வியாழன், 16 ஏப்ரல், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 111

ஐந்தாவது ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்

(நாபியின் சரித்திரம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஆக்னீத்ரனுடைய பிள்ளைகளில் முதல்வனாகிய காபியென்பவன் ஸந்தானமில்லாத (பிள்ளைப்பேறு இல்லாத) மேருதேவியென்னும் தன் பார்யையுடன் (மனைவியுடன்) ஸந்தானத்திற்காகப் (பிள்ளைப் பேற்றிற்காக) பரமபுருஷனை யாகங்களால் ஆராதித்தான். ச்ரத்தையோடும் மனத்தூய்மையோடும் யாகம் செய்கின்ற அம்மன்னவன் ப்ரவர்க்யமென்னும் யாகங்களை நடத்திக் கொண்டிருக்கையில், த்ரவ்யம் தேசம் காலம் மந்த்ரம் ருத்விக்குகள் துணை செயல் இவ்வுபாயங்களின் நிறைவினால் பகவான் பெற அரியனாயினும் தன் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யமுடையவனாகையால் தன் பக்தருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்னும் கருத்து நெஞ்சில் குடிகொண்டு அதனால் தூண்டப்பெற்று அழகிய அவயவங்கள் (உடல் உறுப்புக்கள்) அமைந்திருப்பதும் கர்மத்திற்குட்படாததும் மனத்திற்கினியதும் மனத்தையும் கண்களையும் ஆநந்த வெள்ளத்தில் அழுத்தவல்ல அவயவங்களால் அழகியதுமான தன் திருமேனியை அம்மன்னவனுக்குக் காட்டினான். சதுர்ப்புஜனும் (நான்கு தோள்களை உடையவனும்), கோடி ஸூர்ய ப்ரகாசனும், பட்டு வஸ்த்ரம் தரித்தவனும், மார்பில் திகழ்கின்ற ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமுடையவனும், சங்கம் பத்மம் சக்ரம் கௌஸ்துபம் கதை இவைகளையுடையவனும் பேரொளி அமைந்த ரத்னங்கள் இழைக்கப்பெற்ற கிரீடம் குண்டலம் கைவளை அரை நாண்மாலை முத்துமாலை தோள்வளை முதலிய ஆபரணங்கள் அணிந்தவனுமாய்த் தோன்றுகிற அப்புருஷோத்தமனை ருத்விக்குக்களும் ஸபையிலுள்ளவர்களும் யஜமானனும், பணமில்லாதவர்கள் சிறந்த பணத்தைக் காண்பதுபோல், கண்டு மிக்க வெகுமதியுடன் பூஜித்து வணங்கின தலையுடன் அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள்.

ருத்விக்குக்கள் சொன்னார்கள்:- “நீ பூஜிக்கத் தகுந்தவர்களில் தலைமையுடையவன். நீ நிறைவாளனாயினும் உன் ப்ருத்யர்களான எமது பூஜையை நீயே அங்கீகரிப்பாயாக. “நமோ நம:” என்றிவ்வளவு மாத்ரமே எங்களுக்குப் பெரியோர்கள் கற்பித்துக் கொடுத்திருக்கிறார்கள். ப்ரக்ருதியின் பரிணாமமான சப்தாதி விஷயங்களில் சென்ற மதியுடையவனும் கர்மத்திற்குட்பட்டுச் சக்தியற்றவனும் அந்த ப்ரக்ருதியின் கார்யமான நாமம், ரூபம், ஜாதி இவைகளை உடையவனுமாகிய எவன் தான் ப்ரக்ருதி ஜீவர்களைவிட வேறுபட்டவனும் ஸர்வேச்வரனுமாகிய உன் ஸ்வரூபத்தை நிரூபித்துச் சொல்லவல்லனாவான்? உன் குணங்கள் மிகவும் மங்களமானவை; ஸமஸ்த ப்ராணிகளுடைய பாபத்தையும் போக்கும் திறமையுடையவை. அப்படிப்பட்ட மேன்மை அமைந்த உன் குணங்களில் சிறிது மாத்ரம் சொல்லலாமன்றி அவற்றையெல்லாம் எவனால் சொல்லமுடியும்?

பரமனே! உன் பக்தர்கள் ப்ரீதியினால் எழுத்துக்கள் தொண்டை அடைத்து குரல் தழதழக்கப்பெற்று துதிகளைச் செய்து ஜலம், பொருக்கின நெல் கதிர், தளிர், துழாய், அருகம்புல், முளை, இவைகளைக் கொண்டு நடத்தும் பூஜையாலும் நீ ஸந்தோஷம் அடைகின்றனையல்லவா? பலவகைக் கருவிகள் நிறைந்த இப்பூஜையாலும் உனக்கு ஆகவேண்டிய இஷ்டமான ப்ரயோஜனம் ஒன்றும் எங்களுக்குத் தெரியவில்லை. ஸர்வ காலத்திலும் நீயே நேராக ஸமஸ்த புருஷார்த்த ஸ்வரூபனாயிருக்கின்றாய். ஆகையால் புருஷார்த்தங்களைப் பெற விரும்பி நாங்கள் செய்கிற இந்த யாகம் உன்னுடைய ஆராதன மாத்ரமேயாமன்றி, இதனால் உனக்கு ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஒன்றுமில்லை. பரமபுருஷனே! நாங்கள் செய்யும் ஆராதனமும் உன் பெருமைக்கீடான ஆராதனமாகமாட்டாது. ஆகையால் நாங்கள் எவ்வளவு ஆராதிக்கினும் நீ ஆராதிக்கப்படாதவனே. ஆயினும் நீ உன் பெருங்கருணையால் உன் மஹிமையான மோக்ஷ புருஷார்த்தத்தையும் நாங்கள் விரும்பும் பலனையும் நிறைவேற்ற முயன்று, நிறைவாளனாயினும் நிறைவற்றவன்போல் மேலான புருஷார்த்தத்தை அறியாத மூடர்களான எங்களுக்கு இந்த யாகத்தில் புலப்பட்டாய். பூஜிக்கத் தகுந்தவர்களில் தலைவனே! நீ இம்மன்னவன் விரும்பும் வரங்களைக் கொடுக்கும் பொருட்டுத் தோன்றினாயாயினும், இந்த ராஜரிஷியின் யஜ்ஞத்தில் வரத ச்ரேஷ்டனாகிய நீ உன் பக்தர்களான எங்களுக்குப் புலப்பட்டமையே பெரிய வரமாயிற்று. வைராக்யத்தினால் கூரிய அறிவாகிற காற்றினால் மனமலங்களையெல்லாம் பறக்கடித்துப் பகவானை ஆராதிக்கையாகிற பரம தர்மத்தில் ஊக்கமுற்று ப்ரக்ருதியைக் காட்டிலும் விலக்ஷணனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை அனுஸந்திக்கையால் மனக்களிப்புற்ற முனிவர்களால் எப்பொழுதும் பரிசீலிக்கப்பட்ட குணகணங்களை உடையவனே! உன் குணங்களைப் பேசுகையில் ஸமஸ்த நன்மைகளும் கைகூடும். 

ஸ்வாமீ! தடுக்குதல், தும்பல், விழுதல், கொட்டாவி விடுதல், துக்க தசை முதலிய ஸமயங்களிலும் ஜ்வரத்திலும் (காய்ச்சலிலும்) மரண காலத்திலும் நாங்கள் மெய்ம்மறந்திருப்பினும்  உன்னை நினைக்க நேரும்படி ஸமஸ்த பாபங்களையும் போக்க வல்லவைகளும் உன் கல்யாண குணங்களைப் பற்றி ஏற்பட்டவைகளுமான உன் திருநாமங்களைச் சொல்லும்படி எங்களுக்கு அருள்புரிவாயாக. அன்றியும், இந்த ராஜரிஷி ஸந்தானத்தை (பிள்ளைப் பேற்றை) விரும்புகிறான். அதிலும் உன்னைப் போன்ற ஒரு பிள்ளை பிறக்கவேண்டுமென்று ஆசைப்படுகிறான். இவன் ஸந்தானத்தையே (பிள்ளைப் பேற்றையே) பெரிய புருஷார்த்தமாக நினைத்திருக்கின்றான். ஆகையால், பணமில்லாதவன் உமி நொய் நூக்கு முதலிய அற்பங்களை விரும்பிக் குபேரனிடம் போவதுபோல், இவன் இவ்வுலகத்திலுள்ள புருஷார்த்தங்களையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்கவல்லவனும் ஷாட்குண்ய பூர்ணனுமாகிய உன்னை இதற்காக அனுவர்த்திக்கிறான். இந்த ஸம்ஸாரத்தில் பெரியோர்களின் பாதங்களைப் பணியாத எந்த மனிதன்தான், கர்ம வச்யர்களால் (கர்ம வினைக்கு உட்பட்டவர்களும்) வெல்ல முடியாததும் நல்வழியில் போகவொட்டாமல் மறைப்பதுமாகிய உன் மாயையால் மதிமயங்காதவன்? எவன் தான் சப்தாதிவிஷயங்களாகிற விஷத்தின் வேகத்தினால் தன்னியற்கை மாறப்பெறாதவன்? ஆகையால் இவன் உன் மாயையால் மதிமயங்கி ஸந்ததியை வேண்டுகிறான். கம்பீரமான கார்யங்களைச் செய்பவனே! தேவர்க்குக் தேவனே! ஸர்வர்க்கும் அந்தாத்மாவாயிருப்பவனே! மூடபுத்திகளான நாங்கள் ஸந்ததியை ஒரு புருஷார்த்தமாக நினைத்து இந்த அற்ப ப்ரயோஜனத்திற்காக உன்னை அழைத்து அவமதித்தோம். எங்களுடைய இந்த அபராதத்தை நீ பொறுத்தருளவேண்டும். நீ எல்லோரிடத்திலும் ஸமமாயிருக்கும் தன்மையனல்லவா?” என்று ஸ்தோத்ரம் செய்தார்கள். 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இங்கனம் பொருளடக்கமுடைய மொழிகளால் துதிக்கப்பெற்ற தேவச்ரேஷ்டனாகிய பகவான் பாரதவர்ஷத்தை ஆளும் ப்ரபுவாகிய நாபி மன்னவனாலும் அவனுடைய ருத்விக்குக்களாலும் வணங்கப்பெற்று இரக்கத்துடன் இதை மொழிந்தான்.

பகவான் சொல்லுகிறார்:- “ஓ ரிஷிகளே! உண்மையே பேசுந்தன்மையரான உங்களால் கிடைக்க அரிதான வரத்தைப்பற்றி வேண்டப்பட்டேன். இம்மன்னவனுக்கு என்னைப்போன்ற புதல்வன் வேண்டும் என்றல்லவோ நீங்கள் வேண்டினீர்கள்? எனக்கு நானே நிகரன்றி மற்றொருவனுமில்லை. நான் ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனாயிருப்பவன். ஆகையால் இவ்வரம் துர்லபமே (கிடைத்தற்கு அரியதே). ஆயினும் தவம் வித்யை முதலியவற்றால் ப்ரகாசிக்கும் தன்மையரான அந்தணர்கள் எனக்கு முகமாகையால் அவ்வந்தணர்களின் வார்த்தை பொய்யாகலாகாது. அதற்காக எனக்கு நிகரானவன் மற்றொருவனும் அகப்படாமையால் நானே எனது அம்சத்தினால் இந்த நாபியின் பத்னியாகிய மேரு தேவியிடத்தில் அவதரிக்கிறேன்” என்றான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மேருதேவி கேட்டுக்கொண்டிருக்கையில் அவளுடைய பர்த்தாவான (கணவனான) அம்மன்னவனுக்கு பகவான் இங்கனம் மொழிந்து அந்தர்த்தானம் அடைந்தான். விஷ்ணுராதனே! இங்கனம் பகவான் இந்த யாகத்தில் மஹர்ஷிகளால் ஆராதிக்கப்பட்டு நாபியின் இஷ்டத்தை நிறைவேற்ற முயன்று பெருந்தவத்தரும் ஞானிகளுமான நைஷ்டிகருடைய தர்மங்களை வெளியிடுவதற்குச் சுத்தஸத்வமயமான உருவத்துடன் அவனது பார்யையாகிய மேருதேவியிடத்தில் அவதரித்தான்.

மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக