ஶ்ரீமத் பாகவதம் - 304

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தெட்டாவது அத்தியாயம்

(பகவத் பக்தர்களின் ஏழ்மைக்குக் காரணம் கூறுதலும், பஸ்மாஸுர வத வ்ருத்தாந்தமும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷீ! தேவதைகளிலும், அஸுரர்களிலும், மனுஷ்யர்களிலும், எவர் அமங்கலனான (நன்மையற்ற) ருத்ரனைப் பணிகிறார்களோ, அவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களும், போகம் (அனுபவிக்கும் பொருட்களை) உடையவர்களுமாய் இருக்கின்றார்கள். ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு வல்லபனான (கணவனான) பரமபுருஷனைப் பணிகிறவர்களோ என்றால், அவ்வாறு பணக்காரர்களாயிருக்கிறது இல்லை. (செல்வத்திற்கு அதிஷ்டான தேவதையான ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான (கணவனான) பரமபுருஷனைப் பணிகிறவர் அன்றோ பணக்காரர்களாயிருக்க வேண்டும். கையில் கபாலம் ஏந்திப் பிச்சை எடுக்கிற சிவனைப் பணிகிறவர்கள் ஏழைகளாய் இருக்க வேண்டுமல்லவா? அப்படியிருக்க, இப்படி விபரீதமாயிருக்கிறது. விஷ்ணு, ருத்ரர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பொருந்தாத ஸ்வபாவமுடையவர்கள். அந்த ப்ரபுக்களைப் பணிகிறவர்களுக்குப் பலன் விபரீதமாயிருக்கின்றது. இவ்விஷயத்தில் எங்களுக்குப் பெரிய ஸந்தேஹமாயிருக்கிறது. இதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சிவன், பார்வதியுடன் கூடி, ஸர்வகாலமும் மூன்று வகைப்பட்ட அஹங்காரம்  நிறைந்த மூர்த்தியுடையவன்; மற்றும், தமோ குணத்தினால் மூடப்பட்டவன். அஹங்காரம், வைகாரிகமென்றும், தைஜஸமென்றும், தாமஸமென்றும் மூன்று வகைப்பட்டது. அந்த மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தினின்று பதினொரு இந்திரியங்களும் தன்மாத்ரங்களோடு கூடின பஞ்ச பூதங்களுமாகிய பதினாறு விகாரங்கள் உண்டாயின. (தாமஸ அஹங்காரத்தினின்று தன்மாத்ரங்களோடு கூடின பஞ்ச பூதங்களும், வைகாரிக அஹங்காரத்தினின்று பதினொரு இந்திரியங்களும் உண்டாயின.  ராஜஸ அஹங்காரம் அவ்விரண்டிற்கும் உதவி செய்யும் தன்மையது. இம்மூன்று வகைப்பட்ட அஹங்காரங்களுக்கும், ருத்ரன் அதிஷ்டான தேவதை). இத்தகைய அஹங்காரம், அதன் விகாரங்கள் ஆகிய இவற்றின் அதிஷ்டான தேவதைகளான ருத்ரன் முதலியவர்களில் எவரையேனும் பணியும் புருஷன், ஸமஸ்த ஐச்வர்யங்களையும் பெறுகின்றான். 

பரமபுருஷனோ என்றால், ஸத்வம் முதலிய ப்ராக்ருத குணங்களுக்கு உட்படும் தன்மையற்றவன்; ஜ்ஞான, ஐச்வர்யாதி குணங்களெல்லாம் நிறைந்தவன்; சேதனா சேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); ஸர்வஜ்ஞன் (அனைத்தும் அறிந்தவன்); அருகிலிருந்து ஜீவாத்மாக்களின் குண, தோஷங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவன். ஆகையால், அத்தகைய பரமபுருஷனைப் பணிகிறவன், ப்ராக்ருத குணங்களற்று முக்தனாகிறான்.

ருத்ராதிகளோ என்றால், இதற்கு நேரே விபரீதமான ஸ்வபாவம் உடையவர்கள். ப்ரஹ்ம, ருத்ராதிகள், ரஜஸ், தமஸ்ஸுக்கள் நிறைந்த ஸ்வபாவமுடையவர் ஆகையாலும், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டு நடப்பவர் ஆகையாலும், ஷாட்குண்யபூர்ணர் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவர்) அன்று ஆகையாலும், ஜீவகோடியில் சேர்ந்தவராகையாலும், ஸர்வஜ்ஞர் அன்று ஆகையாலும், அவர்களுக்கு மோக்ஷம் கொடுக்கும் திறமை கிடையாது. பின்னையோவென்றால், தங்கள் சக்திக்குத் தகுந்தபடி அர்த்த காமாதிகளைத்தான் அவர்கள் கொடுப்பார்கள். 

பகவானுக்கோ என்றால், தர்ம, அர்த்த, காம, மோக்ஷங்களென்கிற நான்கு வகைப் புருஷார்த்தங்களையும் (ஜீவனால் விரும்பிப் பெறப்படுபவை) கொடுக்கும் திறமை உள்ளதே. ஆயினும், அவன் ஸர்வஜ்ஞனும் (எல்லாம் அறிந்தவனும்), பரமகாருணிகனும் (மிகுந்த இரக்கம் உள்ளவனும்) ஆகையால், நான் என் பக்தனுக்குத் தர்ம, அர்த்த, காமங்களில் ஏதேனும் ஒரு பலனைக் கொடுப்பேனாயின், இவன் அதன் முடிவில் அடிக்கடி “அது வேண்டும். இது வேண்டும்” என்று என்னை யாசித்துக் கொண்டு, நித்ய தரித்ரனாகவே (எப்பொழுதும் ஏழையாகவே) இருப்பான். “ஆகையால், இவனை அனுக்ரஹிக்கிறேன்” என்று ஆலோசித்து, பெரும்பாலும் தன் பக்தர்களுக்கு முக்தியையே கொடுக்கிறான். ஒருவனுக்கு நிர்ப்பந்தத்தினால், தர்மாதிகளையும் கொடுக்கிறான். (இது நான் என் புத்தியால் கல்பித்துச் சொன்னதன்று. இவ்வாறு பகவான் தானே மொழிந்தான்). உங்கள் பாட்டனாகிய யுதிஷ்டிர மன்னவன், அச்வமேத யாகங்கள் முடிந்த பின்பு, ஸ்ரீக்ருஷ்ண பகவானிடத்தினின்று தர்மங்களைக் கேட்கும் பொழுது, அந்த அச்சுதனைக் குறித்து இவ்வாறு நீ வினவினாற் போலவே வினவினான். 

ப்ரபுவும், ஷாட்குண்யபூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணன், கேட்க வேண்டுமென்று விருப்பமுற்ற யுதிஷ்டிரனிடத்தில் ஸந்தோஷமுற்று, ப்ராணிகளின் க்ஷேமத்திற்காக, யதுகுலத்தில் அவதரித்தவனாகையால், அவனுக்கு விசதமாக (விரிவாக) உத்தரம் (பதில்) மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நான் எவனை அனுக்ரஹிக்க விரும்புகிறேனோ, அவனுடைய தனத்தைப் பறிக்கிறேன். அப்பால், பணமற்றவனும், துக்க பரம்பரைகளால் வருத்தமுற்றவனுமாகிய அவனை, அவன் பந்துக்கள் துறக்கிறார்கள். அவன், பணத்தாசையால் வருந்தி, முயற்சிகள் செய்யினும், பணமில்லாதவனுடைய முயற்சிகள் பலிக்கமாட்டாவாகையால், அவையெல்லாம் வீணாகப் பெற்று, வெறுப்புறுவான். அப்பொழுது, அவன் “நமக்குச் சப்தாதி விஷயங்களால் விளையும் ஸுகம் கிடைப்பதரிது” என்று நிச்சயித்துக் கொண்டு, அதில் ஆசையற்று, என் பக்தர்களோடு நட்புறுவான். அப்பொழுது, அவனுக்கு நான் செய்யக் கூடிய அனுக்ரஹத்தைச் செய்வேன். அவ்வாறு என் பக்தர்களோடு ஸ்னேஹமூடைய அவனுக்கு ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் முலமான மூலப்ரக்ருதி) புருஷர்களைக் (ஜீவாத்மாக்கள்) காட்டிலும் விலக்ஷணமும் (வேறானதும்), ஸர்வத்திலும் உள் நுழையும்படி ஸூக்ஷ்மமாயிருப்பதும் (கண்ணுக்குப் புலப்படாமல் நுட்பமாய் இருப்பதும்), கேவல ஜ்ஞானாந்த ஸ்வரூபமும் (அறிவு, இன்ப வடிவானவனும்), தேச, கால, வஸ்து பரிச்சேதம் (இடம், காலம், பொருட்களால் வரையறுக்க) அற்றதுமாகிய பரப்ரஹ்மத்தைத் தெளிவாகக் காட்டுவேன். 

இவ்வாறு முதலில் துக்கத்திற்கிடமாயிருக்கையாலே, வருந்தியும் ஆராதிக்க முடியாத என்னைத் துறந்து, முதலில் ஸுகம் கொடுக்கிறார்களென்று கடைசியில் துக்கமே பலனாக முடியுமென்பதை ஆராயாமல் ருத்ரன் முதலிய மற்றவர்களை ப்ராணிகள் பணிகின்றார்கள். அப்பால், அவர்கள் சீக்ரத்தில் ஸந்தோஷம் அடையும் தன்மையர்களான அந்த ருத்ராதிகளிடத்தினின்று ராஜ்யத்தைப் பெற்றுச் செல்வப் பெருக்கினால் வழிதப்பி மதித்து, மனவூக்கமற்று, வரங்கொடுத்த அந்த ருத்ராதி தேவதைகளையே மறந்து, அவமதிக்கின்றார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் முதலிய ஸமஸ்த தேவதைகளும் நிக்ரஹ (தண்டனை), அனுக்ரஹங்களைச் (அன்புடன் கூடிய ஆதரவு) செய்வதில் ஸமர்த்தர்களே. ஓ, ராஜனே! ஆயினும், சிவனும், ப்ரஹ்மாவும், அந்த க்ஷணமே நிக்ரஹ, அனுக்ரஹங்களைச் செய்யும் தன்மையர். தன் பக்தர்களை எப்பொழுதும் கைவிடாது பாதுகாக்கும் தன்மையனாகிய விஷ்ணுவோவென்றால், அத்தகையனல்லன்; பெரும்பாலும், அனுக்ரஹத்தையே (அன்புடன் கூடிய ஆதரவையே) செய்யும் தன்மையன்; சில இடத்தில் நிக்ரஹம் (தண்டனை) செய்யினும், அதுவும் கடைசியில் அனுக்ரஹமாகவே (அன்புடன் கூடிய ஆதரவாகவே) முடியும். இதே விஷயத்தில், ருத்ரன் வ்ருகாஸுரனுக்கு வரம் கொடுத்து, ஸங்கடம் அடைந்த பழையதாகிய இந்த இதிஹாஸத்தை நிதர்சனமாகச் (உதாரணமாகச்) சொல்லுகிறார்கள். 

சகுனியின் புதல்வனாகிய வ்ருகனென்னும் அஸுரன், வழியில் நாரத மஹர்ஷியைக் கண்டு, துர்ப்புத்தியுடையவனாகையால், ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களாகிய மூன்று தேவர்களில் எவன் சீக்ரத்தில் ஸந்தோஷம் அடையும் தன்மையன் என்று வினவினான். 

அந்நாரதரும் அவ்வஸுரனைப் பார்த்து, “நீ ருத்ரனைப் பணிவாயாக. அவன் சீக்ரத்தில் ஸந்தோஷம் அடைவான். அவன் தன்னடியார்களிடத்தில் சிறிது குணம் காணிலும், சீக்ரத்தில் ஸந்தோஷம் அடையும் தன்மையன்; அவ்வாறே, சிறிது தோஷம் காணிலும், சீக்ரத்தில் கோபத்தையும் அடைவான். அவன், ஸ்துதி பாடகர்களைப் போல் துதிக்கின்ற ராவண, பாணாஸுரர்களுக்கு நிகரற்ற ஐச்வர்யம்  கொடுத்து, அவர்களாலேயே ஸங்கடத்தை (கஷ்டத்தை) அடைந்தான். (ராவணன், ருத்ரனுடைய வாஸஸ்தானமான கைலாஸ பர்வதத்தை அடியோடு பிடுங்க, அதனால் அவன் ஸங்கடத்தை அடைந்தான். பாணாஸூரன் தன் பட்டணத்தைக் காக்கும்படி வேண்ட, அவன் அதைக் காத்துக் கொண்டிருக்கையாகிற வருத்தத்தை அடைந்தான்)” என்று மொழிந்தார். 

அவ்வஸுரன், அம்முனிவரால் இவ்வாறு மொழிந்து, நன்கு தூண்டவும் பெற்று, அந்த ருத்ரனைத் தன் தேஹ மாம்ஸத்தினால் (உடல் சதையால்) ஆராதித்தான். அவன் அவ்வாறு தன் தேஹ மாம்ஸத்தை (உடல் சதையை) அக்னியில் ஹோமம் செய்து, அக்னி முகத்தில் இருக்கின்ற ருத்ரனை ஆராதித்து, அந்தத் தேவனுடைய தர்சனம் நேரும் ஏழாவது நாள் புண்ய தீர்த்தத்தில் ஸ்னானம் செய்கையால் நனைந்த மயிர்களையுடைய தன் தலையைக் கத்தியினால் அறுக்கத் தொடங்கினான். அப்பொழுது, மிகவும் மன இரக்கமுடைய அந்த ருத்ரதேவன், அக்னியே வடிவங்கொண்டு நேரில் வந்தாற்போல் விளக்கமுற்று, அரணியினின்றும் (இரண்டு கட்டைகளைக் கடைந்து) அக்னி உண்டாவது போல, அக்னியினின்றும் மேல் கிளம்பி, தன் கைகளால் அவ்வஸுரனைக் கைகளில் பிடித்துக் கொண்டு, தடுத்தான். 

அவ்வஸுரன், அந்த ருத்ரனுடைய ஸ்பர்சத்தினால் (தொடுதலால்) சரீரத்தில் புண்களெல்லாம் ஆறி, முன் போலவே இருக்கப் பெற்றான். அந்த ருத்ரன், அவ்வஸுரனைப் பார்த்து, “ஓ வ்ருகாஸுரனே! ஹோமம் செய்தது போதும், போதும். உன்னிஷ்டப்படி வரம் வேண்டுவாயாக. உனக்கு நான் கொடுக்கிறேன். வெறும் நீரைக் கொண்டு பணிகிற ப்ராணிகளிடத்திலும் கூட நான் ஸந்தோஷம் அடையும் தன்மையன். நீயோ என்றால் வீணாக உன் தேஹத்தை மிகவும் வருத்தினாய்” என்றான். பாபிஷ்டனாகிய அவ்வஸுரனும் அதைக் கேட்டு, அந்தத் தேவனைப் பார்த்து, நான் எவனெவன் தலையில் கையை வைப்பேனோ, அவனவன் மரணம் அடையவேண்டும்” என்று ஸமஸ்த ப்ராணிகளுக்கும் பயத்தை விளைப்பதாகிய இவ்வரத்தை வேண்டினான். 

பரத குலாலங்காரனே! மஹானுபாவனாகிய ருத்ரன் அதைக் கேட்டு, மன வருத்தமுற்று, பலாத்காரமாக அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டு, ஸர்ப்பத்திற்கு (பாம்பிற்கு) அம்ருதம் கொடுப்பது போல, அவனுக்கு அவ்வரத்தைக் கொடுத்தான். 

அவ்வஸுரன், இது மெய்யோ, பொய்யோ என்று அந்த வரத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு, அந்த ருத்ரன் தலையிலேயே தன்கையை வைக்கத் தொடங்கினான். அப்பொழுது, அந்த ருத்ரன் தான் செய்த அபராதத்தினின்று பயந்தோடினான். அவன், அவ்வஸுரனால் தொடரப் பெற்றுப் பயந்து, உடம்பு நடுங்கி, ஆகாயம், பூமி, திசைகள் இவை எவ்வளவு உண்டோ அவ்வளவும் வடக்கு முகமாகத் தொடங்கி, ஓடிப்போனான். நான்முகன், இந்த்ரன், முதலிய தேவதைகள் அதற்கு ப்ரதிக்ரியை (எதிர் செயல்) செய்யத் தெரியாமல், வெறுமனே இருந்தார்கள். 

அப்பால், அந்த ருத்ரன், ப்ரக்ருதியின் கார்யமற்றதும் (மூலப்ரக்ருதியிலிருந்து உண்டாகாததும்), ப்ரகாசித்துக் கொண்டிருப்பதும், சரணாகதி தர்மத்தில் நிலைநின்று, இந்திரியங்களை வென்று, ப்ராணி த்ரோஹமில்லாத (பிறருக்குத் தீங்கு செய்யாத) பெரியோர்களுக்குப் பரமகதியான ஸ்ரீமந்நாராயணன் எங்கு வாஸம் செய்கிறானோ, எங்குச் சென்றவர்கள் மீண்டு வரமாட்டார்களோ, அத்தகையதுமாகிய வைகுண்டமென்கிற விஷ்ணுலோகத்திற்குச் சென்றான். 

ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பற்றினாருடைய துக்கங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பரமபுருஷன், அந்த வ்ருகாஸுரனையும், அவ்வாறு அவனிடத்தினின்று பயந்து வருந்தி ஓடிவருகின்ற ருத்ரனையும் கண்டு, தன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் ப்ரஹ்மசாரியின் உருவம் கொண்டு, தூரத்தினின்றே அவனை எதிர்கொண்டான். அரைநாண், மான் தோல், தண்டம் இவைகளோடு கூடித் தேஜஸ்ஸினால் அக்னிபோல் ஜ்வலிக்கின்ற மாணி  உருவம் (சிறிய ப்ரஹ்மசாரி வடிவம்) கொண்ட அப்பரமபுருஷன், தர்ப்பமும் கையுமாய் வணக்கத்துடன் அபிவாதனம் செய்து, மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- சகுனியின் புதல்வனே! நீ மிகவும் இளைப்புற்றிருக்கின்றாய். இது நிச்சயம். (உன்னைப் பார்த்தபொழுதே, நீ மிகவும் இளைப்புற்றிருக்கின்றாய் என்று நன்றாகத் தெரியவருகின்றது). நீ எதுக்காக வெகுதூரம் வந்தாய்? ஒரு க்ஷணகாலம் இளைப்பாறுவாயாக. ஆத்மாவுக்கு இத்தேஹம் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுப்பதல்லவா? ஆகையால், அதை இவ்வாறு வருத்தலாகாது. ப்ரபூ! உங்கள் முயற்சி எங்கள் செவியில்பட உரியதாயின், அதைச் சொல்ல வேண்டும். புருஷன், தான் செய்ய விரும்பும் கார்யத்தை, பெரும்பாலும் ஆப்த புருஷர்களோடு (தனக்கு நன்மையைக் கருதுபவர்களுடன்) கலந்தாலோசித்துச் செய்ய வேண்டும் அல்லவா?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் அம்ருதத்தை வர்ஷிக்கின்ற உரைகளைச் சொல்லி வினவப்பெற்ற அவ்வஸுரன், ஓடி வந்த ச்ரமம் தீர்ந்து, அவனுக்கு முன்பு நடந்ததையெல்லாம் உள்ளபடி மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ வ்ருகாஸுரனே! இப்படியாயின், அப்பொழுது எனக்கு அவன் வார்த்தையில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால், அவன் தக்ஷருடைய சாபத்தினால் பிசாசத் தன்மையை அடைந்து, ப்ரேதங்களுக்கும், பிசாசங்களுக்கும், ப்ரபுவாயிருக்கின்றனன். (பிசாசங்களின் வார்த்தையை நம்பலாகுமோ?) 

தானவ ச்ரேஷ்டனே! ஜகத்திற்கெல்லாம் குருவென்று நீ அபிமானித்திருக்கிற அந்த ருத்ரனிடத்தில் உனக்கு நம்பிக்கை உளதாயின், அப்பொழுது உன் கையை உன் தலையிலேயே வைத்துக் கொண்டு பரீக்ஷித்துப் பார். 

தானவ ச்ரேஷ்டனே! ருத்ரனுடைய வார்த்தை எள்ளளவேனும் பொய்யாயிருக்குமாயின், அதன் பிறகு பொய் பேசுந்தன்மையனாகிய இந்த ருத்ரனை வதிப்பாயாக. இல்லாத பக்ஷத்தில் மீளவும் இப்படியே அவன் பேசி வஞ்சிப்பானல்லவா? அப்படி இல்லாதிருக்கும்படி அப்பொழுதே அவனை வதித்து விடலாம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கெடுமதியனாகிய அவ்வஸுரன், இவ்வாறு மதிமயக்கத்தை விளைப்பவைகளும், புன்னகையினால் அழகாயிருப்பவைகளுமாகிய பகவானுடைய உரைகளால் அறிவு கெட்டு, தன் தலையில் கையை வைத்தால் தானே மரணம் அடைந்தால் அதன் பிறகு என் செய்வோம் என்பதை மறந்து, தன் கையைத் தன் தலையில் வைத்துக் கொண்டான். அனந்தரம் அவ்வஸுரன், வஜ்ராயுதத்தினால் அடிக்கப் பட்டவன் போல் தலை வெடித்து விழுந்தான். அப்பொழுது, ஆகாயத்தில் ஜயசப்தமும், நமச்சப்தமும், ஸாது சப்தமும் உண்டாயின. (“ஜய விஜயீபவ” என்றும், “நமோ நம:” என்றும் “நல்லது நல்லது” என்றும் பல சப்தங்கள் ஆகாயத்தில் உண்டாயின.) 

பாபிஷ்டனாகிய வ்ருகாஸுரன், இவ்வாறு மாண்டு போகையில், தேவதைகளும், ரிஷிகளும், கந்தர்வர்களும் பூமழை பொழிந்தனர். இவ்வாறு பகவானால் உபாயம் (வழி) செய்து சிவன் ஸங்கடத்தினின்று விடுவிக்கப்பட்டான். ஷாட்குண்ய பூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரம புருஷன், ஸங்கடத்தினின்றும் விடுபட்டிருக்கின்ற ருத்ரனைக் கிட்டி இவ்வாறு மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:– ஓ, தேவனே! மஹாதேவனே! பாபிஷ்டனாகிய இவ்வஸுரன், தன் பாபத்தினால் தானே மாண்டு போனான். ஈசனே! பெரியோர்களிடத்தில் அபராதம் செய்தவன், எவன் தான் க்ஷேமப்படுவான்? அப்படியிருக்க, ஜகத்திற்கெல்லாம் ஈச்வரனும், ஜகத்குருவுமாகிய (ஜகத்திற்கு ஹிதம் செய்பவனுமாகிய) உன்னிடத்தில் அபராதம் செய்தவன், க்ஷேமப்படமாட்டான் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு வாக்குக்கும், மனத்திற்கும் எட்டாத, அளவற்ற ஆச்சர்யமான பல சக்திகளுக்கு ஸமுத்ரம் போன்றவனும், ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் முலமான மூலப்ரக்ருதி) புருஷர்களைக் (ஜீவாத்மாக்கள்) காட்டிலும் விலக்ஷணமும் (வேறானதும்), அந்த ப்ரக்ருதி புருஷர்களின் உள்ளே புகுந்து நியமித்துக்கொண்டிருப்பினும் அவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதவனும், உலகங்களுக்கெல்லாம் தாரகனும் (காப்பாற்றுபவனும்), தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவான், ருத்ரனைப் பெரிய ஸங்கடத்தினின்று விடுவித்த இந்த வ்ருத்தாந்தத்தை எவன் சொல்லுகிறானோ, எவன் கேட்கிறானோ, அவ்விருவரும் ஸாம்ஸாரிக (உலக வாழ்வின்) துக்கங்களினின்றும், சத்ருக்களிடத்தினின்றும் (எதிரிகளிடமிருந்தும்) விடுபட்டு, ஸுகப்படுவார்கள். 

எண்பத்தெட்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை