ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் ஆத்மாவுக்குத் தேஹ ஸம்பந்தாதி ரூபமான ஸம்ஸாரம் இயற்கையில் ஏற்பட்டதன்று என்று உத்தவனுக்கு உபதேசித்தல்)
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- புருஷன் ஸர்வஜ்ஞனும் (எல்லாவற்றையும் அறிந்தவனும்), காருணிகனுமாகிய (கருணை உடையவனுமான) நான், பாஞ்சராத்ரம், பகவத்கீதை முதலியவை மூலமாய் உபதேசித்த அர்ச்சனம், வந்தனம் முதலிய ஸ்வரூப அனுரூபமான (ஜீவர்களின் இயற்கைத் தன்மைக்கு ஏற்ற) தர்மங்களை மன ஊக்கத்துடன் அனுஷ்டித்துக் கொண்டு, தன்னுடைய ஸத்தை (இருப்பு), ஸ்திதி (நீடிப்பு), ப்ரவ்ருத்தி (செயல்) இவையெல்லாம் ஸர்வாந்தராத்மாவான என்னுடைய அதீனங்களாகவே (உட்பட்டவையாகவே) நடக்கின்றன என்னும் நிச்சய ஜ்ஞானம் உடையவனாகி, தான் அனுஷ்டிக்கும் தர்மங்களில் பல அபிஸந்தியின்றி (பலனில் விருப்பம் இன்றி), தேஹம் இருக்கும் வரையில் வர்ணாச்ரம தர்மங்களையும், குலக்ரம ஆகதமான (குல வழக்கப்படி வந்த) ஆசாரங்களையும் அனுஷ்டித்து வர வேண்டும். “பலன்களில் அபிஸந்தியை (விருப்பத்தை) எப்படி மாற்றிக்கொள்ள முடியும்?” என்றால், சொல்லுகிறேன்.
கீழ்ச்சொன்ன தர்மங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருவானாயின், மனம் தெளியும். அத்தகைய மனத்தினால் ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்வதுடன், விஷய ப்ரவணமான (ஈடுபாடுடைய) மனமுடைய ப்ராணிகள், விரும்புகிறவைகளும், ஸத்வாதி குண பரிணாமங்களுமான சப்தாதி விஷயங்களுக்காகச் செய்யும் முயற்சிகளெல்லாம் பலத்தில் விபரீதமாய் முடிவதையும் ஆராய்வானாயின், பலன்களில் அபிஸந்தி (விருப்பம்) தானே நீங்கிப்போகும். (ஸுகத்திற்காகச் செய்யும் முயற்சியெல்லாம், கடைசியில் துக்கத்தையே பலனாக விளைப்பதை ஆராய்ந்தால், தர்மங்களில் பல அபிஸந்தியை (பலனில் விருப்பத்தை) அனாயாஸமாக (எளிதாக) மாற்றிக் கொள்ளலாம்). ஸ்வப்னம் (கனவு) காண்கிறவன், ப்ரியமாயும் (விருப்பமாயும்), அப்ரியமாயுமுள்ள (விருப்பம் அற்றவையாயுள்ள) விஷயங்களை அனுபவிப்பதும், நெஞ்சில் அந்தந்த வஸ்துக்களை அனுபவிக்கிறாப் போல், நினைக்கிற மனோரதமும் (மனதின் எண்ணமும்) நிஷ்ப்பலமே (பலன் அற்றதே) அல்லவா? ஸ்வப்னத்தில், அர்த்தம், காமம் முதலிய புருஷார்த்தங்களை (மனிதனால் விரும்பி அடையப்படுவது) அனுபவிப்பானாயின், அவன் விழித்துக் கொண்ட பின்பு, அதனால் தன் ப்ரயோஜனம் கைகூடினதாக நினைப்பானோ? பெரிய தோட்டத்தில், பெரிய உப்பரிகையின் மேல், மெத்தென்ன பஞ்ச சயனத்தில் மனத்திற்கினிய காதலிகளுடன் படுத்திருப்பதாகவும், தான் மஹாராஜனாயிருந்து ஏகச் சத்ராதிபத்யம் (ஒரு குடைக்கீழ் அரசாட்சி) செய்வதாகவும் மனத்தில் நினைப்பானாயின், அவ்வளவில் அவன் ப்ரயோஜனம் கைகூடப் பெற்றவனாவானா? அந்த அனுபவங்களெல்லாம் நிஷ்ப்பலங்களே (பலன் அற்றவையே) அல்லவா?) மற்றும், ப்ரியங்களும் (விருப்பமானவையும்), அப்ரியங்களும் (விருப்பம் அற்றவைகளும்) கலந்து நானா ரூபமாய் (பலவகையாய்) இருக்கையால், அவை நிஷ்ப்பலங்களே (பலன் அற்றவையே).
அவ்வாறே, ஸத்வாதி குணங்களால், ஆத்மாக்களிடத்தில் தேவ, மனுஷ்யாதியாகவே தங்களை நினைக்கையும், நிஷ்ப்பலமே (பலன் அற்றதே). ஆத்மா தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் அமைந்திருக்கிறானன்றி, அத்தேஹங்களே ஆத்மாவன்று. அவன், அவற்றைக் காட்டிலும் வேறுபட்டவன். ஆகையால், அவ்வாத்மாக்களிடத்தில் தேவ, மனுஷ்யாதி பேதங்களை ஏறிடுகை ப்ரமமே (மனக்கலக்கமே) அன்றி, உண்மையன்று. அவ்வாறே, துக்க ரூபங்களான சப்தாதி விஷயங்களை, ஸுக ரூபங்களாக நினைக்கையும், அநித்யங்களான (நிலையற்றவையான) அவற்றை நித்யங்களாக (நிலை நின்றவைகளாக) நினைக்கையும் நிஷ்ப்பலமே (பலன் அற்றதே).
ஆகையால், என்னையே சிறந்த புருஷார்த்தமாகப் பற்றிக் கர்மங்களைப் பல அபிஸந்தி (பலனில் விருப்பம்) இல்லாமல் அனுஷ்டிக்க வேண்டும்; காம்ய (பலனை விரும்பிச் செய்யும்) கர்மங்களையெல்லாம் துறக்க வேண்டும். “சாஸ்த்ரங்கள் பலன்களையும் சொல்லி, இவற்றை அனுஷ்டிக்க வேண்டுமென்று விதிக்கின்றனவே. அவற்றை எவ்வாறு துறக்கலாம்?” என்றால், ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை ஆராய முயன்றவன், அல்பங்களும் (மிகவும் தாழ்ந்தவைகளும்), அஸ்திரங்களுமான (நிலையற்றவையுமான) பலன்களைப் பற்றினவையாகையால், காம்ய (பலனை விரும்பிச் செய்யும்) கர்மங்களின் விதியை ஆதரிக்கலாகாது; சங்கை (ஸந்தேஹம்) இன்றித் துறக்க வேண்டியதே முக்யம். அவற்றைத் துறந்தமையால் சாஸ்த்ரங்களை உல்லங்கனம் செய்தவனாக (மீறியவனாக) மாட்டான். பின்னையோவென்றால், சாஸ்த்ரங்களை அனுஸரித்தவனேயாவான்.
எப்படியென்றால், சாஸ்த்ரங்கள் காம்ய (பலனை விரும்பிச் செய்யும்) கர்மங்களை விதிப்பது ப்ராணிகளுக்குத் தம்மிடத்தில் நம்பிக்கையை உண்டாக்கி வசீகரிப்பதற்காகவே. அவற்றிற்கு அவைகளில் அபிஸந்தி (விருப்பம்) இல்லை. இந்தக் கருத்தை அறிந்து, அக்கர்மங்களை விடுவது யுக்தமே (ஸரியே). வெளி இந்திரியங்களையும் உள் இந்திரியமான மனத்தையும் அடக்குவதற்கு உபாயங்களான யமங்களை (அஹிம்ஸை – பிறர்க்குத் தீங்கு செய்யாமை; ஸத்யம் – உண்மை பேசுதல்; அஸ்தேயம் – திருடாமை; ப்ரஹ்மசர்யம் - மனம், சொல், செயலால் தூய்மை; அபரிக்ரஹம் – கஷ்டத்திலும் தானம் பெறாமை) அடிக்கடி ஆதரவுடன் அப்யஸிக்க (பயிற்சி செய்ய) வேண்டும்.
சௌசம் முதலிய நியமங்களையோ (செளசம் – அகப், புறத் தூய்மை; ஸந்தோஷம் – திருப்தி; தபஸ் – உண்ணா நோன்பு முதலியன; ஸ்வாத்யாய – வேதம் ஓதுதல்; ஈச்வர ப்ரணிதானம் – ப்ரபத்தி, சரணாகதி) என்றால், தன் சக்தியை அனுஸரித்து வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமல் அனுஷ்டிக்க வேண்டும். ஸர்வேச்வரனாகிய என்னை உள்ளபடி அறிந்தவனும், தன்னை என்னைக்காட்டிலும் வேறுபடாதவனாகப் பாவிக்கும் தெளிவுடையவனும், ஜிதேந்த்ரியனுமாகிய (புலன்களை வென்ற) குருவை உபாஸிக்க வேண்டும். மற்றும், குருவை உபாஸிக்கும் பொழுது கபடத்தையும் (சூதையும்), அந்தக் குருவிடத்திலும் அவரைச் சேர்ந்தவர்களிடத்திலும் அர்த்த (பொருள்), காமங்களைப் (ஆசை) பற்றின மாத்ஸர்யத்தையும் (பொறாமையையும்) பாராட்டலாகாது.
பெரியோர்களைப் பணியும் விஷயத்தில் உத்ஸாஹமுற்றிருக்க வேண்டும். தேஹானுபந்திகளிடத்தில் (உடலோடு தொடர்பு உள்ளவர்களிடத்தில்) என்னுடையவர்களென்னும் அபிமானம் (எண்ணம்) கொள்ளலாகாது. (அவ்வாறு அபிமானம் கொள்வானாயின், அவர்களை அனுஸரிக்க வேண்டி வரும். அது குரு உபாஸனத்திற்கு (பூஜைக்கு) விரோதியாம். ஆகையால் அது சிறிதும் கூடாது.)
குருவினிடத்தில் திடமான ஸ்னேஹம் (அன்பு) உண்டாகப் பெற்றிருக்க வேண்டும். குரு சுஷ்ரூஷையில் (பணிவிடையில்) மனவூக்கமின்றி வேறு விஷயங்களில் மனம் செல்லப் பெற்று அந்த விஷயத்தில் ஊக்கத்தினால் இந்தக் குரு சுஷ்ரூஷையில் (பணிவிடையில்) அச்ரத்தையாய் (ஈடுபாடின்றி) இருக்கலாகாது. இவை ஹேயங்கள் (விடத்தக்கவை) என்றும், இவை உபாதேயங்கள் (ஏற்றுக்கொள்ளத்தக்கவை) என்றும் வஸ்துக்களின் ஸ்வரூபத்தை ஆராய்ந்தறிகையில், விருப்பமுற்றிருக்க வேண்டும். பிறர் தோஷங்களை வெளியிடுகை பெரும் தோஷம். அது சிறிதும் கூடாது. வீண்பேச்சு பேசலாகாது. தேஹானுபந்திகளிடத்தில் (உடலோடு தொடர்பு உள்ளவர்களிடத்தில்) என்னுடையவை என்னும் அபிமானத்தை எவ்வாறு துறக்கமுடியுமென்றால், பெண்டிர், பிள்ளை, வீடு, கழனி (வயல்), பந்துக்கள், பணம் முதலியவைகளில் ஆஸக்தியின்றி (பற்றின்றி) உதாஸீனமாய் (பொருட்படுத்தாது) இருப்பானாயின், அவற்றில் என்னுடையவை என்னும் அபிமானம் (எண்ணம்) நீங்கிப்போகும்.
அவற்றில் ஒளதாஸீன்யம் (பொருட்படுத்தாமை) எப்படி உண்டாகுமென்றால், பெண்டிர், பிள்ளை, வீடு, வாசல் முதலியவற்றை எல்லாம் என்னுடையவை என்று பாவிக்கலாகாது. தன்னுடையது என்று தான் அபிமானித்திருக்கும் பணத்தை, பிள்ளை, பெண்டிர் முதலியவர்களும் அனுபவிக்கையால், அது எல்லார்க்கும் பொதுவாயிருப்பது போல், பிள்ளை, பெண்டிர் முதலியவற்றையும் பொதுவாக நினைக்க வேண்டும். அப்படி நினைப்பானாயின், அவற்றில் ஒளதாஸீன்யம் (பொருட்படுத்தாமை) உண்டாகி, அபிமானமும் நீங்கும்.
ஜீவன் ஸ்தூலமாயும் (கண்ணுக்குப் புலப்படுகிற பெயர், உருவத்தோடு கூடியதாயும்), ஸூக்ஷ்மமாயும் (கண்ணுக்குப் புலப்படாத, பெயர், உருவம் அற்ற, நுட்பமானதாயும்) உள்ள தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்). (பூத ஸூக்ஷ்மங்கள் (பஞ்ச மஹாபூதங்களின் நுட்பமான நிலை), புத்தி, இந்திரியங்கள், மனம், ப்ராணன் ஆகிய இவற்றின் ஸமுதாய ரூபமான உடல், ஸூக்ஷ்ம தேஹம், அவற்றின் பரிணாமமான (மாறுபாடான) உடல் ஸ்தூல தேஹம்.) ஜீவன் தேஹத்தை (உடலை) அறியும் தன்மையுடையவன். தேஹம் (உடல்) பிறரால் அறியப்படும் வஸ்துவேயன்றி, அறியும் வஸ்து அன்று. மற்றும், ஜீவாத்மா தன்னைத் தானே அறியும் தன்மையுடையவன். தேஹம் (உடல்) பிறர்க்குத் தோற்றுமே அன்றி, தன்னைத் தான் அறியமாட்டாது.
கொளுத்தப்படுவதும், ப்ரகாசிப்பிக்கப்படுவதுமாகிய காஷ்டத்தைக் (விறகு, சுள்ளியைக்) காட்டிலும், கொளுத்துவதும், ப்ரகாசிக்கச் செய்வதுமாகிய அக்னி வேறுபட்டிருப்பது போல, அறியத்தக்கதும், தரிக்கத்தக்கதுமாகிய தேஹத்தை (உடலைக்) காட்டிலும், அதை அறிபவனும், தரிப்பவனுமாகிய ஜீவன், வேறு பட்டவனே. தேஹத்தை (உடலைக்) காட்டிலும், ஜீவன் விலக்ஷணனாய் (வேறானவனாய்) இருப்பானாயின், “அடிக்கப்பட்டான்; பிறந்தான்; செத்தான்; இளைத்திருக்கிறான்; பருத்திருக்கிறான்” என்னும் இவை முதலிய தேஹ தர்மங்களுக்கு (உடலின் தன்மைகளுக்கு) இடமாக ஏன் தோன்றுகிறான் என்றால், சொல்லுகிறேன்; கேள்.
தன்னால் கொளுத்தப்படுகிற கட்டையில் பற்றின அக்னி, விநாசம் (அழிவு), உத்பத்தி (தோற்றம்), சிறுமை, பெருமை முதலிய கட்டைகளின் தர்மங்களுக்கிடமாகி, பலவாறு தோற்றுவது போல், தேஹத்தைக்காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஜீவன், தேஹத்தில் ப்ரவேசித்து, தேஹ குணங்களுக்கிடமாய்த் தோற்றுகிறானன்றி, உண்மையில் அவை தேஹ தர்மங்களே (உடலின் தன்மைகளே) அன்றி ஜீவ தர்மங்களன்று (ஆத்மாவின் தன்மை அன்று). (அனாதியான அஜ்ஞானத்தினால் (புண்ய பாப கர்ம அறியாமையினால்) ஜீவன் தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து, அந்தத் தேஹ தர்மங்களுக்கு இடமாய்த் தோன்றுகிறான். ஜீவனுக்குத் தேவ, மனுஷ்யாதி ரூபமான தேஹம், ப்ரக்ருதியின் பரிணாமங்களான ப்ருதிவி முதலிய தத்வங்களால் ஏற்பட்டது. இவ்விஷயத்தில் ஒருவர்க்கும் விவாதம் இல்லை.
ஜீவனுக்கு ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி (இறப்பு) ரூபமான இந்த ஸம்ஸாரம் முழுவதும் அந்தத் தேஹ (உடல்) ஸம்பந்தத்தினால் (தொடர்பினால்) உண்டானதே. அந்த ஸம்ஸாரத்தை வேரோடு அறுக்கும் உபாயம் பரமாத்ம உபாஸனமே (த்யானமே). ஆகையால், வேதாந்தார்த்தங்களை ஆராய்ந்து, ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவாக இருப்பவனும், தோஷங்கள் தீண்டப் பெறாதவனுமாகிய பரமபுருஷனை உள்ளபடி அறிந்து, இந்த தேஹத்திலும் (உடலிலும்), தேஹானுபந்திகளிடத்திலும் (உடலோடு தொடர்பு உடையவர்களிடத்திலும்) உபாதேயம் (ஏற்றுக்கொள்ளத்தக்கவை) என்னும் புத்தியை க்ரமமாகத் துறக்க வேண்டும். (நெடுநாளாகப் பழகின துர்ப்புத்தியைத் திடீரென்று துறக்க முடியாதாகையால், ஒளதாஸீன்யம் (பொருட்படுத்தாமை) முதலிய கீழ்ச் சொன்ன உபாயங்களால் க்ரமமாகத் துறக்க முயற்சி செய்ய வேண்டும்).
ஆசார்யன் கீழரணி (நெருப்பு உண்டாக்கப் பயன்படும் மரக்கட்டை – கீழ் உள்ளது). சிஷ்யன் மேலரணி (நெருப்பு உண்டாக்கப் பயன்படும் மரக்கட்டை – மேல் உள்ளது). அவ்விரண்டிற்கும் இடையிலிருந்து கடையும் காஷ்டம் (சுள்ளி) உபதேசம். அவ்வாறு கடைவதனால் உண்டாகும் அக்னி, பரப்ரஹ்ம ஜ்ஞானம். அரணிக்கட்டையைக் கடைந்து அதினின்று அக்னியைப் பெறுவது போல், சிஷ்யன் ஆசார்யனிடத்தினின்று உபதேசம் பெற்று, அவ்வுபதேசத்தினால் ப்ரஹ்ம ஜ்ஞானத்தைப் பெறவேண்டும். ஸம்சயம் (ஸந்தேஹம்), விபர்யயம் (நேர் எதிர் தட்டான அறிவு) முதலிய தோஷங்களுக்கு இடமாகாமல் விளங்குகின்ற அவ்வாசார்ய உபதேசத்தினால் விளையும் ஜ்ஞானம் பரிசுத்தமாகி, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களை வடிவாகவுடைய ப்ரக்ருதியினின்று உண்டான விசித்ரமான ஸம்ஸாரத்தைப் போக்கும். மற்றும், இவ்வுபாஸன ஜ்ஞானம், இத்தேஹம் (உடல்), தேஹானுபந்திகள் (உடலோடு தொடர்பு உடையவர்கள்) இவை முதலியவை எல்லாம் எந்த ஸத்வாதி குணங்களின் பரிணாமங்களோ, அத்தகைய குணங்களையும், அக்குணங்களின் மூலமாய் விளையும் புண்ய, பாப கர்மங்களையும், அடியோடு பஸ்மம் (சாம்பல்) செய்து தானும் முடிகின்றது.
ஸம்ஸாரத்தினின்று மீளுவதற்கு உபாயமான உபாஸன (த்யான) ஜ்ஞானம் முக்தியில் தொடர்ந்து வருகிறதில்லை. கிடைத்த கட்டைகளை எரித்து மேல் எரிக்க வேண்டிய கட்டை நேரப் பெறாத அக்னி, அவ்வளவோடு அணைவதுபோல், உபாயமான (அடைவதற்கு வழியான) த்யான ரூப ஜ்ஞானம் முக்தி வரையில் அனுவர்த்தித்து (தொடர்ந்து), அவ்வளவோடு முடிகின்றது.தேவ, மனுஷ்யாதி தேஹங்களும், அந்தத் தேஹங்களால் அனுபவிக்கிற சப்தாதி விஷயங்களும், அநித்யங்களாகையால் (நிலையற்றவையாகையால்) அவ்விஷயத்தில் முயற்சி நிஷ்ப்பலமே (பலன் அற்றவையே) என்று சொல்ல முடியாது. ஏனென்றால், காம்ய (பலனை விரும்பிச் செய்யும்) கர்மங்களை அனுஷ்டிப்பதற்கும், ஸுக-துக்கங்களை அனுபவிப்பதற்கும் ஸாதனங்களான தேவ, மனுஷ்யாதி தேஹங்களும், ஸுக-துக்க அனுபவத்திற்கும், கர்ம அனுஷ்டானத்திற்கும் ஆதாரமான தேசமும் அவற்றிற்குரிய காலமும், பலன்களையும், அவற்றின் உபாயங்களையும் அறிவிக்கிற வேதமும், ஸுக, துக்கங்களை அனுபவிக்கிற ஆத்மாவும், வெவ்வேறென்பதில் விவாதமில்லை. ஆயினும், அவை நித்யங்களே (எப்பொழுதும் இருக்கக்கூடியவையே) அன்றி, அநித்யங்களன்று (அழியக்கூடியவை அன்று).
ஸமஸ்த பதார்த்தங்களுக்கும் உத்பத்தியைப் பற்றியே விநாசம் (அழிவு) உண்டாகிறதன்றி, உத்பத்தியில்லாத பதார்த்தங்களுக்கு விநாசம் (அழிவு) உண்டாகிறதில்லை. தேச, காலாதிகளுக்கு உத்பத்தியில்லாமையால், அவைகளுக்கு விநாசமும் (அழிவும்) இல்லை. ஆத்மாக்கள் ஸத்வாதி குணங்கள் அமைந்த தேவ, மனுஷ்யாதி ஆகார (உருவ) பேதத்தினால் (வேற்றுமையினால்) பிறக்கிறார்களன்றி உண்மையில் அவர்களுக்குப் பிறவி கிடையாது. அவர்கள், ஸத்வாதி குணங்களுக்குரியபடி அந்தந்த பலன்களையும், அவற்றின் ஸாதனங்களையும், அவற்றால் ஆராதிக்கத் தகுந்த தேவதைகளையும் பற்றுகிறார்களாகையால், அவர்களுடைய புத்தி வெவ்வேறாயிருக்கின்றது. “வெவ்வேறாகையாலும், கார்ய (உண்டாக்கப்பட்ட) வஸ்துக்களாகையாலும், அநித்யங்கள் (நிலையற்றவை) ஆகையாலும், தேவ-மனுஷ்யாதி ஆகாரங்களும், அவற்றால் அனுபவிக்கத் தகுந்த சப்தாதி விஷயங்களும் புருஷார்த்தங்களாக மாட்டாவாகையால், ப்ரவ்ருத்தி கர்மத்தைத் துறந்து, அவற்றை விதிக்கிற சாஸ்த்ரங்களிலும் ஆதரமற்றிருக்க வேண்டும்” என்று கீழ் கூறப்பட்டது. அது யுக்தம் அன்று (ஸரியன்று).
ஏனென்றால், தேவ, மனுஷ்யாதி ஆகாரங்கள் (உருவங்கள்) அநித்யங்கள் (நிலையற்றவை) ஆயினும், அந்த ஆகாரங்களை அடைகிற ஆத்மாக்கள், நித்யர்கள் (அழிவு அற்றவர்கள்) ஆகையாலும், ஆகார பரம்பரைகளும் (வழி வழியாக வரும் உருவங்களும்) அவற்றிற்கு உபபோக்யங்களான (அனுபவ) விஷய பரம்பரைகளும், ப்ரவாஹம் (வெள்ளப் பெருக்கு) போல் நித்யங்களாகையாலும், சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதற்குரிய தேச, காலங்களும், அவற்றின் ஸாதனங்களும், அவற்றை அறிவிக்கிற வேதங்களும், அவ்வாறே நித்யங்களாகையாலும், ஸர்வ காலத்திலும் சப்தாதி விஷயங்களை (உலகியல் விஷயங்களை) விரும்பி அவற்றிற்குரிய ஸாதனங்களை அனுஷ்டித்து அவற்றின் பலனை அனுபவிக்கும் தன்மையுள்ளவர்களுக்கு, ப்ரவ்ருத்தி கர்மம் அவர்கள் விரும்பும் புருஷார்த்தங்களை நிறைவேற்றிக்கொடுக்க வல்லதேயாகையால், அதைத் துறப்பது யுக்தமன்று (ஸரியன்று). துக்க ஸாதனமோ என்றால் ப்ரதிகூலமாகையால் (எதிரிடையாக இருப்பதால்) தானே துறக்கப்படுகின்றது. பித்தம் பிடித்தவன் தவிர மற்ற எவனும் தனக்குத் தானே துக்கத்தை விளைத்துக் கொள்ள முயற்சி செய்யமாட்டான்.
உத்தவனே! இவ்வாறு சிலர் ப்ரவ்ருத்தி கர்மம் புருஷார்த்த ஸாதனமென்று நிரூபிக்கிறார்கள். ஆயினும், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் தேஹ ஸம்பந்தம் உண்டாகையால், கலை, காஷ்டை, முஹூர்த்தம் முதல் ஸம்வத்ஸரம் வரையிலுள்ள கால அவயவங்கள் (காலத்தின் பகுதிகள்), சக்ரம் போல் சுழன்று கொண்டிருப்பது பற்றி அடிக்கடி ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதிகள் (இறப்பு) உண்டாகிக் கொண்டேயிருக்கின்றன. ஆதலால், துக்கம் தவறாமல் விளைந்து கொண்டே இருக்குமென்பதில் ஸந்தேஹமில்லை.
ப்ரவ்ருத்தி கர்மம், புருஷார்த்த ஸாதகமென்று ஒப்புக்கொள்ளினும், ரஜஸ், தமோ குணங்களில் ஏதேனுமொன்றை அனுஸரிக்கின்றவனும், ப்ரவ்ருத்தி கர்மங்களைச் செய்து, அவற்றின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவிப்பவனுமாகிய ஜீவன், கர்மங்களைச் செய்தும், அவற்றின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவிக்காமல் ஸ்வதந்த்ரனாயிருக்க முடியாது; செய்த கர்மங்களின் பலனை அனுபவித்தே தீரவேண்டும். இவ்விஷயம், அனுபவ ஸித்தமாகையால் (ஒவ்வொருவர் அனுபவத்திலும் ஏற்பட்டதாகையால்) புதிதாக ஸாதிக்க வேண்டிய அவச்யமில்லை. இல்லையாயின், ஒருவனும் துக்கத்தை அனுபவிக்க மாட்டான். ஆகையால், எவன்தான் ஸ்வாதந்தரியமின்றிப் (நான் எனக்கு உரியவன் என்று இருத்தல் - இது ஜீவாத்மாவைப் பற்றியது. ஜீவாத்மா, பகவானின் நியமனத்துக்கு உட்பட்டே செயல் படக்கூடியவன். பகவானின் நியமனத்துக்கு உட்படாது தன்னிச்சையாகச் செயல் பட வல்லவன் (ஸ்வதந்த்ரன்) என்று நினைப்பது ப்ரமம் (மனக்கலக்கம்). பகவான் ஸ்வதந்த்ரன். அவன் யாருடைய நியமனத்துக்கும் உட்பட்டவன் அன்று. ஆயினும், தன்னைத் தவிர வேறு எதையும் விரும்பாத, வேண்டாத, தன் அடியார்களுக்கு வசப்பட்டவன். ஸ்வதந்த்ரன் மட்டும் அன்று. அவன் கருணைக் கடல். அவனது ஸ்வாதந்த்ரியமும், க்ருபையுமே ஜீவாத்மாவின் புண்ய, பாப கர்மங்களைப் போக்கி மோட்சம் கொடுக்கவல்லது. அதற்காக அவன் ஜீவனிடம் எதிர்பார்ப்பது அவன் திருவடித் தாமரைகளில் ஆசார்யன் மூலமாகச் செய்யும் சரணாகதி. சரணாகதி செய்தவர்களுக்கே மோட்சம் அளிப்பது என்பது ஸ்வதந்த்ரனான எம்பெருமான் தானே ஏற்படுத்தியுள்ள நியதி) பரவசனாக இருந்து கொண்டு சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்புவான்? “ஆயினும், கர்மங்களை நன்றாகச் செய்து முடிக்கத் தெரியாதவர்கள், துக்கத்தை அனுபவிக்கிறார்களன்றி, அவற்றை நன்றாகச் செய்து முடிக்கத் தெரிந்தவர்கள் ஸுகத்தை அனுபவிக்கின்றார்கள். ஆகையால், சப்தாதி விஷயங்களை விரும்புவதும், அவற்றிற்காக ப்ரவ்ருத்தி கர்மங்களைச் செய்வதும் யுக்தமே (ஸரியே)” என்றால், சொல்லுகிறேன்; கேள்.
கர்மங்களை நன்றாகச் செய்து முடிக்கத் தெரிந்த வித்வான்களுக்கும், சில விஷயங்களில் ஸுகம் உண்டாகிறதில்லை. அவர்களும் தேஹ ஸம்பந்தமுடையவர்களேயாகையால், ஸர்வகாலமும் ஸுகம் கிடைப்பது அரிதே. மற்றும் ஸாதனங்களை அனுஷ்டிக்கும் பொழுது அவை துக்கத்தையே விளைக்கும். அவற்றின் பலன்களை அனுபவிக்கும் பொழுதும், இந்த அனுபவத்தினின்று நாம் சீக்ரத்தில் நழுவ வேண்டுமே என்னும் பயத்தினால், அவையும் துக்கத்திற்கு இடமாகவேயிருக்குமன்றி, கேவல ஸுகத்திற்கு இடமாயிருக்க மாட்டாது. ஆகையால், “கர்மங்களை நன்றாகச் செய்து முடிக்கத் தெரியாத மூடர்களுக்கே துக்கம் விளையுமன்றி, செய்து முடிக்கத் தெரிந்தவர்களுக்குத் துக்கம் உண்டாகாது” என்று நினைப்பது வீண் அஹங்காரமே (கர்வமே) அன்றி வேறொன்றும் இல்லை, தெரிந்தவர்களுக்கும் துக்கம் உண்டாகுமேயன்றி, உண்டாகாமற் போகாது. (இவ்விஷயம் இப்பொழுதே நிரூபித்துச் சொன்னேனல்லவா?) மற்றும், எல்லாவற்றையும் உணர்ந்த ப்ரஹ்மாதி தேவதைகளுக்கும் கூட, ஸுகம் உண்டாகிறதில்லை. அவர்களுடைய ஐச்வர்யமும், த்விபரார்த்தம் (ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரர்த்தம் எனப்படும்.
க்ருத யுகம் 1728000 மனித வருடங்கள்; த்ரேதா யுகம் 1296000 மனித வருடங்கள்; த்வாபர யுகம் 864000 மனித வருடங்கள்; கலியுகம் 432000 மனித வருடங்கள். ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர் யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 x 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 x 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரர்த்தம் எனப்படும்.)
முதலிய அவரவர்களுக்கு ஏற்பட்ட காலத்தின் முடிவில் நழுவும் தன்மையதாகையால், அவர்களுடைய ஸுகமும் “ஐயோ! நம்முடைய அதிகாரம் நழுவப்போகிறதே” என்னும் சங்கையை (ஸந்தேஹத்தை) உட்கொண்டிருப்பதாகையால், துக்க மிச்ரமாகவே (துக்கம் கலந்ததாகவே) இருக்குமன்றி, கேவல ஸுகமாயிராது.
ஆகையால், துக்க ஸம்பந்தமில்லாத ஸுகம், எவர்களுக்கும் உண்டாகாது. இப்படியிருப்பினும், மூடர்களான அந்த ப்ரஹ்மாதிகள், அஹங்காரப்படுவது (கர்வப்படுவது) வீணே. வித்வான்கள் ஸுகம் பெறுதற்கும், துக்கத்தைப் போக்குவதற்கும் வேண்டிய உபாயத்தையும் அறிகிறார்கள். ஆயினும், எதனால் ம்ருத்யு என்று கூறப்படுகிற ஸம்ஸாரம் உண்டாகாதோ, அத்தகைய உபாயத்தை அவர்கள் அறியார்கள். (கர்மவச்யர்கள் (புண்ய, பாப வினைகளுக்கு உட்பட்டவர்கள்) ஸ்வதந்த்ரர்கள் (பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள்) அன்று; ஆகையால், அவர்களுக்கு ஸுக, துக்கங்கள் சுப, அசுப கர்ம மூலமாக உண்டாகின்றன என்று அவர்கள் அறிவார்களேயன்றி, மோட்ச உபாயத்தை (மோட்சத்திற்கான வழியை) அறிய மாட்டார்கள்).
இவ்வாறு ஜீவிக்கின்ற புருஷனுக்கு அர்த்தம் என்கிற பணமாவது, காமமென்கிற சப்தாதி விஷயமாவது எதுதான் ஸுகத்தை விளைக்கும்? எதுவும் ஸுகத்தை விளைக்காது. ஏனென்றால், தேஹத்தோடு (உடலோடு) கூடவே பிறந்த ம்ருத்யு (மரணம்) கூடவே இருக்கின்றதாகையால், அது அர்த்த, காமங்களால் விளையும் ஸுகத்தை ஸுகமாகத் தோற்றவொட்டாது.
கொலைக்களத்திற்குக் கொண்டு போகப் பெறுகிற வத்ய புருஷனுக்கு (கொலை தண்டனை பெற்றவனுக்கு), கொடுக்கிற பாற்சோறு, ஆடையாபரணம் முதலியவை ஸந்தோஷத்தை விளைக்குமா? அடுத்த க்ஷணத்தில் வதத்தை அனுபவிக்கப் போகிறானாகையால், அவை அவனுக்கு ஸுகத்தை விளைக்கமாட்டாது அல்லவா? அவ்வாறே ம்ருத்யுவினால் (மரணத்தினால்) தொடரப்பெற்ற புருஷனுக்கு, அர்த்தமாவது, காமமாவது ஸுகத்தை விளைக்கமாட்டாது.
“பசுக்களை விரும்புகிறவன், சித்ரா யாகம் செய்ய வேண்டும்” என்றும், “மழையை விரும்புகிறவன் காரீரி யாகம் செய்ய வேண்டும்” என்றும் வேதங்களில் சொல்லுகிற சித்ராதியாகங்களும், அவற்றின் பலனான பசு, மழை முதலிய ஐஹிக, லௌகிக போகங்களும் (இந்த உலகில் அனுபவிக்க வல்ல உலகியல் இன்பங்களும்), “ஸ்வர்க்கத்தை விரும்புகிறவன், தர்ச பூர்ணமாஸ யாகங்கள் செய்யவேண்டும்” என்று இது முதலாக வேதங்களில் சொல்லுகிற தர்ச-பூர்ணமாஸாதி யாகங்களும், அவற்றின் பலனான ஸ்வர்க்கம் முதலிய பாரலௌகிக (வேறு உலகில் அனுபவிக்கக்கூடிய) போகங்களும் (இன்பங்களும்), க்ருஷியைப் (விவசாயம்) போல் ஸ்பர்த்தை (போட்டி), அஸூயை (பொறாமை), நாசம் (அழிவு), வ்யயம் (செலவு) முதலிய பற்பல விக்னங்கள் (இடையூறுகள்) நிறைந்தவையாகையால், நிஷ்ப்பலமே (புருஷார்த்தமாக மாட்டாது). (பசு, மழை முதலிய இஹலோக போகங்களுக்காகவும் (இந்த உலக இன்பங்களுக்காகவும்), ஸ்வர்க்கம் முதலிய பரலோக (வேறு உலக) போகங்களுக்காகவும் (இன்பங்களுக்காகவும்) செய்கிற ப்ரவ்ருத்தி கர்மங்களெல்லாம், க்ருஷியைப் (விவசாயம்) போல் பல விக்னங்கள் (இடையூறுகள்) அவச்யமாய் நேரக்கூடியவையாகையால், நிஷ்ப்பலங்களேயாம்).
ஒருவன் விக்னங்களால் (இடையூறுகளால்) தடைபடாமல் தர்மத்தை நன்றாக அனுஷ்டிப்பானாயினும், அவ்வாறு அனுஷ்டித்த தர்மத்தினால் அவன் எத்தகைய லோகத்தைப் பெறுகிறானோ, அங்கு எவ்வித ஸுகங்களை அனுபவிக்கிறானோ, அதையெல்லாம் விவரித்துச் சொல்லுகிறேன், கேள்.
யஜ்ஞானுஷ்ட்டானத்தினால் பெருமை பெற்ற புருஷன், இவ்வுலகத்தில் இந்த்ராதி தேவதைகளை யஜ்ஞங்களால் ஆராதித்து, ஸ்வர்க்க லோகத்திற்குப் போகின்றான். அங்கு தான் யஜ்ஞாதி கர்மங்களால் ஸம்பாதித்த திவ்ய போகங்களைத் தேவேந்திரன் போல அனுபவிப்பான். மிகவும் இனியவைகளான ஆடை, ஆபரணம் முதலிய அலங்காரங்களைத் தரித்து, தன் புண்யத்தினால் ஸம்பாதித்த சுப்ரமான (வெண்மையான, ப்ரகாசிக்கிற) விமானத்தில் ஏறிக்கொண்டு, தேவதா ஸ்த்ரீகளினிடையில் விளையாடலுற்று, கந்தர்வர்களால் பாடப் பெறுவான்.
நினைத்தபடி போகும் தன்மையதும், சிறு சதங்கைகள் வரிசை வரிசையாகக் கட்டப் பெற்றதுமாகிய விமானத்தில் ஏறி, தேவதைகளின் உத்யானங்களில் (தோட்டங்களில்) தேவ ஸ்த்ரீகளோடு விளையாடிக் கொண்டிருப்பான். அவ்வாறு மஹாநந்தத்தில் ஆழ்ந்து, புண்யம் க்ஷயித்தவுடனே (தீர்ந்த உடனே), தான் கீழே விழப்போகிற ஸங்கதியை அறியமாட்டான். எதுவரையில் புண்யம் தொடர்ந்து வருமோ, அதுவரையில் ஸ்வர்க்கலோகத்தில் விளையாடலுற்று, ஸந்தோஷத்தை அனுபவிப்பான். புண்யம் க்ஷீணிக்கையில் (தீருகையில்), தான் ஸம்மதப்படாதிருப்பினும், பலிஷ்டமாகிய (பலம் மிகுந்த) காலத்தினால் தள்ளுண்டு கீழே விழுவான். இவ்வாறே இங்கும், அங்கும் சுழன்று கொண்டிருப்பான். (புண்யம் செய்தவனுடைய கதி இது).
அஸத்துக்களின் (தீயவர்களின்) ஸஹவாஸத்தினால் அதர்மத்தில் விருப்பமுற்று, இந்திரியங்களை வெல்ல முடியாமல் சப்தாதி விஷயங்களில் மனம் செல்லப்பெற்று வருத்தங்களுக்கு இடமாகி, லோபம் (பேராசை) தலையெடுத்து, ஸ்த்ரீலோலனுமாகி (பெண் பித்தனாகி), அதற்காக ப்ராணி ஹிம்ஸையில் முயன்று, துஷ்ட ஜனங்களால் வஞ்சிக்கப்பட்டு, பணம் முதலியவற்றிற்காகப் பசுக்களை விதிக்குட்படாமல் வதித்து, ப்ரேத கணங்களையும், பூத கணங்களையும் ஆராதித்து, தன்னுடைய பாப கர்மங்களுக்குட்பட்டு, க்ரமத்தில் நரகத்தை அடைந்து, தமோ குண ப்ரசுரமான (அதிகமன) ஸ்தாவர (மரம், செடி) ஜன்மத்தைப் (பிறப்பைப்) பெறுவான்.
தேஹத்தினால் துக்கத்தை விளைப்பவைகளான புண்ய, பாப கர்மங்களைச் செய்து, அந்தந்த தேஹத்தின் முடிவில், அந்தந்த கர்மங்களால் அவ்வவற்றின் பலன்களை அனுபவிப்பதற்குரிய தேஹத்தை மீளவும் பெறுகின்றான். இப்படியிருக்கையில், மரணத்தையே இயற்கையாகவுடைய ஜீவனுக்கு, இந்த ஸம்ஸாரத்தில் என்ன ஸுகம் இருக்கின்றது?
கல்பம் வரையில் ஜீவித்திருக்கிற லோகங்களுக்கும், லோகபாலர்களுக்கும், கல்பத்தின் முடிவில் என்னிடத்தினின்று பயம் உண்டாகின்றது. பல படச் சொல்லியென்? இரண்டு பரார்த்தங்களை (த்விபரார்த்தம் - 3,11,04,000 கோடி மனித வருடங்கள்) ஆயுளாகவுடைய ப்ரஹ்மதேவனுக்கும் கூட கால ஸ்வரூபனான என்னிடத்தினின்று பயம் உண்டாகின்றது. எல்லாம் காலத்திற்கு உட்பட்டதாகையால், எதற்கும் துக்கம் கலக்காத கேவல ஸுகம் கிடையாது. ஆத்மா, தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) என்றும், ஜ்ஞான ஸ்வரூபன் (அறிவு வடிவானவன்) என்றும், செயல்கள் அற்றவனென்றும் கீழ் நிரூபிக்கப்பட்டது. இப்படியிருக்க, அத்தகைய ஆத்மாவுக்குக் கர்மங்களைச் செய்கையும், அவற்றின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவிக்கையும், எவ்வாறு சேருமென்றால், சொல்லுகிறேன்; கேள்.
ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற ப்ராக்ருத குணங்கள், கர்மங்களைச் செய்யும்படி ஆத்மாவைத் தூண்டுகின்றன. (ஸத்வாதி குணங்கள் தங்களுக்கு உரிய கர்ம வாஸனையால், தேஹாரம்பத்தையும் (ஒரு உடல் பெறுவதையும்) கர்மங்களைச் செய்ய வேண்டும் என்னும் விருப்பத்தையும், அதற்குரிய ப்ரயத்ன (முயற்சி), ஜ்ஞானம் (அறிவு) இவைகளையும் விளைத்து, ஜீவனைக் கர்மங்களில் மூட்டுகின்றன.)
ஸத்வாதி குணங்களின் பரிணாமமான தேஹம், இந்திரியங்களுடன் கூடி, ஸத்வாதி குணங்களை அனுஸரித்துக் கர்மங்களைச் செய்யும்படி ஜீவனைத் தூண்டுகின்றது. இவ்வாறு ப்ராக்ருத (ப்ரக்ருதியின்) குண ஸம்பந்தமுடைய ஜீவன், தான் செய்த புண்ய, பாப கர்மங்களின் பலனான ஸுக, துக்கங்களை அனுபவிக்கின்றான். ப்ராக்ருத குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களின் ஏற்றக் குறைவாகிற வைஷம்யம் (ஏற்றத்தாழ்வு) எதுவரையில் மாறாதிருக்குமோ, அதுவரையில் ஆத்மா ஜ்ஞானத்தையே வடிவாக உடையவனாயினும், அவனுக்குத் தேவ, மனுஷ்யாதி தேஹ ஸம்பந்தத்தினால் ஏற்பட்ட பேதம் மாறாது. (அதுவரையில், பலவாறான தேஹ ஸம்பந்தம் மாறாது.) எதுவரையில் தேஹ ஸம்பந்தம் (உடல் தொடர்பு) மாறாதோ, அதுவரையில் கர்ம வச்யத்வம் (முன் வினைகட்கு உட்பட்டிருத்தல்) மாறாது. எதுவரையில் கர்ம வச்யத்வம் (முன் வினைகட்கு உட்பட்டிருத்தல்) மாறாதோ, அதுவரையில், ஸர்வேச்வரனான என்னிடத்தினின்று பயம் விளைந்து கொண்டேயிருக்கும்.
துக்கங்கள் நிறைந்த ஸம்ஸார பயத்தைக் கர்ம பரதந்த்ரர்களுக்கு (வினைகட்கு உட்பட்டவர்களுக்கு) நான் விளைத்துக்கொண்டே இருப்பேன். எவர்கள், இந்தச் சரீரத்தையே ஆத்மாவாக அபிமானித்து, இந்தச் சரீர ஸுகத்திற்காக ப்ரயத்னம் (முயற்சி) செய்கிறார்களோ, அவர்கள் சோக ஸாகரத்தில் அழுந்தி, அதினின்று கரையேறும் உபாயத்தை அறியாமல், மயங்குவார்கள். “ப்ரதிகூலமான (நமக்கு எதிரான) தேசம், காலம், ஸ்வபாவம் இவை முதலியவையன்றோ பயத்தை விளைவிக்கின்றன. அதில் உனக்கு என்ன ஸம்பந்தம்?” என்றால் சொல்லுகிறேன்.
ஸ்ருஷ்டி (படைப்பு) தசையில் (நிலையில்), காலம், தேஹம், புண்ய பாபங்களை அனுஷ்டிக்கும் ஆத்மா, உபாயம், விதி (செய்) நிஷேதங்களை (செய்யாதே) அறிவிக்கும் சாஸ்த்ரம், ஸ்வபாவம் ஆகிய இவையெல்லாம் நானே. அவ்வாறே பண்டிதர்கள் நிரூபித்துச் சொல்லுகிறார்கள். (இவ்வாறு கால ஸ்வபாவாதிகளெல்லாம் என் அதீனமே (உட்பட்டவையே) ஆகையால், பயாபயங்களை விளைக்கிறவன் நானே).
உத்தவர் சொல்லுகிறார்:- ப்ரபூ! ஜீவன், தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் இருந்து கொண்டு, ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டு, கர்மங்களைச் செய்வதும், சப்தாதி விஷயங்களை அனுபவிப்பதுமாகி இருக்கின்றான். அத்தகைய ஜீவன், ஸத்வாதி குணங்களால் எவ்வாறு மறைக்கப்படாதிருப்பான்? (ஜீவனுக்கு ஸம்ஸாரம் அனாதியாக ஏற்பட்டிருக்கின்றது. அவன் கர்மத்தினால் ஸ்வபாவம் மறையப் பெற்றிருக்கின்றான். அவன், எவ்வாறு குணங்களைக் கடக்க முடியும்?) கர்ம மூலமான ஸுக, துக்காதிகளை எவ்வாறு அனுபவியாதிருக்க முடியும்? (இயற்கையில், ஜீவன் தேஹத்தைக்காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்) ஆயினும், அஜ்ஞான ஆவரணம் (அறியாமை என்கிற சுற்று மதில்) வந்தேறியாயினும், அது அனாதி (ஆரம்பம் அற்றது) ஆகையாலும், ஜீவன் நித்யனாகையாலும், அவனுக்குக் கர்மவச்யத்வமும் (முன் வினைகட்கு உட்பட்டிருத்தலும்), அதைப் பற்றின ஸுக, துக்கங்களும் நேராது போக மாட்டாது.
நித்ய (எப்பொழுதும் இருக்கும்) வஸ்துவுக்கு முடிவு கிடையாதல்லவா? கர்மவச்யத்வம் (முன் வினைகட்கு உட்பட்டிருத்தல்) முதலியது அனாதியே (ஆரம்பம் அற்றதே) ஆயினும், அதற்கு முடிவும் உள்ளதே என்று சொல்லவும் முடியாது. ஈச்வரனைப் போல ஜீவன், ஸ்வயம்ப்ரகாசனும் (தானே தோன்றக்கூடியவன்), ஜ்ஞாதாவுமாகையால் (பிற விஷயங்களை அறிபவனுமாகையால்), அவனுக்கு அஜ்ஞானாவரணமும் (அறியாமை என்கிற சுற்று மதில்), அதைப்பற்றி விளைகிற ஸம்ஸார பந்தமும் (உலகியல் வாழ்வின் கட்டு) எப்படி நேரும்? மற்றும், பரமாத்ம ஜ்ஞானமுடைய அறிஞனுடைய நடத்தை எத்தகையதாயிருக்கும்?
அவனுடைய பொழுது போக்கு எத்தகையதாயிருக்கும்? இவன் அறிஞனென்று எந்த அடையாளங்களால் அறியலாம்? அவன் போஜனம் செய்வானா? அல்லது போஜனத்தைத் துறந்திருப்பானா? அவன் படுத்தே இருப்பானா? அல்லது உட்கார்ந்திருப்பானா? அல்லது, அவன் திரிந்து கொண்டே இருப்பானா? அவன் செய்யும் போஜனம் முதலிய செயல்கள், எத்தகையனவாக இருக்குமோ அதை எல்லாம் எனக்கு விவரித்துச் சொல்வாயாக.
அச்சுதனே! நீ உன்னுடையவர்களைக் கைவிடாது காக்கும் தன்மையனல்லவா? ஆகையால், கேள்விகளுக்குத் தகுந்த மறுமொழிகள் கூற வல்லவர்களில் சிறந்தவனே! என்னுடைய கேள்விக்கு மறுமொழி கூறி, என் ஸந்தேஹங்களைத் தீர்த்து, என்னையும் காத்தருள்வாயாக. நித்ய பத்தனான (எப்பொழுதும் இந்த உலகியல் வாழ்விலேயே ஈடுபடும்) ஜீவன் வேறென்றும், நித்ய முக்தனான (இந்த உலகியல் வாழ்விலேயே ஈடுபடாமல் எப்பொழுதும் உலகியல் கட்டே அற்ற) ஜீவன் வேறென்றும், என்னுடைய ப்ரமம் (மனக்கலக்கம்). நித்யபத்தனுக்கு (எப்பொழுதும் இந்த உலகியல் வாழ்விலேயே ஈடுபடும் ஜீவனுக்கு) ஒருகாலும் முக்தி உண்டாகாதென்றும், நித்ய முக்தனுக்கு (இந்த உலகியல் வாழ்விலேயே ஈடுபடாமல் எப்பொழுதும் உலகியல் கட்டே அற்ற ஜீவனுக்கு) ஒரு காலும் ஸம்ஸார பந்தம் (உலகியல் வாழ்வின் கட்டு) உண்டாகாதென்றும் நான் ப்ரமித்துக் கொண்டிருக்கிறேன். நித்ய முக்தனான ஈசுவரனே தன்னுடைய அவித்யையினால் நித்ய பத்தனாயிருக்கிறானென்றும், எனக்கு ப்ரமம் உண்டாகின்றது. ஜீவனும், ஈச்வரனும் ஒன்றே என்பதற்கு உரிய ப்ரமாணமில்லாமையால், அதையும் எனக்கு நிச்சயிக்க முடியவில்லை. ஆகையால், இவ்விஷயத்தை நன்றாக எனக்கு உபதேசிப்பாயாக).
பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.