ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 302

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து ஆறாவது அத்தியாயம்

(ஸுபத்ராஹரண வ்ருத்தாந்தமும், ஸ்ரீக்ருஷ்ணன் ச்ருததேவனென்னும் ப்ராஹ்மணனையும் ஜனக மஹாராஜனையும் அனுக்ரஹித்தலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்மரிஷீ! எனக்குப் பிதாமஹியும் (அப்பாவின் அம்மா), ராம-க்ருஷ்ணர்களுக்கு உடன் பிறந்தவளுமாகிய ஸுபத்ரையை அர்ஜுனன் மணம் புரிந்த வ்ருத்தாந்தத்தை அறிய விரும்புகிறேன். (அதை மொழிவீராக).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸமர்த்தனாகிய அர்ஜுனன், தீர்த்த யாத்ரைக்காகப் பூமியைச் சுற்றிக் கொண்டு வரும் க்ரமத்தில், ப்ரபாஸ தீர்த்தத்திற்கு வந்து, தனது அம்மான் (மாமா) புதல்வியை ராமன் துர்யோதனனுக்குக் கொடுத்து விவாஹம் செய்விக்கப் போகிறானென்றும், மற்ற வஸுதேவாதிகள் அதற்கு இசையவில்லையென்றும் கேள்விப்பட்டு, அவளைத் தான் பெற விரும்பி, த்ரிதண்டி ஸந்யாஸி வேஷம் (உருவம்) பூண்டு, த்வாரகைக்குச் சென்றான். பிக்ஷு (ஸந்யாஸி) வேஷம் (உருவம்) பூண்ட அவ்வர்ஜுனன், பட்டணத்து ஜனங்களாலும், உண்மையை அறியாத மஹானுபாவனான பலராமனாலும், அடிக்கடி பூஜிக்கப்பட்டுத் தன் கார்யத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு, வர்ஷாகாலம் நான்கு மாதங்களும் அங்கு வஸித்திருந்தான். 

ஒருகால், பலராமன் நான் செய்யும் அதிதி ஸத்காரத்தை (விருந்தோம்பலை) அங்கீகரிக்க வேண்டுமென்று வேண்டி, தன் க்ருஹத்திற்கு அழைத்துக் கொண்டு போய், ச்ரத்தையுடன் பிக்ஷை (பிச்சை, ஸன்யாஸிகளுக்கு அளிக்கப்படும் உணவு பிக்ஷை எனப்படும்) கொண்டு வந்து கொடுக்க, அவ்வர்ஜுனன் புசித்தான். அவன், கொடி போல் நுண்ணிய அங்கமுடையவளும், வீரர்களின் மனத்திற்கு இனியவளுமாகிய, அக்கன்னிகையை அவ்விடத்தில் கண்டு, ப்ரீதியினால் கண்கள் மலரப்பெற்று, புணர வேண்டுமென்னும் விருப்பத்தினால், கலங்கின மனத்தை அவளிடம் வைத்தான். அக்கன்னிகையும், பெண்களின் மனத்திற்கு இனியனாகிய அவ்வர்ஜுனனைக் கண்டு சிரித்து, வெட்கமுற்ற கடைக் கண்ணோக்கமுடையவளும், அவனிடத்தில் வைக்கப்பட்ட ஹ்ருதயமும் கண்களும் உடையவளுமாகி, அவனை விரும்பினாள். 

அர்ஜுனன், அப்பெண்மணியை எப்பொழுதும் த்யானித்துக்கொண்டு, அவளைப் பறித்துக் கொண்டு போக அவகாசம் பெற விரும்பி, மிகவும் வலிய காம பாதையினால் (காதல் கிளர்ச்சியால்) வருந்தி, ராமாதிகளின் ஸம்மானத்தினால் (மரியாதை, மதிப்பினால்) விளையும் ஸுகத்தைச் சிறிதும் அனுபவிக்க முடியாதிருந்தான். இப்படி இருக்கையில், அவ்வர்ஜுனன் தாய், தந்தைகளான தேவகீ வஸுதேவர்களாலும், மஹானுபாவனான ஸ்ரீக்ருஷ்ணனாலும் அனுமதி கொடுக்கப் பெற்று, ஒரு கால் தேவ யாத்ரைக்காக ப்ராகாரத்திற்கு வெளியில் வந்து, ரதத்தின்மேல் இருக்கின்ற அக்கன்னிகையைப் பறித்துக் கொண்டு போனான். அப்பால், அவன் ரதத்தில் நின்று, காண்டீவமென்னும் தனுஸ்ஸை எடுத்து, தன்னைத் தடுக்க வந்த சூரர்களான படர்களை ஓடச் செய்து, தன் பந்துக்களான யாதவர்கள் முறையிட்டுக் கொண்டிருக்கையில், ஸிம்ஹம் தன் பாகத்தைப் பறிப்பது போல், அப்பெண்மணியைப் பறித்துக்கொண்டு போனான். 

பிறகு பலராமன், அர்ஜுனன் ஸந்யாஸி வேஷம் பூண்டு வந்திருந்து ஸுபத்ரையைப் பறித்துக் கொண்டு போனானென்று கேள்விப்பட்டு, பர்வத்தின் பொழுது (அமாவாசை, பவுர்ணமி நாட்களில்) மஹாஸமுத்ரம் கலங்குவது போல் கோபாவேசத்தினால் கலங்கி, ஸ்ரீக்ருஷ்ணனும், நண்பர்களும், பாதங்களைப் பிடித்துக்கொண்டு வேண்ட, கோபம் தணிந்தான். 

பிறகு, அப்பலராமன் ஸந்தோஷமுற்று, மணவாளன் மணப்பெண் இவர்களுக்கு விலையுயர்ந்த அலங்காரம் செய்த யானை, தேர், குதிரை, சிறந்த பணிப்பெண்கள் முதலிய பற்பல பரிசுகளை அனுப்பினான். மணப்பெண், பிள்ளைகளுக்கு பந்துக்களாகிய யாதவர்களும், பாண்டவர்களும், ப்ரீதியினால் முகமலர்த்தி அடைந்தார்கள். மற்றும், ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தன் பக்தர்களிடத்திலுள்ள வாத்ஸல்யத்தைப் பற்றி மற்றொரு வ்ருத்தாந்தம் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நண்பராகிய ச்ருததேவரென்னும் ப்ராஹ்மணர் ஒருவர் இருந்தார். அவர், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் நிர்ஹேதுகமான (எந்த காரணமும் இன்றி) பக்தி அமைந்து, அதனால் நிறைவாளராகி, இந்த்ரியங்களை அடக்கி, எல்லாமறிந்தவரும், எதிலும் மனவிருப்பம் அற்றவருமாயிருந்தார். அவர், விதேஹ தேசத்தில் மிதிலாபுரத்தில் க்ருஹஸ்தாச்ரமத்தைக் கைப்பற்றி, ஜீவனத்திற்காகத் தான் ஒரு ப்ரயத்னமும் (முயற்சியும்) செய்யாமல், தெய்வாதீனமாய்க் கிடைத்த ஆஹாரத்தைக் கொண்டு க்ருஹஸ்தாச்ரமத்திற்கு உரிய தர்மங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவர், தினந்தோறும் தேஹ யாத்ரைக்கு (உயிர் உடலோடு இருக்க) வேண்டியவற்றை மாத்ரம் எதிர்பார்ப்பாரன்றி அதற்குமேல் எதிர்பார்க்க மாட்டார்; அவ்வளவு மாத்ரத்தினால் ஸந்தோஷம் அடைந்து, தன் வர்ணாச்ரமங்களுக்கு உரிய பஞ்ச மஹாயஜ்ஞாதி கர்மங்களை {(ப்ரஹ்ம யஜ்ஞ (வேதம் சொல்லுதல்), பித்ரு யஜ்ஞ (தர்ப்பணம்), தேவ யஜ்ஞ (ஹோமம்), பூத யஜ்ஞ (பறவை, விலங்குகளுக்கு பலியிடுதல்), நர யஜ்ஞ (விருந்தோம்பல்) என்பவை பஞ்சமஹாயஜ்ஞங்கள்} விதிப்படி அனுஷ்டித்துக் கொண்டு வந்தார். 

மன்னவனே! அத்தேசத்தை ஆள்கின்ற பஹுலாச்வனென்னும் ஜனக வம்சத்தரசனும், இந்த ச்ருத்தேவரைப் போலவே இருந்தான். மிதிலாபுரத்தரசனாகிய அந்தப் பஹுலாச்வன் தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்) அற்றவன். இவ்வாறு ச்ருததேவர், பஹுலாச்வன் இவ்விருவரும், தன் பக்தர்களைக் கைவிடாது காக்கும் தன்மையுள்ள ஸ்ரீக்ருஷ்ணனுக்கு மிகவும் அன்பர்களாயிருந்தார்கள். மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் ஸமர்த்தனாகையால், அவர்களுக்கு அருள்புரிய விரும்பி, தாருகன் கொண்டு வந்த ரதத்தின் மேல் ஏறி, ரிஷிகளுடன் விதேஹ தேசத்திற்குப் போனான். 

அப்பொழுது, நாரதர், வாமதேவர், அத்ரி, க்ருஷ்ணத்வைபாயனர், பரசுராமர், அஸிதர், அருணர், நான் (சுகர்), ப்ருஹஸ்பதி, கண்வர், மைத்ரேயர், சயவனர் முதலிய பல ரிஷிகள் ஸ்ரீக்ருஷ்ணனுடன் போனோம். ஆங்காங்குப் பட்டணத்து ஜனங்களும், நாட்டுப் புறத்து ஜனங்களும், மன்னவர்களும், சுக்ரன் முதலிய க்ரஹங்களுடன் உதிக்கின்ற ஸூர்யன்போல் முனிவர்களோடு வருகின்ற அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கைகளில் உபஹாரங்களை ஏந்திக் கொண்டு வந்து, பூஜித்தார்கள். 

மன்னவனே! ஆனர்த்தம், தன்வம், குருஜாங்கலம், வங்கம், மத்ஸ்யம், பஞ்சாலம், குந்தி, மது, கேகயம், கோஸலம், ருணம் முதலிய தேசங்களிலுள்ள புருஷர்களும், பெண்களும், மற்றுமுள்ள ஜனங்களும், அழகிய புன்னகையும், ஸ்னேஹம் நிறைந்த கண்களும் அமைந்து, ரமணீயமான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய முகமாகிற தாமரை மலரிலுள்ள லாவண்யமாகிற (அழகாகிற) மகரந்தத்தை நேத்ரங்களாகிற பாத்ரங்களால் பானம் செய்தார்கள். மூன்று லோகங்களுக்கும் குருவாகிய பகவான், தன்னுடைய காட்சி மாத்ரத்தினால் அஜ்ஞானம் (அறியாமை) தொலையப் பெற்ற அவர்களுக்கு க்ஷேமம் உண்டாகும்படி அவர்களைக் கடைக்கண்ணால் நோக்கி, மிகவும் பரிசுத்தமாயிருப்பதும், திசைகளில் முழுவதும் வியாபித்திருப்பதுமாகிய தன் புகழைத் தேவர்களும், மனுஷ்யர்களும், பாடக் கேட்டுக் கொண்டே, மெல்ல மெல்ல விதேஹ தேசம் போனான். அத்தேசத்தில், பட்டணத்து ஜனங்களும், நாட்டுப் புறத்து ஜனங்களும், ஸ்ரீக்ருஷ்ணனுடைய வரவைக் கேட்டு ஸந்தோஷமுற்று, கைகளில் பரிசுகளை ஏந்திக் கொண்டு, அவனை எதிர் கொண்டார்கள். அவர்கள் உத்தமச்லோகனான (சிறப்புடைய ப்ரஹ்மாதிகளால் புகழப்படுபவனும், சிறந்த புகழுடையவனுமாகிய) அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்டு, ஸந்தோஷத்தினால் முகமும், மனமும் மலர்ந்து, அம்மஹானுபாவனையும் முன்பு கேள்விப்பட்டிருந்த மஹர்ஷிகளையும், அஞ்சலித்த கைகளோடு இணக்கமுற்ற தலைகளால் வணங்கினார்கள். 

மிதிலாபுரத்து அரசனாகிய பஹுலாச்வனும், அத்தேசத்திலுள்ள ச்ருததேவரென்னும் அந்தணரும், ஸ்ரீக்ருஷ்ணன் தங்களை அனுக்ரஹிப்பதை அறிந்து, ப்ரபுவாகிய அப்பகவானுடைய பாதங்களில் விழுந்து தண்டனிட்டார்கள். மைதிலன், ச்ருததேவர் ஆகிய அவ்விருவரும் வணக்கத்துடன் கைகளைக் குவித்து ஸ்ரீக்ருஷ்ணனை ப்ராஹ்மணர்களுடன் தங்கள் க்ருஹத்திற்கு வந்து அதிதிஸத்காரத்தை (விருந்தோம்பலை) அங்கீகரிக்க வேண்டுமென்று ஒரே தடவையில் ப்ரார்த்தித்தார்கள். பகவானும், அதை அங்கீகரித்து இருவர்க்கும் ப்ரியம் செய்ய விரும்பி, அவ்விருவர்க்கும் தெரியாமல் இருவருடைய க்ருஹத்திற்கும் சென்றான். (மைதிலனுக்குத் தெரியாதபடி ச்ருததேவருடைய க்ருஹத்திற்கும், ச்ருததேவர்க்குத் தெரியாதபடி மைதிலனுடைய க்ருஹத்திற்கும், இரண்டு உருவங்களுடன் ஒரே தடவையில் சென்றான். மைதிலன், “க்ருஷ்ணன் ச்ருததேவருடைய க்ருஹத்திற்குப் போகாமல் நம் க்ருஹத்திற்கே வந்தான்” என்று நினைத்தான். “ச்ருததேவர் க்ருஷ்ணன் மைதிலனுடைய க்ருஹத்திற்குப் போகாமல் நம் க்ருஹத்திற்கே வந்தான்” என்று நினைத்தான்). 

ஜனக வம்சத்தரசனும், பெரும் புகழனுமாகிய பஹுலாச்வன் அஸத்துக்களுக்குக் (நல் வழியைப் பின்பற்றாதவர்களுக்குக்) காதால் கேட்கவுங்கூட எட்டாத மஹானுபாவர்களான முனிவர்கள் தன் க்ருஹத்திற்கு வந்திருப்பதைக் கண்டு, அவர்களுக்குச் சிறந்த ஆஸனங்களை வரவழைத்துக் கொடுத்து, அவர்கள் ஸுகமாக உட்கார்ந்திருக்கையில், பக்தியின் மிகுதியால் மனத்தில் ஸந்தோஷம் நிறைந்து, கண்ணும் கண்ணீருமாகி, அம்முனிவர்களை நமஸ்கரித்து, அவரது பாதார விந்தங்களை அலம்பி, உலகங்களையெல்லாம் புனிதம் செய்யவல்ல அந்த ஜலத்தை, தானும் தன் குடும்பமும் சிரஸ்ஸில் தரித்துச் சந்தனம் முதலிய கந்தம், பூமாலை, ஆடை, ஆபரணம், தூபம், தீபம் முதலிய உபசாரங்களாலும், பசு, எருது இவைகளாலும், ஸர்வேச்வர ஸ்வரூபர்களான அம்முனிவர்களைப் பூஜித்தான். மற்றும் அவன், அம்முனிவர்களை அன்னத்தினால் திருப்தி அடையச் செய்து, தன் மடியிலிட்ட பகவானுடைய பாதங்களை மெல்ல மெல்லத் தடவிக்கொண்டு, அனைவரும் ஸந்தோஷம் அடையும்படி இனிய உரையுடன், இவ்வாறு மொழிந்தான்.

பஹுலாச்வன் சொல்லுகிறான்:- ப்ரபூ! நீ ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மா; ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரிப்பவன். ஸ்வயம்ப்ரகாசன். ஆகையால், என்னுடைய அபிப்ராயத்தை அறிந்து, உன் பாதார விந்தங்களை த்யானித்துக் கொண்டிருக்கிற எனக்குத் தர்சனம் கொடுத்தாய். “எவன் மற்றொரு ப்ரயோஜனத்தையும் விரும்பாமல், என்னிடத்தில் நிலைநின்ற பக்தியைச் செய்கிறானோ, எனக்கு அவனைக் காட்டிலும் அனந்தனாவது, ஸ்ரீமஹாலக்ஷ்மியாவது, ப்ரஹ்மதேவனாவது, அன்பிற்கு இடமல்லர்” என்று நீ மொழிந்ததை உறுதி செய்யும் பொருட்டு, எங்கள் கண்ணுக்குப் புலப்பட்டாய். இவ்வாறு அறிந்தவன் உன் பாதார விந்தங்களை விடுவனோ? ப்ரார்த்தித்துப் பெறவேண்டியது மற்றொன்றும் இல்லாதவர்களும், ஜிதேந்திரியர்களுமாகிய முனிவர்களுக்கு, நீ நிரதிசய (இதற்கு மேல் சிறப்பு இல்லாததான) புருஷார்த்த ஸ்வரூபனான உன்னையும் கொடுக்கும் தன்மையன். ஆகையால், உன்னை எவன் விடுவான்? 

இந்த ப்ரக்ருதி மண்டலத்தில், ஜன்ம (பிறவி), ஜரா (கிழத்தனம்), மரணாதி துக்கங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்களுக்கு அந்த ஸம்ஸார தாபத்தைப் போக்கும் பொருட்டு, யதுவம்சத்தில் அவதரித்து, மூன்று லோகங்களின் பாபங்களையும் போக்கவல்ல உன் புகழைப் பரப்பினாய். அத்தகையனும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), உலகங்களுக்கு ஸுகம் விளைப்பவனும், என்றும் எங்கும் தடைபடாத அறிவுடையவனாகையால் பிறர் செய்த நன்றியை அறியும் தன்மையர்களில் சிறந்தவனும், நாராயணனென்னும் ரிஷியாய் அவதரித்து உலகங்களின் க்ஷேமத்திற்காகத் தவம் செய்பவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். (இத்தகைய உனக்கு நாங்கள் எவ்விதத்திலும் ப்ரதியுபகாரம் செய்ய வல்லரல்லோமாகையால், உனக்கு வெறுமனே நமஸ்காரம் செய்கிறோம்). எங்கும் நிறைந்தவனே! நீ இவ்வந்தணர்களுடன் எங்கள் க்ருஹத்தில் சில நாள் வஸித்திருந்து, பாத தூளியால் இந்த நிமி குலத்தைப் புனிதம் செய்வாயாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- உலகங்களைப் புனிதமாக்கி வாழச் செய்பவனும், மஹானுபாவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு மன்னவனால் வேண்டப்பட்டு, மிதிலாபுரத்திலுள்ள புருஷர்களுக்கும், பெண்களுக்கும், மங்களத்தை விளைத்துக் கொண்டு, வசித்திருந்தான். ச்ருததேவரும், ஜனகனைப் போலவே தன் க்ருஹத்திற்கு வந்த ஸ்ரீக்ருஷ்ணனையும், முனிவர்களையும் வணங்கி, ஸந்தோஷம் அடைந்து, அந்த ஸந்தோஷத்தின் மிகுதியால் வெள்ளை வீசிக் கூத்தாடினார். அவ்வந்தணர், இந்த ஸ்ரீக்ருஷ்ணன் முதலியவர்களைப் புல்லால் மிடைந்த ஆஸனங்களிலும், தர்ப்பாஸனம் முதலிய வ்ரதிகள் உட்காரும் ஆஸனங்களிலும் உட்கார வைத்து, ஸ்வாகதம் (வரவேற்பு) விசாரித்து, பாதங்களில் விழுந்து நமஸ்கரித்து, தன் பார்யையும் (மனைவியும்) தாமுமாய் ஸந்தோஷமுற்று, அவர்களுடைய பாதார விந்தங்களை அலம்பினார். 

மஹா பாக்யமுடையவரும், மிகுந்த மதி அமைந்தவருமாகிய அவ்வந்தணர், அந்த ஜலத்தினால் தம்மையும், தம் க்ருஹத்தையும் தாமே சுத்தி செய்து, தம் மனோரதங்களெல்லாம் நிறைவேறப் பெற்று, மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார். பழங்கள், கந்தம், தூபம், தீபம் முதலியவை, வெட்டிவேர் முதலிய பரிமளங்கள் சேர்க்க, நிர்மலமும் அம்ருதம் போன்றதுமாகிய ஜலம், கஸ்தூரி, துளஸி, தர்ப்பம், தாமரைமலர், அனாயாஸமாகக் (எளிதாகக்) கிடைக்கக்கூடிய மற்றுமுள்ள பூஜா த்ரவ்யங்கள், ஸத்வத்தை வளர்க்கவல்ல அன்னம் இவைகளால், அவர் அவர்களை ஆராதித்தார். 

அவ்வந்தணர், “இல்லற வாழ்க்கையாகிற பாழுங்கிணற்றில் விழுந்திருக்கிற எனக்கு, இந்த ஸ்ரீக்ருஷ்ணனோடும், ஸமஸ்த புண்ய தீர்த்தங்களுக்கும் இருப்பிடமான பாத தூளியுடையவர்களும், அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய மூர்த்திக்கு வாஸஸ்தானமாய் இருப்பவர்களுமாகிய இவ்வந்தணர்களோடும், ஸமாகமம் (சந்திப்பு) எப்படி நேரிட்டது. இதென்ன ஆச்சர்யம்!” என்று தமக்குள் சிந்தித்தார். அவ்வந்தணர் இவ்வாறு அதிதி ஸத்காரம் (விருந்தோம்பல்) செய்யப் பெற்று ஸுகமாக உட்கார்ந்திருக்கிற அம்முனிவர்களின் அருகாமையில் உட்கார்ந்து, தம் க்ருஹத்திற்கு வந்த பகவானைக் குறித்து, அவருடைய பாதார விந்தங்களை ஸ்பர்சித்துக்கொண்டு, மொழிந்தார்.

ச்ருததேவர் சொல்லுகிறார்:- எவன் ப்ரக்ருதி, புருஷ காலாதிகளாகிற தன் சக்திகளைக் கொண்டு, தன் ஸங்கல்பத்தினால், இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் படைத்து, என்றும் மாறாமல் ஒருவாறாயிருக்கின்ற தன் ஸ்வரூபத்தினால் அந்த ப்ரபஞ்சத்திற்குள் புகுந்திருக்கிறானோ, அத்தகையனும், ப்ரக்ருதி புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), பரமபுருஷனுமாகிய நீ, இப்பொழுது எங்களுக்கு தர்சனம் கொடுத்தாய். படுத்துறங்கும் புருஷனைச் சரீரமாகவுடைய பரமாத்மா, தனக்குச் சரீரமான ஜீவனுடைய மனோரதத்தைத் தொடர்ந்த தன் ஸங்கல்பத்தினால், படுத்திருக்கும் சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டதும், ஸ்வப்னம் (கனவு) காண்கிற ஜீவனுடைய கர்மத்திற்கு அனுகுணமாக (ஏற்ப) ஏற்பட்டிருப்பதும், ஸ்வப்ன காலம் (கனவு காணும் நேரம்) வரையில் மாத்ரமே இருப்பதுமாகிய தேஹத்தில், தன் ஸங்கல்பத்தினால் புகுந்து, அந்த ஜீவன் அனுபவிக்கிற தேசாந்தர கமனம் (வேறு இடங்களுக்குச் செல்லுதல்), ராஜ்யாபிஷேகம், சிரச்சேதம் (தலை வெட்டப்படுதல்) முதலியன தன்மேல் நேரே தீண்டப்பெறாமல் ப்ரகாசிப்பது போல, அப்பரமாத்மா தன் ஸங்கல்பத்தினால் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்து, இதற்குள் புகுந்தும், இதன் தோஷங்கள் தன்மேல் தீண்டப்பெறாமல் ப்ரகாசித்துக் கொண்டிருக்கிறான். (அப்பரமாத்மா நீயே) 

ஸர்வ காலமும் உன் குணங்களைக் கேட்பதும், அவற்றைப் பேசுவதும், அர்ச்சாரூபமான உன் திருவுருவங்களைக் காண்பதும், அவற்றை வந்தனம் செய்வதும், அத்தகையர்களோடு ஸம்வாதம் (உரையாடல்) செய்வதுமாகி, நிர்மலமான மனமுடையவர்களுக்கும்கூட நீ மனத்திற்குள் தோன்றுவாயன்றி, அவர்கள் கண்ணுக்குப் புலப்படமாட்டாய். கர்மத்தினால் இழுக்கப்பட்ட மனமுடையவர்களுக்கு, நீ ஹ்ருதயத்திலிருப்பினும், வெகு தூரத்திலிருப்பவன் போலவே. 

ரஜஸ்-தமோ குணங்களும், அவற்றின் கார்யமான காம (ஆசை), க்ரோத (கோபம்), மோஹாதிகளும் (மயக்கம்) நிறைந்த மனமுடையவர்களுக்கு, நீ ஸமீபத்திலிருப்பினும், மாயை முதலிய உன் சக்திகள், தேஹாத்மாபிமானம் (இந்த உடலே ஆத்மா என்கிற மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்மாபிமானம் (நாம் பகவானுக்கு உட்படாது, தாமே தம் விருப்பப்படி செயல்பட வல்லவர்கள் என்ற மனக்கலக்கம்) முதலியவற்றை விளைத்து, உன்னுடைய உண்மையை மறைக்கின்றமையால், அவர்கள் உன்னை அறியவல்லராகிறதில்லை. உன்னுடைய உண்மையை உணர்ந்தவர்களுக்கு, ப்ராப்யமான (அடையப்படக்கூடிய) ஸ்வரூபமுடையவனும், உன்னிடத்தில் மனம் செலுத்தாதவர்களுக்கு ஸம்ஸார பந்தத்தை விளைப்பவனும், புண்ய, பாப கர்மமாகிற காரணத்தைப் பற்றியன்றியே கேவலம் அனுக்ரஹத்தினால் சரீரத்தை ஏற்றுக்கொள்பவனும், தன் மாயையினால் மயங்கினவர்களின் நெஞ்சுக்கு விஷயமாகாதவனுமாகிய உனக்கு, நமஸ்காரம். அத்தகைய நீ, உன் ப்ருத்யர்களான எங்களை நியமிப்பாயாக. 

தேவனே! உனக்கு ஏதேனுமொரு இஷ்டத்தைச் செய்து நாங்கள் ஸ்வரூபஸத்தை பெறுவோமாக. நீ மனுஷ்யர்களின் கண்ணுக்குப் புலப்படுவாயாயின், அவர்கள் அவ்வளவோடு ஸம்ஸார தாபங்களாகிற வருத்தமெல்லாம் தீர்ந்து, முக்தியைப் பெறுவார்கள். (ஆகையால், நான் அது ஸித்தமென்று நினைத்து அதை வேண்டாமல் உன் கைங்கர்யத்தையே வேண்டுகிறேன்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன்னைப் பணிகிறவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனான பகவான், இவ்வாறு அவ்வந்தணர் மொழிந்த வார்த்தையைக் கேட்டு, தன் கையால் அவர் கையைப் பிடித்துச் சிரித்துக்கொண்டே, மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மணனே! இம்முனிவர்கள், உன்னை அனுக்ரஹிக்கும் பொருட்டு வந்திருக்கிறார்களென்று தெரிந்து கொள்வாயாக. என்னை மனத்தில் த்யானித்துக் கொண்டிருக்கிற இம்முனிவர்கள், தங்கள் பாததூளிகளால் உலகங்களைப் புனிதம் செய்து கொண்டு திரிகின்றார்கள். தேவ ப்ரதிமைகளும், அயோத்யை, மதுரை முதலிய புண்ய க்ஷேத்ரங்களும், கங்கை முதலிய புண்யதீர்த்தங்களும், தர்சனம் (பார்த்தல்), ஸ்பர்சம் (தொடுதல்), அர்ச்சனம் (அர்ச்சனை) இவைகளால் ஸம்பந்தமுடையவர்களை நெடுநாள் கழித்துப் புனிதம் செய்கின்றன. அவ்வாறு அவை புனிதம் செய்வதும், என் பக்தர்களான பெரியோர்களின் கடாக்ஷத்தினால் (பார்வையால்) ஏற்பட்ட மஹிமையாலன்றி, வேறு காரணத்தினாலன்று. 

இவ்வுலகத்தில் ஸமஸ்த ப்ராணிகளிலும் ச்ரேஷ்டர்களான மனுஷ்யர்களுக்குள், ப்ராஹ்மணன் பிறவியால் ச்ரேஷ்டன். ப்ராஹ்மணர்களுக்குள், தவமுடையவன் ச்ரேஷ்டன். அவனைக் காட்டிலும், வேதாந்தங்களை ஓதி உணர்ந்தவன், ச்ரேஷ்டன். அவனைக்காட்டிலும், நித்ய ஸந்தோஷமுடையவன், ச்ரேஷ்டன். இனி அத்தகையன் என்னை உபாஸித்துக்கொண்டு வருவானாயின், அவன் ச்ரேஷ்டனென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?

இரண்டு புஜங்களையுடைய இந்த என்னுருவமும், நான்கு புஜங்களையுடைய என்னுருவமும், என்னை உபாஸிக்கிற ப்ராஹ்மணனைக் காட்டிலும், எனக்கு ப்ரியமன்று. ப்ராஹ்மணன், ஸகல வேத ஸ்வரூபன் (எல்லா வேதங்களின் வடிவானவன்). நான் ஸகல தேவதா ஸ்வரூபன் (எல்லா தேவதைகளின் வடிவானவன்). என்னுருவம், ஸமஸ்த தேவதா ஸ்வரூபமாயினும், என்னை உள்ளபடி அறிவதற்கு ப்ரமாணமான வேதங்களே வடிவங்கொண்டாற் போலிருக்கிற ப்ராஹ்மணனைக் காட்டிலும் எப்படி எனக்கு ப்ரியமாகும்? (ப்ரமேய ஸித்தி ப்ரமாணாதீனமன்றோ? என்னுடைய ஸித்தி ப்ராஹ்மணாதீனமாகையால், ஸகல வேதமயனான ப்ராஹ்மணனே எனக்கு மிகவும் ப்ரியன். பகவான் அறியப்படுபவன் – ப்ரமேயம்; வேதம் அவனை அறிவதற்கு ஆதாரம் – ப்ரமாணம்; அதாவது அறியப்படும் பொருளான பகவான் இன்னார் என்பது வேதம் என்கிற ப்ரமாணத்திற்கு உட்பட்டது. ப்ராஹ்மணர்கள் வேத வடிவானவர்கள்; எனவே, பகவான் ப்ராஹ்மணர்களுக்கு உட்பட்டவன்.) 

துரஹங்காரமுடைய (தீய புத்தி உடைய) சிலர், என் பக்தர்களின் ஸ்வரூபம் இத்தகையதென்பதை அறியாமல், அவர்களுடைய குணங்களிலும் தோஷத்தை ஏறிட்டு, அர்ச்சாவிக்ரஹம் முதலியவற்றில் மாத்ரமே பூஜ்யதா (பூஜை செய்யும்) புத்தியுடையவர்களாகி, என்னைக் காட்டிலும் வேறாகாதவனும், எனக்கு ஆத்மாவும், குருவுமாகிய ப்ராஹ்மணனை அவமதிக்கிறார்கள். ப்ராஹ்மணன், என்னை உள்ளபடி அறிந்தவனாகையால், ஜங்கம (அசைபவை) ஸ்தாவர (அசையாதவை) ரூபமான இந்த ப்ரபஞ்சம், இதற்குக் காரணங்களான மஹத்து முதலிய தத்வங்கள் இவையெல்லாம் என் ஸ்வரூபங்களென்றே நினைக்கின்றான். ப்ராஹ்மணனே! என் பக்தர்களின் மஹிமை இத்தகையதாகையால், இந்த ப்ரஹ்ம ரிஷிகளை, ச்ரத்தையுடன் பூஜிப்பாயாக. இப்படி செய்வாயாயின், நான் நேரே பூஜிக்கப்பட்டவனாவேன். இப்படியில்லாத பக்ஷத்தில் (என் பக்தர்களை அர்ச்சிக்காமல் என்னை மாத்ரம் அர்ச்சிப்பாயாயின்) அளவற்ற உபசாரங்கள் செய்யினும், நான் அர்ச்சிக்கப்பட்டவனாக மாட்டேன். என்னை எவ்வளவு அர்ச்சிக்கினும், அர்ச்சிக்காதது போலவேயாம்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ச்ருததேவரென்னும் அந்தணர், இவ்வாறு ப்ரபுவாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் கட்டளையிடப் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணனோடு கூடிய அந்த ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களைப் பரமாத்ம புத்தியுடன் ஆராதித்து, பெரியோர்கள் பெறும் கதியான முக்தியைப் பெற்றார். மைதிலனான பஹூலாச்வனும் அவ்வாறே முக்தியைப் பெற்றான். 

எண்பத்தாறாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக