மரத்தில் மறைந்திருந்து ஹனுமான் மிருதுவான குரலில் சீதையின் காதில் விழும்படி ராமனைப் பற்றி மதுரமாகப் பேசலானான்.
“ராஜா தசரதன் கோசல தேசத்தை ஆண்டான். அவனுடைய சேனை ரதங்களும் யானைகளும் குதிரைகளும் அடங்கிய பெரும் சேனை. புண்ணிய சீலன். மிகப் பெரும் காரியங்களைச் சாதித்தவன். சத்தியத்தை காத்தவன். பெரும் புகழ் பெற்ற அரசர்களுக்குள் முதன்மைப் பதவி அடைந்தவன். ரிஷிகளுக்குச் சமானமான குணமும் சீலமும் பெற்ற சக்கரவர்த்தி. தேவேந்திரனைப் போல் சாமர்த்தியம் அடைந்தவன். யாரையும் துன்பப்படுத்த மாட்டான். யாரையும் வெறுக்காதவன், யாருக்கும் தீமை செய்யாதவன். அவன் முயற்சிகள் எதுவும் வீணானதில்லை. ஆனபடியால் 'சத்திய பராக்கிரமன்' என்கிற பெயரை அடைந்த அரசன். இக்ஷ்வாகு குலத்து ஸ்ரீமான். அரசர்களுக்குள் ஏறு, பூமண்டல அதிபதி. சுகம் தருபவன், சுகமாக இருப்பவன். அவனுடைய நான்கு குமாரர்களில் மூத்தவன் ராமசந்திரன். பூரண சந்திரனைப் போன்ற முகத்தையுடையவன். மிகுந்த அறிவாளி. ராமன் சிரேஷ்டமான பண்பு அடைந்து தனுர் வேதம் வேதம் நன்றாகக் கற்று எல்லோராலும் விரும்பப்பட்டான். ராஜ்யத்திலுள்ள மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவன். தருமத்தில் தளராத பற்றுடையவன். வீரன். பட்டத்துக்கு உரியவன். ஆயினும் முதுமையடைந்த தன் தகப்பனாரின் புகழும் பெயரும் சத்தியமும் மாசு அடையாதிருப்பற்காகத் தன் மனைவி சீதையுடனும், தம்பியுடனும் ராஜ்யத்தை விட்டு வனம் சென்று அங்கேயே வசித்து வந்தான். அரண்ய வாசம் செய்யும்போது அநேக கொடிய ராக்ஷசர்களை எதிர்த்து ரிஷிகளைக் காப்பாற்றினான். கரன், தூஷணன் என்ற ராக்ஷசத் தலைவர்களையும் அவர்களுடைய பெரும் சேனையையும் வதம் செய்து அழித்தான். இதையறிந்த ராவணன் பழி வாங்குவதற்காக மாயமான் வடிவத்தில் ஒரு ராக்ஷசனை ஏவி ராமனை ஏமாற்றி ராஜகுமாரர்கள் பக்கத்தில் இல்லாத சமயம் பார்த்து சீதையைப் பலாத்காரமாகத் தூக்கி எடுத்துக் கொண்டு போய்விட்டான். துயரம் அடைந்த ராமன் மனைவியைத் தேடிக்கொண்டு சென்றான். சுக்ரீவன் என்ற வானரனை அடைந்து அவனுடன் நட்புச் செய்து கொண்டான். வாலி என்கிற வானர ராஜனைக் கொன்று தம்பி சுக்ரீவனுக்கு வானர ராஜ்யம் சம்பாதித்துத் தந்தான். அந்த சுக்ரீவன் தன்னுடைய வானர வீரர்களைப் பூ மண்டலம் முழுதும் சீதையைத் தேடும்படி அனுப்பினான். விரும்பிய வடிவம் எடுக்கும் திறமை கொண்ட வானர வீரர்கள் எல்லாத் திசைகளிலும், காணாமற் போன சீதையைத் தேடினார்கள். அவர்களில் நான் ஒருவன். சம்பாதியினிடம் பெற்ற துப்பைக் கொண்டு நான் நூறு யோஜனைக் கடலைத் தாண்டி இவ்விடம் வந்தேன். ராகவன் எனக்குத் தன் தேவியைப் பற்றிச் சொன்ன ரூபம், நிறம், லக்ஷணம் இவற்றுக்கெல்லாம் ஒத்த உருவத்தை இப்போது நான் காண்கிறேன்.”
இவ்வாறு மெதுவாகச் சொல்லி ஹனுமான் நிறுத்திக் கொண்டான்.
இந்த மதுரமான சொற்கள்--யாராலோ எங்கிருந்தோ சொல்லப்பட்டதைக் கேட்டு ஜானகி வியப்படைந்தாள். மகிழ்ந்தாள். நான்கு பக்கமும் பார்த்தாள். யார் இப்படி மிக இனிய குரலில் மிக இனிய விஷயங்களைப் பண்பட்டுத் தெளிந்த பாஷையில் பேசினது என்று நான்கு பக்கமும் மேலும் கீழும் பார்த்தாள். பேச்சுக்கு ஒத்த மனித உருவம் எங்கும் காணவில்லை. மேலே மரத்தில் ஒரு அழகிய வானரத்தைத்தான் கண்டாள்.
நிகரற்ற புத்திமானும் வானர ராஜனுக்கு மந்திரியுமான வாயு புத்திரன் பால சூரிய தேஜஸ் கொண்ட சிறு வானர வடிவமாயிருந்தவனைப் பார்த்தாள். ஜானகி. வாசகர்களே! ஜானகியின் பார்வை ராமதூதன் பேரில் பட்டதும் அவனுடைய மகிழ்ச்சியை நீங்கள் கற்பனா சக்தியைக் கொண்டு உணர்வீர்களாக! உணர்ந்தால் உங்கள் உள்ளம் நிர்மலமான கோயிலாகும். உங்கள் எல்லாத் துக்கமும் தீரும். உங்கள் உள்ளத்தில் இடம் கிடைக்குமோ என்று சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் நாராயணன் தன் பாற்கடலையும் விட்டு வந்து உங்கள் உள்ளத்தில் புகுவான். நம்முடைய உள்ளங்களே அவனுக்குப் பாற்கடல் பள்ளியாகும்.
“அங்கு அனந்தன் அணைக்கிடக்கும் அம்மான்,
அடியேன் மனம்தன் அணைக்கிடக்கும் வந்து”
என்று முதலாழ்வார் பாடியபடி.
*
ஹனுமானைப் பார்த்த ஜானகி, ‘இதென்ன நான் கேட்ட சொற்களும் காணப்படும் உருவமும் எல்லாம் கனவாகத் தானிருக்க வேண்டும். எப்போதும் தியானித்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள் கனவில் காணப்படுமல்லவா? நான் தியானித்துத் தியானித்து வந்த என் பிராண நாதனுடைய கதையை யாரோ சொல்லுவதுபோல் காதில் படுகிறது. இது உண்மையாக இருக்காது. கனவே. கனவில் குரங்கின் உருவம் பார்த்தால் பந்துக்களுக்குக் கெடுதி நேரும் என்கிறார்களே! ராமனுக்கு மங்களம் ஆகுக! லக்ஷ்மணனுக்கு மங்களம் ஆகுக! மிதிலையில் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும். இல்லை, இல்லை! இது கனவல்ல! இன்னும் அதே உருவம் ஸ்திரமாகத் தெரிகிறது. காணும் காட்சி திடமாகவும் இருக்கிறது. கனவல்ல. தவிர நான் எங்கே தூங்கினேன்? தூங்கினால் அல்லவோ கனவு காணுவேன். இது கனவல்ல. உண்மையே. ஓ தேவர்காள்! உண்மையில் இந்த வானரம் என் பிராண நாதனிடமிருந்து வந்த தூதனா? அப்படியே ஆகுக. வாக்கினுக்குத் தேவனான வாசஸ்பதியே, உன்னை வணங்குகிறேன். அக்னி பகவானே, உன்னை வணங்குகிறேன். சுவயம்புவே, உன்னை வணங்குகிறேன். தேவர்களே! என்னைக் காப்பாற்றுவீர்களாக. இவன் ராமதூதனே ஆகுக’ என்று எல்லாத் தேவர்களுக்கும் பிரார்த்தனை செலுத்தினாள்.
ஜானகியைக் கண்ட மகிழ்ச்சியால் ஹனுமான் திவ்விய மங்கள தேஜஸுடன் பொலிந்தான். கீழே இறங்கி சீதை முன் கைகூப்பி வணங்கி நின்றான்.
“தாயே! தாமரையிதழ்களைப் போன்ற உம்முடைய கண்ணிதழ்களினின்று தண்ணீர்த் துளிகள் வீழ்கின்றனவே! யார் நீர்? கண்ணீர் விட்டு மரக்கிளை மேல் சாய்ந்து துயரம் படர்ந்த முகத்தோடு நிற்கிறீர், நீர் தேவகன்னியா? நாக கன்னியா? உம்முடைய தேக காந்தியைப் பார்த்து இப்படிக் கேட்கிறேன். சந்திரனிடமிருந்து பிரிந்து வந்த ரோஹிணி தேவியா? வசிஷ்ட பகவானோடு ஏதேனும் வித்தியாசப்பட்டு இறங்கி வந்த அருந்ததியா? கவனித்துப் பார்த்தால் மானுட ஸ்திரீயாகவே காணப்படுகிறீர். ராஜகுமாரியாகக் காணப்படுகிறீர். தயவு செய்து நீங்கள் யார் என்று சொல்லுவீர். மங்களம்! மங்களம்! ராவணனால் ஜனஸ்தானத்திலிருந்து பலாத்காரமாகத் தூக்கிக் கொண்டு வரப்பட்ட சீதா தேவியா நீர்? ராமசந்திரன் மனைவி சீதையைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேனா?” என்று ஹனுமான் தன்னுடைய மதுர ஸ்வரத்தில் வணங்கிக் கேட்டான்.
சீதா பரவசமானாள். “அப்பனே! நான்தான் சீதை. விதேஹ ராஜனுடைய புத்திரி. ராமசந்திரனுடைய பாரியை. பன்னிரண்டு வருஷம் சகல சுகங்களையும் அவனுடன் அயோத்தியில் அனுபவித்தேன். பதின்மூன்றாம் வருஷம் சக்கரவர்த்தியானவர் அவருடைய மூத்த குமாரனாகிய என் ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்தார். அப்போது மகாராஜாவினுடைய இளைய தேவி கைகேயி தன் மகனுக்குப் பட்டம் கொடுக்க வேண்டும். ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட வேண்டும், இல்லாவிடில் உணவு உண்ண மாட்டேன், தண்ணீர் அருந்த மாட் டேன், உயிரை விடுவேன் என்று ஹடம் செய்து வற்புறுத்தினாள். முந்தி கைகேயிக்குக் கொடுத்திருந்த வாக்குப்படி அரசன் அவள் பிடிவாதம் பண்ணிக் கேட்டதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. மகாராஜன் ராஜ்யத்தைப் பரதனுக்குக் கொடுத்து விடு என்று ராமனைக் கேட்டுக் கொண்டார். ராமன் ஒரு க்ஷணமும் தாமதிக்கவில்லை. 'தகப்பனார் தந்த வார்த்தையைச் சத்தியமாக்குவதே என் பாக்கியம், ராஜ்ய போகத்தை விடத் தந்தையைச் சத்திய சந்தனாக்குவதே என் ஆசை, என் சந்தோஷம்' என்று ராஜ்யத்தைப் பற்றிய எண்ணத்தை உடனே முற்றிலும் துறந்து விட்டு வனம் சென்றார். புருஷன் வனம் சென்றால் நான் பிரிந்திருக்க முடியாது, நானும் கூடவே வனம் செல்வேன் என்று வற்புறுத்தினேன். முந்தியே தம்பி லக்ஷ்மணன் மரவுரி தரித்து அண்ணனுக்குத் துணையாக வனம் போக நிச்சயித்து விட்டிருந்தான். மூவரும் வனம் சென்றோம். தண்ட காரண்யத்தில் வசித்து வந்தோம். ஒரு நாள் துராத்மாவான ராவணன் வந்து என்னைப் பலாத்காரமாகத் தூக்கி இவ்விடம் இந்த அசோகவனத்தில் சிறை வைத்திருக்கிறான். பன்னிரண்டு மாத கால வரை வைத்திருக்கிறான். இன்னும் இரண்டு மாதகாலம் மிகுதியிருக்கிறது. அது முடிந்தவுடன் என் உயிரை நீப்பேன்” என்றாள், துக்கத்துக்கு மேல் துக்கமாக. வந்து திக்கற்று நின்ற பிராட்டி.
*
இவ்வாறு ஹனுமான் சொன்னதும் ஜானகி சொன்னதும் இரண்டு சிறிய அத்தியாயங்களில் வால்மீகி ராமாயணத்தில் பாடப் பட்டிருக்கிறது. பெரிய கதையை ஆஞ்சனேயனுடைய வாயாலும் ஜானகியின் வாய் மொழியாகவும் வால்மீகி முனிவர் தந்திருக்கிறார். உலகத்தை அளந்த திரிவிக்ரமன் பலியினிடம் வாமன வடிவம் எடுத்துச் சென்றது போல் அழகிய சிறிய உருவத்தில் தந்திருக்கிறார். ஆஞ்சனேயனும் பிராட்டியுமே நமக்கு ராமாயணம் சொல்லுகிறார்கள். நமக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்? ஹனுமான் சொன்ன இந்த ராம கதையை, ஜானகி சொன்ன இந்த ராம கதையை பக்தியோடு படித்து வாமனன் மகாபலிச் சக்கரவர்த்தியை வசப்படுத்தி அவன் அகங்காரத்தினின்று அவனைக் காத்ததுபோல் நம்முடைய அகங்கார மமகாரங்களினின்று நாமும் காக்கப் படுவோமாக.
*
“பன்னிரண்டு மாதத் தவணையில் இரண்டு மாத காலம் மிஞ்சியிருக்கிறது. அது முடிந்ததும் என் உயிரும் முடிவு அடையும்” என்று சீதை தன் கதையைச் சொல்லி முடித்தாள்.
துக்கத்தில் மூழ்கி இப்படிப் பேசிய சீதைக்கு ஹனுமான் ஆறுதல் தரும்படியான வார்த்தைகள் சொன்னான் :
“வைதேஹி! உத்தமர்களுக்குள் உத்தமன், வீரர்களுக்குள் வீரனான ராமன், சக்கரவர்த்தித் திருமகன் உமக்கு க்ஷேமத்தைச் சொல்லியனுப்பியிருக்கிறான். அவன் அன்புக்குப் பாத்திரமான தம்பி, உம்முடைய நிலையை நினைத்து நினைத்து இடைவிடாமல் துயரப்பட்டுக் கொண்டிருக்கும் லக்ஷ்மணனும் தன்னுடைய வணக்கத்தைச் சொல்லச் சொல்லி என்னை அனுப்பியிருக்கிறான்” என்றான்.
ராம லக்ஷ்மணர்களுடைய பெயர்களையும் அவர்கள் சொல்லியனுப்பிய நற்செய்தியையும் கேட்ட சீதையினுடைய உள்ளம் மகிழ்ச்சியால் பொங்கிற்று.
“ஆகா! என்ன சந்தோஷம் அடைந்தேன். உயிரை வைத்திருந்தால் என்றைக்காவது நன்மையை அடையலாம், விட்டு விட்டால் அது இல்லை என்று பாமர ஜனங்கள் சொல்லுவதின் உண்மையை இப்போது உணர்ந்தேன்” என்றாள் சீதை.
திடீர் என்று, முன்பின் அறியாத இருவருக்கும் அற்புதமான நம்பிக்கையும் பிரீதியும் உண்டாயிற்று. ஹனுமான் தன்னுடைய ஆனந்த பரவசத்தாலும், அவளுடைய துக்கத்தை எப்படியாவது தீர்த்துத் தைரியம் உண்டாக்க வேண்டுமென்கிற கருத்தைக் கொண்டும் சீதைக்குப் பக்கமாக அணுகி நின்றான்.
திடீர் என்று சீதை மறுபடியும் பயந்து போனாள். ஹனுமானுடைய சொற்களைக் கேட்டு உண்டான நம்பிக்கையை இழந்து சந்தேகத்தால் மறுபடியும் பீடிக்கப்பட்டாள். மரக்கிளை மேல் சாய்ந்திருந்தவள் அதை விட்டுவிட்டுக் கண்ணை மூடிக்கொண்டு விலகி உட்கார்ந்தாள். ஹனுமான் இதைக் கண்டு மிக வினயமாகக் கை கூப்பிய வண்ணம் நின்றான்.
“நான் ஏமாந்தேன். நீ ராவணனே! முன் சந்நியாசி வேஷம் பூண்டு வந்து வஞ்சித்தாய். இப்போது மற்றொரு வேஷம் பூண்டு வந்து ஏதோ பேசுகிறாய். இதுவெல்லாம் உனக்கு நன்மையல்ல. இப்படி என்னை வருத்தாதே, ராவணா! துக்கத்தில் மூழ்கி அன்ன ஆகாரமின்றியிருக்கும் என்னை மாயங்கள் செய்து தொந்தரவு செய்யாதே! உனக்கு இது நல்லதல்ல. விலகிப் போ!” என்றாள் ஜானகி.
பிறகு மறுபடியும் யோசிக்கலானாள். “இல்லை, இல்லை. இவனைப் பார்த்தால் எனக்கு அடக்க முடியாத பிரீதியும் நம்பிக்கையும் உள்ளத்தில் உண்டாகின்றன. இவன் பகைவனாக இருக்க முடியாது. இவனை நான் சந்தேகித்தல் தகாது.” இவ்வாறு யோசித்து,
“வானரமே! உண்மையில் நீ ராமனிடமிருந்து வந்த தூதனா? உனக்கு மங்களம் ஆகுக! ராமனைப் பற்றிச் சொல்லுவாய். நான் உள்ளம் குளிரக் கேட்கின்றேன்!” என்றாள்.
உடனே மீண்டும் சந்தேகத்தில் மூழ்கினாள். ‘பிரமை பிடித்து இப்படி நற்செய்தி வந்ததாக எண்ணுகிறேனா? கனவா? மகிழ்ச்சி தரும் இந்தக் கனவைக் காண்கிறேன். இந்தக் கனவு தீர்ந்து போகுமா? எனக்கு ஆசை காட்டித் துயரம் உண்டாக்குவதற்கே இப்படிக் கனவு வந்திருக்கிறதா? சித்தப் பிரமையால் இப்படியெல்லாம் காண்கிறேனா? இல்லை, சரியாகத் தானே எல்லாம் எண்ணி யோசித்து உணர்ந்து பேசி வருகிறேன். பிரமை பிடித்த நிலையில் இல்லை. நல்ல நினைவில்தான் இருக்கிறேன். ஆனால் நூறு யோஜனைக் கடலைத் தாண்டி விட்டு இங்கே வந்தேன் என்கிறான், இவன். இது உண்மையாயிருக்க முடியாது. இவன் ராவணனே!’ என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டு ஹனுமானைக் கண்ணெடுத்தும் பார்க்காமல் மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
ஹனுமான் சீதையின் பயத்தையும் சந்தேகத்தையும் உணர்ந்தான். அரக்கனால் வஞ்சிக்கப்பட்டவள் இப்படிப் பயப்படுவதும் சந்தேகப்படுவதும் இயற்கையே என்று கண்டான். என்ன செய்வது என்று யோசித்து உடனே தீர்மானித்தான். ‘இவளுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் உண்டாக்க வேண்டும். ராமனுடைய நற்குணங்களை எடுத்து இவள் காதில் படும்படியாகத் துதிப்பேன். அந்த இனிய மொழிகள் தாமாகவே இவளுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்கும்’ என்று எண்ணிப் பேசலானான்.
“சூரியனுடைய தேஜஸ் பெற்ற ராமன், குளிர்ந்த சந்திர தரிசன இன்பத்தை மக்களுக்குத் தன் தரிசனத்தால் கொடுக்கும் ராமன், பூமியை ஆளும் அரசர்கள் அனைவரும் குபேரனைப் போல் மதிக்கும் ராமன், மகாவிஷ்ணுவைப் போல் பராக்கிரமம் பெற்ற ராமன், பிருகஸ்பதிக்குச் சமமான அறிவும் மன்மதனுக்கு ஒரு மன்மதனைப் போன்ற அழகு கொண்ட ராமன், உண்மையும் மதுரமும் கலந்த பேச்சை எப்போதும் பேசும் ராமன், நியாயமும் இடமும் பார்த்தே கோபம் கொள்ளும் நிகரற்ற வீரன் ராமன் அனுப்பிய தூதன் நான். அரக்கனை மானாகக் காட்டி வஞ்சித்து உம்மைத் தனிமைப்படுத்தி விட்டு, அந்த சமயத்தில் பலாத்காரமாக உம்மை ராவணன் பிடித்து எடுத்து வந்துவிட்டான். இந்த அக்கிரமத்தின் பயனை ராவணன் சீக்கிரம் அடைவான். அதை உம் கண்ணால் பார்ப்பீர். சீக்கிரத்தில் ராம லக்ஷ்மணர்களுடைய பாணங்கள் பாய்ந்து வந்து லங்கையை எரிக்கப் போகின்றன. அரக்கர்கள் கூட்டத்தையும் ராவணனையும் அழித்து நிர்மூலம் செய்வதைக் காண்பீர். ராமனால் அனுப்பப்பட்டு உம்மிடம் வந்திருக்கிறேன். உம்முடைய க்ஷேமத்தைத் தெரிந்து கொண்டு போக வந்திருக்கிறேன். உம்முடைய க்ஷேமத்தை ராமசந்திரனுக்காக நான் வணக்கமாக விசாரிக்கிறேன். லக்ஷ்மணனுக்காக அவன் வணக்கத்தை உமக்குச் செலுத்துகிறேன். வானர ராஜன் சுக்ரீவனுக்காக உமக்கு வணக்கம் செலுத்துகிறேன். ராம லக்ஷ்மண சுக்ரீவர்கள் இடைவிடாமல் உம்முடைய நினைவாக இருக்கிறார்கள். உயிருடன் நீர் இருப்பதைப் பார்த்தது என்னுடைய பாக்கியம். இனித் தாமதமில்லை. சீக்கிரத்தில் ராமனும் லக்ஷ்மணனும் சுக்ரீவனும் வானர சேனையும் லங்கையில் வந்து இறங்குவார்கள். சுக்ரீவனுடைய அமைச்சன் நான். ஹநுமான் என்பது என் பெயர். கடலைத் தாண்டிக் குதித்து லங்காபுரியில் இறங்கியிருக்கிறேன். துராத்மாவான ராவணனுடைய தலைமேல் என் காலை வைத்தேன் என்று எண்ணுவீராக. என் பராக்கிரமத்தால் கடலைத் தாண்டி உம்மைப் பார்க்க வந்த ராம தூதன் நான். என்னைச் சந்தேகிக்க வேண்டாம். தேவி, என் இவ்வார்த்தையை நம்புவீராக” என்று ஹனுமான் கண்களில் நீர் ததும்பச் சொன்னான். இப்படி ஹனுமான் பேசிய இனிய மொழிகள் சீதையின் பயத்தைக் கரைத்து விட்டன. தைரியமும் நம்பிக்கையும் கொண்டாள்.
“வானரனே! நான் சந்தேகித்ததைக் கண்டு நீ வருத்தமடையக் கூடாது. வஞ்சக அரக்கர்களால் மோசம் செய்யப்பட்ட நான் இப்படிப் பயப்படுகிறேன். ராமனிடமிருந்து வந்த நண்பனே, நீ எப்படி ராமனைச் சந்தித்தாய்? ராஜகுமாரனான ராமன் வானரர்களை எப்படி நட்பு கொண்டான்? இந்தச் சரித்திரத்தை விவரமாகச் சொல்லுவாய்” என்றாள்.
மறுபடியும் ஹனுமான் அவளுடைய நம்பிக்கையை ஊர்ஜிதம் செய்ய ராம லக்ஷ்மணர்களுடைய குண விசேஷங்களையும் சீலத்தையும் ரூப லக்ஷண சம்பத்தையும் வர்ணித்தான்.
“உலகத்தையெல்லாம் தன் அன்பினால் ஆட் கொள்ளும் ராமன் என்னையும் என்னுடைய அரசன் முதலான வானரர்களையும் வசீகரித்ததில் என்ன வியப்பு?” என்றான்.
பிறகு விஸ்தாரமாக நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அவளுக்கு எடுத்துச் சொன்னான். வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகை, எவ்வாறு ராம லக்ஷ்மணர்களை முதலில் சுக்ரீவன் சந்தித்தான், அவர்கள் எப்படி நண்பர்களானார்கள், வாலியை வதம் செய்து அவனுக்கு வானர ராஜ்யம் சம்பாதித்துத் தருவதாக ராமன் வாக்களித்தது, சீதை கீழே போட்ட ஆபரணங்களை வானரர்கள் எடுத்து வைத்திருந்தது, ராமனுக்கு அவற்றைக் காட்டியது, அவற்றைக் கண்டதும் அவனுடைய துக்கம் இரு மடங்கானது, சுக்ரீவனுடைய பட்டாபிஷேகம், மழைக்காலம் முடிந்ததும் வானரப் படை பூமண்டலம் முழுதும் தேடிப்போனது, தெற்கே சென்ற அங்கதன் முதலானோர் சீதையைக் காணாமல் பிராயோபவேசம் செய்யத் தீர்மானித்தது, சம்பாதியைக் கண்டு அவனிடம் உறுதியான துப்பு அடைந்தது, அதன் பின் தான் கடலைத் தாண்டி வந்தது, தான் ராவணனுடைய அந்தப்புரம் எல்லாம் தேடியது. இவை எல்லாவற்றையும் சொன்னான். எல்லா நிகழ்ச்சிகளையும் சொல்லிவிட்டு, தான் கொண்டு வந்திருந்த கணையாழியையும் அவளுக்குத் தந்தான்.
சீதை மோதிரத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டு ஆனந்த பரவசமானாள். இது ஒரு ராவணன் மோசமோ அரக்கர் மாயமோ என்கிற பீதி முற்றிலும் ஒழிந்து, ஹனுமானிடம் பரிபூரண நம்பிக்கையும் அளவு கடந்த பிரியமும் அடைந்தாள்.
“அப்பனே! நான் எப்படிப்பட்ட தவறு செய்தேன்! உன்னையா சந்தேகித்தேன்!” என்று தன்னை நொந்து கொண்டாள்.
வாயு புத்திரனான ஹனுமான் தான் யார் என்பதையும் தன் பிறப்பைப் பற்றியும் எடுத்துச் சொன்னான். “வாயு பகவானுடைய அனுக்கிரகம் பெற்ற நான் சொல்லிக் கொள்ளக் கூடாதாயினும் உம்முடைய துக்கத்தைத் தீர்ப்பது அவசியம். அதற்காகச் சொன்னேன். வானர வீரர்களும் படையும் வந்து அரக்கனையும் அவன் ராஜ்யத்தையும் வெகு சீக்கிரத்தில் நிர்மூலம் செய்துவிடப் போகிறார்கள். நான் திரும்பிப் போய் விஷயத்தைச் சொல்ல வேண்டியது தான் தாமதம்” என்று சொல்லி, தேவியின் பிரிவால் ராமன் படும் துக்கத்தையும் அவன் விரத வாழ்க்கையைப் பற்றியும் ஜானகியின் மனம் உருகும்படி எடுத்துச் சொன்னான்.
சீதை தன் துக்கத்தையும் மறந்து ராமனுடைய துயரத்தைப் பற்றி வருந்தலானாள்.
கருத்துரையிடுக