திங்கள், 13 ஜனவரி, 2020

உயர் பாவை - 30 - சதாரா மாலதி

உனக்கே யாம் ஆட்செய்வோம் 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் அத்தலை உரிமையைச் சொன்ன ஆண்டாள் 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே யாம் ஆட்செய்வோம்' என்று இத்தலைக் கடமையை அறுதியிட்டு முடித்தாள். உரிமை ஒவ்வொன்றுக்கும் கடமை உண்டு. நாட்டுக்காகட்டும் வீட்டுக்காகட்டும் சமூகத்துக்காகட்டும் எதைப்பெறுகிறோமோ அதே விலையுள்ள ஒன்றைத் தருகிறோம். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, நாராயணனே கொடுப்பான் நமக்கே கொடுப்பான், நாமும் ஆட்செய்வோம் அவனுக்கே செய்வோம். எற்றைக்குமேழேழ்பிறவிக்கும் செய்வோம். இனிய தாம்பத்தியத்திலும் அதே தானே விதி? அவன் எவ்வளவு ஈடுபடுகிறானோ அவ்வளவு அவளுக்கும் ஈடுபாடாகும். 

சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வாய், அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும், உன் தன்னோடு 
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆள் செய்வோம் 
மற்றை நாம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

காலங்காலையில், அதிகாலையில்வந்தேன். உன்னடி, பொன்னடி, தாமரையடி தேடிவந்தேன். அழகானதும் புனிதமானதும் ஆன அடிகள் பொன்னானது மணமும் கமழ்ந்தாற்போல ஒரே சமயத்தில் அழகும் மதிப்பும் கொண்டதாயிற்று. அப்படி உன்னை வந்தடைந்ததற்கு நோக்கத்தை நீ தெரிந்துகொள். மிக வருந்தி வந்தேன். ஒரு நாள் வாய்த்து சத்துவம் கூடி ,விவேகம் வாய்த்து செய்வன செய்யாதன புரிந்து உன் நிலை அறிந்து பத்து படி தாண்டி, ஆசிரியன் அருளும் பிராட்டி கருணையும் பெற்று நெறி பிறழாமல் கைங்கர்ய வழி மேலேறி சாரூப்யம் சாயுஜ்யம் எய்தி பிழை பொறுக்கும்படி சரணாகதியைச்செய்து இப்போது பரமபக்தியை நிரந்தரமாகப் பெற்றுவிட நிற்கிறேன். உன் நாள் தொடங்குமுன் உன்னைப் பிடித்து விட வேண்டுமென்று விடியற்காலை வந்தேன். இன்னமும் காலைக்குருத்து தான் கிளம்பியுள்ளது. [அந்தப் பெண்கள் பேச்சுக்குப் பேச்சு நடு ராத்திரி என்று குறிப்பிட்டது சரிதான் போலிருக்கிறது. 29வது பாட்டில் சிற்றஞ்சிறு காலை என்றால் 6 முதல் 15 பாட்டில் எந்தக் காலையாக இருந்திருக்கக் கூடும் பாருங்கள்] 


இரவெல்லாம் தூங்காமல் காலை எப்போதாகும் என்று காத்திருந்து ஓடி வருகிறேன். இரவெல்லாம் தரியாமல் துயருற்று எப்போது விடியும் என்று காத்திருந்து வருகிறேன். உன் காலை அட்டவணை ஆரம்பிக்குமுன் உன்னைப் பிடிக்கவென்று ஓடி வருகிறேன். வந்தேன் உன்னைப்பணிந்தேன். சிறு பெண் வெளிக்கிளம்ப முடியாத விடியலில் நீ வந்து என்னை ஆச்ரயிக்கும் முன் நானே வந்தேன். உன்னைப்பணிந்தேன். சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச்சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய். கேட்டுக் கொள்ள உனக்கு சிரமமாக இருக்கிறதா? 

நீ கேட்டாக வேண்டும். நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவிருந்து பிறவியற்றாருக்கு மட்டும் முகம் கொடுக்கும் பரமபதத்தில் வந்து நின்றேனா நான்? இல்லையே! 

பிறவிக்கு மிக மிக பயப்பட்டு உன்னையே கால் கட்டுவாருள்ள நிலத்துக்கு பாற்கடல் பள்ளியருகே வந்து நின்றேனா? இல்லையே! 

நீயும் பிறந்து இருக்கச் செய்தே இக்ஷ்வாகு குலத்தில் ஆசார ப்ரதாநர் புகுந்து நியமிக்கும் அவதாரகாலத்தில் வந்து நின்றேனா? இல்லையே! 

வாலால் உழக்குக்குப்பசு மேய்த்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்தில் நீ என்ன செய்யப்பிறந்தாயென்று விசாரிக்கலாகாதா? பெற்றம் மேய்த்துண்ணும்குலத்தில் பிறந்து நீ.... நான் சொல்ல வருவதைக் கேட்டுக் கொண்டாக வேண்டும். 

[வாலால் உழக்குக்குப் பசு மேய்க்கை.. யாவது - ஒரு பசு மேய்க்கைக்குக் கூலி ஒரு உழக்கு நெல் என்று இடையர் கூலி பேசி வைத்துக்கொண்டு பல பசுக்களை மேய்த்து வந்து கூலி பெறும் காலத்தில் இத்தனை பசுக்களைமேய்த்தோம் என்று கணக்கு சொல்லத்தெரியாமல் தாங்கள் மேய்த்த பசுக்களை வரிசையாக நிறுத்தி ஒவ்வொரு வாலையும் தொட்டுக்காட்டி 'இதற்கு ஒரு உழக்கு', 'இந்த வாலுக்கு ஒரு உழக்கு' என்று சொல்லி கூலி பெறுகை. தயிர்க்காரிகள் போட்டு வைத்து இவ்வளவு ஆழாக்கு என்று கணக்கு செய்வது முன்னேறின காலம் போலும். அறிவு கேட்டுக்கு இடைக்குலம் எல்லை நிலமென்கை. அறியாதார்க்கானாயனாகிப்போய் என்ற பெரிய திருமொழி கருதத் தக்கது] 

என் குற்றேவலை நீ கொள்ள வேண்டும். [அத்தோடு ஏதோ பறை என்றீர்களே! அது வேண்டாமா? என ஞாபகம் பண்ணின கண்ணனுக்கு ஆண்டாள் பதில் சொன்னாள்.] 'இற்றைப்பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா, எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமே யாவோம் உனக்கே யாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று' பறை பறை என்று அசலாருக்குப் புரியாதிருக்க வென்று பூடகமாக என் அபிலாஷையை உனக்கு உரத்துச் சொன்னேன். அதை அப்படியே 'பறை' யென்றே எடுத்துக்கொண்டாயா? கோவிந்தா, மாட்டிடையன் புத்தி பேருக்கேற்றாற்போல் உனக்கு அப்படியே இருக்கிறது. மாடு மேய்க்கும் இடையனாகவே பெண்மனசைப்புரிந்து கொள்ளும் வல்லமையில்லாமல் இருக்கிறாயே! காதலில் எல்லாவற்றையும் அப்படி அப்படியே சொல்வார்களா? ஒளிவு மறைவு வைக்க மாட்டார்களா? நான் பறை என்றதற்கும் அழுத்தம் கொடுத்ததற்கும் அதுவல்ல பொருள். எப்போதைக்குமான உன் உறவையும் நெருக்கத்தையுமே நான் கேட்டேன். மற்ற விஷயம் எதிலும் எனக்கு ஆர்வமில்லை. பின்னும் என் மனசு திரும்பாதபடி நீ தான் பார்க்க வேண்டும் என்றாள். 

காலம் உள்ளவரைக்கும் ஏழேழு நாற்பத்தொன்பது பிறவிகளிலும் உன்னோடே பிறந்து உன்னோடே வாழ்ந்து உனக்கே நான் தொண்டு செய்ய வேண்டும். உன்னைப்பிரியாமல் இருக்க வேண்டும். எப்போதும் உறவாக வேண்டும். என்றாள். 

நீ வைகுந்தம் கோயில் கொண்டு இருக்குமிடத்திலும், பின்னும் 'எம்மாண்புமானான்' என்னும்படி அவதாரமெடுத்துத் திரியுமிடத்திலும் உன்னோடே இருக்க வேண்டும். எல்லாவித பந்தமும் உன்னோடேயாகவேண்டும். எல்லாஉறவும் நீயேயாக வேண்டும். நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு வேண்டும். அசலூரில் வளரப்போகப் புலம்புமுறவு உண்டாக வேண்டும். நீ 'உடன் வராதே நில்' என்று சொல்லிக் காட்டுக்குக் கிளம்பினால் நீர் பிரிந்த ஜந்து போல் துடிக்கும் உறவு வேண்டும். நீ பாம்பின் வாயிலே விழுந்தாய் என்றால் பிணம் படும்படியான பாந்தவ்யம் வேண்டும். கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவு வேண்டும். எங்கள் வீட்டிலேயிட்ட ஆசனத்தை ஊன்றிப்பார்க்கு முறவு வேண்டும். பெற்ற தாய் நீ பிறப்பித்த தந்தை நீ மற்றையார் ஆவாரும் நீ என்றிருக்க வேண்டும் உறவில் சேர்ந்தபின்பும்பத்து மாதப்பிரிவு, பதினாலாண்டு பிரிவு, பதினாறாண்டு பிரிவு என்பதெல்லாமின்றி உற்றோமேயாவோம். ப்ராதா, பர்தா ச பந்துஸ்ச பிதாச மம ராகவ என்று லட்சுமணன் சொன்னபடி எல்லாம் நீயே யாக வேண்டும். நான் உன்னையன்றி இலேன் கண்டாய், நீ என்னை அன்றி யிலை, என்றபடி. சேலேய் கண்ணியரும் பெருஞ்செலவமும் நன்மக்களும் மேலாத்தாய்தந்தையரும் அவரே என்று சொன்னபடி.

சின்னி கிருஷ்ணனை பெத்த பெருமாள் என்று சொன்னது தவறு. அந்தப்புற வாசலில் விழுந்து படுகாடு கிடப்பவனை நாட்டுக்குடையவனாக ஏத்திச்சொன்னது தப்பு என்று கீழ்ப்பாசுரத்தில் [பவிசு பாராட்டாத, ஜம்பம் பண்ணிக்கொள்ளும்குணக்குறைவில்லாத தன்மை சொல்லவென்று] குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்று சொன்னேன். இன்று பறையை பறை என்றே புரிந்து கொண்டு பெண்கள் பேச்சின் ஆழமும் அர்த்தமும் புரியாதது போல் நடிக்கும் புத்திக்குறைவைக்குறிப்பிட அதே கோவிந்தன் பேரை இன்னொருமுறை சொன்னேன். நண்பரிடம் தோற்கும் சீர்படைத்த கோவிந்தபட்டபிஷேகம் செய்து கொண்ட கோபாலனை முன்னால் சொன்னது பிறிதொரு அர்த்தத்தில். 

கடையாவும் கழிகோலும் கையிலே பிடித்த கண்ணிக்கயிறும் சுற்றுத்தூளியாலே தாசரிதமான திருக்குழலும் மறித்துத் திரிகிறபோது திருவடிகளிலே கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும் குளிர்முத்தின் கோடாலமுமாய் நிற்கிற உபாய வேடத்தை 'கோவிந்தா' என்றழைத்தாள் ஆண்டாள். 

கர்ம ஞான பக்தி யோகங்களைச்செய்வதில்குறைவுண்டாகும். சாதனத்துக்கு தக்கபடி பலன் அளவுபடும். அல்பமான அநித்தியமான பலனே கிடைக்கும். சாதனத்தில் தடை வரும். சாதன பூர்த்தி செய்யாவிடில் பாபம் வரும். முயற்சிக்குறைவும் இச்சைக்குறைவும் தொய்வும் அவ்வப்போது ஏற்படும். பகவானே உகந்து செய்யும் சித்தோபாயத்தில் குறை என்பதே கிடையாது. எனவே தான் அதை நம்பினாள் ஆண்டாள். அதே சமயம் அந்த அபரிமிதத்துக்குப் பாத்திரமாகும்படி தன்னை வடிவமைத்துக் கொள்வதும் முக்கியம் என்பதால் தனக்கு எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான உடனிருப்பைக் கோருகிறாள். 

To be with God forever, to be with good and noble things forever, to be with eternal love for ever.... என்பதையே ஆண்டாள் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தனோடு உற்றோமேயாவோம் உனக்கே யாம் ஆட்செய்வோம் என்றாள். 

நாராயணனோடு, உத்தமனோடு, பத்மநாபனோடு, மாயனோடு, தாமோதரனோடு, ஹரியோடு, கேசவனோடு, தேவாதி தேவனோடு, மாதவனோடு, வைகுந்தனோடு, முகில்வண்ணனோடு, மனத்துக்கினியானோடு பங்கயக்கண்ணனோடு, உம்பர்கோமானோடு.. காலம் காலமாக வாழ்வது சாதாரண விஷயமா? அவன் குணங்கள் தாம் எத்தனை எத்தனை? வலி என்ன! திறல்என்ன! செப்பம் என்ன! பெருமை என்ன! இறைமை என்ன! அவனுடன் இருப்பதே பலன். வேறெது வேண்டும்? அவன் அருகாமையில் கண்ட மால் மயக்கமே போதுமே அவனிடம் மயங்கிக் காலம் கழிக்க! மனதுக்குப்பிடித்த மணாளனை விட வேறு எது பிரியமானதாக இருக்க முடியும் ஒரு பெண்ணுக்கு? 

நான் கேட்டதைக் கொடுத்தருள் என்று ஆண்டாள் சொன்னாள். கேட்டது அப்படியே கிடைத்தது. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதே தேவ சாம்ராஜ்யத்தின் விதி அல்லவா? 
நாராயணனே நமக்கே என்றதில் பரம் கொண்ட கடப்பாட்டை ஞாபகப்படுத்தியது போலவே யாம் உனக்கே… உற்றோமே யாவோம் என்றதில் தன் செயல்பாட்டையும் வரையறுத்துச் சொல்லி விட்டாள். நல்லதும் கெட்டதும் உயர்வும் தாழ்வும் எதுவும் சேர்த்தியில் அனுபவிக்கப்போகும் கணவன் மனைவிக்குக் கஷ்டம் என்ற ஒன்றே இராதல்லவா?

துரத்தித் துரத்திக் காதலித்து உடைமையாக்கிக் கொண்டு உரிமையை என்றைக்குமாகத் தக்க வைத்துக்கொண்ட ஆண்டாளின் சாதுரியம் அபூர்வமானது கம்பீரம் இழக்காத அவளுடைய பிரார்த்தனை மிக இங்கிதமானது. முப்பதே பாட்டுகளில் அவள் வைத்த கருத்துகள் எல்லாராலும் ஏற்கப்படக்கூடியவை. எல்லாரும் பின்பற்றத்தக்கவை. குறைந்த பட்சம் ரசிக்கத் தக்கவை. 

வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச்சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே 
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்றின்புறுவரெம்பாவாய்.

பால் கடலில் அமுதெடுக்க தேவருக்கு உதவுவது போலத் தனக்கு மஹாலட்சுமியை சிரத்தையுடன் மீட்டுக் கொண்ட அந்த மாதவனை, காதல் பெண்களைக் கண்டுபிடித்து தனக்காக்கிக் கொள்ளும் வல்லமை படைத்த சுருண்ட கேசம் கொண்ட கண்ணனைப் பளீரென்று முகமுடைய கோபிகள் வேடத்தில் போய் அழகான பறையோடு ஆண்டாண்டுக்குமான உயர் உறவையும் வாங்கிவந்த விஷ்ணுசித்தன் மகள் ஆண்டாளின் நெறியை, அவள் அனுபவித்து விவரமாக எழுதிவைத்த 30 பாசுரங்களாலான திருப்பாவையைத் தொடர்ச்சி விடாமல் படித்துப் புரிந்து கொண்டவர்கள் திருமால் கருணையால் என்றும் நிம்மதியும் சந்தோஷமும் பெறுவர். அந்த நிம்மதியில் மற்ற எல்லாமே அடங்கும். இது தான் திருப்பாவையின் முடிவுரை. 

கன்றுக்கிரங்கி பால் கொடுத்த பசு கன்று இல்லாதபோதும் கன்றின் உடலைப்பாடம் பண்ணிச் செய்யப்பட்ட தோல் கன்றைக்கறப்பவன் இறுக்கிக்கொண்டு பால் கறக்க அப்போதும் இரங்கிப் பால் பொழிவது போல கோபியை அனுகரித்து ஆண்டாள் செய்த நோன்பை ஏற்று அவளுக்குக் கொடுத்த பேற்றை ஆண்டாள் காலம் தாண்டினபின்னும் அவள் சொன்னதைச் சொல்லும் மக்களுக்கும் இன்னும் வரப்போகும் பின் சந்ததிக்கும் கொடுப்பான் என்பதாகப் பெரியவர்கள் பொருள் சொல்கிறார்கள். 

மிக உயர்ந்த பக்தியும் அழகியல் உணர்வும் உடைய ஆண்டாள் திருவரங்கம் சென்று திருக்கல்யாணம் செய்து கொண்டாள் என்று லெளகிகப் பதிவுகள் சொல்கின்றன. அது அறிவு ஜீவிகளான நமக்கு விவரப்படத் தேவையில்லை என்றே தோன்றுகிறது. காதல் ஒன்று தானே முக்கியம்? அது ஏற்கப்படுவது முக்கியம். ஒரு பதிவு ஆண்டாளின் வாக்கியத்தில் மிக ஸ்வாரசியமாக இருக்கிறது. அவள் சாதாரணப் பெண்களைப்போல நேர்ந்து கொண்டாள் தன் காதல் வெற்றிக்காக. 

நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்காரவடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையானின்று வந்திவை கொள்ளும் கொலோ 

என்று பிரார்த்தனை செய்தவள் [நாச்சியார் திருமொழியில்] திருவரங்கத்தில் போய் கருவறையுடன் கரைந்து விட்டாள். போதுமா வேண்டுதல்? நூறு அண்டா வெண்ணையும் நூறு அண்டா சக்கரைப்பொங்கலும். பிரார்த்தனையை யாரும் முடிக்கவேயில்லை. நெருடல் தாங்காமல் எம்பெருமானார் இராமானுஜர் நேர்ச்சியைச் செலுத்திவிட்டு திருவில்லிபுத்தூர் போய் ஆண்டாள் சன்னிதியில் நின்றார். 'எம் அண்ணாரே' என்று உருகி அழைத்தாள் ஆண்டாள். அப்படித்தான் பெரும்பூதூர் மாமுனிக்குப்பின்னானாள் ஆண்டாள். வருடாவருடம் நடக்கும் திருவில்லிபுத்தூர் உத்சவமும் தைலக்காப்பும் பிரியாவிடை சேவையும் சாட்சி ஒரு தமிழ்ப்புலமைக்குக் காலம் அளிக்கும் [கடவுள்கொள்கை தாண்டின எல்லாம் மீறின] கெளரவத்துக்கு. 

நிறைந்தது.

ஆண்டாள் திருவடிகளே சரணம் 

நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக