ஞாயிறு, 12 ஜனவரி, 2020

உயர் பாவை - 29 - சதாரா மாலதி

கறவைகள் பின் சென்று....


எத்தனையோ விதத்தில் தன் காதலைச்சொல்லி தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்துவிட முடியாதபடி தன் மனம் கண்ணனுடன் இணைந்து பின்னியிருப்பதைச் சொல்லி திரும்பிப்போய் விட இயலாத தூரத்தில் வீடு வாசல் எல்லாம் விட்டு வந்த கோபிகையின் பாத்திரத்தை அநுகரித்து மனசால் ஒரு கோபியாக கண்ணனைக்கிட்டி படிப்படியாக அவனை பலவந்தம் செய்து அவனைக் கூடிய ஆண்டாள் இப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள். 


இந்தப்பாசுரத்தில் இழையும் ஆற்றாமையையும் desperate முயற்சியாக முன் வைக்கும் இறங்கின குரலின் தீனமும் இது வரை சொல்லாத 'இறைவா!' என்ற விளியும் கவனித்து நோக்கத் தக்கவை.

சாரூப்யம் ஆயிற்று சாயுஜ்யம் ஆயிற்று இனி கிளம்பிப் போகலாமே என்று கண்ணன் சொல்ல துடித்துப்போனாள் ஆண்டாள். இனிப் போவதா? இங்கேயே இருக்கத் தான் வந்தேன் என்றாள். அதற்கான சுக்ருதம் என்ன உன்னிடம்? தகுதி என்ன இருக்கிறது உனக்கு? சொல்கிறாயா குறித்துக் கொள்கிறேன் என்றான் கண்ணன். அதெல்லாம் எதுவும் கிடையாது. அதெல்லாம் முன்பே விவரமாகச் சொல்லிவிட்டேனே! என்னிடம் சித்தோபாயமன்றி சாதனோபாயம் எதுவும் கிடையாது. என்றாள். கண்ணன் சொன்னான். அப்படி யாரும் நற்கருமம் செய்யாதவர் கிடையாது. நீங்கள் இடையர்கள் வர்ணாஸ்ரம தர்மமாய் பசு சம்ரட்சணம் செய்திருப்பீர்களே, அதைச் சொல்லுங்கள், எவ்வளவு நாள் செய்திருப்பீர்கள், எவ்வளவு பசு மேய்த்திருப்பீர்கள் என்று கேட்டான். ஒரு இலக்கம் குறித்துக் கொண்டு அதற்கேற்ப இவ்வளவு நாள் சாயுஜ்யம் என்று ஆண்டாளுடைய ஸ்வர்க்க வாசத்தை வரைமுறைப் படுத்த பதிவட்டையை எடுத்தான். 

நான் பசு சம்ரட்சணை செய்தது சுக்ருத பலனுக்காக அல்ல. தவப்பயனுக்காக அல்ல. பிழைப்புக்கு உண்போம் என்ற வார்த்தையால் கறவைகள் பின் சென்றது வெறும் வயிற்றுப்பிழைப்புக்காக. அது புண்ணியத்தில் சேராது என்பதைக் குறித்தாள் ஆண்டாள். கறவை பின்னே காடு போனோம் என்றீர்களே ஆசாரநியமனம் பெற்று வானப்ரஸ்தாச்ரமம் மேற்கொள்வது தர்மானுஷ்டானுமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தபஸ்விகளான முனிவர்கள் காடுகளில் தங்கியல்லவோ புண்ணியம் படைத்தார்கள்! அதைப் பதிவில் நிறுத்தவா? என்று கேட்டான் கண்ணன். நான் சென்ற காடு நைமிசாரண்யமோ தண்டகாரண்யமோ அல்ல. 'எவ்வுஞ்சிலை உருவும் வேடர் கான்' நெருஞ்சிற்காடு அது அங்கு முனிவர் யாரும் கிடையாது. ஞானம் தொட்டோ குரு ஆணை தொட்டோ பசுசம்ரட்சணையும் ஆரண்ய வாசமும் நான் செய்யவில்லை. அறிவில்லாமல் நடக்கும் பசு தான் என் குரு. அதன்பின்னே போய் அதன் பின்னே வீடு வந்து சேர்வேன். காடு சேர்ந்து அதன்வழி வயிற்றுப்பாட்டைக் கழிப்பேன். நின்றபடி சாப்பிடுவேன். அனுஷ்டானமின்றி பூசையின்றி தானதர்மமின்றி உண்பேன் அவ்வளவே. அதில் புண்ணியத்துக்கு இடமேது? என்றாள். 'கறவை பின்னே சென்றதால் தப்பேதுமில்லையே! நானும் காலி பின்னே போனவன் தான். ஆடி அமுது செய் என்று தாய் வேண்டவேண்ட குளியாமல் மந்திர பூசை விலக்கி நானும் திரிந்தவன் தான். எது செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? ஞானம் நிறைந்த குலத்தில் பிறந்து வளர்ந்து ஆளாகியிருப்பீர்கள். ஞானத்தைக் கணக்கில் கொள்ளவா? என்றான் கண்ணன். 'ஐயோ! கிடையாது. கீழிலும்கீழ். இடக்கை வலக்கை அறியாத ஆய்க்குலம் என்னுடையது. ஞானம் என்ற பேச்சே கிடையாது என்றாள் ஆண்டாள். அப்போது ஏழை ஏதிலி என்று பிற்படுத்தப்பட்ட தகுதியையே குறித்துக் கொள்ளவா? என்று கேட்டான் கண்ணன். 'அதுவும் முடியாது. யாரைப்பார்த்து ஏழை ஏதிலி என்று சொன்னாய்? என் குலத்தில் வந்து நீ பிறந்தபின் உன்னை என் சஜாதியனாகப் பெறும் சுக்ருதம் வந்து சேர்ந்ததே எனக்கு? பிறகு எப்படி நான் ஏழை, ஏதிலி பலவீன வகுப்புக்காரி ஆவேன்? என்றாள். ராமோ தர்மவான் விக்ரக:, கிருஷ்ணம் தர்மம் சநாதனம் என்றபடி புண்ணியமே வடிவாகப்பிறந்தாய் நீ. புண்ணியத்தை நான் பாலும் சோறும் ஊட்டி வளர்த்த பாக்கியம் பெற்றேன். கோபியாக இருந்து, எனவே என்னைப்பார்த்து புண்ணியமில்லையா என்று கேட்காதே என்றாள். 'என்னம்மா, நீ சொல்வது எதுவும் புரியவில்லையே, ஒரு நிமிடம் புண்ணிய பலம் இல்லை என்கிறாய், இன்னொரு நிமிடம் நிறைய உண்டு என்கிறாய்'... கண்ணன் குழம்பித் தயங்கினான். ஆண்டாள் தெளிவாகச் சொன்னாள். 'நான் சரியாகத்தான் முதலிலிருந்து சொல்லி வருகிறேன். எனக்கு சாத்ய சுக்ருதம் இல்லை என்றேன், சித்த சுக்ருதம் இல்லை என்று எப்போது சொன்னேன்? நாராயணனே நமக்கே பறை தருவான் என்று அடித்துச் சொன்னது எந்த தைரியத்தில் என்று நினைக்கிறாய்? குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்னும்படி நீ எனக்காகவே நீர்மை வடிவெடுத்து வந்திருப்பதை வைத்துத் தான். என் கர்மஞான பக்தியில் குறையிருக்கலாம். உன் கருணைக்குக் குறைவுண்டோ? உனக்கு நான் தேவை என்பதில் சந்தேகம் உண்டோ? என்று கேட்டாள் .'அட,அட, அப்படிப்போடு, இப்போது தெரிந்தது ஏன் முதலிலேயே வரவில்லை? நீங்கள் நாராயணன் மாதவன் வைகுந்தன் என்றீர்கள். இப்போது தானே நான் கோவிந்த பட்டபிஷேகம் செய்து கொண்டதும் கோவிந்தனானதும் சொல்கிறீர்கள். சரி, நான் கோவிந்தன் தான், மிகவும் எளியவன் தான், அதற்காக உங்களுக்குச் செய்தாகவேண்டுமென்று சட்டமா? என்றான். 'உறவு மனிதர்களிடம் அயலாரிடம் பேசுவது போல் பேசலாமா? உனக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் அஞ்ஞானியான என்னாலும் விடமுடியாது சர்வக்ஞனான உன்னாலும் விடமுடியாது. நீ ஒழித்தாலும் ஒழியாது நான் ஒழித்தாலும் போய்விடாது இந்த உறவு. ஒரு நீர்க்குடம் உடைத்துப்போய் விடக்கூடிய உறவா ஜீவ பரம சம்பந்தம்? நாங்கள் அறியாமையாலும், பிள்ளைத்தனத்தாலும், பித்துக்குளித்தனமான அன்பினாலும் தெரியாமல் உன் புகழ் குறைந்த பேர்களான மாதவன் நாராயணன் உம்பர்கோமான் என்றெல்லாம் சொல்லி அழைத்தோம். புகழ் பெருத்த உன் கோவிந்தன் பெயரை மறந்து விட்டோம். மன்னித்துக்கொள். அதற்காக கோபித்துக்கொள்ளாதே. என் இறைவனே நீ தா என் புருஷார்த்தத்தை [பறை] என்றாள் ஆண்டாள். 


போச்சு. இன்னும் பறையா? எவ்வளவு பறை தான் கொடுப்பது? இன்னுமா ஒரு பறை வேண்டும்? என்று கேட்ட கண்ணனை அடுத்த பாசுரத்தில் மூன்றாவது முறையாக [நக்கலாக] ஒரு கோவிந்தா போட்டு 'பறை அல்ல நாங்கள் கேட்டது' என்று இடித்துரைக்கப் போகிறாள் ஆண்டாள். 


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து, உன் தன்னைப் 
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் நாமுடையோம் 
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன் தன்னோடு 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன் தன்னைச் 
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய், பறையேலோர் எம்பாவாய்


ஆகிஞ்சன்யம் என்றால்பகவானைத்தவிர அவனைத்தவிர வேறு உபாயமில்லை அவன்தான் உபாயம் என்றறிவது. உபாயாந்திர ராஹித்யம் தான் ஆகிஞ்சன்யம். ஒருவனுக்கு வியாதி உண்டானால் அன்னம் பிடிக்காது. அதில் ருசியுமிராது. அதைப்பெற ஒரு முயற்சியும் செய்யான், அதே போல சம்சாரமான வியாதியால் பீடிக்கப்பட்டிருக்கிற நமக்கு பகவானிடம் ருசியுமில்லை. அவனை அடைய முயற்சியும் செய்வதில்லை. இங்கே கோபி அனுகரத்தில் இருக்கிற ஆண்டாளுக்குக் காதல் நோய். வைத்தியனான கிருஷ்ணனை அடைந்திருக்கிறாள். மருந்தும் அவனே. வியாதி தீர்ந்து அனுபவமும் அவனே. 'மருந்தும் பொருளும் அமுதமும் தானே' என்று பேயாழ்வார் சொன்னபடி.

'இறைவா!' என்றும் 'குறைவொன்றும் இல்லாத கோவிந்தா!' என்றும் இரு விளிகளை வைத்தாள் ஆண்டாள் இந்தப் பாசுரத்தில். ஒரு மனு எழுதும்போது குழப்பமாக address செய்து விட்டோமானால் அந்தந்தந்த அதிகாரி 'it does not pertain to me' என்று நிராகரித்து விட முயற்சி செய்வான். எந்தக்காரணத்தாலும் தள்ளப்படமுடியாத படிக்கு விண்ணப்பத்தை முன் வைப்பதில் தான் சாமர்த்தியமே இருக்கிறது. அப்படி ஆண்டாள் இறைவா என்று அழைத்த பின் ஆதிமூலமே என்று அழைத்த யானைக்கு உதவ ஓடியதைப்போல ஓட வேண்டியதாயிற்று கண்ணனுக்கு. இல்லாவிட்டால் தான் ஆதிமூலம் அல்ல என்றோ இறைவன் அல்ல என்றோ ஒப்புக்கொடுத்ததாகிவிடும் அல்லவா? இறைவா என்ற வார்த்தைக்கப்புறம்கண்ணனுக்கு சாக்கு போக்கோ விதி முறை தட்டிக்கழித்தலோ எதுவும் செய்ய முடியாமல் போயிற்று.


வேறு வழியின்றி 'ஆம் நான் இறைவன், குறைவில்லாதபடி குணபூர்த்தி கொண்ட எளிமையேவடிவான கோவிந்தன். திரெளபதி 'இதயவாசியே!' என்றழைக்காமல் 'துவாரகா வாசி' என்று அழைத்ததால் அதை மெய்ப்படுத்த எனக்கு துவாரகையிலிருந்து ஓடி வர வேண்டியதாயிற்று. நேரமாகிவிட்டது புடவை கொண்டு வர. நீங்களும் என்னை கோவிந்தா என்று முதலிலேயே அழைக்காமல் என் சிறு பேர்களை நாராயணா, மாதவா, வைகுந்தா, என்றெல்லாம் சொல்லி வந்ததால் அந்தப் பெயர்களுக்குரிய அந்தஸ்து கெத்து மெத்தனம் எல்லாம் கொண்டு நான் இயங்கவேண்டியதாயிற்று. பக்தன் படி பகவான் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று ஏதோ ஒரு விதமாக இறங்கி வர வேண்டியதாயிற்று. அப்போதும் 'பறை' என்ற வார்த்தையைப் பிடித்துக்கொண்டு அதற்கே verbal meaning வைத்து ஆண்டாளின் ஆத்ம நிவேதனத்தை ஏற்காமல் குறுகின கால அனுபவத்தோடு அவளைத் திருப்பி அனுப்ப இன்னொரு முயற்சி செய்தான் கண்ணன். 

[முன்னால் 'ஏற்றகலங்கள்' பாசுரத்தில் 'பெரியாய்' என்றாள். அப்போதும் 'இறைவா என்றதில் இருக்கிற அழுத்தம் பெறப்படவில்லை.] 'பித்தர் சொன்னதும் பேதை சொன்னதும் பத்தர் சொன்னதும்பன்னப்பெறுவதோ?' என்பது தொனிக்க 'அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச் சிறுபேர்அழைத்தனவும் சீறியருளாதே' என்றாள் ஆண்டாள். [அன்பு, பிள்ளைத்தனம், அறியாமை மூன்றும் இருப்பதைக்கவனிக்க] மன்னித்துக்கொள். என்றாள்.  உனக்கும் எனக்குமான உறவை முறித்துக் கொள்ள எனக்குமுடியாது அதை விடு, உனக்கு முடியுமா சொல் என்பது தொனிக்க 'உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது' என்றாள்.


'நோற்ற நோன்பிலேன்', 'குலங்களாகிய ஈரிரண்டிலொன்றிலும் பிறந்திலேன்' நலந்தானொன்றுமிலேன் நல்லதோரறம் செய்துமிலேன்', 'மனத்திலோர் தூய்மையில்லை' என்றெல்லாம் புலம்பாமலேயே கம்பீரமாகவே ஆண்டாள் எப்படி தன் ஆகிஞ்சன்யத்தைக் கச்சிதமாக 'குறைவொன்றுமில்லாத கோவிந்தா' என்ற வார்த்தையிலேயே தெளிவாக்கி விடுகிறாள் என்பதே இங்கு சிறப்பு. 'புகலொன்றில்லாத அடியேன் என்றும் நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள் என்றெல்லாம் கீழிறங்காமல் ஆனால் அதே வகையிலான தன் அன்பு சார்ந்த கீழ்ப்படிதலை தெரிவிக்கும் முகமாக 'இறைவா' என்ற வார்த்தையும் சொல்கிறாள். Master என்று Milton அழைத்தது போல அழைத்தபின் தான் subject என்பது தன் கம்பீரம் குறையாமலே பெறப்பட்டது அல்லவா? 

பூஜா விதிகளைக் கீழ்ப்பாட்டில் சொன்னோம். அதில் பிழை பொறுக்கும்படி க்ஷமை வேண்டுவது என்று ஒரு கிரமம் உண்டு. தெரியாமல் செய்த பிழைகளைப் பொறுக்கும்படி மன்னிப்பு வேண்டுதல். அது இந்தப்பாசுரத்தில் வைக்கப்பட்டது. 


அதி உத்தமமான 28ம் பாசுரம் இப்படி முடிவடைந்தது. கிடுக்கிப்பிடி போட்டு கிடைக்கவே முடியாத பேற்றை நிரந்தரமாக அடையும் கடைசிப்படியில் நிற்கிறாள் ஆண்டாள். வாழ்வா இல்லை சாவா என்கிற நிலையில் மிக அற்புதமான இருபத்தொன்பதாம் பாட்டைச் சொல்லப்போகிறாள். மார்கழிக்கு இருபத்தொன்பதே நாள் தான். முப்பதாவது பாசுரம் பலஸ்ருதி என்று சொல்லப்படும் சம்பிரதாயப்பாட்டு தான்.


எனவே சாதனையை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இங்கு நானும்மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் தெரிந்து தெரியாமல் செய்த தப்புகளுக்கு. இது வெறும் சம்பிரதாயமல்ல. சின்ன deviationகளை என் மனசு சொன்னபடி நான் செய்த போது உளைச்சல் ஏற்பட்டது. உதாரணத்துக்கு கடைசி ஐந்து பாட்டுக்களை கோபிகள் கூட்டமாக இருக்கும் படத்தை மனசிலிருந்து விலக்கி ஆண்டாள் மட்டும் இருப்பதான படத்தை வைத்துக் கொள்ளுங்கள் என்றதில். மனக் குவிப்புக்காகவும் உருக்கத்துக்காகவும் அப்படி கருதச் சொன்னேன். அப்படியே மனோதர்மப்படி சில தன்னேற்றங்களை என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் செய்தேன். நோக்கம் நல்லது தான். புரிதலுக்காக செய்தேன். என்னை முன்நிறுத்த அல்ல. 


ஆண்டாள் திருவடிகளே சரணம்

நன்றி - திண்ணை ஜனவரி 2005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக