70. பிராட்டியும் மாருதியும் (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)

“அன்புக்குரிய வானர சிரேஷ்டனே! நீ கொண்டு வந்த செய்தியைக் கேட்டு நான் மகிழ்வதா துக்கப்படுவதா என்பது தெரியவில்லை. உன் மொழியெல்லாம் அமிருதம் கலந்த விஷம் போல் என் உள்ளத்தில் பாய்கிறது. அவர் என்னை மறந்து விடவில்லை, என்னைத் தேடுகிறார் என்பது ஆனந்தம் தருகிறது. துக்கப்படுகிறார், என்னையே நினைத்து நினைத்துத் துயரப் படுகிறார் என்பது என்னுடைய துக்கத்தை அதிகப்படுத்துகிறது.”


இவ்வாறு ஜானகி உள்ளதை உள்ளது போல் சொல்லி ஆறுதல் அடைந்தாள்.


மனித வாழ்க்கையில் சுகமும் துக்கமும், சந்தோஷமும் துயரமும் ஒன்றோடு ஒன்று கலந்து மக்களை இயக்குகின்றன. ராமன் தன்னை மறக்கவில்லை, தன்னையே நினைத்து நினைத்து வாடித் துயரப்பட்டு வருகிறான், தேடித் தேடியலைந்து துக்கப்பட்டு வருகிறார் என்கிற செய்தி சீதைக்கு மிக்க ஆறுதலும் சந்தோஷமும் தந்தது. ஆனால் கூடவே துயரமும் தந்தது.


சீதை சொன்னாள்: “மனித ஜன்மத்தில் சந்தோஷம், விசனம் என்கிற இரட்டைக் கயிற்றால் உயிரானது கட்டி இழுக்கப்படுகிறது. இதை யாரும் தப்ப முடியாது. ராமனும் லக்ஷ்மணனும், நானும் இந்த இயற்கை விதிக்கு உட்பட்டிருக்கிறோம். பெரும் சுழிக் காற்றில் அகப்பட்டுக் கடலில் தள்ளாடும் படகைப் போல் என் பிராணநாதன் துக்கப்படுகிறார். அவர் எப்போது வருவார்? அன்புக்குரிய வானர சிரேஷ்டனே, இந்த லங்கையையும் ராவணனையும் மற்ற அரக்கர்களையும் எப்போது வந்து வதம் செய்வார்? இந்த ராக்ஷசன் எனக்கு வைத்திருக்கும் காலவரைக்குள் இது நடக்க வேண்டுமே? இதை என் நாதனிடம் சொல்லுவாய். இரண்டு மாதங்கள்தான் மிஞ்சி நிற்கின்றன. ராவணனை நல்வழியில் செலுத்த அவன் தம்பி விபீஷணன் எவ்வளவோ முயன்றான். 'சீதையைக் கொண்டு போய்த் திருப்பி ஒப்படைத்து விடு. லங்கையும், ராக்ஷச குலமும் தப்பிப் பிழைக்கும்' என்று விபீஷணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்; எல்லாம் பயனில்லாமல் போயிற்று. என் உள்ளத்தில் அந்தராத்மா தைரியமாக இருக்கிறது. ராவணன் அழியுங்காலம் நெருங்கி வருகிறது. யமனை அவனே தேடுகிறான். அவன் அழிவது நிச்சயம். நாதன் வந்து என்னைச் சீக்கிரமே வெற்றியுடன் அடையப் போகிறார். இதைப் பற்றி எனக்குச் சந்தேகமில்லை. பாவத்தையறியாத என் உள்ளத்தில் காணும் நிகழ்ச்சி ஒரு நாளும் பொய்யாகாது.”


இவ்வாறு சீதை கண்களில் நீர் ததும்பப் பேசிக் கொண்டே போனாள். சீதையின் துக்கத்தைப் பார்த்து ஹனுமானுக்குப் பொறுக்க முடியவில்லை.


“ஜானகி, தாயே! உடனே போய்ச் சொல்லி ராகவனை அழைத்து வருவேன். பெருஞ்சேனையுடன் வந்து லங்கையில் இறங்குவான். கவலைப்படாதீர். உமக்கு இஷ்டமாயின் சொல்வீர். இப்போதே என் முதுகில் ஏறி உட்காருவீர், நானே உம்மைத் தூக்கிக் கடலைத் தாண்டி ராமனிடம் போய்ச் சேர்த்து விடுவேன். இதைச் செய்வதற்குப் போதிய பலம் எனக்கு இருக்கிறது. சந்தேகமில்லை. அக்கினி தேவன் இந்திரனிடம் அவியைக் கொண்டு போய்ச் சேர்ப்பதைப் போல் ராமசந்திரனிடம் உம்மைக் கொண்டு போய்ச் சேர்ப்பேன். புண்ணியவதியே! உத்தரவிடுவீர். இன்றே ராகவனை நீர் பார்க்கலாம். தம்பியுடன் உட்கார்ந்திருக்கும் ராமசந்திரனிடம் இன்றே நீர் போய்ச் சேருவீர். சந்தேகம் வேண்டாம். ராவணனோடு லங்கை முழுவதையும் தூக்கி ராமன் காலடியில் கொண்டு போய்ச் சேர்ப்பேன். இதுவும் என்னால் முடியும். என்னை யாரும் தடுக்க முடியாது. என் முதுகின் மேல் ஏறி உட்கார்ந்தீரானால் நீரே பார்ப்பீர். ரோஹிணி நட்சத்திரம் சந்திரனிடம் சேருவது போல ராமசந்திரனை சந்தோஷமாக நீர் அடைவீர். இவ்விடம் எப்படி வந்தேனோ அப்படி இங்கிருந்து அவ்விடம் எடுத்துப் போய்ச் சேருவேன், நீரே பார்ப்பீர்.”


இப்படி அன்பும் உற்சாகமும் பொங்கி வர, ஹனுமான் சொல்லிக் கொண்டே போனான். சீதை ஆச்சரியப்பட்டாள். இந்தச் சிறிய வானரம் எப்படி என்னைத் தூக்கிக்கொண்டு கடலைத் தாண்ட முடியும் என்று சந்தேகித்தாள். இதை உணர்ந்து கொண்ட ஹனுமான் தன் சக்தியைப் பிராட்டிக்குக் காண்பிப்பதற்காக மேடையிலிருந்து கீழே குதித்துத் தன் வடிவத்தைப் பெருக்கிக் கொண்டான். பருவதாகாரமாக வளர்ந்தான். சீதை அதைப் பார்த்துப் பெரு மகிழ்ச்சியடைந்தாள்.


“வாயுபுத்திரனே! உன் சக்தியை நான் உணர்ந்தேன். ஆயினும் நீ என்னை எடுத்துப்போவது உசிதமல்ல. வழியில் அரக்கர்கள் உன்னைத் தடுத்து யுத்தத்துக்கு இழுப்பார்கள். உன்மேல் பாய்வார்கள். ஆயுதங்களை வீசி எறிவார்கள். நீ என்னைக் காக்க வேண்டியதாகும். கவலைப்படுவாய். யுத்தத்தில் உன் புத்தியைச் செலுத்துவது கஷ்டமாகும். எவ்வளவு பலவானாயினும் யுத்தத்தில் வெற்றி என்பது நிச்சயமான விஷயம் அல்ல. உனக்கு அபாயம் நேர்ந்தால் என் கதி என்ன? உன்மேல் அரக்கர்கள் பாய்ந்தும் ஆயுதங்கள் வீசியும் போர் நடந்து கொண்டிருக்கும்போது நான் தைரியமாய் உன் முதுகின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்க முடியுமா? நழுவிக் கடலில் விழுவேன். இவற்றையெல்லாம் யோசித்தால் என்னை எடுத்துக் கொண்டு நீ கடலைத் தாண்டுவது சரியல்ல, என்பது வியக்தம். தவிர, ஹனுமானே! நீ வந்து என்னை, அரக்கர்களுக்குத் தெரியாமல் எடுத்துப் போய் விட்டால் அது என் நாதனுடைய வீரத்துக்குக் குறைவாகுமே! ராவணனை எதிர்த்துப் போர் செய்து என்னை மீட்டினால் அல்லவோ க்ஷத்திரிய குலத்துக்குக் கவுரவமாக இருக்கும். ராவணன் என்னைத் திருட்டுத்தனமாக எடுத்துவந்த மாதிரி அவரும் போர் செய்யாமல் என்னை அடைவது சரியாகுமா? அப்பனே! நீ திரும்பிப் போய் ராமனையும் லக்ஷ்மணனையும் வானர சேனையையும் அழைத்து வா! நாதனுடைய பாணங்களால் லங்கை அழிந்து ராவணன் யமாலயம் அனுப்பப்படவேண்டும். வெற்றி  நமது என்பதில் சந்தேகமில்லை. என் நாதனுடைய பாணங்கள் பிரளயகாலச் சூரியனைப்போல் ராவண சமூகத்தை எரித்து நாசமாக்கும்” என்றாள்.


“நான் திரும்பிப் போய் ராமனிடம் சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்? உம்மைக் கண்டு பேசியதற்கு என்ன அடையாளம் சொல்லுவேன்?” என்று ஹனுமான் கேட்டான்.


இதைக் கேட்டதும் சீதைக்குப் பழைய நினைவுகள் வந்து விட்டன. கண்களில் நீர் பெருகிற்று.

தனக்கும் ராமனுக்கும் மட்டுமே தெரிந்த அந்தரங்க நிகழ்ச்சிகளை ஹனுமான் தன் நாதனிடம் சொன்னால் தன்னைக் கண்டதற்கு அடையாளமும் ஆகும்; தன் ஆற்றாமை நிலையையும் காட்டும் என்று இயற்கை வேகத்துக்கு இசையச் சில விஷயங்களைச் சொன்னாள்.


“என்னுடைய ராமன், தண்டகவனத்தில் ஒருவராக நின்று அசுரர்களை நிர்மூலம் செய்த வீரர், இந்த லங்கையை ஏன் இன்னும் அழிக்காமலிருக்கிறார்? அவரால் ஆகாதது ஒன்று உண்டா? ஒரு நாள் நானும் ராமனும் சித்திர கூடத்தில் ஆற்றங்கரையிலிருந்த வனத்தில் விளையாட்டாக அலைந்து, ஓய்ந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்தோம். என் மடியில் அவர் சாய்ந்து அப்படியே தூங்கினார். அப்போது ஒரு காக்கை வந்து என்னை மார்பில் கொத்தித் தொந்தரவு பண்ணிற்று. நான் அதை ஓட்டினேன். திரும்பத் திரும்ப வந்து தொந்தரவு செய்தது. நான் ஒரு சிறு கல்லை எடுத்து அதன் மேல் வீசினேன். அப்போதும் அது கேட்கவில்லை. ராமன் எழுந்து நான் கஷ்டப்பட்டுக் கண்களில் நீர் ததும்பியிருந்த நிலையைக் கண்டு முதலில் சிரித்தார். பிறகு என் உடலில் காக்கையால் கொத்தப்பட்டுக் காயமாகி இருந்ததைக் கண்டு, இந்தக் காக்கையானது காக்கை அல்ல. அசுரன் என்பதைக் கண்டு அஸ்திரம் ஒன்று எறிந்தார். அது அவனைத் துரத்தித் துரத்திச் சென்று அசுரன் தப்பிப் பிழைக்க முடியாமல் கடைசியாக வந்து என் நாதன் காலில் விழுந்து சரணடைந்து பிழைத்தான். இதைச் சொல்லுவாய். நான் இன்னும் பல நாள் காத்திருக்க முடியாது. சீக்கிரம் வந்து என் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்.”


இவ்வாறு சொல்லி விட்டு அழுதாள். மறுபடியும், “இன்னொரு நாள் நாங்கள் இருவரும் தனியாக வனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தோம். நடந்து நடந்து களைத்துப் போய் வியர்வை வழிந்து நெற்றியிலிருந்த திலகம் கரைந்து போயிற்று. நாதன் வேடிக்கையாக ஒரு மலைப் பாறையிலிருந்த செந்தாதுவைத் தேய்த்துத் தானே என் முகத்திலிட்டார். இது அவருக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டுப் பார்!” என்றாள்.


இப்படிப் பழைய நிகழ்ச்சிகளைச் சொல்லச் சொல்லத் தன் தற்கால நிலையை நினைத்து மறுபடியும் துயரத்தில் மூழ்கினாள்.


“ராமனுக்கு நான் ஏதேனும் சொல்ல வேண்டுமா, என்ன? அவர் அறியாதது என்ன இருக்கிறது? நான் சொல்லியா அவருடைய தருமத்தைத் தட்டி எழுப்ப வேண்டும்? நாதனை நான் நமஸ்கரித்தேன் என்று மட்டும் சொல்லுவாய், போதும். அவர் பக்கத்தில் லக்ஷ்மணனும் இருக்கிறான். அவனுக்குச் சமானமான ஒரு தம்பி உண்டா? ராமனுக்குத் துணையாக இருக்கவே பிறந்தவன். நிகரற்ற சாமர்த்தியம் பெற்றவன். என் நாதன் அவன் முகத்தைப் பார்த்துத் தந்தையை இழந்த துயரத்தை மறந்தார். ஒரு களங்கமுமற்ற பரிசுத்த இதயம், பயம் என்பது தெரியாத வீரன். வனத்தில் தன் தாயை மறந்து விட்டு என்னைத் தாயாகப் பாவித்து வந்தவன். என் துயரத்தை அகற்ற வேண்டும் என்று அவனுக்குச் சொல்லுவாய்” என்றாள்.


ஜானகியின் கண்களில் கண்ணீர் பெருகி, பேச்சுத் தடுமாறிற்று. ராமன் மானைத் தேடி வெகு தூரம் சென்று விட்ட சமயத்தில் இளைய பெருமானைத் தான் கோபித்து மிக அநியாயமாகக் குற்றம் சாட்டினாள் அல்லவா? இது சீதையின் உள்ளத்தை வருத்திக் கொண்டிருக்க வேண்டும்.


உயிரை நீக்க நிச்சயித்த சமயத்தில் வந்து தனக்கு, ஆறுதல் தந்த ஹனுமானை விட்டுப் பிரியவும் மனமில்லை; சீக்கிரம் அவன் க்ஷேமமாக ராமனிடம் சேர்ந்து செய்தி சொல்ல வேண்டும் என்றும் ஆசை. இரண்டும் சேர்ந்து சீதையை இவ்வாறு ஒவ்வொரு சமயம் ஒவ்வொருவிதமாகப் பேசச் செய்தது.


முடிவில், “அப்பனே, இதோ என் விவாக காலத்தில் என் தாய் கொடுத்து தசரத மகாராஜன் என் தலையில் சூட்டிய சூடாமணி. இதை என் நாதனிடம் அடையாளமாகத் தருவாய்” என்று தன் ஆடைத் தலைப்பில் முடிந்திருந்த அந்த தெய்வீக ஆபரணத்தை அவிழ்த்தெடுத்து மாருதியினிடம் தந்தாள்.


விவாக காலத்தில் தாயிடம் பெற்றதும் மாமன் தசரத மகாராஜன் கையால் சூட்டப்பட்டதுமான அந்த ஆபரணத்தைச் சீதை எவ்வளவு மதித்திருக்க. வேண்டும்! மிக வினயமாக மாருதி அதைப் பெற்றுக் கொண்டான்.


பெற்றுக் கொண்டதும், “கண்டேன் சீதையை” என்று அதை ராமனிடம் கொடுக்கப் போகும் பெருமையையும் மகிழ்ச்சியையும் எண்ணி ஹனுமானுடைய உள்ளம் அப்போதே ராமனிருந்த இடத்துக்குப் பறந்து சென்று விட்டது; உடல்தான் லங்கையில் நின்றது.


“பிரியமுள்ள வானரமே! என்னுடைய துக்கத்தைத் தீர்ப்பதற்கு வேண்டிய யோசனைகளையெல்லாம் நீதான் ராமனுக்குச் சரியாகச் சொல்லி வெற்றி சம்பாதித்துத் தரவேண்டும்” என்றாள். சொல்லியதும் ஹனுமான் புறப்படப்போனான். மறுபடியும் சீதை, “ஹனுமானே, ராஜகுமாரர்கள் இருவருக்கும் என் அன்பைச் சொல்லுவாய். சுக்ரீவனுக்கும் வானரப் பெரியோர்களுக்கெல்லாம் என் அன்பைச் சொல்லுவாய். துயரக் கடலை நான் தாண்டுவதற்காக ராமனுக்கு எல்லாச் சகாயமும் அவர்களைச் செய்யச் சொல்லுவாய். நீதான் ராமனுக்கு உற்சாகம் தளராமல் சொல்ல வேண்டிய யோசனைகளையெல்லாம் சொல்ல வேண்டும்” என்றாள்.


“துக்கத்தை அகற்றிக் கொள்வீர். நிச்சயம் ராம லக்ஷ்மணர்கள் வானரப் படையுடன் லங்கைத் தீவில் இறங்கி அரக்கர்களை அழித்து உம்மை வெற்றியுடன் திருப்பிக் கொண்டு போவார்கள். ஒரு சந்தேகமும் படாமல் இருப்பீராக” என்றான் மாருதி.


“இங்கே எங்கேயாவது நீ ஒருநாள் இருந்து தங்கி இளைப்பாறித் திரும்புவது நல்லதல்லவா?” என்றாள். மறுபடியும் சீதை, “உன்னைப் பார்த்துக் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன். என் துக்கத்தை மறந்தேன். மறுபடி நீ மறைந்ததும் நான் துக்கத்தில் மூழ்குவேன். நீ இந்தப் பெருங் கடலைத் தாண்டி வந்தாய். ராமனும் அவருடைய சேனையும் எப்படி இந்தக் கடலைத் தாண்டப் போகிறார்கள்? இதைப் பற்றி உன் யோசனை என்னவோ!” என்று மறுபடியும் சந்தேகப்பட ஆரம்பித்தாள்.


“தேவி! நீர் ஒன்றும் ஐயப்பட வேண்டாம். நான் ஒருவன் தான் கடலைத் தாண்டக் கூடியவன் என்று எண்ணினீரோ? அங்கிருக்கும் வானரர்கள் எல்லாரும் என்னைவிடச் சாமர்த்தியசாலிகள். சுக்ரீவன் மட்டுமல்ல, அவன் படையிலுள்ளவர்களில் பலர் பூமண்டலம் முழுதும் பறந்து சுற்றித் திரியக் கூடிய சக்தி கொண்டவர்கள். இந்தக் கடல் ஒரு பெரிதல்ல. என்னைவிட பலசாலிகளும் சாமர்த்தியசாலிகளும் ஆகாய மார்க்கம் செல்லுபவர்களும் ஆயிரக்கணக்காக எங்களில் இருக்கிறார்கள். ஒரு சந்தேகமும் பட வேண்டாம். உண்மையில் எல்லாருமே என்னைத் தோற்கடிப்பார்கள். எல்லாரையும் விட பலசாலியையா தூதனாக அனுப்புவார்கள்? குறைந்தவனாகத் தேடி முதலில் அனுப்பினார்கள். அங்கே இருக்கும் வானரர்களில் பலர் என்னை மிஞ்சியவர்கள். தேவி! துக்கத்தை விட்டுச் சந்தோஷமாக இருப்பீராக. என் முதுகின் பேரில் இரு ராஜ சிம்மங்களையும் ஏற்றிக் கொண்டு வரப் போகிறேன். வந்து இந்த நகரத்தைப் பாணங்களால் பாழாக்குவார்கள். ராவணனைக் குலத்தோடு அழிப்பார்கள். உமக்கு மங்களம்! எதிர்பார்த்த வண்ணமாக இருப்பீராக! துயரக் கடலைத் தாண்டி அக்கரை ஏறுவீர். துக்கமெல்லாம் ஒரு கனவாகும். வெகு நாட்களில்லை. இரு ராஜகுமாரர்களும் வில் பிடித்து லங்கை வாயிலில் நிற்பதைப் பார்ப்பீர். இந்த அரக்கர் கூட்டம் அழிவதைப் பார்ப்பீர். வானர சேனை வந்து குதித்துக் கூத்தாடி லங்கையைப் பாழாக்குவதைப் பார்ப்பீர். செய்தி தெரிந்த பின் ஒரு கணமும் சும்மா இருக்க மாட்டார்கள். நான் போய்ச் சொல்லுவது தான் தடை; உடனே கிளம்பி வருவார்கள். தைரியமாக இருப்பீராக.” இவ்வாறு சொல்லி தேவியைத் தலைவணங்கி நமஸ்கரித்துப் புறப்பட்டான்.


“நான் உயிருடன் இருக்கிறேன் என்று ராம லக்ஷ்மணர்களுக்குச் சொல்லுவாயாக. காரியங்களைத் துரிதப்படுத்துவாயாக. மங்களம்” என்றாள் சீதை. அஞ்சநாதேவியின் வீரகுமாரன், ஜானகியின் சோகத்தைத் தீர்த்த மகானுடைய அடி பணிவோமாக!



Post a Comment

புதியது பழையவை