ஆழ்வாராசார்யர்கள் காட்டும் வாழ்க்கை நெறிகள் - 4 - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி

ஞானபிரான் நமக்கு தரும் செய்தி


தசாவதாரங்களிலேயே வராஹ அவதாரத்திற்குத் தனித்த சிறப்பு ஒன்றுண்டு. நம்மாழ்வார் “ஞானபிரான்” என்றே வராஹ அவதாரத்திற்கு அடைமொழியிட்டு அழைக்கிறார். கோல வராஹம் என்று அதன் அழகை வருணிக்கிறார். 

“கோல வராஹம் ஒன்றாய் நிலம் கோட்டிடை கொண்ட எந்தாய் 
நீலக்கடல் கடைந்தாய் உன்னை பெற்று இனிப்போக்குவனோ?”

என்பது திருவாய்மொழி.

நிந்தாஸ்துதியாக சிலர் பகவானைப் போற்றுவார்கள். ஆண்டாள் நாச்சியார் தமது நாச்சியார் திருமொழியில் “மானமிலாப்பன்றி” என்றே கொஞ்சுகிறாள். காரணம் பகவானின் வராக அவதார அருஞ்செயல் அப்படிப்பட்டது.

பூமியைச் சுருட்டிக் கொண்டு போய் பாதாளத்தில் மறைத்து விட்டான் இரண்யாட்சன். இங்கே ஓர் கேள்வி வரும். ஏன் பூமியை மட்டும் பாய்போல் சுருட்டி பாதாளத்தில் கொண்டு போய் ஒளிக்க வேண்டும்? அண்ட சராசரத்தில் எத்தனையோ கோள்கள் இருப்பினும் பூமியில்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள். மோட்சக் கதவுக்கான வாசல் கூட பூமியில் தான் இருக்கிறது. அதனைக் குறிப்பிட்டுக் காட்டத்தான் வைகுண்ட ஏகாதசியில் “பரமபத வாசல்” திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நல்ல பதத்தால் பூமியில் திருமாலடியாராக வாழும் வாழ்க்கையின் பயன்தான் வைகுந்த வாழ்வு.

வைகுந்தம் புகுதலும்; வாசலில் வானவர் 
வைகுந்தன் தமர் எமர்; எமது இடம் புகுகென்று 
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர் 
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

என்று மண்ணவர் வாழ்வின் மாண்பை ஆழ்வார் சிறப்பித்துப் பேசுவார். வேதசாத்திரங்கள் அனைத்தும் பூமியில் உள்ள மக்களுக்காகவே அருளப் பட்டவை.

தேவர் உலகு என்று இருப்பினும், பகவானை அடையவும், தேவர் என்கிற உயர்வைப் பெறவும் யார் ஒருவரும் பூமியில் வந்தே பிறக்க வேண்டும். கர்ம யோகமோ, ஞான யோகமோ, பக்தி யோகமோ, பிரபத்தி யோகமோ பூமியில் தான் இயற்ற முடியும். எனவேதான் சாபம் பெற்ற தேவர்களும் பூமியின் புனித இடங்களைத் தேடி வந்து தவமியற்றி தங்கள் சாபத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இதற்காகத்தான் பூமியில் பகவானே அர்ச்சாவதாரமாக திவ்ய தேசங்கள் தோறும் எழுந்தருளியிருக்கிறான். திருமலையில் பகவான் இறங்கி நிற்பதற்குக் காரணம், இது மண்ணோர்க்கும், விண்ணோர்க்கும் வைப்பு எனும் சொல்லும்படியான சிறப்போடு விளங்குகிறது.


திருமலை திவ்ய தேசமும் ஒரு வராக ஷேத்ரம். இதனை ஆதிவராக ஷேத்ரம் என்பார்கள். ஸ்வாமி புஷ்கரணியின் வடமேற்கு மூலையில் எழுந்தருளியுள்ள இப்பெருமாளுக்கு தளிகை சமர்ப்பித்தபின்பே, திருமலையப்பனுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

வேதங்களை எல்லாம் சுருக்கினால், அதன் திரண்ட பொருளாக மூன்று மந்திரங்கள் வரும்.

அதனை, திருமந்திரம், துவையம், சரமச் சுலோகம் என்பார்கள். சரமச்சுலோகம் என்பது நிறைவான - முடிவான வார்த்தை என்று பொருள் கொள்ளலாம்.

சரமச்சுலோகங்களில் மூன்று சரமச்சுலோகங்கள் உண்டு. வராகர் அருளிய சரமச்சுலோகம், இராமபிரான் அருளிய சரமச்சுலோகம், கிருஷ்ணர் அருளிய சரமச் சுலோகம்.

அதில் முதலாவது வராகர் அருளியது. ‘ஸ்திதே மனஸ்’ என்று தொடங்கும் அதன் பொருள் இதுதான்.

நல்ல நிலையில் உன் உடலும் மனமும் இருக்கும்போது என்னை நினை. உன் மரணத் தருவாயில் என் பக்தன் என்று அபிமானித்து உன்னை பரகதிக்கு அழைத்துச்செல்கிறேன் என்கிற செய்தியை பூமியில் உள்ள மக்களுக்கு பூமாதேவித் தாயார் மூலமாக வராகப் பெருமாள் அருளிச் செய்தார் என்பது இச்சுலோகத்தின் கருத்து. இதனை பெரியாழ்வார் தமது திருமொழியில்

“எய்ப்பு வந்து நலியும்போது - அங்கேதும்
நான் உன்னை நினைக்க மாட்டேன் - அப்போதைக்கு       
இப்போதே சொல்லி வைத்தேன்”  

என்று பாடியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே சுவாமி இராமாநுஜருக்கு வரதராஜப்பெருமாள் அருளிய ஆறு வார்த்தைகளிலே ஒன்றாக அந்திம ஸ்ம்ருதி வர்ஜனம் என்று வருகிறது.

அந்திம ஸ்ம்ருதி என்றால் மரணகால நினைவு என்று பொருள். அதாவது பகவானைப் பற்றி மரணத்தருவாயில், நினைத்தால் தான் மோட்சம் என்று சாத்திரங்கள் பேச, அது நடைமுறையில்                      சாத்தியமில்லாதது; எனவே  திடகாத்திரமாக உடலும் புத்தியும் உள்ளபோது நினைத்த நினைப்புக்கு, அந்திம காலத்தில் பலன் தருகிறேன் என்கிறார் பகவான்.

அப்படியானால் பகவான் தான் அளித்த சாத்திரத்தை தானே மீறுகிறாரா என்று கேள்வி எழும்? பகவான் சாத்திரத்தை மீறவில்லை. “அஹம் ஸ்மராமி மத்பக்தம்” என்பதால் அவனுக்காக சாஸ்திர   சடங்கினை நானே செய்து பரகதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். 

ஒருவர் வாங்கிய கடனை அவரே அடைத்தாலும், அவருக்காக வேறு ஒருவர் அடைத்தாலும் கடன் அடைபடுகிறது அல்லவா! இங்கே அந்திம ஸ்ம்ருதி என்கிற கடனை தனது பக்தனுக்காக பகவான் (வராகப்பெருமான்) அடைக்கிறார்.

‘மானமிலாப் பன்றி’ என்று வராகப்பெருமாளைச் சொன்ன ஆண்டாள் அடுத்த வரியில் ‘தேசுடைய’ என்று பாடுகிறாள். மானமிலாப்பன்றியாய் எடுத்ததால் தேசு எனப்படும் பெருமை தானே சேர்ந்ததாம்.

வராக அவதாரம் கூறும் வாழ்வியல் செய்தி இதுதான்.

1) உலக நன்மைக்காகப் பாடுபட வேண்டும்.

2) அப்படிப் பாடுபடும்போது நாம் போய் இந்த வேலையைச் செய்ய வேண்டுமா என்று கருதாமல் இருக்க வேண்டும்.

3) அப்படிச் செய்வதால், அதுவே பெரும் புகழாக அவருக்குப் பெருமையைத் தரும்.

வராகப் பெருமானை வணங்கும்போது இந்த வாழ்வியல் செய்தியையும் மனதில் கொள்ளுவோம்.

வாழ்க்கை நெறிகள் வளரும்…

நன்றி - சப்தகிரி ஏப்ரல் 2018

நன்றி - பேராசிரியர் எஸ்.கோகுலாச்சாரி, புவனகிரி +919443439963

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை