை. இதற்குக் காரணம் இருக்கவேண்டும். மற்ற மரங்களையும் கொடிகளையும், குளங்கள், பந்தல் எல்லாவற்றையும் பாழாக்கிய இந்த வானரம் சீதை இருக்கும் இடத்தை மட்டும் விடுவானேன்? இதில் மோசம் இருக்கிறது. இது சாதாரணக் காட்டு மிருகமல்ல. உங்கள் பகைவர்களான தேவேந்திரனோ குபேரனோ அனுப்பிய வானரமாகத்தான் இருக்க வேண்டும். அல்லது அந்த ராமனுடைய வேலையாக இருக்கவேண்டும். சீதையோடு பேச இந்த வானரத்துக்கு எப்படித் தைரியம் வந்தது? இவன் ராமனுடைய தூதனாகவே இருக்கவேண்டும். உடனே வீரர்களை அனுப்பி இந்த பயங்கர வானரத்தைப் பிடிக்கச் சொல்வீர்களாக” என்றார்கள்.
தன் மனைவிகளுக்காக நிருமாணித்திருந்த மிக சௌந்தர்யமான பூந்தோட்டம் அழிந்துபோன செய்தியைக் கேட்ட ராவணன் மிகுந்த கோபங் கொண்டான். இரண்டு கண்களும் இரண்டு தீவட்டிகளைப் போல் சிவந்து அவற்றிலிருந்து சுடச்சுட எண்ணெய்த் துளிகள் கொட்டுவது போல் கண்ணீர் வடிந்தது.
உடனே தனக்குப் பக்கத்தில் ‘உத்தரவென்ன?’ என்று எப்போதும் மிகக் கவனமாக இருந்து கொண்டு வந்த வீரர்களை அனுப்பினான். கதாயுதங்களும் இரும்பு உலக்கைகளும் கத்திகளும் சூலங்களும் எடுத்துக் கொண்டு அவர்கள் போனார்கள்.
கருத்துரையிடுக