திங்கள், 30 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 227

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பதினொன்றாம் அத்தியாயம்

(நந்தாதிகள் ப்ரஹத்வனத்தை விட்டு ப்ருந்தாவனத்திற்குப் போதலும், பகாஸுர, வத்ஸாஸுரர்களின் வதமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குரு ச்ரேஷ்டனே! நந்தன் முதலிய கோபர்கள், முரிந்து விழுந்த அர்ஜுன வ்ருக்ஷங்களின் (மரங்களின்) சப்தத்தைக் கேட்டு, இடி விழுகிறதோ என்று ஸந்தேஹப்பட்டுப் பயந்து, அவ்விடம் வந்தார்கள். அங்கு பூமியில் விழுந்திருக்கின்ற யமளார்ஜுன வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) கண்டு, உரலில் கயிற்றால் கட்டுண்டு அதை இழுத்துக்கொண்டு போகின்ற அப்பாலகனே அந்த வ்ருக்ஷங்கள் (மரங்கள்) விழுந்ததற்குக் காரணமென்று அறியாமல், “இந்த வ்ருக்ஷங்களை (மரங்களை) முரித்து விழத் தள்ளினது யாருடைய கார்யம்? இது எந்தக்காரணத்தினால் நேர்ந்தது? ஆ! இதென்ன ஆச்சர்யம்? நமக்கு மேன் மேலென உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாகின்றனவே” என்று பயந்து ப்ரமித்தார்கள். 

இவ்வாறு ப்ரமிக்கின்ற அந்த இடையர்களைக் குறித்து, அங்கிருந்த இடைப் பிள்ளைகள் “இந்த ஸ்ரீக்ருஷ்ணன் இந்த வ்ருக்ஷங்களின் (மரங்களின்) இடையில் உரலை இழுத்துக்கொண்டு போகையில், உரல் குறுக்கே விழுந்து தடுக்க, அதை வலிவுடன் இழுத்தான். அதனால் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) முரிந்து விழுந்தன. இது மாத்ரமேயல்லாமல், இந்த வ்ருக்ஷங்களினின்று (மரங்களிலிருந்து) இரண்டு திவ்ய புருஷர்களும் கிளம்பக்கண்டோம்” என்று மொழிந்தார்கள். அவர்கள் “இது எவ்வாறு நேரும்? நேராது” என்று அப்பிள்ளைகளின் வார்த்தையை நம்பவில்லை. சிலர் “இக்குழந்தையே ஒருகால் வ்ருக்ஷங்களை முரித்திருக்கக்கூடும்” என்று ஸந்தேஹமுற்றார்கள். நந்தன் கயிற்றால் கட்டுண்டு உரலை இழுத்துக்கொண்டு போகின்ற தன்  புதல்வனைக் கண்டு, சிரித்த முகத்துடன் அவனைக் கட்டினின்று விடுவித்து, “அட! க்ருஷ்ணா! பழம் வாங்கிக்கொள்வாய்” என்று மொழிந்தான். அந்த அச்சுதனும், தான் ஸ்வர்க்கம், மோக்ஷம் முதலிய ஸமஸ்த பலன்களையும் கொடுக்கவல்லவனாயினும், கேவலம் ப்ராக்ருத (ஸாதாரண) பாலகன் போலப் பழத்தை விரும்பி, தாயிடம் சென்று கேட்டு, கையில் நெல்லை எடுத்துக்கொண்டு சென்றான். பழம் விற்கிறவளும், கொண்டு வந்த நெல்லெல்லாம் வழியில் கீழே சிந்திப் போய்க் கடைசியில் வெறுங்கையனாய் வந்து நிற்கிற அந்த அச்சுதனுடைய இரண்டு கைகளையும் பழங்களால்  நிறைத்தாள். உடனே, அந்தப் பழம் விற்கிறவளுடைய பழக்கூடை முழுவதும் ரத்னங்களால் நிறைந்தது. 

(“பழம் வாங்கவேண்டுமென்று கொண்டு வந்த நெல்லெல்லாம், அறியாதவனாகையால் செவ்வையாய்க் கொண்டு வரத் தெரியாமல், நடுவழியில் சிந்திவிட்டு வந்தான்” என்பதை அறிந்து, பழம் விற்கிறவள் மன இரக்கத்துடன் குழந்தையின் முகத்தைக் கண்டு, மனம் உருகி, அவனுடைய இரப்பையும் (வேண்டுவதையும்) கண்டு செயலற்றுப் பழங்களைக் கை நிரம்பக் கொடுத்தாள். பகவத் விஷயத்தில் செய்த கிஞ்சித்காரமாகையால் (சிறிய செயலாகையாகையால்) அவளுடைய பழக்கூடை ரத்னங்களால் நிரம்பிற்றென்று கருத்து. அவன் நெல்லைக் கொண்டு வந்து கூடையிற் போட அவள் பழங்கொடுத்தாள். போட்ட நெற்களெல்லாம் ரத்னங்களாகிக் கூடை நிரம்பிற்றென்றும் சிலர் கூறுவார்கள்.) 

கோபிகைகளால் ஒருகால், கைத்தாளமிடுவது முதலியன செய்து, உத்ஸாஹப்படுத்தப்பட்டு, மரப்பொம்மை போல அவர்களுக்குட்பட்டு, அவர்கள் உரக்கப் பாடுகையில் ஒன்றுமறியாத பாலன் போல் ஆடுவதும் பாடுவதுமாயிருந்தான். ஒருகால், அவர்களால் மணை, படி, பாதுகை முதலியன கொண்டு வரும்படி நியமிக்கப்பட்டு, அவற்றைக் கொண்டு வர வல்லமையற்றவன் போல, மிக்க வருத்தத்துடன் எடுத்துக் கொண்டு வருவான். அவர்களுக்கு ப்ரீதியை (மகிழ்ச்சியை) விளைத்துக்கொண்டு, கையை அசைக்குவான். அவன் தன் வைபவத்தை (பெருமையை) அறிந்தவர்களுக்கு, தான் பக்த பராதீனனென்பதை வெளியிட்டுக்கொண்டு, இத்தகைய பால்ய சேஷ்டைகளால் இடைச்சேரியிலுள்ள ஜனங்களுக்கெல்லாம் ஸந்தோஷத்தை விளைத்துக்கொண்டிருந்தான். 

யமளார்ஜுன வ்ருக்ஷங்களை (மரங்களை) முரித்த அந்த ஸ்ரீக்ருஷ்ணன், ஒருகால் ஆற்றங்கரைக்குச் சென்று, பலராமனோடும் மற்றுமுள்ள சேரியிற் பிள்ளைகளோடுங்கூடி, வெகு நேரமாய் விளையாடிக் கொண்டிருக்கையில், ரோஹிணி அழைத்தாள். அழைத்தும் அந்தப் புதல்வர்கள் விளையாட்டில் ஊக்கமுற்றிருக்கையால் திரும்பி வராதிருக்கையில், பிள்ளைகளிடத்தில் மிகுந்த வாத்ஸல்யமுடைய (பரிவுடைய) அந்த ரோஹிணி, யசோதையை அனுப்பினாள். அந்த யசோதை, போஜனம் செய்ய (உணவு உண்ண) வேண்டிய வேளையையும் கடந்து, பிள்ளைகளுடன் விளையாடுகின்ற ராம க்ருஷ்ணர்களைக் கண்டு, பிள்ளையினிடத்தில் ஸ்னேஹத்தினால் ஸ்தனங்களில் பால் பெருகப்பெற்று, அவர்களை அழைத்தாள்.

யசோதை சொல்லுகிறாள்:- க்ருஷ்ணா! க்ருஷ்ணா! தாமரைக் கண்ணா! அப்பனே! இங்கு வருவாயாக. ஸ்தன்ய பானம் செய்வாயாக (தாய்ப்பால் பருகுவாயாக). விளையாடினது போதும். பசியினால் இளைத்திருக்கின்றாய். ஆகையால், இப்பொழுது நீ போஜனம் செய்ய (உணவு உண்ண) வேண்டும். ஓ ராமா! அப்பனே! குலத்தை வளர்ப்பவனே! நீ உன் தம்பியை அழைத்துக்கொண்டு, சீக்ரம் வருவாயாக. நீ காலையிலேயே ஆஹாரம் செய்தனை (சாப்பிட்டாய்). குழந்தாய்! விளையாடல்களால் இளைப்புற்றிருக்கின்றாய். கோகுலத்திற்கு நாதனாகிய நந்தன், போஜனம் செய்ய (சாப்பிட) முயன்று, உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். நீ வருவாயாக. வந்து எங்களுக்கு ப்ரியம் (விருப்பமானதைச்) செய்வாயாக. அட! ராம க்ருஷ்ணர்களைத் தொடர்ந்து விளையாடும் பிள்ளைகளே! நீங்கள் உங்கள் க்ருஹங்களுக்குப் போவீர்களாக. அப்பனே! உன் உடம்பெல்லாம் புழுதி படிந்திருக்கின்றது. ஆகையால், நீ மஞ்சனமாட (நீராட) வருவாயாக. மற்றும், இன்று நீ பிறந்த திருநக்ஷத்ரம் (தினம்). ஆகையால், ஸ்னானம் செய்து (நீராடி) பரிசுத்தனாகி, ப்ராஹ்மணர்களுக்குப் பசுக்களைத் தானம் செய்வாயாக. பார், பார். உன் தோழர்கள் அனைவரும் தங்கள் தாய்மார்களால் ஸ்னானம் செய்வித்து  (நீராட்டுவித்து), நன்கு அலங்காரமும் செய்விக்கப்பெற்று, வந்திருக்கிறார்கள். நீயும் குளித்து, நன்கு அலங்கரித்துக்கொண்டு, போஜனமும் செய்து (சாப்பிட்டுவிட்டு) விளையாடலாம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மாதிகளான அனைவரிலும் சிறந்த அந்தப் பரம புருஷனை, யசோதை கேவலம் தன் புதல்வனாக நினைத்து, ஸ்னேஹம் நிறைந்த மனமுடையவளாகி, ராமனையும், க்ருஷ்ணனையும் கையிற் பிடித்துக்கொண்டு,  தன் க்ருஹத்திற்குச் சென்று, மங்கள கார்யங்களை நடத்தினாள்.

இவ்வாறு பலவாறு பெரிய பெரிய உத்பாதங்களை (தீய அறிகுறிகளை) அனுபவித்த நந்தன் முதலிய கோப வ்ருத்தர்கள் அனைவரும் ஒருகால் ஒன்று சேர்ந்து, இடைச்சேரியின் க்ஷேமத்தைப்பற்றிச் செய்ய வேண்டிய கார்யத்தைக் குறித்து ஆலோசித்தார்கள். அவர்களில் ஜ்ஞானத்தினாலும், வயதினாலும் முதிர்ந்தவனும், தேச காலங்களுக்கு உரியபடி செய்ய வேண்டிய ப்ரயோஜனங்களின் உண்மையை அறிந்தவனும், ராம, க்ருஷ்ணர்களுக்கு ப்ரியம் செய்பவனுமாகிய உபநந்தனென்பவன், நந்தாதிகளைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.

உபநந்தன் சொல்லுகிறான்:- நாம் கோகுலத்திற்கு ஹிதத்தை (நன்மையை) விரும்புவோமாயின், இதை விட்டுப் புறப்பட்டுப் போவதே நலம். இங்கு வாஸம்செய்யும் ப்ரஜைகளாகிய நமக்கு, நாசத்தை விளைக்கும்படியான பல உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) உண்டாயின. மேலும் பல உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) வரப்போகின்றன. கீழ்வந்த உத்பாதங்கள் (தீய அறிகுறிகள்) எல்லார்க்கும் தெரிந்தவைகளே. இப்பாலகன் பாலர்களை வதிக்கும் க்ரஹமான ராக்ஷஸியிடம் அகப்பட்டு, மிகவும் வருந்தி, தெய்வாதீனமாய் விடுபட்டான். பகவானுடைய அனுக்ரஹத்தினால், சகடமும் இவன் மேல் விழாமல் தப்பிற்று. சுழற்காற்றின் உருவங்கொண்டு வந்த அஸுரனால் இப்பாலகன், பக்ஷிகள் ஸஞ்சரிக்குமிடமாகிய ஆகாச மார்க்கத்தில் கொண்டு போகப் பெற்றும், கல்லின் மேல் விழுந்து, பெரிய ஆபத்தை அடைய வேண்டியவனாயினும், அதினின்று நம் இஷ்ட தேவதைகளால் பாதுகாக்கப்பட்டான். இப்பாலகன், அர்ஜுன வ்ருக்ஷங்களின் இடையில் செல்ல, அவை முரிந்து விழ, இவனாவது மற்ற பிள்ளைகளில் எவனாவது, மரணம் அடையாதிருந்ததும், அச்சுதன் செய்த ரக்ஷணமே (பாதுகாப்பே). உத்பாதத்தினால் (தீய அறிகுறிகளால்) விளையும் அனர்த்தம் (தீமை), கோகுலத்தை அழிப்பதற்கு முன்னமே, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, இவ்விடத்தினின்று புறப்பட்டுப் போவோம். ப்ருந்தாவனமென்று ப்ரஸித்திபெற்ற ஒரு வனம் இருக்கின்றது. அது பசுக்களுக்கு ஹிதமாயிருக்கும்; புதிய கானகங்கள் பலவும் அடர்ந்திருக்கும்; இடையர்களும், இடைச்சேரிகளும், பசுக்களும் வாஸம் செய்யத் தகுந்தது; அழகிய பர்வதமும் (மலையும்), புற்களும், அமைந்திருக்கும். ஆகையால், நாம் இப்பொழுதே அவ்விடத்திற்குப் போவோம். வண்டிகளைப் பூட்டுவீர்களாக. கால தாமதம் செய்யவேண்டாம். ஆநிரைகளெல்லாம் (பசுக்கூட்டங்கள்) முன்னே போகட்டும். நான் சொல்வது உங்களுக்கு இஷ்டமாயின், புறப்படுவோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபர்களெல்லோரும் அதைக் கேட்டு, ஒருமித்த மதி (கருத்து) உடையவர்களாகி, நல்லது நல்லதென்று மொழிந்து, தங்கள் தங்கள் (மாட்டுத் தொழுவங்களைப்) பிரித்து, கருவிகளையெல்லாம் சகடங்களில் (வண்டிகளில்) ஏற்றிக்கொண்டு, புறப்பட்டார்கள். மன்னவனே! கோபர்கள், கிழவர்களையும், பாலர்களையும், பெண்டுகளையும், ஸமஸ்தமான உபகரணங்களையும் வண்டிகளில் ஏற்றி, ப்ரயாண ஆயத்தங்களைச் செய்து பரிவாரங்களோடு கூடி, வில்லை ஏந்தி, பசு மந்தைகளை முன்னிட்டுப் புல்லாங்குழல்களை ஊதிக் கொண்டு, பெரிய வாத்யகோஷத்துடன் சென்றார்கள். 

கோபிகைகள், அழகிய ஆடைகளை உடுத்து, பொன்னலங்காரங்களை அணிந்து, கொங்கைகளில் பூசின குங்குமத்தின் காந்தியினால் திகழ்வுற்று, சகடங்களில் (வண்டிகளில்) ஏறி, மனக்களிப்புடன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய லீலைகளைப் பாடிக்கொண்டு சென்றார்கள். யசோதையும், ரோஹிணியும் க்ருஷ்ண - ராமர்களுடன் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளைக் கேட்பதனால் மிகவும் ஸந்தோஷமுற்று விளங்கினார்கள். நந்தன் முதலிய கோபர்கள், இவ்வாறு புறப்பட்டு ஸர்வ காலங்களிலும் ஸுகத்தை விளைப்பதாகிய ப்ருந்தாவனத்திற்கு, வண்டிகளை அரை வட்டமாக நிறுத்தி, பசு மந்தைகள் தங்க ஏற்ற இடத்தை ஏற்படுத்தினார்கள். 

மன்னவனே! ராம க்ருஷ்ணர்கள் ப்ருந்தாவனத்தையும், கோவர்த்தன பர்வதத்தையும் (மலையையும்), யமுனா நதியின் மணற் குன்றுகளையும் கண்டு, மிகுந்த ஸந்தோஷம் அடைந்தார்கள், மதுரமான மழலை வாக்யங்களையுடைய அந்த ராம க்ருஷ்ணர்கள், பால்ய சேஷ்டைகளால் இடைச்சேரியிலுள்ளவர்கள் அனைவர்க்கும் ஸந்தோஷத்தை விளைத்துக்கொண்டிருந்து, சில காலம் செல்லுகையில், கன்றுகளை மேய்க்கத் தொடங்கினார்கள். இடைச்சேரிக்கு அருகாமையில் விளையாட்டிற்கு வேண்டிய பல கருவிகளை எடுத்துக்கொண்டு, இடைப் பிள்ளைகளுடன் கன்றுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருகால், புல்லாங்குழல் வாசிப்பதும், ஒருகால் வில்வக்காய், நெல்லிக்காய் முதலிய அடிக்கத் தகுந்த வஸ்துக்களால் இடைப் பிள்ளைகளை அடிப்பதும், ஒருகால் சிறிய சதங்கைகளை அணிந்த பாதங்களால் உதைப்பதும், ஒருகால் முழந்தாள்களையும், கைகளையும் பூமியில் ஊன்றிக் கறுப்புக் கம்பளி முதலியவற்றால் உடம்பை மூடிக்கொண்டு, வ்ருஷபங்கள் (காளைகள்) போல நடப்பவர்களும், அவ்வாறே  சப்தம் செய்பவர்களுமாகிய இடைப்பிள்ளைகளுடன் தாங்களும் வ்ருஷபங்கள் (காளைகள்) போன்று அவ்வாறு சப்தித்து (ஒலி எழுப்பி), யுத்தம் செய்வதும், ஹம்ஸம், மயில் இவை முதலிய ஜந்துக்களைப்போல் திரிந்து சப்தம் செய்வதுமாகி, ப்ராக்ருத (ஸாதாரண) பாலகர்கள் போலத் திரிந்துகொண்டிருந்தார்கள். 

ராம க்ருஷ்ணர்கள் தங்கள் ஸ்னேஹிதர்களுடன் யமுனைக்கரையில் கன்றுகளை மேய்த்துக் கொண்டிருக்கையில், ஓர் அஸுரன் அவர்களை வதிக்க விரும்பி, கன்றின் உருவம் தரித்து, அவ்விடம் வந்தான். ஸ்ரீ க்ருஷ்ணன் கன்றின் உருவங்கொண்டு, தானும் ஒரு கன்றுபோல் கன்றுகளின் கூட்டத்தினிடையில் கலந்திருக்கிற அவ்வஸுரனைக் கண்டறிந்து, பலராமனுக்குக் காட்டி, தான் மெல்ல மெல்ல அறியாதவன் போல அவனருகே சென்றான். அவ்வச்சுதன், வத்ஸரூபியான (கன்றின் உருவம் தரித்த), அவ்வஸுரனை பின்கால்களை வாலுடன் பிடித்துக்கொண்டு சுழற்றி, அவ்வளவில் ப்ராணன்களை (உயிரை) இழந்த அவனை அருகிலிருந்த விளாமரத்தின் மேல் வீசியெறிந்தான. பெரும் சரீரமுடைய அவ்வஸுரனுடைய பாரத்தைப் பொறுக்க முடியாமல் அந்த விளாமரத்தின் நுனிக்கிளைகள் முரிந்து விழ, அவற்றுடன் அவ்வஸுரனும் கீழே விழுந்தான். 

இடைப்பிள்ளைகள் அனைவரும் அவ்வஸூரன் மாண்டு கீழே விழுந்ததைக் கண்டு, நல்லது நல்லதென்று புகழ்ந்தார்கள். ஆகாயத்தில் தேவதைகளும், ஸந்தோஷம் அடைந்து, புஷ்ப வர்ஷங்களைப் (பூமழை) பெய்தார்கள். அந்த ராம  க்ருஷ்ணர்கள், ஸமஸ்த லோகங்களுக்கும் முக்ய ரக்ஷகர்களாயிருந்தும் (காப்பாற்றுபவர்களாயிருந்தும்), கன்றுகளைக் காப்பவர்களாயினர். ஒருகால் காலையில் புசிக்க வேண்டிய பழைய அன்னத்தை எடுத்துக் கொண்டு, பசுவின் கன்றுகளை மேய்த்துக்கொண்டு திரிந்தார்கள். ராம க்ருஷணாதிகளான இடைப் பிள்ளைகள் அனைவரும் தங்கள் தங்கள் கன்றினங்களைப் பாதுகாத்துக்கொண்டு, நீர் மடுவின் அருகாமையில் சென்று, கன்றுகளைத் தண்ணீர் குடிப்பித்து தாங்களும் குடித்தார்கள். அவர்கள் அவ்விடத்தில் ஒரு ஜந்துவைக் (பிராணியைக்) கண்டார்கள். 

வஜ்ராயுதத்தினால் பிளவுண்டு நழுவின பர்வத (மலைச்) சிகரம் போன்ற அதைக் கண்டு பயந்தார்கள். அந்த ஜந்து (பிராணி) பகனென்னும் மஹாஸுரன். அவன் கொக்கின் உருவந்தரித்திருந்தான். மஹாபலிஷ்டனும், கூரான மூக்குடையவனுமாகிய அந்தப் பகாஸுரன் திடீரென்று க்ருஷ்ணனைப் பிடித்து விழுங்கினான். ராமனைத் தவிர மற்ற இடைப்பிள்ளைகள் ஸ்ரீக்ருஷ்ணனைப் பகாஸுரன் விழுங்கக் கண்டு ப்ராணனை இழந்த இந்திரியங்கள் போல ஸ்ரீக்ருஷ்ணனைப் பிரிந்து அசேதனங்கள் போன்றிருந்தார்கள். 

ஜகத்திற்கெல்லாம் (உலகிற்கெல்லாம்) தந்தையாகிய ப்ரஹ்ம தேவனுக்குத் தந்தையாயினும், லீலையினால் இடைப் பிள்ளையாய்த் தோன்றின மஹாபுருஷனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனை விழுங்கின மாத்ரத்தில் தாடையின் அடிப்பாகமெல்லாம் (தொண்டை) அக்னியைப்போல் கொளுத்தக்கண்டு, அதைப் பொறுக்க முடியாமல், அவ்வஸுரன் உடனே அவனைக் கக்கினான். அவன் உருக்குலையாமல் க்ஷேமமாயிருக்கக் கண்டு, அவ்வஸுரன் மூக்கினால் அவனைக் கொல்ல விரும்பிக் கோபத்துடன் மீளவும் அவன் மேல் எதிர்த்தோடினான். 

தன்னைப் பெற விரும்பும் ஸத் புருஷர்களுக்கு தானே உபாயமாயிருப்பவனும், தேவதைகளுக்கு ஸந்தோஷத்தை விளைப்பவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன்னை எதிர்த்து வருகின்றவனும், கம்ஸனுக்கு நண்பனுமாகிய, அந்தப் பகாஸுரனை ஹுங்காரத்தினால் (“உம்” என்ற சப்தத்தால்) தடுத்து, இடைப் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கையில், கைகளால் மூக்குகளைக் கீழும் மேலுமாய்ப் பிடித்துக்கொன்டு, கோரையைக் கிழிப்பது போலக் கிழித்தான். அப்பொழுது, தேவலோகவாஸிகள் பகாஸுரனைக் கொன்ற க்ருஷ்ணன்மேல் நந்தனவனத்தில் பூத்த மல்லி முதலிய புஷ்பங்களை இறைத்தார்கள். பேரி, சங்கு முதலிய வாத்ய கோஷங்களுடன் ஸ்தோத்ரம் செய்தார்கள். இடைப் பிள்ளைகள் அதைக் கண்டு மிகவும் வியப்புற்றார்கள். இந்த்ரியங்கள் மீண்டும் உயிரைப் பெற்றது போல, அவ்விடைப் பிள்ளைகள் பகாஸுரனுடைய வாயினின்று விடுபட்ட க்ருஷ்ணனைப் பெற்று, கட்டியணைத்துக் களித்து, கன்றுகளையெல்லாம் ஒன்று சேர்த்து ஓட்டிக் கொண்டு கோகுலத்திற்கு வந்து, பகாஸுரனைக் கொன்ற அந்த வ்ருத்தாந்தத்தை இடையர்களுக்குச் சொன்னார்கள். 

கோபர்களும் கோபிமார்களும் அதைக் கேட்டு வியப்புற்று, மிகுந்த ப்ரீதியுடையவர்களாகையால்,  த்வரையுடன் (விரைவாக) வந்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனை லோகாந்தரத்தினின்று (வேறு உலகத்திலிருந்து) வந்தவனைப்போல் கண்டு திருப்தி அடையாத கண்களுடையவர்களாகி, பெரிய ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். “ஆ! இதென்ன ஆச்சர்யம்! ஆ! இதென்ன வருத்தம்! இப்பாலகனுக்கு மரண காரணங்கள் பலவும் நேர்ந்தன. ஆயினும், இவனைக் கொல்ல வந்தவர்கள், தங்கள் கருத்து ஈடேறப் பெறாமை மாத்ரமேயல்லாமல், தாமே அழிந்தனர். இவர்கள் பயங்கரமான காட்சியுடையவர்களாயினும், இப்பாலகனைப் பரிபவிக்க (தீங்கு இழைக்க) வல்லாராகிறதில்லை. இவனைக் கொல்ல வேண்டுமென்று விரும்பி, விட்டில்கள் அக்னியில் விழுவது போல, இவன் மேல் விழுந்து, தாங்களே மாண்டு போகின்றார்கள். ஆ! ஆச்சர்யம். ப்ரஹ்ம வித்துக்களான (ப்ரஹ்மத்தை அறிந்த) அந்தணர்களின் வாக்குகள் ஒருகாலும் பொய்யாகிறதில்லை. கர்க்கர் எவ்வாறு மொழிந்தாரோ, அதை அவ்வாறே நாம் அனுபவித்தோம்” என்று நந்தன் முதலிய கோபர்கள் மனக்களிப்புடன் க்ருஷ்ண ராமர்களின் கதையைச் சொல்லி, ஸந்தோஷமுற்று, ஸம்ஸார (உலகியல்) வேதனையைச் (துன்பங்களை) சிறிதும் அறியாதிருந்தார்கள். இவ்வாறு வீடு கட்டுவது, அணை கட்டுவது, குரங்குகள் போலக் கிளம்பிக் குதிப்பது, முதலிய பலவகையான கௌமார (சிறு வயது) சேஷ்டைகளால் (விளையாட்டுக்களால்) விளையாடிக்கொண்டிருந்து, கௌமாராவஸ்தையைக் (குழந்தைப் பருவத்தைக்) கடந்தார்கள். 

பதினொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக