ஞாயிறு, 29 நவம்பர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 226

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – பூர்வபாகம் – பத்தாவது அத்தியாயம்

(யக்ஷர்களின் சாபத்தை நிரூபித்தலும், ஸ்ரீக்ருஷ்ணன் யமளார்ஜுனங்களை முறித்தலும், யக்ஷர்கள் ஸ்ரீக்ருஷ்ணனைத் துதித்து விடைபெற்றுப் போதலும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! குபேரன் பிள்ளைகளான யக்ஷர்களுடைய சாபத்தின் காரணத்தைச் சொல்லுவீராக. தேவர்ஷியாகிய நாரதருக்குக் கோபம் வரும்படி அவர்கள் செய்த நிந்தைக்கிடமான கார்யம் யாது?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குபேரனுடைய பிள்ளைகளான இரண்டு யக்ஷர்கள், ருத்ரனுக்குப் பரிசாரகர்களாயிருந்தும், செல்வப்பெருக்கினால் மிகவும் கொழுத்து, யௌவன மதத்தினால் (இளமை கர்வத்தினால்) மதி (புத்தி) மயங்கி, கங்கையில் அழகியதான கைலாஸ பர்வதத்தின் உபவனத்தில், வாருணியென்ற மத்யத்தைப் (கள்ளைப்) பானஞ் செய்து (பருகி), அதனாலுண்டான மதத்தினால் (மயக்கத்தினால்) கண்கள் சுழலப் பெற்று, தங்களைத் தொடர்ந்து பாடிக்கொண்டு வருகிற மடந்தையர்களுடன், புஷ்பித்திருக்கின்ற அவ்வனத்தில் உலாவிக் கொண்டிருந்தார்கள். அவர்கள், பிறகு தாமரைக் காடுகள் வரிசை வரிசையாய் அடர்ந்திருக்கின்ற கங்காநதியின் இடையில் இழிந்து, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் விளையாடுவது போல, யௌவனப் பருவமுடைய மடந்தையர்களுடன் கலந்து விளையாடினார்கள். தேவ ருஷியாகிய நாரதர், தெய்வாதீனமாய் அவ்விடம் வந்து, ஜலக்ரீடை செய்கின்ற அந்த யக்ஷர்களைக் கண்டு, அவர்கள் ஆடையற்று மதித்திருப்பதை (மயங்கி இருப்பதை) அறிந்தார். 

யக்ஷ மடந்தையர்கள், அம்முனிவர் வந்திருப்பதைக் கண்டு, வெட்கமுற்று, சபிக்கப் போகிறாரேயென்று பயந்து, விரைவுடன் ஆடைகளை எடுத்து உடுத்துக் கொண்டார்கள். யக்ஷர்களோவென்றால், ஆடையை உடுத்திக்கொள்ளாமல், திகம்பரர்களாகவே இருந்தார்கள். குபேரனுடைய பிள்ளைகளான அந்த யக்ஷர்கள், செல்வப் பெருக்கினால் மதித்து (மயங்கி), கண் தெரியாதவர்களாகி, மத்ய பானஞ் செய்து (கள் அருந்தி), மதி (புத்தி) மயங்கியிருப்பதைக் கண்டு, அவர்களை அனுக்ரஹிக்க விரும்பிச் சாபம் கொடுக்க முயன்று, இவ்வாறு மொழிந்தார்.

நாரதர் சொல்லுகிறார்:- மனத்திற்கினியவைகளான சப்தாதி விஷயங்களை அனுபவிக்கும் புருஷனுக்கு, செல்வப் பெருக்கினால் விளையும் மதத்தைப் (கர்வத்தைப்) போல, நற்குலத்தில் பிறவி முதலியவற்றால் விளைகிற மற்ற மதங்கள் (கர்வங்கள்), புத்தி ப்ரம்சத்தை (தடுமாற்றத்தை) விளைக்க வல்லவையாக மாட்டா; ரஜோ குணத்தின் கார்யமான காம (ஆசை) க்ரோதாதிகளையும் (கோபம்) வளர்க்கமாட்டா. செல்வப்பெருக்கினால் விளையும் மதமே (கர்வமே), புத்தி ப்ரம்சத்தையும் (தடுமாற்றத்தையும்) விளைத்து, காம க்ரோதங்களையும் (ஆசை, கோபங்களையும்) வளர்க்கும். செல்வக்கொழுப்பு நேருமாயின், பெண்களுடன் சேர்க்கை, சூதாட்டம், மது அருந்துதல் ஆகிய இவை உண்டாகின்றன. மற்றும், செல்வக் கொழுப்பினால் மதி (புத்தி) மயங்கினவர்கள் நல்வரமான இந்தத் தேஹத்தைக் கிழத்தனம், மரணம் முதலிய விகாரங்கள் (மாற்றக்கள்) அற்றதாகவும், சாச்வதமாகவும் நினைத்து, இந்திரியங்களை அடக்காமல், மன இரக்கமின்றி, பசுக்களை வதிக்கிறார்கள். இச்சரீரம் “நர தேவன், பூ தேவன், ஸ்வர்க்க தேவன்” என்னும் இவை முதலிய பல பெயர்களைப் பெறினும், கடைசியில் “புழு, மலம், சாம்பல்” என்னும் இவை முதலிய பெயர்களைப் பெறுகின்றது. (சரீரத்தைக் கொளுத்துவார்களாயின் சாம்பல் என்றும், நாய் முதலிய ஜந்துக்களுக்கு உணவானால் மலம் என்றும், புதைக்கப்பட்டால் புழுவென்றும் பெயர்களைப் பெறுகின்றது). 

இத்தகையதான அந்தச் சரீரத்தின் ஸுகத்திற்காக, நரகத்தை விளைக்கும் படியான ப்ராணி த்ரோஹத்தைச் (தீங்கு) செய்பவன், எதை அறிவான்? அவனுக்கு, நன்மை தீமைகளில் எதுவும் தெரியாது. “தேஹம் கடைசியில் எப்படியாயினும், ஜீவதசையில் நமக்கு ஸ்வாதீனமாய் இருக்கிறதாகையால், நாம் அதன் ஸுகத்திற்காக யத்னம் (முயற்சி) செய்ய வேண்டியது அவச்யமே” என்றால், ஆராய்ந்து பார்க்கில், ஜீவதசையிலும் தேஹம் நமக்கு ஸ்வாதீனமென்று சொல்ல முடியாது. ப்ராணன் போன பின்பு, தேஹம் அக்னிக்கும், நாய் முதலிய ஜந்துக்களுக்கும், அதீனமாவது போல, ஜீவதசையில் தேஹம் அன்னத்தின் பரிணாமமாகையால் (மாற்றமேயாகையாகையால்), அன்னம் கொடுக்கிறவனுடையது என்று ஏன் சொல்ல முடியாது? 

ரேதஸ்ஸினால் (ஆண் விந்துவினால்) உண்டாகிறதாகையால் கர்ப்பாதானம் செய்தவனுடையதென்று ஏன் சொல்லமுடியாது? தாய், பத்து மாதங்கள் கர்ப்பத்தில் சுமந்து, பிறக்கிறாளாகையால், அவளுடையதென்று ஏன் சொல்ல முடியாது? பெண்ணை விவாஹம் செய்து கொடுக்கும்போது, இவளுக்குப் பிறக்கும் பிள்ளையை எனக்குக் கொடுக்க வேண்டுமென்று ஏற்பாடு செய்து கொண்டு கொடுப்பதும் உண்டல்லவா? அவ்வண்ணம் தாயைப்பெற்ற பாட்டன், ஸ்வீகாரஞ் செய்து கொள்வானாயின், அவனுடையதென்று ஏன் சொல்ல முடியாது? ஒருவன் விலைக்கு வாங்குவானாயின், அவனுடையதென்று ஏன் சொல்ல முடியாது? ஒருவன் பலாத்காரமாகப் பிடித்துக் கொண்டு போவானாயின், அவனுடையதென்று ஏன் சொல்ல முடியாது? ஆகையால், தேஹம் ஜீவதசையிலும் நம்முடையதென்பதற்கு இடமில்லை. 

இவ்வாறு பலர்க்குப் பொதுவாயிருப்பதும், ப்ரக்ருதியினின்று தோன்றி அதிலேயே மறைவதுமாகிய இந்தத் தேஹத்தையே ஆத்மாவென்று நினைத்து, மூடர்களைத் தவிர மதியுடைய மற்ற எவன் தான் அதன் ஸுகத்திற்காக ஜந்துக்களை ஹிம்ஸிப்பான்? செல்வக் கொழுப்பினால், வெளிக்கண்ணும், உட்கண்ணும், கெட்டுத் தடுமாறுகிற புருஷனுக்கு ஏழ்மையென்பதே நோயைத் தீர்க்கும் மை. தரித்ரன் (ஏழை) ஒருவனே பிறரையும் தன்னைப்போல் பார்ப்பான். பாதத்தில் முள் தைக்கப் பெற்றவன் வருந்தி, பிறனுக்கு அவ்வருத்தம் விளைவதை விரும்புகிறதில்லை. ஏனென்றால், அவன் “நம் பாதத்தில் முள் குத்தியதால் நாம் வருந்துகின்றோம்; இந்த முள் பிறனுடைய பாதத்தில் குத்துமாயின், அவனும் நம்மைப்போல் வருந்துவான். ஆகையால், இந்த முள் பிறனுடைய பாதத்தில் குத்த வேண்டாம்” என்று நினைக்கிறான். அவன், தனக்கு நேர்ந்த கார்ய காரணங்களைக் கண்டு, பிறனுக்கும் அப்படியே  நேருமென்று ஊஹிக்கிறான். காலில் முள் குத்தாதவன், அவ்வாறு நினைக்கமாட்டான். 

தரித்ரன் (ஏழை) அஹங்காரம் அற்று, வித்யாமதம் (கல்விச் செருக்கு), தனமதம் (செல்வச் செருக்கு), அபிஜனமதம் (நற்குடிப்பிறவிச் செருக்கு) என்கிற செருக்குகள் அற்று இருப்பவன். உரிய ஆஹாரம் நேரப்பெறாமையால் சரீரம் உலர்ந்து, வருந்துகிறான். அதுவே அவனுக்குப் பெரிய தவமாகின்றது. தினமும் பசியினால் சரீரம் உலர்ந்து, அன்னத்தை அபேக்ஷிக்கிற (எதிர்பார்த்து) தரித்ரனுடைய இந்த்ரியங்கள், உலர்ந்து போகின்றன. அவனுக்குப் பரஹிம்ஸை (பிறரை துன்புறுத்துவது) தானே நிவர்த்திக்கின்றது. (பிறனை துன்புறுத்த வேண்டுமென்னும் புத்தி அவனுக்கு உண்டாகிறதில்லை.) இப்படிப்பட்ட தரித்ரனுக்குத்தான் எல்லாவற்றையும் ஸமமாகப் பார்க்கும் தன்மையுடைய ஸாதுக்களின் ஸமாகமம் (சேர்க்கை) உண்டாகின்றது. அந்த ஸாதுக்களின் ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), சப்தாதி விஷயங்களிலுள்ள விருப்பத்தைப் போக்கிக்கொள்கின்றான். பிறகு, சீக்ரத்தில் ப்ரக்ருதி ஸம்பந்தம் நீங்கி, பரிசுத்தனாகின்றான். போக மோக்ஷங்களைக் கொடுக்கவல்ல பரமபுருஷனுடைய பாதார விந்தங்களையே மேலான புருஷார்த்தமாக நினைத்திருப்பவர்களும், ஸமஸ்த பூதங்களையும் தங்களோடொத்தவைகளாகப் பார்க்கின்றவர்களுமான ஸாதுக்கள், அஹங்காரத்திற்கிடமான தனத்தை உபேக்ஷிப்பார்களே (பொருட்படுத்த மாட்டார்களே) அன்றி, அதை விரும்பமாட்டார்கள். அவர்களுக்கு அதனால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் ஒன்றும் இல்லை. 

அந்தப் பணம் அனர்த்தங்களுக்கிடமான மனத்தை விளைக்குமாகையால், நிந்திக்கத்தக்கதேயன்றிப் புகழத்தகுந்ததன்று. ஆகையால், அது பெரும்பாலும் அஸத்துக்களிடத்தில் (நற்புத்தி அற்றவரிடம்) சேருமேயன்றி, ஸத்துக்களிடத்தில் (நற்புத்தி உள்ளவர்களிடம்) சேராது. பணத்தை விரும்பாத ஸாதுக்களுக்கு, பணக் கொழுப்பினால் அஹங்காரமுற்றவர்களும், பெரியோர்களோடு ஸஹவாஸம் (தொடர்பு) அற்றவர்களுமாகிய அஸத்துக்களால், ஆக வேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. அவர்கள் ஸாதுக்களால் உபேக்ஷிக்கத் (ஒதுக்கத்) தகுந்தவர்களே. ஆகையால், செல்வப்பெருக்கினால் கொழுத்து விவேகமற்றவர்களும், இந்திரியங்களை அடக்காத மூடர்களும், ஸ்த்ரீலோலர்களும் (பெண்களிடத்தில் மயங்கியவர்களும்), வாருணீ என்ற மதுவைப் பருகி மதித்திருப்பவர்களுமாகிய, இந்த யக்ஷர்களுக்கு அஜ்ஞானத்தினால் உண்டாயிருக்கிற கொழுப்பைப் போக்குகிறேன். 

இவர்கள் லோகபாலனான (வடதிசைக்குத் தலைவனான) குபேரனுடைய பிள்ளைகளாயிருந்தும், அஜ்ஞானம் (அறியாமை) குடி கொண்டு, தங்கள் அரையில் ஆடையற்றிருப்பதையும் அறியாதிருக்கிறார்கள். ஆகையால், இவர்கள் ஸ்தாவர ஜன்மத்தையே (மரம், செடி போன்ற பிறவியையே) பெறுதற்குரியவர்கள். இப்படியாகில்தான் இவர்கள் மீளவும் இவ்வாறு அவிவேகம் (அறிவின்மை) செய்ய மாட்டார்கள். அந்த ஸ்தாவர ஜன்மத்திலும், என்னுடைய அனுக்ரஹத்தினால், இவர்களுக்குப் பூர்வ ஜன்ம ஸ்மரணம் மாறாதிருக்கும். மற்றும், இவர்கள் என்னுடைய அனுக்ரஹத்தினால், தேவமானத்தினால், நூறு வர்ஷங்கள் சென்ற பின்பு, வஸுதேவ குமாரனான ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய ஸாந்நித்யம் பெற்று, ஸ்தாவர ஜன்மம் நீங்கி, ஸ்வர்க்க வாஸிகளான தேவர்களின் தன்மையை அடைந்து, அந்த வாஸுதேவனிடத்தில் பக்தியுடையவர்களாய் இருக்கப்போகிறார்கள்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தேவர்ஷியாகிய நாரதர் இவ்வாறு மொழிந்து, நாராயணாச்ரமத்திற்குச் சென்றார். நலகூபர மணிக்ரீவர்கள், யமளார்ஜுன (மருத) வ்ருக்ஷங்களாகப் (மரங்களாகப்) பிறந்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணன், பகவத் பக்தர்களில் முக்யராகிய நாரத மஹர்ஷியினுடைய அவ்வசனத்தை உண்மை செய்யும்பொருட்டு, மெல்ல மெல்ல உரலை இழுத்துக்கொண்டு, யமளார்ஜுன வ்ருக்ஷங்கள் இருந்த இடத்திற்கு வந்தான். “தேவர்ஷியாகிய நாரதர் எனக்கு மிகவும் அன்பிற்கிடமானவர். ஆகையால், அவர் குபேரனுடைய குமாரர்களைக் குறித்து என்ன மொழிந்தாரோ; அதை அப்படியே நிறைவேற்றுகிறேன்” என்னும் கருத்துடன் யமளார்ஜுன வ்ருக்ஷங்களின் இடையில் சென்றான். 

அந்த ஸ்ரீக்ருஷ்ணன் அங்கு நுழைந்த உடனே, அவன் இழுத்துக்கொண்டு போகிற உரல் குறுக்கே விழுந்தது. மாயக்குழவியாகிய அந்தத் தாமோதரன், தன்னைத் தொடர்ந்து வருகின்ற உரல் நடுவே குறுக்கிட்டுத் தடைபட்டு நிற்பதைக் கண்டு, அதை வலிவுடன் இழுக்கையில், யமளார்ஜுனங்கள், அவ்வேகத்தினால் அடியோடு வேர்களெல்லாம் முறிந்து, ஸ்ரீக்ருஷ்ணனுடைய பராக்ரமத்தினால் அடித்திப்பை, தளிர்கள், கிளைகள் இவையெல்லாம் மிகவும் நடுங்கப் பெற்று, பெருங்கடுமையான சப்தம் செய்து கொண்டு விழுந்தன. அப்பொழுது, அந்த வ்ருக்ஷங்களினின்று, அக்னியைப் போல பெரிய ஒளிப்பெருக்கினால் திசைகளையெல்லாம் விளங்கச் செய்து கொண்டு இரண்டு ஸித்தர்கள் கிளம்பினார்கள். 

அவர்கள், ஸ்ரீ கிருஷ்ணனுக்கு அருகாமையில் வந்து, ஸமஸ்த லோகங்களுக்கும் நாதனாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனைத் தலையால் வணங்கி, அஞ்சலி செய்து கொண்டு, ரஜோகுணம் கழிந்து, பரம ஸாத்விகர்களாகி, இவ்வாறு மொழிந்தார்கள்.

ஸித்தர்கள் சொல்லுகிறார்கள்:- ஓ க்ருஷ்ண! க்ருஷ்ண! மிகுந்த ப்ரபாவமுடையவனே! நீ ஸாதாரண இடைப் பிள்ளையல்லை. ஆதிகாரணனாகிய பரமபுருஷன் நீயே. கார்ய தசையில் (படைப்பு நிலையில்) பெயர், உருவங்களுக்கு இடமாகி, ஸ்தூலமாயிருப்பதும் (நாம் காணும்படி இருப்பதும்), காரண தசையில் (படைப்புக்கு முன்) பெயர், உருவங்கள் இன்றி ஸூக்ஷ்மமாயிருப்பதுமாகிய (கண்ணுக்குப் புலப்படாமல் நுட்பமாக இருப்பதுமாகிய), இந்த ப்ரபஞ்சமெல்லாம் ஸ்வரூபத்தினாலும், குணங்களாலும், அளவற்ற பரப்ரஹ்மமாகிய உன்னுடைய சரீரமென்று வேதாந்தங்கள் கூறுகின்றன. நீ ஒருவனே ஸமஸ்த பூதங்களுடைய தேஹம், ப்ராணன், மனம், இந்திரியம் இவற்றிற்கு நியாமகன் (நியமிப்பவன்). ப்ரபஞ்சத்தைத் தூண்டுகிற காலமும் நீயே. ஷாட்குண்ய பூர்ணனே! நீ சேதனா சேதனங்களுக்கு நேருகிற எவ்வகை விகாரங்களும் (மாற்றங்களும்) தீண்டப்பெறாதவன். ஸ்ரீ மஹாவிஷ்ணுவென்று கூறப்படுகிற பரமபுருஷன் நீயே. நீயே மஹத் தத்வம். அந்த மஹத் தத்வத்திற்குக் காரணமாயிருப்பதும், ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களை வடிவாகவுடையதுமாகிய ஸூக்ஷ்ம (மூல) ப்ரக்ருதியும் நீயே. தேஹாதிகளை அதிஷ்டானம் செய்பவனும் (நியமிப்பவனும்), ஸமஸ்த சரீரங்களிலும் உள்ள மனம், முதலிய இந்திரியங்களையெல்லாம் ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய ஜீவனும் நீயே. இந்திரியங்களால் அறியப்படுகிற சப்தாதி விஷயங்கள், அவ்விந்த்ரியங்களை அறிய வல்லமையற்றிருப்பது போல, ப்ராக்ருத குணங்களின் பரிணாமங்களும் (மாற்றங்களும்), உன்னால் அறியப்படுகிறவைகளுமான இந்திரியங்கள், உன்னை அறியவல்லவையல்ல. 

இவ்வுலகத்தில், குணகார்யங்களான இந்திரியங்களால் சூழப்பட்ட எந்த ஜீவன்தான் அக்குணங்களுக்குக் காரணனும், ப்ரகாசனுமாகையால் அவற்றிற்கு முன்னமே ஸித்தனாயிருக்கின்ற உன்னை, ஸாக்ஷாத்கரிக்க வல்லவனாவான்? யோக அப்யாஸத்தினால் (யோக பயிற்சியினால்) தெளிந்த மனமுடையவர்களே உன்னை அறிவார்கள். அத்தகையனும், ஷாட்குண்யபூர்ணனும், ஸாதுக்களைக் காக்கும் பொருட்டு வஸுதேவனுக்குப் பிள்ளையாய் வந்து அவதரித்தவனும், எல்லாவற்றையும் படைப்பவனும், தனக்கு மாத்ரமே விளங்குகின்ற குணங்களால் மறைக்கப்பட்ட மஹிமையுடையவனும், (ஸத்தவ, ரஜஸ், தமோ குணங்களின் கார்யமான தேஹஸம்பந்தம் சேதனனுக்குப் பகவானுடைய மஹிமையை மறைக்கின்ற தென்று கருத்து. அக்குணங்கள் பகவானுடைய மாயை – ஆச்சர்ய சக்தி என்பதால் பகவானால் மட்டுமே அறியப்படக் கூடியது).  இயற்கையில் அளவற்ற குணங்களுடையவனும், ஸ்வரூபத்திலும் அளவற்றவனுமாகிய, உனக்கு நமஸ்காரம். கர்மத்தினால் விளையும் சரீர ஸம்பந்தமற்ற நீ, மனுஷ்யர் முதலிய ப்ராக்ருதர்களுக்குள் அவர்களைப்போலவே அவதரிப்பினும், உன்னுடைய அவதாரங்கள் எல்லாம் இணையெதிரில்லாதவைகளும், கர்ம வச்யர்களான (புண்ய, பாப வினைகட்கு வசப்பட்டவருமான) ப்ராணிகளிடத்தில் நேரக் கூடாதவைகளும், அந்தந்த அவதாரங்களுக்கு அஸாதாரணங்களுமான வீரச்செயல்களால் கர்மவச்யரான (புண்ய, பாப வினைகட்கு வசப்பட்டவரான) ப்ராணிகளைக்காட்டிலும் விலக்ஷணங்கள் என்று அறியப்படுகின்றன. ப்ராணிகளின் விருப்பங்களையெல்லாம் கொடுக்க வல்லவனாகிய நீ, பலராமனுடன் உன் ஸங்கல்ப, ரூப, ஜ்ஞானத்தினால், இஹலோக (இந்த உலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய  வேறு உலக) ஸுகங்களையும், மோக்ஷ ஸுகத்தையும் விளைக்கும் பொருட்டு இப்பொழுது அவதரித்தமை யுக்தமே (சரியே). 

சிறந்த கல்யாண குணங்களுடையவனே! உனக்கு நமஸ்காரம். மஹா மங்கள ஸ்வபாவமுடையவனே! உனக்கு நமஸ்காரம். ஜகத்திற்கெல்லாம் மங்களத்தை விளைப்பவனே! உனக்கு நமஸ்காரம். மிகவும் அமங்களமான வ்ருக்ஷ ஜன்மத்தினின்று எங்களை விடுவித்தாயாகையால், நீ விச்வமங்களன் என்பது எங்களிடத்திலேயே வெளியாயிற்றல்லவா? 

ஜகத்திற்கெல்லாம் ஆதாரனும், ஜகத்தில் எங்கும் நிறைந்தவனும், அந்த ஜகத்தின் குணங்கள் தன்மேல் தீண்டப்பெறாமல் திகழ்கின்றவனுமாயிருக்கையால் வாஸுதேவனென்று பெயர் பெற்றவனும், தாஹம், சோகம், மோஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) அற்றவனும், யாதவர்களுக்கு ப்ரபுவுமாகிய, உனக்கு நமஸ்காரம். எல்லையற்ற மஹாநந்தமுடையவனே! எங்களை உன்னடியார்களுக்கு அடியராயிருக்கும்படி அனுக்ரஹித்து, அனுமதி கொடுப்பாயாக. உன் பக்தராகிய நாரத மஹர்ஷியின் அனுக்ரஹத்தினால்தான், ஷாட்குண்ய பூர்ணனும், புருஷார்த்த நிதியுமாகிய (அடையப்பட வேண்டிய செல்வமுமான), உன்னுடைய தர்சனம் எங்களுக்கு உண்டாயிற்று. இவ்வாறு மஹா பலன்களை விளைப்பதாகையால், உன் தாஸர்களுக்குத் தாஸராயிருக்கும் தன்மையை நாங்கள் வேண்டுகிறோம். அவ்வாறு அருள்புரிவாயாக. 

ஜகத்திற்கெல்லாம் ஆதாரனே! எங்களுடைய நாக்கு, உன் குணங்களைச் சொல்லுவதிலும், காதுகள் உன் கதையைக் கேட்பதிலும், கைகள் உன் பூஜா ரூபமான கர்மங்களிலும், மனம் உன் பாதார விந்தங்களை த்யானிப்பதிலும், எங்கள் தலை உன்னை வணங்குவதிலும், உன்னடியார்களை வணங்குவதிலும், கண்கள் உன் சரீரங்களான பெரியோர்களைக் காண்பதிலும், உன் திருவுருவங்களைக் காண்பதிலும், ஊக்கமுற்றிருக்கும்படி அருள்புரிவாயாக.

ஸ்ரீ சுகர் சொல்லுகிறார்:- கோகுலத்திற்கு நாதனாகிய ஸ்ரீ க்ருஷ்ணபகவான், இவ்வாறு அந்த யக்ஷர்களால் துதிக்கப்பெற்று, கயிற்றால் உரலில் கட்டுண்டிருந்தபடியே சிரித்துக்கொண்டு, யக்ஷர்களைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:- மன இரக்கமுடைய நாரதமுனிவர், செல்வக்கொழுப்பினால் கண் தெரியாதிருந்த உங்களுக்கு சில வைராக்ய வசனங்களைச் சொல்லி, செல்வத்தினின்று நழுவச் செய்து, உங்களை அனுக்ரஹித்த விஷயம் எனக்கு முன்னமே தெரியும். கண்களுக்கு இருட்டினால் உண்டாகும் தடை ஸூர்யனைக் காணும் வரையிலுமே தொடர்வது போல, இந்த ஸம்ஸாரத்திலுள்ள புருஷனுக்கு, ஸம்ஸார பந்தமானது, என்னிடத்தில் நிலைநின்ற மனமுடையவர்களும், ஸமஸ்த பூதங்களையும் தங்களோடு ஸமமாகப் பார்க்கும் தன்மையர்களுமான பெரியோர்களின், தர்சனம் நேரும் வரையிலுமே தொடர்ந்து வருமன்றி, அதற்கு மேல் தொடராது. ஓ நளகூபர மணீக்ரீவர்களே! நீங்கள் என்னையே மேலான கதியாகப் பாவித்துக் கொண்டு உங்களிருப்பிடம் செல்வீர்களாக. உங்களுக்கு என்னிடத்தில் நல்ல ப்ரீதி விசேஷம் உண்டாயிற்று. இதுவே அனைவராலும் ஆசைப்படத் தகுந்தது. இது ஸம்ஸார பந்தத்தைப் போக்கும்.

ஸ்ரீ சுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு பகவானால் மொழியப்பெற்ற அந்த யக்ஷர்கள், உரலில் கட்டுண்டிருக்கின்ற அந்த ஸ்ரீ க்ருஷ்ணனை அடிக்கடி ப்ரதக்ஷிணஞ் செய்து கொண்டு (வலம் வந்து),  வடதிசையைக் குறித்துச் சென்றார்கள். 

மருத மரங்களைச் சாய்த்த லீலை

(உரலுடன் கட்டுண்டிருந்த கண்ணன், உரலையும் இழுத்துக் கொண்டு தவழ்ந்து செல்லத் தொடங்கினான். அப்போது வழியிலிருந்த இரட்டை மருத மரங்களுக்கு நடுவே கண்ணன் சென்றான். அவனுடன் கட்டப்பட்டிருந்த உரல் அந்த மரங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டது. கண்ணன் வேகமாக இழுத்த போது, இரண்டு மரங்களும் முறிந்து கீழே விழுந்தன. அம்மரங்களின் வடிவில் இருந்த குபேரனின் மகன்களான நளகூபரன், மணிக்கிரீவன் இருவரும் சாப விமோசனம் பெற்றுக் கண்ணனைத் துதித்து விட்டு தேவலோகம் சென்றார்கள்.

இந்த இரட்டை மருத மரங்கள் நம் மனத்திலுள்ள காமம், கோபம் என்னும் இரட்டைத் தீய குணங்களைக் குறிக்கின்றன. நாம் எவ்வளவு முயன்றாலும், காமத்தையும் கோபத்தையும் நம் மனங்களிலிருந்து அகற்றுவது கடினம். ஆனால் கண்ணனை நம் மனத்தின் நடுவே கொண்டு வந்து வைத்து விட்டால், அதாவது இந்த இரட்டை மரங்களான காம கோபங்களுக்கு நடுவில் கண்ணன் வந்து விட்டால் இரண்டும் தானே முறிந்து விழுந்து விடும் என்பதில் ஐயமில்லை.)

பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக