இரண்டாவது ஸ்லோகம்
பகவத் பாகவத விஷய ப்ரேம புஷ்கல்யத்தையும் ஆஶ்ரித ஜனங்களுக்கு சரமப்ராப்யமாய் இருக்குமதையும் வெளியிடுகிறார். பகவான், பாகவதரிடத்தில் ராமானுஜருக்கு எத்தனை அன்பு இருக்கிறது என்பதையும், சிஷ்யர்களுக்கு எப்போதும் புகலாய் இருப்பவர் என்பதையும் இந்த ஸ்லோகத்தில் சொல்லுகிறார்.
स्रीरङ्गराजचरणाम्बुजराजहंसं स्रीमत्पराङ्कुशपदाम्बुजब्रुन्गराजम् ।
स्रीभट्टनाथपरकालमुकाब्जमित्रं स्रीवत्सचिह्नशरणं यतिराजमीडे ॥ 2
ஸ்ரீரங்கராஜசரணாம்புஜராஜஹம்ஸம்
ஸ்ரீமத்பராங்குஸபதாம்புஜப்ருங்கராஜம் |
ஸ்ரீபட்டநாதபரகாலமுகாப்ஜமித்ரம்
ஸ்ரீவத்ஸசிஹ்நஶரணம் யதிராஜமீடே || 2
முதல் வரியில் பகவானிடம் உள்ள ஸம்பந்தத்தையும். இரண்டாவது, மூன்றாவது வரிகளில் பாகவதர்களிடம் உள்ள ஸம்பந்தத்தைச் சொல்லி, நான்காவது வரியில் சிஷ்யர்களால் ஆஶ்ரயிக்கப்பட்டவர் யதிராஜர் என்று சொல்லுகிறார். முதல் வரி ரங்கராஜனைப் பற்றியது. இரண்டாவது வரியில் நம்மாழ்வாரைப் பற்றி. மூன்றாவது வரியில் பெரியாழ்வார் திருமங்கை ஆழ்வாரைப் பற்றி. நாலாவது வரி கூரத்தாழ்வானைப் பற்றி. சிஷ்யரால் வணங்கப்படுபவர். கூரத்தாழ்வான் சிஷ்யராயிற்றே. நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் எல்லோருக்கும் பக்தனாக இருக்கிறார். பாகவத ஸம்பந்தம். ரங்கராஜனுக்கு பக்தன். பகவத் ஸம்பந்தம்.
ஸ்ரீரங்கராஜ சரணாம்புஜ ராஜஹம்ஸம் – ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளாகிய தாமரை மலர்களுக்கு (தாமரை மலர்களின் நிழலின் கீழே தங்கியிருக்கிற) ராஜஹம்ஸம் போன்றவரும், மானஸரோவரில் ஹம்ஸம் இருக்குமாம். நம் ரங்கநாதரின் பச்சைமாமலைபோல் மேனி, திருவடிகள் தாமரை, கண்களோ தாமரை. மானசரோவரில் தாமரையில் அமர்ந்து தேனைப் பருகும் ராஜ ஹம்ஸம்போலே, ரங்கநாதரின் அருகில் பட்டர் ஒரு ஹம்ஸம், கூரத்தாழ்வான் போன்ற பலர் ஹம்ஸங்கள். அதில் ஸ்ரீ ராமானுஜர் ராஜ ஹம்ஸம். ஹம்ஸம் பாலிலிருந்து நீரைத் தனியாகப் பிரித்துவிடுமாம். அதுபோல ராஜ ஹம்ஸமான ஸ்ரீ ராமானுஜர் நல்லது எது தீயது எது என்று தனித் தனியாக பிரித்து சிஷ்யர்களுக்கு நல்லதை மட்டும் கொடுப்பார்.
ஸ்ரீமத்பராங்குஸ பதாம்புஜப்ருங்கராஜம் – ஸ்ரீமத் பகவானுக்கு ‘ஸ்ரீ’ மஹாலக்ஷ்மி, இங்கு நம்மாழ்வாருக்கு ஸ்ரீ.. கைங்கர்ய ஸ்ரீ.. பராங்குஸராகிய, பரர்களுக்கு அங்குசம் இடக்கூடிய நம்மாழ்வாருடைய - போன ஸ்லோகத்தில் நம்மாழ்வாரைத் தனித்துச் சொன்னார். இங்கு மற்ற இரண்டு ஆழ்வார்களுடன் சேர்த்துச் சொல்லுகிறார்.
பதாம்புஜப்ருங்கராஜம் - திருவடிகளென்னும் தாமரைமலர்களில் (ப்ருங்க ராஜம் – என்றால் தேனி, தேனைப்பருகுவதற்காகப்) படிந்திருக்கிற உயர்ந்த வண்டு போன்றவரும்,
ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் – ஸ்ரீபட்டநாதராகிய பெரியாழ்வாரென்ன, பரகாலராகிய திருமங்கையாழ்வாரென்ன ஆகியவர்களுடைய திருமுகங்களாகிய தாமரைமலர்களை மலரச்செய்கிற ராமானுஜர் என்ற ஸூர்யன் போன்றவரும், பட்டநாதரை மட்டும் சொல்லியாச்சு, ஆண்டாள்? ஸ்ரீ என்றிருக்கிறதே, ஆகவே ஆண்டாள், பட்டநாதர், திருமங்கையாழ்வார் ஆகிய தாமரைகள் ராமானுஜர் எனும் சூரியனைப் பார்த்து மலர்கின்றனவாம். ஏன் என்றால் இவர் அவதரித்த பிறகே திவ்யப்ரபந்தங்கள் எல்லாம் பிரபலம் ஆயிற்று.
ஸ்ரீவத்ஸசிஹ்ந ஸரணம் – பகவானுடைய ஸ்ரீவத்ஸம் என்ற மருவினுடைய அம்ஸமாக அவதரித்தவர் கூரத்தாழ்வான் ஆகவே ஸ்ரீவத்ஸசிஹ்நர் என்பது கூரத்தாழ்வானின் திருநாமம். கூரத்தாழ்வானுக்கு ஒரே இருப்பிடமாய், புகலிடமாய் இருக்கும்,
யதிராஜம் ஈடே – யதிராஜராகிய எம்பெருமானாரை ஸார்வபௌமரே, துதிக்கிறேன்.
ஸ்ரீரங்கம் என்று சொன்னாலே ராமானுஜரின் கண்களில் நீர் பெருகுமாம் ரங்கம் என்று சொல்லிப் பாருங்கள், உடனே மயங்கிவிடுவார். கண்ணெல்லாம் ஜலமாகவரும். வேதாந்தம், ஸ்ரீபாஷ்யம் எல்லாம் மறந்துவிடும். கோயில் நன்றாக இருக்கவேண்டுமே, கைங்கர்யங்கள் நல்லபடி நடக்கவேண்டுமே. விமானம் நன்றாக இருக்கணுமே என்றெல்லாம் கலங்கிவிடுவாராம். ரங்கநாதருடைய பெயரை ஸ்ரீரங்கம் என்ற ஊர் பெயர் இல்லாமல் சொல்லவருமா? அழகிய மணவாளன் என்று ஒரு பெயர் சொல்லலாம். ஆனால் ஆழ்வார்களோ ஒரு பிரபந்தத்தில் கூட அழ்கிய மணவாளன் என்று சொல்லவில்லை. நாலாயிரத்தில் 247 பாசுரங்கள் அரங்கனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
247 என்பது தமிழ் எழுத்துக் கணக்கு. தமிழில் உயிர், மெய், உயிர்மெய், ஆயுத எழுத்துக்கள் சேர்த்து 247 எழுத்துக்கள் உள்ளது. ஆழ்வார்கள் திருவரங்கத்தை விட்டுவிட்டு அரங்கனைப் பாடவே மாட்டார்கள். திருவேங்கடமுடையானையும் வேங்கடத்தான் என்றே பாடுவார்கள். ஸ்ரீனிவாசன் என்ற பெயர் தேடினாலும் கிடைக்காது.
ரங்கராஜ சரணாம்புஜ ராஜ ஹம்ஸம். யாருடைய திருவடிகளில் பற்று இல்லை. ஸ்ரீவைகுண்டநாதன் திருவடிகளிலோ, பாற்கடல் பரவாசுதேவன் திருவடிகளிலோ, விபவாவதாரத்திலும் இல்லை. ரங்கராஜனிடம் மட்டுமே ஆசை. செடி நன்றாக வளரவேண்டுமென்றால் வேர் நல்ல இடத்திலும், நீர் அதிகமாகக் கிடைக்கும் இடத்திலும் இருக்கவேண்டும். அதுபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அனைத்து திவ்யதேசப் பெருமாளுக்கும் வேர் போன்றவர். அதனால்தான் அவருக்கே மங்களம் பாடுகிறார்கள்.
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ*
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ* கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ * மணவாள மாமுனியே
இன்னும் ஒரு நூற்றாண்டிரும்.
பகவானே ஸ்ரீவைகுண்டத்தையும், பாற்கடலையும், சூரியமண்டலத்தையும் துறந்துவிட்டு, அவரே ஆசைப்பட்டு ஸ்ரீரங்கம் வந்துள்ளாராம்.
அடுத்து ஸ்ரீமத் பராங்குச பதாம்புஜ ப்ருங்கராஜம்:- நம்மாழ்வாரின் திருவடித் தாமரைகளில் இருக்கும் தேன் வண்டு போன்றவர். பாகவத விஷயம் சொல்லுகிறார். ஈஸ்வரனைப் பெறப்புகும் உபாஸகர். ராமானுஜருக்கும், நம்மாழ்வாருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா? நாமாக முயற்சி பண்ணி பக்தியோகம் செய்து மோக்ஷத்திற்கு போகப்போகிறோம் என்று பலரும் நினைத்திருந்தனராம். நாமாக சரணாகதி பண்ணி நாம் பற்றின பற்றினாலே மோக்ஷத்திற்குப் போகப் போகிறோம் என்று இன்னும் பலர் நினைத்திருந்தனராம். ஆனால் நம்மாழ்வார், “இது எதனாலேயும் இல்லை. பகவானுடைய நிர்ஹேதுஹ கடாக்ஷத்தாலேயே முக்தியடையப் போகிறோம்.” என்றார்.
இந்த உயர்ந்த சரணாகதி சாஸ்திரத்தை அவர்தான் வெளியிட்டார். பிரபன்னர்களுக்கெல்லாம் தலைவராக அவர்தான் இருக்கிறார். பிரபன்ன ஜன கூடஸ்தர் என்றே நம்மாழ்வாருக்குத் திருநாமம். ராமானுஜருக்கும் இதுவே திருவுள்ளம். நம்மாழ்வார் சொன்னதைக் கேட்டுத்தான் இவரே சரணாகதி அனுஷ்டித்தார். நிர்ஹேதுக கடாக்ஷத்தால்தான் மோக்ஷம் கிடைக்கும் என்றும் இருக்கிறவர். ப்ராப்யம், ப்ராபகம் வழியும் பகவான் தான். அடைந்து அனுபவிக்கவேண்டியதும் பகவானைத்தான். என்று நம்மாழ்வாரின் மதத்தை நன்கு ஏற்றுக்கொண்டவர் ஸ்ரீ ராமானுஜர்.
பராங்குச பாதாம்புஜ ப்ருங்கராஜம். பராங்குசரின் திருவடிகளில் பக்தி இருக்கிறவர் என்று ஏற்கனவே போன ஸ்லோகத்தில் பார்த்துவிட்டோம். இந்த ஸ்லோகத்தில் பராங்குசரின் திருவடிகளில் தேனை அனுபவித்துக் கொண்டிருக்கும் தேன் வண்டு என்று இப்பொழுது சொல்கிறார். முந்தய ஸ்லோகத்தில் கடமை, தொண்டு, உரிமை சொல்லப்பட்டது.
இந்த ஸ்லோகத்தில் அனுபவம் சொல்லப்படுகிறது. கடமை வேற. அனுபவம் வேறே. கணவன் மனைவி இருக்கிறார்கள். உரிமை கண்டிப்பாக உண்டு. ஒருவர் சொல்லுவதை ஒருவர் கேட்கவேண்டும். உரிமையையே பேசிக்கொண்டு வாழ்க்கையைக் கழித்துவிடலாமா? பேசிண்டே இருந்தால் சண்டைதான் மிஞ்சும். அன்பு, அனுபவம் வேண்டாமோ? அந்த அன்பு இருக்கிறது இரண்டாவது ஸ்லோகம். வெறும் உரிமை மட்டும் ஆகாது. அன்பும் வேண்டும், உரிமையும் வேண்டும். உரிமை இருக்கிறது என்பதற்கு முதல் ஸ்லோகம். அன்புக்கு இரண்டாவது ஸ்லோகம். அனுபவிக்கிறார் என்பதே பராங்குச பதாம்புஜ ப்ரங்கராஜம்.
அடுத்து சொல்கிறார்.,
ஸ்ரீபட்டநாத பரகால முகாப்ஜமித்ரம் - பெரியாழ்வாரின் ஆசை என்ன? பகவானுக்கு ஒன்றும் வந்து விடக்கூடாது என்று “பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு” பாடியவர். திருக்காப்பு சாத்தியவர். பெரியாழ்வாருக்குப் பயம், மல்லர்களோட சண்டை போடவேண்டுமே. எல்லோரும் பார்க்க இப்படி வந்து காட்சி கொடுக்கிறாரே. கண் பட்டுவிடுமோ என்றெல்லாம் பயம். “என் தோள் மல்லாண்ட திண்தோள், கவலைப் படாதேயும்” என்றார் பகவான். அதனால் தான் பயமாகவே இருக்கிறது. சக்தி உள்ள பிள்ளையாய் இருந்தால் ஊர்ல என்ன ஆபத்து என்றாலும் நான் முதல்லே என்று போய் நிற்கும். வேணும்னே அடிபட்டுண்டுவரும். வீட்டோட இருக்கிற பிள்ளை தேவலை. நீ அந்த மாதிரி இருக்க இருக்கமாட்டாய்.
தேவர்களுக்கு ஆபத்து என்றால் நான் இருக்கிறேன் என்று முன்னாடி வருகிறாய். யானை கூப்பிட்டால் உடனே ஓடிவருகிறாய். அசுரப்பிள்ளை பிரஹலாதன் கூப்பிட்டால் உடனே தோன்றுகிறாய். நீ வீட்டோடு இருந்தால் நான் ஏன் கவலைப் படப்போகிறேன். எதைக் கண்டு பயப்படமாட்டார் என்று பகவான் நினைக்கிறாரோ அதைக் கண்டே இவர் இன்னும் அதிகம் பயப்படுகிறார்.
பாற்கடலிலே தனியாப் படுத்துக்கொண்டிருக்கிறேன். யாராவது வருவார்களா? கவலை வேண்டாம் என்றாலும், அதுவேதான் பயமாய் இருக்கிறது. உருண்டு விழுந்துவிட்டாயானால் எடுக்கவே ஆள் இருக்கமாட்டார்கள். ஆகவே பயம். சரி நான் திருக்கோளூரில் படுத்துக் கொண்டிருக்கிறேன், பூமியில்தானே இருக்கிறேன் கவலை வேண்டாம் என்றார் பகவான். பல திவ்ய தேசங்களில் பகவான் பள்ளிகொண்டவராக இருக்கிறார். அதுவும் பயமாகத்தான் இருக்கிறது. வாசலில் துவயஸ்தம்ப கொடி பறக்க விட்டிருக்கிறாயே. அது எங்கோ போகும் அசுரனை, இங்கு பகவான் படுத்துக் கொண்டிருக்கிறார், வா, வா என்பதுபோல இருக்கிறதே. கொடியை இறக்கிவிட்டு படுத்துக் கொள்ளக்கூடாதா? என்கிறார் ஆழ்வார்.
(நான் என் பெண்ணை வேற உமக்குக் கொடுக்கப்போகிறேனே, பயம் இருக்காதா?) உம்ம பக்கம் யாரும் வரக்கூடாது. அடியேன் ஒருத்தன்தான் வரணும். எங்கிருந்தாலும் ஆபத்தா என்று பகவான் கேட்க அதற்கு ஆழ்வார், “வைகுண்டம் வேண்டாம், திருப்பாற்கடல் வேண்டாம், சூர்ய மண்டலம் வேண்டாம் என் உள்ளத்தில் வந்து உட்காரும். நான் பார்த்துக் கொள்கிறேன்.”
பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு* ஓடிவந்து என்
மனக்கடலில் வாழவல்ல மாய மணாள நம்பி*
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று *
உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினயே! (பெரியாழ்வார் திருமொழி 5-4)
வேறு எங்கிருந்தாலும் உனக்கு ஆபத்துத்தான். அகவே எந்தன் மனந்தனுள்ளே வந்துவிடு என்கிறார் பெரியாழ்வார். இங்கு வந்து விட்டால் ஒரு கஷ்டம் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிறார் ஆழ்வார். அந்த அளவுக்குப் பகவானிடம் ப்ரேமம். பரம பக்தி. அந்த ப்ரேமத்தாலே கலங்கினவரான பெரியாழ்வாரைப் பற்றினவர் ஸ்வாமி ராமானுஜர். சரி. பெரியாழ்வார் பக்தர் கலங்குகிறார். ராமானுஜரோ வேதாந்தி. கலங்கவே கூடாதே என்றால் கலங்கிவிட்டார்.
நித்யப்படி பெரிய பெருமாளுக்கு தளிகைப் பிரஸாதம் போகிறது. நிறையப் பிரஸாதம் உள்ளே போகிறது. போகும்போதும் ராமானுஜர் திறந்து பார்க்கிறார். தளிகை கண்டருளப்பண்ணி திரும்ப வரும்போதும் பார்க்கிறார். போன பிரஸாதம் அப்படியே திரும்பி வருகிறது. இதைப் பல நாள் பார்த்த உடையவர் ஒரு நாள் தளிகை உள்ளே போகும்போது தானும் உடன் சென்று பெரிய பெருமாளிடம் என் கண்முன்னால் நீ அமுது செய்யவேண்டும். பிரஸாதம் குறைவதை நான் காணவேண்டும் என்று பெரிய பெருமாளிடம் முறையிட்டார். பகவான் “விக்ரஹ ரூபத்தில் நான் சாப்பிடவெல்லாம் முடியாது. அவதார காலங்களில் கண்ணனாகவோ, ராமனாகவோ பண்ணியதை அர்ச்சையில் முடியுமா” என்றார். ராமானுஜர் “எனக்குக் கெட்டபெயர் வந்துவிடும். யசோதை உமக்கு வெண்ணையும் பாலும் கொடுத்துக் கொடுத்து நன்றாக வளர்த்து வைத்துள்ளார். நான்போய் உம்மைப் பட்டினிபோட்டுவிட்டேன் என்ற பெயர் வந்துவிட்டால் என்பாடு என்னாகும்.”
கொண்டல் வண்ணனை கோவலனாய் வெண்ணை
யுண்ட வாயன் * என்னுள்ளம் கவர்ந்தானை*
அண்டர்கோன் அணியரங்கன் ஏன்னமுதினைக்
கண்டகண்கள்* மற்றொன்றியனைக் காணாவே. அமலனாதிபிரான்.
அண்டர்கோன் அணியரங்கன் என்பதை நான் பொய்யாக்க விரும்பவில்லை. ஆகவே அன்றிருந்தாற்போல கொழுகொழு என்று உம் திருமேனி இருக்க வேண்டும் என்று ராமானுஜர் பிடிவாதம் பிடித்தார். பெருமாளுக்கோ இவருக்கு என்ன சொன்னால் புரியும் என்ற கவலை வந்துவிட்டது. அர்ச்சாவதாரத்தில் இப்படியெல்லாம் சாப்பிடமுடியாது என்று சொல்லிப்பார்த்தார் பகவான். ராமானுஜர் ஒத்துக் கொள்ளவே இல்லை. அப்படி ஒரு கலக்கம். ராமானுஜர் பரம வேதாந்தி. ஸ்ரீபாஷ்யம் வியாக்யானத்தில் இவரே கடல், இவரே எல்லாம், இவரே சிருஷ்டி என்றெல்லாம் எழுதுகிறார். அப்படி சிருஷ்டிக்கிறவருக்குப் பத்துப்படி பிரஸாதம் சாப்பிடவேண்டுமா என்ன!
இது பெரியாழ்வார் போட்ட பிச்சை. பகவானுடைய திருமேனியில் அத்தனை பரிவு வேண்டும் என்று கற்றுக் கொடுத்தவரே அவர்தான். ஆகவே பெரியாழ்வார் போல இவரும் பெருமாளுக்கு ஒன்றும் வந்துவிடக்கூடாது என்று கலங்குகிறார் அல்லவா? அப்போது இவரும் பெரியாழ்வார் கட்சி என்றாகிவிட்டது. இவர் பெரியாழ்வாருடைய திருவடியைப் பற்றியவர். பெரியாழ்வாருடைய முகம் என்கிற தாமரை மலரவேண்டும் என்றால் எப்போது மலரும்? பெரிய பெருமாளிடம் போய் ராமானுஜர் பேசினார் அல்லவா. அதுவே பெரியாழ்வாருக்கு ரொம்பவும் திருப்தி ஆகிவிட்டது. அப்பொழுது அவரது முகம் மலர்ந்துவிட்டது. ஸ்ரீ பட்டநாத:
அடுத்து பரகால,
திருமங்கையாழ்வார் பட்ட ஆசைஎன்ன? ராமானுஜர் நிறைவேற்றியது என்ன? திருமங்கையாழ்வார்தான் திவ்யதேசம்தோறும் சென்று கைங்கர்யத்தை ஏற்படுத்தியவர். சிறிய திருமடலில்...
காரார் திருமேனி காணும் அளவும் போய்
சீரார் திரு வேங்கடமே திருக்கோவலூரே
மதில் கச்சி ஊரகமே பேரகமே
பேரா மருது இறுத்தான் வெள்ளறையே வெக்காவே
பேராலி தண் கால் நறையூர் திரு புலியூர்
ஆராமம் சூழ்ந்த அரங்கம் கண மங்கை
காரார் மணி நிற கண்ணனூர் விண்ணகரம்
சீரார் கண புரம் சேறை திரு அழுந்தூர்
காரார் குடந்தை கடிகை கடல் மலை
ஏரார் பொழில் சூழ் இட எந்தை நீர் மலை
சீராரும் மால் இரும் சோலை திரு மோகூர்
பாரோர் புகழும் வதரி வட மதுரை
ஊராய எல்லாம் ஒழியாமே நான் அவனை
ஓரானை கொம்பு ஒசித்து ஓர் யானை கோள் விடுத்த
சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்
தாரானை தாமரை போல் கண்ணானை எண் அரும் சீர்
பேர் ஆயிரமும் பிதற்றி பெரும் தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார் பூம் பெண்ணை மடல்
108 திவ்யதேசத்தில் 86 திவ்யதேசங்களுக்குச் சென்று பெருமாளைப் பாடியுள்ளார். திருமங்கை ஆழ்வாருக்கு ஆசை ஒவ்வொரு திவ்ய தேசத்திலும், போனகம், சந்தனம், புஷ்பம், திருவாராதனம், உத்ஸவங்கள், திருவாபரணம் அத்தனையும் இருக்கவேண்டும் என்பதேயாகும். இத்தனைக்கு திகவிஜயம் செய்து அனைத்து திவ்யதேசக் கோவில்களிலும் ஏற்பாடு செய்தவர் ஸ்ரீ ராமானுஜர்.
ஸ்ரீரங்கம் கரிஶலம் அஞ்ஜநகிரிம் தார்க்ஷ்யாத்ரி ஸிம்ஹாசலௌ
ஸ்ரீகூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிஶம் ।
ஸ்ரீமத் த்வாரவதீ ப்ராயாக மதுரா அயோத்யா கயா புஷ்கரம்
ஸாளக்ராமம் கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோsயம் முனி:॥
ராமானுஜரும் அத்தனை திவ்ய தேசங்களுக்கும் திக்விஜயமாய் புறப்பட்டுபோய் தொண்டாற்றி வைத்தார். ஆகவே பரகால முகாப்ஜ மித்ரம். பரகாலரின் தாமரைபோன்ற முகம் மலருவதும் ராமானுஜர் ஸம்பந்தத்தாலே. கடைசியாக.,
ஸ்ரீவத்ஸசிஹ்நஶரணம் யதிராஜமீடே
கூரத்தாழ்வானுக்கு ப்ராப்யமாய், ப்ராபகமாய் இருக்கும் ராமானுஜர். ஆழ்வான் ஸம்பந்தம் ராமானுஜருக்குப் பெருமை, இவருடைய ஸம்பந்தம் ஆழ்வானுக்குப் பெருமை. சிஷ்ய ஆசார்ய க்ரமத்துக்கு சீமாபூமி. சிஷ்யனுக்கு அடையாளம் என்றால் கூரத்தாழ்வான். ஆசார்யருக்கு அடையாளம் என்றாலும் கூரத்தாழ்வானையே பூர்வர்கள் சொல்லுவார்களாம். அடையாளமிட்டாற் போல கூரத்தாழ்வான் இருக்க,
மொழியைக் கடக்கும் பெரும்புகழான் * வஞ்ச முக்குறும்பாம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்*
பழியைக் கட்த்தும் இராமானுஜன் புகழ்பாடி அல்லா
வழியைக் கடத்தல்*எனக்கு இனியாதும் வருத்தமன்றே!. (இராமாநுச நூற்றந்தாதி 7)
திருவரங்கத்தமுதனார் பாசுரம். அத்தகைய கூரத்தாழ்வான் பற்றும் திருவடிகள் ஸ்ரீ ராமானுஜருடைய திருவடிகளே. இரண்டாவது ஸ்லோகம் முற்றிற்று.
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளின் காலக்ஷேபத்திலிருந்து தொகுத்து தட்டச்சு செய்தவர்,
திருமலை ராமானுஜதாஸன், +919443795772
நன்றிகள் ஸ்வாமி.