தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தேழாவது அத்தியாயம்
(ச்ருதி கீதை)
பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்ம ரிஷீ! ஜாதி, குணம், க்ரியை இவற்றில் ஏதேனுமொன்றை முன்னிட்டுக் கொண்டு, அவற்றிற்கிடமான வஸ்துக்களை அறிவிப்பவைகளான வேதங்கள், பரப்ரஹ்மத்தை நேரே எப்படி அறிவிக்கவல்லவையாகும். ஏனென்றால் அப்பரப்ரஹ்மம், சேதனர்களோடாவது (ஜீவாத்மாக்களோடாவது), அசேதனங்களோடாவது (ஜடப்பொருட்களோடாவது) ஒப்பிட்டு இத்தகையதென்று நிரூபிக்க முடியாதது. ஆகையால், ஜாதியை முன்னிட்டுக் கொண்டு அறிவிக்க முடியாது. அது சேதனா சேதனங்களை (ஜீவாத்மாக்கள் மற்றும் ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணமாகையால் (வேறானதாகையால்), அதை அவற்றோடு ஒப்பிட்டு இத்தகையதென்று அறிவிக்க முடியாது. மற்றும், அந்தப் பரப்ரஹ்மம், ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களும் தீண்டப் பெறாதது. குணத்தை முன்னிட்டு வஸ்துக்களை அறிவிக்கும் சப்தங்கள், அக்குணங்கள் தீண்டப்பெறாத அந்த ப்ரஹ்மத்தை எவ்வாறு அறிவிக்கும்? இவ்வாறே செயல்கள் எவையுமில்லாத அந்த ப்ரஹ்மத்தைச் செயல்களை முன்னிட்டு வஸ்துக்களை அறிவிக்கும் சப்தங்கள் எவ்வாறு அறிவிக்கவல்லவையாம். (ஆகையால், வேதங்களெல்லாம் பரப்ரஹ்மத்தையே முக்யமாக அறிவிக்கின்றன என்று நீர் பல தடவைகளில் மொழிந்தது எவ்வாறு பொருந்தும்?)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- திறமையுள்ள ஸர்வேச்வரன், ஜீவாத்மாக்களுக்குக் கரண, களேபரங்களை (இந்த்ரிய, சரீரங்களை) அளிப்பதற்காகவும், அவர்களுக்கு க்ஷேமங்களை விளைப்பதற்காகவும், அவர்கள் ஸ்வரூபத்தை அறிந்து மோக்ஷம் பெறுதற்காகவும், லீலைக்காகவும், ஜனங்களுக்கு புத்தி, இந்திரியம், மனம், ப்ராணன் இவற்றைப் படைத்தான். ஈச்வரன் இருபத்து நான்கு தத்வங்களையும், தேவ, மனுஷ்யாதி சரீரங்களையும் படைத்து, அவற்றுள் ஜீவன் மூலமாய் ப்ரவேசித்து, அவற்றைச் சரீரமாகக் கொண்டு, அவற்றின் நாமங்களுக்குத் தானே முக்யமான பொருளாகி, அவையெல்லாம் அவனேயென்னும் படி அமைந்திருக்கிறானாகையால், அவனிடத்தில் தேவ, மனுஷ்யத்வாதி ஜாதியாவது, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களாவது, போதல், வருதல், முதலிய செயல்களாவது இல்லையாயினும், அவற்றை முன்னிட்டுப் பொருள்களை அறிவிக்கிற வேத வாக்யங்களெல்லாம் அவற்றிற்கிடமான சேதனா சேதனங்கள் (ஜீவாத்மாக்கள் மற்றும் ஜடப்பொருட்கள்) மூலமாய் அவனை அறிவிக்கின்றனவாகையால், வேதங்களெல்லாம் அவனையே முக்யமாக அறிவிக்கின்றன என்பதற்குத் தடையில்லை.
ஆனால், “ஸமஸ்த சப்தங்களுக்கும் பரமபுருஷனே முக்யமான பொருளென்பது உலகத்தவர்களுக்கு ஏன் தெரியவில்லை? உலகத்திலுள்ளவர் அந்தந்த சப்தங்களுக்கு அந்தந்த வஸ்துக்களையே பொருளாக அறிகிறார்களன்றி, பரமபுருஷனே முக்யமான பொருளென்று அறியவில்லை. இப்படி உலகத்தில் ஏற்பட்டிருக்கிற வழக்கத்தை அழித்து, புதிய வழக்கத்தை எப்படி ஸாதிக்க முடியும்” என்றால் சொல்லுகிறேன்; கேள்.
ஸமஸ்த சப்தங்களும் பரப்ரஹ்மத்தையே முக்யமாக அறிவிக்கிறதென்னும் இந்த ரஹஸ்யம் உபநிஷத்துக்களின் அர்த்தங்களை ஆராய்ந்தறிந்தவர்களுக்குத் தெரியுமன்றி, மற்றவர்களுக்குத் தெரியாது. பெரியோர்களுக்கும் பெரியோர்களான வாமதேவாதி மஹர்ஷிகள் இந்த ரஹஸ்யத்தை நிச்சயித்திருக்கிறார்கள். இவ்வாறு ரஹஸ்யமான இந்தச் சப்த சக்தியை ச்ரத்தையுடன் மனத்தில் தரிக்கும் புருஷன், ப்ரார்த்திக்க வேண்டியது மற்ற எதுவுமின்றி முக்தியாகிய க்ஷேமத்தைப் பெறுவான். இவ்விஷயத்தில் ரிஷி வேஷம் தரித்துப் பத்ரிகாச்ரமத்தில் வஸிக்கிற நாராயணனுக்கும், நாரத மஹர்ஷிக்கும் வினா விடையாக நடந்த ஒரு இதிஹாஸத்தைச் சொல்லுகிறேன்; கேள்.
பகவானிடத்தில் அன்புடையவரும், அவனுக்கு அன்பரும், ஓயாமல் உலகங்களில் திரிந்து கொண்டிருப்பவருமாகிய நாரத மஹர்ஷி, ஒருகால் புராண ரிஷியாகிய நாராயணனைப் பார்க்க விரும்பி, வர்ணாச்ரம தர்மங்கள், ஆத்ம ஜ்ஞானம் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவு), ராக (விருப்பு), த்வேஷாதிகள் (வெறுப்பு) தீண்டப்பெறாமையாகிற சாந்தி, இக்குணங்களுடையவனாகி இப்பாரத வர்ஷத்திலுள்ள ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவும், மோக்ஷத்திற்காகவும், கல்பம் வரையில் தவத்தில் இழிந்திருக்கிற அந்நாராயணனுடைய ஆச்ரமமாகிய பத்ரிகாச்ரமத்திற்குச் சென்றார்.
கௌரவ ச்ரேஷ்டனே! அங்குக் கலாபக்ராமத்தில் வசிக்கின்ற ரிஷிகளால் சூழப்பட்டு உட்கார்ந்திருக்கின்ற அந்நாராயணனை நாரதர் வணங்கி, நீ வினவின இவ்விஷயத்தைப் பற்றியே வினவினார். மஹானுபாவனாகிய அந்நாராயணனும், அந்நாரத மஹர்ஷிக்கு ரிஷிகள் கேட்டுக் கொண்டிருக்கையில் உனக்கு நான் சொன்ன இந்தப் பரிஹாரத்தையே (தீர்வையே) மொழிந்தான்.
ஜனலோக வாஸிகளான பெரியோர்களாகிய ஸனந்தனாதிகளுக்கும், இவ்விஷயத்தைப் பற்றியே முன்பு வினா, விடையாக ஸம்வாதம் (உரையாடல்) நடந்தது. அந்த ப்ரஹ்ம வாதத்தையே (பகவானைப் பற்றிய உரையாடலையே) நாராயண பகவான் நாரதருக்கு மொழிந்தான்.
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:- நாரதரே! முன்பு ஜன லோகத்தில் அங்கு வாஸம் செய்பவர்களும், ப்ரஹ்மாவின் மானஸபுத்ரர்களும், ஊர்த்வரேதர்களும் (ஆண் விந்துவை வெளிவிடாமல் உயிர் சக்தியை சேமிப்பவர்கள் அதாவது ஜன்மம் முதல் ஜிதேந்திரியர்களும்) ஆகிய ஸனகாதி முனிவர்கள் பரப்ரஹ்மத்தின் குணங்களை அனுபவிக்கையாகிற ப்ரஹ்மஸத்ரமென்னும் (நீண்ட காலம் நடத்தப்படும்) யாகத்தை நடத்தினார்கள். அப்பொழுது நீ ச்வேத த்வீப நாதனான (பகவானான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர வேறு தெய்வத்தை மனதாலும் நினைக்காதவர்கள் வசிக்கும் இடம்) தர்சனம் செய்ய அவ்விடம் போயிருந்தாய். வேதங்கள் எந்த விஷயத்தை நிரூபிக்கின்றனவோ, அத்தகைய பரப்ரஹ்மத்தைப்பற்றி அம்முனிவர்கள் வாதம் செய்தார்கள். நீ எந்த விஷயத்தைப் பற்றி என்னை வினவுகின்றனையோ, இந்த விஷயத்தைப் பற்றியே அம்முனிவர்களுக்குள் ப்ரச்னம் (கேள்வி) நடந்தது. ஸனகாதி முனிவர்கள் செய்த ப்ரச்னத்தையே (கேள்வியையே) நீயும் செய்தாய். உன் புத்தியின் திறமை மிகவும் அற்புதமாயிருக்கின்றது. பாபமற்றவனே! அப்பொழுது அந்த ப்ரச்னத்திற்கு (கேள்விக்கு) நடந்த பரிஹாரங்களை (பதில், ஸமாதானம்) எல்லாம் சொல்லுகிறேன்; கேட்பாயாக.
ஸனகாதிகளான அம்முனிவர்கள் அனைவரும் சாஸ்த்ர ஜ்ஞானம் (வேதம் மற்றும் இதிஹாஸ, புராணங்களில் சொல்லப்படும் விஷயங்களைப் பற்றிய அறிவு), உபவாஸம் முதலிய தவம், ப்ரஹ்மோபாஸனம் (பரப்ரஹ்மமான பகவானை த்யானித்தல்) அதற்கு வேண்டிய நல்லொழுக்கம், இவையெல்லாம் ஒத்திருக்கப்பெற்றவர்களே. மற்றும், அவர்கள் எல்லோரும் தம்முடையவர்கள், சத்ருக்கள் (எதிரிகள்), மத்யஸ்தர் (இடைப்பட்டவர்) ஆகிய எல்லாரிடத்திலும் பேத புத்தியின்றி ஸமமாகவேயிருப்பவர். (அவர்களுக்குத் தம்முடையவனென்றும், சத்ருவென்றும் (எதிரி என்றும்), உதாஸீனனென்றும் (பொருட்படுத்தாதவன் என்றும்) பேத புத்தி கிடையாது). எல்லாரும் ப்ரஹ்மவாதம் செய்யும் (பகவானைப் பற்றி ஆராயும்) திறமையுடையவர்களே. ஆயினும், ப்ரவசனம் செய்யும்படி ஸனந்தனர் ஒருவரை ஏற்படுத்தி, மற்ற ஸனகாதிகள் அனைவரும் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஸனந்தனர் சொல்லுகிறார்:– பரமபுருஷன் தான் படைத்த சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சத்தை எல்லாம் ஸம்ஹரித்து (அழித்து) ஸூக்ஷ்ம (கண்ணுக்குத் தெரியாத நுட்பமான) அவஸ்தையை (நிலையை) அடைந்த ப்ரக்ருதி (அசேதனம்), புருஷ (ஜீவர்கள்), காலங்களாகிற சக்திகளுடன் சயனித்துக்கொண்டிருக்கையில், அந்த ப்ரளயத்தின் முடிவில், ஸ்ருஷ்டியின் (படைப்பின்) ஆரம்பத்தில், வேதங்கள், பூமண்டலத்திற்கெல்லாம் நாதனான அரசனை அடுத்துப் பிழைக்கும் வந்திகள் (சமயத்திற்கேற்ப நல்வாழ்த்து கூறுபவர்கள்) விடியற்காலத்தில் வந்து, சயனித்துக்கொண்டிருக்கிற அவ்வரசனை அவனுடைய பராக்ரமங்களைச் சொல்லித் துதிப்பது போல, அப்பரமபுருஷனுக்கு அஸாதாரணமான தர்மங்களை வெளியிடுகிற அடையாளங்களைச் சொல்லி, அவனை ஸ்தோத்ரம் செய்தன.
ச்ருதிகள் சொல்லுகின்றன:- அஜிதனே! (ஒருவராலும் வெல்லப்படாதவனே!) நீ மிகவும் மேன்மையுற்றிருப்பாயாக. ஜீவாத்மாக்களிடத்தில் தோஷங்கள் பல இருப்பினும், அவற்றைப் பாராமல், யாத்ருச்சிகம் (எதிர்பாராமல் ஏற்படுவது), ப்ராஸங்கிகம் (ஒரு செயலைச் செய்யும்போது, அதற்கு நேரடித் தொடர்பு இல்லாமல் உண்டாகும் விளைவு) முதலிய ஏதேனுமொரு குணத்தைக் கொண்டு அவர்களை அங்கீகரிக்கும் தன்மையனே! ஜீவாத்மாக்களுக்கு தோஷங்களை விளைக்கின்ற ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கிடமான ப்ரக்ருதியை அழிப்பாயாக. (உன்னிடத்தில் மறைந்திருக்கிற ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் ஸம்ஸாரத்தை விளைப்பதாகிய ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தை விடுவித்து, மேன்மையுற்றிருப்பாயாக) நீ, எல்லோரையும் வென்ற ப்ரக்ருதியாலும் வெல்லப்படாதவன். ஆகையால், நீ ஜீவாத்மாக்களுக்கு அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தை விடுவிக்க வல்லவன். மற்றும், நீ இயற்கையாகவே ஜ்ஞான சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ்ஸுக்களென்கிற ஆறு குணங்களும் அமைந்தவன். ஜங்கம (அசைபவை), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான பற்பல சரீரங்களாகப் பரிணமிக்கப் (மாறப்) போகிற ப்ரக்ருதி குணங்களுக்கும் அத்தகைய சரீரங்களை ஏற்றுக்கொள்கிற ஜீவாத்மாக்களுக்கும், உள்ள சக்தியை வெளியிடுபவனே! அவர்க்கு ப்ரக்ருதி ஸம்பந்தத்தை விளைத்த நீயே அதைப் போக்கவல்லவனன்றி, மற்றவர் எவரும் வல்லரல்லர்.
ஒருகால் நீ சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகக் கொண்டு, ஜங்கம (அசைபவை), ஸ்தாவர (அசையாதவை) ரூபமான ப்ரபஞ்சமாய் விரிந்திருக்கையில், வேதங்களெல்லாம் அத்தகையனான உன்னை நிரூபிக்கின்றன. (பரமபுருஷன் ஜாதி, குண, க்ரியைகள் அற்றவனாயினும், சரீர, வாசக சப்தங்கள், சரீரி பர்யந்தம் சொல்லுமாகையால், சேதனா சேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய அப்பரமனை அச்சேதனா சேதனங்கள் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்கள்) மூலமாய் நிரூபிக்கின்றன. ஆகையால் ஜாதி, குணாதிகளை முன்னிட்டு அந்தந்த வஸ்துக்களை அறிவிக்கும் தன்மையுடைய வேதங்கள் அவையெவையும் இல்லாத பரமபுருஷனை எவ்வாறு நிரூபிக்குமென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். ஜகத்தையெல்லாம் ஸம்ஹரித்து நாம, ரூபங்களுக்கிடமல்லாத ஸூக்ஷ்ம (கண்ணிற்குப் புலப்படாத நுட்பமான) சேதனா சேதனங்களைச் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகக் கொண்டு, தான் மாத்ரமே மிகுந்திருக்கிற காரண வஸ்துவாகிய பரப்ரஹ்மத்தினிடத்தினின்று உண்டான இந்த ஜகத்தெல்லாம் பரப்ரஹ்மமென்றே வேதாந்தங்கள் அறிவிக்கின்றன.
பரப்ரஹ்மமென்று ஓதப்படுகிற பரமபுருஷன், தன்னிடத்தினின்று உண்டான இந்த ஜகத்தைப் பாதுகாத்து, ப்ரளய காலத்தில் ஸம்ஹரிக்கிறான் (அழிக்கிறான்). (அவனிடத்தினின்று உண்டாகி, அவனால் உட்புகுந்து பாதுகாக்கப்பட்டு, அவனிடத்திலேயே மறைகின்றதாகையால், எப்பொழுதும் அவனை விட்டுப் பிரியாத இந்த ஜகத்தெல்லாம் அவனே என்று சொல்லத் தடையில்லை)
எந்த வஸ்து எதினின்று உண்டாகி, எதினிடத்தில் மறைகின்றதோ, அவ்வஸ்து அக்காரண வஸ்துவைக் காட்டிலும் வேறுபட்டதன்று. மண் உருண்டையினின்று குடம் முதலியன உண்டாகின்றன; அதிலேயே மறைகின்றன. அவையெல்லாம் அம்மண் உருண்டையைக் காட்டிலும் வேறுபட்டவையன்றல்லவா? அவ்வாறே பரமபுருஷனிடத்தினின்று உண்டாகி, அவனிடத்திலேயே மறைகின்ற இந்த ஜகத்தெல்லாம், உன்னைக் காட்டிலும் வேறுப்பட்டதன்று: ஆகையால், ரிஷிகள் ஸர்வ காரணனான உன்னிடத்திலேயே தங்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்று கரணங்களையும் நிலைநிறுத்தி, உன்னையே தியானிப்பதும், துதிப்பதும், பணிவதும் செய்து வந்தார்கள்.
ஆகாயத்தில் வைத்த அடி வைப்புக்கள் வீணாவது மாத்ரமேயல்லாமல் பிடிப்பில்லாமையால் கீழ்விழுவதற்கும் காரணமாகுமேயன்றி, பூமியில் வைத்த அடிவைப்புக்கள் எப்படி வீணாகும்? வீணாகவே மாட்டாது. இவ்வாறே மனோ (மனது), வாக் (சொல்) காயம் (உடல்) என்கிற மூன்று கரணங்களும் உன்னிடத்தில் உபயோகப்படுமாயின், ஸம்ஸார தாபங்களை (பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் இந்த உலகியல் வாழ்க்கையாகிற துன்பத்தை) அழிக்கும். அவையே வேறு விஷயத்தில் உபயோகப்படுமாயின், ஸம்ஸார தாபங்களைப் (பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் இந்த உலகியல் வாழ்க்கையாகிற துன்பத்தை) போக்கவல்லவையாக மாட்டாமை மாத்ரமேயல்லாமல், மேன்மேலும் அந்த ஸம்ஸார தாபங்களையே (பிறப்பு, இறப்பு என்று மாறி மாறி வரும் இந்த உலகியல் வாழ்க்கையாகிற துன்பத்தை) விளைப்பவையாம்.
பரமபுருஷா! நீயே வேதங்களின் பொருள். அவற்றின் உட்கருத்தும் நீயே. அந்த வஸ்துக்களைப் பொருளாகவுடைய சப்தங்கள், பரமபுருஷனை எவ்வாறு அறிவிக்குமென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம். மெத்தை, படுக்கை முதலிய இடங்களில் வைத்த அடிவைப்புக்கள் ஏன் பூமியில் வைத்தவையாக மாட்டாது? அந்த மெத்தை முதலியவற்றிற்கும் பூமி ஆதாரமாகையால், பூமியில் வைத்தவையாகக் கூடுமல்லவா? அவ்வாறே அந்த வஸ்துக்களைப் பொருளாகவுடைய வேத சப்தங்கள் அவற்றிற்குக் காரணனும், அந்தராத்மாவுமாகி அவையே என்னும்படி அமைந்திருக்கிற பரமபுருஷனைக் கூறுமென்பதில் ஐயமில்லை.
ஜகத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) நிர்வாஹகனே (நியமிப்பவனே)! ஆகையால், விவேகமுடைய பெரியோர்கள், ஸகல ஜனங்களின் பாபங்களையும் போக்கவல்ல உன் கதையாகிற அம்ருத ஸமுத்ரத்தில் அவகாஹித்த (மூழ்கிய) மாத்ரத்தில் ஆத்யாத்மிகம் முதலிய {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான} தாபங்களை (துன்பங்களை) எல்லாம் துறந்தார்கள்.
பரமனே! உன்னை உள்ளபடி அறிந்து, அவ்வறிவின் மஹிமையால் ராக (விருப்பு), த்வேஷ (வெறுப்பு) முதலிய மனோ தோஷங்களை உதறி, ஜனன (பிறப்பு), மரணம் (இறப்பு) முதலிய கால குணங்களையும் கடந்து, ஸமாதியினால் நித்ய ஜ்ஞானாநந்த ஸ்வரூபனான உன் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கிற (நேராகப் பார்க்கிற) மஹானுபாவர்கள், ஸம்ஸார தாபங்களைத் துறப்பார்களென்பதைப்பற்றிச் சொல்ல வேண்டுமோ?
உன்னைப் பணிந்து உஜ்ஜீவிப்பதற்குரிய ஜன்மம் பெற்றவர்களும், உன்னைப் பணியாமல் துறந்து, கேவலம் ப்ராணேந்திரியங்களின் திருப்தியில் ஊக்கமுற்று, சப்தாதி விஷயங்களைத் தேடிக்கொண்டு திரிவார்களாயின், அவர்கள் தோல் பைகள் போல் வெறுமனே மூச்சுவிட்டுக்கொண்டு இருப்பார்களேயன்றி, வேறில்லை. “நீங்கள் சொல்லுவது வாஸ்தவமே (உண்மையே). நான் காரண வஸ்துவாகிலன்றோ முமுக்ஷுக்களால் உபாஸிக்கக் கூடியவனாயிருக்கை எனக்குப் பொருந்தும். எனக்கு ஜகத்காரணத்வமே பொருந்தாது. இனி ஜகத்காரண வஸ்துவின் தன்மையாகிய முமுக்ஷு உபாஸ்யத்வம் (மோட்சத்தை விரும்புபவர்களால் த்யானிக்கப்படுபவன் என்பது) எனக்கு எவ்வாறு பொருந்தும்? அசேதனமான (அறிவற்ற ஜடப்பொருளான) ப்ரதானமே மஹத்து, அஹங்காரம் முதலிய நாம ரூபங்களைப் பெற்றுப் பலவாறு பரிணமிக்கும் தன்மையுடையதாகையால் அதுவே காரணவஸ்துவாம். சேதனர்களுக்குப் (ஜீவாத்மாக்களுக்கு) போக்யமாயிருப்பதும், ஸத்வ, ரஜஸ், தமோ குணமயமும், ஆகாசம் முதலிய நாமரூப விகாரங்களுக்கு (மாற்றங்களுக்கு) இடமுமாகிய ஜகத்தாகிற கார்ய வஸ்துவுக்கு அத்தன்மையதான வஸ்துவே காரணமாகக் கூடுமாகையால், ஸத்வாதி குணங்களின் ஸாம்ய அவஸ்தையை (ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் ஏற்றத்தாழ்வின்றி இருக்கும் நிலையை) அடைந்த ப்ரதானமே காரணமன்றி, நான் காரணனல்லேன். ஆனது பற்றியே கார்ய காரணங்களிரண்டும் ஒன்றேயன்றி, வேறுபட்டவை அன்று என்பதற்கு மண் உருண்டையினின்று உண்டான குடம் முதலியவற்றை த்ருஷ்டாந்தமாகச் (உதாரணமாகச்) சொல்லுவதும் பொருந்துகின்றது” என்கிறாயோ? அப்படி அன்று).
மஹத்து, அஹங்காரம் முதலிய தத்வங்கள் உன்னால் அனுப்ரவேசம் செய்யப்பெற்று (உள்புகப் பெற்று), உன்னுடைய அனுக்ரஹத்தினால் ஸத்தை (நிலை) பெற்று, அண்டத்தைப் படைத்தனவன்றி அசேதனங்களான அவற்றிற்கு ஸ்வதந்த்ரமாகப் (பகவானுக்கு உட்படாது தன்னிச்சையாக) படைக்கும் திறமை எப்படி அமையும். “ப்ரதானம் (மூலப்ரக்ருதி) அசேதனமாகையால் (அறிவற்ற ஜடப்பொருளாகையால்), அது காரணமாகக் கூடாதாயினும், ஜீவாத்மாக்களில் ஒருவன் காரணமாயிருக்கக் கூடுமல்லவா? ஸங்கல்பித்து ஸங்கல்பித்தபடியே ஸ்ருஷ்டிப்பது அவனுக்குக் கூடுமல்லவா?” என்றால், அதுவும் கூடாது. ஏனென்றால், ஆநந்தவல்லியில் (தைத்திரீய உபநிஷத்தில்) அன்னமய (சரீரம்), ப்ராணமய (மூச்சுக்காற்று), மனோமய (மனது), விஜ்ஞானமய (ஜீவன்), ஆநந்தமயங்களில் (பரமாத்மா) கடைசியில் சொல்லப்பட்ட ஆநந்தமய வஸ்து புருஷ ஆகாரமாக (மனித வடிவாக) நிரூபிக்கப்பட்டது.
சிரஸ்ஸு முதலிய புருஷ ஆகாரங்களை (மனித வடிவை) உடைய அவ்வாநந்தமயன் நீயேயன்றி ஜீவாத்மாவாக மாட்டான். ஏனென்றால், அவ்வாநந்தமயன், சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் தானே படைத்து, அதற்குள் புகுந்து, அதெல்லாம் தானே என்னும்படி அமைந்து, அவற்றின் நாமங்களுக்குத் தானே பொருளாயிருக்கிறானென்று சொல்லப்பட்டது. அத்தன்மை, பத்த (பிறப்பு இறப்பு என்று மாறி மாறி வரும் துக்க மயமான ஸம்ஸாரத்தில் கட்டுண்டு உழலும்) சேதனர்களுக்காவது (ஜீவர்களுக்காவது), முக்த (எம்பெருமானின் திருவடித்தாமரைகளில் சரணாகதி செய்து, அந்த எம்பெருமானான ச்ரிய:பதியான ஸ்ரீமந்நாராயணனின் அருளால் அந்த துக்க மயமான ஸம்ஸாரத்திலிருந்து விடுபட்டு மோட்சம் அடைந்த) சேதனர்களுக்காவது (ஜீவர்களுக்காவது) ஸம்பவிக்காது. மற்றும், சேதனா சேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) இந்த ப்ரபஞ்சத்தைக் காட்டிலும் அவ்வாநந்தமயனை விலக்ஷணனாக (வேறானவனாகக்) கருதி கூறுகின்றது. மற்றும், இந்த அன்னமயம் முதலியவை நான்கும், ஸம்ஹரிக்கப்பட்ட (அழிக்கப்பட்ட) பின்பும், அவ்வாநந்தமயம் (பரமாத்மா) ஒன்று மாத்ரம் விகாரங்களின்றி (மாற்றங்களின்றி) மிகுந்திருக்கிறதென்று சுருதி நிருபிக்கின்றது. ஆகையால், அவ்வாநந்தமய வஸ்து நீயே அன்றி மற்றெதுவுமன்று.
ஆனது பற்றி ஜீவன் காரணனாகக் கூடுமே என்று சங்கிக்கலாகாது (ஸந்தேஹப்படக்கூடாது). ஸூக்ஷ்ம (கூர்மையான, நுட்பமான) புத்தியுடையவர்களும், அருண வம்சத்தில் பிறந்தவர்களுமாகிய சிலர், வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பல உபாஸன மார்க்கங்களுக்குள், ஹ்ருதயத்தில் இருப்பவனும், தஹரமென்று கூறப்படுகின்றவனுமாகிய உன்னை உபாஸிக்கிறார்கள். வேறு சிலர், வயிற்றில் உள்ள ஜாடராக்னியைச் (உண்ணும் பொருட்களை ஜீரணம் செய்யும் வயிற்றிலுள்ள அக்னி) சரீரமாகவுடைய உன்னை உபாஸிக்கிறார்கள்.
அனந்தனே! வேறு சிலர், அந்த ஹ்ருதயம் முதல் உன்னுடைய உபாஸன ஸ்தானமாகிய புருவங்களின் மத்ய ப்ரதேசம் வரையில் மேல் நோக்கி வ்யாபித்திருப்பதும், எந்த வழியாகக் கிளம்பின ஜீவாத்மாக்கள், மீளவும் இந்த ப்ரக்ருதி மண்டலத்தில் ம்ருத்யுவின் முகம் போன்ற ஸம்ஸாரத்தில் வந்து விழமாட்டார்களோ, அத்தகையதுமாகிய ஸுஷும்னா நாடி (101வதான ப்ரஹ்மநாடி; நாடி - நரம்பு) மார்க்கத்தில் இருக்கின்ற உன்னை உபாஸிக்கிறார்கள்.
நீ ஸகல ஜகத்திற்கும் (உலகிற்கும்) உபாதான காரணமாய் (மண் குடத்திற்கு மண் போல் material cause ஆக) இருந்து, நிர்மித்த (உண்டாக்கிய) விசித்ரமான தேவ, மனுஷ்யாதி தேஹங்களிலும், அத்தகைய தேஹங்களையுடைய ஆத்மாக்களிடத்திலும் உள் புகுந்து, என்றும் ஒருவாறாயிருப்பவனாயினும், அக்னி, புல்கட்டை முதலியவற்றில் பற்றிப் பலவாறு தோற்றுவது போல், ஜ்ஞானத்தின் சிறுமை பெருமையாகிற தாரதம்யத்துடன் (ஏற்றத்தாழ்வுகளுடன்) படைக்கப்பட்ட அத்தேஹங்களை அனுஸரித்துப் பலவாறு தோற்றுகின்றாய். ஆயினும், பரிசுத்தமான மதியுடையவர்கள், உன் குணங்களைச் சொல்லி, உன்னைத் துதித்துக்கொண்டு, இந்தத் தேவ, மனுஷ்யாதி தேஹங்கள் ஸம்ஹரிக்கப்பட்டிருக்கும் (அழிக்கப்பட்டிருக்கும்) பொழுதும், ஸம்ஹரிக்கப்படாமல் (அழியாமல்) ஒருவாறாகி இடைவிடாத அளவற்ற ஆநந்தமயமான உன் ஸ்வரூபத்தை உபாஸித்து (த்யானித்து) உன்னை அடைகின்றார்கள்.
உன்னால் படைக்கப் பட்டவைகளும், உன்னுடைய வாஸஸ்தானங்களுமாகிய (இருப்பிடமாகிய) தேவ, மனுஷ்யாதி தேஹங்களில் ஸமஸ்த ஆச்சர்ய சக்திகளும் அமைந்த நீ, உள்ளென்றும், வெளியென்றும் நிபந்தனையின்றி, எங்கும் வியாபித்திருக்க வல்லதும், ஸங்கோசங்கள் (குறைவு, வரையறை) அற்றதும், புருஷ ஆகாரமுமான (மனித வடிவான) உருவத்தை உன் ஸங்கல்பத்தினால் ஏற்றுக் கொண்டிருக்கின்றாயென்று வேதாந்தங்கள் கூறுகின்றன. இப்புவியிலுள்ள சில விவேகிகள், இத்தகைய புருஷ ஆகாரமான (மனித வடிவான) உன்னுருவத்தையும், உன்னுடைய ஆராதனத்திற்காகவே ஏற்பட்ட தங்கள் மனுஷ்ய ஜன்மத்தையும் ஆராய்ந்து நிச்சயித்து, ப்ராணாயாமத்தினால் ப்ராணன்களையும், இந்திரியங்களையும் வென்று, மிகுந்த நம்பிக்கையுடன் வேதங்களால் நிரூபிக்கப்படுவதும், ஜ்ஞானத்தை விளைப்பதும், ஸம்ஸார பந்தத்தை அறுத்து மோக்ஷம் கொடுப்பதுமாகிய உன் பாதார விந்தத்தை, உபாஸிக்கிறார்கள்.
ஜகதீசனே! சில விவேகிகள், வருந்தி அறியக்கூடிய உனது உண்மையை அறிவிக்கும் பொருட்டு ராம, க்ருஷ்ணாதி உருவங்களை ஏற்றுக்கொண்ட உன்னுடைய சரித்ரமாகிற பெரிய அம்ருத ஸாகரத்தில் மூழ்கி, ஆத்யாத்மிகம் முதலிய {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்ற மூன்று வகையான} ஸம்ஸார தாபங்களெல்லாம் தீர்ந்து, உன் பாதார விந்தங்களையே சரணமாகப் பற்றின பெரியோர்களின் கூட்டங்களோடு ஸஹவாஸம் செய்து (தொடர்பு வைத்து), அந்த ஸஹவாஸத்தின் (தொடர்பின்) மஹிமையால், க்ருஹம் முதலியவற்றில் மனப்பற்றைத் துறந்து, மோக்ஷத்தையும் விரும்பாதிருக்கிறார்கள். கூடு போன்ற இம்மனுஷ்ய சரீரம், உன்னுடைய ஆராதனத்திற்கு உபயோகப்படுமாயின், அப்பொழுது ஆத்மாவையும், நண்பனையும், ப்ரியனான உன்னையும் நிகர்த்ததாகும். சிலர், இத்தகைய மனுஷ்ய சரீரத்தைப் பெற்றும், சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று, நிலைநின்ற அளவற்ற ஆநந்தமுடையவனும், ப்ரீதிக்கிடமாயிருப்பவனும், ஹிதத்தையே செய்பவனும், ஏதேனுமொரு ஆனுகூல்யத்தைக் (சிறு நற்செயலைக்) கண்டாயினும் சேதனர்களை அங்கிகரிக்க எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும், அந்தராத்மாவுமாகிய உன்னைப் பணியாமல் அழிந்து போகிறார்கள். அவர்கள், ஆத்ம காதிகளே. (ஆத்ம ஸ்வரூபத்தை அழிப்பவர்களே). இதென்ன வருத்தம்? இப்படியும் அழிந்து போவதுண்டோ?
அவர்கள் ஜன்மங்கள் தோறும் அனுபவித்து, மிகுந்த கர்மத்தினால் மேன்மேலும் தேஹங்களைப் பெற்று, பல பயங்களுக்கிடமான ஸம்ஸாரத்தில் சுழன்று கொண்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் நிந்திக்கத் தகுந்த சரீரமுடையவர்கள்; சோகிக்கத் தகுந்தவர்களே. (உன்னிடத்தில் ப்ரீதி செய்யமாட்டாமை இருக்கட்டும். உன்னிடத்தில் த்வேஷாதிகளையும் (பகைமை) செய்யமாட்டார்கள். விலக்ஷண விஷயமான (எல்லாவற்றையும் விட வேறுபட்டவனான) உன்னிடத்தில் த்வேஷம் செய்யினும், அவை உன்னை அடைவிக்கும்.) ப்ராணன்களையும், மனத்தையும், மற்ற இந்திரியங்களையும் அடக்கிக்கொண்டு, எவ்விதத்திலும் தடைபடாதபடி உன்னை உபாஸிக்கிற முனிவர்கள் எத்தகையதான உன் ஸ்வரூபத்தை உபாஸிக்கிறார்களோ, அந்த ஸ்வரூபத்தையே (இயற்கைத் தன்மையையே) சத்ருக்களும் (எதிரிகளும்) த்வேஷத்துடன் (பகைமையுடன்) ஸ்மரித்துப் (நினைத்துப்) பெற்றார்கள். அவ்வாறே கோபஸ்த்ரீகளும், ஆதிசேஷனுடைய உடல் போல் திரண்டு உருண்டு நீண்ட உன் பாஹுதண்டங்களில் (கைகளில்) மிகவும் மனப்பற்றுடையவர்களாகி, அத்தகைய உன் ஸ்வரூபத்தை அடைந்தார்கள்.
உன் பாதார விந்தங்களையே நிரூபித்துக் கொண்டு, அவைகளையே அம்ருதம் போல் அனுபவித்துக் கொண்டிருக்கிற வேதாபிமானி தேவதைகளாகிய (வேதத்தின் வடிவான தேவதைகள்) நாங்களும், உனக்குத் துல்யர்களே (ஸமமே). (அந்த முனிவர்களைப் போல் தாத்பர்ய வ்ருத்தியினாலும் (குறிப்பால் உணர்த்தும் பொருளினாலும்), முக்ய வ்ருத்தியினாலும் (சொற்கள் நேராக உரைக்கும் பொருளினாலும்), எங்களுக்கு விஷயமான உன்னையே அடைகின்றோம்).
நீ எல்லாரிடத்திலும் ஸமமாயிருக்கும் தன்மையன். மேடு பள்ளங்களைப் பார்த்துப் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) செய்பவனல்லை. வைஷம்ய, நைர்க்ருண்யங்களைப் (வைஷம்யம் - ஓரவஞ்சனை செய்கை - நைர்க்ருண்யம் - மன இரக்கமில்லாமை) பரிஹரிக்கும் (நீக்கும்) பொருட்டு, ஏதேனுமொன்றை வ்யாஜமாகக் (சாக்காகக்) கொண்டு, எல்லாரையும் அனுக்ரஹிக்க விரும்புகிற உனக்கு, எல்லாரும் துல்யர்களே (ஸமமே).
இவ்வுலகத்தில் தேவாதிகளுக்குப் பிற்பட்ட ஜன்ம, மரணங்களையுடையவன் எவன் ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) சேதனா சேதனங்களைச் சரீரமாகவுடைய உன்னை, வேத சாஸ்த்ரத்தினால் அறிவதொழிய மற்றப்படி அறியவல்லனாவான்? உன்னிடத்தினின்றே ப்ரஹ்மதேவன் உண்டானான். அந்த ப்ரஹ்மதேவனுக்குப் பின்பு, நிவ்ருத்தி தர்ம நிஷ்ட்டர்களான (உலகியல் வாழ்விலிருந்து விடுபடும் வழியைப் பின்பற்றுபவர்களான) ஸனகாதிகளும், ப்ரவ்ருத்தி தர்மநிஷ்ட்டர்களான (உலகியல் வாழ்வில் ஈடுபடும் வழியைப் பின்பற்றுபவர்களான) மரீசி முதலியவர்களுமாகிய இருவகைப்பட்ட தேவர்களும் உண்டானார்கள். மனுஷ்யர்கள், அவர்களுக்குப் பின்பட்டவர்களென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?
நீ சாஸ்த்ரத்தை உன் ஹ்ருதயத்தில் அடக்கி, சயனித்துக் கொண்டிருக்கும் பொழுது (ஸ்ருஷ்டிக்குப் பூர்வகாலத்தில்) கார்யாவஸ்தமான (பெயர், உருவங்களோடு கூடிய) சேதன வஸ்துவும், அசேதன வஸ்துவும், இரண்டும் கலந்த கார்ய வஸ்துவும், காலத்தின் பிரிவுகளும் ஆகிய எவையுமே இல்லை. ஆயிரம் சொல்லி என்ன? அப்பொழுது எதுவுமே இல்லை. முதலே இல்லாமல் அழிந்து போகிறதென்றும் சிலர் நினைக்கிறார்கள். ஆத்மாக்களுக்குச் சிறுமை, பெருமை, மனுஷ்யன், ம்ருகம் முதலிய பேதங்கள் உண்டென்று சிலர் நினைக்கிறார்கள். தேவதைகளும், மனுஷ்யர்களும் ஒருவர்க்கொருவர் செய்துகொள்கிற உபகாரத்தினால் உண்டாவதும், வாணிஜ்யத்தினால் (வர்த்தகத் தொழிலால்) விளையும் பலன் போன்றதுமாகிய ஸ்வர்க்காதி பலனை நித்யமென்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள், தாங்கள் நினைக்கை மாத்ரமன்றியே ஆபாஸ யுக்திகளை (தவறான வழிமுறைகளைக்) கொண்டு பிறர்க்கும் இதுவே உண்மையென்று உபதேசிக்கிறார்கள். மற்றும் சிலர் ஜீவன் மாத்ரமே உள்ளவன். அவனைக்காட்டிலும் வேறுபட்ட ஈச்வரனென்பவன் கிடையாது. அந்த ஜீவனும் ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற முக்குணங்கள் நிறைந்தவனென்கிறார்கள்.
இவ்வாறு ஏற்படுகிற மத பேதமெல்லாம் உன்னுடைய உண்மையை அறியாமையைப் பற்றி வந்ததேயன்றி, வேறன்று. உள்ளதும், இல்லாததுமாகிய சேதனா சேதனங்களைக் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), ஜ்ஞானாந்த ஸ்வரூபனுமாகிய (அறிவும் இன்பமும் வடிவானவனான) உன்னை உள்ளபடி அறிவார்களாயின், அந்த அஜ்ஞானமும் (அறியமையும்), அதன் மூலமாய் விளைகிற மதபேதமும், உண்டாகாது.
மனுஷ்யர் வரையிலுமுள்ள ப்ராணிகளின் ஸத்வ, ரஜஸ், தமோமயமான மனம், கார்யம் செய்வது போல் தோற்றிக் கொண்டிருப்பினும், உன்னிடத்தில் கார்யகரமாகாமல் அஸத்ப்ராயமாயிருக்கிறது. (சேதனா சேதன ரூபமான ஜகத்தைச் சரீரமாகவுடைய உன்னை அறியவல்லதாகிறதில்லை). தன்னுடைய உபாஸனமாகிற (த்யானமாகிற) யோகத்தினால், பரிசுத்தமான மனமுடைய பெரியோர்களோவென்றால், ஜகத்தையெல்லாம் பரமாத்மாவாகவே அறிகின்றார்கள். (ஸூக்ஷ்ம சேதனா சேதனங்களை (பெயர், உருவம் அற்று, கண்ணுக்குப் புலப்படாமல், நுட்பமான ஜீவர்களையும், ஜடப்பொருட்களையும்) சரீரமாகக் கொண்டு காரணமாயிருக்கும் பரப்ரஹ்மமே, ஸ்தூல சேதனா ரூபமான (பெயர், உருவத்துடன் கூடியதான ஜீவர்களையும், ஜடப்பொருட்களையும் கொண்ட) ஜகத்தாகிற கார்யமாய் விரிந்ததாகையால், இந்த ஜகத்தெல்லாம் அந்த ப்ரஹ்மத்தைக்காட்டிலும் வேறுபட்டது அன்று என்றும், பரப்ரஹ்மத்திற்கு சரீரமாக உள்ளது என்றும் அங்கீகரிக்கிறார்கள்.)
ஸுவர்ணத்தின் பரிணாமமான வளை, முடி முதலியவற்றை இவையெல்லாம் ஸுவர்ணமேயென்று நினைத்து எடுத்துக் கொள்வார்களன்றி, துறக்கமாட்டார்களல்லவா? அவ்வாறே பரமபுருஷன் தன்னால் படைக்கப்பட்ட இந்த ஜகத்திற்கு அந்தராத்மாவாய் அமைந்திருக்கிறானாகையால், இந்த ஜகத்தெல்லாம் உபாஸ்யனான பரமாத்மாவின் சரீரம் என்றே நியமிக்கிறார்கள். எவர்கள் உன்னை உபாஸிக்கிறார்களோ, அவர்கள் தான் ம்ருத்யுக்களைப் (மரணத்தைப்) பொருட்படுத்தாமல், அதன் தலையைக் காலால் மிதிக்கின்றார்கள். (ம்ருத்யுவென்று கூறப்படுகிற ஸம்ஸாரத்தினின்று விடுபடுகிறார்கள்). நீ ஸர்வாந்தராத்மா என்பதை அறியாத மூடர்களைச் சாஸ்த்ரமாகிற நல்ல உபதேசத்தினால் திருத்தி, கொழுத்துத் திரியும் பசுக்களை மூக்கணாங்கயிறு முதலியவற்றால் அடக்கிச் சிக்ஷிப்பது போல, நல்வழியில் நடத்துகின்றாய்.
சாஸ்த்ரங்களை ஆராய்ந்து நீ இத்தகையனென்று அறிவார்களாயின், அவர்களும் க்ரமமாக உன்னை உபாஸித்து, ஸம்ஸாரத்தினின்று விடுபடுகிறார்கள். சாஸ்த்ரங்களை ஆராய்ந்து அறியும் திறமையற்ற மூடர்களும், உன்னிடத்தில் வைமுக்யம் (எதிர்ப்பு) இல்லாது இருப்பார்களாயின், உன்னிடத்தில் மிகுந்த நட்புடைய பெரியோர்கள் அவர்களைப் புனிதம் செய்கிறார்கள். (சாஸ்த்ரத்தினால் உன்னை அறிந்து உபாஸிக்க வல்லரல்லாத மூடர்களும், உன்னடியார்களைப் பணிந்து வருவார்களாயின், இந்த ஸம்ஸாரத்தினின்று அனாயாஸமாக விடுபடுவார்கள்).
நீ ஜகத் ஸ்ருஷ்டி (உலகைப் படைப்பது) முதலியவற்றை எல்லாம் ஸங்கல்ப மாத்ரத்தினால் நடத்தும் தன்மையனாகையால், உன்னைப் போல் சீக்ரமாகக் கார்யம் செய்பவன் ஒருவனும் இல்லை. நீ சக்ஷஸ்ஸு (கண்) முதலிய கரணங்களை எதிர்பாராமலே எல்லாவற்றையும் ஸ்வயமாகவே ஸாக்ஷாத்கரிக்கும் திறமையுடையவன். ஸ்வதந்த்ரன் (தன் இச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவன்); (கர்மவச்யனாகாமல், கர்ம வச்யரான ஜீவாத்மாக்களைத் தூண்டும் தன்மையன்); நிமித்த காரணம் (மண் குடத்திற்கு குயவன் போல் efficient cause), உபாதான காரணம் மண் குடத்திற்கு மண் போல் material cause), முதலிய ஸமஸ்த காரணங்களுக்கும் அவற்றின் சக்திகளையும் நியமிப்பவன். ப்ரக்ருதிக்குப் பரதந்த்ரர்களான (உட்பட்டவர்களான) வாயு, சூர்யன், அக்னி, இந்த்ரன் முதலிய தேவதைகளும், ப்ரஜாபதிகளும், எவரெவர் எந்தெந்த வ்யாபாரங்களில் அதிகரித்திருக்கிறார்களோ அவரவர் அந்தந்த வ்யாபாரங்கள் உன்னிடத்தினின்று பயந்து, தவறாமல் நடத்திக்கொண்டு, குறு நிலங்களைப் பாதுகாக்கும் சிற்றரசர்கள், ஸார்வபௌமனான பேரரசனுக்குக் கப்பம் கொடுப்பது போல, உனக்குப் பூஜை செய்கின்றார்கள். மற்றும், அவர்கள் உன்னால் கொடுக்கப்பட்ட போகங்களை அனுபவிக்கின்றார்கள்;
ஸ்தாவர (அசையாதவை) ஜங்கம (அசைபவை) ரூபமான ஸமஸ்த ப்ராணிகளும், ப்ரக்ருதியின் கார்யமும் துக்கத்திற்கு நிமித்தமுமாகிய சரீரங்களை உடையவர்களாயிருக்கின்றார்கள். (அவர்களுக்கு அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தை ஒரு காலும் விடமுடிகிறதில்லை). இப்படியிருக்கும் ப்ராணிகளில் எவரேனும் ஒருகால் அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று விடுபடுவார்களாயின், அது உன் கடாக்ஷத்தினாலன்றி, வேறு காரணத்தினாலன்று. ஹேய (தீய) குணங்கள் சிறிதும் தீண்டப்பெறாமல், அவற்றினின்று நன்றாக விடுபட்டவனே! மன இரக்கமுடையவர்களில் உன்னைக் காட்டிலும் மேற்பட்டவன் எவனும் கிடையாது. இவ்வாறு பரம காருணிகனாகிய உனக்கு, ஒருவன் கருணைக்கு விஷயமானவன். மற்றொருவன் கருணைக்கு விஷயமாகாதவன் என்பது கிடையாது. ஸமஸ்த ஆத்மாக்களும் உனக்குச் சரீரமாகையால், உனக்கு ரக்ஷிக்கத்தகாதவன் எவனுமே கிடையாது. ஆகையால், நீ ஸர்வ ரக்ஷகன். உனக்கு வைஷம்யம் (வேண்டியவன், வேண்டாதவன் என்கிற பாகுபாடு) முதலிய ஹேய (தீய) குணங்கள் உண்டென்று சங்கிக்க இடமே இல்லை.
ஆனால், ப்ரக்ருதி ஸம்பந்தம் எல்லோர்க்கும் துல்யமாயிருக்க (ஸமமாயிருக்க), அவர்களில் சிலரை அதினின்று விடுவித்து, சிலரை விடுவியாதொழிவது வைஷம்யம் (ஓரவஞ்சனை) ஆகாதோ என்றால், ஏதேனுமொரு வியாஜ மாத்ரத்தை (தன் திருவடிகளில் சரணாகதி செய்தல் என்னும் சிறு செயலை) அவலம்பித்து (பற்றி) சிலரை விடுவிக்கிறாயாகையால், அது வைஷம்யம் (ஓரவஞ்சனை) ஆகாது. ஆகாயம் எங்கும் நிறைந்திருப்பினும், அவனவற்றின் சிறுமை, பெருமை முதலிய விகாரங்கள் தீண்டப் பெறாதிருப்பது போல், நீ ஹேய (தீய) குணங்கள் எவையும் தீண்டப் பெறாதவன். நீ எங்கும் வ்யாபித்திருப்பினும், அவற்றின் தோஷங்கள் தீண்டப் பெறாமையால், அவற்றில் இல்லாது போலவே இருக்கின்றாய்.
உனக்கு விளையாட வேண்டுமென்னும் விருப்பம் எப்பொழுது உண்டாகின்றதோ, அப்பொழுது ப்ரக்ருதி (ஜடப்பொருளான மூலப்ரக்ருதி) புருஷர்களைக் (ஜீவாத்மாக்கள்) காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) உன் ஸங்கல்பத்தினால் ப்ரக்ருதியிலிருந்து உண்டானவைகளும், தேஹ (உடல்), புத்தி, இந்திரியாதிகளுடன், ஜங்கம (அசைபவை) ஸ்தாவர (அசையாதவை) ரூபமான ஸமஸ்த ப்ராணிகளும் கூடுகின்றன.
நீயோ என்றால் அந்த ப்ரக்ருதியினின்று என்றும் நன்றாக விடுபட்டவன். ஜீவாத்மாக்களோ என்றால், ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால், ஸர்வ ஜ்ஞத்வம் (எல்லாவற்றையும் அறிதல்), ஸர்வ சக்தித்வம் (எல்லா திறமைகளும் கூடி இருத்தல்), ஸத்ய ஸங்கல்பத்வம் (நினைத்ததை நடத்தி முடித்தல்) முதலிய குணங்கள் இல்லாமல், ஹேய (தீய) குணங்கள் பலவும் அமைந்திருக்கையால், குடம் முதலியவற்றைப் படைக்க வேண்டுமென்றாலும், ஸங்கல்ப மாத்ரத்தினால் படைக்கவல்லராகிறதில்லை. நீ எல்லோர்க்கும் மேற்பட்டவனாகையால், உன்னை மேற்பார்வையிடுகிறவன் ஒருவனும் இல்லை. நீயே பரமகாரணன் (முதல் காரணம்). ஆகையால், உனக்குக் கார்யமாகாத வஸ்துவாவது, சரீரமாகாத வஸ்துவாவது, எதுவுமே இல்லை.
நீ ஸர்வாந்த்ராத்மாவாய் ஸர்வத்தையும் சரீரமாகக் கொண்டிருப்பினும், எங்கும் நிறைந்த ஆகாயம் அவ்வவற்றின் விகாரங்கள் (மாற்றங்கள்) தீண்டப் பெறாதிருப்பது போல், அவ்வவற்றின் ஹேய (தீய) குணங்கள் எவையும் திண்டப் பெறாதிருக்கின்றாய். என்றும் அழியாமல் நிலை நின்றிருப்பவனே! ஜீவாத்மாக்கள் கணக்கற்றவர்கள், என்றும் அழியாதவர்கள்; மற்றும், அணுஸ்வரூபர்கள்.
(ஜீவர்களை சிலர் விபு ஸ்வரூபர்கள் (எங்கும் நிறைந்து இருப்பவர்கள்) என்று சொல்லுகிறார்கள். அப்படியாயின், ஆத்மாக்கள் அனைவரும் அத்தன்மையில் துல்யர்கள் (ஸமம்) ஆகையால் பரமாத்மாவாலாவது தங்களுக்குள் ஒரு ஜீவாத்மாவாலாவது நியமிக்கப்படுகை கூடாது. மற்றும், வேதங்களில் ஆத்மாக்கள் சரீரங்களினின்று கிளம்புவதும், போவதும், வருவதுமாயிருக்கிறார்களென்று சொல்லுகிற நியமங்கள் சேராது. ஆகையால் ஜீவாத்மாக்கள் அணு ஸ்வரூபர்களே).
இந்த ஜகத்தெல்லாம் பரமாத்மாவால் வ்யாபிக்கப்பட்டுத் தன்மயமாகவே இருக்கின்றது. அப்பரமாத்மா இந்த ஜகத்தை எப்பொழுதும் விடாமல் உள்ளே இருந்து நியமித்துக்கொண்டிருக்கிறான். இவ்வாறு ஏற்பட்டிருக்கிற இவ்வுண்மையை அறியாதவர்கள் சொல்லும் மதமெல்லாம் துஷ்டமாகையாலே (தவறானவை என்பதால்) ப்ராமாணிகர்கள் (உண்மை நிலையை அறிந்தவர்கள்) விரும்ப மாட்டார்கள். இவ்வுண்மையை அறிந்த ப்ராமாணிகர்கள் விரும்பாத மதமெல்லாம் ப்ரமாண (ஒப்புக்கொள்ளப்பட்ட வேதம், இதிஹாஸ, புராண, ஸ்ம்ருதிகளாகிற ஆதாரங்களுக்கு) விருத்தமாகையாலே (எதிர்தட்டானதாலே) ஆதரிக்கத் தக்கதன்று.
ப்ரக்ருதி, புருஷர்கள், நித்யர்களாகையாலே, அவர்களுக்குப் பிறவியென்பது கூடாது. ஆயினும், முன்பே இருக்கின்ற ஜலத் துளிகள் காற்றினால் தூண்டப்பட்டு ஒன்றோடொன்று சேர்ந்து, நீர்க் குமிழி உண்டானது போல, கர்ம (முன் வினை) அடியாக ஏற்பட்ட ப்ரக்ருதி, புருஷர்களின் ஸம்பந்தத்தினால் பற்பல நாம ரூபங்களோடு கூடின பலவகை ப்ராணிகள், ஆதாரமாகிய உன்னிடத்தில் உண்டாகின்றன. மீளவும் ப்ரளய தசையில் நாம ரூபங்களை விட்டு, நதிகள் ஸமுத்ரத்தில் மறைவது போலவும், தேனில் மற்ற மகரந்தங்களெல்லாம் மறைவது போலவும், பரமாத்மாவான உன்னிடத்தில் மறைகின்றன.
தெளிந்த மதியுடைய பெரியோர்கள், இவ்வுலகத்திலுள்ள மனுஷ்யர்களுக்கு உன் மாயையால் ஏற்பட்ட தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்தராத்மாபிமானம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய ப்ரமமே (மனக்கலக்கமே) மேன்மேலும் ஸம்ஸாரம் தொடர்ந்து வருவதற்குக் காரணமென்று நிச்சயித்து, உன்னிடத்தில் மிகவும் பக்தியை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள். உன்னைப் பணிகிறவர்களுக்கு ஸம்ஸார பயம் (இவ்வுலகியல் வாழ்வாகிற துக்கத்தினால் ஏற்படும் பயம்) எப்படி உண்டாகும்? சீதம் (குளிர்), உஷ்ணம் (கோடை), வர்ஷம் (மழை) என்கிற மூன்று காலங்களாகிற மூன்று நேமிகளை (சக்கரங்களை) உடையதும், உன்னுடைய ப்ரூபங்க ரூபமுமாகிய (ப்ரூபங்கம் - புருவ நெரிப்பு. புருவநெரிப்பு மாத்ரத்தினால் நடப்பது பற்றி அவ்வாறு புருவநெரிப்பென்றே காலத்தை வழங்குகிறார்கள்.) ஸம்வத்ஸராத்மகமான (ஆண்டு, வருடம் என்கிற கணக்கை உடைய) காலசக்ரம் உன் பாதார விந்தங்களையே உபாய உபேயமாக (அடைவதற்கு வழியாகவும், அடையப்படும் பொருளாகவும்) பற்றாதவர்களுக்கு ஸம்ஸார பயத்தை (இவ்வுலகியல் வாழ்வாகிற துக்கத்தினால் ஏற்படும் பயத்தை) விளைக்குமே அன்றி, அதையே உபாய உபேயமாகப் பற்றினவர்களுக்கு, அந்த பயத்தை விளைவிக்காது.
அதி சஞ்சலமாயிருப்பதும் (நிலையற்றிருப்பதும்), இந்த்ரியங்களையும், ப்ராணன்களையும் ஜயித்த மஹாதீரர்களாலும் அடக்க முடியாததுமாகிய மனமாகிற குதிரையை, அடக்குவதற்கு ஆசார்யனுடைய பாதார விந்தங்களை ஒழிய வேறு உபாயங்களில் இழிந்து வருந்தி, யத்னிக்கிறவர்கள் (முயற்சி செய்பவர்கள்) – கர்ணதாரன் இல்லாத (கர்ணதாரன் - ஓடம் நடத்துகிறவன்) ஓடத்தில் ஏறின வர்த்தகர்கள் போலப் பற்பல வ்யஸனங்களால் (துக்கங்களால்) வ்யாகுலப்பட்டு (வருந்தி), இந்த ஸம்ஸார ஸாகரத்தில் அழுந்துவார்களன்றிக் கரையேறமாட்டார்கள்.
மனுஷ்யர்களுக்குள் எவனேனும் உன்னைப் பணிவானாயின், அவனுக்கு ஸகலவித ஸுகஸ்வரூபனும் (ஆனந்தமே வடிவானவனும்), அந்தந்த ஸுகங்களைக் கொடுப்பவனும், ப்ரியதமனுமாகிய (மிகவும் விரும்பப்படக்கூடியவனுமாகிய) நீ இருக்கையில், பந்து, பிள்ளை, தேஹம், மனைவி, பணம், வீடு, பூமி, ப்ராணன், வாஹனம் இவைகளால் என்ன ஸுகம் ஆகவேண்டும்? ஒரு ஸுகமும் இல்லை.
இவ்வாறு நிரதிசய புருஷார்த்த ரூபமான (இதற்கு மேல் அடையப்பட வேண்டியது ஒன்றும் இல்லாத) உன் ஸ்வரூபத்தை அறியாமல் ஸுகத்திற்காக ஆணும் பெண்ணுமாய்க் கலந்திருக்கின்ற மனிதர்களுக்கு, ஆத்ம ஸ்வரூபம், ப்ரக்ருதி ஸம்பந்தத்தினால் மறைக்கப்பட்டு, தனக்கு அஸாதாரமான ஜ்ஞான, ஐச்வர்யாதி குணங்களும் தடைபட்டு, அஸத் ப்ராயமாய் (இருப்பே அற்றவன் போல்) இருக்கையில் அர்த்த காமங்களில் எதுதான் ஸுகத்தை விளைக்கும்? எதுவும் ஸுகத்தை விளைக்காது.
நித்ய ஸுகஸ்வரூபனும் (எப்பொழுதுமே இன்ப வடிவானவனும்), அந்தராத்மாவுமாகிய உன்னிடத்தில் ஒரு காலாயினும் மனம் செலுத்துவார்களாயின், அவர்கள் ஆத்மாக்களின் ஜ்ஞான வைராக்யாதி ரூபமான ஸாரத்தைப் பறிப்பதாகிய இல்லற வாழ்க்கையை மீளவும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறிந்தவர்களும், தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்தராத்மாபிமானம் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலிய மதமற்றவர்களும், எப்பொழுதும் உன் பாதார விந்தங்களையே மனத்தில் தரித்துக்கொண்டிருப்பவர்களும், பாபங்களை எல்லாம் போக்கவல்ல ஸ்ரீபாத தீர்த்தமுடையவர்களுமாகிய அம்மஹானுபாவர்கள், பூமியிலுள்ள பற்பல வகைப்பட்ட புண்ய தீர்த்தங்களையும், புண்ய க்ஷேத்ரங்களையும் புனிதம் செய்யும் பொருட்டு, ஆங்காங்கு திரிந்து கொண்டிருப்பார்கள்.
“பரமார்த்தமாகவே உள்ளதாகிய பரப்ரஹ்மத்தினின்று உண்டான இந்த ப்ரபஞ்சம் முழுவதும் பரமார்த்தமாக உள்ளதே” என்பது யுக்தமன்று (ஸரியன்று). ஏனென்றால், அது யுக்திக்குப் பொருந்தாது (காரணங்களைக் கொண்டு நிரூபிக்க முடியாதது).
எந்த வஸ்து எதினிடத்தினின்று உண்டாயிற்றோ, அந்த வஸ்து அதைப்போலவே இருக்கும். மண்ணுருண்டையினின்று உண்டான குடம், மண்ணாகவேயிருக்கின்றது. ஸ்வர்ணத்தினின்றுண்டான முடி, முதலிய ஆபரணம், ஸ்வர்ணமாகவே இருக்கிறது. ஆகையால், கார்ய காரணங்களிரண்டும் துல்யமாயிருக்க வேண்டும். ஆயினும், சேதனனான புருஷனிடத்தினின்று மயிர், பல், நகம், முதலிய அசேதனங்களும், அசேதனமான (ஜடப்பொருளான) கோமயத்தினின்று (சாணத்திலிருந்து) தேள் முதலிய சேதனங்களும் உண்டாகக் காண்கையால், கார்ய காரணங்கள் துல்யமாயிருக்க வேண்டுமென்கிற நியதியில்லை. ஸத்யமான (உண்மையான) ஸ்வப்னத்தினின்று (கனவிலிருந்து) அஸத்யமான (இல்லாதவையான) யானை, குதிரை முதலியவை உண்டாகக் காண்கையாலும், ஸத்யமான (உண்மையான) முத்துச் சிப்பியினின்று அஸத்யமான (இல்லாததான) வெள்ளி உண்டாகக் காண்கையாலும், முன்னமே ஸித்தமாயிருக்கும் வஸ்து உண்டாக வேண்டியது வீணாகையாலும், காரணத்தைப் போல் கார்யமும் ஸித்தமாயிருக்க வேண்டியதில்லை. ஆகையால், கார்யம் அஸத்யமே. இப்படி “ஸத்யமான பரப்ரஹ்மத்தினின்றுண்டான ப்ரபஞ்சம் அஸத்யமே” என்று சிலர் வாதம் செய்கிறார்கள்.
இந்த வாதம் ஸரியல்ல. கார்ய காரணங்கள் துல்யமாகவே இருக்குமென்கிற நியதிக்கு எங்கும் மாறுபாடில்லை. புருஷனிடத்தினின்று மயிர் முதலிய அசேதனங்கள் உண்டாகின்றனவே என்றால், அங்கும் அசேதன (ஜடப்பொருளின்) அம்சமே காரணமன்றி, சேதனன் (ஜீவன்) காரணனன்று.
ஸ்வப்னத்தில் (கனவில்) உண்டான யானை, குதிரை முதலியனவும், முத்துச் சிப்பியிலுண்டாகிற வெள்ளியும், பொய்யல்லவா என்றால், எங்கு பொய்யாகிறது? எங்கும் பொய்யில்லை. ஸ்வப்னத்தில் (கனவில்) காண்கிற யானை முதலியவைகளும், சேதனர்களின் கர்மானுகுணமாக அவ்வவர் மாத்ரமே அனுபவிக்கும்படி ஈச்வரனால் படைக்கப்படுகின்றனவாகையால், அவை உண்மையேயன்றிப் பொய்யல்ல. பஞ்சீகரணத்தின் {படைப்பின் துவக்கத்தில் ஐந்து மஹாபூதங்கள் பகவானால் படைக்கப்பட்டன; இது மொத்தமான படைப்பு எனப்படும். இந்த மொத்தமான மஹாபூதங்களைக் கொண்டு சரீரம், மற்ற உலகில் உள்ள பொருட்களை (தனித்தனியான படைப்பு) படைக்க முடியவில்லை. எனவே, பகவான் ஐந்து பூதங்களின் கலவையைச் செய்தார். ஆகாயத்தின் ½ பங்குடன் மற்ற 4 பூதங்கள் ஒவ்வொன்றும் 1/8 பங்கு (1/8 வாயு, 1/8 நெருப்பு, 1/8 நீர், 1/8 பூமி) கலந்து புதிய பஞ்சீகரணம் செய்யப்பட்ட ஆகாசத்தை உண்டாக்கினார். இது போன்றே மற்ற பூதங்களின் கலவையையும் உருவாக்கினார். இதன்படி, ஒவ்வொரு பூதமும் தான் ½ பங்கும் மற்ற 4 பூதங்கள் ஒவ்வொன்றும் 1/8 பங்கும் சேர்ந்து இருக்கும். இதுவே பஞ்சீகரணம் எனப்படும்.} உண்மையை ஆராய்ந்தால், எல்லாவற்றிலும் எல்லாம் அமைந்திருப்பது உண்மையே என்று நிச்சயிக்கலாம். ஆகையால், முத்துச் சிப்பியில் வெள்ளியின் அம்சமும் கலந்திருக்கையால், அங்கு வெள்ளி இருப்பதாகத் தோற்றுவது உண்மையேயன்றி, அதுவும் பொய்யல்ல.
முன்னமே ஸித்தமாயிருக்கும் வஸ்து, மீளவும் உண்டாவது வீணென்பதுவும் ஸரியன்று. முன்பு மண்ணுருண்டையாயிருந்தது, பின்பு குடமாயிருக்கிறது. குடமாயிருக்கும் அவஸ்தை (நிலை) முன்பில்லையாகையால், அந்நிலைமையோடு கூடின வஸ்து உண்டாயிற்றென்பது எப்படி வீணாகும்? முன்பு ஒரு அவஸ்தையோடு இருந்தவன் மற்றொரு அவஸ்தையுடன் தோற்றுவது ஸபலமே (பயனுடையதே). ஒரு மண்ணுருண்டையே குடம், மடக்கு முதலிய பல அவஸ்தைகள் (நிலைகள்) அடைகிறதாகையாலும், “குடத்தினால் ஜலம் கொண்டுவா” என்னும் இவை முதலிய வ்யவஹாரங்களுக்காகவும் ஜலம் கொண்டு வருவது முதலிய கார்யங்களுக்காகவும், அந்த நானாவித அவஸ்தா (நிலையை) ப்ராப்தி (அடைவது) இஷ்டமாகையாலும், உத்பத்தியென்பது ஸபலமே (பயனுள்ளதே).
குணங்களை நிரூபிக்க முயன்ற வேத வாக்கு, ஒரு வாக்யத்திற்குப் பலவாறு பொருள் தோன்றும்படி செய்து, அனாதி பாப வாஸனையால் கலங்கின மதியுடைய மூடர்களுக்கு, அந்த பரம்பரையாக (ஒரு குருடன் மற்றொரு குருடனுக்கு வழி காட்டுவது போல்) ப்ரமத்தை விளைவிக்கின்றது. (ஒருவன் மதிகெட்டு முதலில் ஒருவிதமாகப் பிதற்றினால், பல மதிகேடர்கள் அவ்வாறே அவன் பிதற்றினதை ப்ரமாணமாகக் கொண்டு ப்ரமித்து நடத்துகிறார்கள்).
“இந்த ஜகத்து ஸ்ருஷ்டிக்கு (படைப்பிற்கு) முன்பு இல்லை. ப்ரளயத்திற்குப் பின்பும் இருக்கப் போகிறதில்லை. ஆகையால், ஆதியந்தங்களில் இந்த ப்ரபஞ்சம் இல்லாதது போல, இடையிலும் இது ஏகரஸனான (தனியே நின்று அனுபவிப்பவனான) உன்னிடத்தில் பொய்யாகவே இருப்பது போல் தோற்றுகிறது” என்றும்;
“மண்ணுருண்டை முதலிய காரண வஸ்துக்களே குடம் முதலிய கார்ய வஸ்துக்களாய் நிரூபிக்கப்படுகின்றன. அந்தக் குடம் முதலியவையெல்லாம் மண்ணேயன்றி, வேறன்று. பேர் மாத்ரம் வேறுபட்டிருக்கிறது. ஆகையால், காரணமான மண் முதலியவையே உண்மையன்றி, கார்யமான குடம் முதலியவை அஸத்யங்களே (உண்மையில் இல்லாதவை)” என்றும்;
அவ்வாறே “ப்ரஹ்மத்தின் கார்யமான ஆகாசம் முதலியவற்றிற்கு நாம மாத்ரமே ஒழிய, அவை உண்மையல்ல” என்றும்
அறிவு கேடர்கள் வீணாகத் தங்கள் மனம் போனபடி கார்யம் பொய்யென்று கற்பித்துச் சொல்லுகிறார்களன்றி, அது உண்மையன்று. அவர்கள் காரியம் பொய்யென்று பேசுவதை ப்ராமாணிகமென்று (ஒப்புக்கொள்ளப்பட்ட வேதம், இதிஹாஸ, புராண, ஸ்ம்ருதிகளாகிற ஆதாரங்களுக்குட்பட்டது என்று) வேதத்தின் பொருளறியாத மூடர்களே அங்கீகரிப்பார்களன்றி, அதன் பொருளறிந்த பெரியோர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள். ஸ்ருஷ்டிக்கு முன்பும், ப்ரளயத்திற்குப் பின்பும், இந்த ப்ரபஞ்சம் இல்லையே என்றால், அப்பொழுதும் அது இல்லாமலே போகிறதில்லை. ஆனால், நாம ரூபங்களுக்கிடமாகாமல் பரம புருஷனிடத்தில் மறைந்திருக்கின்றது. ஆகையால், ப்ரபஞ்சம் உண்மையே அன்றிப் பொய்யன்று.
உன்னைப்போல் ஜீவாத்மாக்களும், நித்யத்வம் (அழிவு இல்லாதிருத்தல்), இயற்கை மாறாதிருக்கை முதலிய குணங்களுடையவராயிருந்தும், அவர்கள் மாத்ரம் உலகியல் வாழ்க்கைக்கு உட்பட்டு வருந்துவதும், நீ அதற்கு உட்படாதிருப்பதும் ஏனென்றால், ஜீவன் உன் மாயையினால் மோஹித்து, ப்ரக்ருதியின் (பகவானின் சக்தியான, ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற முக்குணங்களைக் கொண்ட மூலப்ரக்ருதியின்) பரிணாமமான தேவ, மனுஷ்யாதி சரீரங்களை அடைகிறான்; அப்பால், சப்தாதி விஷயங்களை அனுபவித்துக் கொண்டு, பெருமை சிறுமை முதலிய தேஹ தர்மங்களைத் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டு, தன்னை அந்தத் தேவ, மனுஷ்யாதி தேஹமாகவே அபிமானிக்கிறான் (நினைக்கிறான்); அப்பால், மரணத்தை அடைகிறான். இவ்வாறு ஜன்ம, மரணாதி ஸம்ஸாரத்தை மாறாமல் அனுபவித்துக் கொண்டு வருகையால், ஜ்ஞானம், ஐச்வர்யம் முதலிய தன் மஹிமை எல்லாம் அழியப் பெறுகிறான்.
நீயோ என்றால், ஸர்ப்பம் தோலை விடுவது போல, அந்த ப்ரக்ருதியைத் துறக்கின்றாய். ஆகையால், ஜ்ஞான சக்தி, பல, ஐச்வர்யாதி குணங்கள் அழியப் பெறாமல் விளங்குகின்றாய். ஆனால், ஜீவாத்மாவின் குணங்களைப்போல, உன் குணங்களும் பரிச்சின்னங்களோ (அளவுடையவையோ) என்றால், அப்படியன்று. உன்னுடைய ஐச்வர்யாதி குணங்கள், அளவற்றவை. நீ அபஹதபாப்மத்வம் முதலிய எட்டு குணங்கள் (பாப ஸம்பந்தமே இன்மை, கிழத்தனமின்மை, மரணமின்மை, துன்பமின்மை, பசியின்மை, தாகமின்மை, போகத்திற்குரிய அழிவற்ற பொருட்களை உடைமை, நினைத்ததை முடிக்க வல்லமை) என்றும் அமைந்திருப்பதும், அளவற்றதும், ஸ்வயம் ப்ரகாசமுமாகிய ஸ்வரூபத்தில் இருந்து கொண்டு, பூஜிக்கப்படுகிறாய். மனவூக்கமுடைய முனிவர்களும், மனத்திலுள்ள விருப்பங்களின் வேர்கள் போன்ற வாஸனைகளை அறுக்கமாட்டார்களாயின், நீ அவர்கள் மனத்தில் இருப்பினும், கழுத்தில் தரித்த ரத்னம் போல் அறிய முடியாதவனாகவே இருக்கின்றாய். ரத்னத்தைக் கழுத்தில் தரித்தும், அதை மறப்பார்களாயின், அதை அறியாதாற் போலவே அல்லவா?
ப்ராணன்களின் திருப்தியையும், இந்த்ரியங்களின் திருப்தியையும் விரும்பி, காம வேர்களை அறுக்க முயலாதிருக்கின்ற அம்முனிவர்களுக்கு, இஹலோகத்திலும் (இந்த உலகத்திலும்), பரலோகத்திலும் (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலகங்களிலும்) துக்கமேயன்றி, ஸுகமில்லை. ஏனென்றால், அவர்களுக்கு ஸம்ஸாரம் தீராதாகையால், இங்கும் ஸுகமில்லை. உன் பதவியை அடையமாட்டார்களாகையால், அங்கும் ஸுகமில்லை.
பகவானே! அவரவர்க்கு ஏற்பட்ட தர்மங்களை (நெறிமுறைகளை) உல்லங்கனம் செய்யில் (மீறுகையில்) தண்டிக்கும் தன்மையனான உன்னிடத்தினின்று அவர்களுக்கு இஹ (இந்த), பர (வேறு) லோகங்கள் இரண்டிலும் துக்கமே. உன்னை உள்ளபடி அறிந்தவனோவென்றால், ஸம்ஸாரத்தில் விளைகிற புண்ய, பாப கர்மங்களின் பலனான ஸுக துக்கங்களையாவது, ப்ராணிகள் செய்யும் புகழ், பழிகளையாவது, பொருள் செய்கிறதில்லை. அவனுக்கு நீ தேஹாவஸானத்தில் (சரீர முடிவில்) மோக்ஷம் கொடுக்க ஸித்தமாயிருக்கின்றாய். ஆகையால், பரலோகத்தில் ஸுகமே.
இஹத்திலும் தன் பக்தர்களோடு கலந்து அளவற்ற கல்யாண குணங்களையுடைய நீ, யுகங்கள் தோறும் அவதரித்து, செய்யும் கதைகளாகிற அம்ருதத்தை தினந்தோறும் செவிகளால் பானம் செய்து, உன்னை மனத்தில் தரித்துக் கொண்டிருக்கிறானாகையால் ஸுகமே. ஆகையால், அவன் ஸுக துக்கங்களையாவது புகழ், பழிகளையாவது, அறிகிறதில்லை.
ஸ்வர்க்காதி லோகங்களுக்குப் பதிகளாகிய இந்த்ராதிகளும், உன் ஸ்வருப ஸ்வபாவங்களின் கரையை அறியவில்லை. மற்ற மனுஷ்யாதிகள், அறிய மாட்டார்களென்பதைப் பற்றி சொல்ல வேண்டுமோ? ஆயிரம் சொல்லியென்? நீயுங்கூட அதன் கரையை அறியமாட்டாய். ஏனென்றால், உன் ஸ்வரூப ஸ்வபாவங்கள் அளவற்றவை. (ஆயினும், இதனால் உனக்கு ஸர்வஜ்ஞத்வம் (எல்லாவற்றையும் அறியும் தன்மை) குறையாது. உள்ளதை உள்ளபடி அறிகையன்றோ ஸர்வஜ்ஞத்வமாவது. அளவற்றதை அளவற்றது என்று அறிகை, அறிவுக்கு அடையாளமேயன்றி, வேறன்று).
உன்னிடத்தில் ஒவ்வொரு ரோம கூபத்திலும் (மயிர்க்காலிலும்) ஏழு ஆவரணங்களோடு (வேலி போன்ற சுற்றுக்களுடன்) கூடின ப்ரஹ்மாண்டங்களின் ஸமூஹங்கள் ஆகாயத்தில் பஷிகளுடன் (பறவைகளுடன்) தூள்கள் ஸஞ்சரிப்பது போல ஸஞ்சரிக்கின்றன. ஆகையால், வேதங்கள், ப்ரக்ருதி, புருஷர்களைக்காட்டிலும் விலக்ஷணனென்று (வேறானவன் என்று) உன்னை அறிவித்துக் கொண்டு உன்னிடத்திலேயே முடிந்து, பயன் பெறுகின்றனவன்றி, உன் ஸ்வரூப ஸ்வபாவாதிகளை முழுவதும் அறிவிக்க வல்லவையல்ல.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- இவ்வாறு சுருதிகள் சொன்னதாக ஸனந்தனாதிகள் சொல்ல, ப்ரஹ்ம புத்ரர்களான மரீசி முதலிய ஸித்தர்கள், தங்கள் கேள்வியின் உத்தரமாகிய (பதிலாகிய) அதைக் கேட்டு, பரமாத்மாவின் ப்ராகாரத்தை (இயற்கைத் தன்மை, திருமேனி, குணங்கள், ஆளுமை முதலியவற்றை) உள்ளபடி அறிந்து, ஸனந்தரைப் பூஜித்தார்கள்.
மஹானுபாவர்களும், ஆகாயத்தில் திரியும் தன்மையர்களுமாகிய மரீசி முதலிய அப்பெரியோர்கள், இவ்வாறு ஸமஸ்த வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துக்கள் ஆகிய இவற்றின் ஸாரமான கருத்தைத் தொகுத்தெடுத்தார்கள். ப்ரஹ்ம புத்ரனே! நீயும் ப்ராணிகளின் காமங்களாகிற விதைகளையெல்லாம் முளைக்கவொட்டாமல் அறுப்பதும், பரமாத்மாவின் உண்மையை அறிவிப்பதுமாகிய இந்த ஸ்ருதி கீதையை மனத்தில் தரித்து, இஷ்டப்படி பூமியில் திரிவாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! ஜிதேந்திரியர்களின் வாதத்தை அனுஷ்டிப்பவராகிய நாரதர், ஸர்வலோக குருவாகிய பத்ரிநாராயணன் சொன்னதை மன ஊக்கத்துடன் தெரிந்து கொண்டு, ஸம்சயம் (ஸந்தேஹம்) தீர்ந்தமையால் நிறைந்த மனமுடையவராகக் கேட்டதைத் தரித்துக்கொண்டு, அந்தப் பகவானைக் குறித்து இவ்வாறுமொழிந்தார்.
ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- ஸமஸ்த லோகங்களுக்கும் ஸுகத்தை விளைவிப்பவனும், கர்மவச்யமல்லாத (புண்ய பாப கர்மங்களுக்கு உட்படாத) சுத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹமுடையவனும் (பரிசுத்தமான புகழுடையவனும்), ஸமஸ்த பூதங்களுக்கும் மோக்ஷம் உண்டாகும்படி நிர்மலமான வித்யைகளைத் தரித்துக்கொண்டிருப்பவனும், ஷாட்குண்ய பூர்ணனுமாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) அத்தகைய உனக்கு, நமஸ்காரம். (நீ வேண்டிய வித்யைகளை உபதேசித்து ஸமஸ்த பூதங்களுக்கும் மோக்ஷ ஸுகத்தை விளைக்கின்றாய். உனக்கு நமஸ்காரம்).
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நாரதர் இவ்வாறு ஆதி ரிஷியாகிய நாராயணனையும், நிர்மலமான மதியுடைய அவன் சிஷ்யர்களையும் நமஸ்கரித்து, போய் வருகிறேனென்று விடைபெற்றுக் கொண்டு, தானே நேராக என் தந்தையாகிய த்வைபாயனருடைய ஆச்ரமத்திற்கு வந்தார். மஹானுபாவராகிய த்வைபாயனரால் அம்முனிவர் பூஜிக்கப்பட்டு, அவர் அளித்த ஆஸனத்தில் உட்கார்ந்து, அந்த த்வைபாயனருக்கு நாராயணனிடத்தினின்று தான் கேட்டதையெல்லாம் உபதேசித்தார். (அவர் எனக்கு உபதேசித்தார்).
ராஜனே! நீ என்னைக் குறித்து எது வினைவினையோ, அதற்கு உத்தரமாக (பதிலாக) அந்த ச்ருதி கீதையை உனக்குச் சொன்னேன். இதனால் அநிர்த்தேச்யமும் (இன்னது என்று நிச்சயிக்க முடியாததும்), நிர்க்குணமுமாகிய (எந்த குணமும் இல்லாததுமாகிய) ப்ரஹ்மத்தை வேதங்கள் எவ்வாறு நிரூபிக்க முடியுமென்கிற ஸம்சயம் (ஸந்தேஹம்) தீர்ந்து, தீய குணங்கள் எதுவும் தீண்டப்படாத பகவானை அறிந்து மனம் தெளிவு பெறும். இந்த ப்ரபஞ்சத்தினுடைய ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) எவன் தன் ஸங்கல்பத்தினால் நடத்துகிறானோ; ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்கள்), புருஷர்களை (ஜீவாத்மாக்களை) எவன் உள்ளே புகுந்து நியமிக்கிறானோ; மற்றும் எவன் மஹத்து முதல் ப்ருதிவி வரையிலுமுள்ள ஸமஷ்டி தத்வங்களை படைத்து சதுர்முகனென்னும் ஜீவன் மூலமாய் உள் புகுந்து, தேவ மனுஷ்யாதி சரீரங்களைப் படைத்தானோ; பிறகு, அந்த சரீரங்களை எவன் நியமிக்கிறானோ; கர்மவச்யனான (புண்ய, பாப கர்மங்கட்கு உட்பட்டவனான) ஜீவன் எவனைச் சரணம் புகுந்து, கூட்டில் சேர்ந்து உறங்கும் பறவை அதைத் துறந்து போவது போல ப்ரக்ருதியைத் துறந்து, அபஹதபாப்மத்வம் முதலிய எட்டு குணங்கள் (பாப ஸம்பந்தமே இன்மை, கிழத்தனமின்மை, மரணமின்மை, துன்பமின்மை, பசியின்மை, தாகமின்மை, போகத்திற்குரிய அழிவற்ற பொருட்களை உடைமை, நினைத்ததை முடிக்க வல்லமை) விளங்கப் பெறுகிறானோ, அத்தகையனும், ஸம்ஸாரிகளுக்கு மோக்ஷம் கொடுத்துப் பிறவி முதலியவற்றால் விளையும் துக்கத்தைப் போக்குபவனும், எவனைப் பற்றினால் பயமெல்லாம் தீருமோ அத்தகையனும், தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பரமபுருஷனை எப்பொழுதும் த்யானிக்க வேண்டும்.
எண்பத்தேழாவது அத்தியாயம் முற்றிற்று.