ஶ்ரீமத் பாகவதம் - 305

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தொன்பதாவது அத்தியாயம்

(ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களில், விஷ்ணுவே பரன் (மேலானவன்) என்று அறுதியிடுதல் (உறுதிப்படுத்துதல்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! ரிஷிகள், ஸரஸ்வதி நதிக்கரையில் ஸத்ரயாகம் (நீண்ட நாட்கள் செய்யும் யாகம்) நடத்த உட்கார்ந்தார்கள். ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களாகிய மூன்று தேவர்களுக்குள் எவன் பெரியவனென்று அவர்களுக்குள் விவாதம் உண்டாயிற்று. மன்னவனே! அவர்கள் அதை நிச்சயிக்க விரும்பி, ப்ரஹ்மாவின் புதல்வராகிய, ப்ருகு மஹர்ஷியை அதைத் தெரிந்து கொண்டு வரும்படி அனுப்பினார்கள். 

அவர், ப்ரஹ்ம தேவனுடைய ஸபைக்குச் சென்றார். அம்முனிவர், ப்ரஹ்ம தேவனுடைய ஸத்வ குணத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு, அத்தேவனை ஸ்தோத்ரம் செய்யாமல், வெறுமனே இருந்தார். தன்னொளியினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கிற மஹானுபாவனாகிய அந்த ப்ரஹ்ம தேவன், அவ்வாறு ஸ்தோத்ரம் செய்யாதிருந்ததற்கு அம்முனிவர் மேல் கோபித்துக் கொண்டான். அந்த அயன் (ப்ரஹ்மா) ஸமர்த்தனாகையால், அக்னியை அதன் கார்யமான ஜலத்தினால் அணைப்பது போல, தன் புதல்வராகிய ப்ருகு முனிவர் விஷயமாகத் தன் மனத்தில் உண்டான கோபத்தை, தன் விவேக புத்தியினால் அடக்கிக் கொண்டான். 

அப்பால், அம்முனிவர் சிவனுடைய ஸத்வ குணத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டுக் கைலாஸ பர்வதத்திற்குப் போனார். மஹேச்வரனாகிய அந்த ருத்ரதேவன், ஸந்தோஷத்துடன் எழுந்து, ப்ராதாவான அம்முனிவரை அணைத்துக் கொள்ள ஆரம்பித்தான்: அம்முனிவர், “நீ வழி தப்பி, தப்பு வழியில் நடப்பவன். நீ என்னைத் தீண்டலாகாது” என்று மொழிந்து, அவன் தன்னை அணைப்பதற்கு இசையாதிருந்தார். அந்த ருத்திரன் கோபித்து, நெருப்பு எரிகின்ற தீக்ஷணமான (கூர்மையான) கண்களுடையவனாகி, சூலத்தை ஏந்திக்கொண்டு, அந்த ப்ருகு முனிவரை வதிக்கத் தொடங்கினான். பார்வதிதேவி, அவனுடைய பாதங்களில் விழுந்து, வேண்டாமென்று நல்வார்த்தைகள் சொல்லி, ஸமாதானப்படுத்தினாள். 

பிறகு, அம்முனிவர் எங்கு ஜனார்த்தனன் வாஸம் செய்கிறானோ அத்தகையதான வைகுண்ட லோகத்திற்குச் சென்று, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் மடியில் சயனித்துக் கொண்டிருக்கிற அப்பகவானை, மார்பில் காலால் உதைத்தார். ஸத்புருஷர்களுக்குக் கதியாகிய அந்தப் பகவான், உடனே ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் படுக்கையினின்றும் எழுந்து, இறங்கிச் சீக்ரமாக அம்முனிவரைச் சிரத்தினால் நமஸ்காரம் செய்தான். மற்றும், அப்பகவான் அம்முனிவரைப் பார்த்து மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அந்தணரே! உமக்கு நல்வரவாகுக! இந்த ஆஸனத்தில் க்ஷணகாலம் வீற்றிருப்பீராக. ப்ரபூ! நீர் வந்ததை அறியாதிருந்த எங்களுடைய அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும். மஹானுபாவரே! கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கும் தூய்மையை விளைக்கவல்ல உமது ஸ்ரீபாத தீர்த்தத்தினால், என்னையும், என்னுடைய லோகத்தையும், என்னிடத்தில் நிலைநின்ற மனமுடைய லோகபாலர்களையும், புனிதம் செய்வீராக. மஹானுபாவரே! இப்பொழுது, நான் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு என்றும் மாறாத இடமாயினேன். உம்முடைய பாதம் படுதலால், பாபங்களெல்லாம் தீரப்பெற்ற என்னுடைய மார்பில், ஸ்ரீமஹாலக்ஷ்மி என்றும் தவறாது வஸித்திருப்பாள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீ வைகுண்ட நாதனாகிய பகவான், இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கையில், ப்ருகு முனிவர் அப்பரமனுடைய கம்பீரமான உரையினால் ஸந்தோஷத்தையும், த்ருப்தியையும் அடைந்து, பக்தியின் மிகுதியால் கண்களில் நீர் தளும்பப் பெற்று, வெறுமனே இருந்தார். 

ராஜனே! அம்முனிவர் மீண்டு ஸத்ரயாகம் நடக்கிற ஸரஸ்வதி நதிக்கரைக்கு வந்து, தான் ஆங்காங்குச் சென்று அனுபவித்ததை எல்லாம் ப்ரஹ்மவாதிகளான (வேதங்களை ஓதி உணர்ந்து அதன் பொருளைப் பிறர்க்கு உபதேசிக்க வல்லவர்களான) முனிவர்களுக்கு வர்ணித்தார். அப்பால், அம்முனிவர்களும் அதைக் கேட்டு வியப்புற்று, ஸம்சயம் (ஸந்தேஹம்) தீர்ந்து, எவனிடத்தில் சாந்தி குடிகொண்டிருக்கின்றதோ, எவனை உபாஸிப்பவர்களுக்குச் சாந்தி விளையுமோ, முக்தியும் கைகூடுமோ, அத்தகையனான ஸ்ரீமஹாவிஷ்ணுவையே எல்லோரிலும் மேற்பட்டவனென்று நிச்சயித்தார்கள். 

ப்ராஹ்மணர்களுக்கு நன்மை செய்கையாகிற தர்மமும், எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிக்கும் அறிவும், சாந்தி முதலியவற்றோடு கூடின வைராக்யமும், அணிமை முதலாக எட்டுவகைப்பட்ட ஐச்வர்யமும் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன - 

1. அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 

2. மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 

3. லகிமா - லேசாகச் செய்தல் 

4. கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 

5. வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 

6. ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 

7. ப்ராப்தி - நினைத்த பொருளைப் பெறுதல் 

8. ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)

தன்னைப் பணியும் ஆத்மாக்களுடைய பாபங்களைப் போக்கும் புகழும், எவனிடத்தில் நிலைநின்றிருக்கின்றனவோ, இவையெல்லாம் ஆத்மாக்களுக்கு எவனிடத்தினின்று விளையுமோ, அத்தகைய மஹாவிஷ்ணுவையே அவர்கள் ஸர்வஸ்மாத்பரன் (எல்லோரையும் விட மேம்பட்டவன்) என்று நிச்சயித்தார்கள். 

ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்கை தவிர்ந்து, இந்திரியங்களை அடக்கி, எல்லாம் பரப்ரஹ்மமே என்னும் புத்தியுடையவராகையால் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்ப்பவர்களும், பரமபுருஷனுடைய முகமலர்த்தியைத் தவிர மற்றொரு ப்ரயோஜனத்தை விரும்பாதவர்களும், பரோபகாரம் (பிறருக்கு உதவி) செய்பவர்களுமாகிய முனிவர்களுக்கு, எவனைப் பரமகதியாகச் சொல்லுகிறார்களோ, அத்தகைய மஹா விஷ்ணுவையே அவர்கள் ஸர்வஸ்மாத்பரன் (எல்லோரையும் விட மேம்பட்டவன்) என்று நிச்சயித்தார்கள். 

ரஜஸ், தமஸ்ஸுக்கள் தீண்டப் பெறாத சுத்த ஸத்வம் எவனுக்கு ப்ரியமான சரீரமோ, எவனுக்கு ப்ராஹ்மணர்கள் இஷ்ட தேவதைகளோ, மற்றும் ப்ராஹ்மணர்கள் நிபுண புத்தியர்களாகி (சிறந்த அறிவுடையவராகி) இந்திரியங்களை வென்று, மற்றொரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல், எவனைப் பணிகின்றார்களோ, அத்தகைய மஹா விஷ்ணுவை அவர்கள் ஸர்வஸ்மாத்பரனாக (எல்லோரையும் விட மேம்பட்டவனாக) நிச்சயித்தார்கள். 

இத்தகையனும், இணையெதிரற்றவனுமாகிய அந்தப் பரமபுருஷனுடைய ஸத்வ, ரஜஸ், தமோகுணமயமான மாயையினால் படைக்கப்பட்ட ராக்ஷஸர்கள், அஸுரர்கள், தேவர்கள் என்று மூன்று வகைப்பட்ட பூதங்களும், அவனுடைய சரீரங்களே. (அவர்களில், தேவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர். அஸுரர்கள் ரஜோகுணம் நிறைந்தவர். ராக்ஷஸர்கள் தமோகுணம் நிறைந்தவர். இவர்களெல்லோரும், பகவானுக்குச் சரீரங்களேயாயினும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் ஜ்ஞானம் மழுங்கினவராகையால், உபாஸிக்கத் தகுந்தவர்களல்லர்) சுத்த ஸத்வமயமான பகவானுடைய அஸாதாரணமான திவ்ய மங்கள விக்ரஹமே உபாஸிக்கப்பட்டு, ப்ரக்ருதி ஸம்பந்தத்தை முழுவதும் போக்கி, ஆத்மாக்களுக்குச் சுத்தியை விளைக்கும் திறமையுடையது. ஆகையால், அதுதான் உபாஸிக்கத்தகுந்தது. ஸரஸ்வதி நதிக்கரையில் வஸிக்கும் ப்ராஹ்மணர்கள், ப்ராணிகளின் ஸம்சயம் (ஸந்தேஹம்) தீரும்படி இவ்வாறு நிச்சயித்து, அப்பரம புருஷனுடைய பாதார விந்தங்களைப் பணிந்து, முக்தியை அடைந்தார்கள்.

ஸுதர் சொல்லுகிறார்:– வ்யாஸ மஹர்ஷியின் புதல்வராகிய சுகமஹர்ஷியின் முகமாகிற தாமரை மலரின் பரிமளமுடையதும், ஸம்ஸார பயத்தைப் போக்கும் தன்மையதும், வெகுமதிக்கத் தகுந்ததுமாகிய பரமபுருஷனுடைய மேன்மையை வெளியிடும் இதிஹாஸமாகிற இந்த அம்ருதத்தை ஸம்ஸாரமாகிற பெருங்காட்டு வழியில் நடந்து, கரை காணாது வருந்தும் புருஷன், காதுகளாகிற தொன்னைகளால் எப்பொழுதும் பானம் செய்வானாயின், அந்தக் காட்டு வழியில் திரிந்தலையும் ச்ரமத்தைத் துறந்து, முக்தியைப் பெறுவான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– பரத வம்சாலங்காரனே! ஒருகால், த்வாரகாபுரியில் ஒரு ப்ராஹ்மண பத்னியின் குழந்தை பிறந்த மாத்ரத்தில் பூமியை ஸ்பர்சித்தவுடனே (தொட்ட உடனே) மரணம் அடைந்தது. அந்த ப்ராஹ்மணன் மரணம் அடைந்த அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு, ராஜ க்ருஹத்தின் வாசலில் விரைந்து சென்று, மன வருத்தத்துடன் குழந்தையை வைத்துப் புலம்பிக்கொண்டே இவ்வாறு மொழிந்தான்.

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- ப்ராஹ்மண த்வேஷியும் (வெறுப்பவனும்), கெடுமதியனும், பேராசையுற்றவனும், இந்த்ரியங்களை வெல்லும் திறமையற்றவனும், க்ஷத்ரியாதமனுமாகிய (க்ஷத்ரியர்களில் தாழ்ந்தவனுமாகிய) ராஜனுடைய தோஷத்தினால் என் குழந்தை மரணம் அடைந்தது. (என்னிடத்தில் ஒரு தோஷமும் இல்லை) பிறர்க்கு ஹிம்ஸை செய்வதையே விளையாட்டாக உடையவனும், கெடு நடத்தையுடையவனும், இந்த்ரியங்களை வெல்ல முடியாதவனுமாகிய மன்னவனைப் பணியும் ப்ரஜைகள் வருந்துவார்கள்; என்றும் வருந்தி, ஏழைகளுமாவார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறே அந்த ப்ராஹ்மண ச்ரேஷ்டன், பிறந்தவுடனே மரணம் அடைந்த இரண்டாம் குழந்தையையும், மூன்றாம் குழந்தையையும் ராஜ க்ருஹத்தின் வாசலில் கொண்டு வந்து வைத்து, கீழ்ச் சொன்னபடியே புலம்பினான். (இவ்வாறே எட்டுத் தடவைகள் நடத்தினான்). ஒருகால், ஸ்ரீக்ருஷ்ணனிடம் சென்ற அர்ஜுனன், ஒன்பதாவது குழந்தையும் அவ்வாறே பிறந்தவுடன் மரணம் அடையப்பெற்ற அவ்வந்தணன் வந்து புலம்பின அப்புலம்பலைக் கேட்டு, அந்தணனைக் குறித்து அர்ஜுனன் மொழிந்தான்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:- ஓ ப்ராஹ்மணனே! உன்னுடைய வாஸஸ்தானமாகிய இப்பட்டணத்தில் வில்லைத் தரிக்கும் க்ஷத்ரியன் ஒருவனும் இல்லையாயென்ன? (ஒரு க்ஷத்ரியாதமனும் (க்ஷத்ரியர்களில் தாழ்ந்தவனும்) கூட இல்லையா?) இங்குள்ளவர்களோ என்றால் ஸத்ரயாகம் செய்யும் ப்ராஹ்மணர்களைப் போலப் பணம் முதலியவற்றைச் சேர்த்துக்கொண்டு ஸுகமாயிருக்கிறார்கள். எவர்கள் ஜீவித்துக் கொண்டிருக்கையில், ப்ராஹ்மணர்கள், பணம், மனைவி, மகன் முதலியவற்றைப் பறிகொடுத்து, இவ்வாறு வருந்துகிறார்களோ, அவர்கள் க்ஷத்ரிய வேஷம் பூண்ட நட்டுவர்கள் போன்று கேவலம் தங்கள் ப்ராணன்களைப் பாதுகாத்துக் கொள்கை மாத்ரத்திலேயே மனவூக்கமுற்று ஜீவிக்கிறார்கள். (அவர்கள் ஜீவச்சவம் (நடைபிணம்) போன்றவர்களே). 

மஹானுபாவனே! வருத்தமுற்றிருக்கின்ற ப்ராஹ்மண தம்பதிகளாகிய உங்களுக்கு இனிமேல் பிறக்கிற ப்ரஜையை நான் இங்கேயே இருந்து காத்துக்கொடுக்கிறேன். நான் இந்த ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றாது போவேனாயின், அப்பொழுது அக்னி ப்ரவேசம் செய்து, ப்ராஹ்மணனுடைய புலம்பலைக் கேட்ட பாபத்தினின்றும், பொய் சொன்ன பாபத்தினின்றும் விடுபடுகிறேன்.

ப்ராஹ்மணன் சொல்லுகிறான்:- பலராமன், ஸ்ரீக்ருஷ்ணன், வில்லாளிகளில் சிறந்த ப்ரத்யும்னன், இணையெதிரில்லாத அநிருத்தன் ஆகிய இவர்களெல்லோரும் எதைப் பாதுகாத்துக் கொடுக்க வல்லமை அற்றிருக்கின்றார்களோ; அப்படிப்பட்ட என் ப்ரஜையை நீ எப்படி காக்கப் போகின்றாய். ஜகதீச்வரர்களான ஸ்ரீக்ருஷ்ணாதிகளாலும் செய்ய முடியாத கார்யத்தை நீ எவ்வாறு செய்ய வல்லனாவாய்? நீ மூடத்தனத்தினால் செய்ய விரும்புகின்றாயன்றி வேறில்லை. ஆகையால், உன் வார்த்தையை நாங்கள் நம்பமாட்டோம்.

அர்ஜுனன் சொல்லுகிறான்:- ப்ராஹ்மணனே! நான் பலராமன் அல்லேன்; அவன் தமையனாகிய ஸ்ரீக்ருஷ்ணனும் அல்லேன்; அவன் பிள்ளையாகிய ப்ரத்யும்னனும் அல்லேன். பின்னை யாரென்றால், நான் அர்ஜுனனென்று ப்ரஸித்தி பெற்றவன். என்னுடைய தனுஸ்ஸு, காண்டீவமென்று எங்கும் புகழ் பெற்றது. ப்ராஹ்மணனே! என்னுடைய வீர்யத்தை அவமதிக்க வேண்டாம். நான், என்னுடைய வீர்யத்தினால் முக்கண்ணனாகிய ருத்ரனையும்கூட ஸந்தோஷப்படுத்தினேன். ப்ரபூ! நான் யுத்தத்தில் ம்ருத்யுவையும் ஜயித்து, உன் ப்ரஜையைக் கொண்டு வருகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களைத் தபிக்கச் செய்பவனே! அவ்வந்தணன் இவ்வாறு அர்ஜுனனால் நம்பிக்கை உண்டாகும்படி ஸமாதானம் சொல்லப் பெற்று, அர்ஜுனனுடைய வீர்யத்தைக் கேட்டு மனக்களிப்புற்று, தன் க்ருஹத்திற்குப் போனான். அவ்வந்தணர் தலைவன், தன் பார்யைக்கு ப்ரஸவகாலம் ஸமீபித்திருக்கையில், ஆதுரத்துடன் (துன்பத்துடன்) அர்ஜுனனிடம் வந்து, என் ப்ரஜையை ம்ருத்யுவினிடத்தினின்றும் “காப்பாய், காப்பாய்” என்று முறையிட்டான். அவ்வர்ஜுனன், பரிசுத்தமான ஜலத்தை எடுத்து ஆசமனம் செய்து, மஹேச்வரனை நமஸ்கரித்து, திவ்யாஸ்த்ரங்களை ஸ்மரித்து, நாணுடன் (வில்லில் கட்டும் கயிறு) கூடிய காண்டீவமென்னும் தனுஸ்ஸை (வில்லை) எடுத்துக்கொண்டு சென்று, பலவகை அஸ்த்ரங்கள் சேர்க்கப்பெற்ற பாணங்களால் ஸுதிகாக்ருஹம் (பிரசவிக்கும் இடம்) முழுவதையும் ததைந்தனன் (முற்றுகை இட்டான்). 

கீழும், மேலும், குறுக்கும் ஆக முழுவதும் சரக்கூடு (அம்பினால் கூடு) கட்டினான். பிறகு, ப்ராஹ்மண பத்னிக்குக் குமரன் பிறந்து, உடனே மரணம் அடைந்து, கண்ணுக்குப் புலப்படாமல், ஆகாய மார்க்கமாய்ச் சென்று மறைந்தான். அப்பொழுது, அந்தணன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஸந்நிதானத்தில் அர்ஜுனனைக் குறித்து, அவனைப் பழித்துக்கொண்டே, “ஆ! என்னுடைய மூடத்தனத்தைப் பாருங்கள். ஆண்மையில்லாத நபும்ஸகன் (அலி) பிதற்றின பிதற்றலை நான் நம்பினேனே! ப்ரத்யும்னனாவது, அநிருத்தனாவது, பலராமனாவது, ஸ்ரீக்ருஷ்ணனாவது எதைக் காக்க வல்லரல்லரோ, அத்தகைய வஸ்துவை, மற்ற எவன் தான் காக்க வல்லவனாவான்? ஆகையால், இவ்வாறு பொய்சொல்லின அர்ஜுனனைச் சுடவேண்டும். தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் தன்மையனாகிய அர்ஜுனனுடைய தனுஸ்ஸையும் சுட வேண்டும். இவ்வர்ஜுனன், துர்ப்புத்தியனாகித் தெய்வம் லோகாந்தரத்திற்குக் (வேறு உலகத்திற்குக்) கொண்டு போனதை மூடத் தனத்தினால் திருப்பிக்கொண்டு வர விரும்புகிறான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ப்ராஹ்மண ரிஷி, இவ்வாறு சபித்துக்கொண்டிருக்கையில், அவ்வர்ஜுனன் ஸமஸ்த லோகங்களிலும் ஸஞ்சரிக்கும் திறமையை விளைக்கவல்ல யோகவித்யையைக் கைப்பற்றி, மஹானுபாவனாகிய யமன் எவ்விடத்தில் வாஸம் செய்கிறானோ அத்தகையதாகிய ஸம்யமனி என்கிற யமபுரிக்குச் சென்றான். அவன் அங்கு ப்ராஹ்மண குமாரனைக் காணாமல், அவ்விடத்தினின்று இந்த்ரனுடைய பட்டணத்திற்குச் சென்று, அங்கும் காணாமல், அக்னி, நிருதி, யமன், வாயு, வருணன், இவர்களுடைய பட்டணங்களுக்குச் சென்றும், அவ்விடங்களிலும் காணாமல், பின்பு பாதாளம் ஸ்வர்க்கத்திற்கு மேலுள்ள லோகம், மற்றுமுள்ள லோகங்கள் ஆகிய எல்லா இடங்களுக்கும் சென்று, வில்லும் கையுமாய்த் திரிந்தும், எங்கும் ப்ராஹ்மண குமாரன் அகப்படாமையால், ப்ரதிஜ்ஞையை நிறைவேற்ற முடியாமல், அக்னி ப்ரவேசம் செய்ய விரும்புகையில், ஸ்ரீக்ருஷ்ணன் அவனைத் தடுத்து மொழிந்தான்.

ஸ்ரீக்ருஷ்ணன் சொல்லுகிறான்:– அர்ஜுனா, உனக்கு நான் ப்ராஹ்மண குமாரர்களைக் காட்டுகிறேன்.  உன்னை நீ அவமதித்துக் கொள்ளவேண்டாம். இதனால் மனுஷ்யர்கள் நிர்மலமான (அப்பழுக்கற்ற) உன்புகழை நிலை நிறுத்துவார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மஹேச்வரனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு மொழிந்து, அவ்வர்ஜுனனுடன் திவ்யமான குதிரைகள் பூட்டப்பெற்ற ரதத்தின் மேல் ஏறிக்கொண்டு, மேற்கு திசையில் நுழைந்தான். அம்மஹானுபாவன், அவ்வேழுமலைகள் அமைந்த ஏழு த்வீபங்களையும், ஏழு ஸமுத்ரங்களையும், லோகாலோக பர்வதத்தையும் (மலையையும்) கடந்து, பெரிய அந்தகாரத்தில் (இருட்டில்) நுழைந்தான். 

பரத ச்ரேஷ்டனே! சைப்யம், ஸக்ரீவம், மேகபுஷ்பம், வலாஹகமென்னும் பெயர்கள் பூண்ட அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய குதிரைகள் அவ்வந்தகாரத்தில் (இருட்டில்) போக முடியாமல் நடை தடைபடப் பெற்று நின்றன. மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் குதிரைகள் அவ்வாறு நடக்க முடியாமல் தடைப்பட்டிருப்பதைக் கண்டு, மஹா யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனாகையால், ஆயிரம் இரவிகள் உதித்தாற் போலிருக்கின்ற தன் சக்ராயுதத்தை முன்னே போகும்படி அனுப்பினான். 

மனோஜவமுடைய (மனதை ஒத்த வேகம் உடைய) அந்த ஸுதர்சன சக்ரம், நுழைய முடியாததும், மிகவும் பயங்கரமாயிருப்பதும், அளவற்றதும், பகவானால் படைக்கப்பட்டதுமாகிய அவ்வந்தகாரத்தை (இருட்டை) மிகவும் அளவற்றதாகிய தன் தேஜஸ்ஸினால் பிளந்து, ராமனது நாணினின்று நழுவின பாணம் ராவண ஸேனையைப் பிளந்துகொண்டு செல்வது போல் சென்றது. 

அர்ஜுனன், அவ்விருட்டுக்கு தூரத்திலிருப்பதும், பகவானுடைய அளவற்ற ஒளியை அடைந்திருப்பதுமாகிய அந்த ஸுதர்சன சக்ரத்தை அதன் பின்னே ஏற்பட்ட த்வாரத்தினால் கண்டு, அதன் தேஜஸ்ஸினால் கண்கள் அடிபடப்பெற்று இரண்டு கண்களையும் மூடிக்கொண்டான். பிறகு, அவ்வந்தகாரத்திற்கப்பால் பெருங்காற்றினால் கிளம்புகிற மிகப் பெரிய அலைகளால் பயங்கரமாயிருக்கின்ற ஜலப்ரவாஹத்தில் நுழைந்து, அதன் கீழ் மிகுந்த ஒளியுடையதும், சிறந்ததும், திகழ்கின்ற ரத்னமயமான ஆயிரம் ஸ்தம்பங்கள் (தூண்கள்) அமைந்ததும், அற்புதமுமாகிய ஒரு க்ருஹத்தைக் கண்டான். 

அங்கு, மிகவும் பயங்கரனும், ஆச்சர்யத்தை விளைப்பவனும், ஆயிரம் பணங்கள் (தலை, படம்) உடையவனும், அப்பணங்களிலுள்ள மஹாரத்னங்களின் காந்திகளால் திகழ்கின்றவனும், தீக்ஷணமான (கூர்மையான) இரண்டாயிரம் கண்களுடையவனும், பெரிய வெள்ளிமலை போன்றவனும், கறுத்த கழுத்தும் நாக்குகளும் உடையவனுமாகிய அனந்தனென்னும் பெயருடைய ஆதிசேஷனைக் கண்டான். 

அவ்வாதிசேஷனுடைய சரீரத்தின் மேல் ஸுகமாக வீற்றிருப்பவனும், மஹானுபாவனும், புருஷர்களில் சிறந்த ப்ரஹ்மாதிகளைக் காட்டிலும் சிறந்தவனும், நீர் நிறைந்த மேகத்தோடொத்த ஒளியுடையவனும், அழகிய பீதாம்பரம் உடுத்தவனும், தெளிந்த முகமும் அழகிய நீண்ட கண்களுமுடையவனும், மிகவும் சிறப்புடைய ரத்னங்களின் நிரைகள் நிறைந்த கிரீடம், குண்டலம் இவற்றின் ஒளிகள் நிரம்பி முழுவதும் விளங்குகின்ற அளவற்ற குந்தலங்களுடையவனும், திரண்டு உருண்டு நீண்டு அழகிய எட்டுப் புஜங்களுடையவனும், அழகிய கௌஸ்துபமணி அணிந்தவனும், ஸ்ரீவத்ஸமென்னும் திருமறு (மச்சம் போன்ற அடையளம்) உடையவனும், வனமாலையால் அலங்கரிக்கப்பட்டவனும், ஸநந்தன், நந்தன் முதலிய பார்ஷதர்களும் (கூட இருப்பவர்களும், வேலைக்காரர்களும்), விக்ரஹங்களையுடைய சக்ரம் முதலிய தன் ஆயுதங்களும், மூர்த்திகளையுடைய (வடிவங்களை உடைய) புஷ்டி, ஸ்ரீகீர்த்தி, அஜை என்னும் சக்திகளும் அவ்வாறே மூர்த்தீகரித்த (வடிவங்களைக் கொண்ட) அணிமை முதலிய ஸமஸ்த விபூதிகளும் பணியப்பெற்று ப்ரஹ்மாதிகளுக்கு ப்ரபுவுமாகிய பரமபுருஷனைக் கண்டனன். 

பிறவி முதலிய ஹேய (தீய) குணங்கள் தீண்டப்பெறாதவனும், தன்னைக் காட்டிலும் வேறுபடாதவனுமாகிய அப்பரமபுருஷனை ஸ்ரீக்ருஷ்ணன் வந்தனம் செய்தான். அவ்வாறே அர்ஜுனனும் அப்பரமபுருஷனைக் கண்ட மாத்ரத்தில் பய பக்திகள் உண்டாகப் பெற்று, அவனை வணங்கினான். மேன்மையுடையவர்களான ப்ரஹ்மாதிகளுக்கும் ப்ரபுவான அப்பரமன், கைகுவித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணனையும், அர்ஜுனனையும் பார்த்து, கம்பீரமான உரையுடன் மொழிந்தான்.

பரம புருஷன் சொல்லுகிறான்:- நான் உங்களைப் பார்க்க விரும்பி, ப்ராஹ்மண குமாரர்களை இவ்விடம் கொண்டு வந்தேன். நீங்கள் தர்மத்தைக் காக்கும் பொருட்டு, பூமியில் என்னுடைய அம்சமாய் அவதரித்தவர்கள்; பூமிக்குப் பாரமாயிருக்கின்ற அஸுரர்களை வதித்து, மீளவும் சீக்ரத்தில் என்னிடம் வந்து சேருவீர்களாக. நீங்கள் கல்யாண குணங்களெல்லாம் அமைந்து, சிறந்தவர்களாகையால், பூர்ண காமர்களாயினும் (விரும்பியவை அனைத்தும் அடையப்பெற்றவர்களாயினும்), முன்பு நர, நாராயணர்கள் என்னும் பெயருடைய இரண்டு ரிஷிகளாகி, ஜகத்ரக்ஷணத்தின் (உலகைக் காக்கும்) பொருட்டு உலகங்களையெல்லாம் தர்மத்தில் மூட்ட முயன்று தர்மத்தை ஆச்ரயித்தீர்கள் (ஏற்று இருந்தீர்கள்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ஸ்ரீக்ருஷ்ணார்ஜுனர்கள், பரமபதவாஸியான பரம புருஷனால் இவ்வாறு கட்டளை இடப்பெற்று, அப்படியே என்று அங்கீகாரம் செய்து, அளவற்ற மஹிமையுடைய அவனை நமஸ்கரித்து, ப்ராஹ்மண குமாரர்களை எடுத்துக்கொண்டு, மனக்களிப்புற்று, போன வழியே திரும்பித் தங்களிருப்பிடம் வந்து, ப்ரபுக்களாகிய அந்த க்ருஷ்ண அர்ஜுனர்கள் முன்போலவே இருக்கின்ற குழந்தைகளை அந்தணனுக்குக் கொடுத்தார்கள். 

அர்ஜுனன், விஷ்ணுவின் ஸ்தானத்தைக் கண்டு மிகவும் வியப்புற்று, உலகில் புருஷர்களுக்குப் பௌருஷம் (ஆண்மை) என்பது ஏதேதுண்டோ, அதெல்லாம் ஸ்ரீக்ருஷ்ணனுடைய க்ருபையால் கிடைத்ததேயென்று நினைத்தான். ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு தெய்வ, மானுஷச் செயல்களைக் கடந்த அனேகமாயிரம் ஆச்சர்ய சரித்ரங்களை நடத்திக் கொண்டு, கர்மவச்யர்களைப் (புண்ய, பாப வினைகளுக்கு உட்பட்டவர்களைப்) போல் க்ராம்ய போகங்களை (சிற்றின்பங்களை) அனுபவித்தான்; எல்லாவிதத்திலும் மிகச் சிறப்புடைய யாகங்களாலும் ஆராதித்தான். இந்த்ரன் மழைக்காலத்தில் தவறாமல் மழை பெய்வது போல மேன்மையுடைய பகவான், ப்ராஹ்மணர் முதலிய ஸமஸ்த ப்ரஜைகளுக்கும் அவரவர் விரும்பும் விருப்பங்களையெல்லாம் கறந்தான். 

அப்பரமன், அதர்மிஷ்டர்களான சில ராஜர்களைத் தான் நேரில் வதித்தும், சிலரை அர்ஜுனாதிகளைக் கொண்டு வதிப்பித்தும், யுதிஷ்டிராதிகளைக்கொண்டு ருஜுவான (நேர்மையான) மார்க்கத்தினால் (வழியினால்) அனாயாஸமாகவே வர்ணாச்ரமாதிகளுக்குரிய தர்மத்தை நடத்தினான். 

எண்பத்தொன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை