செவ்வாய், 14 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 32 - கண்ணன் ரங்காச்சாரி

30

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை 
திங்கள் செருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவை 
பைங்கமலத்  தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே 
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரெண்டு மால்வரை தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 

முப்பதாம் பாட்டு திருப்பாவைக் கடலுக்கு மற்றொரு கரை. இத்தனை நாளும் இந்த திவ்ய பிரவாகத்தில் குளித்து பக்திப் பரவசம் கொண்ட யாவரும், எம்பெருமானாலும், பிராட்டியாலும் தொடர்ந்து அனுகிரஹிக்கப் படுவார்கள் என்பது குறிப்பு. 

இவர்க்கெல்லாம், மார்கழிப் பாவை நோன்பை அனுஷ்டித்தவர்களின் வழியாகப் பாதியும், அநுகரித்தார் (நோன்பு நடத்திடக் காரணமானவர்கள்) வழியால் இன்னொரு பாதியும் பரி பூரணக் கடாக்ஷம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

பட்டர் சொன்னார். 'கன்றிழந்த தலைநாகு, தோல் கன்றை மடுக்க அதுக்கு இறங்குமாப்போல்' - கன்றினை இழந்த தாய்ப்பசு, இறந்த கன்றின் தோலால் செய்யப்பட்ட பொய்க் கன்றினை, நாவால் தடவிக் கொடுத்து, இரங்கி பாலூட்டுமாப்போலே, கோபியர்கள் சொன்ன இப்பாசுரங்களை அனுசந்தித்து ஆனந்தம் கொண்ட எவர்க்கும், நோன்பெதுவும் செய்யாமல் போனாலும் கூட, பரி பூரண பலன் சித்திக்கும். 

'வங்கக் கடல்' - கடல் கடைந்த போது, அதில் செல்லும் மரத் தோணியானது ஆடாமல் அசையாமல் இருந்ததைப்  போலே. உலகைச் சுழற்றி நடத்தும் செயலில், அன்பர் யாருக்கும் உடலோ / மனதோ நோகச் செய்யாமை, மாலனின் கருணை.  கடலின் அடியில் எங்காவது அமுதம் இருக்குமோ என்னில், அது கண்ணனின் திருக்கரங்கள் தந்த விந்தை.  

கிருஷ்ணனைப்  பாடும் பாசுரத்தில் க்ஷிராப்தி நாதனை ஏன் பாட வேண்டும்?. 'விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமதுண்ட பெருமானே', என்னும் படியாய் கடல் கடைவதைக் காரணமாக்கி, பெரிய பிராட்டியைக் கொண்டது போலே, நோன்பென்னும் ஒன்றை ஊர்க் காரியமாக்கி, கோபியர்களைப் பெறுவதற்கு கண்ணன் செய்த திருவிளையாடலாம். 


கடலடியில் கண்ட அமுதத்தின் நுரை, கண்ணன் மத்தினால் கடையக், கிளம்பி, திரை விசும்பு என்னும் வானத்தைத் தொட்டு நின்றதாம்.

'வங்கக் கடல் கடைந்த மாதவனை' - 'லக்ஷ்மிநாத சமாரம்பாநைக்' குறிக்கும் நாமம். அர்ச்சித்து நிற்பவரின் குற்றம் களைவித்து அவர் வேண்டுகையை பூர்த்திக்கும் நாமம். தாயின் முன்னால் குழந்தைகள் செய்யும் விஷமங்கள், தந்தைக்குப் பெரியதாய்  தோன்றாதாம், அதே போல, பிராட்டியின் சேர்க்கையில் உள்ள நேரம், திருமாலுக்குச் சேதனர்கள் (நம் போன்றவர்களின்) குற்றங்கள் பெரிதில்லையாம். 

'கேசவனை' - பிராட்டி மிகவும் விரும்பும் கற்றைக் குழல் கொண்டவனை, 'கட்டு நெகிழ்ந்து அவிழ்ந்து அலைய நின்று ஆய்த்துக் கடல் கடைந்தது. கடையப் புக்கார்க்கெல்லாம் குழல் அலையும் இறெ' - கடலை ஆர்ப்பாரத்தோடுக் கடைந்திடும் போதில் மாலனின் தலைக் கற்றை முடி அவிழ்ந்து அலைகள் போலவே அசைந்து திவ்ய தரிசனமாய்க் காட்சி தந்தது. 

'திங்கள் செருமுகத்துச்' - கிருஷ்ண சம்ச்லேஷத்தாலே (சந்நிதியினாலே), மலர்ந்த முகம். க்ஷீராப்திக் கடலைக் கடைந்து, மாலன் கொண்ட பெரிய பிராட்டியுடைய அருளால் தேஜஸை அடைந்த முகங்கள். இவனுடைய திவ்ய சொரூப முகத்தை யாரெல்லாம் ஆஸ்ரயிக்கிறார்களோ (விரும்பித் தொழுகிறார்களோ), அவர்களுடைய முகங்களும் தேஜஸ்ஸை பெரும் என்பது குறிப்பு. அவர்கள் அழகு முகத்தைக் காண்கிறவர்கள், இவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, என்று வியப்புறுவார்கள்.    

'சேயிழையார்' சூடகமும், தோடும், பாடகமும், பல்கலனும், நப்பின்னை பிராட்டி அணிவிக்க, அணிந்த கோபியர்கள். இயற்கையிலேயே அழகான இவர்கள் ஆபரணங்களால் இன்னும் சொலிக்கிறார்கள்.

'சென்று இறைஞ்சி'  - இந்த ஒப்பனைகளோடு, கண்ணன் வருமளவுக்குக் காத்திராமல் தானே சென்று, அவனை வாயினால் பாடிக், கும்பிட்டு,

'அங்கு' - நந்தகோபனுடைய அரண்மைனையில் பிராட்டியோடு இருந்த வண்ணம், சீரிய சிங்காசனத்திலே வீற்று  

'அப்பறை கொண்ட வாற்றை ' - அவனுடைய  சர்வஸ்த்வத்தோடே இயைந்து அதில் ஆட்பட்டு, அவன் தங்களை அடிமைகளாய் ஏற்றுக் கொண்ட வழியை எண்ணிப் பூரித்துப் போய்  

'அணி புதுவை' முதன் முறையாய், கோதை பிராட்டி தன்னுடைய ஊரான ஸ்ரீ வில்லிபுத்தூரைக் குறிக்கிறாள். பொன்னும் முத்தும் மாணிக்கமும் கலந்து செய்த ஆபரணம் போலே பெரியாழ்வாரும் கோதையும் பாடிச் சிறப்பித்த வடபெரும்கோயிலுடையானின் இருப்பைக் கொண்ட நல்லூர். 

'பைங்கமலத் தண்டெறியல்' - பசுமையான தாமரையின் குளிர்ச்சியுடைய மாலையை அணிந்த, கண்ணனைக் காணும் போதெல்லாம் முகமலரும், ஆதித்யனைக் கண்டால் பூக்கும் தாமரையைப் போன்ற,

'பட்டர் பிரான்' - எம்பெருமானின் அர்ச்சாவதார திரு விக்ரஹங்களுக்கு நித்ய கைங்கர்யங்கள் செய்யும் பேறு  கொண்ட பெரியாழ்வார், மற்ற பட்டர்களுக்கு வித்யா பிரதானம் செய்வித்த குருவானவர், அரங்கனோடு கோதைக்கு கல்யாணப் பிரதானம் செய்வித்த தந்தை.

'கோதை சொன்ன' - ஆழ்வாரின் புத்ரியானதால் ஏற்றம் கொண்ட கோதை பிராட்டி சொன்ன குற்றமொன்று மில்லாத, ஸ்வயம்புவான வேதங்கள் போலில்லாமல், கோதையின் பிறப்பின் சிறப்பினாலும், கண்னனைப் பற்றியெதென்பதாலும், சிறந்ததான,

'சங்கத் தமிழ் மாலை' - அஞ்சு லக்ஷம் குடியிலிருந்து வந்து நோன்பிருந்த ஆய்ச்சிமார்கள் கூடத்  தானும் ஒருவளாகி ஆண்டாள், அவர்கள் சங்கத்தில் கொண்ட அனுபவங்களைத் தொடுத்த அழகிய பாமாலை. பிராட்டி ஆண்டாளாக அவதரித்தது போன்ற உபநிஷத் அவதரித்த - தமிழ் வேதம். வெறும் பாசுரங்களாய் மற்றும் இல்லாது, பக்த அனுபவங்களின் கோவை ஆனதால், தலையில் சுமக்க வேண்டியதான அபூர்வப் பொக்கிஷம்.

'கோதை சொன்ன மாலை' - அவன் அவள் செவியில் பூ சூட்டினான் (தோடே செவிப்பூவே). இவள் அவனுக்கு என்றுமே வாடாத,  நறுமணம் குன்றாத பாமாலை சூட்டினாள்.

'முப்பதும் தப்பாமே ' - திருப்பல்லாண்டும் திருமந்திரமும் போலே சுருக்கமாக இருத்தல். வேதத்தையும், திருவாய் மொழியையும் போல் விரிந்து இல்லாது, யாரும் எளிதாய் விரைவாய் ஓதும் அற்புதம். முப்பதில் ஓன்று கூட விடமால் ரசித்து, ஆழ்ந்து, ஸ்மரித்து ஓதிட  வேண்டிய அரும்பொருள்.

'இங்கு இப்பரிசுரைப்பார்' - சம்சாரத்தில் உழன்று கிடக்கும் நம்போன்றவர்கள், கிருஷ்ணப் பிரசாதமான இந்தத் திருப்பாவையைப் பெரும் பரிசாகக் கொண்டு உரைப்பவர்கள். திருவாய்ப்பாடியில் ஆய்ச்சியர் அனுபவமாகப் பெற்றதை ஆண்டாள் அனுகிரஹத்தாலே பெற்றாள். நாம் அதை நாளும் உரைப்பதனால் அதே ஆனந்த்தைப் பெறுவோம்.   

'ஈரிரெண்டு மால் வரைத்தோள்' - கண்ணனை உகாக்காதவர்க்கு, இரண்டாகத் தோன்றும் தோள்கள், உகப்பார்க்கு நான்காகத் தெரியும். மால் என்ற மலையைப்போல் உயர்ந்து வலிந்த திண் தோள்கள். பிராட்டிகளுக்கும், கோபியர்க்கும், உறங்குமிடமாய் கிரி ஸ்தலமானத் தோள்கள்.

'செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்' - இவர்களுக்கு நிலவு முகமும், அழகிய கண்களும். அவனுக்குச் செங்கண், கதிர் மதியம் போன்ற முகம், பங்கயக் கண்ணான், செங்கண் சிறுச் சிறிதே, என்னும் வகையால், வாத்சல்யத்தினால் சிவந்த கண்கள். திருவுக்குத் திருவானவன் ஆனதால், செல்வத்  திருமால். த்வய சித்தாந்தமான ஸ்ரீ யப் பதி:

'இன்புறுவர்' - எங்களைப் போலவே இன்புறுவர். எங்கள் சங்கத்தாலே இன்புறுவர்.  

பட்டர் அருளியது. 'விடிவாறே எழுந்திருந்து, முப்பது பாட்டையும் அனுசந்தித்தல். மாட்டிற்றில்லனாகில் சிற்றும்சிறுகாலே என்ற பாட்டை அனுசந்தித்தல். அதுவும், மாட்டிற்றில்லனாகில், நாமிருந்த விருப்பை நினைப்பது' - விடியற் காலையில் எழுந்து முப்பது பாசுரங்களையும் ஓதிடல். முடியாமல் போனவர்க்குச், சிற்றம் சிறுகாலே என்ற ஒருபாட்டையாவது ஓதிடல், அதுவும் முடியாதவர்கள், இப்பாசுரங்களை ஓதியவர்கள் அனுபவித்த இன்பத்தை நினைப்பதால் மூலம் மட்டுமே  பெரும் பயன் அடைவார்கள்.  

திருப்பாவை வியாக்கியானம் சம்பூர்ணம்

ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக