புதன், 15 ஏப்ரல், 2020

மணவாளமாமுனிகள் அருளிய யதிராஜ விம்ஶதி - 5 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்

ஸ்லோகம் 1 – பகுதி 2


ராமானுஜர், நம்மாழ்வாருடைய திருவாய்மொழியை சாப்பிட்டாரானால், யானை நடப்பதுபோல நடப்பாராம். அதுவே திருமங்கைமன்னன் திருமொழியைச் சாப்பிட்டாரானால் சிங்கம் உருமிகொண்டு போவதுபோல போவாராம்.


கலிமிக்க செந்நெல் கழனிக்குறையல் கலைப்பெருமான்
ஒலிமிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து அதனால்
வலிமிக்க சீயம் இராமானுசன் 


பெரிய திருமொழியை பாடிவிட்டாரானால் ராமானுஜர் சிங்கமாட்டம் நடப்பாராம். யானையாட்டம் வந்தாரானால் அன்று திருவாய்மொழி சேவித்துள்ளார் என்று அர்த்தமாம். சிங்கம் என்றால் பெரிய திருமொழியாம். சிங்கம் மாதிரி என்றால் தேஜஸ், ஒளி பிரசாசிக்கிறது. யானையாட்டம் என்றால் பெருமிதம் நடையில் தெரியும். இப்படிப்பட ராமானுஜர் நம்மாழ்வார் திருவடியே எல்லாம் என்றிருப்பார். 


இதனால்தான் ஆழ்வார்திருநகரி சென்றோமானால் அங்கு நம்மாழ்வாரின் சன்னதியில் சடாரி வாங்கச் சென்றோமானால் ஸ்ரீராமானுஜம் சாதியுங்கள் என்று சொல்லவேண்டும். அங்குமட்டும்தான் நம்மாழ்வாரின் திருவடி நிலைக்கு ராமானுஜம் என்று பெயர். மற்ற கோவில்களில் நம்மாழ்வாரின் பாதுகைக்கு மதுரகவி என்று பெயர். பெருமாளின் சடாரிக்கு சடகோபம் என்று பெயர். ராமானுஜரின் திருவடிக்கு முதலியாண்டான் என்று பெயர். வேறு எந்த ஊருக்குப் போனாலும் ராமானுஜர் சன்னதியில் முதலியாண்டான் ஸாதியுங்கள் என்று பிரார்த்திக்க வேண்டும். 


ஆனால் திருவேங்கடம் திருமலையில் ஆசார்யர்களில், ஸ்ரீ ராமானுஜர் சன்னதி மட்டுமே கோயிலுக்குள் இருக்கிறது. அங்குமட்டும் அவரது திருவடி நிலைக்கு அனந்தாழ்வான் என்று பெயர். அனந்தாழ்வான் ராமானுஜர் ஆணைக்குட்பட்டு திருமலை சென்று தோட்டம் அமைத்து புஷ்பகைங்கர்யம் செய்து வந்தவர். சம்பிரதாயத்திற்கு உள்ளே சென்றோமானால்தான் இவ்விஷயங்கள் எல்லாம் தெரியவரும்.


ராமானுஜர் நம்மாழ்வாரின் திருவடிகளில் அளவற்ற பிரேமம், பரமபக்தி கொண்டவர். இதேபோலத்தான் திருவரங்கத்தமுதனார் ராமானுஜ நூற்றந்தாதியிலே முதல் பாட்டு பாடினார்.


பூமன்னுமாது பொருந்திய மார்பன்* புகழ்மலிந்த 
பாமன்னுமாறன் அடிபணிந்துய்ந்தவன்* பல்கலையோர் 
தாம் மன்னவந்த இராமானுசன் சரணாரவிந்தம் 
நாம்மன்னிவாழ * நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே! 1


பூவைவிட்டு விலகாத மஹாலக்ஷ்மியைத் திருமார்பில் கொண்ட திருமால், ஸ்ரீமன் நாராயணனின் புகழைப் பாடிய திருவாய்மொழி, பாமன்னு மாறன், திருவாய்மொழியைப் பாடிய நம்மாழ்வார், நம்மாழ்வாரின் திருவடியை அடி பணிந்து உய்ந்தவர் இராமானுஜர். இதில் மஹாலக்ஷ்மி, பெருமாள், நம்மாழ்வார், ராமானுஜர் நால்வரும் வந்துவிட்டனர். 


இந்தப் பாசுரத்தை கவிதை நயத்தோடு இன்னொருவிதமாக பிரித்து பொருள்கோள்ளலாம்.

பூமன்னுமாது - மாது பொருந்திய மார்பன் - மார்பன் புகழ்மலிந்த 
பாமன்னு - பாமன்னு மாறன் - மாறன் அடிபணிந்துய்ந்தவன் – திருவடியைப் பற்றிய ராமானுஜர். 


அதே போல:
ஸ்ரீமாதவாங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா
பிரேமாவிலாஸய பராங்குஸ பாதபக்தம் |


ஸ்ரீமாதவன் - மாதவாங்க்ரி - அங்க்ரி ஜலஜத்வய நித்யஸேவா – நித்யஸேவா பிரேமா விலாஸய பராங்குஸ – பராங்குச பாதபக்தம் அங்கு தமிழில் எப்படி இருக்கிறதோ அதே போல இங்கு ஸம்ஸ்க்ருதத்திலும் பிரித்துப் பொருள் கொள்ளலாம். பகவானோ திருமாமகள் கேள்வன், அவன் திருவடிகளில் அதிமாத்ர அன்பு கொண்டவர் பராங்குசன் ஆகிய நம்மாழ்வார். அந்த நம்மாழ்வார் திருவடியே தனக்கு அனைத்தும் என்று கொண்டிருக்கிற ராமானுஜர். 


இதை எதற்காகச் சொல்கிறோம் என்றால் நாம் ஒருவரைப் பற்றுகிறோம் என்றால் அவர் தான்தோன்றியாக இருக்கக் கூடாது. உம் ஆசார்யருக்கு என்ன வைபவம் என்றால் அவர் வித்வத் முக்கியமல்ல. அவரது ஆசாரியர் யார்? என்பதே முக்கியம். அவர் ஆசாரியர் யார் என்று தெரியவில்லை என்றால் இது ஸ்ரீவைஷ்ணவ ஸம்பிரதாயத்தில் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. திருமால் ஒருவருக்கு மட்டுமே, அவருக்கே, எல்லாம் தெரியும். வேறு யாராயிருந்தாலும் அவருக்கே எதுவும் தெரியாது. ஆசாரியன் சொன்னார், நம்பிள்ளை சொன்னார், நஞ்சீயர் சொன்னார் என்றுதான் பூர்வர்கள் சொல்லுவர்கள்.


ஒருவர் உபன்யாஸம் செய்து கொண்டிருந்தார். இதே போல என் ஆசார்யன் சொன்னார், நம்பிள்ளை சொன்னார் என்று எதைச் சொன்னாலும் அவருக்கு முந்தைய ஆசாரியர் சொன்னார் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்கிறீரே, நீர் என்ன சொல்கிறீர் என்று கேட்டுவிட்டனர். அவர்கள் சொன்னதை திருப்பிச் சொல்வேன் அதுதான் தெரியும் என்றார் உபன்யாசகர். பூர்வர்கள் சொன்னதைக் குழப்பாமல் தப்பு இல்லாமல் சொன்னால் போறாதா? புதிதாகக் கண்டுபிடிக்கத் தேவையில்லை. 


எத்தனை வருஷத்துக்கு வேண்டுமானாலும் உபன்யாஸம் பண்ணுவதற்கு வேண்டிய விஷயங்கள் பூர்வாசாரியர்களால் எழுதிவைக்கப்பட்டுள்ளது. நித்தியம் நான்கு மணி நேரம் 80 வருஷம் சொன்னாலும் ஆயுள் காலத்தில் இன்னும் ஒன்றுமே சொல்லவில்லையே என்று தான் சொல்ல வேண்டிவரும்.


ஆழ்வாருடைய திருவடிகளில் அதீத பிரேமம் கொண்டவர் ராமானுஜர். ராமானுஜர் சித்திரம் வரைகிறோம். படத்தின் கீழே என்ன பெயர் எழுதுவது என்றால், ‘நம்மாழ்வார் பக்தி’ ‘பராங்குச பாத பக்தம்’ என்று எழுதினால் போதுமாம். பக்தனைத் தான் படமாக எழுதலாம் பக்தியைப் படமாக எழுதமுடியுமா? பக்தியே ஒரு ஆளாக இருக்குமா என்றால் அந்த அளவுக்கு ஒரு பக்தி. பிரேமா விலாசய பராங்குச பாத பக்தம். இதுவரை ராமானுஜரின் பெருமை சொல்லிற்று.


அவர் பராங்குச பாத பக்தம் சரி. எங்களுக்கு என்ன செய்வார். உங்களுக்கு செய்வதற்குத்தான் அவர் வாங்கிக் கொண்டிருக்கிறார். இனிமேல் உங்களுக்கு என்ன செய்வார் என்பதைச் சொல்லப் போகிறார். இல்லாதவரிடம் கேட்டால் என்ன கிடைக்கும். அதற்காகவே இவரிடம் என்ன இருக்கிறது என்பதை இதுவரை சொல்லி வந்தார். அதுபோல எங்கே இருந்து அவருக்கு வந்தது என்பதையும் சொல்லிவிட்டார். திருமால் கொடுத்தது மஹாலக்ஷ்மியிடம் - அங்கிருந்து விஷ்வக்சேனர் பெற்று நம்மாழ்வாரிடம் கொடுத்தார். பராங்குசர் நாதமுனிகளிடத்திலும், நாதமுனிகள் ஆளவந்தாரிடமும் கொடுத்தார். ஆளவந்தார் ராமானுஜரிடம் கொடுத்துள்ளார். ஆகவே அவருடைய திருவடியை பற்றினால் நமக்கு நிச்சயமாக கிடைக்கும். இவரிடம் பக்தியிருக்கிறது. 


நம்மாழ்வாருக்கு என்ன ஆசை. ஸ்ரீமாதவனுடைய திருவடிகளில் கைங்கர்யம் பண்ணவேண்டும் என்றே கலங்கியிருக்கிறார். 


ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி*
வழுவில்லா அடிமை செய்ய வேண்டும் நாம்*
தெழிகுரலருவி திருவேங்கடத்து*
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே. திருவாய் 3-3-1


ஸர்வ தேஶ ஸர்வ கால ஸர்வாவஸ்தோசித - கைங்கர்யங்களையும் செய்யப்பெறுவேன் ஆகவேண்டும். எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லாமுறைகளிலும், எல்லாரும் செய்யக் கூடிய கைங்கர்யங்களையும் அடியேனே செய்ய வேண்டும் என்பதே நம்மாழ்வாரின் பிரார்த்தனை. 


லக்ஷ்மணன் கூட பிரார்த்தித்தான் அல்லவா? “எல்லாக் கைங்கர்யங்களையும் நானே செய்யவேண்டும் என்று.” எல்லாக் கைங்கர்யங்களையும் தானே செய்யவேண்டும், செய்யவேண்டும் என்று நம்மாழ்வார் பிரார்த்தித்தாரே. ஒன்றாவது செய்ய முடிந்ததா? புளிய மரத்தடியிலிருந்து இம்மிகூட அவர் அசைந்ததேயில்லை.


ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார். பிறந்தவுடன் தவழ்ந்து வந்து மரத்தின் அடியில் உள்ள பொந்தில் அமர்ந்தார். பதினாறு வருஷங்கள் மலமூத்திரமில்லை. சாப்பிடவும் இல்லை. பேசவும் இல்லை. மதுரகவியாழ்வார் வடக்கிலிருந்து ஒரு ஜ்யோதியைப் பின்தொடர்ந்து தெற்கே வந்துகொண்டே இருந்தார். அது ஆழ்வார்திருநகரியில் கொண்டுவந்து விட்டது. அங்கே புளியமரத்தின் அடியில் அமர்ந்திருந்தவரைக் கண்டார். அவரிடம் நம்மாழ்வார் பேச ஆரம்பித்தார். 32 வயது வரை. பின் பரமபதம் சென்று சேர்ந்துவிட்டார். நகர்ந்தாரா. கைங்கர்யம் பண்ணினாரா? ஒன்றுமே இல்லை. பெரிய கைங்கர்யம் செய்தார் என்று சொல்கிறீரே என்றால், நம் இத்தனை பேரையும் கைங்கர்யம் செய்ய வைத்துவிட்டார் அல்லவா. அதுதான் அவருக்கிருக்கிற பெருமை. அவர் செய்தது வாக் கைங்கர்யம். 


அவர் திருவாய்மொழி முதலான பிரபந்தகளை வழங்கினார். கைங்கர்யங்கள் செய்ய ஆசைப்பட்டார். அத்தனை கைங்கர்யங்களையும் செய்து முடித்தவர் ஸ்ரீ ராமானுஜர். அவர் ஆசைப்பட்டதை இவர் நிறைவேற்ற வேண்டும். தகப்பனாருக்குப் பிள்ளை என்றால் என்ன அடையாளம்? அவர் விட்டுவிட்டுப் போனதை நன்கு நிறைவேற்ற வேண்டும். அவர் விட்டுவிட்டுப் போன ஸம்ப்ரதாயத்தை நன்கு ராமானுஜர் வளர்த்துக் கொடுத்தார். உடனாய் மன்னி வழுவில்லா அடிமை செய்யவேண்டும் என்று அவர் சொல்லிபோக அதைத்தான் ராமானுஜர் செய்தார்.


ப்ரேமா – அன்பு, பக்தி ப்ரபாவம். 
ப₄க்தி ப்ரபா₄வ ப₄வத₃த்₃பு₄த பா₄வப்ப₄ந்த₄
ஸந்து₄க்ஷித ப்ரணயஸார ரஸௌக₄பூர்ண:.।
ஸஹஸ்ர ஶாகா₂ம் யோऽத்₃ராக்ஷீத்
த்₃ராவிடீ₃ம் ப்₃ரஹ்மஸம்ஹிதாம் ॥ பராங்குசாஷ்டகம் (கூரத்தாழ்வான்) 


பகவானிடம் உள்ள பக்தியானது ஒரு கடலாக உருவாயிற்று என்றால் அந்த பக்திக் கடல் நம்மாழ்வார் என்று கூரத்தாழ்வான் மேல் ஸ்லோகத்தில் கூறியுள்ளார். அவரிடமிருந்து ராமானுஜர் அனைத்தையும் பெற்றார். கைங்கர்யத்துக்கு ஆசைப்பட்டார். சிந்தை கலங்கி திருமால் என்றழைப்பர் என்பது பாசுரம். நம்மாழ்வாருக்கு பகவானைப் பற்றி நினைத்தவுடன் சிந்தை கலங்குகிறது. கைங்கர்யம் எப்ப செய்வேன் என்றிருந்தார் நம்மாழ்வார். அந்த கைங்கர்யஸ்ரீயை ராமானுஜர் பெற்றார். இனி நாம்போய் ராமானுஜரைப் பற்றப் போகிறோம்.


காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா


ஆத்மபதாஸ்ரிதாநாம் – தன் (ராமானுஜருடைய) திருவடிகளைப் பற்றினவர்களுக்கு
காமாதிதோஷஹரம் – காமம் முதலான தோஷங்களைப் போக்கி விடுகிறார். காமம் முதலான என்றால் காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அஹங்காரம், மமகாரம், கண்டகண்ட விஷயங்களில் ஆசை ஆகிய எல்லாவற்றையும் நீக்கிவிடுகிறார் என்று பொருள். பகவானைத் தவிர மற்ற விஷயங்களில் ஆசை வைத்திருக்கிறோமல்லவா? அவற்றைப் போக்குகிறார். பெருமாளிடம் அன்பு குறைச்சலாயிருப்பதை வளர்க்கிறார். அஹங்கார மமகாரங்களைப் போக்குகிறார். அனாத்ம ஆசைகளைப் போக்குகிறார். எண்பது வயதானாலும் ஆசை. தன் திருவடிகளை அண்டினவருக்குப் போக்குகிறார்.


ஒரு ஆசாரியர் “இவன் நம்ம பயல், இவனை மோக்ஷத்துக்கு அழைத்துக் கொண்டுபோகவேணும்” என்று நம்மைப் பார்த்து நினைக்க வேண்டும் என்றால் அதற்கேற்ற குணம் நம்மிடம் இருக்க வேண்டுமே. அந்த குணம் நம்மிடம் இல்லையே. தோஷம் இருக்கிறதே. தோஷம் போக்கினால் மட்டுமே ஆசாரியர் நம்மை ஏற்றுக் கொள்வார். அவரது அபிமானம் கிடைக்கும். நம்மிடம் கோபம், பொறாமை, பேராசை, அஹங்காரம் போன்ற தீய குணங்கள் இருந்தால் ஆசார்ய அபிமானம் கிடைக்காது. ஆகவே ராமானுஜருடைய திருவடிகளைப் பற்றுங்கள். தோஷங்களைப் போக்கிவிடுவார். ஆசார்ய அபிமானத்துக்குத் தகுதியுடையவர் ஆகிவிடுவோம்.


காமாதிதோஷஹரம் ஆத்மபதாஸ்ரிதாநாம் – இது எல்லாம் செய்வது யார்? ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா - ராமானுஜர். யதிபதியான ராமானுஜரைத் தலையால் வணங்குகிறேன்.


ராமானுஜர் என்றால் ராமனுக்குத் தம்பி. லக்ஷ்மணன். இவரது பெயரும் லக்ஷ்மணமுனி. இவர் அவதரித்தபோது இவருக்குப் பெயர் இளையாழ்வார். ராமன் கிட்ட ராஜ்யம் இருந்தால் தொலைத்துவிடுவார். ராமானுஜர் அப்படியல்ல. ராமனிடம்தான் ராஜ்யம் இருந்தது. கைகேசி ஏதோ சொன்னாள் என்றவுடன் காட்டிற்கு புறப்பட்டு விட்டார். கைகேசிகூட மனம் மாறலாம். ஆனால் ராமன் பிடிவாதமாகக் காட்டுக்கு புறப்பட்டார். ஸ்ரீவைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியோடு பேசவே ஸந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அயோத்தியிலும் அப்படியே. அதனால் காட்டுக்குச் சென்று விட்டால் ஏகாந்தமாக பேச நல்ல வாய்ப்பு. மந்தரையைத் தூண்டிவிட்டு அதன்மூலம் அரசைத் துறந்துவிட்டு கானகம் சென்று விட்டார். இருக்கிற சொத்தை இழந்துவிட்டு 14 வருஷம் காட்டுக்குச் சென்றுவிட்டார் ராமன். 


ஒரு ராமானுஜர் லக்ஷ்மணன். தன் சொத்தான ராம கைங்கர்யம் என்பதை விடாமல் காட்டிற்கும் கூடவே சென்று செய்துவிட்டார். இன்னொரு ராமானுஜர் பரதன். அவரும் நந்திகிராமத்தில் இருந்து கொண்டு ராமனின் கைங்கர்யமான ராஜ்யம் ஆளுதல் என்பதைச் செய்துகொண்டே 14 வருடங்கள் கழித்து ராமன் திரும்ப வரும்பொழுது ஒரு மடங்கு ராஜ்யத்தை ஒன்பது மடங்கு விரிவுபடுத்தி ஒப்படைத்தார். இதனால்தான் பெரியவா ஸாதித்தார்கள், ராமனிடம் ஸம்பிரதாயம் இருக்கிறதைவிட பகவத் ராமானுஜரிடம் இருந்தால் அது பல்கிப் பெருகும் என்றனர்.


ராமானுஜர் சித்திரைமாதம் திருவாதிரை திருநக்ஷத்திரத்தில், ஆதிஶேஷன் அவதாரமாய், பஞ்சாயுதங்களின் அம்சமாய் ஸ்ரீபெரும்பூதூரில் அவதரித்தார். ராமானுஜரைப் பற்றி சொல்லும்பொழுது,


“ந சேத் ராமானுஜேத் யேஷ சதுரா சதுரக்ஷரி 
காமவஸ்தாம் பிரபத்யந்தே ஹந்தவோ ஜந்த மாத்ருஶ:” 


ராமானுஜ என்ற நான்கு எழுத்து உள்ளது. நாராயண என்பதில் நான்கு எழுத்து. அப்படியானால் ‘ஸ்ரீமன் நாராயண சரணௌ ஶரணம் பிரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்ற துவய மந்திரத்தில் நாராயண என்பதற்குப் பதில் ராமானுஜ என்பதை மாற்றிவைத்தால், “ஸ்ரீமத் ராமானுஜ சரணௌ ஶரணம் பிரபத்யே” ராமானுஜ என்ற நாலு எழுத்தையும் நாராயண என்ற நாலு எழுத்தையும் தராசில் வைத்து கூரத்தாழ்வான் சீர்தூக்கிப் பார்க்கிறார். நாராயண என்ற நாலு எழுத்து கொஞ்சம் அசட்டு எழுத்தாகவும் ராமானுஜ என்ற நாலு எழுத்து சமத்து எழுத்தாகவும் இருக்கிறது ஆகவே இதையே பிடித்துக் கொள்வோம் என்று ஆழ்வான் சொல்லிவிட்டார். “நசேத் ராமானுஜேத் யேஷா சதுரா சதுரக்ஷரீ” சதுரா என்றால் சாமர்த்யமான என்று அர்த்தம். சதுரக்ஷரீ என்றால் நாலு எழுத்து. சாமர்த்யமான நாலு எழுத்து “ராமானுஜ”. “காமவஸ்தாம் பிரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச:” அவருடைய திருவடிகளை யார் பற்றுகிறார்களோ அவர்களது காமம் முதலானவை போய்விடுகிறது.


ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா - இப்படிப்பட்ட ராமானுஜரை, யதிகளுக்குள் இந்திரனைப் போன்று இருக்கின்ற ராமானுஜரை என்னுடைய தலையால் வணங்குகிறேன். தலையால் என்று ஏன் சொல்லியுள்ளது. தலை பெற்ற பயனுக்காக வணங்குகிறேன் எனபதற்காக சொல்லப்பட்டுள்ளது. இந்த தலைபெற்ற பயனே ராமானுஜரை வணங்குவது தான். இதோடு முதல் ஸ்லோகம் முற்றுப் பெற்றது.


ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772 


நன்றிகள் ஸ்வாமி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக