திங்கள், 13 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 31 - கண்ணன் ரங்காச்சாரி

29

சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வாய், அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும், உன் தன்னோடு 
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆள் செய்வோம் 
மற்றை நாம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில் ப்ரபந்தத்தின் சாரமான, கைங்கர்யத்தின் சிறப்பு ஓதப்பட்டிருக்கிறது. 'எம்மா வீடு' என்ற பாசுரத்தால், தாம் அடைந்ததை எண்ணிப் பெருமிதமுற்று 'நெடு மாலுக்கு அடிமை' என்ற சர்ம ஸ்லோக சாரத்தை முடித்து வைத்தார் ஆழ்வார். ஆண்டாளும் அதே பொருள் பட இப்பாடலில் அருளிச் செய்கிறாள்.

'போற்றும் பொருள் கேளாய்' என்பதும், 'உனக்கே நாம் ஆள் செய்வோம்' என்பதும் கண்ணனை அடைந்தமையான 'ப்ராப்யத்தை' வெளிப்படையாய் சொல்லுகின்றன. 'மற்றை எம் காமங்கள் மாற்று' என்பதால் பாகவத கைங்கர்யமே அனைத்திலும் ஸ்ரேஷ்டமானது என்று அனுசந்திக்கப் பெறுகிறது.

'சிற்றஞ்சிறுகாலே' - 'வெட்ட வெடியாலே' என்பது போன்ற ஒரு குலத்தருடைய சஹஜ மொழி. மிக மிக இளங்காலை. கிட்டத் திட்ட விடியற்காலை 3.00 மணியளவு. 'சிறு பெண்களான ஆய்ச்சியர் எழுந்திருக்க வொண்ணாக் குளிர்பொழுது. 'ப்ராஹ்மே முகூர்த்தே சோத்தாய சிந்த்யேதாத் மனோஹிதம்' - ப்ரஹ்ம முகூர்த்தமான இளங்காலைப் போதில் விழித்துக் கிடந்து சிந்திப்பது மனதுக்கு இதம் தரும். அறிவு தூங்கிப் போய் பக்தி தலை எடுக்கும் உன்னத காலம். அத்யந்தம் ப்ராத: காலம். பஞ்ச பஞ்ச உஷத் காலம். அந்த கார இருள் நீங்கி, அஞ்ஞானம் விலகி பகவத் விஷயம் வெளிச் செறியும் காலம்.

'சிறு காலே ஊட்டி ஒருப் படுத்தேன்' என்று இளங்கன்றுகளை மேய்க்கும் காலம். சிறு காலையில் வந்தால் உன்னைக் காண வொண்ணாதே, சிற்றஞ்சிறுகாலை வந்து.

'வந்து' - 'வீதி ஊடே வந்து', 'நம் தெருவின் நடுவே வந்து', 'உன் தோரண வாசலிலே வந்து', அவன் வராததாலே இவர்கள் அவனிடம் வந்து - 'பத்ம்யாம் அபி கமாச்சைவ ஸ்னேஹ சந்தர்சனே நச'. நாங்கள் வந்திருக்கிறோம் என்பதனால் வாசல் வரை வந்து எங்களை எதிர் கொள்ளுபவனை.

'உன்னைச் சேவித்து' - எந்தப் பலனையும் வேண்டாது, சாதன காலத்தில் ரசிக்கும் உன்னைத் சேவித்து. 'நாராயணன் போமிடமெல்லாம் சோதித்து உழி தருகின்றாள்' - அவன் இருக்கும் இடமெல்லாம் தேடி தேடி, அறிந்து சேவிக்கிறாள்.


'உன் பொற்றாமரை அடியே போற்றும்' - பெரிதும் சிறந்ததான, பரம சுகங்களை அனுபவிக்க ஹேதுவான, பெரும் பேறான, யுவ ராஜ பதவியை ஏற்கத் சொன்ன போதில், அதைச் சிறிதும் விரும்பிடாமலே, பெருமாள் கைங்கர்யம் ஒன்றே எனக்குப் பேரனுபவமாகும் என்ற இளையபெருமாள் லக்ஷ்மணனைப் போலே, கண்ணா உன் பொன்னான, ஆனால் மிருதுவான தாமரை அடிகளை மட்டுமே எந்த ஒரு எதிர் பார்ப்புமின்றிப் போற்றி. எங்களுக்குப் பொன்னும் பொருளும் வெளியில் தேடத் தேவையில்லை. சாதனத்வமும் (கருவியும்), சாத்யத்வமுமும் (அடைதலும்), ஒன்றான பரி பூரணத் திருவடிகள். அவன் திருவடிகளை மங்களா சாசனம் செய்தல்.

'பொருள் கேளாய்' - எங்கள் வேண்டுதலைக் கேட்பாய். எதிரில் நின்று பேசிக் கொண்டிருப்பவனிடம் 'கேள்', என்று சொல்லிட வேண்டுமோ எனில், அவனுடைய பாரா முகத்தைத் தம் பக்கம் இழுத்திடக் 'கேளாய்' என்கிறார்கள். அவன் சீரிய சிங்காசனத்திலிருக்கிறான். இவர்கள் கீழிருந்து பேசும் படியால் 'கேளாய்' என்கின்றனர்.

'பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில்' மாடுகள் மேய்த்து, அவைகள் உண்ட பின் தாம் உண்ணும் ஆயர் குலம். கண்ணா மற்றவர் ரக்ஷணமும் (பர ரக்ஷணமும்), தம் ரக்ஷணமும் (ஸ்வ ரக்ஷணமும்) அறியாத ஆயர் குலத்தில் நீ எப்படி பிறந்தாய். கண்ணன் சொல்கிறான் 'உங்களிலே ஒருவனாய் நான் பிறந்ததற்கு என்ன செய்ய வேணும்?'

நப்பின்னை என்ற எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டுத் தானே நீ எங்கள் குலத்தில் பிறந்தாய். (நீளா குலே நசத்ரூசி)

'பிறந்த நீ எங்களை' - பிறந்தவரைப் பிறந்தவர் என்று சொல்லுவானேன். பசுக்களை ரக்ஷிக்க வேறு யாரும் கிடைக்கலாம். உன்னையன்றி 'எங்களை' ரக்ஷிப்பார் ஆர் உளர்?.

'குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது' - எங்களிடம் பணி கொள்ளப் பணிவாய். உனக்குச் சேவை செய்வதன்றி வேறெதுவும் எங்களுக்கு வேண்டாம். எங்களை உந்தன் அடிமைகளாக்கிடு. எங்களை உன் வடிவழகினை காட்டி மயக்கி, ' உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெத்திலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான்', என்று வாழ வைத்த பின், வேறெதுவும் இனிக்குமா, உன் திருப்பணி அன்றி.

'உண்ணும் உணவு' உடலும் உயிரும் வாழத் தேவையானவற்றை உட்கொள்ளல், 'தின்னும் வெத்திலை' - தேவைக்கும் மேற்பட்ட ஒன்றை உட்கொள்ளுதல். 'உண்டிட்டாய் இனி உண்டு ஒழிவாய்' - 'எங்கள் மனத்தை உண்டவனே. இனியும் தொடர்ந்து எங்கள் மனத்தைப் பற்றியிரு'

'கொள்ளாமல் போகாது' - எங்களைக் கொண்டிடு என்று அந்நியோன்னியத்தோடு கண்ணனுக்கு ஆணை பிறப்பிக்கிறார்கள்.

'இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா' - இப்போதே எங்களுக்குப் பறை கொடு. 'காண்' என்பது கண்ணன் மேலுள்ள கோபத்தின் வெளிப்பாடு. கோபம் ஏன்?. 'பறை' என்று நாங்கள் வேண்டும் கைங்கர்ய ப்ராப்தியைத், சத்தம் செய்யும் கருவியென கண்ணன் வேடிக்கையாகச் சொன்னதால் ஏற்பட்டது.

'கோவிந்தா' என்பதால் பசுக்களுக்குப் பின்னே போய் போய் எங்களை மறந்திடாதே.

'எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்தன்னோடு' - இளைய பெருமாள் அடி செய்தது போல எல்லாப் பிறப்பிலும் உனக்கு அடிமையாக வேணும். நீ தேவனாகிற போதில் அப்படியேயும், மனிதனாகப் பிறவி கொள்ளும் போதில் அவ்வண்ணமேயும் நாங்களும் ஆக வேண்டும். 'நிலை வரம்பில பல பிறப்பும்' - கணக்கில்லாத பிறவிகளிலும்.

'உற்றோமே ஆவோம்' - நீ ஸ்வாமியாகவும், நாங்கள் 'ஸ்வம்' ஆகவும் எப்போதும் இருக்க வேண்டும். எமக்கும் உனக்கும் ஒரே ஒரு உறவல்ல நாங்கள் வேண்டுவது. எல்லா உறவும் நமக்குள் உண்டு. 'மாதா பிதா ப்ராதா நிவாஸ சரணம் ஸுஹ்ருத்' - அன்னை, தந்தை சகோதர போன்ற எல்லா வித உறவுகளும் நமக்குள் என்றும் தொடர அருள்வாய். நீ பாம்பின் வாயில் விழுந்தால் நாங்கள் பிணமாக வேண்டும்.

'ப்ராதா பர்த்தா ச பந்து ச பிதா மம ராகவா' - என் தந்தையே, சஹோதரனே,கணவனே ராகவனே.

'உனக்கே நாம் ஆட் செய்வோம்' - நமக்குள் எந்த உறவானாலும் யாம் உனக்குப் பணிசெய்யும் உறவு வேண்டும்.

'நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே' என்னும் படி ஆக வேண்டும்.

'மற்றை நம் காமங்கள் மாற்று' எங்கள் மனம் வேறெதிலும் பாயாத படி உன் ஒருவன் பக்கத்திலேயே உறையும் படி மாற்றிடு. 

'தனக்கேயாக என்னைக் கொள்ளுமீதே' - அகங்காரத்தோடு அடிமையாக்கிக் கொள்ளாத வகையில், நாங்கள் நீ உகந்து கொள்ளும் அடிமையாக வேண்டும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக