ஶ்ரீமத் பாகவதம் - 86

நான்காவது ஸ்கந்தம் – எட்டாவது அத்தியாயம்


த்ருவ சரித்ரம்


த்ருவன் ருசியின் துர்ப்பாஷணங்களைப் (கொடிய வார்த்தைகளைப்) பொறாமல் (பொறுக்க மாட்டாமல்) தவத்தினால் ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதித்தல். 


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸனகாதிகளும் நாரதர் ருபு ஹம்ஸர் அருணி ஆகிய இவர்களும் ப்ரஹ்மாவின் புதல்வர்கள். இவர்களெல்லோரும் க்ருஹஸ்தாச்ரமத்தில் இழியாமல் (திருமணம் செய்துகொண்டு இல்லற தர்மங்களில் ஈடுபடாமல்) இந்த்ரியங்களை வென்று நைஷ்டிக ப்ரஹ்மசர்யத்தில் இருந்தார்கள். ஆகையால் அவர்களுக்கு வம்சமே இல்லை. அதர்மனும் ப்ரஹ்மாவின் புதல்வனே. அந்த அதர்மனுடைய பார்யை மருஷை என்பவள். சத்ருக்களை வெல்லும் திறமையுடையவனே! அந்த மருஷை, தம்பனென்னும் புத்ரனையும் (மகனையும்) மாயை என்னும் புதல்வியையும் (மகளையும்) பெற்றாள். தம்பன் மாயை இவ்விருவரையும் பிள்ளையில்லாத கிருதி வாங்கிக் கொண்டு, தம்பனைப் பிள்ளையாகவும் மாயையை மறுமகளாகவும் அபிமானித்து வைத்துக்கொண்டான். சிறந்த மதியுடையவனே! அந்த மாயை தம்பன் இவர்களுக்கு லோபனும் நிக்ருதியும் உண்டானார்கள். அந்த லோபன் நிக்ருதி இவரிடத்தினின்று க்ரோதனும் ஹிம்ஸையும் உண்டானார்கள். அவரிடத்தினின்று கலியும் துருக்தியும் உண்டானார்கள். துருக்தியிடத்தில் கலி பயத்தையும் ம்ருத்யுவையும் பிறப்பித்தான். வாராய் நல்லியற்கையுடையவனே! அந்த பயம் ம்ருத்யு இவரிடத்தினின்று யாதனையென்னும் பெண்ணும் நிரயனென்னும் பிள்ளையும் உண்டானார்கள். இவர்களெல்லோரும் அதர்மமாகிற வ்ருக்ஷத்தின் (மரத்தின்) கிளைகள் போன்றவர்கள். இவர்கள் ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்ப்பவர்களாகையால், மோக்ஷத்தில் விருப்பமுடையவன் இவர்களோடு சேரக்கூடாது. ஸந்யாஸ ஆஸ்ரமத்திலிருப்பவன் இவர்களை சிறிதும் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது. அவன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பாபமற்றவனே! இங்ஙனம் ப்ரதிஸர்க்கத்தை (இந்த ப்ரபஞ்சம் அழிவதற்குக் காரணமான அதர்மத்தின் ஸந்ததியை) உனக்கு நான் சுருக்கமாகச் சொன்னேன். இவற்றைத் துறப்பானாயின், புண்யம் பெறுவான். இந்த ப்ரதிஸர்க்கத்தை மூன்று தரம் கேட்பானாயின், தன்னுடைய பாபங்களெல்லாம் தீரப்பெறுவான். இங்ஙனம் மனு கன்னிகைகளின் ஸந்ததியைச் சொன்னேன். இனி மனுபுத்ரர்களின் ஸந்ததியைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 


வாராய் கௌரவ ச்ரேஷ்டனே! மனு கேட்பவர்களுக்குப் புண்யத்தை விளைக்கும்படியான புகழுடையவன். அதற்குக் காரணமென்னென்னில், தன்னை நினைத்த மாத்ரத்தில் தன்னைப்பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் திறமை அமைந்த பகவானுடைய அம்சாவதாரமான ப்ரஹ்மாவின் சரீரத்திலிருந்து பிறந்தவன்; அந்த பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவன். ஆகையால் பகவானுடைய சரித்ரம்போல் அவனுடைய புத்ரர்களின் வம்ச சரித்ரமும் பரிசுத்தமாயிருக்கும், பக்தியை விளைக்கும். பகவத் பக்தர்களாகையால் மனு புத்ரர்களின் வம்சம் கேட்கத் தகுந்ததே. சதரூபையின் பர்த்தாவான (கணவனான) மனுவுக்கு ப்ரியவ்ரதனென்றும் உத்தானபாதனென்றும் இரண்டு புதல்வர்கள் உண்டு. அவ்விருவரும் ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவான பகவானுடைய குணவிசேஷத்தின் தோற்றத்தினால் ஜகத்தைப் பாதுகாப்பதில் நிலையுற்றிருந்தனர். அவர்களில் உத்தானபாதனுக்கு ஸுநீதியென்றும் ஸுருசியென்றும் இரண்டு பார்யைகள் (மனைவிகள்) இருந்தார்கள்: அவர்களில் ஸுருசி என்பவள் பர்த்தாவுக்கு மிகவும் அன்பிற்கிடமாயிருந்தாள். ஸுநீதி என்பவள் ப்ரீதிக்கு இடமாகாதிருந்தாள். அந்த ஸுநீதிக்கு த்ருவனென்று ஒர் புதல்வன் பிறந்தான். ஒருக்கால் அந்த உத்தானபாதன் ஸுருசியின் புதல்வனாகிய உத்தமனென்பவனை மடியில் வைத்துச் சீராட்டிக் கொண்டிருக்கையில், ஸுநீதியின் பிள்ளையாகிய த்ருவன் அருகே வந்து மடியில் ஏற விரும்பினான். அதை அறிந்தும் அம்மன்னவன் அவனது விருப்பத்தை நிறைவேற்றாமை மாத்ரமேயன்றி அதை அபிநந்தனம் (விருப்பம், வரவேற்பது) செய்யாமலேயிருந்தான். தனது சக்களத்தியின் (மற்றொரு மனைவியின்) புதல்வனாகிய அந்த த்ருவன் அங்கனம் மன்னவனது மடியில் ஏற விரும்புவதையும் மன்னவன் அதை அபிநந்தனம் செய்யாதிருப்பதையும் கண்டு ஸுருசி ராஜாவின் அபிப்ராயத்தை அறிந்துகொண்டு மிகவும் கர்வமுற்றவளாகி, அரசனது செவியில்படும்படி த்ருவனைப் பார்த்து மிக்க பொறாமையுடன் இங்கனம் மொழிந்தாள்.


ஸுருசி சொல்லுகிறாள்:- குழந்தாய்! நீ ராஜாவின் ஆஸனத்தில் ஏறுவதற்கு உரியவனல்லை. “நான் ராஜாவின் புதல்வனாகையால் ராஜஸிம்ஹாஸனத்தில் ஏறுவதற்கு ஏன் தகுந்தவனல்லன்?” என்று நினைக்கின்றாயோ? சொல்லுகிறேன் கேள். நீ ராஜபுத்ரன்தான். ஆயினும் நீ என்னால் கர்ப்பத்தில் தரிக்கப்பெற்றவன் இல்லை. என் கர்ப்பத்தில் பிறந்தவனே ராஜ ஆஸனத்திற்கு உரியவனன்றி மற்றவன் உரியவனல்லன். நீ பாலனாயினும், என் கர்ப்பத்தில் பிறக்காததும் வேறொரு பெண்ணின் கர்ப்பத்தில் பிறந்ததும் உனக்குத் தெரியாதோ? தெரியுமே. அதில் ஸந்தேஹம் இல்லையே. அப்படி இருக்க நீ ஏன் ராஜாஸனத்தில் ஏற விரும்புகின்றாய். ஒருக்கால், நீ இளைஞனாகையால் உனக்குத் தெரியாதிருந்தாலும் இருக்கக்கூடும். நான் சொல்லுகிறேன், தெரிந்துகொள்வாயாக. உன் கதை எனக்குத் தெரியும். நீ என்னுடைய சக்களத்தியாகிய (கணவனின் மற்றுமொரு மனைவியான) ஸுநீதியின் கர்ப்பத்தில் பிறந்தவன். என் கர்ப்பத்தில் பிறந்தவனல்லை. ஆகையால் நீ ராஜ ஆஸனத்தில் ஏறுவதற்கு உரியவனல்லை. உனக்குக் கிடைக்கக்கூடாத விஷயத்தில் நீ விருப்பம் கொண்டிருக்கின்றாய். உன் ஸ்வரூபம் தெரியாமல் நீ இங்கனம் ஆசைப்படுவது வீணே. இப்படி கிடைக்கக் கூடாத விஷயத்தையும் ஸாதிக்க வேண்டுமென்று உனக்குப் பிடிவாதம் உண்டாயிருக்குமாயின், இங்கனம் ஸாதிப்பாயாக. அதெப்படியென்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக.
 நீ ராஜஸிம்ஹாஸனத்தில் ஏறவேண்டுமென்று விரும்புவாயாயின், தவத்தினால் பரமபுருஷனை ஆராதித்து, அங்கனம் ஆராதிக்கப்பெற்ற பரமபுருஷனுடைய அனுக்ரஹத்தினால் என் கர்ப்பத்தில் பிறத்தலை ஸாதிப்பாயாக.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- தனது மாதாவின் சக்களத்தியான ஸுருசியின் துர்ப்பாஷணங்களால் (கொடிய வார்த்தைகளால்) அடியுண்ட த்ருவன், தடியால் அடிக்கப்பெற்ற ஸர்ப்பம்போல் கோபத்தினால் பெருமூச்செறிந்து கொண்டிருக்கின்ற தன்னைப் பார்த்தும் ஒன்றும் பேசாமல் வெறுமனேயிருக்கின்ற தந்தையைத் துறந்து மிகவும் கண்ணீர் பெருக்கிக்கொண்டு தனது மாதாவான ஸுநீதியின் அருகே சென்றான். அங்கனம் தன் பாலனான த்ருவன் பெருமூச்செறிந்துகொண்டு கோபத்தினால் கீழுதடு துடிக்கப் பெற்று அருகாமையில் வந்திருப்பதைக் கண்டு அவனை மடியில் எடுத்து வைத்துக்கொண்டு பட்டணத்து ஜனங்கள் மூலமாய், தன் சக்களத்தியாகிய ஸுருசி மொழிந்த துர்ப்பாஷணங்களைக் கேட்டு மிகவும் மனவருத்தமுற்றாள். அப்பெண்மணியான ஸுநீதி காட்டுத்தீயால் தஹிக்கப்பெற்ற (எரிக்கப்பட்ட) ஓர் கொடிபோல் மனவருத்தத்தினால் வாடிவதங்கி தைர்யமின்றிச் சக்களத்தியின் துர்ப்பாஷணங்களை நினைத்துத் தாமரையிதழ் போன்ற கண்களால் நீரைப் பெருக்கினாள். சக்களத்தியின் துர்ப்பாஷணங்களைக் கேட்ட மனவருத்தத்தினால் நெடு மூச்செறிந்துகொண்டு தன் துக்கத்திற்குக் கரைகாணப் பெறாதவளாகித் தனது இளம் பிள்ளையாகிய துருவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தாள்.


ஸுநீதி சொல்லுகிறாள்:- அப்பா! பிறர்மேல் அபராதத்தை நினைக்காதே. எவன் பிறர்க்கு துக்கத்தை விளைக்கின்றானோ, அவன் தானும் அந்த துக்கத்தையே அனுபவிப்பான். நாம் ஜன்மாந்தரத்தில் (முன் பிறவிகளில்) எவர்க்கு என்ன துக்கத்தை விளைத்தோமோ, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கின்றோம். ஆகையால் இது நம்முடைய பாபத்தின் பலனேயன்றி வேறில்லை. இதற்கு நாம் பிறர்மேல் தோஷத்தை நினைக்கலாகாது. அப்பா! குழந்தாய்! ஸுருசி சொன்னது உண்மையேயன்றி, அது பொய்யன்று. நீ பாக்யஹீனையாகிய (அத்ருஷ்டமில்லாத, பாக்யமில்லாத) என்னால் கர்ப்பத்தில் தரிக்கப்பெற்றவன். மற்றும், அப்படிப்பட்ட துர்ப்பாக்யசாலினியாகிய என் ஸ்தன்யத்தைப் (முலையைப்) பருகி வளர்ந்தவன். என்னை மன்னவன் பார்யையென்று (மனைவியென்று) வாயால் சொல்லுவதற்கும் வெட்கப்படுகிறான்; நெஞ்சில் நினைப்பதற்கு ப்ரஸக்தியே (வழியே) இல்லை. அப்பனே! ஆகையால் நீ பொறாமையின்றி, மாற்றாந் தாயாகிய ஸுருசி “தவத்தினால் பரமபுருஷனை ஆராதிப்பாயாக” என்று மொழிந்த வார்த்தையை தோஷமாக நினைக்காமல், அதை அப்படியே நடத்துவாயாக. உத்தமன் ராஜாஸனத்தில் ஏறி உட்காருவதுபோல், நீயும் அந்த ராஜாஸனத்தில் உட்கார விரும்புவாயாயின், பகவானுடைய பாதாரவிந்தங்களை ஆராதிப்பாயாக. “இப்படி பகவானுடைய பாதங்களை ஆராதித்து எவரேனும் தமது விருப்பம் கைகூடப் பெற்றவர் உண்டோ” என்று ஸந்தேஹிக்க வேண்டாம். உலகங்களைப் பாதுகாக்கும் பெருட்டு ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் இடமான திவ்யமங்கள விக்ரஹத்தை அங்கீகரிக்கின்ற அந்த பகவானுடைய பாத பத்மங்களை ஆராதித்து ப்ரஹ்மதேவன் பதினான்கு லோகங்களுக்குள் எல்லாவற்றிலும் மேலான ஸத்யலோகத்தை வாஸஸ்தானமாகப் பெற்றான். அவனுடைய பாதாரவிந்தங்கள் மனத்தையும் ப்ராண வாயுவையும் வென்ற யோகிகளால் பூஜிக்கத் தகுந்தவை. அவற்றின் மஹிமை அப்படிப்பட்ட மஹானுபாவர்க்கே தெரியுமன்றி, மற்றவர்க்குத் தெரியாது. அப்படியே, உங்கள் பாட்டனாகிய (தாத்தாவான) மனுவும் மாறாத பக்தியுடன் வெகு தக்ஷிணைகளையுடைய யாகங்களால் அந்த பகவானையே ஆராதித்து மற்றவர்க்குப் பெறமுடியாத பரலோக ஸுகத்தையும் இஹலோக ஸுகத்தையும் மோக்ஷ ஸுகத்தையும் பெற்றான். ஆகையால் உங்களுக்கு பகவானே குலதெய்வம். அவன் மாறாத பக்தியைத் தவிர மற்ற எதனாலும் அருள்புரிய மாட்டான். அவனால் கிடைக்கக்கூடிய ஸுகம் மற்ற ப்ரஹ்ம ருத்ராதிகளால் நேராது. குழந்தாய்! அப்பனே! அவன் உன் தந்தையைப் போல் பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) செய்பவனல்லன். அவன் தன்னிடத்தில் பக்திசெய்பவருடைய தோஷங்களைப் பாராமல் அவரிடத்தில் மிகுந்த ப்ரீதி செய்யும் தன்மையன். ஆகையால் அந்த பகவானைச் சரணமடைவாயாக. ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடவேண்டுமென்னும் விருப்பமுடையவர் அவனுடைய பாதாரவிந்தங்களைத் தேடி த்யானிக்கின்றார்கள். அவன் ஸம்ஸாரிகளையும் பரமபதத்திலுள்ள நித்யஸூரிகளைப்போல் தன்னை என்றும் அனுபவிக்கும்படி செய்யும் திறமையுடையவன். இக்கார்யம் மற்றவர்க்கு நெஞ்சிலும் நினைக்கமுடியாதது. நீ மற்ற எதிலும் மனம் செல்லப் பெறாமல் உனது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களால் அம்மனத்தை நிர்மலமாக்கி (அழுக்கற்றதாக்கி) அதில் அந்தப் பரமபுருஷனை நிலைநிறுத்தி அவனைப் பணிவாயாக. அவன் பக்தியைத் தவிர மற்ற எதனாலும் அருள்புரியமாட்டான். ஆகையால் மற்ற எதிலும் செல்லாத மனத்துடன் அவனிடத்தில் பக்திசெய்து அவனை ஆராதிக்கவேண்டும். தாமரைக்கண்ணனாகிய அந்தப் பரமபுருஷனைத் தவிர மற்ற எவனும் உன் துக்கங்களைப் போக்க வல்லவனாக எனக்குத் தோன்றவில்லை. ஸம்ஸார தாபங்களையெல்லாம் போக்கி ஸுகங்களைக் கொடுப்பவன் அந்த புண்டரீகாக்ஷன் ஒருவனே. மற்றெவனுமல்லன். ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகள் அனைவரும் தமது அபேக்ஷிதங்கள் (விருப்பங்கள்) நிறைவேறும்பொருட்டு மனவூக்கத்துடன் எந்த தேவியைத் தேடுகிறார்களோ, அத்தகையவளும் கையில் தாமரைமலரை ஏந்திக் கொண்டிருப்பவளுமாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியும் இவனைத் தேடித் தொடர்கிறாள். அரை (பாதி) க்ஷணமும் (க்ஷணம் = 4/5 of a second) இவனை விட்டுப் பிரிந்திருக்க முடியாதிருக்கின்றாள். அம்மஹாபுருஷனுடைய பெருமையை இன்னும் என்னென்று சொல்லவேண்டும். வாராய் த்ருவனே! ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனும் ஸர்வேச்வரனும் ஜகத்காரணவஸ்துவும் ஸமஸ்த கல்யாண குணநிதியுமாகிய அந்தப் பரமபுருஷனையே பணிவது உன் விருப்பம் கைகூடப் பெறுவாயாக.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் தன் தாயான ஸுநீதி வருந்திப் புலம்புவதையும், தன் மனவிருப்பம் நிறைவேறும் வழியை மொழிகின்ற தாயாரினுடைய வார்த்தையையும் கேட்டுத் தானே தன்மனத்தை அடக்கிக் கொண்டு தந்தையினுடைய பட்டணத்தினின்று புறப்பட்டான். அப்பொமுது நாரதர் அவன் புறப்பட்டதைக் கேட்டு வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமென்கிற மூன்று காலங்களிலுள்ளவை எல்லாவற்றையும் தன் ஜ்ஞானக்ஷுஸ்ஸினால் (அறிவுக்கண்ணால்) அறியும் திறமையுடையவர் ஆகையால் அந்த த்ருவன் மனத்தில் நினைத்திருக்கும் அபிப்ராயத்தை அறிந்து அவனிடம் வந்து பாபங்களைப் போக்கவல்லதாகிய தன் கையால் அவன் தலையில் ஸ்பர்சித்து (தொட்டு) ஆச்சர்யத்துடன் “மானபங்கத்தைப் பொறாதிருக்கும் தன்மையரான க்ஷத்ரியர்களின் ப்ரபாவம் மிகவும் ஆச்சர்யத்திற்கு இடமாயிருப்பது. ஏனென்னில், இந்த த்ருவன் பாலனாயிருந்தும், மாற்றாந்தாயான ஸுருசியின் துர்ப்பாஷணத்தை (கொடிய வார்த்தைகளை) மறக்காமல் மனத்தில் வைத்துக் கொண்டிருக்கிறானே” என்று தன் மனத்தில் ஆலோசித்துக் கொண்டு அவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தார்.


நாரதர் சொல்லுகிறார்:- குழந்தாய்! நீ, ஸம்ருத்திகளெல்லாம் (வளங்களெல்லாம்) நிறைந்த உன் க்ருஹத்தைத் துறந்து ஸஹாயமின்றித் (துனையின்றி) தனியனாக எங்குப் போகின்றாய்? அடா த்ருவனே! நீ பந்துக்களால் நேர்ந்த அவமானத்தினால் மிகவும் வருந்தினவன் போல் தோற்றுகின்றாய்.


த்ருவன் சொல்லுகிறான்:- வாரீர் மஹானுபாவரான நாரதரே! இதென்ன ஆச்சர்யம்? இந்த ஸங்கதி உமக்கு எப்படி தெரிந்தது? யோகப்ரபாவத்தினால் ஸமஸ்த (எல்லா) வஸ்துக்களையும் ஸாக்ஷாத்கரிக்கும்படியான (அறியும்படியான) த்யானமஹிமை உமக்கு உண்டல்லவா? அதனால் அறிந்தீரோ? இல்லையாயின் என்மனத்திலிருப்பது, உமக்குத் தெரிய ப்ரஸக்தி (வழியே) இல்லையே. வாஸ்தவமே (உண்மையே). நான் ஸுருசியின் துர்ப்பாஷணங்களால் (கொடிய வார்த்தைகளால்) புண்பட்ட மனத்தை ஸமாதானப்படுத்திக் கொள்ள வல்லமையற்றிருக்கின்றேன்.


நாரதர் சொல்லுகிறார்:- பிள்ளாய்! நீ பாலனாயிருக்கின்றாய். ஆகையால் நீ பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடவேண்டிய தசையிலிருப்பவன். ஆகையால் உனக்கு இன்னும் மான அவமானங்களைப் பாராட்டும் தசை வரவில்லையென்று நினைக்கின்றேன். பாலர்கள் மான அவமானங்களைப் பொருள் செய்யாமல் கேவலம் விளையாடுவதிலேயே மிக்க மனவிருப்பம் உடையவராயிருப்பார்கள். நீயும் பாலனாகையால் உனக்கு மான அவமானங்களே தோன்றாதென்று என் அபிப்ராயம். “நான் வயதில் பாலனேயன்றி புத்தியில் பாலனல்லேன்” என்னில் ஆயினும் சொல்லுகிறேன் கேள். மான அவமானங்களை விவேகிக்கும் திறமை உனக்கு உண்டாயிருப்பினும், மோஹத்தையொழிய (அறியாமை, மயக்கம் தவிர) மற்ற எந்தக் காரணத்தினாலும் பற்பல வகையான அஸந்தோஷ (துக்க) காரணங்கள் உண்டாக மாட்டாது. மோஹமே அஸந்தோஷத்தை விளைப்பதற்குக் காரணம். ஏனென்னில், உலகத்தில் ஸுகமும் துக்கமும் தனது கர்மங்களைப் பொருந்தினவை. தான் ஜன்மாந்தரத்தில் (முன் பிறவிகளில்) செய்த சுப அசுப (நல்ல, கெட்ட) கர்மங்களுக்குத் தகுந்தபடி ஸுகதுக்கங்கள் உண்டாகின்றன. ஆகையால் விவேகமுடையவன் அவற்றைப் பற்றி வருந்தலாகாது. மோஹமுடையவனே (அறியாமையால் கலக்கமுடையவனே) அங்ஙனம் வருந்துவான். நீ பாலனாயிருந்தும் விவேகம் நேரப் பெற்றிருப்பாயாயின், ஸுக துக்கங்களைப் பற்றிச் சிந்திப்பதே ஸரியன்று. நீ பாலனாகையால் முதலே மான அவமானங்கள் தெரியாதிருக்க வேண்டியவன். அப்படியின்றி பால்யத்திலும் (குழந்தைப் பருவத்திலும்) புத்திதெரியப் பெற்றிருப்பாயாயின், அந்த புத்தியைக்கொண்டு கர்மத்தின் மூலமாய் விளையும் ஸுக துக்கங்களைப் பொருள் செய்யாமல் நிச்சிந்தனாயிருக்க (கவலையற்றிருக்க) வேண்டுமேயன்றி அந்த ஸுக துக்கங்களைப்பற்றி வருந்தலாகாது. அப்படி வருந்துவாயாயின், உனக்கு உண்டான புத்தி புத்தியேயன்று. “நான் பாலனாயிருந்தும் மான அவமானங்களை அறியும் புத்தி நேரப் பெற்றிருக்கிறேன்” என்னில், அப்பொழுதும் ஸந்தோஷமில்லாமையால் விளைந்த இந்த உன் புத்தி தேஹாத்ம ப்ரமத்தை (இந்த சரீரமே ஆத்மா என்கிற பொய்யான எண்ணத்தைப்) பற்றினதே, தத்வஜ்ஞானத்தினால் (உண்மையை அறிந்ததால்) விளைந்ததன்று. ஜீவாத்மாக்கள் அனைவரும் ஜ்ஞானமே வடிவமாய் இருக்கப்பெற்றவர். அத்தகையரான ஜீவாத்மாக்களிடத்தில் தேவ மனுஷ்யாதி பேதம் கிடையாது. அப்படியிருக்க, ஸந்தோஷமில்லாமைக்குக் காரணம் தேஹாத்ம ப்ரமமேயன்றி மற்றொன்றும் அன்று, தேஹத்தையே (சரீரத்தையே) ஆத்மாவாக ப்ரமித்து (தவறாக நினைத்து) அந்த தேஹத்தைப் பற்றிய அவமானங்களையெல்லாம் ஆத்மாவுக்கு வந்ததாக நினைத்து மனக்களிப்பற்று வருந்துகிறார்கள். ஆகையால் நீ பாலனாயிருந்தும் விவேகபுத்தி விளையப் பெற்றிருப்பாயாயின், தேஹாத்மப்ரமத்தினால் வரும் மான அவமானங்களைப் பாராட்டலாகாது. இங்ஙனம் தேஹாத்மப்ரமமே அஸந்தோஷத்திற்கு (துக்கத்திற்கு) நிதானமாகையால் (காரணமாகையால்), தேஹத்தைக் காட்டிலும் வேறுபட்ட ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த புருஷன், ஈச்வரனுடைய ஆனுகூல்யமில்லாமல் (ஒத்துழைப்பு, கருணை இல்லாமல்) நம்முயற்சிகள் பலிக்கமாட்டாது என்பதை அறிந்து தெய்வாதீனமாய் எவ்வளவு ஸுகம் ஏற்படுகின்றதோ அவ்வளவில் ஸந்தோஷமுற்றிருக்க வேண்டும். அதற்குமேல் ஆசைப்படலாகாது. இனி அதற்காக முயற்சி செய்யலாகாதென்று தனியே சொல்ல வேண்டுமோ? அப்படி அடங்காத பேராசையால் ஸுகம் பெறவிரும்பி மேன்மேலும் முயற்சி கொள்வானாயின், அது வீணாகுமேயன்றிப் பயன்படாது. மற்றும் நீ கொள்ளும் முயற்சி அஸாத்யமாயிருக்கின்றது (நிறைவேற்றப்பட முடியாததாய் இருக்கிறது). அப்பனே! நீ, தாய் உபதேசித்த பக்திமார்க்கத்தினால் எந்த பகவானுடைய அனுக்ரஹத்தைப் பெற விரும்புகின்றாயோ, அந்த பகவான் புருஷர்களால் எவ்வளவு வருந்தியும் ஆராதிக்க முடியாதவன். அவன் ஸங்கதி (அவனைப் பற்றி) எனக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் சொல்லுகிறேன். 


தேஹத்திலும் (சரீரத்திலும்) தேஹத்தைத் தொடர்ந்த (சரீரத்துடன் தொடர்புடைய) மற்றவைகளிடத்திலும் மனப்பற்றின்றி எத்தகைய விக்னங்களாலும் (தடைகளாலும்) தடைபடாமல் தீவிரமான ஜ்ஞானயோக கர்மயோகங்களோடு கூடின பக்தியோகத்தினால் அந்த பகவானுடைய பதவியைத் தேட முயன்ற முனிவர்கள் பல ஜன்மங்கள் கழிந்தும் அதை அறிய முடியாமலே மயங்குகிறார்கள். அப்படிப்பட்ட பகவானை ஆராதிப்பது ஸாத்யமன்றென்று (முடியாத கார்யம் என்பது) என் அபிப்ராயம். இங்கனம் நீ நினைத்திருக்கிற பகவான் ஆராதிக்க முடியாதவனாகையால் நீ க்ருஹத்திற்கு (வீட்டிற்கு) மீண்டும் போவாயாக. உன் பிடிவாதம் பயனற்றதே. “ஆனால் ஒரு முயற்சியும் செய்யாதிருப்பின், எப்படி எனக்கு நன்மை கிடைக்கும்” என்னில், சொல்லுகிறேன், கேள். உனக்கு நன்மைகள் விளையவேண்டிய காலம் தெய்வாதீனமாய் நேருமாயின், அப்பொழுது நீ முயற்சிசெய்யலாம். இப்பொழுது உன் முயற்சி பயனற்றதேயாகும். மற்றும், எந்தப் புருஷனுக்கு ஸுகமாவது துக்கமாவது தெய்வாதீனமாய் விளையுமோ, அவன் அங்கனம் நேர்ந்த ஸுகதுக்கங்கள் இரண்டாலும் மனக்களிப்புற்றவனாகவே இருப்பானாயின், அவன் கடைசியில் ப்ரக்ருதி மண்டலத்திற்கு (பகவானுடைய மாயைக்கு உட்பட்ட இந்த ப்ரபஞ்சத்திற்கு) வெளிப்பட்டதாகிய விஷ்ணுவின் ஸ்தானத்தைப் பெறுவான். “தெய்வாதீனமாய் ஸுகம்நேரில் மனக்களிப்புறலாமன்றி (மனது இன்பமடையலாமன்றி), தெய்வாதீனமாய் துக்கம் நேருமாயின், அதனால் எப்படி மனக்களிப்புறலாம்” என்னில், சொல்லுகிறேன், கேள். 


தெய்வாதீனமாய் வரும் ஸுகதுக்கங்கள் இரண்டிலும் மனம்கலங்கப் பெறலாகாது, இரண்டிலும் மனக்களிப்பு (மனதின் இன்ப நிலை) மாறாதிருப்பதே யுக்தம் (ஸரியானது), ஸுகம் நேரில் புண்யம் க்ஷீணித்துப் (அழிந்து) போகின்றது. துக்கம் நேரில் பாபம் க்ஷீணித்துப் (அழிந்து) போகின்றது. எப்படி பாபம் துக்கத்தை அனுபவிப்பிப்பதாகி மேன்மேலும் சரீர ஸம்பந்தத்தை (பிறவியை) விளைவித்து ஸம்ஸாரத்தை வளர்க்குமோ, அப்படியே புண்யமும் ஸுகத்தை அனுபவிப்பிப்பதாகி மேன்மேலும் சரீர ஸம்பந்தத்தை விளைவித்து ஸம்ஸாரத்தை வளர்க்கும். ஆனால் பாபத்தினால் விளையும் சரீரம் (உடல்) துக்கானுபவத்திற்கும் (வருத்தத்திற்கும்) புண்யத்தினால் விளையும் சரீரம் (உடல்) ஸுகானுபவத்திற்கும் (ஸந்தோஷத்திற்கும்) இடமாயிருக்குமாகையால் அனுபவம் மாத்ரமே பேதித்திருக்குமன்றி (வேறுபட்டிருக்குமேயன்றி) ஸம்ஸாரத்தை வளர்ப்பதில் புண்யபாபங்கள் இரண்டும் துல்யங்களே (ஸமமே). ஸம்ஸார (உலகியல் வாழ்வை) வர்த்தகங்களான (வளர்க்கக்கூடிய) புண்யபாபங்கள் இரண்டும் ஸுகதுக்கானுபவங்களால் கழியுமாயின் உடனே ஸம்ஸாரத்தினின்று ஜீவன் விடுபடுவானாகையால் அவ்விரண்டைப் பற்றியும் விவேகமுடையவன் ஸந்தோஷம் அடையவேண்டுமேயன்றி வருந்தலாகாது, ஸுகானுபவத்தில் ஸுகத்தை அனுபவிக்கப் பெற்றோமென்று அதில் மனப்பற்றுடன் ஸந்தோஷிக்கலாகாது. சரீர ஸம்பந்தத்தை விளைப்பதாகிய புண்யம் க்ஷீணிக்கப் (அழியப்) பெற்றோமென்று ஸந்தோஷிக்கவேண்டும். அங்ஙனமே துக்கானுபவத்தில் பாபம் க்ஷணிக்கப் பெற்றோமென்று அதற்காகவும் ஸந்தோஷிக்க வேண்டுமேயன்றி வருந்த இடமில்லை. இப்படி தெய்வத்தினிடத்தில் பாரத்தைப் போட்டு ஸுகதுக்கங்கள் இரண்டிலும் மனக்களிப்பு (மனதின் இன்ப நிலை) மாறப்பெறாதிருப்பானாயின், அவன் ப்ரக்ருதி மண்டலத்தைக் கடந்த பரமபதம் போய்ச் சேருவான். மற்றும், எவன் தன்னைக்காட்டிலும் குணங்களால் மேன்மையுற்றிருக்கின்றானோ, அவனைக் கண்டு ஸந்தோஷம் அடைய வேண்டும்; பொறாமை கொள்ளலாகாது. தன்னைக் காட்டிலும் குணங்களில் குறைந்தவனைக் கண்டு “ஐயோ” என்று தயை செய்யவேண்டும்; அவமதிக்கலாகாது. குணங்களில் தனக்கு நிகராயிருப்பவனைக் கண்டால் அவனுடன் நட்பு செய்ய வேண்டும்; போட்டியிடலாகாது. இங்கனம் செய்பவன் ஆத்யாத்மிகம் (உலகில் மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை, 


1. ஆத்யாத்மிகம் - சரீரத்தைப் பற்றி வரும் தலை வலி, ஜலதோஷம் முதலிய நோய்களும், மனதைப் பற்றி வரும் காமம், கோபம், பயம் முதலியவையும்; 


2.ஆதிபெளதிகம் – மிருகம், பறவை, மனிதன் முதலியவற்றால் வருவன; 


3. ஆதிதைவிகம் – குளிர், வெப்பம், காற்று, மழை முதலியவற்றால் தெய்வீகமாக வருவன) முதலிய தாபங்களால் வருந்தமாட்டான்.


த்ருவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! தாங்கள், ஸுக துக்கங்களால் மனம் கலங்கப்பெற்ற என்னைப் போன்ற புருஷர்களுக்கு எந்த வழியில் சென்றால் மன அடக்கம் உண்டாகுமோ, அப்படிப்பட்ட வழியைக் கருணையால் இங்கனம் அறிவித்தீர். நாங்கள் எவ்வளவு வருந்தியும் அதைக் கண்டுபிடிக்க வல்லரல்லோம். அங்கனம் அருமையான சாந்திமார்க்கத்தை (மன அமைதிக்கான வழியை) நீர் தயையினால் மொழிந்தீர். மற்றும், நீர் என்னைப் போன்றவர்க்கு ஸாதாரணமாய்ப் புலப்படுமவர் அல்லீர். அப்படிப்பட்ட நீர் எங்களுக்குப் புலப்பட்டதே உமது கருணையின் கார்யம். ஆயினும், நான் கோரமான (பயங்கரமான) க்ஷத்ரிய ஸ்வபாவத்தைப் பின்சென்றவனும் இயற்கையில் வணக்கமில்லாதவனுமாய் இருக்கின்றேன், மற்றும், ஸுருசியின் துர்ப்பாஷணங்களாகிற (கொடிய வார்த்தைகளாகிற) பாணங்களால் (அம்புகளால்) என்மனம் பிளக்கப் பெற்றிருக்கின்றது. அத்தகைய என்மனத்தில் தேவரீர் மொழிகிற சாந்திமார்க்கம் (மன அமைதிக்கான வழி) நிலைபெறாதிருக்கின்றது. ஆகையால் என்னுடைய அபிப்ராயத்தை அனுஸரித்து அது நிறைவேறும்படியான உபாயத்தை உபதேசித்து என்னை அனுக்ரஹிப்பீராக, நான் என் தந்தை, பாட்டன் முதலியவர்களுக்கும் மற்றவர்களுக்கும் நேராததும் மூன்று லோகங்களிலும் மேன்மையுற்றிருப்பதுமாகிய ஓர் ஸ்தானத்தைப் பெற விரும்புகின்றேன். அந்த என் மனவிருப்பத்தை நிறைவேற்றும்படியான மார்க்கத்தை எனக்கு நன்கு உபதேசிப்பீராக. “நாம் சொன்னதை இவன் கேட்கவில்லையே” என்று என்னை நிக்ரஹிக்கலாகாது (வெறுக்கலாகாது). நீர், உலகங்களுக்கெல்லாம் ஹிதத்தைச் (நன்மையைச்) செய்பவனான ப்ரஹ்மதேவனுடைய மடியில் பிறந்தவர். நீரும் வீணையினால் பகவானுடைய குணங்களைப் பாடிக்கொண்டு உலகங்களின் நன்மைக்காகவே ஸூர்யன்போல் ஆங்காங்கு திரிகின்றீர். ஆகையால் நீர் எனது விருப்பத்தை நிறைவேற்றுவது யுக்தமே (ஸரியே).


மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் த்ருவன் மொழிந்ததைக் கேட்டு நாரதபகவான் த்ருவனுடைய மனவுறுதியைக் கண்டு மிகவும் ஸந்தோஷம் அடைந்து, அந்த பாலனைக் குறித்து ஹிதமான (நன்மையைப் பயக்கும்) வசனத்தை மொழிந்தார்.


நாரதர் சொல்லுகிறார்:- பாலனே! உன் தாயான ஸுநீதி எந்த உபாயத்தை உனக்கு மொழிந்தாளோ, அதுவே உன்னுடைய நன்மையை நிறைவேற்றிக் கொடுக்கவல்லது. உன் தாயார் உனக்கு வாஸுதேவனையே உபாயமாக மொழிந்தாளல்லவா? அவனே உன்னுடைய விருப்பத்தைக் கைகூடுவிக்கவல்லவன். நீ அந்த வாஸுதேவனை மனவூக்கத்துடன் பணிவாயாக.  எவன் தர்ம அர்த்த காம மோக்ஷங்களென்கிற தன்மைகளில் ஏதேனும் ஒன்றைப் பெற விரும்புகிறானோ, அவர் அதைப் பெறுவதற்கு ஸ்ரீஹரியின் பாதங்களைப் பணிகையொன்றே (சரணமடைதல்) உபாயம். மற்ற எதுவும் அதை அனாயாஸமாக (சிரமம் இன்றி, கஷ்டம் இன்றி) நிறைவேற்றிக் கொடுக்க வல்லதன்று. 


அப்பனே! இங்கனம் பகவானுடைய பாதஸேவையே தர்மாதி புருஷார்த்தங்களை ஸாதித்துக்கொடுக்கும் உபாயமாகையால், யமுனா நதியின் கரைக்குப் போவாயாக. அது மிகவும் பரிசுத்தமானது. உனக்கு மங்களம் உண்டாகுமாக. அந்த யமுனையின் கரையில் புண்யத்தை விளைக்கவல்லதான மதுவனமென்னும் ஓர் வனம் இருக்கின்றது. அவ்வனத்தில் பகவானுடைய ஸந்நிதானம் எப்பொழுதும் மாறாதிருக்கும். அவ்விடம் சென்று பரிசுத்தமான யமுனையின் ஜலத்தில் காலை மாலை மதியம் என்கிற மூன்று காலங்களிலும் ஸ்னானம் செய்து (நீராடி), அவசியமாகச் செய்ய வேண்டிய தேவதா நமஸ்காராதி கர்மங்களை முடித்து ஸுகமான ஆஸனத்தை ஏற்படுத்திக்கொண்டு அதில் உட்கார்ந்து ரேசகம், பூரகம் கும்பகம் (ரேசகம் – மூச்சுக்காற்றை ஆழ்ந்து வெளி விடுவது; பூரகம் – மூச்சுக்காற்றை ஆழ்ந்து உள் இழுப்பது; கும்பகம் – பூரகத்திற்குப் பிறகும், ரேசகத்திற்குப் பிறகும் மூச்சைக் கட்டுப்படுத்தி மார்பகத்தில் நிறுத்தி வைத்தல்) என்ற நிலைமைகளையுடைய ப்ராணாயாமத்தை ஆசரித்து அகார, உகார, மகாரங்களென்ற மூன்று வர்ணங்களையுடைய (அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களையுடைய) ப்ரணவத்தை அனுஸந்தித்து (மனதில் நினைத்து) ப்ராணன்கள் இந்திரியங்கள் மனது ஆகிய இவற்றின் மலத்தைப் போக்கவேண்டும் அதனால் மனம் பரிசுத்தமாகும். இந்த்ரியங்களும் வேறு விஷயங்களில் போகாமல் அடங்கும். ப்ராணன்களும் ஸ்வாதீனப்படும். அங்கனம் பரிசுத்தமான மனத்தினால் பகவானை த்யானிக்கவேண்டும்: பகவானுடைய உருவத்தை எத்தகையதாக த்யானிக்கவேண்டுமோ, அதைச் சொல்லுகிறேன் கேட்பாயாக, எப்பொழுதும் அனுக்ரஹம் செய்ய ஸித்தமாயிருப்பவனும் தெளிந்த முகமும், தெளிந்த கண்களும், அழகான மூக்கும், அழகான புருவங்களும் அழகான கபோலங்களும் (கன்னங்களும்), அமைந்து தேவதைகளைக் காட்டில் மிக்க ஸுந்தரமாயிருப்பவனும், யௌவனப்பருவமுடையவனும் அழகான அங்கங்களுடையவனும் மேலுதடு கீழுதடுகளும் கண்களும் சிவந்திருக்கப் பெற்றுத் திகழ்கின்றவனும் அந்த அழகைப் பார்த்து பக்தர்களால் ஆச்ரயிக்கத் தகுந்தவனும் ஆநந்தஸ்வரூபனும் தனக்கு நிதிபோன்றவனும் “நமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் உபாயம் இவனே” என்று உறுதியாக நிச்சயிக்கத் தகுந்தவனும் கருணை நிறைந்தவனும் ஸ்ரீவத்ஸமென்னும் அடையாளமுடையவனும் மேகம்போல் கறுத்திருப்பவனும் வனமாலையென்னும் பூமாலை அணிந்தவனும் சங்கம் சக்ரம் கதை பத்மம் ஆகிய இவற்றால் திகழ்கின்ற நான்கு புஜங்களுடையவனும் கிரீடம் குண்டலம் தோள்வளை கைவளை இவை தரித்தவனும் கழுத்தில் கௌஸ்துபமென்னும் திவ்ய ஆபரணம் அணிந்தவனும் பட்டுப்பீதாம்பரம் உடுத்தவனும் அரைநூல் மாலையால் ப்ரகாசிப்பவனும் திகழ்கின்ற பொன் சிலம்புத் தண்டை அணிந்தவனும் பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும்படி மிக்க அழகாயிருப்பவனும் சாந்தாகாரனும் த்யானம் செய்பவர்களின் மனத்திற்கும் கண்களுக்கும் மஹாநந்தம் (மேலான மகிழ்ச்சியைக்) கொடுப்பவனும் ரத்னங்கள் போன்ற நகங்களின் வரிசைகளோடு விளங்குகின்ற பாதாரவிந்தங்களுடையவனும் தன்னை ஆராதிக்கிற பக்தர்களின் ஹ்ருதய கமலத்தின் மத்தியில் அழுந்தி நிற்கின்றவனும் புன்னகை செய்கின்றவனும் ப்ரேமம் நிறைந்த கண்ணோக்கம் உடையவனுமாகிய புருஷோத்தமனை வேறு விஷயங்களில் செல்லாததும் மிக்க ஊக்கமுடையதுமான மனத்தினால் அடி முதல் முடி வரையிலும் நன்கு த்யானிக்க வேண்டும். மிக்க மங்களமான குணங்களுக்கு நிதிபோன்ற பகவானுடைய உருவத்தை இங்கனம் த்யானிப்பானாயின், அவனுடைய மனது மிகுந்த ஆநந்த ஸாகரத்தில் மூழ்கி நெடுநேரம் அவ்வுருவத்திலேயே நிலை நின்றிருக்கும்; சீக்ரத்தில் திரும்பாது. அந்த பகவானுடைய உருவத்தில் மனது நிலைநின்று சீக்ரத்தில் மீளாதிருக்குமாறு அவ்வுருவத்தை மிக்க ஊக்கத்துடன் த்யானிக்க வேண்டும். வாராய் ராஜ குமாரனே! அந்த வாஸுதேவனை ஆராதிப்பதற்கு உரிய மந்திரத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. அது மிகுந்த மஹிமையுடையது. ஆகையால் அதை மிக்க ப்ரயத்னத்துடன் (முயற்சியுடன்) மறைத்து வைத்துக் கொள்ளவேண்டும். அதை ஒருவர்க்கும் வெளியிடலாகாது. அம்மந்திரத்தை ஏழுநாள் ஜபம் செய்வானாயின், ஆகாசத்தில் ஸஞ்சரிக்கின்ற ஸித்தர்களைக் காண்பான். அம்மந்த்ரம் வாஸுதேவ மந்த்ரமே. அது பன்னிரண்டு அக்ஷரங்கள் (எழுத்துக்கள்) அடங்கினது. அவ்வாஸுதேவனுக்கு இம்மந்த்ரத்தைச் சொல்லி இதனால் பலவகைப்பட்ட பூஜா த்ரவ்யங்களைக் கொண்டு தேச காலங்களை அறிந்து பூஜை செய்யவேண்டும். பரிசுத்தமான ஜலங்களாலும் அத்தகைய பூமாலைகளாலும் காட்டிலுள்ள காய் கிழங்குகளாலும் சீர்மையுடைய அருகம்புல் முதலியவைகளாலும் அழகிய தளிர்களாலும் பூர்ஜ மரத்தின் தோல் முதலிய ஆடைகளாலும் மற்றுமுள்ள அழகிய வஸ்துக்களாலும் பகவானுக்கு மிகவும் அன்பிற்கிடமான துளஸியாலும் அவனை ஆராதிக்க வேண்டும். இங்கனம் பரிசுத்தமான வஸ்துக்களால் பூஜித்து பூமி ஜலம் முதலியவற்றிலும் அந்த பகவானை ஆவாஹனம் செய்து ஆராதிக்க வேண்டும். அங்கனம் ஆராதிக்கும் பொழுது மனவூக்கத்துடனிருக்க வேண்டும். த்யானம் செய்யாத ஸமயங்களில் சுபாச்ரயமான (மங்களமானதும், பக்தர்களுக்குப் புகலிடமானதும், அண்டியவர்களுக்கு நன்மையை அளிப்பதுமான) பகவானுடைய திருமேனியைப் பற்றி மனனம் (கண், காது முதலிய இந்த்ரியங்களால் அறிந்ததை மனதில் தொடர்ந்து நினைத்தல்) செய்யவேண்டும். இந்திரியங்களை அடக்கிப் பேச்சையும் மிதமாக்கிக்கொண்டு காட்டில் அகப்படக்கூடிய காய் கிழங்குகளையே ஆஹாரமாக உட்கொள்ளவேண்டும். கர்மத்திற்கு உட்படாத பகவான் உலகங்களின் க்ஷேமத்திற்காகத் தன் ஸங்கல்பத்தினால் வராஹாதி அவதாரங்களைக் கொண்டு உத்தமச்லோகனான அந்த பகவான் கர்மவச்யரான (புண்ய, பாப ரூபமான கர்மங்களுக்கு வசப்பட்ட) தேவ மனுஷ்யாதியின் செயல்களோடொத்தவையென்று நினைக்க முடியாதபடி செய்கின்ற அற்புத லீலைகளை த்யானிக்க வேண்டும். பகவானுக்கு எந்தெந்தப் பூஜைகள் செய்யவேண்டுமென்று நினைக்கிறானோ, அந்தப் பூஜைகளையெல்லாம் முன்சொன்ன த்வாதசாக்ஷர (12 எழுத்துக்கள் கொண்ட) மந்திரத்தை மனத்தில் அனுஸந்தித்துக் கொண்டே மந்த்ர ஸ்வரூபனான அவ்வாஸுதேவ பகவானுக்குச் செய்ய வேண்டும். மனத்தில் கபடமின்றி (சூது, ஏமாற்றம் இன்றி) பக்தி செய்கின்ற ப்ராணிகள் விஷயத்தில் அந்த வாஸுதேவன் வெகுமதி செய்யுந்தன்மையன். அத்தகையர் பக்தியுடன் செய்யின் பூஜையினால் பூஜிக்கப்பெற்று, அவர்க்கு தர்ம, அர்த்த காம மோக்ஷங்களில் எது இஷ்டமோ அதை நிறைவேற்றிக் கொடுப்பான். மோக்ஷத்தைப் பெற விரும்புமவன், இந்த்ரிய ஸுகங்களில் (கண், காது முதலிய புலன்களால் அடையும் இன்பத்தில்) மனம் செல்லப்பெறாமல், வேறு எண்ணங்களால் மறைக்கப்படாததும் பலவகை அங்கங்களோடு கூடினதுமாகிய பக்தியோகத்தினால் சரீர ஸம்பந்தம் நீங்கும் வரையில் அந்த பகவானையே மனோ வாக்காயங்களால் (மனது, சொல், உடல் ஆகியவற்றால்) நேரே உபாஸிக்க வேண்டும். இதர தேவதைகள் மூலமாய் உபாஸித்தால் மோக்ஷம் கிடைக்காது. ஆகையால் மோக்ஷத்தை விரும்புமவன் அவனை நேரே உபாஸிக்க வேண்டும். ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளை உபாஸிக்கிலும், அந்த உபாஸனம் அவர்களுக்கு அந்தர்யாமியான பகவானையே சேருமாகையால் அதுவும் பகவானுடைய உபாஸனமே. ஆயினும் அவர்களுக்கு அந்தர்யாமியான பகவான் அம்மூலமாய்த் தன்னை உபாஸிப்பவர்களுக்கு நச்வர (அழியக்கூடிய) பலன்களைக் கொடுப்பானன்றி மோக்ஷம் கொடுக்க மாட்டான், “ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளே நமக்குப் பலன் கொடுக்கிறார்கள்” என்கிற எண்ணத்துடன் அந்த ப்ரஹ்ம ருத்ராதிகளை உபாஸிக்கும் அவிவேகிகள் (பகுத்து அறியும் புத்தி அற்றவர்கள்) நச்வர (அழியக்கூடிய) பலன்களையே விரும்புவார்கள். அவர்கள் பரமாத்மாவின் உண்மையை உணராதவர்களாகையால் அவிவேகிகளே. அவன் ஸ்வரூபத்தை உணர்ந்தவர் நச்வர பலன்களை விரும்பவே மாட்டார்கள். விரும்பினாலும், அதற்காகவும் அந்த ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகளை உபாஸிக்கமாட்டார்கள். ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணன் ஸமஸ்த பலன்களையும் கொடுக்க ஸித்தனாயிருக்க, அவர்கள் மற்ற தேவதைகளை ஏன் நெஞ்சிலும் நினைக்கவேண்டும். ஆகையால் மோக்ஷத்தை விரும்புமவன் ஸ்ரீமஹாவிஷ்ணுவையே உபாஸிக்க வேண்டும். இங்கனம் மற்ற எவர்க்கும் ஸாத்யமல்லாத மோக்ஷத்தைக் கொடுக்கவல்லவனான பகவான் தன்னை ஆராதிப்பவர்களுக்கு மற்ற தர்ம அர்த்த காமங்களைக் கொடுப்பானென்பதில் ஸந்தேஹமே இல்லை. ஆகையால் நீ அந்த பகவானையே நான் சொன்னபடி பக்தியுடன் ஆராதனம் செய்ய, உன் விருப்பம் கைகூடப் பெறுவாய்.


மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் ஸ்ரீநாரதமுனிவரால் மொழியப்பெற்ற அந்த ராஜகுமாரன் அம்முனிவரை ப்ரதக்ஷிணம் செய்து (வலம்வந்து) நமஸ்கரித்து, ஸ்ரீஹரியின் பாதாரவிந்தங்களால் ஸஞ்சரிக்கப் பெற்றதும் பரிசுத்தமுமான மதுவனத்திற்குப் போனான். அந்த த்ருவன் அங்கனம் தபோவனம் போகையில், நாரத முனிவர் உத்தானபாதனுடைய அந்தப்புரம் சென்று, அங்கு அம்மன்னவன் கௌரவித்து ப்ரேமத்துடன் கொடுத்த அர்க்யம் முதலிய ஸத்காரங்களைப் பெற்று, அவன் அளித்த ஆஸனத்தில் ஸுகமாக உட்கார்ந்து இங்கனம் மொழிந்தார்.


நாரதர் சொல்லுகிறார்:- ராஜனே! முழுவதும் வாடி வதங்கின முகத்துடன் நெடுந்தூரம் எதைப் பற்றி ஆலோசிக்கின்றாய்? தர்ம அர்த்த காமங்களில் ஏதேனும் ஒன்று குறையப் பெற்றாயோ என்? அப்படியில்லையே? எதைப் பற்றி நீ சிந்திக்கின்றாயோ அதை எனக்கு மொழிவாயாக.


மன்னவன் சொல்லுகிறான்:- வாரீர் அந்தணர் தலைவரே! நான் ஸ்த்ரீகளுக்கு வசப்பட்டு மன இரக்கமில்லாமல் ஐந்து வயதுள்ள பாலனான என் புதல்வனை மாதாவுடன் பட்டணத்தினின்று துரத்தினேன். மாதாவைத் துரத்தவில்லையேயாயினும், அவளை உபேக்ஷித்தமையால் துரத்தினாற் போலவே. புதல்வனையும் நான் துரத்தாமற்போயினும், அவனுடைய விருப்பத்தை நிறைவேற்றாமல், அவன் பட்டணத்தினின்று புறப்பட்டுப்போகும்பொழுது வேண்டாமென்று தடுக்காமையாலும் அவனை நானே துரத்தினேன் என்பதில் ஸந்தேஹமில்லை. பல பாபங்களைச் செய்தாயினும் பாலனான புத்ரனையும் பதிவ்ரதையான பார்யையையும் (மனைவியையும்) ரக்ஷிக்க வேண்டுமென்று தர்ம சாஸ்த்ரங்கள் முறையிடுகின்றன. நான் ஸ்த்ரீலோலனாகி (பெண்களிடத்தில் ஆசை உள்ளவனாகி) பாலனான புத்ரனை ஊரை விட்டுப் போகும்படி துரத்திப் பதிவ்ரதையான பார்யையையும் உபேக்ஷித்தேன். இப்படி என்னுடைய தர்மலோபத்தை (தர்மத்தில் ஏற்பட்ட குறையை) நான் என்னென்று சொல்லுவேன். புதல்வனாயினும் துர்ப்புத்தியாகிப் (கெட்ட புத்தி உடையவனாகி) பலர்க்கும் உபத்ரவம் (தீங்கு) செய்பவனாயிருப்பானாயின், பல ஜனங்களின் க்ஷேமத்திற்காக அவனொருவனைத் துறக்கலாம். என் புதல்வனோ என்றால், அத்தகையனல்லன். விநயாதி (அடக்க ஒடுக்கம் முதலிய நன்நடத்தை) குணங்களெல்லாம் அமைந்து மிகுந்த மேன்மையுடையவனாயிருப்பான். மற்றும், அவன், மிக்க விவேகமுடையவன். அந்தணர் தலைவரே! அவன் வனத்தில் பசியெடுக்கப்பெற்று இளைப்புற்றுத் தாமரைமலர் போன்ற முகமெல்லாம் வாடி வதங்கி நாதனற்று (காப்பாற்றுவாரற்று) பூமியில் படுத்திருப்பானல்லவா? அங்கனம் வருந்திப் படுத்திருக்கின்ற என் புதல்வனை அங்குள்ள செந்நாய் முதலிய துஷ்ட ஜந்துக்கள் பக்ஷியாதிருக்குமா (உண்ணாதிருக்குமா)? அவன் க்ஷேமமாயிருப்பானா? ஆ! என்னுடைய துர்ப்புத்தித் தனத்தை (கொடிய புத்தியுடைமையை) நான் என்னென்று சொல்லுவேன்? நான் ஸ்த்ரீகளால் வெல்லப்பெற்று மதிகெட்டவனாகி என்மடியில் ஏறவிரும்பின பாலனான புதல்வனை ப்ரீதியுடன் அபிநந்தனம் (விருப்பம், வரவேற்பது) செய்யாதிருந்தேன். இதென்ன ஆச்சர்யம்? இப்படியும் ஒருவன் மதிகெட்டுப் போவதுண்டோ? இதனால் நீர் என் மதிகேடை (அறிவின் கெடுதியை) நிச்சயிக்கலாமல்லவா? இத்தகைய நான் என் செய்வேன்?


நாரதர் சொல்லுகிறார்:- மன்னவனே! நீ உன் புதல்வனைப் பற்றி வருந்த வேண்டாம். அவன் தெய்வத்தினால் பாதுகாக்கப்பெற்று க்ஷேமமாயிருக்கின்றான். அவன் ப்ரபாவத்தை அறியாமல் நீ வருந்துகிறாய். அது வேண்டாம். அவனை பகவான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றான். உன் புதல்வனுடைய புகழ் ஜகத்தெல்லாம் நிரம்பப்போகின்றது. அவன் இந்த்ரியங்களை வென்று லோகபாலர்களான இந்திராதிகளாலும் செய்யமுடியாத கார்யத்தைச் செய்து உன் புகழை விரித்து, மன்னவனே! சீக்ரத்தில் திரும்பி வரப்போகின்றான்.


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் தேவரிஷியாகிய நாரதர் மொழிந்த வார்த்தையை ஊக்கத்துடன் கேட்டு ராஜனாகிய உத்தானபாதன் ராஜ்யலக்ஷ்மியையும் பொருள் செய்யாமல் த்ருவனையே சிந்தித்துக்கொண்டிருந்தான். இது இங்கனம் இருக்க, த்ருவன் மதுவனத்தில் நடத்தினதைச் சொல்லுகிறேன், கேட்பாயாக, அவன் யமுனையில் ஸ்னானம் செய்து (நீராடி) பரிசுத்தனாகித் தவம் செய்யத் துவங்கினான். அந்த முதல்நாள் இரவில் அம்மதுவனத்தில் உபவாஸமிருந்து நாரதர் உபதேசித்த மார்க்கத்தின்படி பரமபுருஷனைப் பூஜித்தான். அவன் மூன்று இரவுகள் சென்ற பின்பு நான்காவது நாள் விளாம்பழங்களையும் இலந்தம் பழங்களையும் தன் தேஹதாரணத்திற்குப் (உடல் உயிரோடு ஒட்டியிருக்கப்) போதுமானவளவு புஜித்து ஸ்ரீமஹாவிஷ்ணுவைப் பூஜித்துக்கொண்டு ஒரு மாதகாலம் கடத்தினான். இளைஞனாகிய அந்த த்ருவன் பிறகு அந்த ஐந்து நாள்கள் கழிந்த பின்பு ஆறாவது நாள் தானே உதிர்ந்திருக்கிற புல் இலை முதலியவற்றை ஆஹாரமாக உட்கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதித்துக் கொண்டே இரண்டாவது மாதத்தைக் கடத்தினான். பிறகு எட்டு, எட்டு நாள்கள் கழிந்தபின்பு ஒன்பதாவது நாள் ஜலத்தையே ஆஹாரமாகக் கொண்டு உத்தமலோகனான பகவானை பக்தியோகத்தினால் ஆராதித்துக்கொண்டு மூன்றாவது மாதத்தையும் கடத்தினான். பிறகு நான்காவது மாதம் முழுவதும் பன்னிரண்டு நாள்களுக்கு ஒருதடவை வாயுபக்ஷணம் செய்து (காற்றை புசித்து) ச்வாஸத்தை (மூச்சுக்காற்றை) ஜயித்து பகவானை த்யானித்துக் கொண்டு ஜீவித்திருந்தான். ச்வாஸத்தை வென்று ஸ்வாதீனப்படுத்திக் கொண்டிருக்கிற அம்மன்னவர் புதல்வன் ஐந்தாவது மாதத்தில் மொட்டை மரம்போல் அசையாமல் ஒற்றைக்காலால் நின்று பரப்ரஹ்மத்தை த்யானம் செய்துகொண்டிருந்தான். ஸப்தாதிவிஷயங்களில் விருப்பமுடைய ஸ்ரோத்ரம் (காது) முதலிய இந்திரியங்களையெல்லாம் மனத்தில் அடக்கி, அம்மனத்தையும் ஸங்கல்ப (எண்ணம்) விகல்பாதி (ஸந்தேஹம் போன்ற) வ்யாபாரங்கள் எவற்றிலும் செல்லவொட்டாமல் தடுத்து அவன் ஹ்ருதயபுண்டரீகத்தில் பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானித்துக் கொண்டு அந்த பகவானுடைய உருவத்தைக் காட்டில் மற்றொன்றையும் பார்க்க நேராதிருந்தான். பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தில் மனம் ஊன்றினமையால் அவனுக்கு மற்றொன்றும் புலப்படவில்லை. ஆகையால் அவனுக்கு பக்தியோகம் கைகூடிற்று. மஹத்து முதல் ப்ருதிவி வரையிலும் உள்ள பூதங்களுக்கும் அவற்றோடு ஸம்பந்தித்த சேதனர்களுக்கும் தாரகனும் (ஸ்தூல சேதனாசேதனங்களைச் சரீரமாகவுடையவனும்) ஸூக்ஷ்ம (பெயர், உருவமற்ற) சேதனாசேதனங்களுக்கு உள்ளே புகுந்து நியாமகனும் (நியமிப்பவனும்) அவற்றைச் சரீரமாகவுடையவனுமாகிய பரப்ரஹ்மமென்கிற பரமபுருஷனை ஹ்ருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிற அந்த த்ருவனுடைய தேஜஸ்ஸை மூன்று லோகங்களும் பொறுக்கமுடியாமல் நடுக்கமுற்றன. அந்த ராஜகுமாரன் ஒற்றைக்காலால் நிற்கத் துவங்கினது முதல், பூமி அவனுடை கால் கட்டைவிரலால் அழுந்த அமுக்கப்பெற்றதாகி, வலிவுடைய பெரிய யானையால் ஏறப்பெற்ற ஓடம் ஜலத்தில் அடிக்கடி வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலுமாக அமுங்குவது போல், பாதி உள்ளே அமுங்கிற்று. மற்றும், அந்த த்ருவன் தன்னுடைய ஸமஸ்த (எல்லா) இந்திரியங்களையும் ப்ராணவாயுவையும் அடக்கிக் கொண்டு வேறு விஷயங்களில் செல்லாத புத்தியுடன் பகவானை த்யானித்துக் கொண்டிருக்கையில் இந்திரன் முதலிய லோகபாலர்களோடு கூடின லோகங்களெல்லாம் மூச்சுவிட முடியாமல் வருந்தி ஸ்ரீமஹாவிஷ்ணுவைச் சரணம் அடைந்தார்கள்.


தேவதைகள் சொல்லுகிறார்கள்:- ஸ்வாமி பகவானே! உலகமெல்லாம் மூச்சுவிட முடியாமல் ஸ்தாவரம் (அசைவற்றவை) போன்று வருந்துகின்றது. இத்தகைய உபத்ரவத்தை (கஷ்டத்தை) நாங்கள் எப்பொழுதும் அனுபவித்தறியோம். நீ சேதனாசேதனங்களையெல்லாம் சரீரமாகவுடையவன். ஆகையால் நாங்களெல்லோரும் உன்னுடைய சரீரங்களே. எங்களை இந்த வருத்தத்தினின்று விடுவிப்பாயாக. உலகத்தில் அவரவர் விரும்பும் விருப்பங்களையெல்லாம் ஸாதித்துக் கொடுப்பவன் நீயே. ஸர்வலோக சரண்யனாகிய உன்னை நாங்கள் சரணம் அடைந்தோம். நீ எங்களைப் பாதுகாப்பாயாக.


ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- நீங்கள் பயப்படவேண்டாம். தவத்தினால் எவர்க்கும் கடக்கமுடியாதவனான பாலனுடைய இஷ்டத்தை நிறைவேற்றி நான் அவனைத் தவத்தினின்று மீட்கின்றேன். ஆகையால் நீங்கள் உங்கள் இருப்பிடம் போய்ச் சேருவீர்களாக. “பாலனையா? என்னில் சொல்கிறேன் கேளுங்கள். உத்தானபாதனுடைய புத்ரனாகிய த்ருவன் ஐந்து வயதுள்ள பாலன் இந்த்ரியங்களையெல்லாம் வென்று ப்ராணவாயுவையும் அடக்கி என்னைத் தன் ஹ்ருதயத்தில் நிலைநிறுத்திக் கொண்டு த்யானம் செய்கிறான். ஸர்வ ப்ராணிகளுக்கும் ஜீவன் ஹேதுவான (உயிர்பிக்கும் காரணமான) என்னை அவன் தன் ஹ்ருதயத்தில் தகைந்துவிட்டானாகையால் (தடுத்து நிறுத்திவிட்டானாகையால்) ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ப்ராணவாயு தடைப்பட்டது. ஆகையால் நான் அவனை ஸமாதானப்படுத்தி தவத்தினின்று திருப்பி அனுப்புகிறேன். அதனால் சீக்கிரத்திலேயே தங்கள் வருத்தம் நீங்கி நீங்கள் ஸுகப்படுவீர்கள். ஆகையால் உங்கள் இருப்பிடம் போய்ச் சேருவீர்களாக.


எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை