ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்
(ப்ராஹ்மணன் அழுகுரல் பக்ஷி முதலிய மற்றவைகளிடத்தினின்று தெரிந்து கொண்ட விஷயங்களை யதுவுக்குச் சொல்லுதல்)
ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- மனுஷ்யர்களுக்கு எந்தெந்த வஸ்து மிகவும் ப்ரியமாயிருக்குமோ, அந்த வஸ்துக்களைப் பரிக்ரஹிப்பது (அடைதல்) மிகவும் துக்கத்திற்கு இடமாகும். எவன் அவை துக்கத்திற்கிடமாகும் என்பதை அறிந்து, எதையும் பரிக்ரஹிக்காது (அடையாமல்) இருக்கிறானோ, அவன் அளவற்ற ஸுகம் பெறுவான்.
வாயில் மாம்ஸ கண்டத்தைக் கவ்விக் கொண்டிருந்த அழுகுரல் பக்ஷியை (பறவையை) அதைக்காட்டிலும் பலிஷ்டங்களும் (பலசாலிகளும்), மாம்ஸம் அற்றவைகளுமாகிய பருந்து, கழுகு முதலிய பக்ஷிகள் (பறவைகள்) அடிக்க வந்தன. அவ்வழுகுரல் பக்ஷி (பறவை) அந்த மாம்ஸ கண்டத்தைத் துறந்து, ஸுகத்தை அடைந்தது. (அவ்வழுகுரல் பக்ஷி (பறவை), அந்த மாம்ஸ கண்டத்தில் ஆசையுற்று, அதை விடாதிருக்குமாயின், பலிஷ்டங்களாகிய (பலசாலிகளான) பருந்து முதலிய பக்ஷிகளால் (பறவைகளால்) அடியுண்டு மாண்டு போகும். அதைத் துறந்தபடியால், அப்பக்ஷிகளால் அடியுண்டு மாளுகையாகிற ஆபத்தினின்று மீண்டது. ஆகையால், பரிக்ரஹங்களை (நமது சொத்து என்று சேர்த்து வைத்திருப்பவற்றை) விடுவானாயின், ஸம்ஸாரமாகிற ஆபத்தினின்று விடுபடலாம்).
எனக்கு மான அவமானங்கள் கிடையாது. வீடு, வாசல், பிள்ளை, பெண்டிர் முதலிய பரிக்ரஹங்களை (சொத்துக்களை) உடையவர்களுக்குள்ள சிந்தையும் எனக்குக் கிடையாது. பின்னையோவென்றால், பரமாத்மாவோடு கூடவே விளையாடலுற்று, அவனிடத்திலேயே ப்ரீதியுடையவனாகி, ஒன்றுமறியாத பாலன் (சிறுவன்) போல் இவ்வுலகில் திரிகின்றேன். (பாலனுக்கு (சிறுவனுக்கு) மானமாவது, அவமானமாவது, சிந்தையாவது கிடையாதல்லவா? பாலனிடத்தினின்றே இந்நிலைமையை அப்யஸித்தேன் (கற்றேன்))
மான அவமானங்களை அறியாதவனும், தேஹாதி (உடல் முதலியவற்றை) போஷண (வளர்க்கும்) சிந்தையும் அதற்கு வேண்டிய முயற்சியுமின்றி ஜடனுமாய் (அறிவற்றவனாய்) இருக்கின்ற பாலனும் (சிறுவனும்), ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களைக் கடந்த பரமபுருஷனை ஸாக்ஷாத்கரித்த யோகியும், ஆகிய இவ்விருவருமே சிந்தையினால் விடுபட்டு, மஹாநந்தத்தில் ஆழ்ந்திருப்பவர்கள். ஒருகால், ஓரிடத்தில் ஒரு பெண்பிள்ளை தாய், தந்தை முதலிய பந்துக்கள் அனைவரும் வெளியில் போயிருக்கையில், தன்னை வரிக்கும் பொருட்டுத் தன் வீட்டிற்குச் சிலர் வந்திருக்கக் கண்டு, தானே அவர்களைப் பூஜித்தாள்.
மன்னவனே! அப்பெண்மணி அவ்வாறு வந்தவர்களின் போஜனத்திற்காகச் சாலி என்னும் தான்யத்தை ஏகாந்தத்தில் (தனிமையில்) குத்திக் கொண்டிருக்கையில், அவள் கையிலிருந்த சங்கு வளைகள் பேரொலி செய்தன. அப்பொழுது, ஆழ்ந்த மதியுடைய (சிறந்த புத்தி உடைய) அப்பெண்மணி, அவ்வாறு நெல்லு குத்துவது கீழ்மையென்றும், “இது வந்தவர்களுக்குத் தெரியுமாயின், ஓ! இவளென்ன தானே நெல்லு குத்துகிறாளே! இவளுக்குப் பந்துக்கள் இல்லையோ? இவள் ஏழை” என்று நினைப்பார்களென்றும், ஆகையால் அச்செயல் தனக்குத் தகாதென்றும் நினைத்து, வெட்கமுற்று, கைகளிலுள்ள வளைகளை ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டு வந்து, இரண்டிரண்டு வளைகளை வைத்துக் கொண்டாள்.
அப்பால், மறுபடியும் அவள் நெல்லு குத்துகையில் அவ்விரண்டு வளைகளிலும் கோஷம் உண்டாயிற்று. பிறகு அவ்விரண்டிரண்டு வளைகளிலும் ஒவ்வொன்றை உடைத்துப் போட்டாள். பிறகு, ஒரு வளையே மிகுந்தது. அதினின்று சப்தம் உண்டாகவில்லை.
சத்ருக்களை அழிப்பவனே! லோக தத்வங்களை (உலகியல் வழக்கை) அறிய வேண்டும் என்னும் அபிப்ராயத்துடன் உலகங்களிலுள்ள அவ்வவ்விடங்களில் சுற்றிக்கொண்டிருக்கையில், நான் அக்கன்னிகையிடத்தினின்று இந்த உபதேசத்தைக் கற்றுக் கொண்டேன். இதில் என்ன உபதேசமென்றால், சொல்லுகிறேன்; கேள்.
ஓரிடத்தில் பலர் சேருவார்களாயின், கலஹம் உண்டாகும். இருவர் சேரினும் ஒருவர்க்கொருவர் பேச்சு நேரிடும். ஆகையால், கலஹமும், பேச்சும் நேராதிருக்கும் பொருட்டு, கன்னிகையின் கைவளை போல் தனியனாகவே திரிய வேண்டும். கன்னிகையின் கைவளையிடத்தினின்று நான் இவ்விஷயத்தைத் தெரிந்து கொண்டேன். எத்தனை நேரம் உட்கார்ந்திருப்பினும், ச்ரமம் தட்டாதிருக்கும்படி அப்யாஸம் (பயிற்சி) செய்து ஆஸனத்தை ஜயித்து, ப்ராணாயாமத்தினால் ச்வாஸத்தையும் வென்று, சுபாச்ரயமான (நன்மை தரக்கூடியதும், த்யானம் செய்யத்தகுந்ததுமான) ஒரு வஸ்துவில் மனத்தை நிலைப்படுத்த வேண்டும். மனத்தை எப்படி நிலைப்படுத்த முடியுமென்றால், வைராக்ய (விஷயங்களிலிருந்து விலகுதல்) பலத்தினாலும், அப்யாஸ (பயிற்சி) பலத்தினாலும் மனத்தை நிலைப்படுத்தி, சோம்பலின்றிப் பரமாத்மாவினிடத்தில் நிறுத்த வேண்டும்.
சுபாச்ரயமான (நன்மை தரக்கூடியதும், த்யானம் செய்யத்தகுந்ததுமான) பகவானிடத்தில் மனம் நுழையுமாயின், கர்ம வாஸனைகளைத் துறக்கும். அதனால் ரஜஸ், தமோ குணங்களை உதறி, ஸத்வகுணம் வளர்ந்து, வேறு விஷயங்களில் பற்றற்று, தியானிக்க வேண்டிய வஸ்துவாகிய பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூபாதிகளில் (திவ்ய மங்கள விக்ரஹம்) நிலையுற்றிருக்கையாகிற நிர்வாணத்தை அடையும். இவ்வாறு மனத்தைப் பரமபுருஷனிடத்தில் நிலை நிற்கும்படி செய்வானாயின், அப்பொழுது வெளி விஷயங்களையாவது, உள்விஷயத்தையாவது நினைக்க மாட்டான். அம்பு செலுத்தும் பயிற்சியில் ஈடுபட்டவன், அதில் மனவூக்கமுற்று, அருகாமையில் போகின்ற அரசனையும் கூட அறியாதிருப்பது போல, வேறு விஷயங்கள் எவற்றையும் நினையாமல், பரம புருஷனையே த்யானிப்பான்.
யோகிகளுடைய கூட்டத்திலும் கூடச் சேரலாகாது. சேர்ந்தால், கன்னிகையின் கை வளைகள் பலவாயிருக்கும் பொழுது கோஷமிட்டாற் போல், ஏதேனும் கலஹம் உண்டாகும். ஸர்ப்பம் போல், பல ஜனங்கள் இருக்குமிடத்தில் போகலாகாது. ஸர்ப்பம், ஜனங்கள் தன்னைப் பார்ப்பார்களாயின் வதிப்பார்களென்று சங்கித்து, ஜன ஸங்கத்தில் (மக்கள் கூட்டத்தில்) போகாமல் தனியே ஸஞ்சரிக்கும்; ஸர்வ காலத்திலும் ஒரே இடத்தில் நியதமாக (வழக்கமாக) வாஸம் செய்யாது; மிக்க ஊக்கத்துடனிருக்கும்; ஏகாந்தமான (தனிமையான) இடத்தில் வாஸம் செய்யும்; தன் நடை ஒருவர்க்கும் தெரியாதபடி செல்லும். அப்படியே முனிவனும் தனியே ஸஞ்சரிக்க வேண்டும்.
ஜனக்கூட்டத்தினால் சப்தாதி விஷயங்களில் (உலக விஷயங்களில்) ருசி உண்டாகி, யோகத்தினின்று ப்ரஷ்டனாவான் (நழுவுவான்); எவரோடு கலந்தால் என்ன வருமோவென்னும் பயத்துடன் சேராமல் தனியே இருக்க வேண்டும்; ஓரிடத்தில் நியதமாக (வழக்கமாக) வாஸம் செய்யலாகாது; மனவூக்கத்துடனிருக்க வேண்டும்; ஏகாந்தமான இடத்தில் வாஸம் செய்ய வேண்டும்; தன்னுடைய நடைகள் (ஆசாரங்கள்) இத்தகையனவென்று பிறர்க்குத் தெரியாதபடி நடக்க வேண்டும்; மற்றும் மிதமாகப் பேச வேண்டுமன்றி, அதிகமாகப் பேசலாகாது. வாஸம் செய்வதற்காக ஒரு க்ருஹத்தை ஏற்படுத்திக் கொள்ள யத்னம் செய்வானாயின், அது அநித்யமாகிய (நிலையற்ற) தேஹத்திற்கு (உடலிற்கு) மிகவும் வருத்தத்திற்கே இடமாகும். (க்ருஹத்தை நிருமிக்கும் பொழுது ஆயாஸப் (சிரமப்) படாமல் முடியுமா?) தான் அபேக்ஷித்த (விரும்பிய) அளவு யோகங்கள் (பலன்கள்) கிடைக்க மாட்டாவாகையால், அந்த முயற்சியும் நிஷ்ப்பலமே (பலன் அற்றதே).
ஸர்ப்பம் பிறர் நிருமித்த (உண்டாக்கிய) புற்று முதலிய இடங்களில் ப்ரவேசித்து ஸுகமாயிருப்பது போல், எங்கேனும் க்ருஹஸ்தர்களுடைய க்ருஹங்களில் தங்கி, ஸுகமாயிருக்க வேண்டுமன்றி, தான் அதற்காக முயற்சி செய்யலாகாது. கர்ம பந்தங்களின்றி விளங்கும் தன்மையுள்ளவனும், ஸர்வேச்வரனுமாகிய நாராயணன், முன்பு தன் ஸங்கல்பத்தினால் விளையாட்டிற்காகப் படைத்த இந்த ஜகத்தையெல்லாம், கல்பத்தின் முடிவில் தன்னைப் பிரியாததான காலத்தினால் தானொருவனே ஸம்ஹரித்து (அழித்து), நாம (பெயர்), ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) இடமாகாத ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) சேதனா சேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகக் கொண்டு, தானொருவனேயாகி, மேல் படைக்கப்போகிற ஜகத்திற்குத் தானே உபாதான காரணமாகி (மண் குடத்திற்கு மண் போல் material cause), தன்னைக் காட்டிலும் வேறொரு நிமித்த காரணமும் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause) இன்றி, அதுவும் தானேயாயிருந்தான்.
அப்பொழுது அந்நாராயணன், நாம (பெயர்), ரூப (உருவம்), விபாகத்திற்கு (பிரிவுகளுக்கு) இடமல்லாத ஸுக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) சேதனா சேதனங்கள் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள்), அத்தகைய காலம் ஆகிய அனைத்திற்கும் ஆதாரமாயிருந்தான். அவன் தனக்குத் தானே ஆதாரமன்றி, அவனுக்கு மற்றொரு ஆதாரம் கிடையாது. ஸ்ருஷ்டி (படைப்பு) தசையில் (நிலையில்) ஏற்றக் குறைவுகளை அடைந்திருந்த ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களும், ப்ரளய (அழிவு) தசையில் (நிலையில்), பரமபுருஷனுடைய சக்தியாகிய காலத்தினால் ஏற்றக் குறைவுகளின்றி ஸாம்ய தசையை (ஸம நிலையை) அடைந்து, அவனிடத்தில் மறைந்திருந்தன.
ப்ரதானமென்கிற அசித்துக்கும் (ஜடப்பொருளிற்கும்), புருஷனென்கிற ஆத்மாவுக்கும் நியாமகனும் (நியமிப்பவனும்), ஸகல ஜகத்திற்கும் காரணனுமாகிய பரமபுருஷன், கார்யங்களென்றும், காரணங்களென்றும் வழங்கி வருகிற சேதனா சேதனங்களுக்கு எல்லையாகி, நாம ரூபங்களுக்கிடமாகாமல், கைவல்யமென்னும் பெயர் பெற்றிருக்கின்றான். (தனியனாயிருக்கிறான்) கேவல ஜ்ஞான (அறிவு) ஆநந்த (இன்ப) ஸந்தோஹ (ஸந்தோஹம் – ஸமூஹம்) ஸ்வரூபனும், கர்மாதி (புண்ய, பாப வினைகள்) ரூபமான உபாதியற்றவனுமாகிய அப்பரமபுருஷன், தன்னுடைய ஸங்கல்ப மாத்ரத்தினால் ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) தசையை (நிலையை) அடைந்து, தனக்குச் சரீரமாயிருக்கின்ற ப்ரக்ருதியைச் சிறிது ஸ்தூல (கண்ணுக்குப் புலப்படுகிற பெயர், உருவத்தோடு கூடிய) தசையை (நிலையை) அடையச் செய்து, அதைக்கொண்டு முதலில் மஹத் தத்வத்தைப் படைக்கின்றான்.
ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களையே வடிவாகவுடைய ப்ரக்ருதியின் கார்யமாகிய அம்மஹத்தத்வம், அஹங்காரம் முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள தத்வங்களைப் படைக்கிறதென்றும், ஆனது பற்றியே கார்ய வஸ்துக்களில் முக்யமானதென்றும் சொல்லுகிறார்கள். இந்த ப்ரபஞ்சம் முழுவதும் இந்த மஹத் தத்வத்தில் கோர்க்கப்பட்டது போலிருக்கின்றது. இந்த மஹத் தத்வமே புத்தி, இந்த்ரியம், மனம், ப்ராணன் இவற்றின் ஸமுதாய ரூபமான ஸுக்ஷ்ம சரீரத்தை உண்டாக்குகின்றது.
ஜீவன், அந்த ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) சரீரத்துடன் கூடி, தேவ, மனுஷ்யாதி ஸ்தூல (கண்ணுக்குப் புலப்படுகிற பெயர், உருவத்தோடு கூடிய) சரீரங்களைப் பெறுகையாகிற ஜன்மமும், அந்த ஸ்தூல (கண்ணுக்குப் புலப்படுகிற பெயர், உருவத்தோடு கூடிய) சரீரத்தை விடுகையாகிற மரணமுமாகிய ஸம்ஸாரத்தை அடைந்து, அதனால் ஞான ஸங்கோசத்தையும் (குறைவையும்), ஜ்ஞான விகாஸத்தையும் (விரிவையும்) அடைகின்றான். (ஜீவனுக்கு ஸம்ஸாரமாவது, ப்ரக்ருதியின் (அறிவற்ற ஜடப்பொருட்களுக்கு மூலமான மூலப்ரக்ருதியின்) பரிணாமமான (மாற்றமான) தேஹ (உடல்) ஸம்பந்தம், தேஹ (உடல்) வியோகம் (விடுவது) இவைகளால் ஏற்படுகின்ற ஜ்ஞான (அறிவின்) ஸங்கோச விகாஸங்களாகிற (ஏற்றத் தாழ்வுகளாகிற) அவஸ்தைகளுக்கு (நிலைகளுக்கு) இடமாக இருக்கையே. பரமாத்மாவுக்கு சரீரங்களாகிய சேதனா சேதனங்களுக்குள் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களுக்குள்) சேதனனான ஜீவனுக்கு ஸ்வபாவ ஸங்கோச, ஸ்வபாவ விகாஸங்களாகிற (அறிவில் ஏற்றத்தாழ்வு என்கிற) அவஸ்தையே (நிலையே) உள்ளது.
அஹங்காரம் முதல் ப்ருதிவி வரையிலுள்ள ஸமஷ்டி பரம்பரையாகவும் (மொத்த படைப்பாகவும்), தேவ - மனுஷ்யாதி வ்யஷ்டி ப்ரபஞ்சமாகவும் (தனித்தனி படைப்பான உலகமாகவும்) பரிணமிக்கையாகிற ஸ்வரூப அன்யதாபாவ ரூபமான (தன் இயற்கை நிலையிலேயே மாறுதல் அடைதல் என்கிற) அவஸ்தை (நிலை) அசேதனமான ப்ரக்ருதியைச் சேர்ந்தது. இத்தகைய சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய பரமபுருஷன், ஜகத்திற்கு உபாதான காரணம் (மண் குடத்திற்கு மண் போல் material cause).
நேரே அவஸ்தைகளுக்கு இடமாயிருக்கை, ப்ரக்ருதி புருஷர்களுக்கே உள்ளது. அந்த ப்ரக்ருதி புருஷர்கள் மூலமாய் பரமாத்மாவுக்கும் அவஸ்தையின் ஸம்பந்தம் வருகின்றது. கேவலனான பரமாத்மாவே ஜகத்திற்கு நிமித்த காரணன் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause).
சிலந்தி பூச்சி தன் சரீரத்தின் ஏகதேசமாகிய (ஒரு பகுதியான) ஹ்ருதயத்தினின்று நூலுக்குக் காரணமான ஊர்ணை (எச்சில்) என்னும் த்ரவ்யத்தை வாய் வழியாய் வெளிக் கொண்டு வந்து பரப்பி, மீளவும் அதை உள்ளே இழுத்துக்கொள்வது போல, ஸர்வேச்வரனும் சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) தன் சரீரத்தை ப்ரபஞ்சமாக விரித்து, லீலா ரஸத்தை (விளையாட்டு அனுபவத்தை) அனுபவித்து, மீளவும் அதைத் தன்னிடத்திலேயே மறைத்துக் கொள்கின்றான். (சேதனா சேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய ஸர்வேச்வரன், தானே ப்ரபஞ்சமாக விரிந்து விளையாடி, மீளவும் சுருங்கித் தனியனாயிருக்கின்றான். சிலந்தி பூச்சியின் செயலைக் கொண்டு ஸர்வேச்வரன் ஜகத்தைப் படைத்துத் தன்னிடத்திலேயே மறைத்துக் கொள்ளும் விதத்தை ஆராய்ந்தறிய வேண்டும்.)
புருஷன் எந்தெந்த வஸ்துவில் தன்மானத்தைத் திடமான அத்யவஸாயத்துடன் (உறுதியுடன்) ஸ்னேஹம், த்வேஷம், பயம் முதலிய ஏதேனும் ஒரு பாவத்தினால் மாறாது வைக்கிறானோ அவன் அந்தந்த வஸ்துவோடு ஸாரூப்யத்தை (ஒத்த உருவத்தை) அடைகின்றான்.
குளவி, புழுவைக் கொண்டு வந்து தன்கூட்டில் அடைத்து ஊதுகையில், அந்தப் புழு பயத்தினால் அந்தக் குளவியையே நினைத்துக்கொண்டிருந்து முன்னுருவத்தை விடாமலே அந்தக் குளவியோடொத்த உருவத்தை அடைகின்றது. (அந்த உருவத்தோடிருக்கும் பொழுதே, மற்றொரு வஸ்துவின் ஸாரூப்யம் (ஒத்த உருவம்) உண்டானால், அவ்வுருவத்தை விட்ட பின்பு, முன்பு இவன் எந்த வஸ்துவை த்யானித்துக் கொண்டிருந்தானோ அந்த வஸ்துவோடு ஸாரூப்யத்தை (ஒத்த உருவத்தை) அடைவான் என்பதில் ஸந்தேஹம் உண்டோ? ஆகையால், ஏதேனுமொரு பாவத்தினால் அத்தகைய பரம புருஷனை மாறாமல் த்யானித்துக் கொண்டு வருவானாயின், அவனோடு ஸாரூப்யத்தை (ஒத்த உருவத்தை) அடைவான் என்பதைக் குளவியிடத்தினின்று நிச்சயித்தேன்). இவ்வாறு நான் இத்தனை குருக்களிடத்தினின்று இந்த மதியைக் (புத்தியைக்) கற்றேன். ப்ரபூ! மற்றும், நான் என்னுடைய தேஹத்தினின்று (உடலினின்று) கற்ற புத்தியைச் சொல்லுகிறேன்; கேள்.
இது ஹேயம் (விடத்தக்கது) என்றும், இது உபாதேயம் (ஏற்றுக்கொள்ளத்தக்கது) என்றும் விவேகித்துத் தெரிந்து கொள்கையாகிற விவேகத்தையும், ஹேயங்களில் (விடத்தக்கவற்றில்) விருப்பின்மையாகிற வைராக்யத்தையும் விளைக்கின்றமையால், தேஹம் (உடல்) எனக்கு ஒரு குருவாயிருக்கின்றது. (அஜ்ஞானத்தைப் போக்கி ஜ்ஞானோபதேசம் செய்பவனன்றோ குரு. அதைத் தேஹம் (உடல்) செய்கின்றமையால், அது குருவெனக் கூடும்). அது எப்படியெனில், தேஹம் (உடல்) ஜன்ம, மரணங்களை அடைவதும், ஸர்வ காலமும் துக்கத்தையே பலனாக உடையதுமாயிருக்கையால், “அப்ப! இந்தச் சரீரம் எப்பொழுது தொலையுமோ! சீ! நமக்கு இனி இத்தகைய சரீர ஸம்பந்தமே கூடாது” என்னும் வெறுப்பை விளைத்து, தன்னிடத்திலும் தொடர்ந்தவைகளிடத்திலும், தன் போஷணத்திலும் (பராமரிப்பிலும்) அதற்கு வேண்டிய விஷயங்களிலும், வைராக்யத்தையும் விளைக்கின்றது. மற்றும், நான் இந்தத் தேஹத்தினால் (உடலினால்) தத்வங்களை உள்ளபடி ஆராய்ந்தறிகின்றேன். (இவை ஹேயங்கள் (விடத்தக்கவை) என்றும் இவை உபாதேயங்கள் (ஏற்றுக்கொள்ளத்தக்கவை) என்றும் விவேகித்துத் (ஆராய்ந்து) தெரிந்து கொள்கிறேன்.
சரீரம் (உடல்) அன்றோ முதன்மையான ஸாதனம். இந்த சரீரத்தினால் ஆங்காங்குச் சென்று, திரிந்து, ப்ராக்ருத (ப்ரக்ருதியின்) தத்வங்களின் இயற்கையை ஆராய்ந்தறிந்து, விவேகத்தைப் பெறுகின்றேன். ஆகையால் இதுவே எனக்கு விவேகத்தையும், வைராக்யத்தையும் விளைக்கின்றது. ஆயினும், இது நமக்கு இவ்வளவு உபகாரம் செய்ததே என்று அதனிடத்தில் அபிமானம் வைக்கிறதில்லை: பின்னையோ என்றால், நாய், நரி முதலியவற்றால் உண்ணப்படவேண்டிய வஸ்துவாகையால், இது பிறருடையது என்று நிச்சயித்து, அதனிடத்தில் அபிமானமின்றித் திரிகின்றேன். (ஸர்வ காலமும் தேஹம் (உடல்) துக்கத்தையே விளைக்கும் என்பதை விவரித்துச் சொல்லுகிறேன்; கேள்.)
தேஹத்திற்கு (உடலுக்குப்) ப்ரியம் செய்ய விரும்பி, பெண்டிர், பிள்ளை, பணம், பசு, ப்ருத்யன் (வேலைக்காரன்), வீடு, நண்பன் இவைகளை எல்லாம் வகை வகையாக வேண்டிய அளவு ஸம்பாதித்து அவற்றால் அந்தத் தேஹத்தை (உடலைப்) போஷித்து (பராமரித்துக்) கொண்டு வருகின்றான். இவ்வாறு பணம் முதலியவற்றை மிகவும் வருந்தி ஸம்பாதித்தவன், தன்னுடைய ஆயுஸ்ஸின் முடிவில், வ்ருக்ஷம் (மரம்) தான் முடியும் பொழுது வேறொரு வ்ருக்ஷம் (மரம்) முளைப்பதற்கு ஹேதுவான விதையை விளைத்துவிட்டுப் போவதுபோல், மற்றொரு தேஹத்திற்கு (உடலிற்கு) ஹேதுவான கர்மத்தை விளைத்து விட்டுப் போகின்றான். மற்றும், இந்த ப்ராணியை நாக்கு ஓரிடத்திலும், பிபாஸை (தாஹம்) ஓரிடத்திலும், சிச்னம் (பிறப்பு உருப்பு) ஓரிடத்திலும், த்வக் (தோல்) ஓரிடத்திலும், வயிறு ஓரிடத்திலும், காது ஓரிடத்திலும், மூக்கு ஓரிடத்திலும், மிகவும் சபலமுடைய கண் ஓரிடத்திலும், வாக்கு முதலிய கர்மேந்த்ரியங்களின் சக்தி அவ்வவற்றிற்கு விஷயமான நடை முதலிய ஒவ்வோரிடத்திலும், பிடித்திழுக்கின்றன.
ஒரு க்ருஹஸ்தனைப் பல பத்னிகள் தத்தமிடம் வரும்படி இழுப்பது போல, இந்திரியங்கள் பலவும் தத்தம் விஷயங்களுக்கு வரும்படி ப்ராணியைப் பிடித்திழுக்கின்றன. (இவ்வாறு பற்பல துக்கங்களுக்கு இடமாகையால், தேஹம் விரக்தியை (பற்றின்மையை) அனாயாஸமாக (எளிதாக) விளைக்கும் என்பதில் ஸந்தேஹமில்லை).
ப்ரஹ்ம தேவனைச் சரீரமாகவுடைய பரமபுருஷன் தன் சக்தியாகிய ப்ரக்ருதியினால் வ்ருக்ஷம் (மரம்), ஸர்ப்பம் (பாம்பு), பசு, பக்ஷி, ஈ, மத்ஸ்யம் முதலிய பற்பல சரீரங்களைப் படைத்தும், அவ்வவைகளால் மனத்தில் த்ருப்தி உண்டாகப் பெறாமல், பரப்ரஹ்ம ஸாக்ஷாத்கார ஜ்ஞானம் (பகவானான ஸ்ரீமந்நாராயணனை த்யானத்தில் நேராகப் பார்ப்பது) போன்ற அந்த ப்ரஹ்ம உபாஸன ரூபமான ஜ்ஞானத்திற்கு உரிய மனுஷ்யனைப் படைத்து, ஸந்தோஷம் அடைந்தான்.
(மனுஷ்ய தேஹம் பரப்ரஹ்மத்தை உபாஸித்து, அதை ஸாக்ஷாத்கரிக்கிறதற்கு ஸாதனமாகையால், மிகவும் புகழத் தகுந்தது. அப்பரமபுருஷன் ஸமஸ்த சேதனர்களையும் உஜ்ஜீவிப்பிக்க (நல்வழிப்படுத்த) வேண்டும் என்னும் எண்ணத்துடன் முயன்றவனாகையால், வ்ருக்ஷாதிகள் (மரம் போன்றவை) மோக்ஷ ஸாதன அனுஷ்டானத்திற்கு (மோட்சத்திற்கு உபாயத்தைச் செய்ய) உரியவை அன்று ஆகையால், அவற்றைப் படைத்தும் திருப்தி அடையாமல், தர்ம அனுஷ்டானத்திற்கு (அறத்தைப் பின்பற்ற) ஹேதுவான (காரணமான) மனுஷ்ய தேஹத்தைப் படைத்த பின்பு ஸந்தோஷம் அடைந்தான்.)
ஆகையால், பல ஜன்மங்கள் நடந்த பின்பு கடைசியில், மற்ற தேஹங்களைப்போல் அநித்யமாயினும் (நிலையற்றதாயினும்), மேன்மையான புருஷார்த்தத்தைக் கைகூடுவிப்பதும், மிகவும் கிடைக்க அரிதுமாகிய மனுஷ்ய ஜன்மத்தைப் பெற்று, ஸுகதுக்கங்களிரண்டையும் துல்யமாக நினைக்கவல்ல மனவுறுதியுடன் ம்ருத்யு (மரணம்) கூடவே தொடர்ந்திருக்கப் பெற்ற இத்தேஹம் அழிவதற்கு முன்னமே சீக்ரத்தில் மோக்ஷத்தை அடையும் பொருட்டு யத்னம் (முயற்சி) செய்ய வேண்டும்.
நாய், நரி, பன்றி முதலிய ஜன்மங்களிலும் கூட விஷயங்கள் அனாயாஸமாகக் கிடைக்கக் கூடியவைகளேயாகையால், மனுஷ்ய ஜன்மம் பெற்றவன், அத்தகைய சப்தாதி விஷயங்களில் மன விருப்பமுற்றுப் பொழுது போக்கலாகாது. இவ்வாறு புத்தியைக் கற்று, வைராக்யம் உண்டாகப் பெற்று, ஆத்ம விஷயத்தில் விசுத்த (தெளிவான) ஜ்ஞானமாகிற (அறிவாகிற) வெளிச்சத்தை உடையவனாகி, அதனால் அவ்வாத்மாவின் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவங்களை (குணங்களை) அறிந்து, தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம்) இன்றித் தேஹானுபந்திகளிடத்திலும் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்திலும்) மனப்பற்றைத் துறந்து, இப்பூமியில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். “ஒரு குருவினிடத்தினின்று இந்த அர்த்தங்களையெல்லாம் ஏன் கற்கலாகாது?” என்றால், சொல்லுகிறேன்; கேள்.
பரப்ரஹ்ம விஷயத்தில் நிலைநின்ற பரிபூர்ண ஜ்ஞானம் விளைய வேண்டுமென்றால், ஒரு குருவினிடத்தினின்று உண்டாகாது; பல குருக்களிடத்தினின்றுமே உண்டாக வேண்டும். ஆனால் ஓரிடத்திலும் நம்பிக்கை உண்டாகாதாகையால், ஜ்ஞானம் நிலை நிற்காதே?” என்றால், சொல்லுகிறேன்.
இந்த ப்ரஹ்ம ஜ்ஞானம் இணையெதிரற்றது. இதைப் போன்ற ஜ்ஞானமாவது, இதற்கு மேற்பட்ட ஜ்ஞானமாவது, மற்றொன்று கிடையாது. ரிஷிகள் இந்த ஞானத்தை ப்ருதிவி, வாயு முதலிய பல த்ருஷ்டாந்தங்கள் (உதாரணங்கள்) மூலமாய்க் கற்கின்றார்கள். ஆகையால் கற்பிக்கும் குருக்கள், ப்ருதிவி முதலியவைகளே; ப்ரஹ்ம வித்யா உபதேசம் செய்பவர்கள் (பரப்ரஹ்மத்தைப் பற்றிய அறிவை போதிப்பவர்கள்) அன்று. ஆகையால் அவை பலவாயினும், அதனால் தோஷமில்லை. மற்றும், இந்தக் குருக்கள் அனைவரும் இணையெதிரற்ற பரப்ரஹ்மமே. பரம புருஷனே ப்ருதிவி முதலிய பற்பல குருக்களாயிருந்து, ஜ்ஞானத்தை விளைக்கிறானாகையால், அவனே குரு. அவன் பல உருவங்களை ஏற்றுக்கொண்டிருப்பினும், இயற்கையில் ஒருவனேயாகையால் தோஷமில்லை. பகவானே ஆசார்யனாயிருந்து ஜ்ஞானோபதேசம் செய்து, ப்ராணிகளை உஜ்ஜீவிப்பிக்கிறான் (நல்வழிப் படுத்துகிறான்) என்று சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றனவல்லவா?
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஆழ்ந்த மதியுடைய அந்த ப்ராஹ்மணன், இவ்வாறு யதுவைக் குறித்து மொழிந்து, அவனிடம் போய் வருகிறேனென்று விடை பெற்றுக் கொண்டு, அம்மன்னவன் வந்தனம் செய்து நன்கு பூஜிக்கப் பெற்று, ஸந்தோஷம் அடைந்து, வந்த வழியே திரும்பிப் போனான். எங்கள் முன்னோர்க்கும் முன்னவனாகிய அந்த யது மன்னவன், வைராக்யம் உடையவர்களில் சிறந்தவனாகிய அந்த ப்ராஹ்மணன் மொழிந்த வசனத்தைக் கேட்டு, தேஹம் (உடல்), தேஹானுபந்திகள் (உடலோடு தொடர்பு உடையவர்கள்) ஆகிய எல்லாவற்றிலும் மனப்பற்றைத் துறந்து, சீதம் (குளிர்), உஷ்ணம் (சூடு), ஸுகம் (இன்பம்), துக்கம் (துன்பம்) முதலிய எல்லாவற்றிலும் ஒருவாறான மனமுடையவனும், எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமே என்று பாவித்து எல்லாவற்றையும் துல்யமாகப் (ஸமமாகப்) பார்க்கும் தன்மையுடையவனுமாகி, மோக்ஷத்தை அடைந்தான்.
ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.
மிக்க நன்றி
பதிலளிநீக்கு