எட்டாம் திருமொழி
பாசுரம் - 1
''விண்ணில மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கு ஓர் பெருமையே"
எம்பெருமான் மீது ஏற்பட்ட காதல் வேட்கையால் மனம் வாடியிருந்த ஆண்டாள், எம்பெருமான் இடக்கையில் உள்ள திருச்சங்குடன் சிறிது நேரம் உரையாடி துன்பத்தை மறக்க முயன்றாள். ஆனால் ஆண்டாளின் குறைகளைக் கேட்டு மறு வார்த்தை பேசாமல் இருந்தது திருச்சங்கு. எனவே தன் துயரம் எல்லை கடந்தது. கார்காலம் ஆதலால் கருத்த மேகங்கள் அங்குமிங்கும் திரிந்தன. இதைக் கண்டவுடன் கரிய திருமேனியுடைய எம்பெருமான் அம்மேகங்களுடன் வந்திருப்பான் என்று கருதினாள். எம்பெருமான் உங்களுடன் வந்திருக்கானா என்று மேகங்களைக் கேட்டாள். ஆனால் மேகங்களும் ஏதும் பேசவில்லை.
ஆகவே மேகங்களை நோக்கி, நீங்கள் என் தலைவனான திருவேங்கடமுடையான் திருக்கோயிலுக்குச் சென்று என் துயரத்தை அறிவியுங்கள், என்று வேண்டுகின்றாள்.
ஆகவே மேகங்களை நோக்கி, நீங்கள் என் தலைவனான திருவேங்கடமுடையான் திருக்கோயிலுக்குச் சென்று என் துயரத்தை அறிவியுங்கள், என்று வேண்டுகின்றாள்.
வானமெங்கும் பந்தல் போல் உலாவிவரும் மேகங்களே என் தலைவனான திருவேங்கடமுடையானும் உங்களோடு கூட இங்கு எழுந்தருளி உள்ளானோ? என்று ஆண்டாள் மேகங்களை நோக்கிக் கேட்டாள். அதற்கு மேகங்கள் மறுமொழி ஏதும் பேசவில்லை. ஆண்டாள் கண்ணீர் விட்டு மேகங்களே நான் இப்படிக் கண்ணீர் விட்டு அழும்படி என்னைத் துன்புறுத்துவது திருவேங்கடவனுக்கு ஒரு பெருமையோ? நீங்களே சொல்லுங்கள் எனறாள்.
பாசுரம் - 2
"மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய் நானிருப்பேனே"
ஓ காளமேகங்களே நீங்கள் எனக்காக, உங்கள் கொடைப் பண்பினால் இன்று புதிதாக ஏவல் செய்ய வேண்டுமோ? பயன் நோக்காது மழையைப் பொழியும் வள்ளல் தன்மையை இயல்பாகக் கொண்டவர்கள் அல்லவா நீங்கள். விலை உயர்ந்த முத்துகளையும், பொன்னையும் ஒருவரும் வேண்டாமலிருக்க, நீங்கள் மழையைப் பொழிகின்றீர்கள். இப்படிப்பட்ட வள்ளல் தன்மை மிக்க உங்கள் பாதங்களைத் தொட்டு வேண்டுகின்றேன். எனக்காகத் திருவேங்கடவனிடம் ஒரு வார்த்தை சொல்லலாகாதா?
நான் திருவேங்கடவனிடத்தில் வைத்திருக்கும் காமமாகிற தீயானது, எனது கை, கண் போன்ற வெளி உறுப்புக்களைத் துன்புறுத்துவது மட்டுமில்லாமல் என் உள் மனத்திலும் புகுந்து என்னை வாட்டுகின்றது. தென்றல் காற்றானது என் காமத்தீயினுக்குத் துணையாயிருந்துகொண்டு எனது நோயை அதிகப்படுத்துகின்றது. இந்த என் நிலையைத் திருவேங்கடவனிடம் சென்று சொல்லி, அவன் எனக்கு அருள்புரியும்படிச் செய்யுங்கள் என்று ஆண்டாள் மேகங்களிடம் வேண்டினாள்.
பாசுரம் - 3
"ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடிழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத்து இருப்பேனே."
ஆண்டாள் எம்பெருமானைப் பிரிந்து, அதனால் ஏற்பட்ட துக்கத்தினால் உடல் அழகொழிந்து, தனது பொன்னிறம் மாறி பசலை அடைந்து, உடல் மெலிவால் கை வளைகள் கழன்று, உள்ளம் தளர்ந்து, உறக்கம் ஒழிந்து, சீர் குலைந்து இருக்கும் இருப்பை என்னால் சொல்ல இயலவில்லை. துயர்வரின் நினைமின் எனும் வாக்கிற்கிணங்க, இக்காமத்தால் ஏற்பட்ட துன்பம் நீங்க, எனது நாயகனான திருவேங்கடமுடையான் திருக்கல்யாண குணங்களைப் பாடிப் பரவி, உயிருடன் இருக்க நினைத்தாலும் ஒளி, அழகு, வளை, உள்ளம் இவை அழியும்படி நேர்ந்த இந்த நிலையில், குணம் பாடிப்பரவ என்னால் இயலுமோ? நீங்களே சொல்லுங்கள் என்று மேகங்களிடம் கூறினாள்.
இதனால் தன் நிலையை திருவேங்கடவனிடத்தில் சென்று சொல்லித் தனக்கு அருள் புரிந்து காக்கும் படிச் செய்யுங்கள் என்று மேகத்திடம் ஆண்டாள் முறையிடுகின்றாள்.
பாசுரம் - 4
"மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வர்க்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என்புரிவுடைமை செப்புமினே"
கரிய திருமேனியையுடைய எம்பெருமான் திருமார்பில் பொன் போன்ற ஒளியுடைய திருமகள் அகலகில்லேன் இறையுமென்று வாழ்கின்றாள். அதைப்போல கரிய மேனியையுடைய உங்களிடையே ஒளிமயமான மின்னல் மின்னுகின்றது. உங்களைக் கண்டவுடன் திருமகளுடன் வாழும் திருவேங்கடவன் திருவுருவம் என் கண்முன்னே தோன்றுகின்றது. மின்னலோடு கூடி எழுகின்ற மேகங்களே திருவாழ் மார்பனான திருவேங்கடவனிடம் சென்று எனக்காக ஒரு வார்த்தை சொல்லவேண்டும். என் மார்பகத்துள்ள இள முலைகளை திருவேங்கடவன் விரும்பி, அணைத்துக் கொண்டு இடை விடாமல் கிடக்கவேண்டுமென்று நான் ஆசைப்படுகின்றேன். என் ஆவலை அவனிடம் சென்று சொல்லுங்கள் என்று ஆண்டாள் மேகங்களிடம் வேண்டுகின்றாள்.
பாசுரம் - 5
"வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட மலர்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடலிடந்தான்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே."
விண்ணில் எங்கும் பரந்து விண்பரப்பையே அபகரித்துக் கொண்டு, ஓங்கி கிளம்புகின்ற மேகங்களே தேன் நிறைந்த மலர்கள் சிதறிவிழும்படி, அவைகளுக்குக் கெடுதல்கள் உண்டாகும்படி மழை பொழிவதால் என்ன பயன். இப்படி தீங்குடன் கூடி மழையைப் பொழிவதே உங்களுக்கு விருப்பம் போலும். மழை வேண்டுமிடத்து மழை பொழிவது தானே சிறப்பு. மழையின்றி வாடுவார்க்கு மழையைப் பொழிந்து அவர்களை இன்பக் கடலில் ஆழ்த்த வேண்டாமா?
அதைப்போல திருவேங்கடவனின் அருள் மழையின்றி பிரிவுத் துயரால் வாடும் எனக்கு, அவனின் அருள் மழை என் மீது பொழியும்படிச் செய்வது உங்கள் கடமையாகும்.
உலக மக்களையும் நல்லோர்களையும் துன்புறுத்திய கொடிய அசுரர் கூட்டங்களை அழித்தும், பக்தப்பிரகலாதனனுக்குப் பல துன்பங்களையும் கொடுத்த இரண்யகசிபுவை அழித்தும் அருள்புரிந்த எம்பெருமான் இன்று திருமலையில் திருவேங்கடவனாக அவதரித்துள்ளான். அவன் மீது எனக்கு ஏற்பட்ட காதலால் உடல் மெலிய, என் கைவளைகள் கழன்று விழும்படிச் செய்தான். அவன் எனக்கு அருள் புரிந்தால் என் உடல் பழைய நிலைக்கு வரும். எனது துர்பாக்கிய நிலையை அவனிடம் சொல்லி, எனக்கு அருள்புரியும்படிச் செய்யுங்கள். என்று மேகங்களை வேண்டினாள் ஆண்டாள்.
பாசுரம் - 6
"சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள் !
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகந்து என்னை
நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே"
பெருங்கடல் நீரை முகர்ந்து கொண்டு மேலே கிளம்பி விளங்குகின்ற குளிர்ந்த மேகங்களே! உங்களுடைய வடிவழகும் குளிர்ச்சியுமெல்லாம் நன்றாக இருக்கிறது. அதில் ஒரு குற்றமும் இல்லை . ஆனால் தேவர்களுக்காகத் தான் குறுகிய பிரம்மச்சாரியாகச் சென்று, மாவலியிடம் மூன்றடி மண் யாசித்துப் பெற்று, ஓரடியால் மண்ணுலகையும், இரண்டாமடியால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை மாவலியின் தலை மீது வைத்து அவனை பாதாள உலகம் அனுப்பியவர் திருமால். அவன் இன்று திருவேங்கட மலையில் எழுந்தருளியுள்ளான். நான் திருவேங்கடவன் மீது பெருங்காதல் கொண்டு அவனருள் கிடைக்காமையால், கொசுக்களால் உண்ணப்பட்டு ஓட்டுக்குள் காலியாக இருக்கும் விளாம்பழத்தைப் போல், திருவேங்கடவன் என் உடம்போடே அணைந்து , என் உள்ளத்தை அபகரித்துக் கொண்டு சென்று விட்டதால் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளேன். நீங்கள் அத்திருவேங்கடவன் பால் தூது சென்று என் நிலையை எடுத்துக் கூறி, எனக்கு அருள்புரியும் படிச் செய்யுங்கள்.
பாசுரம் - 7
"சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள்! வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒரு நாள்
தங்கு மேல் என்னாவி தங்குமென்று உரையீரே."
சங்குகளோடு கூடிப் பெருமை வாய்ந்த கடலைக்கடைந்தருளியும், தனது பக்தர்களுக்காகத் தன்னைத் தாழ விட்டுக் கொண்டு அவர்களைக் காத்து அருளியும் வருகின்ற திருவேங்கடவன் எழுந்தருளியுள்ள, திருவேங்கட மலையில் வசிக்கின்ற மிக்க கருணையுள்ள திருவடிகளிலே அடியேனுடைய வேண்டுதலைச் சொல்ல வேண்டும். அவனது அருள் இல்லாமையில் என் கண்கலங்கியதால் ஏற்பட்ட கண்ணீர் எனது மார்பகத்தில் உள்ள குங்குமம் அழித்து விடுகிறது. அவன் அருள் கிடைத்தால் இந்த வருத்த நிலை மாறும். என் ஆவி நிற்கும். அவர் என்னோடு கலவி செய்ய வருவாரென்று நம்பி என் மார்பகத்தில் குங்குமக் குழம்பு பூசி அலங்கரித்து வைத்து இருக்கிறேன். அக்குழம்பு சரியாக பயன்படும்படி என்னோடு கலவி செய்தால்தான் என் உயிர் தரிக்கும் என்று சொல்லுங்கள் என்று மேகங்களிடம் வேண்டுகின்றாள் ஆண்டாள்.
பாசுரம் - 8
"கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் ! வேங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத்து எருக்கினம் பழ விலைபோல் வீழ் வேனை
வார்காலத்து ஒருநாள்தம் வாசகம் தந்தருளாரே."
பிறர் துயரைக் கண்டு ஐயோ என்று எண்ணி இரக்கம் காட்டி உதவும் மேகங்களே! கார் காலத்தில் தவறாமல் வந்து சேருகின்றேன் என்று சொல்லிச் சென்ற பெருமான் வராதிருந்தாலும், அவனுடைய வடிவுக்குப் போலியான நீங்களாவது இக்கார் காலத்தில் வந்து தோன்றினீர்களே என்று இன்பமடைகின்றேன். உங்களது உருவத்தில் அவனைக் காணுகின்றேன்.
அவ்வெம்பெருமான் வரவில்லையானாலும், நாம் அவனது திருநாமங்களைப் பாடிப் பரவி ஒருவாறு உயிர் தரித்திருப்போம் என்று சக்ரவர்த்தித் திருமகனான இராமபிரானின் பெயர்களைச் சொல்ல ஆரம்பித்தேன். அதனால் உடனே மகிழ்ச்சியடைந்தேன்.
மழைக் காலத்தில் எருக்கஞ் செடியில் இலைகள் பழுத்து அற்று விழுவதைப் போல நானும் தளர்ந்து வீழும்படியான நிலையை அடைந்தேன். இந்நிலையை யான் அடைந்த போதும் அவ்வெம்பெருமான் எனக்கு அருள் புரிய நினைக்கவில்லை. என் வாழ்நாளெல்லாம் இப்படி துக்க மயமாகவே கழியப் போகின்றது. ஒரு நாளாகிலும் ஒரு வாய்ச் சொல்லாகிலும் சொல்லியனுப்பவும் மாட்டாரோ?
நீங்களாவது என் நிலையை எம்பெருமான் திருவேங்கடவனிடம் சொல்லி, எனக்கு அருள்புரியச் செய்யுங்கள் என்று மேகங்களை வேண்டுகின்றாள் ஆண்டாள்.
பாசுரம் - 9
"மதயானை போலெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள்! பாம்பணையான் வார்த்தை என்னே!
கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே"
திருவேங்கட மலையில் வாழ்ந்து கொண்டு, அவனைத் தினம் கண்டு வணங்கி வழிபட்டு மகிழ்ந்து வரும், மதயானைபோல் செருக்குடன் திரிந்து கொண்டிருக்கும் மேகங்களே! திருவனந்தாழ்வானிடத்து அனைத்து தொண்டுகளையும் ஏற்றுக் கொள்வது போல என்னிடத்தும் ஏற்றுக் கொள்வான் என்றிருந்தேன். பாம்பின் படுக்கையில் இருப்பதால், பாம்பின் தன்மையே தானும் பெற்றான் போலும். பாம்பிற்கு இரு நாக்குகள் இருப்பதைப் போல இவனும் இரண்டு நாக்குகளைப் பெற்றான் போலும். அனைத்து மக்கட்கும் அனைத்து வகைகளிலும் அருள்புரிபவன் என்று புகழ் பெற்றிருக்கும் எம்பெருமான், பெண்ணாகிய எனக்கு அருள்புரியாமல் என்னைக் கொலை செய்தான் என்றால் நம்புவார்களோ ? என்று மேகங்களிடம் கூறிக் கதறுகின்றாள் ஆண்டாள்.
பாசுரம் - 10
"நாகத்தினணை யானை நன்னுதலாள் நயந்து உரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதை தமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவர் அடியராகுவரே"
தான் விரும்பியபடியெல்லாம் திருமாலின் அனுபவத்தைப் பெற்று மகிழ்ந்தவரான பெரியாழ்வாருக்குத் திருமகளாரான ஸ்ரீ ஆண்டாள், பாம்பணையில் பள்ளி கொண்டு யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் பரவாசுதேவனே திருவேங்கடவனாக எழுந்தருளியுள்ள, அவன் மேல் ஆசைப்பட்டு அருளிச் செய்த, மேகம் விடு தூதாகிய இந்த நாச்சியார் திருமொழியைக் கற்று, மனத்துள் வைத்திருப்பவர், தினம் தொண்டு செய்யும் பேற்றினைப் பெற்று, என்றும் இன்பமுடன் வாழ்வார்.
பத்தாம்பத்து பாசுரம் - 10.5
"பாடும் குயில்காள்! ஈது என்ன பாடல்! நல்வேங்கட
நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடையார் வந்து அருள் செய்து
கூடுவராயிடில் கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே"
ஆண்டாள், எம்பெருமான் பிரிவாற்றாமையைத் கணித்துக் கொள்ள , பூந்தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு முல்லைப் பூவானது பூத்துக் குலுங்கி மணம் பரப்பியது. இதைக் கண்ட ஆண்டாள் இன்னும் அதிக துன்பமடைந்தாள். அங்கிருந்து நீங்கி முகத்தை வேறு பக்கம் திருப்பிப் பார்த்தாள்.
எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்குவதையே கண்டு, மிக்க துன்பம் அடைந்தாள். ஆகவே கண்களை மூடிக்கொண்டாள். கண்ணை மூடினபோதும் ஆண்டாளின் துன்பம் நீங்கவில்லை. காதுகளை மூடமுடியாமையால், குயில்களின் பாட்டுக்கள் உடனே காதுகளில் கேட்டன. அவற்றைக் கேட்டுத் தரிக்க முடியாமல் அக்குயில்களை நோக்கிக் கூறுகின்றாள்.
ஓ குயில்களே நீங்கள் ஏன் இப்படிப் பாடி என் துயரத்தை அதிகப் படுத்துகின்றீர்கள். போதும், போதும், உங்கள் பாட்டின் அழகு, உங்களுடைய பாட்டைக் கேட்கும் அளவிலா! நான் இருக்கின்றேன், இல்லையே. ஐயோ என்ன பாட்டு இது! பாவிகாள் பாடினது போதும், இப்போதைக்கு உடனே நிறுத்துங்கள், கோபித்துக் கொள்ளாதீர்கள்.
திருவேங்கடவன் அருள் சுரந்து, இங்கே எழுந்தருளி, என்னை அணைத்துக் கொண்டு எனக்கு நல்வாழ்வு அளிக்கும் வாய்ப்பு கிடைக்குமாயின், அப்போது நீங்கள் இங்கு வந்து உங்கள் ஆசை தீரப் பாடுங்கள், என்றாள் ஆண்டாள்.
குயில்கள் ஆண்டாளை நோக்கி, அம்மையே திருவேங்கடவன் வந்து உமக்கு வாழ்வு கொடுக்கும் நேரம் எங்களுக்கு எப்படித் தெரியும் என்றன. குயில்களே திருவேங்கடவன் வருகின்றபோது, கருடாழ்வானாகிய பெரிய திருவடி தனது சிறகை விரித்துக் கூத்தாடிக் கொண்டு வருவார். அந்த அடையாளத்தைக் கண்டு நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஒரு கால் நீங்கள் தெரிந்து கொள்ளாவிட்டாலும், நானே உங்களை வரவழைத்து. உங்கள் பாட்டைக் கேட்பேன்.
நீங்கள் ஐயப்படவேண்டாம், என்று கூறினாள்.
பாசுரம் - 8
"மழையே மழையே மண்புறம்பூசி உள்ளாய்நின்று
மெழுகூற்றினாற் போல்ஊற்று நல்வேங்கடத்துள் நின்று
அழகப்பிரானார் தம்மை என் னெஞ்சத் தகப்படத்
தழுவி நின்று என்னைத் ததைத்துக் கொண்டு ஊற்றவும் வல்லையே?.
ஓ மேகங்களே மழையைப் பொழிகின்ற மேகங்களே! சிலைவடிக்கும் சிற்பிகள் மேலே மண்ணை இணைத்து உள்ளிருக்கும் மெழுகைத் தள்ளி விடுவது போல, அப்பெருமானும், உடம்பின் மேலே அணைந்து உள்ளிருக்கும் ஆத்மா உருகிக் கழிந்து போகும்படிச் செய்கின்றான். அப்படிச் செய்பவனான திருவேங்கடவன் என் உள்ளத்தில் குடியிருக்கும்படியும் நான் அவனை அணைத்துக் கொள்ளும்படியும் செய்ய, என்னை அவனோடு சேர்த்து வைத்த பிறகு மழையைப் பொழியுங்கள் என்று ஆண்டாள் மேகங்களை வேண்டினாள்.
ஆண்டாள் எம்பெருமானான திருவேங்கடவனை அடைய தனக்குத் துணை புரியுமாறு, காமதேவனையும், கூடல் தெய்வத்தையும், குயிலினங்களையும், மழையையும் வேண்டுகின்றாள். இந்த நாச்சியார் திருமொழி ஓர் ஒப்பற்ற காதல் இலக்கியமாகும். தமிழ் அன்னைக்குச் சூட்டிய வாடா மாலையாகும்.
ஆண்டாள் திருவடிகளே சரணம்.