வியாழன், 12 டிசம்பர், 2019

திங்கள் மும்மாரி பெய்ய… - மனத்துக்கினியான்

வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் பாடியது இந்த பாடல். பிஞ்சிலே பழுத்த பழம் என்பதற்கு தற்கால வழக்கில் நாம் கொள்ளும் பொருள் வேறு. ஆனால், இங்கே சொல்லப்பட்ட ஆண்டாளின் தன்மையோ, எவரும் எட்டிப் பார்க்காத உச்சம். பக்தி புக வேண்டிய இள வயதில் கண்ணனின் பக்தி ஆழமாகப் புகுந்து, அதனால் தமிழுக்கும் தமிழினத்துக்கும் பக்தி இலக்கியத்துக்கும் ஒருசேரப் பெருமையும் வளமையும் தந்தவர் ஸ்ரீஆண்டாள். 

பழங்காலத்தில் வழக்கத்தில் இருந்தது காத்யாயனி விரதம். மார்கழி மாதத்தில் இளம் பெண்களால் விரதம் கைக்கொள்ளப்பட்டது. பனி மிகுந்த இம்மாதத்தில் இறைச் சிந்தனையில் காலம் கழித்து, ஊன் மறுத்து, உடலுக்கு உரமூட்டும் பாலும் தயிரும் நெய்யும் விலக்கி விரதம் கொண்டனர் இளம் பெண்கள். இதனையே செய்துகாட்டினார் ஸ்ரீஆண்டாள். தோழியருடன் சேர்ந்து கண்ணனை நினைந்து அவர் கொண்ட விரதமே பாவை நோன்பாக வெளிப்பட்டது. முப்பது நாளும் நாளொரு பாட்டாக முப்பதாகி திருப்பாவை மலர்ந்தது. பாவைப் பாட்டுடன், பூவைச் சூடி அழகுபார்த்து அரங்கனுக்கு மாலையிட்ட ஆண்டாளின் நோன்பு, அன்பர்களின் ஆன்மிக சாதனைக்கு ஒரு கருவியாகப் போனது. 

மார்கழித் திங்கள் பிறந்தால், மனதில் திருப்பாவையும் குடிகொள்ளும். பாவை நோன்பின் மூலம் கண்ணனை அடைந்த விதத்தைப் படிப்படியாகச் சொல்லி அந்த அனுபவத்தை ஊட்டிய ஆண்டாள் இந்த மாதத்தின் நாயகியாகத் திகழ்கிறார். இந்த மண்ணின் ஆன்மிகம், இறைவனை அன்பரோடு ஒருவராக இருத்தி அழகு பார்த்தது.
நண்பனாக, தலைவனாக, தம்பியாக, அண்ணனாக, தந்தையாக, ஏன் வேலைக்காரனாகக்கூட இறைவன், தன் அடியாரோடு கைகோத்து வந்த சங்கதிகள் ஏராளம். அப்படி அந்தக் கடவுளைக் காதலனாகக் கண்டு பாடிய உள்ளங்களும் அநேகம். அவர்களில் ஆண்டாள் இயல்பாகவே பெண் ஆனதால், காதல் ரசம் பொங்க கண்ணனைப் பற்றும் உபாயத்தைத் தன் பாசுரங்களில் வெளிப்படுத்தினார்.

திருப்பாவை முதல் பாசுரத்தில் கண்ணபிரானே உபாயம் என்பதால், இந்த நோன்பைக் காரணமாக வைத்து "கிருஷ்ணானுபவம் பெற வாருங்கள்" என திருவாய்ப்பாடிப் பெண்களை அழைக்கிறார். இரண்டாம் பாசுரத்தில், பாற்கடலில் பையத் துயின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவதும், சாதுக்களுக்கு அவர்கள் வேண்டும் அளவு பொருட்களையும், பிட்சையையும் கொடுப்பதும் நோன்பு நோற்பவர்கள் செய்யக்கூடிய செயல்கள், நெய், பால் போன்றவற்றை அமுது செய்தல், கண்களில் மையிட்டுக் கொள்ளல், பூக்கள் சூடிக் கொள்ளல், பெரியோர்கள் செய்யக் கூடாதென விலக்கியவற்றை செய்தல், தவறான சொற்களை சொல்லுதல் போன்றவை செய்யக் கூடாத காரியங்கள் என தெளிவிக்கிறார்.

ஓங்கி உலகளந்த பாசுரத்தில், தங்கள் நோன்பினாலே இவ்வுலகத்துக்குக் கிடைக்கும் பலன்களை அடுக்குகிறார். "நாட்டுக்கு ஒரு குறையும் இல்லாமல் மாதம் மும்மாரி மழை பெய்யும், அதனால் உயர்ந்து பருத்த செந்நெற் பயிர்களின் அளவுக்கு கயல்மீன்கள் துள்ளும், அழகிய வண்டுகள் குவளை மலர்களில் கண் உறங்கும், பசுக்கள் குடங்கள் நிறைய பால் சொரியும்..." என்கிறார். வருண தேவனை அழைத்து, "கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, மேகமாகி, ஊழி முதல்வன் உருவம் போலே கறுத்து, ராமபிரானின் சார்ங்கமெனும் வில்லில் இருந்து புறப்படும் பாணங்களைப் போலே, உலகத்தார் அனைவரும் வாழும் படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடும் படியாகவும் மழையைப் பொழியச் செய்வாயாக'' என்று வேண்டுகிறார்கள் கோபியர்கள்.

அப்போது ஒருத்தி, "நாம் இப்படி நோன்பு நோற்க ஆரம்பித்திருக்கிறோம். நம் பாவங்களால் இடையூறு ஏதுமில்லாமல் நோன்பு நிறைவேற வேண்டுமே'' என்று கவலையோடு கேட்கிறாள். அதற்கு, "வடமதுரை மைந்தனை யமுனைத் துறைவனை தூய்மையுடன் நல்ல மலர்கள் தூவி வணங்கி, வாயாரப் பாடி, மனத்தாலே தியானித்தால், எல்லாப் பாவங்களும் தீயிலிட்ட தூசிபோல் அழிந்து போகும்'' என்று பதில் சொல்கிறார் ஆண்டாள். இப்படி, முதல் ஐந்து பாசுரங்களாலே கிருஷ்ணானுபவம் கிடைப்பதற்கு வேண்டியதைச் சொன்னவர்கள், அடுத்த பத்து பாசுரங்களில் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்காக தோழிகளை எழுப்புகிறார்கள். பின்னர் ஸ்ரீநந்தகோபர் திருமாளிகை வாசலில் நிற்கிறார்கள். நேய நிலைக்கதவம் நீக்குமாறு வேண்டுகிறார்கள். அங்கே நந்தகோபரையும், யசோதைப் பிராட்டியையும், கண்ணபிரானையும், பலராமனையும் துயில் எழுப்புகிறார்கள். எல்லோரும் எழுந்திடினும் கண்ணன் விழிக்காதது கண்டு, "நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்'' என்று பிராட்டியை எழுப்புகிறார்கள்.

நப்பின்னைப் பிராட்டி கதவு திறக்க எண்ணி துயில் கலைந்து எழுந்தாள். "நாமல்லவா நம் பிரியமானவர்களுக்கு கதவு திறந்து விட வேண்டும்'' என்று நினைத்த கண்ணன், அவள் கதவைத் திறக்க முடியாதபடி அணைத்துக் கொண்டான். கணநேரமும் கண்ணனை எழ சம்மதியாமலும், ஒரு சிறிதும் அவனைப் பிரிந்திருப்பதைப் பொறுக்கமாட்டாமலும் இருப்பது உன் இயற்கையான குணத்துக்குத் தகுந்ததன்று என்று நப்பின்னைப் பிராட்டியை இவர்கள் கோபிக்கிறார்கள். அவளும், தக்க நேரம் பார்த்து விண்ணப்பிக்கலாம் என்று சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். நாம் கோபித்துக் கொண்டதால்தான் பிராட்டி பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்து, கண்ணனை எழுப்ப, அவன் வாய் திறவாமையாலே, பிராட்டியை நாம் பேசின பேச்சைக் கேட்டு கண்ணன் திருவுள்ளம் கலங்கினானோ என்று எண்ணி அவளுடைய பெருமைகளைப் பேசி, அவளிடம் தங்கள் விருப்பத்தை மீண்டும் விண்ணப்பிக்கிறார்கள்.

நப்பின்னைப் பிராட்டி, "என்னைச் சரணடைந்த பின் உங்களுக்கு ஒரு குறைவும் உண்டாகக் கூடுமோ ஆகையால் நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்... கண்ணனை எழுப்புவோம்'' என்றாள். இப்படி இவர்கள் நெஞ்சுருக நெக்குருக விண்ணப்பித்தவுடன், கண்ணன், "பிராட்டியை அண்டினவர்களான இவர்களை இவ்வளவு பாடு படுத்திவிட்டோமே'' என்று தன்னைத் தானே நொந்து கொண்டு, இவர்களுக்கு நல்வார்த்தைகள் சொன்னான். இவர்களும் கண்ணனின் நடையழகைக் காணும்படி செய்யுமாறு வேண்ட, கண்ணனும் அதனை ஏற்றான். சீரிய சிங்காசனம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். அந்த நடையழகிலே இவர்கள் தம்மை மறந்தார்கள். உலகமளந்த அவன் திருவடிகளுக்கும், இலங்கையை அழித்த அவன் பலத்துக்கும், சகடாசுரன் அழியும்படி உதைத்த அவன் புகழுக்கும், கோவர்த்தனக் குன்றை குடையாக எடுத்த அவனுடைய குணத்துக்கும், அவனுடைய பகை கெடுக்கும் வேலுக்கும் அவர்கள் மங்களாசாசனம் செய்தார்கள். பின், "நாங்கள் உன்னிடம் பறை கொள்வதற்காக வந்தோம். எங்கள் மீது இரக்கம் காட்டவேணும்'' என்று வேண்டுகிறார்கள்.

மங்களாசாசனம் செய்யும் நீங்கள், "பறைகொள்ளுதற்காக வந்ததாகச் சொல்கிறீர்களே இரண்டும் பொருத்தமானதாக இல்லையே'' என்று கண்ணன் கேட்கிறான். "பறை என்பது ஒரு காரணமே... உண்மையில் உன்னிடம் உன்னையே யாசித்து வந்தவர்கள் நாங்கள்'' என்று இவர்கள் உரைக்கிறார்கள்.
 "சரி என்னை வேண்டும் நீங்கள், ஏன் பறையை வேண்ட வேண்டும்'' என்று கண்ணன் கேட்கிறான். அதற்கு இவர்கள், "உன்னைக் காண்பதற்கு வாய்ப்பாக ஒரு நோன்பை நோற்கச் சொன்னார்கள். அதற்கு மார்கழி நீராட்டம் என்கிற அனுஷ்டானத்தை செய்திருக்கிறார்கள். அதற்கு சங்கங்கள், பெரும் பறைகள், பல்லாண்டை இசைப்பவர்கள், கோல விளக்காகிய மங்கல தீபங்கள், கொடிகள், விதானங்கள் ஆகியன தந்தருள வேண்டும்'' எனப் பிரார்த்திக்கிறார்கள். அவர்கள் கேட்ட அனைத்தையும் கண்ணபிரான் கொடுக்கிறான். பின்னர், "போதுமா?'' என்க, அதற்கு, "நோன்புக்கு வேண்டுபவை இவையே, அது போதும்...நோன்பு நோற்ற பிறகு உன்னிடம் பரிசாக சிலவற்றைப் பெற விரும்புகிறோம்'' என்றார்கள். அது என்ன என்று அவனும் கேட்க, "நீயும் பிராட்டியும் ஆபரணங்களாகிய சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ ஆகியவற்றையும், ஆடைகளையும் அணிந்து கொண்டு வரவேண்டும். அதன் பின் உங்களுடன் ஒன்றாக அமர்ந்து, மூட நெய் பெய்து முழங்கை வழிவார பால் அமுது செய்ய வேண்டும்'' என்ற தங்கள் விருப்பத்தைச் சொல்கிறார்கள்.

கண்ணனும் அவர்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கிறான். பின் மனத்தில் இப்படி நினைத்தான். "ஊருக்கு வேண்டிய பறையை நம்மிடமிருந்து பெற்றுவிட்டார்கள். இனி தங்களுக்கான பறையை (அதாவது, தம்மைத்தான்) கேட்கப் போகிறார்கள்' என்பதை அறிந்து கொள்கிறான். பிறகு, "நீங்கள் விரும்பும் பறையைப் பெற ஏதாவது சாதனங்களை அனுஷ்டானம் செய்ததுண்டா? எதையும் அனுஷ்டிக்காமல் என்னைப் பெற முடியாதே'' என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் எந்த சாதனமும் செய்ய அருகதையற்ற அஞ்ஞானிகளல்லவா... பசுக்களின் பின்னே சென்று காடுகளை அடைந்து உண்டு திரிவோம். அறிவொன்றும் இல்லாத எங்கள் ஆயர் குலத்தில் உன்னைப் பிறக்கப் பெறுவதற்கு ஏற்ற புண்ணியங்கள் செய்தவர்களாக இருக்கிறோம். எம்பிரானே உன்னோடு எங்களுக்குள்ள உறவு ஒழிக்க ஒழியாது. அன்பினாலே கட்டுண்டோம். அந்த அன்பினால் உன்னை ஏதாவது விபரீதமாகச் சொல்லியிருந்தாலும் பொறுத்துக்கொள்... இந்த அன்பால் நாங்கள் விரும்பும் பறையை எங்களுக்கு அருள வேண்டும்'' என்கிறார்கள்.

"காலம் உள்ளளவும் உனக்கே அடிமை செய்வோம்'' என்று தாங்கள் பறை என்று சொல்லுவது கண்ணனின் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமே என்று முடிவாக நிர்ணயிக்கிறார்கள். அந்தக் கைங்கர்யமும் அவன் உகப்புக்காகவே அன்றி, தங்கள் ஆனந்தத்துக்காக அன்று, என்னும் அரும்பொருளை அறிவிக்கிறார்கள். இதைக் கேட்ட கண்ணன் அதை உகந்து அருளினான். அதற்கு இவர்கள், "கண்ணனே, இவ்வாறு நாங்கள் உன்னருள் பெற்ற வைபவத்தை ஆண்டாள் சங்கத்தமிழ் மாலையாகிய திருப்பாவையின் முப்பது பாசுரங்களிலும் பாடினாள். அவற்றை தப்பாமல் ஓதுபவர்கள், செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலாகிய கண்ணபிரானால் எல்லாவிடத்திலும் அவனுடைய திருவருளைப் பெற்று இன்புறுவர்கள்'' என்று கூறி, திருப்பாவை பாடினால் கிட்டும் பலனைச் சொல்கிறார் ஆண்டாள்.

 அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள் 
 தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் - பிஞ்சாய்ப்
 பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நாளும்
 வழுத்தாய் மனமே மகிழ்ந்து

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - தினமணி டிசம்பர் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக